Advertisement

நேச நதி -19

அத்தியாயம் -19(1)

மதிய உணவு முடித்துக் கொண்டு அனைவரும் சென்றிருக்க கங்கா மட்டும்தான் வீட்டில் இருந்தார். மதியம் போல வந்து விடுவேன் என விஜய் சொல்லியிருக்க அவனுக்காக வரவேற்பறை சோபாவில் அமர்ந்த படி காத்துக் கொண்டிருந்தார். மீண்டும் சென்று விடுவானோ என்ற பயம் ஒரு பக்கம், இப்படி தனியாக நிற்கிறானே என்ற கவலை மறு பக்கம் என அவனை பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறார்.

எப்போதும் போல இப்போதும் மகனின் மணக் கோலம் பாவனாவின் மருட்சியான பார்வை, மகன் ஏதோ சொல்ல வந்தது என அனைத்தும் மனக் கண்ணில் விரிகிறது. அந்த பெண் இருந்திருந்தாலாவது ஏதாவது செய்திருக்கலாம் என நினைத்தவர் ‘ஹையோ என்னால என்ன செய்ய முடியும்! எப்படி அது சரியா வரும்?’ என உடனே தனக்குள்ளேயே பின் வாங்கிக் கொண்டார்.

மகள் திருமண பேச்சை தொடங்கி விட்டார் கணவர். அவள் திருமணத்தை காரணம் காட்டி மகனை இழுத்து வைக்க வேண்டும் இங்கேயே, எப்படியாவது அவனுக்கும் ஒரு துணையை கொண்டு வந்து விட வேண்டும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தவர் அப்படியே கண் அசந்து விட்டார்.

கோவையிலிருந்து காரில் ஏறியதிலிருந்து பாவனாவுக்கு திக் திக் என்றுதான் இருந்தது. இன்னும் ஏதேனும் கலவரம் ஆகுமோ, அவதூறாக பேசி விடுவார்களோ, விஜய்க்கும் அவர் தந்தைக்கும் பெரிய சண்டை ஆகிப் போகுமோ என்றெல்லாம் நினைத்தவளுக்கு லேசாக உடல் கூட நடுங்கியது.

மகளுக்கு வேடிக்கை காட்டிக் கொண்டு வந்த விஜய் இவளை பார்த்து விட்டு, “ரிலாக்ஸ் பாவனா” என்றான்.

லேசாக சிரித்து விட்டு கண்களை மூடிக் கொண்டாள். அவள் கையை தொட்டவன், “எதுக்கு இவ்ளோ பயம்? நான் இல்லாதப்ப எதுக்கும் பயந்தா சரி, இப்பவும் பயம்னா என்ன அர்த்தம்?” என கடிந்து கொண்டான்.

கண்களை திறந்தவள், “நீங்க பொறுமையா ஹேண்டில் செய்யணும், அங்கேர்ந்து கிளம்பறேன்னு உடனே முடிவு செய்திடாதீங்க. நிறைய பட்டுட்டோம், இவ்ளோக்கு அப்புறமும் தனியா பிரிஞ்சுதான் நாம வாழனும்னா எனக்கு கஷ்டமா இருக்கும்” என்றாள்.

“அங்க எப்படி இருக்க போறோம்னு பயம் இல்லையா?”

“சமாளிச்சுக்குவேன் விஜய். நீங்க கூட இருக்கீங்களே” என பாவனா சொல்ல அவளை கனிவாக பார்த்து விட்டு மீண்டும் மகளுக்கு வேடிக்கை காட்ட ஆரம்பித்து விட்டான்.

வீடு வரவும் லக்கேஜ்களை வேலையாள் கொண்டு அவனது அறையில் வைக்க சொன்ன விஜய் உறங்கியிருந்த ஆழினியை தூக்கிக் கொண்டான். மனதை திடப் படுத்திக் கொண்டு விஜய்யோடு நடந்தாள் பாவனா.

வீட்டுக்குள் வந்தவன் அம்மா உறங்குவதை பார்த்து விட்டு பாவனாவுக்கு தனது அறைக்கு வழி சொல்லி, “ரூம் போ, நான் வர்றேன்” என்றான்.

