Advertisement

அத்தியாயம் -18(3)

ஆழினி கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுத்து போட்டிங் நேரம் இல்லை என்றாலும் கூடுதல் பணம் கொடுத்து படகு சவாரியும் செய்து விட்டு மதியம் போல வீடு வந்தனர்.

சாப்பாட்டின் போதே “அதிகம் எடுக்காதே, ரொம்ப ரொம்ப முக்கியம்னு நினைக்கிறது மட்டும் எடுத்து வச்சுக்க” என கூறி விட்டான். ஆழினி உறங்கி விட இவளும் தேவையானவை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

மற்ற எல்லா பொருட்களையும் விற்க புரோக்கர் ஒருவரை பிடித்து பொறுப்பை ஒப்படைத்து விட்டான்.

“இருக்கப்போற ரெண்டு நாளைக்கா இவ்ளோ விளையாட்டு சாமான் வாங்கி கொடுத்தீங்க ஆழிக்கு? இதே ஒரு டிராலி நிறைஞ்சு போச்சு” குறை பட்டாள் பாவனா.

“என் பொண்ணு கேட்குற எல்லாத்தையும் எடுத்து வை, வேணும்னா உன் விண்டர் ட்ரெஸ் இங்கேயே விட்ரு” என்றவனை இவள் முறைக்க, “ஃப்ளைட்ல எக்ஸ்ட்ரா பே பண்ணி எடுத்திட்டு போறது பத்தி ஒண்ணுமில்ல பாவனா, ஆனா நாம அங்கதான் இருக்க போறோமான்னு இன்னும் தெரியலை” என்றான்.

பாவனா முகம் சுருங்கி விட, “என்னன்னு சொல்லு, இப்படி மூஞ்சு வச்சா நான் என்ன நினைக்கிறது?” என்றான்.

“ஏத்துப்பாங்களானு யோசனையா இருக்கு. அப்படி அக்செப்ட் பண்ணிக்கிட்டா அங்க எப்படி இருக்க போறோம்னு கவலையா இருக்கு. ஒரு வேளை அங்கேர்ந்து போற மாதிரி ஆகிடுச்சுன்னா…” சொல்ல முடியாமல் நிறுத்தினாள்.

“ம்… ஆகிடுச்சுன்னா?”

“எனக்கு நல்லா தெரியும் உங்க ஃபேமிலி உங்களுக்கு எவ்ளோ முக்கியம்னு. கடைசியில எது நடக்க கூடாது நினைச்சோமோ அதுதான் நடக்க போகுதா விஜய்?”

“அப்பா செஞ்சது பேசினது எல்லாம் நான் நியாய படுத்த போறது இல்லை பாவனா. ஆனா அதுக்காக அவங்களை எல்லாம் விட்டுட்டு போகணும்னு நினைக்கல நான். ஏற்கனவே மூணு வருஷம் நான் இல்லாம கஷ்ட பட்ருப்பாங்க” என்றவன் சிறு இடைவெளி விட்டு, “நடந்ததை மனசுல வச்சுகிட்டு நீயும் தனியா போகணும்னு நினைக்க கூடாது” என்றான்.

“அங்க எப்படி இருக்கிறதுன்னு எனக்கு கவலை வர்றது நார்மலதானே விஜய்? அதுக்காக தனியா கூப்பிடுவேன்னு நினைக்குறீங்களா?” கண்கள் கலங்கி விடாமல் கவனமாக கேட்டாள்.

“சும்மா தொட்டத்துக்கு எல்லாம் இப்படி நினைச்சீங்களா அப்படி நினைச்சீங்களானு ரெண்டு பேருமே கேட்டுக்க வேணாம். போன நாள் திரும்ப வரப் போறது இல்லை. இனியாவது நிம்மதியா சந்தோஷமா வாழணும். முடிஞ்சத வச்சு எதுவும் முடிவு செய்ய வேணாம்னு சொன்னேன்” என விஜய் சொல்ல பாவனா அவனையே பார்த்திருந்தாள்.

“இப்ப என் அப்பாவோட ஸ்டாண்ட் என்னங்கிறது வச்சுத்தான் என் முடிவு. நாமளா போக போறோம்னு சொல்ல போறது இல்லை. அதுக்கான சூழ்நிலைய அவங்க உருவாக்கினா வேற என்ன பண்றது? எல்லாத்தையும் விட என் பொண்ணு எனக்கு ரொம்ப முக்கியம். அவளுக்காக எந்த முடிவும் எடுப்பேன் நான்” என அழுத்தம் திருத்தமாக கூறினான்.

