Advertisement

அத்தியாயம் – 8

மேஜை வலிப்பிலிருந்து ஆனந்தி என்ன எடுக்கப் போகிறாள் எனத் திகிலோடு பார்த்து நின்ற பாலாஜியின் கண்கள் அவள் கையிலிருந்த கவரைக் கண்டதும் ஆச்சர்யமானது.

“அது என்ன கவர் ஆனந்தி…”

“சொல்லறேன், உங்களுக்காக என்னோட சின்ன கிப்ட்… பிரிச்சுப் பாருங்க…” சொன்னவள் நீட்டிய கவரை வாங்கி பிரித்துப் பார்த்தவன் இன்பமாய் அதிர்ந்தான்.

“உங்க பேருல ஒரு பெரிய தொகை எப்டி போட்டிருக்கேன்… இதுல இருந்து வர்ற இன்ட்ரஸ்ட் உங்க செலவுக்கு எடுத்துக்கங்க… ஆபீசுல இருந்து பர்சனல் செலவுக்கு எடுக்க வேண்டாம் பாலா… அதுக்கு தான் இந்த ஐடியா…” என்றதும் அவன் முகம் மாறியது.

“ஏன்… யாராச்சும் எதுவும் சொன்னாங்களா…?”

“அப்படி இல்ல, நான் சும்மா ஆபீஸ் செலவு கணக்கெல்லாம் பார்த்தேன்… உங்க பர்சனல் நேம்ல கம்பெனி கணக்குல சில செலவுகளைப் பார்த்தேன், அது சரியில்லன்னு தோணுச்சு… அதுக்காக தான் இந்த ஏற்பாடு…”

“ம்ம்… உன் கம்பெனி விஷயத்துல என்னைத் தலையிடாம ஒதுங்கி இருக்க சொல்லுற, அப்படிதானே…”

“அச்சோ, அப்படில்லாம் இல்ல பாலா… நீங்க எதுவும் தப்பா நினைக்காதீங்க… அப்புறம் உங்களை அடிக்கடி சீட்டாடுடற கிளப் பக்கம் பாக்குறதாக் கேள்விப்பட்டேன்… நமக்கு அதெல்லாம் செட்டாகாது… எனக்குத் தெரியும், நீங்க சும்மா ஒரு ஜாலிக்கு தான் அங்கெல்லாம் போயிருப்பீங்கன்னு… இருந்தாலும் பாக்குறவங்க தப்பா நினைச்சுடக் கூடாதில்லையா, அதான் சொல்லறேன்…” என்றதும் பாலாஜியின் முகம் நிறம் மாறியது.

“உனக்கு விருப்பமுள்ளது மட்டும் தான் நான் செய்யணும், எனக்குன்னு எந்த விருப்பு, வெறுப்பும் இல்லாம அடிமை மாதிரி இருக்கணும்னு நினைக்கறியா…” மிதமான சீற்றம் அவன் குரலில் ஒலிக்கவும் ஆனந்தி பதறினாள்.

“என்னங்க நீங்க, எதார்த்தமா பேசினா தப்பா எடுத்துக்கறீங்க… நான் வேற லூசுத்தனமா இந்த நேரத்துல இதைப் பத்தி பேசிட்டேன்… பாவம் நீங்க டயர்டா இருப்பீங்க, ரெஸ்ட் எடுங்க, இதைப் பிறகு பேசலாம்…” சொன்னவள் புன்னகைக்க அவன் முகத்தை திருப்பிக் கொண்டான். மனதுக்குள் முன்னமே இருந்த வெறுப்பு மேலும் அதிகமானது.

“என்கிட்டயே கணக்கு பாக்குறியா… இதுக்கே இப்படி யோசிக்கிறவ என் ஹனியைப் பத்தி தெரிஞ்சா என்னெல்லாம் பண்ணுவா, வீட்டை விட்டே துரத்தினாலும் துரத்துவா… அதுக்கு விடக் கூடாது, சீக்கிரம் ஒரு முடிவுக்கு வரணும்…” தீர்மானித்துக் கொண்டான்.