பாவனா உறங்கிக் கொண்டிருந்த விஜய்யின் அம்மாவை கலக்கமாக பார்க்க, “வேற யாரும் வீட்ல இல்ல போல பாவனா. அம்மாகிட்ட பேசணும் எனக்கு. நீ ரெஸ்ட் எடு” என்றான் மீண்டும்.

பாவனா ஆழிக்காக கை நீட்ட, “நீ மட்டும் போ” என்றான்.

அவள் அப்படியே நிற்க, “என்னன்னு… ப்ச்… அம்மாகிட்ட எப்படி சொல்லன்னு தெரியலை பாவனா. இவளை காட்டினா அவங்களே புரிஞ்சுப்பாங்க. நீ போ” என்றான்.

இன்னும் பாவனாவுக்கு தயக்கம் தான். யாருக்கும் தெரியாமல் செல்வது ஏதோ போல உணர வைக்க, “நமக்கு மேரேஜ் நடந்திடுச்சுனு வீட்ல எல்லாருக்கும் தெரியும். தைரியமா போ” என விஜய் சொல்ல தலையசைத்து விட்டு மாடி ஏறினாள்.

உறங்கும் அம்மாவின் அருகில் விஜய் அமர்ந்த உடனே அரவத்தில் விழித்துக் கொண்ட கங்கா கண்களை நன்றாக திறந்து, “விஜய்!” என ஆரவாரமாக அழைத்து அவன் தோளில் ஒரு குழந்தையை கண்டு விட்டு குழப்பமாக பார்த்தார்.

“யாருடா குழந்தை?” எனக் கேட்டவர் அவனுக்கு பின்னால் எட்டிப் பார்த்து விட்டு மகனிடம் மீண்டும் யாரென கேட்டார்.

அம்மாவை தீர்க்கமாக பார்த்தவன், “என் பொண்ணு ம்மா. உன் பேத்தி” என்றான்.

செய்தியை உள் வாங்கியவர் திடுக்கிடலோடு குழந்தையின் முகத்தை உற்று நோக்க, “அன்னைக்கு கோயில்ல உன்கிட்ட சொல்ல வந்தது இதைதான். தாலி கட்டாமலே நாங்க ஹஸ்பண்ட் வைஃப், அதனாலதான் அவசர கல்யாணம்” என்றவன் விழிகளை தாழ்த்திக் கொண்டான்.

கையில் அவன் குழந்தையோடு மகன் அமர்ந்திருக்கும் காட்சி அவரை ஏதோ நீர் சுழலுக்குள் சிக்கி கொண்டதை போல கலக்கியது. திருமணக் கோலத்தில் அவனை கண்டதை விட அதீத அதிர்ச்சி இப்போது. அன்று போல் இன்றும் அவரால் மகனின் செயலை நம்ப முடியவில்லை என்றாலும் இதுதான் நிஜம் என்பதை பதிய வைக்க முயன்று கொண்டிருந்தார்.

தான் செய்ததை துணிந்து எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்ற உறுதியோடு நிமிட நேரத்துக்கு பின் நிமிர்ந்து அமர்ந்தான் விஜய்.

மகளை வாகாக மடியில் படுக்க வைத்து அவளை தட்டிக் கொடுத்துக் கொண்டே தனது நான்கு வருட காதல், எதற்காக அவசரமாக திருமணம் செய்ய நினைத்தான், அதன் பின் நடந்த குழறுபடிகள் என அனைத்தும் சொன்னான். வாயே திறவாமல் மகன் பேச்சுக்கு காது கொடுத்திருந்தாலும் அவர் பார்வை முழுதும் குழந்தை மீதுதான்.

என்ன தட்டிக் கொடுத்தும் ஆழினி சிணுங்க, “இவ்ளோ நேரம் சைலண்டா தூங்கினதே பெருசு. சின்ன சத்தத்துக்கு கூட முழிச்சிக்குறா” என அம்மாவிடம் விவரம் சொன்னவன் இப்போது தோளில் போட்டுக் கொண்டு தட்டிக் கொடுக்க ஆரம்பித்தான்.

