Advertisement

அத்தியாயம் – 9

ஜி.ஹெச். காலை நேர சூரிய வெளிச்சத்தில் பளபளத்தது.

மார்ச்சுவரியின் உள்ளே பெரிய மேஜையின் மேல் மல்லாந்த நிலையில் கிடத்தப்பட்டிருந்தது அந்த ஆணின் உடல்.

டாக்டர் கணேசனும், டாக்டர் ரவீந்தரும் கிளவுஸ் அணிந்த கைகளால் அந்த சடலத்தின் வெற்றுடம்பை முன்பக்கமாய் பார்த்துவிட்டு பின்பக்கமாய் திருப்பிப் போட்டார்கள்.

கமிஷனர் ஜெயராம், அஜய், கிருஷ்ணா, அடையார் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தயாளன் நால்வரும் அவர்கள் சொல்வதைக் கேட்பதற்காய் சுற்றி நின்று கொண்டிருந்தனர்.

“உடம்புல எந்தக் காயமும் இல்லை… அப்புறம் எப்படி மரணம்…?” என்றார் கமிஷனர் ஜெயராம்.

“எக்ஸ்டர்னலா எதுவும் தெரியலை, இன்டர்னலா பார்த்துட வேண்டியதுதான்…” சொல்லும்போதே டாக்டர் கணேசனின் பார்வை உன்னிப்பானது.

“இங்க கொஞ்சம் பாருங்க…” என்றார்.

“என்ன டாக்டர்…?” என்றார் ரவீந்தர்.

“பாடியோட முதுகுத்தண்டைக் கொஞ்சம் பாருங்க…” பார்த்த ரவீந்தரும் மற்றவர்களும் முகம் மாறினர்.

“தண்டுவடத்தில் ஏதோ எழுதிருக்கு…” கிருஷ்ணா சொல்ல உன்னிப்பாய் கவனித்த அஜய், “எழுதல தயாளன், பச்சை குத்திருக்காங்க…” எனவும் முதுகில் இருந்த ரோமங்களை கிளவுஸ் அணிந்த கைகளால் விலக்கி உடலின் தண்டுவடப் பகுதியில் எழுதி இருந்த எழுத்துகளைப் படித்தார் டாக்டர்.

“நேசத்தின் நிழல் கறுப்பு!”

கமிஷனர் அலுவலகம்.

டென்ஷனாய் நாற்காலியில் சாய்ந்திருந்த கமிஷனர் ஜெயராம் முன்பு கிருஷ்ணாவும், அஜயும் அமர்ந்திருந்தனர்.

“மறுபடியும் அதே டைட்டில்ல அடுத்த மர்டர்… ஆனா கொல்லப்பட்ட ஆண் மீது கறுப்புப் பெயின்ட் இல்லை… பாடி கூட கறுப்பு ரோஜாவோட ஏதோ லெட்டர் எழுதி இருந்துச்சே, அதைப் படிங்க கிருஷ்ணா…” என்றார் ஜெயராம்.

மொபைலில் இதயாவின் வீட்டில் பாடி கிடந்த இடத்தில் அலைபேசியில் எடுத்து வைத்திருந்த போட்டோக்களில் ஒன்றை ஓபன் செய்து படித்தார் கிருஷ்ணா.

“AEVbyRK, நேசத்தின் நிழல் கறுப்பு by அந்தகன்…”

“இதான், அந்தப் பேப்பர்ல எழுதி இருக்கு சார்…”

“யாரு இதைப் பண்ணறான்… அதுவும் சீரியல் கில்லர் மாதிரி டைட்டில் வச்சு கொலை பண்ணுறான்… அப்பவும் நேசத்தின் நிழல் கறுப்புன்னு இவன் டைட்டில் வச்சாலும் முன்னாடி உள்ள ஆங்கில லெட்டர்ஸ்க்கு என்ன அர்த்தம்…” அதுக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்மந்தம்…?” வரிசையாய் கேள்விகளைக் கேட்டுவிட்டு அஜயை பார்த்தார்.

யோசனையுடன் இருந்தவன், “முதல்ல இந்தப் பையன் யாருன்னு கண்டு பிடிப்போம் சார்… பையனுக்கு எப்படியும் 25 வயசுக்குள்ள தான் இருக்கும்… போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கிடைச்சுட்டா நெக்ஸ்ட் மூவ் பண்ண வசதியா இருக்கும் இந்த ரெண்டு கொலைகளையும் பண்ணது ஒரே ஆள் தான், ஆனா, ஒரே விதத்துல கொலை பண்ணலை, அதுக்கு என்ன காரணமா இருக்கும்…” என்றான் அஜய்.

