Advertisement

அத்தியாயம் -12(2)

விஷால் ஏதேதோ பேசி அவன் பெற்றோரை அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டான். காலை உணவுக்காக பாவனாவை அழைத்துக் கொண்டு உணவு மேசைக்கு ஸ்ரீ வர ஷாம் வந்தான்.

“விஜய் வீட்டுக்கு போய்ட்டானா?” என விசாரித்தாள் ஸ்ரீ.

“அவனை மல்லுகட்டி வீட்ல விட்டுத்தான் வர்றேன். கேசவன் அங்கிள் ஏதாவது ஸ்லீப்பிங் டேப்லெட் கொடுத்து அவனை தூங்க வைக்கிறேன்னு சொல்லியிருக்கார். நைட் முழுக்க தூங்காம பேய் பிடிச்சவன் மாதிரி உட்கார்ந்திருந்தான்” என்றான் ஷாம்.

அழுகையை விழுங்கிய பாவனா, “ஆன்ட்டிக்கு எப்படி இருக்கு ண்ணா?” எனக் கேட்டாள்.

ஷாம் பதில் சொல்லாமல் விஷாலை பார்த்து, “எங்க போய் ரெஃப்ரெஷ் ஆகட்டும் மாமா நான்?” எனக் கேட்க, ஸ்ரீ சங்கடமாக பாவனாவை பார்க்க சத்தமில்லாமல் கண்ணீர் விட்டாள் பாவனா.

ஷாமை ஒரு அறைக்கு அனுப்பி வைத்த விஷால், “அவன் கோவமா இருக்கான் போல, பெருசு பண்ணாதம்மா. விஜய் அம்மா சரியாகிடுவாங்க. கண் முழிச்சிட்டாங்க. கவலை படாத” என ஆறுதலாக சொன்னான்.

“நான் அவங்கள பார்க்கலாமா?” என பாவனா கேட்க, “வேண்டாம்” என விஷால், ஸ்ரீ இருவரும் ஒரே சமயத்தில் கூறினார்கள்.

ஷாம் குளித்து தயாராகி வந்தான். ஸ்ரீ வற்புறுத்தியதால் அப்போதுதான் உணவருந்த ஆரம்பித்திருந்த பாவனா சாப்பிட முடியாமல் கையை தட்டிலேயே வைத்திருக்க, “சாப்பிட்டு கிளம்பு, ஹாஸ்பிடல் போலாம். விஜய் அம்மாவை பார்க்கணும்ல நீ?” என்றான் ஷாம்.

மூவரும் திகைத்து பார்க்க, “ஏன் ஷாக் ஆகுறீங்க? நான் அழைச்சிட்டு போயிட்டு வர்றேன்” என்ற ஷாம் சாப்பிட ஆரம்பிக்க, “சாப்பிடு பாவனா” என ஸ்ரீ சொல்ல அவளும் சாப்பிட்டாள்.

திருமணமாகி இரண்டு வருடங்கள் கடந்தும் குழந்தை இல்லாத காரணத்தால் ஒரு மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்கிறார்கள் விஷால் தம்பதி. இன்று மருத்துவரை காண செல்ல வேண்டும். பின்னொரு நாள் பார்க்கலாம் என ஸ்ரீ சொல்ல விஷால் ஒப்புக் கொல்லவில்லை.

“இதுக்கு ஏத்த மாதிரி நான் என் ஷெட்யூல் மாத்தியிருக்கேன். அரை நாள்தான் போயிட்டு வந்திடலாம்” என உறுதியாக சொல்லி விட்டான்.

 பாவனாவோடு ஷாம் புறப்பட ஸ்ரீயோடு புறப்பட்டு விட்டான் விஷால்.

கேசவன் வற்புறுத்திக் கொடுத்த பாலை அதில் தூக்க மாத்திரை கலந்துருப்பது தெரியாமல் பருகியதின் காரணமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் விஜய்.

குளித்து ஓய்வெடுக்க வீடு வந்திருந்தான் பிரசன்னா. இவன் சென்ற பிறகுதான் அரங்கநாதன் வீடு வருவார்.

