Advertisement

“உங்ககிட்ட தாலி கொடுத்தது கூட அவர்தானா?” பாவனா கேட்க ஆம் என தலையசைத்தவன், “அதெல்லாம் அவன் மட்டுமே செஞ்சிருக்க வாய்ப்பில்லை. ஸேம் செயின் ஸேம் திருமாங்கல்யம் எல்லாம் அவனுக்கு எப்படி தெரியும்?” என்றான். 

“என்ன சொல்ல வர்றீங்க? ஸ்ரீ அக்காவா… இல்லைங்க…”

“ஸ்ரீன்னு எங்க சொன்னேன்? நம்ம குடும்ப வழக்க படி எப்படி உனக்கு மாங்கல்யம் வாங்கியிருப்பேன்னு  அப்பாக்கு தெரிஞ்சிருக்கும். ஸ்ரீ ஹெல்ப் பண்ணினதால அவதான் வாங்கியிருக்கணும்னு கெஸ் பண்ணி எந்த கடைல வாங்கியிருப்பாங்கிறது வரை தெரிஞ்சிருப்பார்” என விஜய் சொல்ல பாவனா கண்களில் இருந்து கண்ணீர் பொங்கி வழிந்தது. 

விஜய் தன்னிடம் வர சொல்லி கை நீட்டி அவளை அழைக்க, “நான் கழட்டி கொடுத்திட்டு போயிருப்பேன்னு நீங்களும் நினைச்சீங்களா?” எனக் கேட்டு அவனிடம் வராமல் அமர்ந்து இடத்திலேயே இருந்து கொண்டாள். 

இதை ஜீரணிக்கவே இருவருக்கும் நேரம் எடுத்தது. 

மூன்று வருடங்களுக்கு முன்பு அன்று விஜய்யிடம் இருந்து இப்படி ஒரு செய்தியை  எதிர்பார்த்திராத பாவனாவுக்கு சற்று நேரம் பிடித்தது சுயநினைவுக்கு வர. விஜய்யின் கைபேசிக்கு அழைக்க அணைத்து வைக்க பட்டிருப்பதாக செய்தி வந்தது. சென்னை வரை யோசித்துக் கொண்டே வந்தவள் வீடு வந்ததும் அப்பாவுக்கு அழைத்து விஜய்யை பிரியப் போவதாக சொல்லி விட்டாள்.

 அவர் பார்க்கிறேன் என்றதற்கும் விஜய்யே போக சொன்ன பின் எதுவும் வேண்டாம் என முடிவெடுத்து விட்டவள் அவரை ஏதும் செய்யாமல் தடுத்தும் விட்டாள். உடனே அங்கிருந்து கிளம்ப வேண்டும் எனக் கூற கொடைக்கானல் அனுப்பி வைத்தார் ரமணன். 

அங்கு அவருக்கு சொந்தமான வீட்டில்தான் தங்கியிருந்தாள். விஜய் கேட்டுக் கொண்டதால்தான் பிரிந்தேன் என ரமணனிடம் சொல்லவில்லை. அந்த வீட்டில் வாழ முடியாது, எங்களுக்குள் சரி வராது என்றும் நான் இருக்கும் இடத்தை தெரிய படுத்த வேண்டாம் என்றும் கூறி விட்டாள். மேலே படிக்கலாம், ஆனால் இங்கு வேண்டாம் வெளி மாநிலம் எங்காவது செல்லலாம் என்ற முடிவில் இருந்தாள். 

இரண்டு மாதங்கள் கடந்த பின்தான் அவள் கருவுற்று இருப்பதே அவளுக்கு தெரிய வந்தது. அந்த சமயம்தான் விஜய்க்கும் பிருந்தாவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக சொன்னார் ரமணன். மனம் நொந்து போனவள் இனி விஜய் பற்றி என்னிடம் எதுவும் சொல்லாதீர்கள் என சொல்லி விட்டாள். 

