Advertisement

அத்தியாயம் – 6

மதிய உணவு முடிந்து சாய்வு நாற்காலியில் ஒரு புத்தகத்துடன் சாய்ந்திருந்த ஆனந்தி அருகில் இருந்த தொலைபேசி சிணுங்கவே எழுந்து எடுத்தாள்.

“ஹலோ…”

“ஆனந்தி, எப்படி இருக்க…” கணவனின் குரலைக் கேட்டதும் அதுவரை இருந்த சுணக்கம் ஓடிப் போக சிணுங்கினாள்.

“இப்பதான் என் நியாபகம் வந்துச்சா உங்களுக்கு…?”

“என்னமா பண்ணறது, இங்கே ரெண்டு மூணு நாளா விடாம மழை… செல்போன் டவர் எல்லாம் பிராப்ளம், எங்கயும் மொபைல் நெட்வொர்க் கிடைக்கலை… இப்ப கூட நான் தங்கி இருக்கிற லாட்ஜ் லான்ட்லைன்ல இருந்து தான் பேசறேன்…”

“ஓ… நீங்க ரெண்டு நாளா போனே பண்ணலயா, அதான் பயமா இருந்தது, அங்க வேற பிராப்ளம் எதுவுமில்லையே…”

“இல்லமா, நான் நல்லாதான் இருக்கேன், நீ எப்படி இருக்க… நேரத்துக்கு சாப்பிடறியா, டாக்டர்கிட்ட செக்கப் போனியா…?” வரிசையாய் அக்கறையோடு விசாரிக்க புன்னகைத்தாள்.

“போச்சு டா, விசாரணை தொடங்கியாச்சா… இங்க எல்லாம் சரியாப் போகுது, அங்கே எப்படின்னு சொல்லுங்க…”

“என்ன சொல்லறது, பிசினஸ் விஷயமா இங்க வந்துட்டு ஒரு நாள் மட்டும் தான் கிளையன்ட்சை மீட் பண்ண முடிஞ்சது… அப்புறம் ரெண்டு நாளும் ரூம்லயே தான்… அதான் மனசுக்கு ரொம்ப கஷ்டமாருக்கு…” ஒரு கையில் ரிசீவரையும் மறு கையில் தேன்மொழியையும் தடவிக் கொண்டிருந்த பாலாஜி உருக்கமாய் பேசவும் தேன்மொழி கிண்டலாய் சிரிக்க, கண்ணடித்த பாலாஜி அவள் கன்னத்தை கிள்ளிக் கொண்டே அருகில் இழுத்து அணைத்தான்.

“ஸ்ஸ்…” வலியில் செல்லமாய் முனங்கியவளின் உதட்டில் கை வைத்து அழுத்த அவள் விரலைக் கடித்து வைத்தாள்.

“என்னங்க, ஏதோ சத்தம் கேக்குது…”

“அது… இப்பவும் மழை பெய்துட்டு இருக்கு, ஜன்னல் வழியா சத்தம் கேக்குது ஆனந்தி…”

“ஓ… நீங்க இல்லாம இங்க எப்படியோ இருக்கு, சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வாங்க…”

“எனக்கு மட்டும் உன்னை விட்டு இருக்க ஆசையா என்ன, இன்னும் மூணு நாள், பல்லைக் கடிச்சுட்டு செய்ய வேண்டிய வேலையை முடிச்சிட்டு ஓடி வந்துடறேன்…”

“ப்ச்… ஓடி எல்லாம் வர வேண்டாம், ரொம்ப லேட் ஆகும், டிரெயின்லயே வாங்க பாலா…”

“ஹாஹா… பார்றா, மேடம் காமெடி எல்லாம் பண்ணறாங்க…”

“சரி, மழை பெய்தாலும் பரவால்லன்னு வெளிய கிளம்பிப் போயிடாதீங்க… முடிஞ்ச வரைக்கும் ரூம்ல இருந்து போன்ல பேசியே வேலையை முடிச்சிடுங்க…”

“சரிம்மா, சரிம்மா… எனக்கு தான் மழை சேராதே, எனக்காக இல்லேன்னாலும் நீ கவலைப்படுவேன்னு யோசிச்சே நான் வெளிய போகலை…”

“சரிங்க, முடிஞ்சா தினம் ஒரு போனாச்சும் பண்ணுங்க…”

“சரி, நீ கவனமா இரு… நேரத்துக்கு நல்லா சாப்பிடு, மறக்காம மாத்திரை போடு… ஓகே டியர், டேக் கேர்…”

“ம்ம்… நானும், நம்ம பையனும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணறோம் பாலா…” என்றாள் கொஞ்சலாக.

“மிஸ் யூ டூ ஆனந்தி… பையன்னு நீ முடிவே பண்ணிட்டியா… ஓகே, நேர்ல பேசுவோம்… வச்சிடறேன்…” சொன்னவன் அழைப்பைத் துண்டிக்க கிண்டலாய் சிரித்தாள் தேன்மொழி.

“ஹூம், அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு எல்லாம் கேள்விப் பட்டிருக்கேன், இப்பதான் நேர்ல பார்க்கிறேன்…” என்றாள்.

“என்ன பண்ணறது ஹனி… நாய் வேஷம் போட்டா குரைச்சு தான ஆகணும், நான் புருஷன் வேஷம் போட்டிருக்கனே…”

“ஹூம், இந்த வேஷம் போடறது எல்லாம் உங்க பொண்டாட்டி கிட்ட மட்டும் தானே, என்கிட்ட இல்லையே…”

“சேச்சே… அவகிட்ட பணத்துக்காக நடிக்க வேண்டிருக்கு, உன்கிட்ட அப்படியா… நீ என் மனசைக் கொள்ளை கொண்ட ஸ்வீட் ஹனியாச்சே…” சொன்னவன் அவள் கழுத்தில் முத்தமிட, “திகட்டாம இருந்தா சரி…” என்றாள் அவள்.

“அப்படினா, உனக்கு என் மேல டவுட்டா…?”

“டவுட்னு இல்லை, காரியம் முடிஞ்சதும் கை கழுவி விட்டிருவிங்களோன்னு சின்ன பயம்…”

“சேச்சே… அவ என் அபீசியல் பொண்டாட்டின்னா நீ என் அன் அபீசியல் பொண்டாட்டி ஹனி…”

“இதெல்லாம் கேக்கறதுக்கு நல்லா தான் இருக்கு… எவ்ளோ நாள் தான் நான் என் வீட்டுல கல்யாணம் வேண்டாம்னு தள்ளிப் போட முடியும்… எதாச்சும் முடிவு வேண்டாமா…?”

“ஹூம்… கொஞ்சம் வெயிட் பண்ணு ஹனி, இப்பதான் ஆபீஸ் பொறுப்பெல்லாம் பார்த்துக்கத் தொடங்கிருக்கேன்… அப்படியே ஆனந்தி பேருல உள்ள சொத்தெல்லாம் மெதுவா என் பேருக்கு மாத்தனும்… அதெல்லாம் சட்டுன்னு முடியாது, பொறுமையா தான் பண்ணனும்…”

“ம்ம்… அதுக்கப்புறம்…”

“அதுக்கப்புறம் என்ன, அவளைப் பரலோகம் அனுப்பிட்டு நாம சொர்கலோகதுக்கு திறப்பு விழா நடத்த வேண்டியது தான்…”

“அதுக்கு…” என்று ஏதோ சொல்ல வந்தவளின் இதழைத் தனது இதழாலேயே பிளாக் செய்து பேசாமல் செய்தவன் வந்த வேலையை கவனிக்கத் தொடங்கினான்.

அங்கே ஆனந்தியோ கணவனுடன் பேசிய சந்தோஷத்தில் இருந்தாள்.

“ச்சே… வனிதா சொன்னதைப் பத்தி அவர்கிட்ட கேக்கணும்னு இருந்தனே, கேட்டிருந்தா ரொம்ப சங்கடப் பட்டிருப்பார்… என் கம்பெனியா இருந்தா, அவர் உரிமையோட பணம் எடுக்கக் கூடாதா என்ன, அவர் வேற, நான் வேறயா… தேவைக்கு தானே செலவு பண்ணறார், பண்ணிட்டுப் போகட்டும்…”

“சரி, கம்பெனி கேஷ் எடுக்கிறது ஓகே… அந்த ரேஸ், கிளப்ல சீட்டு விளையாடறது பத்தி கேக்க வேண்டாமா…?” மூளை கேள்வி கேட்க,

“அவர் நல்லபடியா வேலையை முடிச்சிட்டு வரட்டும், நேர்ல சொல்லிக்கலாம்… அன்பா இதெல்லாம் பண்ணாதீங்கன்னு சொன்னா, கேட்டுக்க மாட்டாரா என்ன… இனி குழந்தையும் வந்துட்டா அப்புறம் அதெல்லாம் யோசிக்கக் கூட அவருக்கு டைம் கிடைக்காது, வீணா எதுக்கு சங்கடப்படுத்தணும்…” என யோசிக்கவும் தான் மனம் லேசானது.

பிளேட்டில் நறுக்கிய மாம்பழ துண்டுகளுடன் வந்த காசி, “என்ன தாயி, தம்பி போன் பண்ணிடுச்சா… மூஞ்சில லைட்டு போட்ட போல பளிச்சின்னு இருக்கு…” கிண்டலாய் கேட்க புன்னகைத்தவள் தலையாட்டினாள்.

“ஆமா காசிண்ணே, கால் பண்ணார்… அங்க மழையாம்…”

“ம்ம்… நான்தான் சொன்னன்ல, தம்பிக்கு கூப்பிட முடியாம இருக்கும்னு… இந்தா தாயி, உனக்குப் பிடிக்கும்னு மார்க்கெட்ல மல்கோவா மாம்பழம் வாங்கிட்டு வந்தேன்…”

“ம்ம்…” என்றவள் ஆவலுடன் அதை எடுத்து ருசிக்கத் தொடங்கினாள்.

“ம்ம்… சூப்பர் டேஸ்ட்டா இருக்கு, நீயும் சாப்பிடுண்ணே..”

“இல்ல தாயி, நீ சாப்பிடு… நான் அப்புறம் சாப்பிட்டுக்கறேன்…” சொன்ன காசி வெளியே செல்ல கைக்கும், வாய்க்கும், கண்ணுக்கும் வேலை கொடுத்தபடி புக்கை வாசித்துக் கொண்டே சாப்பிடத் தொடங்கினாள் ஆனந்தி. மல்கோவா மாம்பழத்தின் மணமும், இனிப்பும் மனதிலும் பரவி சுகமாய் நிறைந்தது.

****************

“சார், மிஸ்ஸிங் லிஸ்ட்ல இருபது டு முப்பது வயசுல இருக்கிற இளம் பெண்களை வடிகட்டி கிடைச்ச லிஸ்ட்ல பதிமூணு பேர் போன வாரத்துல காணாமப் போயிருக்காங்க சார்…” சொன்ன கோகுல் லிஸ்ட்டை கிருஷ்ணாவிடம் நீட்ட யோசனையுடன் வாங்கிக் கொண்டார்.

“ம்ம்… அந்த பதிமூணு பேரோட அப்டேட் என்ன…?”

“இதுல மூணு பேர் தவிர மத்தவங்க எல்லாரைப் பத்தின விவரமும் கிடைச்சிருச்சு சார்…”

“யார் அந்த மூணு பேர்…?”

“புவனா, செங்கல்பட்டு ஆசுபத்திரில நர்ஸா வொர்க் பண்ணற பொண்ணு, வயசு இருபத்தி ஏழு… காணாமப் போயி அஞ்சு நாள் ஆச்சு, எந்த விவரமும் இல்லை சார்…” சொன்னவன் அந்தப் பெண்ணின் சுமாரான போட்டோவைக் காட்டினான்.

பார்த்துவிட்டு வைத்தவர், “ஓகே, நெக்ஸ்ட்…” எனவும்,

“நெக்ஸ்ட் சின்னத்திரை சீரியல்ல சின்ன சின்ன ரோல் பண்ணுற சித்ரா சார்… வீடு அயனாவரம்…” சுமாரான அழகை சூப்பர் அழகாய் மாற்றும் முயற்சியில் அதிகப்படியான மேக்கப்புடன் உதட்டில் அழுத்தமான லிப்ஸ்டிக் தீற்றலோடு புகைப்படத்தில் தெரிந்தாள் சித்ரா.

பார்த்துக் கொண்டே “சித்ராக்கு வயசு…?” என்றார்.

“வயசு 25, எப்படியாச்சும் சினி பீல்டுல கால் பதிக்கணும்னு ரொம்ப ஆசையா டிரை பண்ணிட்டு இருந்த பொண்ணு சார்…”

“விசாரணைல விவரம் எதுவும் கிடைக்கலையா…”

“அயனாவரம் போலீஸ் ஸ்டேஷன்ல தீவிரமா விசாரிச்சிட்டு இருக்காங்க, இன்னும் சரியான டீடைல் கிடைக்கல சார்…”

“ஓகே, மூணாவது…” சொன்ன கிருஷ்ணாவிடம் போட்டோவை நீட்டிய கோகுல்,

“இந்தப் பொண்ணு பேரு ராஜமீனா சார்… எக்ஸ் MLA பரந்தாமனோட ஒரே பொண்ணு, இப்பதான் டிகிரி முடிச்சிருக்கு, வீட்டுல அமெரிக்க மாப்பிள்ளையைப் பேசி முடிச்சிருக்காங்க… பொண்ணு பார்க்க வர்றதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி காணாமப் போயிருக்கு… எக்ஸ் MLA பரந்தாமன், பொண்ணு காணாமப் போன கவலைல ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிருக்கார்…”

“ஹோ…” என்றவர் பார்வையைப் புகைப்படத்தில் பதிக்க, எங்கோ பார்த்தது போலத் தோன்றிய முகத்தை  நினைவடுக்கில் தேடிப் பார்க்க விடை கிடைக்கவில்லை. போட்டோவில் திருத்தமான அழகோடு புன்னகைத்துக் கொண்டிருந்தாள் ராஜமீனா.

“இந்தப் பொண்ணை எங்கயோ பார்த்த போலருக்கு…” சொன்னவர், “இந்தக் கேஸ் இன்வெஸ்டிகேசன் எந்த லெவல்ல இருக்கு…?” என்றார்.

“இந்த கேஸ்ல நமக்கு மேலிடத்தில் இருந்து கொஞ்சம் பிரஷர் ஜாஸ்தியா இருந்தாலும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை சார்…”

“பொண்ணு எப்படிக் காணாமப் போச்சு… அந்த பொண்ணுக்கு வீட்டுல பார்த்த மாப்பிள்ளை பிடிக்கலியா, வேற ஏதாச்சும் லவ் அபர்ஸ் இருக்கா…?”

“விசாரிச்ச வரைக்கும் அப்படி எதுவும் இல்லை சார்… அப்பா, அம்மா பேச்சை அனுசரிச்சு நடக்கிற பொண்ணு, மேரேஜ் பிக்ஸ் ஆனதில் சந்தோஷமா தான் இருந்திருக்கு… காணாமப் போன அன்னைக்கு லைப்ரரில புக் எடுத்திட்டு வரேன்னு தனியா ஸ்கூட்டில போயிருக்கு, திரும்ப வீட்டுக்கு வரலை…”

“ம்ம்ம்… இந்தப் பொண்ணோட கேஸ் பைலை மேஜைல வைங்க, புல்லாப் படிக்கணும்…”

“ஓகே சார்…” என்ற கோகுல் மேஜையில் வைத்தான்.

“அந்த பிளாக் பெயின்ட் பாடி கிடந்த பிரசன்னா வீட்டைச் சுத்தி எந்த வீட்டுலயாச்சும் CCTV இருக்கான்னு விசாரிக்க சொல்லி இருந்தனே…”

“அது மிடில் கிளாஸ் பாமிலிசோட ரெசிடென்ஷியல் ஏரியா சார், ஒரே ஒரு வீட்டுல மட்டும் தான் CCTV இருந்துச்சு, அதுவும் இப்ப கம்ப்ளெயின்ட் ஆயிருக்கு…”

“ஓ… காட், இந்தக் கேஸ்ல எந்தப் பக்கம் மூவ் பண்ணறதுன்னே தெரியலியே, எல்லாப் பக்கமும் கேட் போடுது… சரி, பாடி கிடந்த வீட்டோட ஓனர் பிரசன்னா ஆள் எப்படின்னு விசாரிச்சீங்களா…?”

“எஸ் சார், ரொம்ப நல்ல டைப்… தானுண்டு தன் குடும்பம் உண்டுன்னு இருக்கிறவர், பாமிலியோட ரொம்ப அட்டாச்சுடு, அவர்கிட்ட எந்தத் தப்பும் இருக்கிற போலத் தெரியல…”

“அவர்க்கு எதாச்சும் இல்லீகல் கான்டாக்ட்ஸ்…?”

“நோ சார், ஆபீஸ் விட்டா வீடுங்கற டைப்… அவருக்குன்னு குளோஸ் பிரண்ட்ஸ் கூடக் கிடையாது…”

“அக்கம் பக்கத்துல உள்ள ஆளுங்களோட இவங்க டெர்ம்ஸ் எப்படி…?”

“எல்லாருகிட்டயும் நல்லாதான் பழகிருக்காங்க… யாரும் அந்த குடும்பத்தைப் பத்தி குத்தம் சொல்லலை…”

“கொலையான பொண்ணை அவங்களுக்கு அடையாளம் தெரியலைன்னு சொல்லிட்டாங்க, அப்படி இருக்கிற பட்சத்தில் அவங்க வீட்டு வாசல்ல எதுக்கு கொலையாளி பாடியைக் கொண்டு வந்து போடணும்… அந்தக் கொலைக்கும் இந்த வீட்டுக்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும்…?” யோசனையாய் தலையை சொறிந்து கொண்டார் கிருஷ்ணா.

அப்போது அலைபேசி சிணுங்கி கமிஷனரின் எண்ணைக் காட்ட அலர்ட் ஆகி செல்போனை காதுக்குக் கொடுத்தார்.

“குட் மார்னிங் சார்…”

“மார்னிங் கிருஷ்ணா… அந்த ப்ளாக் பெயின்ட் கேஸ்ல எதுவும் இம்ப்ரூவ்மென்ட் இருக்கா… கொலையான பொண்ணு யாருன்னு ஏதாச்சும் டீடைல்ஸ் கிடைச்சுதா…?”

“இன்னும் இல்ல சார், அதைப் பத்தி தான் பேசிட்டு இருந்தோம்…”

“கிருஷ்ணா, அந்தப் பெயின்ட் பொண்ணோட பாடி கிடைச்சு இன்னையோட நாலு நாள் ஆச்சு… இன்னும் யாருன்னே கண்டு பிடிக்க முடியல… பிரஸ் பீப்பிள்ஸ் வேற போலீசால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அக்ஞாத கறுப்பழகின்னு கொட்டை எழுத்துல நியூஸ் போட்டு நாம வேணும்னே அந்தப் பொண்ணு யாருன்னு கண்டு பிடிக்க முயற்சி பண்ணாம இருக்கிற போல கிரியேட் பண்ணிட்டு இருக்காங்க… DIG வேற கால் பண்ணி விசாரிக்கிறார், சீக்கிரம் யாருன்னு கண்டு பிடிக்கப் பாருங்க…”

“எஸ் சார், நியூஸ்ல போட்டோ வந்ததும் ஒருவிதத்தில் நல்லது தான் சார், யாராச்சும் அந்தப் பொண்ணை அடையாளம் தெரிஞ்சு நமக்கு இன்பார்ம் பண்ண வாய்ப்பிருக்கு….”

“ம்ம்… ஓகே, எனக்கு இன்னும் ரெண்டு நாளைக்குள்ள அந்தப் பொண்ணைப் பத்தின விவரம் தெரியணும்…”

“எஸ் சார், டிரை பண்ணறேன் சார்…”

“டிரை பண்ணாப் போதாது கிருஷ்ணா, சரியான விவரம் கிடைச்சாகணும்…”

“ஓகே சார்…” என்றதும் கமிஷனர் ஜெயராம் அழைப்பைத் துண்டிக்க நீண்ட பெருமூச்சுடன் செல்போனை வைத்தார்.

“என்ன சார், கமிஷனர் காய்ச்செடுக்கிறாரா…?’

“ஐஜி அவரைக் காய்ச்சிருக்கார், அதான் மனுஷன் என்கிட்ட புலம்பித் தள்ளுறார்…”

“இந்த பிரஸ் பீப்பிள் சிலநேரம் நமக்கு ஓவர் டென்ஷன் கொடுத்துடறாங்க சார்…”

“கோகுல், அந்த கறுப்புப் பொண்ணைப் பத்தி நியூஸ் வந்த பேப்பர் எல்லாத்தையும் எடுத்திட்டு வாங்க…” சொன்னவர் நாற்காலியில் சாய்ந்து அமர கோகுல் நகர்ந்தான்.

பேப்பரில் கண்ணைப் பதித்திருந்த கிருஷ்ணா ஸ்டேஷன் தொலைபேசி உயிர் பெற்றுக் கதறவும் எடுத்துக் காதுக்குக் கொடுத்தார்.

“இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா ஸ்பீக்கிங்…”

எதிர்ப்புறத்தில் பதட்டமாய் ஒலித்த குரல் சொன்ன செய்தி அவருக்கு அதிர்ச்சியைக் கொடுக்க யோசனையுடன் நெற்றியை சுருக்கினார்.

“எ..என்ன பிரசன்னா சொல்லறீங்க, வர்ஷாவைக் காணமா…?”

Advertisement