Advertisement

நேச நதி -13

அத்தியாயம் -13

தாலி சரடை பார்த்து விட்டு அதிர்ச்சியடைந்த விஜய் நம்ப முடியாமல் ஷாமை பார்க்க, “நேத்து ஹாஸ்பிடல் வந்திருந்தா அம்மாவை பார்க்க. அவங்க மயக்கமா இருந்தாங்க. இனிமே இந்த ஃபேமிலில அவளால உறுத்தல் இல்லாம வாழ முடியுமா தெரியலை சொன்னா. அதுக்காக உன்னை குடும்பத்திலேர்ந்து பிரிச்சு அழைச்சிட்டு போறதும் சரியா இருக்காதுன்னு சொன்னவ மொத்தமா உன்னை விட்டு விலகி போயிடுறேன்னு சொல்லிட்டா” என்றான் ஷாம்.

“பொய் சொல்லாத ஷாம்” என்ற விஜய் எழுந்த கோவத்தை அடக்கி  “நீ எதுவும் மிரட்டினியா அவளை?” என விசாரணை செய்தான்.

“ஆமாம் நான் மிரட்டின உடனே அவ பயந்திடுவா. அவ அம்மா பார்த்திட்டு வெளில வந்தப்ப அப்பா அங்கதான் இருந்தாங்க. அப்பா சொன்னா நம்புவதானே? அவர்கிட்ட கேளு. அவளே அப்பாகிட்ட போய் இனிமே உங்க மகன் லைஃப்ல நான் இல்ல, எல்லாத்துக்கும் சாரினு சொல்லிட்டுதான் இங்கேர்ந்து கிளம்பினா” என்றான்.

தாலி சரடை பாக்கெட்டில் பத்திரப் படுத்திக் கொண்ட விஜய் வேகமாக கைபேசி எடுத்து பாவனா எண்ணுக்கு அழைத்தான். ரிங் போகவில்லை. உடனே ஸ்ரீக்கு அழைத்து பாவனா பற்றி கேட்டான்.

“டேய் நேத்து நாங்க ஹாஸ்பிடல் போய்ட்டோம் எங்க செக் அப்க்கு. ஈவ்னிங் ஆகிடுச்சு வீடு வர. ஷாம்தான் கார் புடிச்சு சென்னை அனுப்பி வச்சதா சொன்னான். நைட் அங்க ரீச் ஆனதும் கால் பண்ணினா, அப்புறம் பேசல டா” என ஸ்ரீ கூற, “கிளம்பும் போது உனக்கு கால் பண்ணலையா?” எனக் கேட்டான்.

“இல்லையே… என்னாச்சு டா?”

“ஸ்ரீ…” என தவிப்பாக அழைத்தவன் ஷாம் சொன்னதை சொல்லி, “தாலி கழட்டி கொடுத்திட்டு போயிருக்கா ஸ்ரீ. என்ன நினைச்சிட்டு இவ இப்படி செய்திருக்கா?” என நொந்து போனவனாக கேட்டான்.

ஸ்ரீக்குமே அதிர்ச்சி.

“ரொம்ப கன்ஃப்யூஸ்டா இருந்தா டா. நேர்ல பார்த்து பேசு அவகிட்ட” என்றாள் ஸ்ரீ.

“என்னை விட அவளுக்கு கவலை அதிகமாகிடுச்சா? எவ்ளோ ரிஸ்க் எடுத்து இந்த மேரேஜ் நடந்திச்சு. தாலிய கழட்டி கொடுத்து போனான்னு என் வீட்ல தெரிஞ்சா… என்ன வந்தாலும் ரெண்டு பேரும் ஃபேஸ் பண்ணனும்னு படிச்சு படிச்சு சொல்லியிருக்கேன் அவகிட்ட. மேரேஜ் க்கு முன்னாடி எப்படியோ இப்ப எப்படி அவளா முடிவு எடுக்கலாம்?” என அவளிடம் இரைந்தான்.

“சரி இப்ப அம்மாவை கவனி. அங்க போய் நேர்ல பேசு”

“நான் போய் பேசணுமா அவகிட்ட? ஃபோன் ஆஃப் பண்ணி வச்சிருக்கா… என்னை பார்த்தா எப்படி தெரியுது அவளுக்கு?” என விஜய் பற்களை கடிக்க ஷாம் கைபேசியை வாங்கி ஸ்ரீயிடம் தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி வைத்தான்.

விஜய்யின் சட்டை பையில் இருந்த தாலி சரடு அவன் மனதை வெகுவாக நெருடியது. என்ன பேசி இந்த திருமணத்திற்கு அவளை சம்மதிக்க வைத்தேன். மறந்து போனாளா அவள்? என்ன தைரியம் அவளுக்கு? இந்த முடிவே முட்டாள்தனம், அதை என்னிடம் சொல்ல வேண்டும் என கூட தோன்றவில்லை. திருமணம் முடிந்த பின் இருவரும் சேர்ந்துதானே எதுவாக இருந்தாலும் முடிவெடுக்க வேண்டும்? என்னை பற்றி நினைக்கவே இல்லையா அவள்? அவனது மனம் கொதித்தது.

