Advertisement

நேச நதி -17

அத்தியாயம் -17

படகில் பெடல் போடுவதை விஜய், பாவனா இருவருமே நிறுத்தியிருக்க அப்படியே நீரில் நின்றிருந்தது படகு. 

கோவ மூச்சுகளுடன், “உங்கம்மாவை பார்க்க ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போறேன்னு வழியிலேயே உங்க ஃபிரெண்ட் எப்படி என்னை ப்ளேம் பண்ணினார் தெரியுமா?  நான் எல்லாத்தையும் கேட்டுகிட்டு வாய மூடிகிட்டு உட்கார்ந்திருந்தேன். ஹாஸ்பிடல்ல ஐ சி யூ வெளில வச்சு போ போய் இன்னும் மூச்சு விடுறாங்களானா பார்த்திட்டு வான்னு ஹார்ஷா சொன்னார்” பாவனா சொல்ல ஷாம் மீது விஜய்க்கு கோவமாக வந்தது. 

படகும் நின்றிருக்க அம்மாவும் அழுகையுடன் ஏதோ பேச ஆழினி விக்கித்து போய் விஜய்யின் முகத்தை பார்த்தாள்.  ஒன்றுமில்லை என்பதாக மகளை அணைத்துக் கொண்டவன் பாவனாவை நிதானத்திற்கு வரும் படி கண்களால் சொன்னான். 

அன்றைய தின நினைவில் பாவனாவுக்கும் அடுத்து பேச முடியாமல் போக கைப்பையிலிருந்த தண்ணீர் பாட்டில் எடுத்து தண்ணீர் குடித்தவள் முகத்தை துடைத்துக் கொண்டு மகளை பார்த்து லேசாக புன்னகை செய்து கண்கள் சிமிட்டினாள். 

“ஆழி இப்போ பெடல் பண்றீங்களா?” எனக் கேட்ட விஜய் குழந்தையை அவன் கால்களில் நிற்க வைத்து பெடல் செய்ய பாவனாவும் பெடல் செய்ய படகு நகர்ந்தது.

 ஒரு கை கொண்டு தண்ணீர் எடுத்து மகளின் முகத்தில் தெளித்து விளையாடி குழந்தையின் பார்வையில் சூழலை இலகுவாக்க முயன்றான் விஜய்.

 ஆழினியும் உற்சாகம் கொள்ள, “படகு ஆடுது, பயமா இருக்கு. நிறுத்துங்க விளையாட்டை” என கடிந்து கொண்டாள் பாவனா. 

விளையாட்டை நிறுத்தி பாவனாவை பார்த்தான் விஜய். இன்னும் அவள் தாலி சரடு வெளியில் கிடக்க அவன் மனதில் அப்படி ஒரு நிம்மதி பரவியது. 

தாலி அணிந்திருந்தால்தான் திருமணம் செல்லும், தாலி மகத்துவமானது என்றெல்லாம் நினைப்பவன் இல்லை விஜய். ஆனால் தாங்கள் இருக்கும் சமுதாயத்தில் இதுதான் திருமணம் முடிந்ததற்கான அங்கீகாரம் கொடுக்கிறது என்பதாகத்தான் அவன் எண்ணத்தில் பதிந்து போயிருக்கிறது. 

பாவனா தாலி கழட்டி விட்டாள் என்பது இவனை நிராகரித்து விட்டாள் என்பது போலத்தானே அர்த்தம் ஆகிறது. என்ன நடந்திருந்தாலும் ஏன் இப்படி செய்து விட்டாள் என இந்த செயலை நினைத்து அவன் மருகாத நாள் இல்லை. 

இல்லை, அவள் அப்படி செய்யவில்லை, என்னை நிராகரிக்கவில்லை என்பதை விட இன்று வரை அவள் அதை கழட்டவே இல்லை என்பது  மனதை வலிக்க வலிக்க இறுக்கியிருந்த கட்டு ஒன்றை அவிழ்த்து விட ஆசுவாசம் கொண்டான். 

திடீரென மீண்டும் தண்ணீர் எடுத்தவன் பாவனாவின் முகத்தில் தெளிக்க, ஆழினி சிரிக்க, மீண்டும் தண்ணீர் தெளித்தவன் வேண்டுமென்றே லேசாக படகை ஆட்ட, மகள் அப்பாவை அணைத்துக் கொள்ள, பாவனாதான் “ஹையோ நிறுத்துங்க, பயமாயிருக்கு!” என அலறினாள். 

“என்னை தேடாம நான் இல்லாமலே தைரியமா என் பொண்ணை பெத்துகிட்ட, இப்போ மட்டும் பயமா இருக்கா?” 

“வேற என்ன செய்யணும்? போராட்டம் செய்யணுமா? வேற கல்யாணம் பண்ற அளவுக்கு போறவரை நம்பி துரும்ப கூட அசைச்சிருக்க முடியாது என்னால” என்றாள். 

சில நொடிகள் அமைதியாக இருந்தவன், “நாம கோவப்படாம தெளிவா பேசிக்கலாம் பாவனா. நமக்கு தெரியாம ஏதேதோ நடந்திருக்கு” என்றான். 

எளிதில் சமாதானம் கொள்ளாமல் அவள் முகத்தை சுருக்கிக் கொள்ள, “உன் கழுத்துல கிடக்கிற மாதிரியே தாலி செயின் என்கிட்ட ஒண்ணு இருக்கு, நீ கழட்டி கொடுத்ததா சொல்லி என்கிட்ட ஒப்படைக்க பட்ட செயின்” என விஜய் சொல்ல உச்ச பட்ச அதிர்வோடு அவனை பார்த்தாள். 

“பேசலாம், வீட்டுக்கு போயிட்டு பேசலாம்” என்றான். 

அவன் சொன்ன செய்தியின் அதிர்விலிருந்து மீள முடியாமல்  அமைதியாகி விட்டாள் பாவனா. 

நல்ல விதமாகவே படகு சவாரி முடித்துக் கொண்டு கரை வந்தார்கள். ஆழினி பூங்காவில் விளையாட அவளை விஜய் கவனிக்க, ஓரமாக அமர்ந்து விட்டாள்  பாவனா. 

ஏதோ உணர்ச்சி வேகத்துல போக சொல்லிட்டார், நான் வந்திருக்க கூடாதோ? இல்லையே பிருந்தா கூட கல்யாணம் வரை போயிருக்காரே? என்ன நடந்தது? பாப்பா பிறந்த பிறகாவது சொல்லியிருக்க வேண்டுமோ? பலவாறு சிந்தனை செய்து கொண்டிருந்தாள் பாவனா. 

அரை மணி நேரத்திற்குள் போதும் நாளை வரலாம் என சமாதானம் செய்து ஆழினியை அழைத்து வந்தவன், கிளம்பலாம் என்க ‘சொல்லாமல் விட்டது தவறுதான்’ என பாவனாவின் மனதில் உறுத்தல் எழ கலக்கமாக பார்த்தாள். 

என்ன என அவன் கேட்க, “ஒண்ணுமில்ல, வீட்டுக்கு போலாம்” என சொல்லி ஆழினியை வாங்கிக் கொண்டு நடந்தாள். 

இருவரும் வீடு வந்த பின் விஜய் வாங்கிக் கொடுத்த விளையாட்டு பொருட்களோடு ஐக்கியமாகிப் போனாள் ஆழினி. அப்படியே அவளுக்கு சாப்பாடு கொடுத்து மருந்து கொடுத்த பாவனா விஜய்யை சாப்பிட அழைத்தாள். 

அவர்களும் சாப்பிட்டதும் முன்னேரமாகவே ஆழினியை உறங்க வைத்த பாவனா அவளை தூக்கிக் கொண்டு போய் ஈஸ்வரியிடம் விட்டாள். உடனே சிணுங்கிய மகளை மீண்டும் தட்டிக் கொடுத்து உறங்க வைத்து விட்டு தனது அறைக்கு வந்தாள். 

விஜய் படுக்கையின் தலைமாட்டு பகுதியில் இவளுக்காக காத்துக் கொண்டு அமர்ந்திருக்க, இவள் கால் மாட்டு பகுதியில் அமர்ந்து கொண்டாள். 

“சொல்லு, ஸ்ரீ வீட்லதானே இருந்த? எதனால அங்கேர்ந்து கிளம்பின?” எனக் கேட்டான். 

“விஜய்!” அதிர்வாக அழைத்தாள்.

“ம்ம்… என்ன, ஏன் போனேன்னு கேட்டேன் உன்னை?” 