ரமணன் மகளை பார்க்க கொடைக்கானல் வந்த போது விஜய் வெளிநாடு சென்றிருந்தான். இனி விஜய்யோடு பாவனா வாழ்வது ஒரு போதும் சரி வராது என்ற முடிவுக்கு வந்திருந்த ரமணன் விஜய்யின் திருமணம் நின்றது பற்றி மகளிடம் கூறாமல் அவளை கரு கலைப்பு செய்யுமாறு வற்புறுத்தினார். 

அவள் முடியாது என மறுக்க கடின வார்த்தைகள் பேசி கோவம் கொண்டவருக்கு அவசர வேலை வர ஒரு வாரத்தில் நல்ல முடிவாக எடு, காலம் தாழ்த்தாதே என கண்டிப்போடு சொல்லி ஊருக்கு சென்று விட்டார். 

தான் படித்த பள்ளியின் ஃபாதர் உதவி கொண்டு புனே வந்து விட்டாள் பாவனா. 

அனைத்தையும் சொன்னவள், “முதல்ல ஏதோ எமோஷனல் ஆகி பேசிட்டீங்க, நான் இருக்க இடத்தை சொல்லலாமா அப்படினு நான் நினைக்கிற நேரம்தான் நான் ப்ரெக்னெண்ட்னு தெரிஞ்சது. அதுக்குள்ள பிருந்தா கூட கல்யாணம் வரை போய்ட்டீங்க” என குற்றம் சாட்டும் விதமாக கூறினாள். 

“அந்த கல்யாணம் நின்னது தெரியாதா உனக்கு?” கோவமாக கேட்டான் விஜய். 

“இப்படி இங்க வந்ததுல அப்பாக்கு என் மேலே கோவம். கொஞ்ச நாள் அப்பா கூட பேசாம இருந்தேன். அப்பறம் ஒரு நாள் அவருக்கு பேச ட்ரை பண்ணினப்போ அவர் எடுக்கல. ரத்தினம் அங்கிள்கிட்ட அப்பா பத்தி விசாரிச்சு அவருக்கு உடம்பு முடியலைன்னு தெரிஞ்சுகிட்டேன். இந்த நிலைல நேர்ல போய் எப்படி பார்ப்பேன்? இப்ப வரை ரத்தினம் அங்கிள்கிட்ட பேசித்தான் அப்பா பத்தி தெரிஞ்சிக்கிறேன். பாப்பா பிறந்து இவளுக்கு ஆறு மாசம் ஆகும் போதுதான்  அங்கிள் மூலமா உங்க மேரேஜ் நின்னது தெரியும். ஆனா பிருந்தா மட்டும் கல்யாணத்தை நிறுத்தலைனா நடந்திருக்கும்தானே?”

“என்ன… பிருந்தா நிறுத்தினாளா? யார் அந்த ரத்தினம்? உங்கப்பா பி ஏ தானே? பிருந்தா அப்பா இருக்காரே அதான் கேசவன் மாமா… அவர் சொல்லியிருப்பார் அவர் பொண்ணுதான் கல்யாணத்தை நிறுத்திடுச்சுனு. நல்லா தெரிஞ்சுக்க, மேரேஜ் ஸ்டாப் பண்ணினது நான்” இரைந்தான் விஜய்.

கதவு சாத்தியிருக்கிறதா என ஒரு முறை பார்த்துக் கொண்ட பாவனா, “ஏன் சத்தம் போடுறீங்க? மேரேஜ் வரை போனீங்கதானே?” எனக் கேட்டாள். 

“கூட இருந்து பார்த்தியா நான் கல்யாணம்னு ஆசை ஆசையா ஊருக்கு போனதை? எனக்கே தெரியாது அந்த மேரேஜ் அரேஞ்மெண்ட்” கடு கடுத்தான். 

“நான் தாலியே கழட்டி கொடுத்திட்டு போனதா நீங்க நினைச்சுக்கிட்டாலும் ஏன் என்னை தேடி வரலை?” சத்தமில்லாமல் கோவப்பட்டாள் பாவனா. 