மனித உயிர்கள் கொண்ட அன்பு அருவி போன்றது. ஒரு போதும் மேல் நோக்கி பாய்வதில்லை. ஆரம்பித்த இடமான பெற்றோரா அல்லது அதற்கு பிறகான குழந்தைகளா என வரும் போது இரண்டாவதாக உள்ளதை நோக்கியே அன்பு பாய்கிறது. விஜய்யும் இதற்கு விதி விலக்கு இல்லை.

ஷைலஜாவுக்கு அழைத்து விஜய் வருகை பற்றி சொன்னவள் ஈரோடு செல்வது பற்றியும் கூறினாள். அம்மாவும் பெண்ணும் அரை மணி நேரம் வரை பேசினார்கள். சுருக்கமாக நடந்தவற்றை சொன்னாள். என் பெண்ணுக்கு ஏன் இப்படி எல்லாம் நடந்தது என வருத்தம் கொண்டாலும் இனியாவது அவள் அவளுக்கு பிடித்தவனோடு நன்றாக வாழட்டும் என நினைத்தவர் கவனமாக இருந்து கொள்ளும் படி கூறி வைத்தார்.

ஆழினி விழித்துக் கொள்ள அவளுக்கு உணவு கொடுத்து விளையாட விட்டவள் மீண்டும் பேக்கிங் செய்ய தொடங்க, “ஆமாம் உன் அம்மாவுக்கும் உனக்கும் என்ன சண்டை? அவங்க ஏன் உன் டெலிவரி அப்போ கூட இல்லாம போனாங்க?” என விசாரித்தான்.

“இல்லையே, டெலிவரி முடிஞ்சு அடுத்த நாள் வந்திட்டாங்களே”

“என்ன மறைக்கிற என்கிட்டேர்ந்து? அதுக்கு முன்னாடியே உன் கூட இருக்க வேணாம்னு நீதான் அவங்கள அனுப்பி வச்சிருக்க”

“யார் சொன்னா? ஈஸ்வரி அம்மாவா? இவங்களோட…”

“அவங்க பேச்சு வாக்குல சொன்னாங்க. என்ன பிரச்சனைனு சொல்லு”

“அது ஏன் இப்போ?”

“ஹேய் நான் ஏதோ சின்ன விஷயம்னு நினைச்சேன், என்கிட்ட மறைக்கிறது பார்த்தா மேட்டர் பெருசு போல…” என்றவன் நீ சொல்லாமல் விட மாட்டேன் என்பது போல் பார்த்தான்.

“அது… அவங்க… அதான்… நந்துலால் இருக்காங்க இல்லையா? அவங்க அக்கா பையன்…” சொல்லித்தான் ஆக வேண்டுமா என பாவமாக பார்த்தாள்.

தொடர்ந்து சொல் எனும் விதமாக அவன் பார்க்க, “அவங்க அக்கா பையனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கம்பெல் பண்ணினாங்க. குழந்தை ஃப்யூச்சர்க்காக பண்ணிக்க சொன்னாங்க” என்றாள்.

தாடை இறுக கேட்டுக் கொண்டிருந்தவன், “நீ முடியாதுன்னு சொல்லியும் கம்பெல் பண்ணினாங்களா?” எனக் கேட்டான்.

பாவனா அமைதி காக்க, “கேட்டா பதில் சொல்லணும்” என அதட்டினான்.

“ம்…”

“எவ்ளோ தைரியம் டி உன் அம்மாவுக்கு? உன் அப்பா என் குழந்தையை கலைக்க சொல்லுவார், உன் அம்மா என் பொண்டாட்டிக்கு மாப்ள பார்ப்பாங்க. அப்ப கூட எனக்கு சொல்லணும்னு தோணல உனக்கு”

“ப்ச் இதையே பேசிட்டு இருக்க போறீங்களா? இப்படி பேசணும்னா பேசிட்டே இருக்கலாம் விஜய். உங்க ஃப்ரெண்ட் உங்க அப்பா எல்லாரும் செய்ததை நான் சொல்லிக் காட்டலாம். அது உங்களை கோவ படுத்தும். சண்டைதான் வரும் நமக்குள்ள” பொறுமையாக பாவனா சொல்ல விஜய்யின் கோவமும் மட்டு பட்டது.

“எப்போலேர்ந்து இப்படி தெளிவா யோசிக்க ஆரம்பிச்ச நீ?” என அவன் கேட்க புன்னகை செய்தாள்.