“எனக்கும் எதுவும் தோணலை அஜய்… ரெண்டு கொலைகள், வர்ஷா மிஸ்ஸிங்னு எதுலயும் கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லாம இருக்கோம்… நாளைக்கு பிரஸ் மீட் வேற இருக்கு, கேள்வி கேக்கன்னே பிறந்த போல சில ரிப்போர்ட்டர்ஸ் குடைஞ்சு எடுப்பாங்க… அதோட ஐஜி வேற இந்தக் கேஸ் பத்தி கேட்டுட்டே இருக்கார், என்னால பதில் சொல்ல முடியலை…” என்றார் கமிஷனர் வருத்தமாய்.

“ம்ம்… கண்டிப்பா ஏதாச்சும் ஒரு குளூ கிடைக்காம இருக்காது சார்… அந்த பிளாக் பெயின்ட் அடிச்ச பொண்ணோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கிடைச்சிட்டா கண்டிப்பா ஒரு நாட் கிடைக்கலாம் சார்…”

“அது எப்ப ரெடியாகும்னு கேட்டிங்களா அஜய்…”

“சப் இன்ஸ்பெக்டர் கோகுல் ரிப்போர்ட்டை வாங்க பாரன்சிக் ஆபீஸ் போயிருக்கார் சார், கொஞ்ச நேரத்துல வந்திடுவார்…”

“இந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டும் சாயந்திரமே தரோம்னு டாக்டர் கணேசன் சொல்லிருக்கார்…”

“ஓகே… நாளைக்காச்சும் ஏதாச்சும் நல்ல தகவல் சொல்லுங்க, நான் சிஎம் ஆபீஸ் போகணும்… நீங்க கிளம்புங்க…”

“ஓகே சார்…” சொன்ன அஜய் எழுந்து கொள்ள இருவரும் விறைப்பாய் சல்யூட் ஒன்றை உதிர்த்துவிட்டு வெளியே வந்தனர். போர்ட்டிகோவில் நடந்து கொண்டே பேசினர்.

“கிருஷ்ணா, இந்த ரெண்டு கொலைலயும் ஒற்றுமைன்னா… பிளாக் ரோஸ், நேசத்தின் நிழல் கறுப்புங்கற வாசகத்தோடு வர்ற அந்த இங்க்லீஷ் எழுத்துகள்… பிணத்து மேல ஊத்தி இருக்கிற ஆட்டு ரத்தம், பாலித்தீன் பை… அப்புறம், ரெண்டு கொலையுமே மே பி பாய்சனா இருக்கலாம்… நீங்க என்ன நினைக்கறீங்க…” என்றான் அஜய்.

“உடம்புல வேற எந்தக் காயமும் இல்லாததால எனக்கும் அப்படி தான் தோணுது சார்…” என்றார் கிருஷ்ணா.

“பெயின்ட் பொண்ணோட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கிடைச்சிருச்சான்னு கோகுலுக்கு போன் பண்ணிப் பாருங்க…”

“இதோ பண்ணறேன் சார்…” என்ற கிருஷ்ணா கோகுலுக்கு அலைபேசியில் அழைக்க, அப்போதுதான் ரிப்போர்ட்டைக் கையில் வாங்கிக் கொண்டு ஸ்டேஷனுக்கு கிளம்பி வந்து கொண்டிருப்பதாய் சொன்னான்.

“கோகுல் ரிப்போர்ட் வாங்கிட்டு ஸ்டேஷனுக்கு வந்திட்டு இருக்காராம் சார்…”

“ஓகே… நாமளும் ஸ்டேஷனுக்குப் போயிடலாம்…” சொன்ன அஜயோடு கிருஷ்ணாவும் காருக்கு நடந்தார். இருவரும் ஸ்டேஷனுக்கு சென்ற இரண்டாவது நிமிடம் கோகுலும் உள்ளே வந்துவிட்டான்.

அஜய் முன்பு சல்யூட் அடித்து தளர்ந்தவன் ரிப்போர்ட்டை நீட்ட வாங்கிக் கொண்டான்.

ஆங்கிலத்தில் இருந்த ரிப்போர்ட்டில் பார்வையைப் பதித்தவன் மனதுக்குள் தமிழாக்கம் ஓடியது.

இறந்தவரின் பெயர்: xxxxx

பாலினம்: பெண்

வயது: 20 அல்லது 21

இறப்புக்குக் காரணம்: அதிக அளவில் கொடுக்கப்பட்ட  அனஸ்தீசியா இஞ்சக்ஷன்.