“ஏன்… நான் தேடி வந்ததை உன் அப்பா அம்மா எல்லாம் சொல்லலியா உன்கிட்ட? நீ படிக்க போறன்னு சொன்னாங்க. இவதானே போனா, தானா என்னை தேடி வரட்டும்னு நான் விட்டுட்டேன்”

“அப்ப நானும் கோவத்துலதான் இருந்தேன். மேரேஜ் நிறுத்திட்டு ஏன் என்னை தேடி வரலைன்னு கேட்டேன்” 

“ரெண்டு விட்டேனா தெரியும்! நான் உன்னை தேடினேன்னு உன் அம்மா மூலமா கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். நீ என்ன செஞ்சாலும் சும்மா சும்மா உன் பின்னாடி வர நாய்க்குட்டின்னு நினைச்சியா என்னை?”

“அப்படி எத்தனை முறை என் பின்னாடி அலைய விட்டேனாம்?” 

 “இப்ப இவ்ளோ பேசுறவ அப்ப என்னடி செய்திட்டு இருந்த? மேரேஜ் நின்னதுக்கு அப்பறம்  ஒரு மாசம் கிட்ட நான் சென்னைலதான் இருந்தேன். நீ ஏன் வரலை என்னை தேடி? ஒரு போன் பண்ணினியா நீ?”

“அச்சோ நான்தான் உங்களுக்கு பிருந்தா கூட மேரேஜ் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சுகிட்டேனே… அப்புறம் எப்படி வருவேன்?” 

“யாருடி சொன்னா அப்படினு? உங்கப்பன் சொன்னானா?” 

“விஜய்!” 

“ஷட் அப்!” தலையை பிடித்துக் கொண்டவனுக்கு ஓ என அலற வேண்டும் போல இருந்தது. 

சில நிமிடங்கள் கடந்து “விஜய்…” மெல்லிய குரலில் பாவனா அழைக்க கோவம் குறையாதவன் அவளை எரிப்பது போல பார்த்தான். 

“நான்தான் என்ன நடந்ததுன்னு சொல்றேனே. நான் என்ன செய்திருக்கணும்னு நினைக்குறீங்க?” 

“உடனே நம்பர் மாத்தின, மெயில் டீ ஆகட்டிவேட் செய்த. ஒரு முறை என் வாய்ஸ்ல போ ன்னு சொல்றதை கேட்டுட்டு எவ்ளோ பெரிய முடிவு எடுத்திருக்க? நீ என்ன தியாகியா? எப்படிடா என் கூட வாழ்ந்திட்டு போன்னு சொல்வன்னு கோவப்பட்டிருக்கணும். எனக்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னு நினைச்சி என்னை அப்படியே விடுவியா? எப்படிடா என்னை கல்யாணம் பண்ணிட்டு இன்னொரு பொண்ணையும் கல்யாணம் பண்ணுவன்னு கேள்வி கேட்டு உன் கால்ல கிடக்கிறது வச்சு என்னை நாலு சாத்து சாத்த என் முன்னாடி வந்திருக்கணும்” சீறினான் விஜய். 

“விஜய் ப்ளீஸ் ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? நான் போய் உங்களை…” 

“ஹேய் போதும் டி, செருப்படி தேவலாம் நீ செஞ்ச காரியத்துக்கு. போடி” என்றவன் படுக்கையிலிருந்து எழ மிரண்டு போய் பார்த்திருந்தாள் பாவனா. 

விஜய் அந்த அறையை விட்டு வெளியேறப் போக, “எங்க போறீங்க?” எனக் கேட்டாள். 

“மூச்சு அடைக்குது எனக்கு. எங்கேயோ போறேன்” என சொல்லி அவன் வெளியே செல்ல இவளும் அவன் பின் ஓடி சென்றாள். 