அதற்குப் பின் பத்து நாளாய் பாலாஜியின் நீக்கங்கள் ஒவ்வொன்றும் மிகவும் கவனமாய் இருந்தது. ஆனந்தியை கவரக் கூடிய ஆச்சர்யப்படுத்தக் கூடிய முடிவுகளை மட்டுமே செய்தான். சீட்டு கிளப் பக்கம் போகவே இல்லை. அலுவலகத்தில் யாருக்கும் தெரியாதவாறு தேன்மொழியும், பாலாஜியும் ஜாக்கிரதையாய் நடந்து கொண்டனர்.

அன்று மாலை அலுவலகத்தில் வேலை முடிந்து அனைவரும் கிளம்பிக் கொண்டிருக்க, தனது அறைக்கு ஒரு பைலைக் கொண்டு வந்த வினிதாவிடம், “வினிதா, தேன்மொழிகிட்ட ஒரு கொட்டேஷன் ரெடி பண்ண சொல்லிருந்தேன்… முடிச்சிட்டா கொண்டு வர சொல்லிட்டு நீங்க வீட்டுக்கு கிளம்புங்க…” என்றான்.

“சரி சார்…” என்றவள், தேன்மொழியிடம் சொல்ல சிறிதுநேரம் அந்த கொட்டேஷனில் ஏதோ செய்வது போல் பாவ்லா காட்டி அதோடு அவனது அறைக்கு சென்றாள் தேன்மொழி.

அவளைப் பார்த்ததும் வேகமாய் வந்து அணைத்துக் கொள்ள, “ஹேய் மெதுவா…” சிணுங்கியவள் அவன் இடுப்பை வளைத்து நெஞ்சில் தலை வைத்துக் கொண்டாள்.

“எல்லாரும் கிளம்பிட்டாங்களா ஹனி…” என்றான் கிசுகிசுத்து.

“அந்த ரகுநாத் மட்டும் காபின்ல ஏதோ பண்ணிட்டு இருக்கார்…” என்றாள் மெல்லிய குரலில்.

“ஹூம்… எவ்ளோ நாளாச்சு, நாம தனிமைல சந்திச்சு…” சொல்லிக் கொண்டே அவனது கைகள் அவள் உடலில் வலம் வர நெளிந்தவள், “ப்ச்… அதான் இப்ப ஆனந்திக்கு ரொம்ப நல்ல புருஷன் ஆகிட்டிங்களே… அப்புறம் என்னை கொஞ்ச எப்படி நேரம் இருக்கும்…” என்றாள் அவள்.

“ப்ச்… வெறுப்பேத்தாத ஹனி, நானே காஞ்சு கிடக்கேன்…”\

“அப்படியா, அப்ப நான் ஒரு குட்நியூஸ் சொல்லட்டுமா…?”

“என்ன குட் நியூஸ், உனக்கு மாப்பிள்ளை பிக்ஸ் பண்ணிட்டாங்களா…?” என்றவனின் நெஞ்சத்தில் செல்லமாய் குத்தியவள், “நாளைக்குக் விடியக்காலைல அம்மாவும், அப்பாவும் ஒரு மேரேஜ்க்கு தஞ்சாவூர் கிளம்பறாங்க… வர்றதுக்கு ரெண்டு நாள் ஆகும்…” என்றாள் கண்கள் மின்ன.

“வாவ்… இது நிஜமாலுமே ஹாப்பி நியூஸ் தான், ரெண்டு நாளும் நாம உன் வீட்டுல தூள் கிளப்பிடலாம்…” என்றான்.

“நான் லீவு போட்டு நீங்களும் ஆபீஸ் வரலேன்னா சந்தேகம் வராதா…” அவள் கேட்க, “சந்தேகம் வராத போல நான் பார்த்துக்கறேன்… நீயும் மேரேஜ்க்கு ஊருக்குப் போறதா சொல்லி ரெண்டு நாள் லீவு போடு… நான் ஆபீஸ் வந்திட்டு கிளையன்ட் மீட் பண்ண போறதா சொல்லி அங்க வந்திடறேன்… எப்படி என் ஐடியா…” என்றான்.

“ம்ம்… இதுல எல்லாம் நீங்க கில்லாடி தான்…” என்றவளின் இதழை வேகமாய் கைது செய்து விடுதலை செய்தான்.

“ஓகே… அப்ப எல்லாம் சொன்ன போல, நீ கிளம்பு…” என்றவன் பாக்கி வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான்.