ஈஸ்வரிக்கு காஞ்சிபுரம் பக்கம் அண்ணன் வீடு இருக்க அவருக்கு சென்னை செல்ல விமான டிக்கெட் போட்டு கொடுத்து விட்டான். ஈஸ்வரி பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்து அவர் வாழ்வாதாரத்துக்கு மாதம் பணம் கிடைக்குமாறு வகை செய்ய பாவனாவே இதை எதிர்பார்க்கவில்லை. ஈஸ்வரியும் நெகிழ்ந்து விட்டார்.

“நீங்க எனக்கு செய்ததுக்கு இது ஒண்ணுமே இல்லை” என்பதாகத்தான் இருந்தது விஜய்யின் பதில்.

இவனது இந்த செயல் மனைவி மகள் மீது எத்தனை அன்பு வைத்திருக்கிறான் என்பதை ஈஸ்வரிக்கு புரிய வைக்க, “என்னவோ இத்தனை நாள் பிரிஞ்சு இருந்திட்டீங்க. இனி நல்லா இருங்க, உங்களுக்காக தம்பி என்ன வேணா செய்யும், நீ புரிஞ்சு நடந்துக்க ம்மா” என உண்மையான அக்கறையில் பாவனாவிடம் சொன்னார்.

 ஆரம்பதிலிருந்தே எனக்காக நிறைய பார்த்து பார்த்துதான் செய்வார், நான் என்ன செய்ய முடியும்? என நினைத்தவள் ஈரோட்டில் இருப்பதில் முதலில் சிரமங்கள் இருந்தாலும் போக போக சரியாகும் என தனக்கு தானே சொல்லிக் கொண்டாள். என்னால் ஆழியால் விஜய் எதையும் இழந்ததாக இருக்கவே கூடாது என தீர்க்கமாக முடிவு செய்து கொண்டாள்.

மறுநாள் புறப்பட வேண்டும். அம்மாவின் கழுத்தை கட்டிப் பிடித்துக்கொண்டு ஆழினி உறங்க அந்த பக்கம் கரடி பொம்மை.

விஜய் பாவமாக பாவனாவை பார்க்க அவளோ ஈரோட்டில் அனைவரையும் எதிர்கொள்வது குறித்தான பதட்டத்தில் இருந்தாள்.

எதேச்சையாக விஜய் நிற்பதை பார்த்தவள், “தூங்கலியா நீங்க?” சின்ன குரலில் மகளை தட்டிக் கொடுத்துக் கொண்டே கேட்டாள்.

அவள் பக்கத்தில் இருந்த கொஞ்ச இடத்தில் அனுசரித்து அமர்ந்தவன், “ஒய்ஃப் கூட மஜாவா இருந்திட்டு லேட் நைட் தூங்கி காலையில அசதியில எழ முடியாம அப்பவும் ஆசையா பெட்ல குட்டியா அழகா சண்டை போட்டு திரும்பவும் டயர்ட் ஆகி… இப்படியெல்லாம் நமக்கு நடக்க வாய்ப்பே இல்லையான்னு கவலை பட்டுட்டு இருக்கேன். தூங்கலியானு கேட்குற” எனக் கேட்டான் விஜய்.

ஆழினி சிணுங்கி பின் உறங்க விஜய்யை பார்த்து சத்தமில்லாமல் சிரித்தவள், “எனக்கு தெரியாது, உங்க பொண்ணுதானே… நீங்களே தீர்வு கண்டுபிடிங்க” என்றாள்.

மகளின் தலை கோதி விட்டவன், “என் பொண்ணு சமத்துதான், நீதான் இப்படி பழக்கி வச்சிருக்க. அழுதா கன்னமெல்லாம் சிவந்து கண்ணுல தண்ணி கட்டும் போது உள்ள என்னமோ செய்து பாவனா. அம்மா, நீ, வைஷு, ஸ்ரீ, ஷீபான்னு என் க்ளோஸ் சர்கில்ல இருக்க பொண்ணுங்க யார் அழுதாலும் என்னால தாங்க முடியாது. ஆனா ஆழி அழுகை… என்ன சொல்ல…” தான் படும் பாட்டை விவரிக்க அவனிடம் வார்த்தைகள் இல்லாமல் போக மகளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு விலகினான்.

“இனிமே அழவே விட மாட்டேன் என் பொண்ணை. ஊஞ்சல்னா ரொம்ப பிடிக்குது இவளுக்கு, வேற என்ன இன்ட்ரெஸ்ட் பாப்பாக்கு?” விஜய் கேட்க மகளை தட்டிக் கொடுத்துக் கொண்டே இமைக்காமல் அவனையே பார்த்திருந்தாள் பாவனா.

“என்ன பாவனா?”

