Advertisement

அத்தியாயம் – 7

வாஷ்பேஷின் கண்ணாடி முன் நின்று தாடையில் மின்சாரக் கத்தியை ஓடவிட்டுக் கொண்டிருந்தான் அஜய். ஹாலில் துவைத்த துணியை மடக்கி வைத்துக் கொண்டே முணுமுணுத்துக் கொண்டிருந்த அர்ச்சனாவின் குரல் கேட்க, புன்னகைத்துக் கொண்டான்.

“டெல்லியாம், டூராம்… இனி எங்காச்சும் டூர் போகலாம் கிளம்புன்னு சொல்லிட்டு வாங்க, அப்புறம் இருக்கு உங்களுக்கு… எவ்ளோ ஆசையா கிளம்பி வந்தா அபீஷியல் டூரை ஹனிமூன் டூர்னு சொல்லி ஏமாத்தவா செய்யறீங்க…” சொல்லிக் கொண்டே கணவனின் டிஷர்ட்டை மடித்தாள்.

“அச்சு, அந்த ஆப்டர் ஷேவிங் லோஷன் கொஞ்சம் எடேன்…”

“ஏன், உங்க கைக்கு எட்டாதா…?” கேட்டாலும் அவனுக்குப் பின்னில் இருந்த செல்பிலிருந்து எடுத்து நீட்டினாள்.

அவள் கையைப் பற்றி அருகே இழுத்துக் கொண்டவன், “என்ன அச்சு, இன்னமும் டெல்லி ட்ரிப் பத்தியே புலம்பிட்டு இருக்க… நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா பர்சனல் தான், நோ அபீஷியல் டிரிப்…” சொல்லிக் கொண்டே அவள் கழுத்து வளைவில் தாடையை வைத்து உரச நெளிந்தாள்.

“சும்மா சொல்லாதீங்க, ஆசையா உங்களோட டெல்லியை சுத்தலாம்னு வந்தா தனியா லாட்ஜ் ரூம்ல உக்கார வச்சிட்டு நாலு சுவருக்குள்ள சுத்தி வர மாதிரி பண்ணிட்டிங்களே… இதுக்கு எதுக்கு என்னை அழைச்சிட்டுப் போனிங்க, தனியாவே போயிருக்க வேண்டியது தானே…”

“அதெப்படி, மனைவி ஒரு மந்திரின்னு சொல்லி இருக்காங்களே, எனக்கு குழப்பம் வரும்போதெல்லாம் உன் கிட்ட ஐடியா கேட்டு தான நான் தெளிவாகிக்கிறேன்…” எனவும் அவளுக்கு சிரிப்பு வந்தாலும் காட்டிக் கொள்ளாமல் முறைத்தாள்.

“ஹூம், யாரு நானு… என்கிட்ட நீங்க ஐடியா கேக்கறீங்க, நல்லாவே சமாளிக்கிறீங்க…” என்றவள் கணவனின் கன்னத்தில் கிள்ளி வைக்க, “ஆவ்வ்…” அலறினான் அஜய்.

“சரி, சென்ட்ரல் மினிஸ்டர் பத்தின ரகசிய விசாரணையை கமிஷனருக்கு ரிபோர்ட் பண்ணிட்டிங்களா…”

“அதை முடிக்காம இருப்பனா ஆச்சு… எல்லாம் மெயில் பண்ணிட்டேன், சரி… குளிச்சிட்டு வரேன், டிபன் எடுத்து வை…” சொல்லிக் கொண்டே லோஷனை கன்னத்தில் தடவிக் கொண்டவன் பாத்ரூமுக்குள் நுழைந்தான்.

குளித்து வெளியே வந்தவன் ஜீன்ஸுக்குள் காலை நுழைத்துக் கொண்டிருக்கையில் செல்போன் அலறியது. கமிஷனர் ஜெயராமின் எண்ணைக் கண்டவன் வேகமாய் அழைப்பை ஏற்று காதுக்குக் கொடுத்தான்.

“குட் மார்னிங் சார்…”

“ஹலோ மை டியர் யங் மேன், வெரி குட்மார்னிங்…”

“நான் அனுப்பின ரிப்போர்ட் பார்த்திங்களா சார்…”

“எஸ், அதைத்தான் பார்த்திட்டு இருந்தேன்… ஒரு கேஸ் விஷயமாப் பேசணும், ஆபீஸ் வந்துடறிங்களா…”

“ஷ்யூர் சார்… வித்தின் ஹாப் அன் அவர், அங்கிருப்பேன்…”

“குட், வாங்க, நேர்ல பேசிக்கலாம்…” அவர் அழைப்பைத் துண்டிக்க சட்டையை அணிந்து கொண்டு உணவு மேசைக்கு வந்தான் அஜய்.

நெய் மணத்தோடு ஆவி பறக்கக் காத்திருந்தது கிச்சடி.

“என்ன, கடமை அழைப்பா…?”

“எஸ்… கமிஷ்னர் கால் பண்ணார், ஆபீஸ் போகணும்….” சொன்னவன் ஸ்பூனில் கிச்சடியை எடுத்து சட்னியில் முக்கி வாய்க்குக் கொண்டு செல்லத் தொடங்கினான்.

அவனுக்கு ஒரு கப்பில் காபியை ஊற்றி அருகே வைத்தவள், “என்னங்க, உங்க ஆபீஸ் கட்டிடத்துக்கு வெளிய ஒரு பெட்டிக் கடை இருக்குமே…”

“ஆமா இருக்கு….”

“அங்கே ராஜேஷ்குமார் கிரைம் நாவல் கிடைக்கும்… லேட்டஸ்ட்டா ஏதாச்சும் வந்திருந்தா வாங்கிட்டு வரீங்களா…”

“டைம் இருந்தா பார்க்கறேன், சில நேரம் வொர்க் பிசில மறந்திருவேன்… நீ எப்பவும் நம்ம தெரு முனைல இருக்கிற கடைல தான புக் வாங்கிப் படிப்ப, இப்ப என்ன…”

“அந்தக் கடை இப்போ திறக்கிறதே இல்லங்க… எனக்கு வேற கிரைம் நாவல் படிக்காம ஒரு மாதிரி இருக்கு…”

“ஹாஹா… உன் புருஷன் கிட்ட கிரைம் ஸ்டோரீஸ் கேட்டா ரியலா சொல்லப் போறேன்… அதை விட்டுட்டு அந்த ரீல் கிரைம் ஸ்டோரீஸ் படிச்சு என்ன பண்ணப் போற…”

“ஹூம்… அந்த கிரைம் ஸ்டோரீஸ் படிச்சு கொலை பண்ண ட்ரெயினிங் எடுக்கப் போறேன், கேட்டா வாங்கிட்டு வராம எவ்ளோ கேள்வி கேக்கறிங்க…” அர்ச்சனா கடுப்புடன் சொல்லவும் ஆப் ஆகிவிட்டான் அஜய்.

“சரிம்மா, ஒரு மெசேஜ் போட்டு வை, இல்லன்னா வேலைல மறந்திடுவேன்…” சாப்பிட்டு எழுந்தான்.

“ஹூம்… இது நல்ல புருஷனுக்கு அழகு…” என்றவளின் மண்டையில் செல்லமாய் தட்டிவிட்டு புல்லட் சாவியுடன் வெளியே வர டாட்டாவுடன் வழியனுப்பினாள் அர்ச்சனா.

கமிஷனர் அலுவலகம் காலை நேரப் பரபரப்பில் இருக்க முன்னமே வந்து கமிஷனர் அறைக்கு முன்பு காத்திருந்த கிருஷ்ணா அஜய் வருவதைக் கண்டதும் சந்தோஷமாய் புன்னகைத்தார்.

“ஹலோ அஜய் சார், ஹவ் ஆர் யூ… டெல்லி வொர்க் முடிச்சிட்டு ரிட்டர்ன் வந்துட்டிங்கன்னு நேத்து தான் கமிஷ்னர் சார் சொல்லிட்டு இருந்தார்…” சொல்லிக் கொண்டே கை நீட்ட, பிடித்துக் குலுக்கினான் அஜய்.

“எஸ்… நேத்து ஈவனிங் தான் வந்தோம், வாட் அபவுட் யூ…”

“ம்ம்… கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் எல்லாம் நார்மலா தான் போயிட்டு இருந்துச்சு சார்…” சொல்லிக் கொண்டிருந்தவர் கமிஷனர் அங்கே என்ட்ரி கொடுக்கவும் சட்டென்று அட்டென்ஷன் மோடுக்கு சென்று அஜயுடன் சல்யூட் வைத்துத் தளர்ந்தார்.

“வர்ற வழில ஒரு சின்னப் பிராப்ளம், அதான் லேட் ஆகிருச்சு…” சொல்லிக் கொண்டே தனது அறைக்குள் நுழைந்து நாற்காலியில் சாய்ந்து முன்னில் இருந்த இருக்கைகளைக் கை காட்ட இருவரும் அமர்ந்தனர்.

“அப்புறம் அஜய், டெல்லி எப்படி இருக்கு…”

“இப்ப உள்ள பொலிடிகல் பிராப்ளம்சோட ரொம்ப ஹாட்டாதான் இருக்கு சார்…” அஜய் சொல்லவும் சிரித்தனர்.

பொதுவாய் இரண்டு நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு விஷயத்திற்கு வந்தார் ஜெயராம்.

“அஜய், உங்களை எதுக்கு அவசரமா வரச் சொன்னேன்னா இப்ப ஒரு கேஸ் இங்க வைரல் ஆகிட்டு இருக்கு… கிருஷ்ணா, நீங்களே அதைப் பத்தி சொல்லிருங்க…” எனவும் கிருஷ்ணா பத்து நிமிடம் செலவழித்து சொல்லி முடித்தார்.

“வாட் எ குரூயல்…! கொலையாளி அந்தப் பொண்ணோட உடம்பு முழுசும் ஒரு இடம் விடாம பெயின்ட் அடிச்சு வச்சிருக்கானா…? புதுசா இருக்கே…!” என்றான்.

“எஸ் அஜய், அதோட அந்தப் பொண்ணோட உடம்பு மேல ஒரு பெயின்ட் பண்ண கறுப்பு ரோஜாவை வச்சு சில லைன்ஸ் எழுதி வச்சிருந்தான்…”

“என்ன எழுதிருந்தான்…?”

“FN144AAbyRK, நேசத்தின் நிறம் கருப்பு by அந்தகன்… இதான் அதுல எழுதி இருந்துச்சு…” என்றார் கிருஷ்ணா.

“ஹோ, இதுக்கு என்ன அர்த்தம்… கொலைக்கும் இந்த வார்த்தைகளுக்கும் ஏதாச்சும் சம்மந்தம் இருக்கா…?”

“அது தெரியலை, அந்தகன்க்கு மட்டும் அர்த்தம் தெரியும்…”

“என்ன அர்த்தம்…?”

“அந்தகன்னா எமன் ன்னு அர்த்தம்…”

“ஹோ… அப்படின்னா அவனை எமன்னு சொல்லிக்கிறானா… இல்ல இது ஏதாச்சும் கோட் வேர்டா…?”

“இருக்கலாம்… இந்தக் கேஸைப் பொருத்தவரைக்கும் கொலையான பொண்ணு யாருன்னு கூட நம்மால இன்னும் கண்டு பிடிக்க முடியலை, அதுக்குள்ள இப்ப புதுசா ஒரு தலைவலியும் சேர்ந்திருக்கு…” என்றார் கிருஷ்ணா.

“என்ன தலைவலி…?”

“அந்த பாடி கிடந்த வீட்டுல உள்ள பொண்ணு வர்ஷா இப்ப மிஸ்ஸிங்… அந்தப் பொண்ணோட அப்பா பிரசன்னாகிட்ட விசாரிச்சோம், பட் உபயோகமா எந்தத் தகவலும் இல்லை…”

அவர் சொன்னதை யோசனையுடன் கேட்டவன், “சப்போஸ், இந்தப் பொண்ணோட மிஸ்ஸிங்க்கு அந்த அந்தகன் தான் காரணமோ…?” என்றான்.

“அஜய், கேஸ்ல எந்த மூவிங்கும் இல்லாததால ஐஜி பிரஷர் கொடுத்துட்டே இருக்கார்… இந்தக் கேஸ்ல ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் ஆபீசரா நீங்க வொர்க் பண்ணினா நல்லாருக்கும்னு தோணுது… கிருஷ்ணா உங்களுக்கு எல்லா சப்போர்ட்டும் பண்ணுவார்…”

“ஷ்யூர் சார்… அந்த கேஸ் பைலை நான் பார்க்கலாமா…?” எனவும் கிருஷ்ணா கொண்டு வந்திருந்த பைலை நீட்டினார்.

“ஓகே சார்… நாங்க கிளம்பலாமா…?” அஜயின் கேள்விக்கு சம்மதமாய் தலையாட்டிய கமிஷனர், “ஆல் தி பெஸ்ட் அஜய்…” என்று விடை கொடுத்தார்.

***************************

“சாந்தாக்கா, லஞ்சுக்கு கொஞ்சம் அவியல் செய்திடுங்க, பாலாக்கு ரொம்பப் பிடிக்கும்… பெங்களூரு சாப்பாடு சாப்பிட்டு காஞ்சு போயி வருவார், நல்லா சாப்பிடட்டும்…”

“சரிம்மா, செய்துடறேன்…”

“நீங்க சமையல் முடிஞ்சதும் சொல்லுங்க, அவல் பாயாசம் மட்டும் நான் பண்ணிடறேன்… நான் செய்தா பாலா விரும்பி சாப்பிடுவார்…” கணவன் வரப்போகும் குஷியில் ஆர்டர் போட்டுக் கொண்டிருந்தாள் ஆனந்தி.

“சரி, இப்ப ஜூஸ் கொண்டு வரட்டுமா…?”

“இல்லக்கா, டிபன் சாப்பிட்டது இன்னும் பசிக்கல, லஞ்ச் நல்லா சாப்பிட்டுக்கறேன்…” என மறுத்துவிட, சாந்தா அடுக்களைக்கு சென்றார்.

“காசிண்ணே, டிரெயின் வர்ற நேரத்துல நீங்க எங்காச்சும் போயிடாதீங்க, அவரை அழைச்சிட்டு வர ரெயில்வே ஸ்டேஷன் போகணும்…”

“அடடா, காலைல இருந்து எத்தன வாட்டி சொல்லிட்ட தாயி, நான் பத்திரமா உன் புருஷனைக் கூட்டியாந்திருவேன், கவலைப்படாத… புருஷன் வர்றார்னதும் இந்தப் பொண்ணுக்கு இருப்புக் கொள்ளலியே…” என கிண்டலடித்துச் செல்ல புன்னகைத்துக் கொண்டாள் ஆனந்தி.

“ஹூக்கும், உன் மாமா என்னை எப்படி கிண்டலடிக்கிறார் பாரு, புருஷன் பொண்டாட்டி பாசம் எல்லாம் அவருக்கு எங்க தெரியப் போகுது, லவ்வுன்னா சும்மாவா…” என்றாள் தனது வயிற்றைத் தடவி குழந்தையிடம்.

அவள் சொன்னது புரிந்தது போல் குழந்தை வயிற்றுக்குள் அசைய, “அட, குட்டிக் கண்ணா… உனக்கும் அப்பா வரப் போறாங்கன்னு சந்தோஷமா இருக்கா…?” என்றாள்.

சிறிது நேரம் அறைக்குள் உலாவிக் கொண்டிருக்க, காசி ரெயில்வே ஸ்டேஷன் செல்ல, சாந்தா சமையல் முடிந்து பாயாசம் செய்ய அழைக்கவே அடுக்களைக்கு சென்றாள்.

வாணலியில் தேக்கரண்டி நெய் விட்டு 200 கிராம் அவலை வாட்டி கையால் ஒன்றிரண்டாய் நொறுக்கிக் கொண்டாள். 50 கிராம் பயத்தம்பருப்பை லேசாக வாட்டி குக்கரில் ரெண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு விசில் விட்டு வேக வைத்தாள். பயத்தம்பருப்போடு அவல் போட்டு வெந்ததும் கால் கிலோ சர்க்கரையை சேர்த்து கொதிக்க விட்டு, வாணலியில் நெய் விட்டு முந்திரியை பொன்னிறமாய் வறுத்து சேர்த்தாள். இறக்கி வைத்து ஏலக்காய்த் தூள், கால் லிட்டர் பால் சேர்க்க அவல் பாயாசம் ரெடி.

“வாசனையே சூப்பரா இருக்கு மா…” சாந்தா சொல்ல, “இதை சூடாவும் குடிக்கலாம், பிரிட்ஜில் வச்சும் குடிக்கலாம், ரெண்டு நாளைக்கு கெட்டுப் போகாது சாந்தாக்கா…” என்றாள்.

“ம்ம்… மனசுக்குப் பிடிச்சவங்களுக்கு செய்யும்போது பாயாசம் கொஞ்சம் அதிகமாவே மணக்குது…” சிரிப்புடன் சொன்னார்.

“அக்கா, அவர் வர்ற நேரமாச்சு… எல்லாம் டேபிள்ல எடுத்து வச்சிருங்க, நான் வந்துடறேன்…” சொல்லிவிட்டு அடுக்களைக்கு சென்றவள் அவனுக்குப் பிடித்த சேலையை எடுத்து உடுத்துக் கொண்டு காத்திருந்தாள்.

வாசலில் கார் ஹாரன் கேட்க ஆவலுடன் ஓடி வந்தவளை நோக்கிப் புன்னகையுடன் வந்தான் பாலாஜி.

“ஆனந்தி… எப்படிமா இருக்க, உன்னைப் பார்க்காம ஒரு வாரம் ஒரு வருஷம் போல இருக்கு…” சொன்னவனைக் காதலுடன் நோக்கியவள், “எனக்கும் அப்படி தான் பாலா… உங்களை எப்பப் பார்ப்பமோன்னு நானும் உங்க பிள்ளையும் காத்திட்டு இருந்தோம்…” என்றாள் வயிற்றைத் தடவி.

“என்ன சொல்லறான் உன் பிள்ளை…”

“ப்ச்… என் பிள்ளைன்னு சொல்லாதீங்க, நம்ம பிள்ளைன்னு சொல்லணும்னு சொல்லிருக்கேன்ல…”

“ஹாங், சரி… நம்ம பிள்ளை என்ன சொல்லறான்…”

“அப்பாவை நம்மளைத் தனியா விட்டுட்டு எங்கயும் போக வேண்டாம்னு சொல்லுமான்னு சொல்லறான்…”

“ஹாஹா… அது சரி, அவனை சீக்கிரம் வெளிய வந்து அம்மாவுக்கு காவலா இருக்க சொல்லு, அப்பத்தான் நான் எங்கே வேணும்னாலும் தைரியமா போக முடியும்… ஆனந்தி, செமப் பசி மா… என்ன ஸ்பெஷல் இன்னைக்கு, வாசனை தூக்குது…” கேட்டுக் கொண்டே சட்டையைக் கழற்ற, “நீங்க குளிச்சிட்டு வாங்க, எல்லாம் தயாரா இருக்கு… முதல்ல சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கலாம்…” என்றவள் வெளியே செல்ல அவன் குளியலறைக்குள் நுழைந்தான்.

பிரஷாகி வந்தவன் திருப்தியாய் சாப்பிட்டு ஹாலுக்கு வர, “என்ன தம்பி… பெங்களூர் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்துப் போயிருக்குமே…” என்றான் காசி.

“ம்ம்… ஆமாம் பச்சரிசி சாப்பாடை எவ்ளோ பாடு பட்டாலும் தொண்டையை விட்டு இறங்க மாட்டேங்குது… அப்புறம் என்ன விசேஷம், ஆனந்தியைக் கூட்டிட்டு ஆபீஸ் போனிங்களாமே…”

“ஆமாம் தம்பி… ஆனந்தி தான் போர் அடிக்குதுன்னு ஆபீஸ் போலாம்னு சொல்லுச்சு…”

“அவ சொல்லுவா… நீங்கதான வேண்டாம்னு சொல்லிருக்கணும்… மாசமா இருக்கிற உங்க தங்கச்சியை  அலைய விடலாமா சொல்லுங்க, அப்புறம் என்ன… அண்ணன்னு உங்களை நம்பி என் பொண்டாட்டியை விட்டுட்டுப் போறது…” என்றான் பாலாஜி.

“அது சும்மா கொஞ்ச நேரம் போயிட்டு அப்படியே டாக்டரைப் பார்க்கப் போயிட்டோம் தம்பி… ஆனந்தி சொன்னாக் கேட்டா தானே… கவலைப்படாதீங்க, நான் பத்திரமா பார்த்துக்கறேன்…”

“ம்ம்… சரி, சாப்பிடுங்க… நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறேன்…” சொன்னவன் அறைக்கு செல்ல சிறிது நேரத்தில் ஆனந்தியும் அங்கே வந்தாள்.

“என்ன, காசிண்ணன் கிட்ட ஆபீஸ் போனதுக்கு விசாரணை எல்லாம் பண்ணிட்டு இருந்திங்க…”

“பின்ன, வீட்டுல ரெஸ்ட் எடுக்க சொன்னாக் கேக்காம எதுக்கு ஆபீஸ்க்கு போற, வீண் அலைச்சல் தான… உன் மேல எனக்கு அக்கறை இருக்காதா…?”

“ம்ம்… சரிதான், நீங்களும் இல்ல… போர் அடிச்சுதேன்னு போனேன்… அதனால தான ஒரு ரகசியம் தெரிஞ்சது…”

அவள் சொல்ல மனதுக்குள் அதிர்ந்தான் பாலாஜி.

“எ..என்ன ரகசியம் ஆனந்தி…”

“எனக்குத் தெரியாம என்னென்ன திருட்டு வேலை பண்ணிட்டு இருக்கீங்க, அதெல்லாம் நான் கண்டு பிடிக்க மாட்டேன்னு நினைச்சிங்களா…” என்றாள் சீரியஸாய்.

அவன் இதயம் ஹை டெசிபலில் உள்ளே குதிப்பதை காதுக்குள் உணர்ந்தான் பாலாஜி.

“நீ..நீ எதை சொல்லற ஆனந்தி, நான் என்ன திருட்டு வேலை பண்ணேன்…” என்றான் உதடுகள் தந்தியடிக்க.

“ஏன், அதைப் பண்ணின உங்களுக்குத் தெரியாதா…? தப்புப் பண்ணினா தண்டனை கொடுக்கணும்ல…” சொன்னவள் மேஜை வலிப்பிலிருந்து எதையோ எடுக்க திகிலானான்.

Advertisement