விஜய்க்கு இரவுதான் விழிப்பு வந்தது. உறங்கிய தோற்றத்தோடு அவன் வெளியில் வர, அண்ணனை அணைத்துக் கொண்டு அழுதாள் வைஷ்ணவி.

விஜய்க்கு பதற்றமாக இருக்க, “ஏன் அழற? பிரசன்னா எங்க?” எனக் கேட்டான்.

வைஷ்ணவி பதில் சொல்லாமல் அழுது கொண்டே இருக்க, “அத்தையோட ஹாஸ்பிடல்ல இருக்காங்க மாமா” என பதில் சொன்னாள் பிருந்தா.

“அம்மா அம்மா…” என்ன கேட்பது என விஜய் தயங்க, “ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசுறாங்களாம். தூங்க மருந்து கொடுத்திறதால அதிகமா தூங்கிட்டுதான் இருக்காங்களாம்” என பிருந்தாவே விவரம் சொல்ல நிம்மதி அடைந்தான் விஜய்.

“நான் மதியம் போய் அம்மாவை பார்த்தேன் ண்ணா. நம்ம அம்மா மாதிரியே இல்ல. எப்ப வருவாங்க வீட்டுக்கு?” தேம்பிக் கொண்டே கேட்டாள் வைஷ்ணவி.

“வருவாங்க. நீ சாப்பிட்டியா இல்லையா?” எனக் கேட்க, “இல்ல மாமா. நான் எவ்வளவோ சொல்லி பார்த்திட்டேன்” என்றாள் பிருந்தா.

“நீ சாப்பாடு எடுத்து வை” என்ற விஜய் தங்கையை தன்னிடமிருந்து விலக்கி, “சாப்பிட்டு அம்மாவை பார்க்க போலாம். நான் ரெஃரெஷ் ஆகி வர்றேன்” என சொல்லி அறைக்கு நடந்தான்.

குளித்து வந்தவன் தன் கைபேசிக்கு சார்ஜ் போட்டு விட்டு உணவருந்தி விட்டு தங்கையுடன் மருத்துவமனை புறப்பட்டான். விஜய் அம்மாவை பார்க்க செல்ல இப்போது ஒன்றும் சொல்லாமல் அவனை அனுமதித்தார் அரங்கநாதன்.

அடுத்து வைஷ்ணவியும் பார்த்து வர பிரசன்னாவிடம், “வைஷுவ அழைச்சிட்டு வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு, நான் இருக்கேன் இங்க” என்றான்.

கல்லூரியில் வெகு விரைவில் இன்ஸ்பெக்ஷன் நடக்க இருக்க அங்கு சென்று வந்திருந்த பிரசன்னாவுக்கும் ஓய்வு தேவைப்பட்டது.

“சரி, அப்பா இங்கேர்ந்து வர மாட்டாங்க. அட்லீஸ்ட் ரூம்லேயாவது ரெஸ்ட் எடுக்க வை” என சொல்லி புறப்பட்டு விட்டான் பிரசன்னா.

தந்தையும் மகனும் ஆளுக்கொரு பக்கத்தில் அமர்ந்திருந்தனர். தன்னை தயார் செய்து கொண்டு அப்பா அருகில் போய் அமர்ந்தவன், “நான் இருக்கேன் பா, ரூம் போங்க. ப்ளீஸ்” என தன்மையாக சொன்னான்.

ஒரு முறை மகனை ஆழ்ந்து பார்த்தவர், “எதுவும்னா உடனே கூப்பிடு என்னை” என சொல்லி எழுந்து சென்று விட்டார்.

அப்பா எதுவும் கேட்பார் என நினைத்திருந்தவனுக்கு அவரது இந்த போக்கு ஆசுவாசத்திற்கு பதிலாக பீதியை கிளப்பியது.

பாவனாவுக்கு பேசலாம் என நினைக்க அவன் கைபேசியை எடுத்து வரவில்லை. நேரம் பனிரெண்டுக்கு மேல் ஆகியிருக்க மருத்துவமனை அலைபேசியிலிருந்து அழைக்கலாம் என்ற எண்ணத்தை தள்ளி வைத்தான்.