“என் அம்மா லைஃப் ஒரு வகைனா என் லைஃப் இன்னொரு மாதிரி ஆகிடுச்சு. ஆழினிய நினைச்சுதான் என் கவலை எல்லாம். தனியா இருக்கோமே, சரியா வளர்த்திடுவேனான்னு நிறைய பயமிருக்கும். இப்போ…” அடுத்து சொல்லாமல் அவனை அர்த்தமாக பார்த்தாள்.

பாவனாவின் கன்னத்தை வெப்பமான தன் கை கொண்டு அழுத்தம் கொடுத்து விட்டவன் ஆழினியின் நெற்றியில் மீண்டும் முத்தமிட்டு விலகி எழுப் போக, “எனக்கும்…” குழந்தை போலவே கேட்டாள்.

“என்ன என்ன கேட்ட? காதுல விழலையே” வேண்டுமென்றே சொன்னான்.

“முத்தம் பேசுமா விஜய்?”

‘என்ன சொல்ற?’ தலையை அசைத்து கண்களால் கேட்டான்.

“எந்த வார்த்தையால எப்படி புரிய வைக்கிறதுன்னு… சில சமயங்கள்ல வார்த்தைக்கு பஞ்சமாகும் போது முத்தம் பேசும். இப்போ உங்க பொண்ணுகிட்ட சொன்னீங்களே எல்லாம் நான் செய்வேன் உனக்கு, நான் இருக்கேன் உனக்குன்னு ஒரு நெத்தி முத்தத்துல சொன்னீங்களே…” பாவனாவுக்கும் இன்னும் முழுதாக அவள் மனதை புரிய வைக்க முடியாமல் தன்னை நோக்கி அவனை இழுத்து அவன் கழுத்து வளைவில் அழுத்தமாக முத்தம் வைத்து பின் அவனை விட்டாள்.

கழுத்தில் உணரப் பட்ட ஈரமான சில்லிப்பு அவனை சிலிர்க்க வைத்தது. அவள் முகத்தின் அருகே நெருக்கமாக இருந்தவன் அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு, தன் ஏக்கம் உணர்த்துமாறு உதடுகளில் முத்தமிட போக ஆழினி சிணுங்க ஆரம்பிக்க விலகி எழுந்து நின்றான்.

குழந்தையை தட்டிக் கொடுத்துக் கொண்டே லேசாக விரிந்த இதழ்களோடு அவனை பாராமல், பார்க்க முடியாமல் இருந்தாள் பாவனா.

“மூணு வருஷம் முன்னாடி இப்படித்தான்… எப்படி உன்னை சமாதானம் செய்யனு தெரியாம முத்தத்துல பேச ஆரம்பிச்சேன். இப்போ உன் பக்கத்துல என் பொண்ணு. எனக்கு நல்லா தெரியும், கிஸ்ஸஸ் எப்பவும் நம்மள அடுத்து என்னன்னு தேட வைக்கும், எண்ட்ல ஆசை பட்டது கிடைச்சா கூட போதும்னு நினைக்க வைக்காது, இன்னும் இன்னும் வேணும்னு நம்மள பேராசை பிடிச்சவங்களா மாத்திடும்”

“போதும் போதும் தூங்குங்க விஜய்” சிணுங்கலாக சொன்னாள் பாவனா.

“அட! உன்கிட்டேர்ந்துதான் இந்த சிணுங்கறதை கத்துக்கிட்டா போல ஆழி” ரசனையாக சொன்னான்.

பாவனா, “தூங்கிட்டா இப்போ” சின்ன குரலில் சொல்லி அவனை பார்க்க வந்து பாராமல் திரும்பிக் கொண்டாள்.

குரலை செருமி தன்னை சரி செய்து கொண்டவன், “நம்ம பொண்ணு இடையில முழிச்சு நான் ஏமாந்து போனா…” லேசாக சிரித்தவன், “அந்த ஏமாற்றம் தாங்க முடியும்னு தோணல பாவனா. நிறைய நைட்ஸ் தூங்காம வேஸ்ட் பண்ணியிருக்கேன், இப்போ தூங்கத்தான் போறேன். இனி வர போற தூங்க முடியாத நைட்ஸ்க்காக இப்போலேர்ந்து சின்ன காத்திருப்பு” ஆசை வழியும் குரலில் சொல்லி பாவனா முகத்தை பார்த்தான்.

அவள் கண்கள் மூடியிருக்க இவன் பேசுவதை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறாள் என்பதை அவளது கன்னங்களை நிறைத்த செம்மை நிறம் காட்டிக் கொடுத்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement