Advertisement

குழந்தை மட்டும் தங்களுடன் இல்லை என்றால் என்ன செய்திருப்பானோ, ஆனால் குழந்தையின் பொருட்டு கோவத்தை வெளிக் காட்டாமல் ஆழினியை பார்த்து மெல்ல புன்னகை செய்து, “ஆழினி பாப்பாவோட அப்பா நான்” என்றான்.

அம்மாவை பார்த்து, “விஜய் அப்பா இவங்கதானா ம்மா?” எனக் கேட்டாள் குழந்தை.

‘பேர் மட்டும் சொல்லிக் கொடுத்திருக்கா, ஆனா நான்தான் அப்பான்னு அவ வாயால சொல்ல மாட்டாளா? என் ஃபோட்டோ கூட காட்டாம வளர்த்தாளா என் பொண்ணை… ராட்சசி!’ மனதிற்குள் பொறுமினான் விஜய்.

“ஆமாம், லேட் ஆகுது பாரு. வீடு போலாம்” என சொல்லி பாவனா எழுந்து கொள்ள விஜய்யை பார்த்து சிரித்தாள் ஆழினி.

பாவனா குழந்தையை தூக்க போக விஜய்யும் கை நீட்ட  அப்பாவிடம் செல்ல ஆசைதான் என்றாலும் ஏதோ தயக்கம் மேலிட பாவனாவையே தூக்க சொன்னாள் ஆழினி.

விஜய்யின்  மனம் சுணங்க இறுகிய முகத்தோடு கிளம்பினான். வீடு வந்ததும் வாசலிலேயே நின்றிருந்த ஈஸ்வரி, மலர்ந்த முகமாக பாவனாவை பார்த்தார்.

 குழந்தைக்கு அடி பட்டதை சுருக்கமாக சொன்ன பாவனா, “கொஞ்சம் சுடு தண்ணீர் வச்சு கொடுங்க ஈஸ்வரிம்மா, பாப்பாக்கு கொடுக்கணும். ஐஸ்க்ரீம் சாப்பிட்ருக்கா” என்றாள்.

பாவனாவின் வரவேற்பை எல்லாம் எதிர்பார்க்காமல் கோவத்தோடே வீட்டுக்குள் வந்த விஜய் அவள் சென்ற அறைக்குள் நுழைந்தான். ஆழினியை சுத்தம் செய்து உடை மாற்றிக் கொண்டிருந்த பாவனா அவனை பார்த்து விட்டு எதுவும் சொல்லாமல் மகளை மட்டுமே கவனித்தாள்.

இரண்டு அறைகள் கொண்ட வீடு அது. இன்னொரு அறையை ஈஸ்வரி உபயோகம் செய்து கொண்டிருந்தார். விஜய்யின் பையை பாவனாவின் அறையிலேயே ஈஸ்வரி வைத்திருக்க தனக்கு மாற்று உடை எடுத்தவன் அந்த அறையிலிருந்த குளியலறைக்கு சென்றான்.

குழந்தையின் முன்பு எதுவும் பேசா விட்டாலும் பாவனாவின் மனம் குமுறிக் கொண்டிருந்தது. அவனது பை இங்கு இருப்பதை அவளும் கவனித்திருக்க சுடுநீர் கொண்டு வந்து கொடுத்த ஈஸ்வரியும் விஜய் இங்கு வந்து விட்டுத்தான் பார்க் வந்ததாக சொல்லி சென்றார். எனவே தங்களை தேடிக் கொண்டுதான் வந்திருக்கிறான் என்பது அவளுக்கு புரிந்தது.

 ‘குழந்தை இருக்கிறது தெரிஞ்சு வந்திருக்கலாம். இப்ப என்ன செய்யணும் நான்? சும்மா பார்த்திட்டு போக வந்திருக்காரா? இல்லை அழைச்சிட்டு போற எண்ணத்தோடவா? அப்படி கூப்பிட்டா போகணுமா நான்?’ இப்படியாக பாவனா சிந்தனை செய்து கொண்டிருக்க குளியலறையிலிருந்து வெளியில் வந்தான் விஜய்.

படுக்கையில் கரடி பொம்மையை அணைத்துக் கொண்டு படுத்திருந்தாள் ஆழினி. அவளுக்கு உணவு எடுக்க சென்றிருந்தாள் பாவனா.

மகள் அருகில் விஜய் அமர, “எனக்கு நீங்க கொடுத்த கிஃப்ட். என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் இவன்” என மழலையில் சொன்னாள் ஆழினி.

 அது பாவனாவுக்கு அவன் வாங்கிக் கொடுத்தது என்பது புரிய பெருமூச்செறிந்தவன் ஆழினி தலை கோதி விட்டுக் கொண்டே, “அம்முக்கு இன்னும் நிறைய வாங்கி தருவேன். ஏன் படுத்திருக்க இப்போ? இன்னும் சாப்பிடலையே நீ, எழுந்து உட்கார்” என்றான்.

ஆழினி எழும் போதே இவனே தூக்கி தன் மடியில் அமர வைத்துக் கொண்டவன் மகளின் ஒரு கையை எடுத்து தன் கன்னத்தில் பதித்துக் கொண்டான். அவனை அறியாமல் கண்ணீர் வந்தது.

குழந்தை மிரண்டு போய் பார்க்க உடனே கண்களை துடைத்துக் கொண்டவன் சிரித்துக் கொண்டே, “இவ்ளோ நாள் வரலைன்னு கோவமா அப்பா மேலே?” எனக் கேட்டான்.

இல்லை என தலையசைத்த குழந்தை, “ஏன் வரலை?” எனக் கேட்டாள்.

“அப்பாக்கு நிறைய வேலை, உடனே வர முடியலை” என்றவன் “சாரி…” என்றான். என்ன முயன்றும் மீண்டும் கண்ணீர் வந்தது.

பிஞ்சுக் கரங்களால் அவன் கண்ணீர் துடைத்த குழந்தை, தன் கையின் ஈரத்தை அவன் சட்டையிலேயே துடைக்க மகளின் அச்செயல் அவனை அவள் ஏற்றுக் கொண்டு விட்டது போல உணர வைக்க அப்படி ஓர் ஆனந்தம் அவனுக்கு. மென்மையாக ஆழினி நெற்றியில் முட்டியவன் உச்சியில் முத்தம் வைத்தான். குழந்தை அழகாக சிரித்தது.

பாவனா சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்தவள் இவர்களை பார்த்தாள். விஜய்யின் அழுத தடம் தெரிந்த விழிகள் இவள் மனதையும் பிசைய செய்ய, நன்றாக மூச்சு இழுத்து விட்டுக் கொண்டே, “சாப்பிடு ஆழி, சிரப் குடிக்கணும்” என்றாள்.

“பெட்ரூம்ல வச்சுத்தான் சாப்பாடு கொடுப்பியா?” எனக் கேட்டான் விஜய்.

“ஹால்னா டிவி பார்க்கணும்னு சொல்வா. சாப்பிட்டு முடிச்சாலும் அங்கேர்ந்து நகர மாட்டா. தூங்க லேட் பண்ணினா காலைலேயும் எழ லேட் ஆகிடும். இவளை குளிக்க வச்சு சாப்பாடு கொடுத்து அப்புறம்தான் நான் ஸ்கூல் போகனும். இவ தூங்க லேட் ஆனா எல்லாமே லேட் ஆகிடும்” என்றவள் ‘ஏன் இவ்வளவு விளக்கம் கொடுக்கிறேன் நான்?’ என நினைத்துக் கொண்டே ஆழினிக்கு சாப்பாடு ஊட்ட ஆரம்பித்திருந்தாள். விஜய் மடியில் இருந்தவாறே உணவை வாங்கிக் கொண்டாள் ஆழினி.

“ஒரு அம்மா கூட இருக்காங்களே, அவங்க பார்த்துக்க மாட்டாங்களா?” எனக் கேட்டான் விஜய்.

“நான்தானே எல்லாம் இவளுக்கு? என் பொண்ணுக்கு எல்லாமே நானே செஞ்சாதான் எனக்கு திருப்தி” என்றாள்.

பாவனாவை கூர்ந்து பார்த்திருந்தவன், “அதெப்படி ‘என் பொண்ணு’ அப்படினு அவ்ளோ திமிரா என்கிட்ட சொல்லுவ? அதுக்கான உரிமை உனக்கு இல்ல, இவ என் பொண்ணும்தான்” கடின பாவத்தில் சொன்னான்.

பாவனா திகைக்க, “நாம அப்புறம் பேசலாம், ஆழிக்கு சாப்பாடு கொடுத்து முடி” என்றான் விஜய்.

மனதில் பயம் எழ அதை மறைத்து குழந்தைக்கு உணவை கொடுத்து மருந்தும் கொடுத்தாள். அதீத சோர்வு மற்றும் மருந்துகளின் காரணமாக படுத்த உடனே உறங்கி விட்டாள் ஆழினி.

பாவனா குழந்தையை தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்க, கரடியை அணைத்து உறங்கும் மகளை ஆற்றாமையோடு பார்த்திருந்தான் விஜய்.

பாவனா எழுந்து கொள்ள அவள் வெளியில் செல்ல முடியாதவாறு அவள் கையை பிடித்துக்கொண்டவன், “அந்த டெடி எனக்கு ரீபிளேஸ்மெண்ட்டா பாவனா? ஏன்… ஏன் பாவனா எனக்கும் என் பொண்ணுக்கும் இவ்ளோ பெரிய பனிஷ்மென்ட் கொடுத்த? அந்த அளவுக்கா உன் மனசு கல்லா மாறிப் போய்டுச்சு?” எனக் கேட்டான்.

ஏளனமாக புன்னகை செய்த பாவனா, “யாரையும் பனிஷ் பண்ற இடத்துல நான் இல்லவே இல்லை. யாருக்கும் தொந்தரவு தராம நாங்க பாட்டுக்கும் வாழ்றோம். நான் இல்ல உங்க வீக்னெஸ், நீங்கதான் என் வீக்னெஸ். ப்ளீஸ் என் வீக்னெஸ் வச்சு என் மகளை என்கிட்டேர்ந்து பிரிக்க பார்க்காதீங்க” என்றாள்.

விஜய் அவள் கையை விட்டு விட்டு குழப்பமும் திகைப்புமாக பார்க்க, “வெளில இருங்க, நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணனும்” என்றாள்.

விஜய் அமைதியாக வெளியேற ஆடை மாற்றிக் கொண்டு வந்த பாவனா சிறிய  மேசை ஒன்றில் எதிரும் புதிருமாக நாற்காலிகள் போட்டு இருவருக்கும் உணவு எடுத்து வைத்தாள். ஈஸ்வரி எப்போதோ உறங்க சென்றிருந்தார்.

சாப்பாட்டு நேரத்தில் பேச விரும்பாதவனாக விஜய் அமைதி காக்க பாவனாவும் அமைதியாக உண்டாள். பாவனா அறைக்கு வர கோவத்தை ஒதுக்கி வைத்து விட்டு அவளிடம் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டே விஜய்யும் வந்தான்.

ஆழினி சிணுங்க ஆரம்பித்திருக்க பாவனா பக்கத்தில் படுத்து தட்டிக் கொடுத்தாள்.

“நல்லா இருக்காதானே? ஃபீவர் எதுவும் இல்லையே?” என சின்ன குரலில்தான் கேட்டான், அதற்கே உறக்கம் கலைந்து அழுதாள். பாவனா தட்டிக் கொடுக்க அமைதியாகி விட்டாள்.

விஜய் பயந்து போனவனாக அருகில் வந்து குழந்தையை தொட்டுப் பார்த்து விட்டு காய்ச்சல் இல்லை என நிம்மதி அடைந்தவனாக பாவனாவை பார்க்க, “சத்தம் போடாம தூங்குங்க. பயந்திட்டா போல, அதான் டிஸ்டர்ப்டா இருக்கா” என்றாள். அதற்கும் குழந்தை அசைய ‘சின்ன சத்தத்துக்கேவா!’ வியப்பது போல பார்த்தவன் படுக்க இடம் தேடினான்.

அந்த சிறிய கட்டிலில் அம்மா, மகளோடு அந்த கரடி பொம்மைக்கே சரியாக இருந்தது இடம். அம்மா, கரடிப் பொம்மை இரண்டையுமே விடுவதாக இல்லை என்பது போல படுத்திருந்தாள் ஆழினி.

விஜய் அவர்களையே பார்த்துக் கொண்டு நிற்க, “கட்டில் கீழ ஒரு மேட்ரஸ் இருக்கும்” என்றாள் பாவனா. அந்த பேச்சிற்கும் சிணுங்கினாள் ஆழினி.

‘எதுவும் பேசாதே’ என சைகை செய்தவன் கீழிருந்து படுக்கையை எடுத்து தரையில் விரித்து போட்டுக் கொண்டு படுத்தான்.

“பிளாங்கெட் பில்லோ எடுத்துக்கோங்க” என பாவனா சொல்ல ஆழினி மா மா என கண்கள் திறவாமல் உதடுகள் பிதுக்கி அழுது விட்டு அமைதியடைய பாவனாவை முறைத்ததுக் கொண்டே தேவையானதை எடுத்துக் கொண்டு படுத்து விட்டான்.

இந்த இரவில் எதுவும் பேச முடியாது என்பது புரிந்து மனைவியையும் மகளையும் விடி விளக்கின் வெளிச்சத்தில் பார்த்திருந்தான். அவன் பார்வை தங்களிடம் இருக்கிறது என தெரிந்ததாலேயே கவனமாக அவனை பாராமல் படுத்திருந்தாள் பாவனா.

ஆழினி உறங்க, விழித்துக் கிடந்த அவளின் பெற்றோரின் உள்ளங்கள் ஆழிக் கடலாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன.

Advertisement