செருப்பு அணிந்து கொண்டிருந்தவன் பாவனாவை பார்த்து விட்டு, “என்ன?” என உறுமினான். 

“நீங்க ஏன் அப்ராட் போனீங்க?” எனக் கேட்டாள். 

“உன்னை தவிர வேற எவளையும் கட்டி வைக்க நினைச்சா இங்க இருக்கவே மாட்டேன்னு என் அப்பாவுக்கு புரிய வைக்க. நீ போய்ட்ட விட்டுட்டு, வீட்ல எனக்கே தெரியாம மேரேஜ் பண்ற அளவுக்கு துணிஞ்சிட்டாங்க. அங்க சென்னைல ஆஃபிஸ் விட்டு வந்தாலே நீதானே மண்டைய குடைஞ்ச… மனசை போட்டு நார் நாரா கிழிச்சு தோரணமா தொங்க விட்ட? என்ன பண்ண சொல்ற என்னை? கேட்குறா கேள்வி. போ உள்ள” என அதட்டினான். 

“இல்ல, நானும் வருவேன்” சின்ன குரலில் சொன்னாள். 

“ஏன் வர்ற? அதான் நானே உன்னை போக சொல்லி மெசேஜ் அனுப்பிட்டேனே அப்புறமும் ஏன் வர்ற?” விஜய்யின் கோவம் குறையவே இல்லை. 

பதில் சொல்லாமல் ஆனால் இனி அப்படி உன்னை விட மாட்டேன் என்பது போல அமைதியாக அழுத்தமாக பார்த்து நின்றாள் பாவனா. விஜய் வெளியே நடக்க இவளும் அவசரமாக காலணிகள் அணிந்து கொண்டு அவனுக்கு நான்கடிகள் இடைவெளி விட்டு அவனை பின் தொடர்ந்தாள். 

அவள் வருவதை அறிந்தும் திரும்பி பாராமல் நடந்தான் விஜய். அந்த குடியிருப்புகளுக்கு வெளியே இருந்த நீண்ட சாலையில் நடந்து கொண்டிருந்தவன் பாவனாவும் இருப்பதால் அதிக தூரம் செல்லாமல் அங்கிருந்த கட்டை சுவரில் அமர்ந்து கொண்டான். 

விஜய்யை நெருங்க பயந்து கொண்டு அதே கட்டை சுவரில் அவனிடமிருந்து ஐந்தடி தள்ளி இவளும் அமர்ந்து கொண்டாள். அவள் பக்கம் திரும்பாமல் இருந்தான் விஜய். 

நட்சத்திரங்கள் நிறைந்த வானில் நிலா தனியாக தெரிந்தது. பார்வைக்கு தெரியாத காற்றை அசையும் மரங்களும் காற்றின் சில்லிப்பை மேனியும் உணர்த்தியது. இரவென்றாலும் கண்களை உறுத்தாத வெளிச்சத்தை உமிழ்ந்த தெரு விளக்குகள் இருளை விழுங்கியிருந்தன. 

விஜய்யின் மனம் கொதிக்கிறது. யார் யாரோ தன் வாழ்வில் விளையாடி விட்டது புரிய தன்னை முட்டாளாக, இயலாதவனாக, ஏமாந்தவனாக நினைத்தவனுக்கு கசந்து வழிந்தது. 

அர்த்தமில்லாத மூன்று வருட பிரிவு. கல்லாக நான் இருந்தும் என் மனைவிக்கு கொடுமையான கவலைகள் நிறைந்த பிரசவ காலம். தெரிந்து யாருக்கும் தவறு இழைக்கவில்லை நான், ஆனாலும் என் உயிரில் ஜனித்த என் மகளுக்கு என் முகம் தெரியாது, இத்தனை நாட்களாக என் கத கதப்பில் இல்லை அவள். ஏன் இந்த தண்டனை என் குழந்தைக்கு? குமைந்து போனான் விஜய். 

ஏன் மீண்டும் ஒரு முறை விஜய்யிடம் நான் பேச முயலவில்லை? விஜய் இப்படி செய்ய மாட்டார் என ஏன் நான் நம்பவில்லை? ஷாம் அண்ணாவுக்கு ஏன் இத்தனை துவேஷம் என் மீது? மூன்று வருடங்களாக எதிர்காலம் குறித்தான எத்தனை பயம் நிறைந்த வாழ்க்கை? ஆழ்ந்து சிந்திக்காமல் போனேனே! அவசர பட்டு விட்டேனே… தன்னை தானே நொந்து கொண்டிருந்தாள் பாவனா. 

குளிரின் தாக்கத்தால் தனது உடல் லேசாக நடுங்க விஜய்யின் முகத்தை உற்று பார்த்தாள் பாவனா. அவளுக்கு மட்டும் இல்லையா வருத்தம்? அவனை விட அதிக துயரம் இவளுக்குதானே? இப்படி குளிரில் உட்கார்ந்திருந்தால் சரியாகிப் போகுமா? என நினைத்தவள், “வீட்டுக்கு போலாம் விஜய்” என கெஞ்சுதலாக அழைத்தாள். 

“போ வர்றேன்” என்றவன் இரு கைகளையும் சுவரில் ஊன்றி அண்ணாந்து வானத்தை பார்த்தான். இரு கண்களையும் இறுக மூடிக் கொள்ள அவன் கண்ணோரம் கண்ணீர் துளிர் விட்டது. தாங்க முடியாமல் இறங்கி ஓடி வந்து விஜய்யை அணைத்துக் கொண்டாள் பாவனா. 

அவன் இன்னும் பாவனாவை அணைக்கவில்லை, ஆனால் அவள் அணைப்பில் அடங்கியிருந்தான். 

நிமிடங்கள் கடந்து, “போலாம் விஜய்” என பாவனா சொல்ல அவளை விலக்கி நிறுத்தியவன், “உனக்கு என் பொண்ணு இருந்தா. நான் தனியா இருந்தேன். எத்தனை முறை என் மெயில் செக் பண்ணியிருப்பேன் தெரியுமா நீ ஏதாவது மெசேஜ் பண்ணியிருப்பேனு? நாம லவ் பண்ணினாலும் நமக்குள்ள ட்ரஸ்ட் இல்லாம போய்டுச்சா பாவனா?” எனக் கேட்டான்.

பாவனா அமைதி காக்க, “உன்னை மட்டும் சொல்லலை. என்னையும் சேர்த்துதான் சொல்றேன். மூணு வருஷம் போச்சே டி? ரீவைண்ட் பண்ண முடியுமா காலத்தை?” எனக் கேட்டான். 

“இப்படி புலம்பாம இனி என்னன்னு பார்க்கலாம் விஜய்” 

“நீதான் புலம்ப விட்டுட்ட என்னை. என் முகம் காட்டி கூட வளர்க்கல என் பொண்ணை நீ. இப்போ இனி என்னன்னு பார்க்கணுமா உனக்கு? போ” என்றான்.

“நீங்க என்ன ஐடியால இருக்கீங்கன்னு தெரியாம எப்படி உங்களை அவளுக்கு காட்டுவேன்?” என பாவனா கேட்க, “என்னை வேற ஏதாவது பேச வைக்காத பாவனா. போ இங்கேர்ந்து” என்றான். 

அவள்  அசையாமல் அப்படியே நிற்கவும் அவள் கை பிடித்து தன்னருகில் இழுத்து நிறுத்தி அவள் வயிற்றில் முகம் புதைத்து அணைத்துக் கொண்டவன், “எத்தனை முறை நேர்ல போ போன்னு சொல்றேன். கூடவே நிக்கிறதானே? அன்னிக்கு மட்டும் ஏன் விட்டுட்டு போன?” எனக் கேட்டான். 

எதுவும் பேசாமல் அவன் முதுகை ஆறுதலாக தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் பாவனா. 

Advertisement