“டேய் அங்க அம்மாக்கு எதுவும் வாங்கி தர சொல்வாங்க. நம்மள நம்பி அப்பா ரெஸ்ட் எடுக்க போய்ட்டாங்க. வா” என ஷாம் கூற ஏற்கனவே பாவனாவை பிடிக்காத அவனிடம் வேறு எதுவும் பேசாமல் அவனுடன் சென்றான்.

இரவு தான் இருப்பதாக பிரசன்னா சொல்ல வீடு வந்த விஜய் கோவத்திலேயே உழன்றான். விடியற்காலையில் கண் அசந்து நேரம் சென்று எழுந்தவனுக்கு பாவனா தவறான முடிவு எதுவும் எடுத்து விடப் போகிறாள் என்ற பயம் ஏற்பட்டது.

இப்போதும் அவள் கைபேசி செயல்படாமலே இருக்க ரமணன் எண்ணை தெரிந்தவர் மூலம் பெற்று அவருக்கு அழைத்தான்.

பாவனா பற்றி கேட்டதற்கு, “இவ்ளோ ஆனதுக்கு அப்புறம் அங்க எப்படி வாழ்வா என் பொண்ணு? அவ உறுதியா சொல்லிட்டா உன்னை விட்டு பிரியறதுன்னு. அவளை விட்ரு” என்றார் ரமணன்.

“எங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சு” என விஜய் கோவமாக சொல்ல, “உங்கப்பா ஏத்துக்கிட்டாரா அந்த கல்யாணத்தை? அப்படி ஒண்ணு நடக்கவே இல்லைங்கிற மாதிரி பண்ணிட்டார். நான் நினைச்சாலும் எதுவும் செய்ய முடியும், ஆனா என் பொண்ணு கூடாதுன்னு சொல்லிட்டா” என சத்தம் போட்டார்.

என்ன சொல்கிறார் என கிரகித்தவன், “என் அப்பா என்ன செஞ்சாரோ ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்ட நான் இருக்கேன்தானே உயிரோட?” என விஜய்யும் சத்தம் போட்டான்.

கோவத்தை விட்டு பொறுமையாக “நீ அவங்கள விட்டு வருவியா? இல்ல என் பொண்ணுதான் அங்க நிம்மதியா வாழ முடியுமா? வெளில வேற யாருக்கும் இந்த கல்யாணம் பத்தி எதுவும் தெரியாது. நமக்குள்ளவே முடிச்சிக்கலாம். இதெல்லாம் அவ அம்மாகிட்ட கூட சொல்லப் போறது இல்லை” என்றார் ரமணன்.

“பாவனாகிட்ட… ப்ச் என் பொண்டாட்டிகிட்ட பேசணும் நான். எப்படி கான்ட்டாக்ட் பண்றது அவளை?” கராறாக கேட்டான்.

“ஏன் விடாம இப்படி தொந்தரவு செய்ற நீ? அவ நம்பர் மாத்திட்டா. சென்னைல இல்ல இப்போ. எங்க இருக்கேன்னு சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டா. அவளை நிம்மதியா இருக்க விடு” என்றவர் கைபேசியை வைத்தும் விட்டார்.

விஜய் உடனே தன் அலுவலக சக ஊழியன் ஒருவனுக்கு அழைத்து பாவனா வீட்டு முகவரி சொல்லி சென்று பார்த்து வருமாறு வேண்டி கேட்டுக் கொண்டான். எந்த உதவியும் கேட்காதவன் கேட்கிறான் எனவும் சரி என்றவன் உடனே சென்று பார்த்து வீடு பூட்டப் பட்டிருப்பதாக சொல்ல பாவனா மீது சொல்லொனா ஆத்திரம் கிளர்ந்தது.

சூடாகிப் போன மூளையோடு அவன் நடை போட்டுக் கொண்டிருக்க வைஷு வந்தாள்.

“அம்மாவை பார்க்க போகணும், ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போ ண்ணா” என வைஷு கேட்க, அவளுக்காக பாவனா விஷயத்தை ஒதுக்கி விட்டு மருத்துவமனை புறப்பட்டான்.

அன்று கங்கா அறைக்கு மாற்றப் பட விஜய்க்கு அம்மாவுடனே நேரம் சரியாக இருந்தது. அப்பா மிகவும் சாதாரணமாக நடமாட அவரிடம் இப்போது என்ன கேட்பது என எதுவும் பேசவில்லை விஜய்.

டெல்லியிலிருந்து ஷீபா வந்தாள். அம்மாவுக்காக ஆறுதல் சொன்னவள், “அவளே போய்ட்டான்னா நீயும் அதை அக்செப்ட் பண்ணிக்க. இவ்ளோ நடந்ததுக்கு அப்புறம்…  அம்மாவை மட்டும் பாருடா”என சொல்ல பதிலே சொல்லவில்லை விஜய்.

 ஷீபா சென்னைக்கு செல்ல ஷாமும் அவளோடு சென்னை புறப்பட்டு அவன் வீட்டில் இரு நாட்கள் தங்கி விட்டு பெங்களூரு சென்று விட்டான்.

கங்கா எழுந்து நடமாட ஆரம்பித்த பின் அப்பாவிடம் தனியாக சென்று கேட்டான்.

“இந்த கல்யாணத்தை என்னால ஒத்துக்க முடியாது. பின்னாடி உன் வாழ்க்கைக்கு பிரச்சனை வராம இருக்கத்தான் கல்யாணம் நடந்த மாதிரியே யாருக்கும் தெரியாம பார்த்துகிட்டேன். அந்த பொண்ணே உங்க குடும்பத்துல என்னால வாழ முடியாது, இனிமே உங்க பையன் லைஃப்ல நான் இல்லைனு சொல்லிடுச்சு… டேய் தாலிய கழட்டி கொடுத்திட்டு போய்டுச்சுடா” என்றார்.

“உங்களுக்கு தெரியுமா?”

“என் முன்னாடிதான் கழட்டி கொடுத்திச்சு. நான் ஒரு நிமிஷம் ஷாக் ஆகி நிக்கவும் ஷாம் கைல கொடுத்திடுச்சு. அவன் உன்கிட்ட கொடுத்திட்டான்தானே? போ கோயில் உண்டியல்ல போடு அதை” என்றார்.

“உங்க சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணினது வேணும்னா தப்பா இருக்கலாம். ஆனா கல்யாணம் உண்மை. கழட்டி கொடுத்திட்டு போனவ என்ன நினைச்சு செஞ்சாளோ… என்னோட மனைவியா எப்பவோ மனசுல பதிஞ்சு போய்ட்டா. யார் நினைச்சாலும் ஏன் நானே நினைச்சாலும் அந்த நினைப்ப என்னால மாத்திக்க முடியாது” என்றான்.

“அவசரக் குடுக்கை, ஆர்வக்கோளாறுனு உன்னை பத்தி நினைச்சேன், இல்லயில்ல… நான் வடி கட்டின முட்டாள்னு சொல்ற. உன்னை எப்படி தெளிய வைக்கிறதுன்னு எனக்கு நல்லா தெரியும்” என கடின பாவத்தோடு அரங்கநாதன் சொல்ல தந்தையை முறைத்து விட்டு அவர் அறையிலிருந்து வெளியேறினான் விஜய்.

கங்கா வீடு வர இரண்டு வாரங்கள் ஆகின. அதுவரை விஜய் இங்குதான் இருந்தான். எங்கும் செல்ல முடியாதவாறு அரங்கநாதன் பார்த்துக் கொண்டார். கல்லூரி இன்ஸ்பெக்ஷன் காரணத்தை காட்டி பிரசன்னாவை மருத்துவமனையில் தங்க விடாமல் செய்தவர் அவரும் வெளி வேலையாக இருப்பது போல விஜய்யை அவன் அம்மாவிடம் நிறுத்தி வைத்து விட்டார்.

கங்காவுக்கு பாவனா சென்றது பற்றி எதுவும் தெரியாது. எதுவும் தெரிந்து கொள்ளவே அவருக்கு பயமாக இருந்தது. பிள்ளைகளும் கணவரும் தன்னை பார்த்துக் கொள்ள எல்லாவற்றையும் கணவர் சரி செய்து விட்டார், மகனிடம் விசாரித்து நானே தூண்டி விடக்கூடாது என அமைதியாக இருந்தார்.

ஆனாலும் மகன் மணக் கோலத்தில் நின்ற காட்சி அடிக்கடி நினைவு வந்தது. கலங்கிப் போனவளாக பாவானா நின்ற தோற்றம் கண்களை விட்டு மறைய மறுத்தது. இரத்த அழுத்தம் உயர்வதாக கூறி மருந்துகள் தர ஆரம்பித்திருந்தனர் அவருக்கு.

அம்மாவின் நலன் வேண்டி விஜய்யும் எதுவும் அம்மாவிடம் சொல்லிக் கொள்ளவில்லை. எப்போதும் செவிலியர் ஒருவர் உடன் இருக்க அவருக்கு நேரம் தவறாமல் உணவருந்த வைப்பது, வெளியில் சிறிது நேரம் நடை பயில வைப்பது என அக்கறையாக கவனித்துக் கொண்டான்.

Advertisement