அத்தியாயம் -13
ஆட்டோவில் சென்று கொண்டிருந்த ஸ்ரீக்கு முகம் இறுகியே இருந்தது. ‘அது யாராக இருக்கும்… யாராக இருக்கும்’ என்ற கேள்வியையே திரும்ப திரும்ப அவளுள் எழுந்து கொண்டிருந்தது.
வீட்டிற்கு சென்றவள் யாருடனும் எதுவும் பேசாமல் நேராக தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.
இரவு உணவு உண்ண அழைக்க வந்தவர்களிடமும் தனக்கு பசி இல்லை என்று அனுப்பிவிட, அஸ்வின் அவளிடம் பேச வந்தான்.
“ப்ளீஸ் அஷு எனக்கு கொஞ்சம் தனியா இருக்கணும்” என்று சோர்ந்து போன குரலில் சொன்னவளை அஸ்வின் அழுத்தமாக பார்க்க, அவன் பார்வையை சந்திக்க முடியாமல் தடுமாறியவள் வேறு பக்கம் பார்வையை திருப்பி கொண்டு நிற்க,
அவள் முகத்தில் இருக்கும் மாற்றத்தை கண்டு பெரு மூச்சுவிட்டவன் “கோபத்தால் எதையும் சாதிக்க முடியாது நித்தி . என்ன விஷயமா இருந்தாலும் கொஞ்சம் பொறுமையா யோசிச்சு முடிவெடு. உன்னோட முன் கோபத்தால் ஆக போறது எதுவும் இல்ல “ என்றவன் சென்றுவிட,
நண்பன் சென்றவுடன் அறை கதவை மூடியவள் அதன் மேலேயே சாய்ந்து நிற்க, அதீத கோபத்தின் காரணமாக அவள் கண்களில் கண்ணீர் வர துவங்கியது.
வழிந்த கண்ணீரை துடைத்தவள் ‘நான் ஏன் அழணும் அழ மாட்டேன். நான் என்ன தப்பு செஞ்சேன் அழ. அன்னைக்கு என்கிட்ட எப்படி எல்லாம் பேசுனாரு. இன்னைக்கு வரட்டும் பேசிக்கறேன்’ என்று சொல்லி கொண்டவள் மனம் உலை களமாக கொதிக்க துவங்கியது.
இரவு தாமதமாக வந்த கணவன் எதிரில் போய் ஆங்காரமாக நின்றவள் “யார் அவ? அவகூட ஹோட்டல்ல உங்களுக்கு என்ன வேலை? என்றாள்.
ஆம், ஸ்ரீ ஹோட்டலில் பார்த்தது தீரன் ஒரு பெண்ணிடம் பேசிக்கோண்டு இருந்ததைதான். அவள் அழுது கொண்டே ஏதோ பேச. இவன் அவள் கண்ணீரை துடைத்துவிட்டு பேசிகொண்டிருந்தான். அதை பார்த்துதான் அவளுக்கு அவ்வளவு கோபம்.
இதை அவள் கொஞ்சம் பொறுமையாக கேட்டிருந்தால் அவன் பதில் சொல்லி இருப்பானோ என்னவோ, தன்னிடம் கோபமாக பேசும் கணவன் மற்றொரு பெண்ணிடம் பேசுவதை கண்டவளுக்கு மனதில் எதிலோ தோற்ற உணர்வு வர அந்த கடுப்பில் கேட்டுவிட்டாள்.
முதலில் அவள் கோபம் எதற்கு? என்ன சொல்கிறாள்? என புரியாமல் தனக்குள் யோசனையில் இருந்தவன், “என்ன உலர்ற”என்று கேட்க,
அவளோ “ஆமாமா நான் பேசறது உங்களுக்கு உளறலாதான் இருக்கும். அங்க ஹோட்டல்ல நல்லா சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டு இருந்தீங்களே, அவ பேசுனா இனிக்குமா” என்று கேட்க,
தீரனுக்கு அப்பொழுதுதான் புரிந்தது. உடனே அவளை கூர்மையாக பார்த்தவன் “என்ன என்னை வேவு பாக்குறியா?”என்று அழுத்தமாக கேட்க,
அவளோ கோபமாக அவனை முறைத்து “உங்களை வேவு பாக்குறது ஒன்னும் என் வேலை இல்ல. பிரண்ட்ஸோட லன்ச் சாப்பிட வந்தேன். அங்க பார்த்தேன். சொல்லுங்க யார் அவ, எதுக்கு அவ அழுதா, என்னமோ பொண்டாட்டி மாதிரி அவ கண்ண எல்லாம் தொடச்சு விடறீங்க. உங்க பொண்டாட்டி நான் இருக்கும்போது இன்னொரு பொண்ணை கூட்டிட்டு சுத்துறீங்களே உங்களுக்கு வெட்கமா இல்ல” என்று கேட்க,
தீரனுக்கு உடல் கோபத்தில் இறுகி போனது. இருந்தாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன் “நித்யஸ்ரீ தேவையில்லாம பேசுற வேலை வச்சுக்காத. நான் யாருக்கும் விளக்கம் சொல்லணும்னு அவசியம் இல்லை. நகரு”என்று சொல்ல,
அவளோ கோபமாக “எனக்கு நீங்க விளக்கம் சொல்லிதான் ஆகணும். பதில் சொல்லிட்டு போங்க. நான் சாதாரணமா பேச வந்தா கூட, உங்களால என்கூட பேச முடியல. அவகிட்ட பல்ல காட்டி காட்டி பேசிகிட்டு இருந்தீங்க. யார் அவ எனக்கு தெரிஞ்சே ஆகணும். சொல்லுங்க. இல்லைனா இந்த இடத்தைவிட்டு உங்களால நகற முடியாது” என்று பிடிவாதமாக நிற்க,
தன் உயரத்திற்கு நிமிர்ந்து நின்ற தீரன் அவளை அழுத்தமாக பார்த்து “சோ உனக்கு அது யாருன்னு கண்டிப்பா தெரியணும் அப்படித்தானே”என்க,
அவளும் அதே அழுத்ததுடன் “ஆமாம்” என்றிருந்தாள்.
“ரைட் நீ இவ்ளோ ஆசைப்படுறதுனால சொல்றேன். அவ என்னோட லவ்வர்” என்று சொல்ல ஸ்ரீ விக்கித்து போய் நின்றாள்.
“நாங்க ரெண்டு வருஷமா லவ் பண்ணிக்கிட்டு இருக்கோம். என்னை பார்க்கறதுக்காக ஆபிஸ் வந்திருந்தா, சரி வா வெளிய போய் பேசலாம்னு நான்தான் அந்த ஹோட்டலை செலக்ட் பண்ணுனேன். போதுமா உனக்கான பதில் கிடைச்சுருச்சா. இப்போ நகரு” என்று சாதாரணம் போல் சொல்ல,
அவளுக்கு கோபம் புசு புசு என்று ஏற துவங்கியது. திருமணம் முடித்தும் அவன் மற்றொரு பெண்ணை இல்லை…இல்லை காதலியை தனிமையில் சந்தித்து பேசிக்கொண்டுதான் இருக்கிறான் என்ற எண்ணத்தில் இருந்த ஸ்ரீ கோபமாக பொரிய துவங்கினாள்.
“என்ன சொல்றீங்க. அவ காதலின்னா அப்போ நான் யாரு?.இன்னொரு பொண்ண லவ் பண்ற நீ என் கழுத்துல எதுக்குடா தாலி கட்டுன. எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி பண்ணி இருப்ப. என்னோட வாழ்க்கையையே ஒன்னும் இல்லாம ஆக்கிட்டியே. என் வாழ்க்கையை அழிக்கறதுக்கான உரிமையை உனக்கு யார் கொடுத்தா? நீ எதுக்குடா என்னோட வாழ்க்கையில நுழைஞ்ச?” என்று மரியாதை இல்லாமல் பேச,
தீரனுக்கும் கோபம் வர துவங்கியது. இருந்தாலும் கஷ்டப்பட்டு இல்லாத பொறுமையை இழுத்து பிடித்தவன் “நித்யா நான் சொல்றதை கேளு தேவையில்லாம பேசாத”என்க,
ஸ்ரீ அதைக் கேட்கும் நிலையை எல்லாம் கடந்து இருந்தாள். அவன் சட்டையை பிடித்து உலுக்கியவள் “அந்த பொண்ணை லவ் பண்றனா. எதுக்குடா என் கழுத்துல தாலி கட்டுன. சொல்லுடா…சொல்லு” என்று தன் முதல் காதல் தோற்ற விரக்தியிலும், தன் திருமண வாழ்க்கை அதற்குள் முடிவுக்கு வந்துவிட்டதா என்ற கோபத்திலும் கத்த,
கடுப்பான தீரன் அவளை ஓங்கி அறைந்து, தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தி “யார் மேல கை வைக்குற. என் இடுப்பு உயரம் இல்ல. இவ்ளோ பேச்சு பேசுறியா? என்ன கேட்ட? ஏன் என் கழுத்துல தாலி காட்டினேனா. நல்லா யோசிச்சு பாரு. நான் ஒன்னும் ஆசைப்பட்டு உன் கழுத்துல தாலி கட்டல.
உனக்கு பேசி வச்ச மாப்பிள்ளை ஓடிப் போயிட்டான். இனி என் பொண்ணோட வாழ்க்கைனு கலங்கி நின்ன உன்னோட அப்பாவை சமாதானப்படுத்த என் அப்பா என்னை கார்னர் பண்ணி உன் கழுத்துல தாலி கட்ட வச்சுட்டாரு. மத்தபடி உன் மேல ஆசைப்பட்டு ஒன்னும் அந்த தாலிய நான் கட்டல. அத முதல்ல தெரிஞ்சுக்கோ.
என்னமோ கோவிலுக்கு வந்தவ கழுத்துல, நான் ஆசைப்பட்டு தாலி கட்டுன மாதிரி ஏன் தாலி கட்டுன? ஏன் தாலி கட்டினனு கேக்குற” என்று கேட்க,
ஸ்ரீ மனதளவில் மிகவும் உடைந்து போனாள். ‘ஆமா அவர் மேல என்ன தப்பு. எல்லா தப்பும் நம்ம மேல தான இருக்கு. அன்னைக்கே கல்யாணத்தை நிறுத்தி இருந்தா. இந்த நிலைமை வந்திருக்காது. நம்ம வாழ்க்கையும் இப்படி ஆகியிருக்காது என்று சோர்ந்து போனவளை மேலும் நோகடிக்கும் பொருட்டு,
“அப்புறம் உண்மையை மறச்சு, நான் ஒன்னும் உன் கூட சந்தோஷமா வாழலையே. என் காதலுக்காகதான் உன்னிடம் இருந்து விலகி இருக்கேன். ஒரு ஒன் இயர் ஒன்னா இருப்போம். அதுக்கப்புறம் நமக்குள்ள செட்டாகலன்னுசொல்லி பிரிஞ்சிடலாம். அதுக்கப்புறம் நீ உன் வாழ்க்கையை பார். நான் என் வாழ்க்கை பார்க்கிறேன். என்ன ஓகேவா” என்று பிஸ்னஸ் பேசுவது போல் பேசுபவனிடம் என்ன பதில் சொல்வது என்று ஸ்ரீக்கு தெரியவில்லை.
சற்று நேரம் யோசித்தவள் பின் அவன் சொன்னதற்கு தன் சம்மதத்தை தெரிவித்துவிட்டு கீழே சென்று படுக்க போக, அவனோ “பரவால்ல எப்போவும் போல, பெட்லயே நீ படுத்துக்கோ” என்க,
அவளோ “இல்ல…வேண்டாம். கண்டவங்களோட படுக்கைய உபயோகிப்பது எனக்கு பிடிக்காது”என்று சொல்ல,
அவளை உறுத்து விழித்தவன் “இவ்வளவு நாள் இந்த ஞானோதயம் எங்க போச்சு” என்று நக்கலாக கேட்க,
“இடையில வந்த ஞானோதயம் இல்ல இது. ஆரம்பத்தில் உறவுனு நெனச்சு பண்ணுன்னேன். இப்போ அது இல்லைனு முடிவாகிடுச்சு. அதான் விலகிட்டேன்” என்றவள் அமைதியாக சென்று படுத்துவிட, தோள்களை உளுக்கியவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
அதன் பின்னான நாட்களில் இருவருக்கும் இடையே அமைதி நிலவினாலும் ஸ்ரீ மனதில் புயல் அடிக்க துவங்கியது.
அவள் காதலிக்கும் கணவன் மனதில் தான் இல்லை என்ற எண்ணமே அவளுள் அழைக்களிப்பை ஏற்படுத்த, கவனமில்லாமல் இருந்தவளுக்கு ஹாஸ்பிடல் செல்லவே வெறுப்பாக இருந்தது.
ஏனோ பைத்தியம் பிடிப்பது போன்ற எண்ணம் தோன்ற தலையை பிடித்து கொண்டு அமர்ந்தவள் யோசித்து ஒரு முடிவை எடுத்தாள். அதுதான் அவனைவிட்டு பிரிந்து செல்வது.
யாரிடமும் சொல்லாமல் அப்பா வீட்டிற்கு கிளம்பி சென்றவளை காணாமல் அனைவரும் தேட, தீரனுமே கொஞ்சம் பயந்து தான் போனான். ஏனென்றால் அவனும் அவளை ஓரக்கண்ணால் அவ்வபோது கவனித்துக் கொண்டுதான் இருந்தான். தன் நினைவில் இல்லாமல் எப்பொழுதும் ஏதோ யோசனை இருப்பவளை அதை புருவம் சுருக்கியவன் பின் கண்டு கொள்ளாமல் சென்றுவிடுவான்.
ஒரு வேலை ரோட்டில் வரும்போது ஏதோ யோசனையில் வந்தவளை எதிரில் வந்த வண்டி…..இவளுக்கு எதாவது ஆனா அப்பா நம்மளதானே கேட்பாரு. எங்க போய் தொலைஞ்சா என்ற பயமே அவனது.
தோழியை காணாமல் பயந்து போன அஸ்வின் எதுக்கும் அவள் தந்தையிடம் கேட்போம் என்று வீட்டிற்கு சென்று பார்க்க அங்கு ஹாலில் தலையைப் பிடித்து கொண்டு அமர்ந்திருந்தாள் ஸ்ரீ.
அஸ்வின் அவளை கண்டு நிம்மதி மூச்சு விட்டவன் வேகமாக அருகில் சென்று “என்ன ஆச்சு நித்தி? ஏன் யார்கிட்டயும் சொல்லாம இங்க வந்த?” என்று கேட்க,
அவளோ அமைதியான குரலில் “நான் இனி அங்கு வரமாட்டேன். என் அப்பா கூட தான் இருப்பேன்” என்று சொல்ல,
அஸ்வினோ “சரி எதா இருந்தாலும் வீட்ல போய் பேசிக்கலாம் இப்போ நீ வா”
“தமிழ்லதானே சொல்றேன் உனக்கு புரியல. நான் இனி அங்க வரல. அங்க எனக்கு மூச்சு முட்டுது. பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு. அதுவும் உன் நொண்ணன பார்க்கும்போது எனக்கு வர்ற கோபத்துல கத்தி எடுத்து குத்திடுவனோனு பயமா இருக்கு”
“என்ன உளர்ற….”
“ஆமாடா. அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கும் நான் பேசறது உளரலாதான் இருக்கும்”.
“ப்ச்…. நித்தி சொன்னா கேளு…”
“இல்ல அஷு ப்ளீஸ் என்ன புரிஞ்சுக்கோ நான் அங்க வரல” என்றவள் எழுந்து சென்றுவிட,
நந்தன் கவலையாக அஸ்வினை பார்த்தார்.
“கவலைப்படாதீங்க அங்கிள். அவ மனசுல ஏதோ இருக்கு. சரியான உடனே அவளே வந்துடுவா” என்றவன் எழுந்து சென்றுவிட்டான்.
தீரன் வீட்டில் இருந்து பேச வந்தவர்களிடமும் அவள் சொன்ன ஒரே பதில் “நான் இனி அங்க வரமாட்டேன். எனக்கு அங்க இருக்க பிடிக்க. என் அப்பா கூட தான் இருப்பேன்” என்பதே.
தீரன் அவளிடம் பேச வர, அவளோ “வெளி ஆண்களோட பேசற பழக்கம் எனக்கு இல்லை” என்க,
கடுப்பானவன் “அப்போ அஸ்வின் யாரு?”
“அவன் என் பிரண்டு. நீங்க எனக்கு யாரும் இல்ல. உங்களோட பேச எனக்கு விருப்பமும் இல்ல”.
“நான் யாருனு செயல் மூலமா உனக்கு காட்டவா?” என்றவாறு அவள் அருகில் நெருங்கி செல்ல,
அவனை பிடித்து தள்ளியவள் “வெளிய போங்க” என்று தன் அறை கதவை காட்ட, அவனோ இறுகிய முகத்துடன் அங்கிருந்து வெளியேறினான்.
பெரியவர்கள் எவ்வளவோ பேசி பார்த்தும் அவள் சொன்னதையே சொல்ல, வேறுவழி இல்லாமல் ‘கொஞ்ச நாள் போகட்டும் அதுக்கப்புறம் பாத்துக்கலாம்’ என்ற சீனிவாசன் நந்தனிடம் பார்த்து கொள்ள சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
தந்தை வீட்டில் இருந்து ஹாஸ்பிடல் செல்ல துவங்கிய ஸ்ரீ அங்கேயே தங்கிவிட்டாள்.
நந்தன் மகள் வாழ்க்கை எண்ணி வருந்தியதில்தான் ஹார்ட் அட்டாக் வந்தது. அன்று ஸ்ரீயிடம் ஹாஸ்பிடலில் இருந்தவர் மருமகனை வர சொல்லும்மா. எனக்கு எதுவும் ஆயிடுமோனு பயமா இருக்கு. அவர்கிட்ட உன்னை ஒப்படைச்சுட்டேன்னா நான் நிம்மதியா இருப்பேன்” என்று சொல்ல,
இன்னொரு பெண்ணை மனதில் வைத்து கொண்டு இருப்பவனிடம். பிரிந்து விடலாம் என்று சொல்பவனிடம் எப்படி தான் சென்று நிற்பது என்ற எண்ணத்தில்தான் அன்று மீனாவை அணைத்துக் கொண்டு அழுதாள். இவை அனைத்தையும் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவள் ‘காதல் எல்லோருக்கும் வருவதுதான். ஆனா அது கை கூடுவதும், பிரிஞ்சு போவதும் நம்ம கைல இல்ல. அந்த கடவுள் கைலதான் இருக்கு.
எனக்கு தெரிஞ்ச வரை நீங்க உங்க காதலை வீட்ல சொல்லியிருந்தா எந்த எதிர்ப்பும் இருந்திருக்காது. எல்லருடைய ஆசீர்வாதத்தோட உங்க கல்யாணம் நடந்திருக்கும். ஆனா என்னோட உங்க வாழ்க்கையை இணைச்சது ஏன்னுதான் எனக்கு புரியல.
எதுக்கு அந்த மாப்பிள்ளை முன்னாடியே சொல்லாம, கல்யாணத்தப்ப எழுந்து போகணும். ஏன்? மாமா உங்களை எனக்கு கல்யாணம் பண்ண நினைக்கணும்.
எப்போவும் வேலை வேலைனு இருக்க நீங்க. எதுக்கு அன்னைக்கு எங்க ஊர்ல இருக்கணும் எல்லாம் யோசிக்கதான் இவ்வளவு நாள் எடுத்துக்கிட்டேன். இது எல்லாம் நடந்தது மேஜிக்னா.
அந்த மேஜிக் நம்ம ரெண்டு பேருதான் சேரணும்னு நினைச்சா கண்டிப்பா சேருவோம். ஆனா உங்க மேல கழுத்தளவு கோபம் இருக்கு. அதை கட்டுப்படுத்தமாட்டேன். பாருங்க இனிதான் இந்த நித்யா யாருனு உங்களுக்கு தெரியும்’ என்று தனக்குள் கருவி கொண்டவளுக்கு மனம் தெளிவாக இருந்தது. தீரன் என்னவன். எனக்கானவன் என்று.
ஸ்ரீயின் நினைவு நிஜமாகுமா? இல்லை அவனவனாலேயே அழிக்கப்படுமா காத்திருந்து பார்ப்போம்.