கொஞ்ச நாட்களுக்கு சென்னையில் அவள் வீட்டிலேயே இருக்க வைக்கலாமா அல்லது தன் அபார்ட்மென்டில் தங்க சொல்லலாமா? அவளிடம் பேச வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தான்.

இரண்டு மணி நேரம் சென்று அம்மா விழித்திருப்பதாக செவிலியர் சொல்ல சென்று பார்த்தான். மகனையே பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார். அருகில் வந்து நின்றவனுக்கு கண்கள் கலங்கி விட ‘அழாதே’ எனும் விதமாக மிக லேசாக தலையசைத்தவர் லேசாக புன்னகைத்து விட்டு மீண்டும் மயக்கத்திற்கு சென்று விட்டார்.

விஜய் வெளியில் வந்தவன் ஓய்வறை உபயோகிக்க அப்பா தங்கியிருந்த அறைக்கு வந்தான். கதவு மூடியிருக்குமோ என நினைத்து லேசாக கதவில் கை வைக்க திறந்து கொண்டது கதவு. உறங்காமல் அமர்ந்தே இருந்தார் அரங்கநாதன்.

“தூங்கலையாப்பா?” என கேட்டான் விஜய்.

“ம்ம்… உன் அம்மா திரும்பவும் என்கிட்ட வந்திடுவான்னு தெரியும் எனக்கு. இனிமே எங்களால நிம்மதியா தூங்க முடியுமான்னுதான் தெரியலை” என்றார்.

தலை குனிந்தவன், “சாரி ப்பா” என்றான்.

“கொஞ்ச நேரம் தூங்கு, நான் இருக்கேன் அங்க” என்றவர் எழ, “அப்பா ப்ளீஸ் நான் பகல் முழுக்க தூங்கியிருக்கேன். நான் இருக்கேன். ரெஸ்ட் எடுங்க ப்பா” என மன்றாடுதலோடு விஜய் கேட்க எழுந்தவர் மீண்டும் அமர்ந்து விட்டார்.

“பெட்ல படுங்கப்பா. அம்மா… அம்மா கண் முழிச்சாங்க இப்போ. நான் போய் பார்த்தேன். ஸ்மைல் பண்ணினாங்க” என விஜய் சொல்லிக் கொண்டிருக்க அவர் பார்த்த பார்வையில் அதற்கு மேல் பேசாமல் ஓய்வறை சென்று விட்டான்.

அவன் வெளியில் வரும் போது அரங்கநாதன் உறங்கிப் போயிருந்தார். மின் விளக்கை அணைத்து விடி விளக்கு போட்டு விட்டவன் அறையிலிருந்து வெளியேறி மீண்டும் ஐ சி யூ முன் அமர்ந்து விட்டான்.

காலையில் பிரசன்னா மருத்துவமனை வந்ததும் வீடு சென்ற விஜய் முதல் வேளையாக பாவனாவுக்கு அழைக்க அணைத்து வைக்கப் பட்டிருப்பதாக செய்து ஒலித்தது. ஸ்ரீஜா, ஷாம் எல்லாம் உறங்கிக் கொண்டிருக்க கூடும் என நினைத்து படுத்தவன் அவனும் உறங்கிப் போனான்.

மதியத்திற்கு மேல் எழுந்தவன் குளித்து உணவருந்தி பாவனா கைபேசிக்கு அழைக்க இன்னும் அணைத்து வைக்கப் பட்டிருப்பதாகவே செய்தி வந்தது. ஸ்ரீஜாவுக்கு அழைக்க அவள் எடுக்கவில்லை.

ஷாமிற்கு அழைக்க ஏற்றவன், “என்னடா இப்படி தூங்குற? நான் வந்தேன் உன்னை பார்க்க. அப்பறம் இங்க ஹாஸ்பிடல் வந்திட்டேன். பிரசன்னா காலேஜ் போகணுமாம். நான் அப்பா கூட இருக்கேன்” என்றான்.

“தெரியலை டா. என்னவோ கிறக்கமாவே இருக்கு. இந்த டைம்ல கூட எப்படித்தான் எனக்கு தூக்கம் வந்து தொலையுதோ!” என புலம்பிய விஜய், “பாவனா போன் சுவிட்ச் ஆஃப். ஸ்ரீஜாவும் எடுக்கல. எப்படி இருக்கா அவ?” எனக் கேட்டான்.

சில நொடிகள் மௌனம் காத்த ஷாம், “அவ நேத்தே சென்னை போய்ட்டா. உன்கிட்ட சொல்ல சொன்னா. அவளும் ரெண்டு நாளா சரியா தூங்கலை இல்ல. சென்னை ரீச் ஆகிட்டான்னு ஸ்ரீக்கு நைட்டே ஃபோன் பண்ணியிருந்தா. இப்போ தூங்கிட்டு இருப்பாளா இருக்கும்” என்றான்.

“தனியாவா போனா?”

“ஏன் அவ என்ன குழந்தையா? அவளை விட சின்ன புள்ளைங்க கூட தனியா டிராவல் பண்றாங்க” என இடக்காக சொன்னான் ஷாம்.

“இந்த மேரேஜ் என் டெஸிஸன். நீ எது சொல்றதா இருந்தாலும் என்னைத்தான் சொல்லணும்” கடிந்து கொண்டான் விஜய்.

“நான் எதுவுமே சொல்லலையே” என ஷாம் சொல்ல எரிச்சலடைந்த விஜய் அதற்கு மேல் இது பற்றி தர்க்கம் செய்ய விரும்பாமல், “நான் வர்றேன் அங்க. உனக்கு பெங்களூரு போகணும்னா கிளம்பு டா” என்றான்.

“நான் லீவ் எடுத்திருக்கேன். எப்போ போறதுன்னு எனக்கு தெரியும்” என்றான் ஷாம்.

“தேங்க்ஸ் டா” என உள்ளார்ந்து கூறினான் விஜய்.

“நீ என்கிட்டேர்ந்து வாங்க வேண்டியது நிறைய இருக்கு. அவசர பட்டு நன்றி எல்லாம் சொல்லாத” என்ற ஷாம் கைபேசியை வைத்து விட்டான்.

விஜய் மருத்துவமனை சென்றான். கங்கா பேச ஆரம்பித்திருந்தார். நாளை ஒரு நாள் பார்த்து விட்டு அறைக்கு மாற்றம் செய்யலாம் என்றனர் மருத்துவர்கள்.

பிரசன்னா கல்லூரியில் இருக்க விஜய் மருத்துவமனையில் இருந்து கொண்டான். பிரணவ் ஷீபா எல்லாம் கைபேசியில் அழைத்து பேசினார்கள். திடீர் திருமணத்தை குறித்து திட்டினார்கள். அமைதியாக வாங்கிக் கொண்டான்.

ஸ்ரீஜாவுக்கு அழைத்து பேசிய விஜய் அவளையும் விஷாலையும் உள்ளே இழுத்து விட்டதற்கு மன்னிப்பு கேட்டான்.

“அம்மாவை பாருடா!” என்றாள் ஸ்ரீ.

மாலை வரை பாவனா கைபேசியை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஷாமிடம் புலம்ப, “உன்கிட்ட கொடுக்க சொல்லி ஒரு பொருள் கொடுத்திட்டு போயிருக்கா, கார்ல இருக்கு” என்றான் ஷாம்.

விஜய் நெற்றி சுருக்கி பார்க்க, ஷாம் கார் பார்க்கிங் செல்ல நடக்க அவனோடு சேர்ந்து நடந்தான் விஜய்.

காரிலிருந்து எதையோ எடுத்தவன் விஜய் முன் நீட்ட அதை கையில் வாங்கியவன் அதிர்ந்து போயிருந்தான்.

விஜய் பாவனாவுக்கு அணிவித்திருந்த திருமாங்கல்யம் கோர்த்த தாலி சரடு இருந்தது விஜய்யின் கையில்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement