Advertisement

நேச நதி -14

அத்தியாயம் -14

வைஷ்ணவி மிகுந்த யோசனைக்கு பின்னர் அண்ணன் விஜய்க்கு அழைத்தாள். நேரம் இரவு பத்து ஆகியிருக்க தான் தங்கியிருந்த வீட்டின் படுக்கையறை பால்கனியில் நின்று கொண்டிருந்த விஜய் உறங்கலாம் என எண்ணிய சமயம் அவனது கைபேசி அழைத்தது. 

வைஷ்ணவியின் எண்ணை பார்த்ததும் பதற்றம் தொற்ற உடனே அழைப்பை ஏற்று, “என்ன வைஷு?” எனக் கேட்டான். 

“தூங்கிட்டியா ண்ணா, இப்போ பேசலாம்தானே?” என தயங்கிய குரலில் கேட்டாள் வைஷ்ணவி. 

“விளையாட்டு பண்றியா? இங்கதான் டைம் டென், இந்தியால டைம் இப்போ ஒன் தேர்ட்டி. தூங்காம என்ன செய்ற நீ?” 

“அண்ணா…” தயக்கமாக அழைத்தாள்.

“என்னடா?” 

“மேரேஜ் பண்ணிக்க சொல்லி ஃபோர்ஸ் பண்றாங்க. என்னையும் உன் கூட அங்க சுவிஸ் கூட்டிட்டு போ, அங்கேயே ஏதாவது வேலை வாங்கிக் கொடு” என்றாள். 

“வயசு என்ன ஆகுது உனக்கு? இருபத்தி நாலு வயசுல கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்கனு நடு ராத்திரி எனக்கு போன் பண்ற… ஏன் கல்யாணம் வேணாம் உனக்கு?” 

“எனக்கு பிடிக்கல. சும்மா எல்லாரும் ஏன் ஏன்னு கேட்டா… எனக்கு கல்யாணத்துல இன்ட்ரெஸ்ட் இல்ல ண்ணா. இங்க இருந்தா கேட்டுட்டே இருக்காங்க. ப்ளீஸ் அண்ணா உன் கூட கூப்பிட்டுக்கோ” என்றாள். 

“மொட்டையா பிடிக்கலைன்னு சொன்னா என்ன அர்த்தம்? ஏன் பிடிக்கல?” 

“இங்கதான் யாரும் புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க, நீ ஹெல்ப் பண்ணுவேன்னு நினைச்சேன். போ நான் வைக்கிறேன்” 

“வைஷு!” விஜய் அதட்டல் போட கைபேசியை வைக்காமல் அமைதியாகி விட்டாள். 

சில நொடிகள் யோசித்த விஜய், “யாரையும் பிடிச்சிருக்கா உனக்கு?” எனக் கேட்டான். 

“இல்ல ண்ணா” என அவள் தடுமாறிய விதமே அப்படித்தான் என்பதை உரைத்தது. 

“ம்ம்…  சொல்லு யாரு? அம்மாகிட்ட கூட சொல்லாம மேரேஜ் வேணாம்னு சொல்றியே… யாரு பையன்?” 

“வேணா ண்ணா. அப்பா ஒத்துக்க மாட்டாங்க. என்னால அவரை தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்ய முடியாது, அப்பா சம்மதம் இல்லாம அவரையும் கல்யாணம் செய்ய முடியாது” என்றாள். 

‘என் குட்டி தங்கையா இவள்?’ என வியந்தவன், “அண்ணன்கிட்ட சொல்லு யாருன்னு?” எனக் கேட்டான். 

“நீதான் வர்றதே இல்லையே இங்க? உன்னால என்ன பண்ண முடியும்?” 

“உனக்காக வராம போய்டுவேனா?” என விஜய் கேட்க வைஷ்ணவிக்கு கண்கள் கலங்கிப் போயின. 

“நிஜமா வருவியா ண்ணா? எனக்காக எல்லாம் வேணாம். நீ வாண்ணா” என கலங்கிய குரலில் சொன்னாள். 

“யாருன்னு நீ சொல்லவே இல்லை” என விஜய் சொல்ல அவளும் யாரென சொல்ல அவனுக்கு சில நொடிகள் ஆயின நிதானத்திற்கு வர. 

“ஏன் ண்ணா சைலன்ட் ஆகிட்ட? நான்தான் சொன்னேன்ல… அப்பா ஒத்துக்க மாட்டாங்கதானே?” 

“எத்தனை வருஷம் லவ் பண்ற?” 

“நான் இன்னும் அவர்கிட்ட சரின்னு சொல்லவே இல்லைண்ணா. நான்…  எப்போலேர்ந்து எனக்கு அவரை பிடிச்சதுன்னு எனக்கே தெரியாது. ஆனா அவர் அஞ்சாறு வருஷமா என்னை லவ் பண்றார் போல” என்றாள். 

“என்ன சொல்லிட்டு இருக்க வைஷு நீ?” 

“நான்தான் சரியா பேசினது இல்லைனு சொல்றேனே ண்ணா. நான் காலேஜ் ரெண்டாவது வருஷம் கடைசில இருக்கும் போது ப்ரொபோஸ் பண்ணினாங்க. அதை வச்சு நானா கணக்கு சொல்றேன்” என்றாள். 

“சரியா பேசினதே இல்லை. ஆனா அவரை தவிர யாரையும் கல்யாணம் செய்துக்க மாட்ட… ஹ்ம்ம்…?” 

“எனக்கும் ஏன் இப்படி ஆச்சுன்னு தெரியலை ண்ணா. ஆனா அவரை பிடிச்சிருக்கு” அண்ணன் புரிந்து கொள்ள வேண்டுமே என்ற தவிப்பு இருந்தது வைஷுவின் குரலில். 

“நான் அங்க வர்றேன். வந்ததும் பேசலாம். இப்போ போய் தூங்கு” என்றவன் கைபேசியை வைத்து விட்டான். 

அப்பாவுடன் சண்டையிட்டு சென்னை வந்த ஒரு மாதத்திற்குள் சுவிஸர்லாந்து வந்தவன்தான். முழுதாக மூன்று வருடங்கள் ஆகியிருந்தன. என்ன மாற்றங்கள் வந்த போதும் பாவனா மீது இவன் கொண்ட காதலில் மட்டும் எவ்வித மாற்றமும் இல்லை. தினம் மெயில் பார்க்கிறான், அவளிடமிருந்து ஏதேனும் செய்தி வருகிறதா என. எதிர்பார்ப்பு பொய்த்து போவதால் ஏமாற்றத்தோடு சேர்ந்து கோவமும் வருகிறது. 

அம்மாவுக்கும் தங்கைக்கும் மட்டும் இவனாக அழைத்து பேசுவான். வர சொல்லி கேட்டும் மறுத்து விட்டான். நண்பர்கள் பேசுவார்கள். ஸ்ரீக்கு ரதிக்கு ஷீபாவுக்கு எல்லாம் குழந்தை பிறந்த போது கூட கைபேசி வாயிலாக வாழ்த்து சொன்னதோடு நிறுத்திக் கொண்டான். 

ஷாம் இன்னும் திருமணம் செய்யாமல்தான் இருக்கிறான். பேசும் போது இவன் ஒரு முறை ஏன் என கேட்டதற்கு “உனக்கு ஆனதுக்கு அப்புறம்தான் மச்சி” என சொல்லி நன்றாக வாங்கிக் கட்டியிருந்தான். 

சென்ற வருடம் அரங்கநாதனே வா என அழைத்து விட்டார். இவனுக்குத்தான் இன்னும் முழு மனதாக அங்கு செல்ல வேண்டும் என தோன்றியிருக்கவில்லை.

சென்றால் மீண்டும் தன் திருமணம் குறித்து பேசுவார்களோ என்ற பயம். மூன்று வருடங்கள் கடந்தும் இன்னும் அவள்தானே நினைவில் நிற்கின்றாள். வேறு யாரோடும் கற்பனை கூட செய்ய முடியவில்லை. இப்படியே இருந்து விட்டான். 

காதலிக்க ஆரம்பித்து இரண்டு வருடங்கள் சரி வராது என விலகியிருந்து, பின் ஒருவர் இல்லாமல் ஒருவரால் வாழ்வு நிறைவு பெறாது என உணர்ந்து காதலை ஏற்று, இரண்டரை வருடங்கள் காதலில் திளைத்து திருமணமும்  முடித்து தனி மரமாக நிற்கின்றான். 

அந்த நேரம் எதுவும் பிடிக்கவில்லை, அங்கு இருக்கவும் பிடிக்கவில்லை. யாரும் தொந்தரவு தராத இடத்திற்கு வர விரும்பி வந்து விட்டான். 

இத்தனை வீம்பாக தான் இங்கு வந்திருக்க கூடாதோ? அவளை தேடி சென்றிருக்க வேண்டுமோ என கடந்த சில மாதங்களாக அடிக்கடி நினைக்கிறான். இப்போது கூட அதே நினைவோடு நிற்கையில்தான் தங்கையிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.

 

தங்கைக்காக மட்டுமல்லாமல் தனக்காகவும் தாயகம் திரும்ப எண்ணினான். வாழ்க்கை வீணாகிப் போவதாக உணர்கிறான். பாவனா இருக்குமிடம் அறிந்து கொள்ள வேண்டும், தன்னிடமே இழுத்துக் கொண்டு வர வேண்டும், வந்த பின் இருக்கிறது அவளுக்கு… என்று நினைத்துக் கொண்டான். 

நாட்களை கடத்தாமல் அந்த மாத இறுதியில் ஒரு மாத கால விடுப்பு எடுத்துக் கொண்டு ஊர் வந்தான். வருகிறேன் என தங்கையிடம் சொல்லியிருந்தாலும் இன்றுதான் வருகிறேன் என தேதி எல்லாம் சொல்லியிருக்கவில்லை. ஒரு வாரமாக வீட்டில் உள்ளவர்களுக்கு  நண்பர்களின் குழந்தைகளுக்கு என  நிறைய ஷாப்பிங் செய்திருந்தான். 

யாருக்கும் முன்னறிவிப்பு செய்யாமல் வீடு வந்திறங்கி விட்டான். 

தான் வந்த காரை அனுப்பி வைத்த விஜய், லக்கேஜ் கையில் எடுக்க அண்ணனை பார்த்து விட்ட பிரசன்னா ஓடி வந்தான். 

விஜய் புன்னகை செய்ய அண்ணன் கையை பிடித்துக் கொண்டவன், “ஒரு வழியா மலை இறங்கிட்டியா?” எனக் கேட்டு சிரித்தான். 

“ஆள் மாறிப் போய்ட்ட டா, என்னடா ஓவர் எக்ஸர்சைஸா?” தம்பியின் புஜத்தை அழுந்தப் பற்றிக் கேட்டான். 

“நீ கூடத்தான்? இந்த கால தேவதாஸ் மாதிரி இருக்க” 

“க்ளீன் ஷேவ்ல இருக்க என்னை பார்த்து இப்படி சொல்ற?” 

“தாடி இல்லைனா கூட உன் கண்ல தெரியுதே…” பிரசன்னாவுக்கு இப்படி பேசும் எண்ணம் இல்லை, அதுவும் மூன்று வருடங்கள் கடந்து பார்க்கும் தமையனிடம் பேச எத்தனையோ விஷயங்கள் இருக்க, அவனை மீறி கேட்டு விட்டான். அவன் முகத்தில் தெரிந்த கவலையின் சாயல் அந்த அளவு அவனை பாதித்து விட்டது போலும். 

“டிராவல் செஞ்சது டயர்டா இருக்கேன், அதான் உனக்கு அப்படி தெரியுறேன்” என சொல்லி விஜய் வீட்டினுள் செல்ல, கங்கா அதிர்ச்சியில் உறைந்து நின்றார். அம்மா அருகில் சென்ற விஜய் அவரை லேசாக அணைத்துக் கொள்ள அழுதார். வைஷு வந்து ஒரு பக்கம் கட்டிக் கொண்டாள். 

 மகனை பார்த்த படி நின்ற அரங்கநாதனுக்கும் கண்கள் கலங்கின. சுதாரித்து, “வாடா, சொல்லவே இல்லை” என இயல்பாக பேசினார். 

விஜய்யும் தடுமாற்றம் இல்லாமல் பதில் சொன்னான். சத்தமில்லாமல் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது வீட்டில். இயல்புக்கு திரும்பவே கங்காவுக்கு சற்று நேரமெடுத்தது. 

விஜய்யும் உள்ளுக்குள் சற்று உணர்ச்சிமயமாக இருந்தாலும் காட்டாமல் சமாளித்து இருந்தான். அரங்கநாதனுக்கு என்னவோ மகன் வந்தது மகிழ்ச்சி என்றாலும் மனதில் உறுத்தல், இப்படி தங்களை விட்டு செல்வான் என அவர் நினைத்திருக்கவே இல்லை. 

மூத்த மகனது பிரிவு அவரை வெகுவாக பாதித்திருந்தது. வாழ வேண்டிய வயதில் ஒற்றையாக நிற்கிறானே என வருந்தினாலும் இன்னும் பாவனாவை இவனோடு நிறுத்தி பார்க்கும் அளவுக்கு மனம் வரவில்லை. 

என்ன எண்ணத்தில் இருக்கிறான், மீண்டும் திருமணம் பற்றி பேசினால் மீண்டும் விட்டு செல்வானோ, அந்த பெண்தான் வேண்டும் என சொல்வானோ, அப்படி சொன்னால் நான் என்ன செய்வது? என பல விதமாக யோசனை செய்து கொண்டிருந்தார். 

இப்போது வைஷ்ணவியும் அவர்கள் கல்வி நிறுவனங்களில் ஒன்றை கவனித்து வருகிறாள். அண்ணன் வந்ததால் அரை நாள் வீட்டில்தான் இருந்தாள். மதியமாக  விஜய் அவனறைக்கு உறங்க செல்லவும் இவளும் பள்ளிக்கு புறப்பட்டு விட்டாள். 

மாலை பள்ளி நேரம் முடிந்தும் வைஷு வேறு அலுவல்கள் பார்த்துக் கொண்டிருக்க கைபேசி மூலமாக வெளியில் காத்திருப்பதாக சொன்ன விஜய் அவளை உடனே வர சொன்னான். அவளும் கிளம்பி விட்டாள். 

விஜய் அவனே கார் எடுத்து வந்திருக்க தன் கார் டிரைவரை அழைத்து வீட்டுக்கு செல்லுமாறு கூறிய வைஷு அண்ணன் காரில் ஏறிக் கொண்டாள். இருவரும் உணவகம் ஒன்றுக்கு சென்றனர். 

இன்னொரு முறை தெளிவாக  தங்கையிடம் அவள் காதல் பற்றி கேட்டுக் கொண்டான் விஜய்.

“நீ ஸ்ட்ராங்கா இருந்தாதான் நான் பேச முடியும். அப்பாவுக்கு பயந்து பின் வாங்க கூடாது” என்றான் விஜய். 

“என்ன செய்ய போறேண்ணா? வீட்டுக்கு தெரியாம எல்லாம் என்னால கல்யாணம் செய்துக்க முடியாது. ஏற்கனவே அம்மா அப்பா எல்லாம் எவ்ளோ கஷ்ட படுறாங்கன்னு பார்த்தும் அந்த தப்ப நான் செய்ய மாட்டேன்” என்றவள் தான் பேசி விட்டதை நினைத்து கலக்கமாக பார்த்தாள். 

விஜய்க்கும் உள்ளுக்குள் வருத்தம்தான் என்றாலும் லேசாக புன்னகைத்தவன், “யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு நான் சொல்லலை வைஷு. வீட்ல பேசும் போது அப்பா கேட்டா உறுதியா சொல்லணும் நீ, அதை சொன்னேன்” என்றான். 

Advertisement