“நீங்கதானே போக சொன்னீங்க விஜய்?” ஏதோ தவறு நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தில் அவள் குரல் மெலிதாக ஒலித்தது. 

“யார் சொன்னா உன்கிட்ட? ஷாம் சொன்னானா? அவன் சொன்னா நம்பிடுவியா?”

“யார் சொன்னாலும் நம்புற அளவுக்கு அவ்ளோ பெரிய முட்டாள் இல்லை நான்”

“அப்ப சின்ன முட்டாள்னு சொல்லிக்கிறியா?” கோவத்தை அடக்கிக் கொண்டு கேட்டான். 

வேகமாக தன் கைபேசி எடுத்தவள் அதில் டிரைவ்வில் சேமித்து வைத்திருந்த அந்த ஆடியோவை தேடி எடுத்தாள்.

“ஹாஸ்பிடல்ல உங்க அப்பா ரொம்ப மோசமா என்னை பேசினார், உங்களை விட்டு போய்டனும்னு மிரட்டினார். ஆன்ட்டிக்கு இப்படி ஆகும்னு நினைக்கலன்னு நான் சொன்னதுக்கு ‘வேற என்ன நினைச்ச? உங்க ரெண்டு பேரையும் பல்லக்குல வச்சு ஊர்வலமா சுத்தி வந்து என் வீட்டுக்குள்ள ஏத்துப்பேன்னு நினைச்சியா’ன்னு கேட்டார் என்னை” என்றவள் சோர்வாக விஜய்யை பார்த்தாள். 

மனம் குமுறினாலும் எல்லாம் சொல்லட்டும் என பொறுமையாக இருந்தான் விஜய். 

“உங்க ஃபிரெண்ட் எதுவும் பேசாதீங்கனு உங்க அப்பாவை கண்ட்ரோல் பண்ணினார். ஸ்ரீ அக்கா விஷால் அண்ணாக்கெல்லாம் கூட இந்த கல்யாணத்தால பிரச்சனை ஆகிடுச்சு, சென்னை போய் இரு, விஜய் வருவான் அப்படினு உங்க ஃப்ரெண்ட் சொல்லவும் எனக்கும் சரின்னு பட்டது. அவரே கார் பிடிச்சு என்னை அனுப்பி வச்சிட்டார். உங்க போன் ஆஃப்ல இருந்தது. நான் சென்னைக்கு போறேன், ஆன்ட்டிக்கு சரியானதும் பொறுமையா வாங்கனு உங்களுக்கு மெசேஜ் அனுப்பினேன்” என்றாள். 

அந்த சமயத்தில் விஜய் உறக்கத்தில் அல்லவா இருந்தான், ஆனாலும் அவன் கைபேசி ஆன் ஆன பின்னர் கூட இவளிடமிருந்து தவறிய அழைப்புகளோ எந்த விதமான செய்திகளோ வந்திருக்கவில்லையே என யோசித்தவன், “அப்புறம்…” எனக் கேட்டான். 

“சென்னை போய்கிட்டு இருக்கிறப்பதான் நீங்க வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருந்தீங்க”

“நான் அனுப்பினேனா?” வியப்பாக கேட்டவன், “என்ன மெசேஜ்?” என்றான். 

பாவனா அவனை குழப்பமாக பார்த்துக் கொண்டே தன் கைபேசியில் இருந்த ஆடியோவை ஒலிக்க விட்டாள். 

“உன்னை நேர்ல பார்த்து இதை சொல்ற தைரியம் எனக்கு இல்ல பாவனா. நீ என்னோட வீக்னெஸ். நீன்னு வரும் போது எல்லாமே… எல்லாமே உனக்கப்புறம்னு ஆகிடுது. சரியா பண்ணிப்பேங்கிற நம்பிக்கையிலதான் இருந்தேன், இப்ப அந்த நம்பிக்கை எனக்கு இல்ல. எனக்கு தெரியுது நான் உனக்கு செய்றது பெரிய அநியாயம்னு… ஆனா… ஆனா சாரி பாவனா. எனக்கு வேற வழி தெரியலை. இந்த கல்யாணம் தப்பான முடிவு, என் அம்மா எழுந்து வந்தா கூட இதை ஏத்துக்க மாட்டாங்க. அவங்க நிலைக்கு நான்தான் காரணம்னு ரொம்ப கில்டி ஆகுது. போய்டு பாவனா, என்னை விட்டு எங்கேயாவது தூரமா போய்டு. திரும்ப உன்னை நான் தேடி வர முட்டாள்தனத்தை என்னை பண்ண வைக்காம எங்கேயாவது போய் நல்லா இரு. முடிஞ்சா என்னை மன்னிச்சுடு” என பேசியிருந்தான் விஜய். 

முதல் முறை அதிர்ச்சியும் திகைப்புமாக கேட்டவன் அவள் கையிலிருந்து கைபேசியை வாங்கி இன்னொரு முறை ஒலிக்க விட்டான். அசல் அவனது குரல்தான். 

எப்படி இது சாத்தியம் என யோசித்துக் கொண்டே இன்னொரு முறை ஒலிக்க விட, “விஜய் என்ன என்னாச்சு? இது உங்க வாய்ஸ்தானே, உங்க நம்பர்லேர்ந்துதான் வந்தது” என்றாள். 

அவளது கைபேசியை படுக்கையில் போட்டவன் பாவனா நம்ப வேண்டும் என்ற தவிப்போடு, “நான் பேசல பாவனா இதை” என்றான். 

“அப்பறம் இது எப்படி?” கேள்வியாக நிறுத்தினாள். 

“உன் குரல்ல ஒரு குவாலிட்டி ஆடியோ சாம்பில் இருந்தா போதும், வாய்ஸ் சேஞ்ச் பண்ற சாஃப்ட் வேர் வச்சு நீ பேசாத ஒண்ணை உன் குரல்ல பேசின மாதிரி கிரியேட் பண்ண முடியும். டெக்னாலஜி கரைச்சு குடிச்ச ஒருத்தனுக்கு இது பாஸிபில்தான்” என்றான் விஜய். 

திகைத்து போனவளுக்கு பேச்சு வரவில்லை. இதனால்தானே கண் தெரியாத தொலைவு வந்தாள்? இது உண்மை இல்லை எனும் போது… 

அவளது தோற்றம் பார்த்து தண்ணீர் கொடுத்து அவளை நிதானமாக்கி மீண்டும் அமர்ந்தான். 

 “இது இல்லீகல் இல்லையா?” எனக் கேட்டாள். 

“நம்ம பேசுறதை செலிபிரட்டிஸ் வாய்ஸ்ல ஆல்டர் பண்ணி ஃபன் பண்ண இப்படி சில ஆப்ஸ் இருக்கு தெரியுமா? ஆனா ஒரு தனிப்பட்ட நபரோட வாய்ஸ் வச்சு இப்படி செய்றது இல்லீகல்தான்னாலும் செய்யலாம்” என்றான். 

“யார் செய்திருப்பா?”

“ம்ம்ம்… இதுக்கான மூளை இருக்க ஒருத்தன்தான். ஃபைனல் இயர்ல ஷாம்  இது சம்பந்தமாதான் ப்ராஜக்ட் செய்திருந்தான். அவன் இன்டெலிஜென்ஸ் வச்சு என் லைஃப்ல விளையாடியிருக்கான்…ராஸ்கல்!” 

“நல்லா தெரியுமா அவர்தானா?” 

“என் போன்லேர்ந்து உனக்கு மெசேஜ் வந்திருக்கு. உன் மெசேஜ் டெலீட் பண்ணி இந்த மெசேஜ் அனுப்பி வச்சிட்டு அதையும் டெலீட் பண்ணி…” கண்களை இறுக மூடிக் கொண்ட விஜய், “இந்த வேலைய அவனை தவிர யாராலும் செய்திருக்க முடியாது. எனக்கு தெரியும் அவனை” என்றான். 

“என்ன நினைச்சி செஞ்சார் இதை? உங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்னா என்ன வேணா செய்வாரா? என்னை அவருக்கு பிடிக்காதுன்னா கூட அவரை தப்பா நினைச்சது இல்ல, அந்த நேரம் கூட அவரை நம்பி அவர் ஏற்பாடு பண்ணின கார்லதான் போனேன். எவ்ளோ பெரிய துரோகம்! நம்ம லைஃப் கையில எடுக்கிற அதிகாரத்தை யார் அவருக்கு கொடுத்தது?” பாவனா ஆதங்கமாக கேட்க நண்பனின் செயல் நினைத்து சில நிமிடங்கள் பேச முடியவில்லை விஜய்யால். 

Advertisement