Advertisement

“ஆழி!” என சத்தமிட்ட பாவனா குழந்தையை நெருங்குவதற்குள் தன் மகளை கைகளில் அள்ளியிருந்தான் விஜய்.

விஜய்யின் முகத்தை அவள் பார்த்திருக்கவில்லை. ஆனால் அவனது பின் பக்கமே அவளை நிலை குலைய செய்தது. தரையிலிருந்து பிரிய மறுத்த கால்களை வலிந்து பிரித்து முன்னோக்கி நடந்தாள்… அவனேதான்.

விஜய்யின் முகத்தை கண்டு விட்ட பாவனாவுக்கு நெஞ்சடைப்பது போலிருந்தது. அவளுக்கும் அவன் மீது கோவம்தான், வருத்தம்தான், யாரும் இல்லாமல் தனியாக என்னையும் பார்த்துக் கொள்வேன், என் குழந்தையையும் நன்றாக வளர்ப்பேன் என்ற வீம்புதான். ஆனாலும் என்றாவது என்னை தேடி வர மாட்டானா என எத்தனை ஏங்கியிருந்தாள்?

இவனை ஒரு நொடி மறந்திருப்பாளா? பெற்ற மகளும் அவள் செயல்களிலும் உருவத்திலும் அவனைத்தானே நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறாள்.

திடீரென நடப்பது நிஜமா எனும் சந்தேகம் எழ, விஜய்தானா என உற்றுப் பார்த்து அவன்தான் என தெளிவு படுத்திக் கொண்டு ஸ்தம்பித்துப் போய் அவள் நிற்க, குழந்தை அழ, கூட்டமும் கூடி விட்டது.

 விஜய் குழந்தையின் தலையை ஆராய  இரத்தம் வந்து கொண்டிருந்தது. தன் கைக்குட்டை எடுத்து அழுத்திப் பிடித்துக் கொண்டவன், “அழாத ம்மா. அழாதடா செல்லம்” என சொல்லி மற்றொரு கை கொண்டு மகளை தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

தன் கணவனின் கையில் அவன் குழந்தையை காணவும் பாவனாவின் உடல் தளர உள்ளே அடைத்துக் கொண்டிருந்த எதுவோ ஹா என மூச்சாக வெளியேறியது.

இந்தி, மராத்தி என அங்கிருந்தவர்கள் பேசிக் கொள்ள  தன் உணர்வுகளை ஒதுக்கி விட்டு கண்களின் கண்ணீரை துடைத்துக் கொண்ட பாவனா மண்டியிட்டு அவர்களின் பக்கத்தில் அமர்ந்து விஜய் அணைப்பிலிருந்த குழந்தையின் தலையை ஆராய போனாள்.

“ஷ் என்ன செய்ற?  காயமாகியிருக்கு,  நல்லா பிளட் வருது. ஹாஸ்பிடல் இருக்கா பக்கத்துல?” எனக் கேட்டான் விஜய்.

அம்மா அம்மா என சொல்லி குழந்தை அழ, “இருக்கு, பாப்பாவை கொடுங்க என்கிட்ட, அழறா பாருங்க” என்ற  பாவனாவுக்கும் குழந்தையின் அழுகை பார்த்து அழுகை வந்தது.

“தலையில அழுத்திப் பிடிச்சிட்டே வச்சுக்க. நீயும் அழுது குழந்தையை கலவரம் பண்ணாத. நான் போய் ஆட்டோ, கார் ஏதாவது பிடிக்கிறேன்” குழந்தையை அவளிடம் ஒப்படைத்துக் கொண்டே சொன்னான்.

“இல்ல ஸ்கூட்டி இருக்கு என்கிட்ட” என்ற பாவனா அவளே தொடர்ந்து ஒரு இடத்தை சுட்டிக் காட்டி, “அந்த க்ரே கலர் ஹேண்ட் பேக்ல இருக்கு கீ” என்றாள்.

அவளுடைய கைப்பையை எடுத்து அதிலிருந்து வண்டி சாவியை எடுத்துக் கொண்டு விஜய் நடக்க அழும் குழந்தைக்கு சமாதானம் சொல்லிக் கொண்டே நடந்தாள் பாவனா.

பார்க்கிங் வந்த பின் வண்டியை பாவனா காட்ட, விஜய் அமர பின்னால் குழந்தையோடு இவளும் அமர்ந்து கொண்டவள், “ஸ்ட்ரைட் போய் ஃபர்ஸ்ட் லெஃப்ட்” என மருத்துவமனைக்கு வழி சொன்னாள்.

மருத்துவமனை வந்த பின்னர்தான் குழந்தையின் பெயர் ‘ஆழினி’ என விஜய்க்கு தெரிய வந்தது.

காயத்தை சுத்தம் செய்து இரண்டு தையல்கள் போட்டு பிளாஸ்டர் போட்டு விட்டனர். அதற்குள் குழந்தை அழுத அழுகையும் அவளை சமாளிக்க முடியாமல் பாவனாவின் திணறலும் என விஜய்யால் சகிக்க முடியவில்லை. இது போல எத்தனை நாட்கள் தனியாக சமாளித்தாளோ என நினைக்கும் போதே அவனுள் வேதனை அலை போல எழுந்தது.

குழந்தையும் பாவனாவை விட்டு வர மாட்டேன் என கெட்டியாக அவளையே பிடித்துக் கொண்டிருக்க செய்வதறியாமல் நின்றிருந்தான் விஜய்.

டி டி ஊசி போட வேண்டும் என சொல்லப் பட, குழந்தையை பாவமாக பார்த்தாள் பாவனா. கடந்த முறை தடுப்பூசி போட வந்த போது இவள் செய்த ரகளை நினைவில் வர, “கை கால் எல்லாம் ஆட்டுவா, கேர்ஃபுல்லா போடுங்க” என இந்தியில் சொன்னவள் ஊசி போட ஏதுவாக குழந்தையின் ஆடையை தளர்த்தப் போனாள். புரிந்த கொண்ட ஆழினி பாவனாவிடமிருந்து இறங்க முயன்று கொண்டே பெருங் குரல் எடுத்து அழ ஆரம்பித்து விட்டாள்.

“ஆழிக் குட்டி சின்னதா எறும்பு கடிக்கும், அவ்ளோதான்” என பாவனா சமாதானம் செய்ய அவளிடமிருந்து இறங்குவதிலேயே முனைப்பாக இருந்தாள் ஆழினி. மகளை தன்னிடம் இருத்திக் கொள்ள போராடிக் கொண்டிருந்தாள் பாவனா.

சட்டென குழந்தையை தான் வாங்கிக் கொண்ட விஜய் தோளில் சாய்த்து இறுக பிடித்துக் கொள்ள அவனிடமிருந்து விலக முடியவில்லை குழந்தையால்.

“என்ன வேடிக்கை பார்க்கிற? எவ்ளோ நேரம் அழுவா பாப்பா… சீக்கிரம் இன்ஜெக்ஷன் போட சொல்லு அவங்கள” என விஜய் சிடு சிடுப்பாக சொல்ல, பாவனாவும் சொல்லி விட்டு குழந்தையின் ஆடையை தளர்த்தி விட ஊசி போட்டு விட்டனர்.

விஜய் அவன் பிடியை தளர்த்த அவன் முகத்தை உர் என பார்த்துக் கொண்டே அவன் தோளில் அடிகள் போட்டு அழுதாள் ஆழினி. அழுதழுது சிவந்து போன தன் மகளின் முகத்தோடு முகம் வைத்துக் கொண்டவன், “ப்ளீஸ் டா ம்மா, அழாதீங்க” என கர கரத்த குரலில் சொன்னான்.

ஊசி கொடுத்த வலியை விட அவன் இறுக்கி பிடித்து வைத்திருந்ததுதான் குழந்தைக்கு பிடிக்கவில்லை. தேம்பிக் கொண்டுதான் இருந்தாள்.

“ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுக்கலாம்னு நினைச்சேனே… வேணாமா உங்களுக்கு?” என விஜய் கேட்க, ஒரு நொடி ஐஸக்ரீம் ஆசையில் அழுகையை நிறுத்தி விழி விரித்த ஆழினி அடுத்த நொடி ‘ஒன்றும் தேவையில்லை’ என்பதாக அவனிடமிருந்து இறங்க முயல மகளை சிரமப்படுத்த விருப்பமில்லாமல் பாவனாவிடமே தந்து விட்டான்.

அம்மாவின் தோளில் தலை வைத்துக்கொண்ட ஆழினி மெலிதாக விசும்பிக் கொண்டிருக்க, “நீ வெளில இரு, மெடிசின்ஸ் எல்லாம் நான் வாங்கிட்டு வர்றேன்” என விஜய் சொல்ல பாவனாவும் மகளோடு வெளியே சென்று விட்டாள்.

மருத்துவமனை வாயிலில் மீன் தொட்டி இருக்க அதை காட்டிய பின் அம்மா தோளில் சாய்ந்து கொண்டே வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள் ஆழினி. பாவனாவுக்குத்தான் விஜய் வருகை பற்றி ஒன்றும் புரியவில்லை. நடந்தது அனைத்தும் மீண்டும் வரிசை கட்டி நினைவில் நிற்க அனிச்சையாக குழந்தையை இறுக பிடித்துக் கொண்டாள்.

மருந்துகள் வாங்கிக் கொண்டு வந்த விஜய், “ரெண்டு நாள் கழிச்சு ட்ரெஸிங் பண்ண அழைச்சிட்டு வர சொன்னாங்க” என்றவன், “வா” என சொல்லி முன்னே நடந்தான்.

என்னை பார்க்கத்தான் வந்தாரா அல்லது எதேச்சையாக பார்த்திருக்கிறாரா என பாவனாவுக்கு தெரியவில்லை. அப்படி என்னை தேடி என்றால் இத்தனை வருடங்கள் இல்லாமல் இப்போது மட்டும் என்ன வந்தது? மனதில் எழுந்த கேள்விக்கு விடை தெரியாமலேயே அவனுடன் புறப்பட்டாள்.

வழியில் ஐஸ்க்ரீம் கடையை பார்த்து விட்டு வண்டியை நிறுத்தியவன், குழந்தையை பார்க்க திரும்பி, “ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா?” எனக் கேட்க ஆழினிக்கும் ஆசை இருந்தாலும் அம்மாவின் முகத்தை பார்த்தாள்.

“இல்ல, க்ளைமேட் சரியில்லை, நிறைய அழ வேற செய்திருக்கா” மறுத்தாள் பாவனா.

“நான் டாக்டர்கிட்டேயே கேட்டுட்டேன். கொடுக்கலாம் சொல்லிட்டார்” என பாவனாவிடம் கடினக் குரலில் சொன்னவன், குழந்தையை பார்த்து, “என்ன ஃப்ளேவர் பிடிக்கும் உங்களுக்கு?” என மென்மையாக கேட்டான்.

“சாக்லேட்” என ஆழினி சொல்ல பின் பாவனாவும் மறுக்காமல் இறங்கி கடைக்குள் சென்றாள்.

மகளுக்கு ஆர்டர் செய்தவன் பாவனாவிடம் “உனக்கு?” என கேட்க அவள் ‘வேண்டாம்’ என தலையாட்ட விட்டு விட்டான்.

 வாயில் இழுப்பி, ஆடையை அழுக்கு செய்து என ஐஸ்க்ரீமை ஆசையும் ஆவலுமாக ஆழினி சுவைக்க டிஸ்யூ வைத்து அவ்வப்போது குழந்தையின் கை, வாய் என துடைத்து விட்டாள் பாவனா.

“குழந்தை முடிக்கட்டும், ஏன் இடையில டிஸ்டர்ப் செய்ற?” எரிச்சலாக கேட்டான் விஜய்.

கண்களால் விஜய்யை முறைத்த பாவனா அவள் செய்து கொண்டிருந்த வேலையை மட்டும் நிறுத்தவில்லை.

‘செய்றதெல்லாம் செய்திட்டு என்னையவே முறைச்சு பார்க்கிறத பாரு’ உள்ளுக்குள் கடிந்தாலும் வெளியில் அமைதியாகவே இருந்தான்.

ஐஸ்க்ரீம் உண்டு முடித்த குழந்தையை சுத்தம் செய்து விட்ட பாவனா, “ஆழி குட்டி இப்போ ஹாப்பியா? வீட்டுக்கு போலாமா?” எனக் கேட்டாள்.

சரி என தலையசைத்த ஆழினி அம்மாவை தன்னிடம் இழுத்து அவள் காதை நெருங்கி ரகசியம் பேசப் போக அந்த செயலில் புன்னகை பூத்தான் விஜய்.

 “இந்த அங்கிள் யாரு?” என மழலையாக குழந்தை கேட்ட ரகசியம் தன் காதிலும் விழ, பாவனாவை கோவப்பார்வை பார்த்தான் விஜய்.

மகளிடம் என்ன சொல்வதென தடுமாறினாலும் விஜய்யை சாதாரணமாக பார்த்த பாவனா, “அவங்களே சொல்வாங்க உனக்கு” என்றாள்.

Advertisement