நல்ல கணவனாய் மல்லிகைப் பூவுடன் வீட்டுக்கு சென்றவனை புன்னகையோடு வரவேற்றாள் ஆனந்தி.

“என்னங்க, ஆபீஸ்ல வேலை ஜாஸ்தியா… டயர்டா தெரியறீங்க…” கேட்டுக் கொண்டே சாந்தா போட்டு கொடுத்த காபியை கணவனிடம் நீட்டினாள்.

“ம்ம்… ஆமா ஆனந்தி, ஒரு பெரிய ஆர்டர் கிடைக்கிற விஷயமா சில கிளையன்ட்ஸ் கிட்ட பேசிட்டு இருக்கேன், நாளைக்கு ஒருத்தர் நேர்ல மீட் பண்ணலாம்னு சொல்லிருக்கார்… நீ காபி சாப்பிட்டியா…?”

“இல்லங்க, காபி குடிச்சா ஒரு மாதிரி நெஞ்சைக் கரிக்குதுன்னு சொன்னேன்… அதான், காசி அண்ணன் மாதுளம்பழம் ஜூஸ் போட்டுக் கொடுத்தார்… குடிச்சேன்…”

“ம்ம்… இன்னும் கொஞ்ச நாள் தான, குழந்தை வந்ததும் நீ எப்பவும் போல ப்ரீயா இருக்கலாம்…”

“ம்ம்… நம்ம பையனுக்கு என்ன பேரு வைக்கலாம்னு தான் யோசிச்சுட்டு இருந்தேன்… உங்க மனசுல எதாச்சும் பேரு யோசிச்சு வச்சிருக்கிங்களா…?”

“இல்ல, உனக்குப் பிடிச்ச பேரே வைப்போம், என்ன பேரு யோசிச்சுருக்கே…”

“அபிமன்யு… அபிமன்யு பாலாஜி… சொல்லவே அழகா இருக்குல்ல..” ஆசையோடு கேட்டவளை நோக்கி சிரித்தான்.

“ம்ம்… நல்லாருக்கு, இதையே வச்சிருவோம்… காசி எங்கே…”

“குழந்தை பிறந்துட்டா பசும்பால் தான் யூஸ் பண்ணணும், நாமளே ஒரு பசுமாடு வாங்கி வளர்த்தினா நல்லாருக்கும்னு சொன்னேன், அதுக்கென்ன, ஏற்பாடு பண்ணிடலாம்னு உடனே கிளம்பி போயிருக்கார்… பசுமாடோட தான் வீட்டுக்கு வருவார்னு நினைக்கிறேன்… என் அப்பா, அம்மா இருந்தாக் கூட இப்படி செய்வாங்களா தெரியல, என் மேல அவ்ளோ பாசத்தைக் காட்டுறார்..” நெகிழ்வோடு சொன்னாள்.

“ம்ம்… பாசமெல்லாம் சரிதான், ஆனாலும் அவன் உன் கூடப் பிறந்தவன் இல்லைங்கறதை மட்டும் மறந்துடாத…”

“என்ன பாலா இப்படி சொல்லிட்டீங்க, காசிண்ணன் அதுக்கும் மேல… எனக்கு நல்ல கார்டியன், அண்ணன், நண்பன், சில நேரம் அவரோட கேரிங் எனக்கு என் அப்பா போலக் கூடத் தோணும்…” என்றவளின் குரல் கலங்கியது.

“என்ன ஆனந்தி, ஒரு வேலைக்காரனைப் போயி உன் அப்பாவோட கம்பேர் பண்ணிட்டு இருக்க… சரி, நான் சொன்னா உனக்குப் பிடிக்காது, இந்தப் பேச்சை விடு…” சொன்னவன் எழுந்து அறைக்கு செல்ல கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆனந்தி.

“இவருக்கு ஏன் காசிண்ணன் எவ்ளோ செய்தாலும் வேலைக்காரன்னே தோணுது… காசுக்காக வேலை செய்யறவனும், அன்புக்காக எல்லாம் செய்யறவனும் ஒண்ணா… ஹூம், போகப் போக காசி அண்ணனோட அன்பைப் புரிஞ்சுப்பார்…” யோசித்தவள் எழுந்து தோட்டத்தில் நடக்க சென்றாள்.

நாட்கள் சிறகடிக்க ஆனந்தியின் பிரசவ நாளும் வந்தது. அவளது எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கி, ஆசையைத் தவிடு பொடியாக்கி அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

***********************

வெய்யில் முகத்தில் அறையும் மதிய நேரம். ஜீ ஹெச்சின் பிரதான வாயிலுக்குள் காரை நுழைத்தார் கிருஷ்ணா. மதிய நேரமென்பதால் அதிக கூட்டமில்லை.

ஹாஸ்பிடல் கட்டிடத்தின் பின்பக்கம் மார்ச்சுவரிக்கு சற்றுத்தள்ளி ஒரு மரத்தடியில் காரை நிறுத்த அஜய். கிருஷ்ணா இருவரும் இறங்கினர்.

அவர்களைக் கண்டதும் மார்ச்சுவரி ஊழியர் வேகமாய் வந்து சல்யூட் அடித்துவிட்டு நிமிர கிருஷ்ணா கேட்டார்.

“செல்வராஜ், மார்ச்சுவரி நீட்டா தானே இருக்கு…”

“ஆமா சார், கிளீன் பண்ணியாச்சு…”

“சார் அந்த கறுப்புப் பெயின்ட் பூசின பொண்ணோட டெட்பாடியைப் பார்க்க வந்திருக்கார், ஸ்டெரிலைஸ்டு மாஸ்க் ரெண்டு எடுத்திட்டு வா…”

“இதோ, கொண்டு வரேன் சார்…” சொன்னவன் வேகமாய் அடுத்த அறைக்குள் நுழைந்த இரண்டு பிளாஸ்டிக் கவர்களோடு இருந்த மாஸ்க்கை எடுத்து வந்து நீட்ட இருவரும் அணிந்து கொண்டனர்.

“டோரை ஓபன் பண்ணு…” கிருஷ்ணா சொல்ல செல்வராஜ் கையிலிருந்த சாவிக் கொத்தில் ஒன்றை பெரிய பூட்டின் வாய்க்குள் செருக, “க்ளக்…” என்ற ஓசையுடன் வாயைத் திறந்து கொண்டது. செல்வராஜ் அந்த கனமான இரும்பு கதவைத் தள்ள இருவரும் உள்ளே நுழைந்தனர்.

குப்பென்று வீசிய பார்மலின் நெடி நாசித்துவாரம் வழியாய் நுரையீரலை அடைத்துக் கொள்ள மார்ச்சுவரி அறைக்குள் இதமாய் பரவியிருந்த ஏசி குளிர் சின்ன சின்ன ஊசிகளாய் உடம்புக்குள் குத்தியது. வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பெரிய பெரிய அலமாரிகளின் முன் நின்ற செல்வராஜ் ஒரு டிரேவை வெளியே இழுத்தான்.

ஆறடி நீளத்தில் இருந்த டிரே வெளியே வர, அதற்குள் அட்டைக்கரி நிறத்தில் மல்லாந்த நிலையில் கிடந்த பெண்ணை அஜயின் கண்கள் லேசராய் ஊடுருவியது.

உடம்பு முழுதும் ஒரு இடம் விடாமல் கறுப்புப் பெயின்ட் பூசப்பட்ட பெண்ணின் உடல் கற்சிலையாய் விறைத்திருக்க, ஒரு துளி கூட கேப் இல்லாமல் பெயின்ட் அடிக்கப்பட்டு இருந்ததை உன்னிப்பாய் கவனித்தான் அஜய். என்னதான் உறைநிலையில் பிரசர்வ் செய்து வைத்திருந்தாலும் நாசி, கன்னங்கள் வீங்கத் தொடங்கி உப்பலாய் தெரிந்தன.

“பாடி லேசா டீகம்போஸ் ஆகத் தொடங்கிருச்சு போல…”

“ஆமா சார், பாடி இங்க வந்து ஒரு வாரத்துக்கு மேலாச்சு, இன்னும் போஸ்ட்மார்ட்டம் கூடப் பண்ணலை…”

“ம்ம்… போஸ்ட்மார்ட்டம் பண்ணினா பாடி ஷேப் சேஞ்ச் ஆக வாய்ப்பிருக்கு…” என்றான் அஜய்.

“ஆமா சார், அதான் யாருன்னு அடையாளம் தெரிஞ்ச பிறகு போஸ்ட்மார்ட்டம் பண்ணலாம்னு வெயிட் பண்ணறோம்…”

“ஹூம்… டெட்பாடி கிடந்த ஸ்பாட்ல எடுத்த போட்டோஸ் இருக்கா…?”

“இருக்கு சார்…”

“இப்பவே டீகம்போஸ் ஸ்டேஜ்ல இருக்கிறதால இன்னும் பாடியை ஐடெண்டிபை பண்ணறதுக்காக போஸ்ட்மார்ட்டம் பண்ணாம வெயிட் பண்ண முடியாது… ஒருவேளை, போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல கூட நமக்கு ஏதாச்சும் க்ளூ கிடைக்க வாய்ப்பிருக்கு…”

“ம்ம்… எஸ் சார், அப்ப, பாடியை போஸ்ட்மார்ட்டம் பண்ண அனுப்பிடலாமா சார்…” கிருஷ்ணா கேட்க, “ம்ம்… கமிஷனர் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு பண்ணிடுங்க…” என்றான்.

“எஸ் சார்…” என்ற கிருஷ்ணா வெளியே செல்ல அஜயும் தொடர்ந்தான். கமிஷனரிடம் பேசி போஸ்ட்மார்ட்டம் செய்ய பாடியை அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டு கிளம்பினர்.

“மிஸ்ஸிங் கேஸ்ல ஏதும் இந்தப் பொண்ணு பாடியோட மேட்ச் ஆகலியா…”

“இல்ல சார், ஒரு பொண்ணு மட்டும் கொஞ்சம் டவுட் தோணுச்சு, இந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கிடைச்சா அதை வெரிபை பண்ணிக்கலாம்…”

“ஓகே… வர்ஷா பத்தி எனி இன்பர்மேஷன்…”

“நோ சார்…”

“எங்க, எப்படி மிஸ் ஆயிருக்கா…?’

“காலைல வழக்கம் போல டென்னிஸ் கோர்ட்ல இறக்கி விட்டுட்டு பிரசன்னா பக்கத்துல இருக்கிற பார்க்ல வாக்கிங் போயிருக்கார்… வாக்கிங் முடிஞ்சு மகளைப் பிக்கப் பண்ண வரும்போது வர்ஷா அங்கில்லை…”

“அங்கில்லன்னா, யாரு கூட போனா…?”

“அதான் தெரியலை சார்… டென்னிஸ் கிளப் முன்னாடி இருக்கிற CCTV அன்னைக்கு ஏதோ கம்ப்ளெயின்ட்னு சொல்லுறாங்க… கூட விளையாட வர்றவங்களை விசாரிச்சப்ப வர்ஷா யாரோட கார்லயோ ஏறிப் போனதா ஒரு பொண்ணு மட்டும் சொல்லுச்சு… பட் அது எந்தக் காரு, காருக்குள்ள யார் இருந்தான்னு அந்தப் பொண்ணுக்கு எந்த ஐடியாவும் இல்ல சார்…”

“ஹூம்…” யோசனையுடன் கிருஷ்ணா சொன்னதைக் கேட்ட அஜய், “அந்தப் பொண்ணை பார்க்கணுமே…” என்றான்.

“ஷ்யூர் சார், அந்தப் பொண்ணு வீட்டுக்கு ஆல்ரெடி போயிருக்கேன்… இப்ப வீட்டுல தான் இருக்கும், போகலாம்…” என்றார் கிருஷ்ணா.

இருவரும் காரில் அமர அஜய் கேட்டான்.

“அந்தப் பொண்ணு பேரென்ன…? எந்த ஏரியா…”

“பொண்ணு பேரு இதயா, அடையார்ல வீடு சார்…”

“இதயா, நைஸ் நேம்… என்ன பண்ணிட்டு இருக்கு…?”

“என்ஜினியரிங் தேர்டு இயர் படிக்குது சார்… அவங்க அப்பாவைக் கூட உங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம்… இதயா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மிஸ்டர் அருணகிரி…”

“ஹோ, அவரா…! அவர் பாமஸ் பில்டராச்சே…”

“ம்ம்… அவரோட ஒரே செல்லப் பொண்ணு இதயா தான் இந்த வர்ஷா காரில் ஏறிப் போனதைப் பார்த்த ஒரே விட்னஸ்…” என்றார் கிருஷ்ணா.

“ஓகே, நான் கொஞ்சம் இந்த கேஸை ஸ்டடி பண்ணறேன்…” சொன்னவன் பைலை எடுத்துக் கொள்ள கிருஷ்ணா அமைதியாய் வண்டியை அடையாறுக்கு செலுத்தினார்.

வெயில் மங்கத் தொடங்கி மாலையின் குளுமை சூழத் தொடங்கி இருந்தது. அடையாறுக்குள் இதயாவின் வீட்டை நோக்கி வண்டியை செலுத்த பெரிய அழகான வீடுகள் கடந்து சென்றது. பணத்தை நன்றாகவே வாரி இறைத்து கட்டப்பட்டிருந்த கலைநயம் மிக்க வீடுகள்.

“இந்தத் தெருவுல லாஸ்ட் வீடுதான் இதயா வீடு சார்…” கிருஷ்ணா சொல்ல, பைலை மூடிவிட்டு வெளியே கவனித்தான் அஜய். அந்தத் தெருவின் இறுதியில் கூட்டமாய் ஆட்கள் கூடியிருந்தனர்.

“என்ன…? அங்க ஏதோ கூட்டமா நிக்குறாங்க…” அஜய் கேட்க, “தெரியல சார்… பார்ப்போம்…” என்றவர் சற்றுத் தள்ளியே காரை நிறுத்த இருவரும் இறங்கினர்.

போலீஸ் வண்டியைக் கண்டதும், “அதோ, போலீஸ் வந்துட்டாங்க…” என ஒருத்தர் சொல்ல, “என்ன, இங்க பிராப்ளம்…” என்றார் கிருஷ்ணா.

“ஓ… உங்களுக்கு விஷயம் தெரியாம தான் வந்திருக்கிங்களா சார்… அருணகிரி சார் வீட்டு கார் டிக்கில ரத்தக் கறையோட ஒரு பெரிய பாலித்தீன் பாகு கிடக்குதுன்னு போலீசுக்கு இப்பதான் இன்பார்ம் பண்ணி இருந்தார்…” என்றார் அவர்.

“ரத்தக் கறையோட பாலித்தீன் பாகா…” என்ற கிருஷ்ணா அதிர்ச்சியோடு அஜயை நோக்க, “வாங்க கிருஷ்ணா, “என்னன்னு பார்ப்போம்…” என்றவன் கூட்டத்தை விலக்கி அந்த வீட்டின் கேட்டுக்குள் நுழைந்தான்.

வாசலிலேயே பில்டர் அருணகிரி கவலையான முகத்துடன் கிடைக்க அவரது மனைவியும், மகள் இதயாவும் கலங்கிப் போய் பயத்தோடு நின்று கொண்டிருந்தனர். கிருஷ்ணா போலீஸ் உடையில் இருந்ததால் கண்டு கொண்டவர், “வாங்க இன்ஸ்பெக்டர், கொஞ்சம் முன்னாடி தான் பார்த்துட்டு கால் பண்ணோம்…” என்றவர் “அதோ, அந்தக் கார் தான் சார்…” என இருவரும் கார் அருகே சென்றனர். கார் டிக்கி திறந்து கிடக்க அங்கங்கே உறைந்த ரத்தத் தீற்றலோடு பாலித்தீன் பாகு கண்ணுக்குக் கிடைத்தது.

“யார் முதல்ல பார்த்தது…?” கிருஷ்ணா கேட்க தயக்கத்தோடு அந்த வீட்டின் டிரைவர் யூனிபார்மோடு முன்னே வந்தார்.

“காரை கழுவ போனேன். டிக்கிக்கு வெளியே ரத்தம் ஒழுகிக் கிடந்தது… திறந்து பார்த்தா டிக்கில ஒரு பாலிதீன் மூட்டை ரத்தக் கறையோட கிடந்துச்சு சார்…” என்றார் நடுக்கத்துடன்.

Advertisement