மரணத்துக்குக் காரணம்: சக்சினால் கோலின் இரண்டு ஆம்பியூல் கொடுக்கப்பட்டதால் முதலில் பிரெயின் டெட் அடுத்து ஹார்ட் பெயிலியர் மூலம் மரணம்.

“ரிப்போர்ட் என்ன சொல்லுது சார்…” கிருஷ்ணா ஆர்வமாய் கேட்க அவரிடம் நீட்டினான்.

“நான் நினைச்ச போல தான்…” என்றவன் அவரைப் படிக்க விட்டு போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டரை அழைத்தான்.

“சக்சினால் கோலின், இது ஆப்பரேஷன் பேஷன்ட்டுக்கு அனஸ்தீஷியா கொடுக்கிறதுக்காக யூஸ் பண்ணுற மருந்து தானே, இதுல எப்படி அந்தப் பொண்ணு இறந்திருக்கும்…?” என்றார் கிருஷ்ணா அஜயை கேள்வியுடன் நோக்கி.

“யூ ஆர் ரைட் கிருஷ்ணா… இப்பதான் டாக்டர் கிட்ட இதைப் பத்தி டீட்டைலா கேட்டேன்… அந்த மருந்தின் உபயோகம் என்னவோ அனஸ்தீஷியா கொடுக்கிறதுக்கு தான்… அதையே ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல யூஸ் பண்ணினா மசல்ஸ் அரஸ்ட், ஹார்ட் பெயிலியர் அண்ட் பிரெயின் டெட் கூட ஆகுமாம்… இந்தப் பொண்ணுக்கு யூஸ் பண்ணிருக்கிற மருந்தோட அளவு ரெண்டு ஆம்பியர்… முதல்ல கொஞ்சமா கொடுத்து அவ மயக்கத்துல இருக்கும்போது வெற்றுடம்புல கறுப்புப் பெயின்டை துளி இடம் விடாம பெயின்ட் பண்ணி முடிச்சதும் அதிக அளவுல இஞ்சக்ட் பண்ணிருக்கான்… ரேப் அட்டம்ப்டும் கிடையாது, நமக்கு அடையாளம் தெரியக் கூடாதுன்னு கூட கறுப்புப் பெயின்ட் அடிச்சிருக்கலாம்… அநேகமா அந்தப் பொண்ணை எதுக்காச்சும் பழி வாங்கவோ, அவமானப் படுத்தவோ தான் இப்படிப் பண்ணிருக்கான்னு நினைக்கிறேன்… எதுக்காக, யார் இதைப் பண்ணிருப்பா…” யோசனையுடன் சொல்லிக் கொண்டான்.

“ஹோ அந்த மருந்துல இப்படி ஒரு விஷயம் இருக்கா, ரொம்ப கொடுமை சார்…”

“ம்ம்… வர்ஷா காணாமப் போனதுக்கும் இந்த சீரியல் கில்லர் தான் காரணமா..? இல்லை, அது வேற ஆளா தெரியல…”

“சார், நம்மகிட்டதான் அந்தப் பையனோட போட்டோ கிளியரா இருக்கே, அதை பேப்பர்ல, டீவில கொடுத்து நியூஸ் போட்டா, நாளைக்கே யார்னு தெரிஞ்சிடும்… பண்ணலாமா…?”

“ம்ம்… நல்ல ஐடியாதான், போஸ்ட்மார்ட்டம் வர்ற வரைக்கும் வெயிட் பண்ண வேண்டாம், பண்ணிடுங்க…”

“ஓகே சார்…”

“கிருஷ்ணா, அந்த இதயாவை விசாரிச்சா ஏதாச்சும் லீட் கிடைக்கலாம்னு நினைக்கிறேன்… அப்படியே வர்ஷா வீட்டுலயும் விசாரிச்சிட்டு வீட்டுக்குக் கிளம்பறேன்… ஈவனிங் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கிடைச்சதும் கால் பண்ணுங்க…”

“ஓகே சார்…” என்றார் கிருஷ்ணா.

தனது புல்லட்டில் தடதடத்துக் கொண்டு கிளம்பினான் அஜய்.

***********************

தனக்கு முன்னில் சிறு படபடப்போடு அமர்ந்திருந்த இதயாவை ஏறிட்டான் அஜய். பதினெட்டு வயதுப் பெண் என்றாலும் எக்கச்சக்கமாய் குழந்தைத் தனம் கண்ணில் மிச்சம் இருந்தது. பொம்மை போல் அழகாய் இருந்தவளின் பார்வை அவனைக் கேள்வியாய் ஏறிட்டது.

“என்கிட்ட என்ன கேக்கணும் சார்…”

“வர்ஷா மிஸ் ஆன அன்னைக்கு யாரோடவோ கார்ல கிளம்பிப் போனதா சொல்லிருக்க, அது எந்தக் கார்னு தெரியுமா…?”

“இல்ல சார், காரை அவ்ளோ கவனிக்கல… பட் அது ஒரு வெள்ளைக் கார்…” என்றாள் யோசனையுடன்.

“அந்தக் காரைப் பார்த்தா அடையாளம் தெரியுமா…?”

“ம்ம்… சொல்லிடுவேன் நினைக்கிறேன் சார்…”

“ஓகே, லாப்டாப் இருக்கா…” எனவும்,

“எஸ் சார்…” என்றாள்.

“கொஞ்சம் எடுத்திட்டு வாயேன்….” என்றதும் எடுத்து வந்தாள்.

அதில் இன்டர்நெட் கனெக்ட் செய்து மீடியம் ரேஞ்சிலுள்ள பல வித கார்களின் போட்டோவைக் கிளிக் செய்து, ஒவ்வொன்றாய் அவளிடம் காட்டினான். ஒவ்வொன்றையும் பார்த்துவிட்டு மறுப்பாய் தலை ஆட்டியவள் ஸ்கோடாவைக் கண்டதும் சந்தேகமாய் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

“இ..இந்தக் காரைப் போல தான் இருக்கு சார்…”

“நிச்சயமா இது தானா…”

“அ…துவந்து, பார்க்க இது போல தான் இருந்துச்சு…” என்றாள் குழப்பத்துடன்.

“ம்ம்… ஓகே ரிலாக்ஸ், நல்லா பொறுமையா யோசிச்சுப் பாரு, அந்தக் காருல ஏதாச்சும் அடையாளம்… உள்ள யார் இருந்தாங்க, ஏதாவது நினைவு வரலாம்… சப்போஸ் நீ வெளிய போகும்போது பார்த்தா உடனே இன்பார்ம் பண்ணு…”

“ஓகே சார் சொல்லறேன்…”

“சரி, வர்ஷா எந்த மாதிரி டைப்… எல்லாரோடவும் நல்லாப் பழகுவாளா…?”

“ஆமா சார், அவளை எல்லாருக்கும் ரொம்பப் பிடிக்கும்… எப்பவும் கலகலன்னு பேசுவா…”

“கிளப்ல யாரு கூடவாச்சும் குளோசா பழகுவாளா…?”

“இல்ல சார் அவளைப் பொறுத்தவரை எல்லாரும் பிரண்ட்ஸ், எல்லாருகிட்டயும் ஒரே போல பழகுவா… எப்படியாச்சும் அவளைக் கண்டு பிடிச்சிருங்க…” என்றாள் வருத்தமாய்.

“ம்ம்… ஷ்யூர் மா… ஓகே, நான் கிளம்பறேன், ஏதாச்சும் நினைவு வந்துச்சுனா கால் மீ…” என்றவன் அவனது அலைபேசி எண்ணை கொடுத்துவிட்டு கிளம்பினான்.

*********************

மொபைலில் பின்ஜ் ஆப்பில் ஒரு கிரைம் நாவலை சுவாரசியமாய் படித்துக் கொண்டிருந்த அர்ச்சனா வாசலில் தடதடத்த கணவனின் புல்லட் சவுண்டில் நிமிர்ந்தாள்.

வாசிப்பை நிறுத்தி எழுந்தவள் கதவைத் திறக்க சோர்வுடன் உள்ளே வந்தான் அஜய்.

அவன் கையைப் பார்த்தவள் ஏமாற்றத்துடன், “இன்னிக்கும் கிரைம் நாவல் வாங்கிட்டு வரல போலருக்கு…” என முனங்கிக் கொண்டே அடுக்களைக்கு நடந்தாள்.

“அச்சு, ரொம்ப டயர்டா இருக்கு, சாப்பாடு எடுத்து வை… ஒரு குளியல் போட்டு வந்துடறேன்…” சொல்லிக் கொண்டே குளியலறைக்கு நடந்தான் அஜய். சில்லென்ற தண்ணீர் தலையை நனைத்து இதமாய் உடலைத் தழுவ கண் மூடி சுகமாய் நின்றாலும் கருத்தில் பிரசன்னாவுடன் பேசியது நினைவு வந்தது.

பிரசன்னாவின் வீட்டில் அந்த பெயின்ட் பெண்ணின் சடலத்தைக் கண்டத்தில் இருந்தே வர்ஷா ஒரு மாதிரி தான் இருந்திருக்கிறாள். இவர்கள் தான் கம்பெல் செய்து அன்று டென்னிஸ் கிளாஸ்க்கு அனுப்பி இருக்கிறார்கள்… சம்பவம் நடப்பதற்கு நான்கு நாள் முன்பு வர்ஷாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்திருக்கிறது… அதில் கலந்து கொண்ட யார்மீதும் அவர்களுக்கு சந்தேகம் இல்லை என்று கூறி விட்டனர்… அப்படியானால் இந்தக் கடத்தலுக்கு பின்னில் யாராக இருக்கும்…” யோசனையுடனே குளித்து முடித்தான்.

சாப்பிடும்போதும் யோசித்துக் கொண்டே இருந்தவனின் தோளில் கை வைத்த அச்சு, “என்னங்க, சாப்பிடும்போதும் கேஸ் பத்தின நினைவு தானா…? இப்ப என்ன புதுக்கேஸ்…” என்றாள் ஆர்வமாய்.

எப்போதும் அவளிடம் கேஸ் பற்றி விவாதிக்கும்போது அவனுக்கு புதிய பல கோணங்கள் தோன்றுவது உண்டு… எனவே இப்போது நடந்த கொலைகளைப் பற்றி அவளிடம் விளக்கினால் ஏதாச்சும் புதிய வெளிச்சம் தெரியுமோ… என்ற யோசனையுடனே சொல்லத் தொடங்கினான் அஜய்.

கன்னத்தில் கை வைத்து கவனமாய் கேட்கத் தொடங்கினாள்.

“பெண்ணின் உடம்பு முழுதும் ஒரு இடம் விடாம கறுப்புப் பெயின்ட் அடிச்சு வச்சிருக்கான்…” அஜய் சொல்லவும் இடையிட்டாள் அச்சு.

“எ..என்ன சொன்னிங்க, பொண்ணோட உடம்புல கறுப்புப் பெயின்டா…” என்றாள் வியப்புடன்.

“ம்ம்… ஆமா அச்சு, அந்தப் பிணத்தோட கறுப்புப் பெயின்ட் அடிச்ச ஒரு ரோஜாவும் ஒரு லெட்டரும் இருந்துச்சு…” எனவும் அவள் யோசனையுடனே அவனைப் பார்த்தாள்.

“பொண்ணோட உடம்புல கறுப்புப் பெயின்ட்டா…” மீண்டும் தனக்குள் சொல்லிக் கொண்டவள்,

“இ…இதை இதுக்கு முன்ன எங்கயோ நான் கேட்டிருக்கனே… எங்கே…?” அவள் தனக்குள் யோசிக்க அவன் கேட்டான்.

“என்னமா, என்ன யோசிக்கிற…?”

“அ…அதுவந்து… நீங்க சொன்ன விஷயம் இதுக்கு முன்னாடியே கேள்விப்பட்ட போல இருக்கு… ஆனா, எங்கன்னு தான்…” தலையில் விரலால் தட்டிக் கொண்டாள்.

“என்னது, இதுக்கு முன்னமே இப்படி ஒரு விஷயம் கேள்விப் பட்டிருக்கியா…?” என்றவன் ஆச்சர்யத்துடன் அவள் கையைப் பற்றினான்.

“எங்க, எப்படி இந்த விஷயம் உனக்குத் தெரியும்…?”

“இல்லங்க… நினைவு வரல, ஆனா இப்படி ஒரு சம்பவம் முன்னமே என் மனசுல பதிஞ்சிருக்கு…”

“ஓகே… நிதானமா யோசி, ஏதாச்சும் சினிமால பார்த்தியா…?”

“இ…இல்லங்க… அது, அதுவந்து…” என்றவள் நினைவு வராமல் தவித்தாள்.

“சரி, அந்த டெட்பாடி கூட ஏதோ லெட்டர் இருந்துச்சே… அதுல என்ன எழுதி இருந்துச்சு…” என்றாள்.

“FN144AAbyRK நேசத்தின் நிழல் கறுப்பு by அந்தகன்”

“அந்தகன்ன்னு பேரா… அது எமனை சொல்லறது தானே, அப்படி கூட பேர் வைப்பாங்களா…”

“அது கொலையாளி அவனுக்கு வச்சுகிட்ட புனைப்பெயரா கூட இருக்கலாம், அச்சு…” அஜய் சொல்ல, “ம்ம்…” மீண்டும் அவன் சொன்னதை அப்படியே ரீவைன்ட் செய்து யோசிக்கத் தொடங்கினாள் அர்ச்சனா.

Advertisement