Advertisement

நேச நதி -16

அத்தியாயம் -16

புதிய இடம் என்பதால் சரியாக உறங்கா விட்டாலும் அதி காலையிலேயே எழுந்து விட்டான் விஜய். பாவனாவும் அறையில் இல்லை. ஆழினி இன்னும் உறக்கத்தில் இருக்க விஜய் சென்று மகளின் அருகில் படுத்துக் கொண்டவன் குழந்தையை அணைவாக பிடித்துக்கொண்டான்.

‘இவ்ளோ சீக்கிரம் எழுந்து என்ன செய்றா இவ?’ என இவன் மனைவியை பற்றி நினைக்க அவளே உள்ளே வந்தாள்.

“என்ன… டிராக் பேண்ட் ஷர்ட்? ஜாகிங் போறியா என்ன?”

“இல்ல வாக்கிங்” என்றவள் கெய்சர் ஆன் செய்து விட்டு விஜய் படுத்திருந்த படுக்கையை சுருட்டி வைக்க ஆரம்பித்தாள்.

“இந்த குளிர்ல வாக்கிங் எல்லாம் போறியா நீ? எப்போலேர்ந்து இந்த ஹேபிட்?”

“ரொம்ப நாளாவே செய்றேன். வந்து… நீங்க…” அவன் எப்படி எதற்கு இங்கு வந்திருக்கிறான் என்பதை கேட்பதற்கு பாவனா தயங்க ஆழினி விழித்துக் கொண்டாள்.

“என்ன இவளும் சீக்கிரம் எழுந்திட்டா?” மகளை தூக்கிய பாவனாவிடம் கேட்டான்.

“இந்த டைம் எழுந்திடுவா. அப்போதான் எனக்கு சரியா இருக்கும். காலைல பதினோரு மணி போல திரும்ப தூங்குவா” என விவரம் சொன்னவள் ஆழினியை கவனிக்க ஆரம்பிக்க, படுக்கையிலேயே அமர்ந்த வண்ணம் பார்த்திருந்தான் விஜய்.

ஆழினிக்கு ஆடை மாற்றி விட்ட பிறகு அவனிடமே விட்டு சென்று விட்டாள். தன் மடியில் அமர வைத்துக் கொண்டவன், “நாம வெளில போலாமா? எங்க போலாம்னு சொல்லு அப்பா அழைச்சிட்டு போறேன்” என்றான்.

தலையின் காயத்தை தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டே “போட்ல போகணும்” என்றாள்.

தன் கைபேசி எடுத்து தலையின் காயத்தை போட்டோ எடுத்து மகளுக்கு காண்பித்தவன், “சும்மா ஒட்டி வச்சிருக்காங்க. அப்பதான் யாரும் பாப்பாவை அங்க இடிக்க மாட்டாங்க” என சொல்லிக் கொண்டிருக்க பால் கொண்டு வந்து மகளுக்கு கொடுத்த பாவனா, “உங்களுக்கு?” எனக் கேட்க அப்புறம் என சொல்லி விட்டான்.

மகளுடன் பேசிக் கொண்டிருந்தாலும் அவன் பார்வை பாவனாவிடத்தில்தான் இருந்தது. இயல்பாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும் கவனமாக இவன் பக்கம் பார்ப்பதை தவிர்ப்பதும் அவளின் நடையும் சற்று நிதானம் இழந்து காணப்படுவதையும் கவனித்தே இருந்தான்.

ஒரு வழியாக படுக்கையறையை ஒழுங்கி படுத்தியவள் தனது ஆடைகள் எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் செல்லப் போகும் முன், “ஹால்ல இருங்க” என்றாள்.

விஜய் முறைக்க கண்டுகொள்ளாமல் கதவை சாத்தி விட்டாள்.

“அம்மா ட்ரெஸ் மாத்துவாங்க. நாம இங்க இருக்க கூடாது” என ஆழினி சொல்ல, ‘குழந்தை முன்னாடி கூட மாத்த மாட்டா போல…’ என நினைத்தவனாக மகளை தூக்கிக் கொண்டு ஹால் சென்று விட்டான்.

“குடிக்க எதுவும் தரவாங்க தம்பி?” என ஈஸ்வரி கேட்க, “இன்னும் பிரஷ் பண்ணலம்மா.  நான் சொல்றேன்” என சொல்ல அவரும் சமையலறை சென்று விட்டார்.

பள்ளி சீருடையில் பாவனா தயாராகி வரவும் பார்த்தவன், “ஸ்கூல் போறியா என்ன? நீயா லீவ் போடுவேன்னு நினைச்சேன்” என்றவன், “லீவ் போடு” என்றான்.

“லீவ் வேஸ்ட் பண்ண முடியாது” என அவள் சொல்ல எதுவும் சொல்லாமல் அவளை அவன் கூர்ந்து பார்க்க, “இல்ல… அப்புறம் தேவை படுறப்போ லீவ் இருக்காது, அதான்” என கொஞ்சம் சமாதானமாக சொன்னாள்.

குரலை செருமிக் கொண்டவன், “நாம வெளில போறோம், லீவ் இன்ஃபார்ம் பண்ணிடு” என கட்டளையாக சொல்லி விட்டு ஓய்வறை உபயோகிக்க அறைக்கு சென்றான்.

பாவனா கோவமாக போய் மகள் பக்கத்தில் அமர்ந்து கொள்ள இவர்கள் பேசுவதை காதில் வாங்கிக் கொண்டிருந்த ஈஸ்வரி அவளிடம் வந்தார்.

“இன்னும் சிக்கல் ஆக்கிக்காத பாவனா. கோவத்தை புடிச்சு வச்சுக்கிறதால யாருக்கு என்ன பிரயோஜனம்? ஆழி குட்டியை மனசுல வச்சு பொறுமையா புத்திசாலித்தனமா இரு” என உரிமையாக சொன்னார்.

“குழந்தைக்காக வந்திருக்காங்க போல ஈஸ்வரி ம்மா. என் கஷ்டம் எதுவும் மாறப் போகுதா?” கண்கள் கலங்க கேட்டாள்.

“இனி கஷ்டம் இல்லாம இரு, முடிஞ்சத விடு. இப்போ ஆழிக்கு விவரம் தெரியாது, வளர்ந்த பிறகு அவ கேட்டா என்ன சொல்வ? தம்பிய பார்த்தாலும் விட்டுட்டு போற மாதிரி தெரியலை. மனசு விட்டு பேசும்மா” என்றார்.

பாவனா சரி என சொல்லா விட்டாலும் மறுக்கவில்லை என்பதால் அதற்கு மேல் பேசாமல் சென்று விட்டார் ஈஸ்வரி.

விஜய் அறையை விட்டு வெளியில் வரவும், “மதியம் மேல லீவ் சொல்லிட்டேன். லஞ்ச் டைம் வந்திடுவேன். நீங்க சாப்பிடுங்க” என சொல்லி மகளின் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு கிளம்பி விட்டாள்.

விஜய் அவள் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருக்க, “ஸ்கூல் ரொம்ப ஸ்ட்ரிக்ட்னு பாவனா சொல்லும். அரை நாள்தான் லீவ் தந்திருப்பாங்க. நீங்க பாப்பாவோட இருங்க, மதியம் வந்திடும் பாவனா” சமாதானமாக பேசினார் ஈஸ்வரி.

இரத்த உறவு இல்லாத ஒருவர் பாவனா மீது அக்கறை கொள்வது பார்த்து வியந்தான். ஆழினியும் அவரை அம்மம்மா என அழைப்பதை கண்டிருந்ததால் தானாக அவரிடம் கனிவு ஏற்பட்டது.

“என்ன பிரேக்ஃபாஸ்ட் பண்ணியிருக்கீங்க?” எனக் கேட்டுக் கொண்டே சிறிய மேசைக்கு முன் அமர்ந்தான்.

“உங்களுக்கு பிடிச்ச பொங்கல், கடலை சட்னி” என்றவர் அவனுக்கு பரிமாறினார்.

“எனக்கு புடிச்ச மெனு எல்லாம் இன்னும் ஞாபகம் வச்சிருக்காங்களா உங்க பாவனா?” கேட்டுக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.

“மறந்திருக்கும்னு நினைச்சீங்களா? வாய் விட்டு சொல்லலைனாலும் உங்க நினைப்புலதான் இருக்குன்னு எனக்கு நல்லா தெரியும் தம்பி”

“இப்படி நினைப்புலேயே வாழ்க்கை நடத்திட முடியுமா ம்மா? இப்போ கூட ஸ்கூல் போய்ட்டா… என்னை மதிக்காம அலட்சியம் செய்ற மாதிரி தோணுது. இல்லை நிஜமாவே லீவ் கிடைக்கலைன்னு எனக்கு நானே சமாதானம் செய்துக்குறேன்” என அவன் சொல்ல அவர் ஒன்றும் சொல்லாமல் பாவமாக பார்த்தார்.

ஆழினி சாமான்களை இரைத்துப் போட்டுக் கொண்டு விளையாடுவதை கவனித்தவன், “இப்படித்தான் எப்பவும் செய்வாளா?” எனக் கேட்டான்.

“பாவனாகிட்ட கொஞ்சம் பயந்து இருந்துப்பா. என்னை நல்லா ஏமாத்திடும் வாண்டு” என பெருமையாக சொன்னவரை கண்டு புன்னகைத்தவன்,  “தேங்க்ஸ்” என்றான்.

ஈஸ்வரி அவனை கேள்வியாக பார்க்க, “என் வைஃப் குழந்தையை நான் கூட இல்லாதப்போ நல்லா பார்த்துகிட்டதுக்கு” என்றான்.

“நானும் ஆதரவு இல்லாதவதானே தம்பி. நான் என்ன பார்த்துகிட்டேன்? சம்பளமும் கொடுத்து என்னைத்தான் பாவனா பார்த்துக்குது. ஆனாலும் நினைச்சுப்பேன், எனக்கு ஏதாவது ஆகிப் போனா என்ன செய்வாங்கனு… நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம் தம்பி” என்றார்.

அவரது அன்பில் லேசாக நெகிழ்ந்தவன் சாப்பிட்டு முடித்து குழந்தையை கண் பார்வையில் விளையாட விட்டு ஹாலில் இருந்தவாறே அவரிடம் பாவனாவை பற்றி விசாரித்தான்.

ரமணன் மகளின் துணைக்கு வைத்தவர்தான் இவர் என்றாலும் அவருடன் பேச்சு வார்த்தை இல்லை என தெரிவித்தார்.

“முதல்ல பாவனாதான் எனக்கு லீவ் கொடுத்து சொந்த ஊருக்கு போயிட்டு வர சொன்னது. அப்புறம் ரமணன் சாரோட பி ஏ சார் போன் பண்ணி வேலைக்கு வர வேணாம்னு சொல்லிட்டார். அண்ணன் வீட்ல சும்மா உட்கார வேணாம்னு நினைச்சு வேலைக்கு போனோம், இப்போ அதுவும் போச்சுதே… அடுத்து வேற வேலை தேடணும்னு நினைச்சிட்டு இருந்தேன். அஞ்சு மாசம் கழிச்சுதான் பாவனா திரும்ப போன் போட்டு இங்க கூப்பிட்டுக்கிட்டு என்னை. வயித்து புள்ளையோட பார்த்து திகைச்சு போய்ட்டேன். ஆனாலும் வேலை செய்றவதானே நான்? என்ன கேட்டுக்க முடியும்? பாவனாவா எதுவும் சொன்னது இல்ல நானும் கேட்டது இல்ல” என்றார் ஈஸ்வரி.

“பாவனா அவ அப்பா கூட கான்ட்டாக்ட்ல இல்லையா?” எனக் கேட்டான்.

“சரியா தெரியலைங்க தம்பி. பாவனா அம்மா எப்பவாவது வருவாங்க. அவங்களுக்குள்ளதான் பேசிப்பாங்க” என்றவர் சிறிது தயக்கத்துடன் “குழந்தை வேணாம்னு சொல்லியிருப்பாங்க போல ரமணன் சார். அது வச்சுத்தான் சார் கூட பாவனாவுக்கு சண்டையா இருக்கணும்” எனும் போதே விஜய்யின் முகம் இறுகிப் போனது.

அவனது முகபாவம் பார்த்து அதற்கு மேல் சொல்லலாமா வேண்டாமா என இவர் யோசித்துக் கொண்டிருக்க, “பாவனா அம்மா அவளை பார்த்துக்கலையா?” என அவனே கேட்டான்.

நாமாக ஏதாவது சொல்லி அது பாவனாவுக்கு இன்னும் பிரச்சனை ஆகப் போகிறது என பயந்தவர் மேலோட்டமாக, “ஷைலஜாம்மா வந்தாங்க, ஆனா என்னமோ அம்மாவுக்கும் பொண்ணுக்கும் ஒத்து வரலை, பாவனாவே என்னை நிம்மதியா இருக்க விடுன்னு சொல்லி அவங்கள அனுப்பி வச்சிடுச்சு. போன் பண்ணி விசாரிச்சுப்பாங்க. எங்கிட்டேயும் பேசி நல்லா பார்த்துக்க சொல்வாங்க” என்றார்.

“என்ன சண்டை அவங்களுக்குள்ள?”

“ரொம்ப விவரமா எல்லாம் தெரியாதுங்க. ஆரம்பத்துல ஏன் இப்படி செஞ்ச முன்னாடியே சொல்லலைனு எல்லாம் கோவப்பட்டாங்க. விடாப்பிடியா பெத்துப்பேன்னு நின்னுச்சு பாவனா” என்றார்.

Advertisement