தன் கணவரின் செயலை நம்ப முடியவில்லை. கங்காவுக்குமே அந்த திருமணம் மீது அந்த சமயம் உடன்பாடு இல்லை என்றாலும் இப்படி சூழ்ச்சி செய்து பிரிக்க நினைக்கவில்லை. அவளாக சென்று விட்டாள், மகன் மறக்க முடியாமல் தனியாக நிற்கிறான் என்றுதான் இன்று வரை நம்பியிருந்தார். இன்று விஜய் சொல்வதை எல்லாம் கேட்டவருக்கு பாவனாவுக்கு அநியாயம் நடந்து விட்டது என்பது புரிய, திருமணம் நடந்த அன்று தானுமே அந்த பெண்ணை விட்டு வா என மகனிடம் கூறியது நினைவில் வர குற்ற உணர்வு சூழ்ந்தது.

குழந்தையின் தலையில் பிளாஸ்டர் இருந்ததை கவனித்தவர், “என்னடா இது?” என பரிதவிப்பாக கேட்டார்.

காயம் ஏற்பட்ட கதையை சொன்னவன், “என்னாலேயே சமாளிக்க முடியலை மா. பாவனா தனியா எப்படி இவளை பார்த்து வளர்த்திருப்பான்னு நினைச்சாலே என் மேலேயே கோவமா வருதும்மா” என்றான்.

மகன் கலங்குவதை அவரால் பார்க்க முடியவில்லை. அவன் கையை பற்றிக் கொண்டவர், “நீ என்ன செய்வ?” என ஆறுதலாக கேட்டார்.

ஆழினி விழித்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அழ தயாராக, “ஆழி குட்டி… அப்பா இருக்கேன் பார்” என சொல்லி விஜய் சமாதானம் செய்ய அவன் முகம் பார்த்து விட்டு அவனோடு ஒன்றிக் கொண்டாள்.

கங்காவுக்கு மனதிற்குள் வலிதான். தன் மகன் திருமணம் முன்பே இப்படி நடந்து கொண்டிருக்கிறான் என்பது அவரை உள்ளுக்குள் குன்ற செய்தாலும் இரண்டரை வயதில் மகளோடு நிற்பவனிடம் இனிமேல் என்ன என கேட்பது?

தவறு என புரிந்து உடனே திருமணம் செய்து கொண்டதும் தந்தை கொடுத்த இக்கட்டிலும் வேறு பெண்ணை மணக்க மாட்டேன் என சொல்லி வீட்டை விட்டு வெளியேறியதும் அவள் நினைவோடே இருந்து இன்று தன் குடும்பத்தை தன்னுடன் அழைத்துக் கொண்டதும் என மகன் மீதான சாதகமான விஷயங்களை நினைத்து ‘இல்லை என் மகன் கெட்டவன் இல்லை!’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டார்.

“ப்பா சுசு” மெலிதாக தந்தையிடம் சொன்னாள் ஆழினி.

“நான் ரூம் போறேன் மா” என்றவன் எழ, “வா என் ரூம் இங்கதானே இருக்கு” என்றவர் அவனுக்கு முன் அவரது அறைக்கு விரைந்தார்.

விஜய் கையிலிருந்து குழந்தையை வாங்க கங்கா கை நீட்ட வர மாட்டேன் என்பதாக அப்பாவின் சட்டையை இறுக்கி பிடித்து முகம் திருப்பினாள் ஆழினி.

“பழகாம வர மாட்டாம்மா. நான் பார்த்துக்கிறேன்” என்ற விஜய் அவனே ஓய்வறை சென்று மகளை கவனித்து வெளியில் வர இப்போது அவன் கை பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள் ஆழினி.

குழந்தை பெயர் என்ன, எப்போது பிறந்தாள் என விசாரணை செய்தவர், “இப்ப என்னடா சாப்பிடுவா? ரசம் சாதம் கொடுக்கவா?” எனக் கேட்டார்.

“லஞ்ச் முடிச்சாச்சு மா. இப்ப என்ன கொடுக்கிறதுனு தெரியலை” என்றான்.

“சரி நீ ரூம் போ, நான் எல்லாருக்கும் குடிக்க எடுத்திட்டு வர்றேன்” என்றார்.

அங்கே இருந்த படுக்கையில் அமர்ந்தவன் மகளையும் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு, “நீ எப்படியும் அக்செப்ட் பண்ணிப்பேன்னு எனக்கு தெரியும். ஆனா அப்பா என்ன சொல்வார் செய்வார்னு எனக்கு ஐடியா இல்லை” என்றவன் அம்மாவின் முகத்தை கூர்ந்து பார்த்தான்.

நீண்ட மூச்சு எடுத்துக் கொண்டவர், “புருஷனும் புள்ளைங்களுமே உலகம்னு இருந்திட்டேன். பாவனாவ அவரால ஏத்துக்க முடியாது, ஆனா அவர் பேத்தியோட அம்மாவை ஏத்துக்கிட்டுதானே ஆகணும். அவசரப் பட்டு வேற மாதிரி முடிவெடுத்து திரும்பவும் என்னை தவிக்க விடாத. என் உசுர் போறப்ப என் புள்ளைங்க மூணும் என் பக்கத்துல இருக்கணும்” என்றார்.

“ம்மா!” அதட்டினான் விஜய்.

“அப்பா பத்தி தெரியாதாடா உனக்கு? நீ செய்ற எல்லாத்தையும் ஏத்துப்பாரா அவர்? பொறுமையா ஏத்துக்க சொல்லு. லவ் பண்ண தெரிஞ்ச உனக்கு பெத்தவங்க சம்மதம் கிடைக்குற வரை காத்திருக்க பொறுமை இல்லைதானே?” கங்கா குற்றம் சாட்ட, “சரிம்மா என் தப்புதான். அதுக்காக என் வைஃப் பொண்ணு கஷ்ட பட விட மாட்டேன்” என்றான்.

“பெத்தவங்க கஷ்ட படலாமா டா?”

“அப்படி நினைக்கிறேன்னு ஏன் சொல்ற மா? தொலைஞ்சு போனவங்க கையில கிடைச்சதும் நேரா இங்க வந்துதானே நிக்கிறேன்? என்னை திட்டட்டும் அடிக்கட்டும் அப்பா, தாராளமா நான் வாங்கிக்கிறேன். சொல்லப் போனா பாவனாவை இங்கேர்ந்து துரத்தி விட்ருக்கார் அப்பா. அதை பெருசு பண்ணாம வந்திருக்கா அவ. பாவனாவையோ ஆழியையோ அப்பா ஏதும் சொன்னா நான்… நாங்க…”

“போதும் நிறுத்துடா. இன்னொரு முறை வீட்டை விட்டு போறேன்னு போயி என்னை கொடுமை படுத்தப் போறியா? வேணும்னா உன் பொண்டாட்டிகிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்றார் கங்கா.

“என்ன பேசுற ம்மா நீ? யாரும் அவகிட்ட மன்னிப்பு கேட்கணும்னு நான் சொல்லலை. நடந்த தவறை புரிஞ்சுக்கிட்டா போதும். அப்போலேர்ந்தே அவளை எல்லாரும் ஒதுக்கி ஒதுக்கி வச்சு இப்ப இங்கேயும் ஒதுக்காம இருக்கனும்ங்கிறது மட்டும்தான் வேணும் எனக்கு. உன்னை மாதிரி அப்பாவும் ஆழினிய அக்செப்ட் பண்ணிப்பாரா தெரியாது. இங்கேர்ந்து போகணும்னுறது இல்லைம்மா என் ஆசை” தவிப்பாக சொன்னவன் மகளை தூக்கி மடியில் இருத்திக் கொண்டான்.

சோம்பலாகவே இருந்த ஆழினி அப்பாவின் மேல் சாய்ந்து கொள்ள அணைத்துக் கொண்டவன், “பாவனாவை நினைக்கிற பேசுற மாதிரி என் பொண்ணை யாரும் ஏதும் சொன்னா என்னால தாங்க முடியாதும்மா” என்றான்.

“டேய் ஏன் டா… ஏன் இப்படியெல்லாம் பேசுற? உன் பொண்ணுக்காக நீ துடிக்கிற மாதிரிதான் உனக்காக உன் அப்பாவும் துடிப்பார். அவர் செஞ்சது தப்பா இருக்கலாம், அதுக்காக அவரை மொத்தமா கெட்டவர்னு முடிவு பண்ணாத. உன் அப்பாடா அவர்” கணவருக்காக மகனிடம் பரிந்து பேசினாலும் அரங்கநாதனை நினைத்து உள்ளுக்குள் அவருக்கும் சற்று பயமே.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement