Advertisement

“அப்பா திட்டுவாங்கங்கிறதை விட கவலை படுவாங்கல்ல ண்ணா?” 

“ம்ம்…” என்றவன், “பேசிப் பார்க்கிறேன். என் விஷயத்துல ரொம்ப சொதப்பிட்டேன். உன் கல்யாணம் எல்லார் சம்மதத்தோட நல்லா நடக்கணும். நான் நடத்தி வைக்கிறேன்” என்றான். 

அவர்கள் ஆர்டர் செய்தது வர உண்ண ஆரம்பித்தார்கள். வைஷு தயக்கமாக, “நீ என்ன செய்யலாம்னு இருக்க ண்ணா?” எனக் கேட்டாள். 

“அதான் சொன்னேனே டா. ஃபர்ஸ்ட் பேசுறேன்…” விஜய் சொல்லிக் கொண்டிருக்க, “உன்னை பத்தி கேட்டேன்” என்றாள். 

“பிருந்தா என்ன செய்றா இப்போ?” 

“ஹையோ அண்ணா, நீ என்ன புது கதை ஆரம்பிக்கிற? முன்னாடி மாதிரி சாது கிடையாது அவ. கேசவன் மாமா பஞ்சு ஃபேக்டரிய அவதான் பார்க்கிறா இப்போ. கல்யாணம்னு போய் கேட்டா அடிச்சு பஞ்சு பஞ்சா தூள் பறக்க விட்ருவா” என வைஷு சொல்ல வாய் விட்டு சிரித்தான் விஜய். 

“அண்ணி எங்க இருக்காங்க ண்ணா இப்போ? நீ ஏன் தனியா சுவிஸ் போன? அவங்களையும் கூட அழைச்சிட்டு போயிருக்க வேண்டியதுதானே?” என வைஷு கேட்க அவனது சிரிப்பு நின்றது. 

“அண்ணி னு எல்லாம் சொல்ற அவளை… எப்போலேர்ந்து இந்த சேஞ்ச்?” 

“ஸ்கூல்ல படிக்கும் போது நடந்தது எல்லாம் கொஞ்சம் நினைவு இருக்கு. பிருந்தா கிளாஸ்தானே அவங்களும்? பிருந்தா பேசக்கூடாதுனு சொல்லவும் நானும் பேச மாட்டேன். என்னமா டான்ஸ் ஆடுவாங்க தெரியுமா? இப்போ தோணுது யார் பேச்சும் கேட்காம அவங்ககிட்ட போய் பேசியிருக்கணும், அண்ணியோட ஃப்ரெண்ட் ஆகியிருக்கணும் அப்படினு. ப்ச்… அப்போ தெரியலை ண்ணா அவங்கதான் அண்ணியா வரப் போறாங்கனு” வைஷுவின் பேச்சு விஜய்க்கு ஏதோ ஒரு விதத்தில் இதம் தந்தது. 

“நடந்த கல்யாணத்தையே அப்பா ஒண்ணுமில்லாம செய்திட்டார். நீ மட்டும் அண்ணினு அக்செப்ட் பண்ணிட்டியா?” 

“சாகுற வரை அவதான் என் மனசுல இருப்பான்னு பிருந்தாகிட்ட சொன்னியே ண்ணா… அப்புறம் அவங்க  அண்ணிதானே எனக்கு?” 

“ம்ம்…  நான் வேற என்னமோ நினைச்சேன்” கிண்டலாக சொன்னான் விஜய். 

அண்ணன் சொல்ல வருவது புரிய, “நான் நிஜமா உன் வைஃப்ங்கிற விதத்துலதான் அண்ணினு சொன்னேன்” என சொல்லி முகம் சுருக்கினாள். 

“நம்பிட்டேன் நம்பிட்டேன். நான் அவரை மீட் பண்ணனும். அரேஞ் பண்ணு” என்றான். 

“நான் எப்படி ண்ணா சொல்றது? நான்தான் பேசுறது இல்லையே”

“சரியா போச்சு. நான் நம்பிக்கையா சொல்லியும் இப்ப வரை அவர் கூட பேச்சு வார்த்தை  இல்லை! ஆமாம் ஏன் நீ பேசுறது இல்லை?”

“பேசி பழகி அப்புறம் நடக்காம போனா உன்னை மாதிரி ஆகிடுவாங்கன்னு பயம் வந்திடுச்சு ண்ணா. அதனால நான் பேச ட்ரை பண்ணவே இல்ல” என்றாள். 

பழகாத ஒருவன் மேல் நேசத்தை தாண்டி எத்தனை அக்கறை இருந்தால் இப்படி சொல்வாள்? ஏன் பாவனா என்னை பற்றி சிந்திக்காமல் போனாய் நீ? மனதில் வலி பரவியது விஜய்க்கு. 

“அண்ணி நினைவு வந்திடுச்சா ண்ணா?” என சரியாக கணித்து தங்கை கேட்க, அதற்கு பதில் தராமல், “சரி நானே பார்த்துக்கிறேன். ஆனா நிஜமா உன்னை பிடிச்சிருக்குதானே அவருக்கு? நான் போய் பேசினதும் யார்டா வைஷ்ணவினு கேட்டு பல்பு கொடுத்திட போறார் எனக்கு” என்றான். 

“அண்ணா!”  என வைஷு சிணுங்க சிரித்தான். 

“நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லவே இல்லண்ணா” என்றாள். 

“ம்ம்… உன் அண்ணி எங்க இருக்கான்னு தெரிஞ்சுக்கணும். அப்புறம் நாலு போட்டு இழுத்திட்டு வரணும். இங்க இன்னும் என்ன மைண்ட் செட்ல இருக்காங்கன்னு தெரியலை. முதல்ல உன் விஷயத்தை பார்க்கிறேன், அப்புறம் என் விஷயம். பட் உன் அண்ணன் தனியா போறதா இல்ல இங்கேர்ந்து” என்றான். 

“அப்போ போய்டுவியா திரும்பவும்?”

“நான் லீவ்லதான் வந்திருக்கேன். வேலைய விடறதா இருந்தாலும் எப்படியும் போய்த்தான் ஆகணும் அங்க. பார்க்கலாம்” என்றான். 

சற்று நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டனர். தங்கையை வீட்டில் விட்டவன், “இந்த டைம் எங்க இருப்பார் உன்னோட அவர்?” எனக் கேட்டான். 

“இன்னிக்கேவா பார்க்க போற?” 

“ஒன் மன்த் லீவ்லதான் வந்திருக்கேன். எல்லாத்தையும் சீக்கிரம் முடிக்கணும். சொல்லு” என்றான். 

“அவங்க அப்பா ஃபைனான்ஸ் பார்க்கிறது இல்ல அவர். தனியா கார்மென்ட் ஃபேக்டரி வச்சிருக்காங்க. அங்கதான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன் ண்ணா. அங்க இல்லைனா ஆஃபிஸ், அங்கேயும் இல்லைனா வேற எங்க இருப்பாங்கன்னு தெரியாது” என்றாள். 

நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லி கிளம்பி விட்டான் விஜய். 

ரமணனின் மகன் தேவா இப்போது எங்கிருக்க வாய்ப்பு இருக்கிறதோ அங்கு நோக்கி சென்று கொண்டிருந்தான் விஜய். ஆமாம் ரமணன், சௌந்தரி இருவரது மகன் தேவாவைதான் வைஷ்ணவி விரும்புகிறாள். 

பள்ளிக் காலத்தில் பிருந்தா இவளுக்கு நல்ல நெருக்கம். அப்படி பிருந்தா தேவாவுடன் பேசுகையில் அவனை பார்த்திருக்கிறாள், தேவாவின் தங்கை மிருதுளாவையும் தெரியும். இப்படியாக சிறு வயதிலேயே அறிமுகம் ஆனவர்கள் இவர்கள்.  

வைஷ்ணவி கல்லூரி இரண்டாவது வருடத்தில் இருந்த போது தேவா படிப்பு முடித்து தொழிற்சாலை அமைப்பதில் முனைப்பாக இருந்த நேரம். அப்போதுதான் பிடித்திருக்கிறது என சொன்னான். மருண்டு போன வைஷு மறுத்து விட்டாள். 

பிருந்தாவின் வீடு செல்லும் போது எப்போதாவது அவனை பார்க்க நேரிடும். தொந்தரவு எதுவும் செய்யாமல் தள்ளியே இருப்பான். வேறு எங்கும் எதேச்சையாக பார்த்தாலும் மௌனமாக கடந்து செல்வான். எப்படியோ இவளையும் பாதிக்க ஆரம்பித்து விட்டான். 

விஜய் வெளிநாடு சென்ற பிறகு தொழிலில் தேவா கால் ஊன்றி நிற்க ஆரம்பித்திருந்த நேரம் வைஷ்ணவியிடம் வந்து அவளை மறக்க முடியவில்லை, மணந்து கொள்கிறாயா என மீண்டும் ஒரு முறை கேட்டான். முதல் முறை அவன் கேட்ட போது உள்ளது போல் இல்லை அவள் மனம். இந்த முறை அவளுக்கும் காதல் இருந்தது. அவனுக்கும் தெரிந்ததோ என்னவோ. 

மனம் முழுக்க ஆசை இருந்தும் நடக்காது என தெரிந்ததால் மாட்டேன் என சொல்லி விட்டாள் வைஷ்ணவி. ஆனால் இருவருமே மற்றவர்கள் நினைவுடனே இருக்கிறார்கள். இப்போது கல்யாண பேச்சு எடுக்கவும்தான் அண்ணனுக்கு அழைத்து சொல்லி விட்டாள்.

தேவா அவனது அலுவலகத்தில் இருந்தான். தொழிற்சாலை ஊருக்கு வெளியே என்பதால் முதலில் அலுவலகம்தான் விஜய்யும் வந்திருந்தான். 

வைஷ்ணவியின் அண்ணன் விஜய் என சொல்லுங்கள் என வரவேற்பில் கூறியிருக்க தேவாவே வெளியில் வந்து விட்டான். 

விஜய் ஏற்கனவே அவனை பார்த்திருக்கிறான் என்றாலும் இப்போது தங்கைக்கு ஏற்ப பொருத்தமா எனும் வகையில் பார்த்தான். குணம் பற்றி விஜய்க்கு முன்பே பரம திருப்தி. எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாதவன்தான். ரமணன் போல இல்லை இவன் என்பதும் விஜய்க்கு தெரியும். 

“வாங்க வாங்க விஜய்… எப்ப வந்தீங்க ஃபாரீன்லேர்ந்து?” கை கொடுத்து வரவேற்றவன் அவனது அறைக்கு அழைத்து சென்று அமர வைத்து உபசரித்தான். 

பொதுவாக தொழில் பற்றி கேட்டறிந்து கொண்ட விஜய், “வைஷுக்கு வீட்ல கல்யாண பேச்சு ஆரம்பிச்சிட்டாங்க” என சொல்லி அவன் முகத்தை கூர்ந்து பார்த்தான். 

புன்னகை முகமாக இருந்த தேவாவின் முகம் தீவிர பாவனைக்கு மாறியது. 

“எதுவும் சொல்லணுமா என்கிட்ட?” எனக் கேட்டான் விஜய். 

ஆமாம் என்பது போல தலையாட்டிய தேவா பேச ஆரம்பித்தான். 

“சின்ன வயசுல அம்மா பட்ட கஷ்டம் பார்த்து வளர்ந்தவன் நான். அப்பா எங்களை கவனிக்கிறதுல எந்த குறையும் வைக்கலைன்னாலும் அம்மாவுக்கு செஞ்சது மிகப்பெரிய துரோகம். அம்மாவோட பிறந்த வீட்ல ஆதரிக்க யாரும் இலைங்கிறத விட அப்பா மேல நிறைய அஃபெக்ஷன் வச்சிருந்ததால அவரை பிரியறது பத்தி யோசிக்கவே இல்லை அம்மா. அவங்க சொல்லாமலே அப்பாவை விட்டு எப்பவும் பிரிய மாட்டாங்கங்கிறதை புரிஞ்சுக்கிட்டேன் நான்” என தேவா சொல்லிக் கொண்டிருக்க பொறுமையாக அவனை கவனித்துக் கொண்டிருந்தான் விஜய். 

“நான் எந்த தப்பும் பண்ணாமலே இன்னிக்கு அப்பாவோட கேரக்டர் என் ஆசைக்கு முட்டுக்கட்டையா இருக்கும் போதுதான் பாவனா இருந்த நிலையை என்னால விளங்கிக்க முடியுது” என தேவா சொல்ல விஜய் நிமிர்ந்து அமர்ந்தான். 

“பாவனாவை எங்க யாருக்கும் பிடிக்காது, அம்மா கஷ்டத்துக்கு அவளும் காரணம்னு எனக்கு அவளை பார்க்கும் போதே வெறுப்பா இருக்கும். இப்பவும் பெருசா பாசம் அக்கறைனு எல்லாம் சொல்லிக்க மாட்டேன்” என்ற தேவா தண்ணீர் எடுத்து பருகினான். 

“தேவா உங்களை புரிஞ்சுக்க முடியுது, அது இல்ல நான் பேச வந்தது” என்றான் விஜய். 

“வைஷுக்கு கல்யாணம்னு சொல்லி என்னை உத்து பார்க்குறீங்க. எதுக்கு வந்திருக்கீங்கனு தெரியாம இல்லை. சந்தோஷத்துக்கு பதிலா துக்கமா இருக்கு” என தேவா சொல்ல குழப்பமாக பார்த்தான் விஜய். 

“உங்களுக்கும் பாவனாவுக்கும் நடுவுல என்ன நடந்தது, நடக்குது எதுவும் எனக்கு சரியா தெரியாது. ஆனா பிருந்தா கல்யாணம் அப்போ பாவனாவை மறக்க மாட்டேன்னு நீங்க சொன்னது தெரியும்” 

“இப்பவும் நான் மறக்கல” என்றான் விஜய். 

“அப்புறம் ஏன் இந்த பிரிவு?” 

“பாவனாகிட்ட கேட்ருக்கணும் இதை நீங்க?” 

“கேட்க நினைச்சேன், ஆனா அவ கூட அப்படி சகஜமா பேசி எனக்கு பழக்கமில்ல. ஒரு வாரத்துக்கு முன்னாடி அவளை பார்த்து வந்ததிலேர்ந்து மனசை போட்டு அறுக்குது. என் அப்பா தப்பு பண்ணியிருந்தாலும் பாவனாவும் என் தங்கைதானே? என் அம்மா, பாவனா அம்மா ரெண்டு பேருமே என் அப்பாவால பாதிக்க பட்டவங்க. எஸ் நான் அப்படித்தான் ஃபீல் பண்றேன்…” 

“பாவனாவை நீங்க பார்த்தீங்களா?” தேவாவின் பேச்சை இடை மறித்தான் விஜய். 

“ம்ம்… புனேல” என தேவா சொல்ல விஜய்யின் உள்ளுக்குள் பர பர என இருந்தது. 

“எப்படி தெரியும் உங்களுக்கு? உங்க அப்பா சொன்னாரா?” 

“அப்பா ஸ்ட்ரோக் வந்து இப்போ அவ்வளவா செயல்படறது இல்லை. அவர் பைனான்ஸ் எல்லாம் மூடியாச்சு. அவர் எதுவும் சொல்லலை.  நான் என் ஃபேக்டரி விஷயமா புனே போனப்போ பாவனாவை பார்த்தேன்” என்றான். 

மேசை மீதிருந்த  தண்ணீர் ஜக்கை எடுத்து வாயில் சரித்துக் கொண்டான் விஜய். பதற்றத்தில் தண்ணீர் அவன் சட்டையில் சிந்தியது. 

ஜக்கை மேசை மேலேயே வைத்த விஜய், “புனேல எங்க இருக்கா அவ? அட்ரஸ்… அட்ரஸ் வேணும் எனக்கு” என பட படத்தான். 

ஒரு ரெசிடென்ஷியல் பள்ளியின் பெயரை கூறிய தேவா, “அங்கதான் ஒர்க் பண்றா” என்றான். 

முகத்தை துடைத்துக் கொண்ட விஜய், “சாரி தேவா. வைஷுக்காகத்தான் உங்களை பார்க்க வந்தேன். ஆனா இப்ப வேற எதுவும் பேச முடியலை என்னால. நான் நான்… ஒரு வாரம் டைம் தாங்க. நான் உங்க கல்யாணம் முடிக்காம திரும்ப போக மாட்டேன். இப்ப வேற வேலை இருக்கு” என சொல்லி எழுந்து கொண்டான். 

தேவாவும் எழுந்தவன், “பாவனா பத்தி சொன்னதும் நீங்க டென்ஷன் ஆகுறீங்க. இன்னும் பாவனாவை மறக்கலைன்னு சொன்னீங்க, இப்போ திரும்ப போய்டுவேன்னு சொல்றீங்க.  உங்களுக்குள்ள என்ன சண்டைன்னாலும் பாவம் இல்லையா குழந்தை? நான், பாவனா, மிருதுளா எல்லாரும் பேரெண்ட்ஸால பாதிக்க பட்ட விக்டிம்ஸ். இப்ப எங்க குடும்பத்துல இன்னொரு குழந்தை இப்படி அப்பா இல்லாம ஏன் வளரனும்? பார்த்திட்டு வந்ததிலேர்ந்து உங்க பொண்ணுதான் என் கண்ணுக்குள்ள நிக்குறா. ப்ளீஸ் உங்க குழந்தைக்காக சேர்ந்து வாழுங்க” என்றான். 

உள் வாங்கிய செய்தியில் உடலில் ஏற்பட்ட நடுக்கம் தாளாமல் பொத் என இருக்கையில் அமர்ந்து விட்டான் விஜய். 

Advertisement