Advertisement

அத்தியாயம் – 5

செங்காவி நிறத்தில் கம்பீரமாய் நின்றிருந்த கமிஷனர் அலுவலகம் மாலை நான்கு மணிக்கும் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.

கமிஷனர் ஜெயராம் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருக்க அவர் முன்பு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா, பாரன்சிக் ஆபீசர் பிரதாப், பாரன்சிக் இன்வெஸ்டிகேட்டர் ஜேம்ஸ் பதட்டமாய் அமர்ந்திருந்தனர். இறுக்கமான சூழ்நிலையைக் கலைத்து ஜேம்ஸ் தெளிவான குரலில் பேசத் தொடங்கினார்.

“இட் வாஸ் வெரி ஸ்கேரி… என்னோட சர்வீஸ்ல இப்படி ஒரு மோசமான மர்டரை நான் பார்த்ததில்லை… பாலித்தீன் மூட்டைக்குள் இருந்த பெண்ணோட உடலை போஸ்ட்மார்ட்டம் பண்ணப் பார்த்தபோது ஷாக் ஆயிட்டோம், அதுல ஒரு பிரச்சனை இருக்கு…”

“என்ன பிரச்சனை ஜேம்ஸ்…?”

“உடம்பு முழுவதும் ஒரு துளி கூட விடாம பிளாக் பெயின்ட் பண்ணப்பட்டிருக்கு… அநேகமா அந்தப் பொண்ணுக்கு பாய்சன் கொடுத்து மயக்கத்துல இருக்கும்போது பெயின்ட் பண்ணி கொன்னிருக்கலாம்… உடம்புல உள்ள பெயின்டை தின்னர் மூலமா ரிமூவ் பண்ணினா ஸ்கின்னும் சேர்ந்து வரும், இப்ப போஸ்ட்மார்ட்டம் பண்ணினா அந்தப் பெண்ணோட அடையாளங்கள் மிஸ் ஆகலாம், ஐ மீன் முக அமைப்பு, பாடி ஷேப் மாறிடும்…” அவர் சொன்னதைக் கேட்ட கமிஷனர் யோசனையுடன் தாடையை சொறிந்து கொண்டார்.

“பாடில ரேப் அட்டம்ப்ட் சிம்ப்டம்ஸ் எதுவும் இருக்கா…?”

“நோ சார், அப்படி எதுவும் அடையாளம் இல்லை… ஆனா, அது ஒரு இளம்பெண் தான்னு உடல் அமைப்பு சொல்லுது…” என்றான் ஜேம்ஸ்.

“ம்ம்… உடம்புல எந்தக் காயமும் இல்லாம பாய்சன் மூலமா செத்திருந்தா பாலித்தீன் கவர்ல பிளட் எப்படி வந்துச்சு…?”

“அதை டெஸ்ட் பண்ணிப் பார்த்தப்ப தான் கொஞ்சம் வினோதமா இருந்துச்சு சார்…”

“என்ன சொல்லறீங்க ஜேம்ஸ்..? என்ன வினோதம்…?”

“அது மனுஷன் பிளட் கிடையாது, ஆட்டு ரத்தத்தை பாடி மேல ஊத்தி கவர்ல போட்டிருக்கான்…”

“வ்வாட், ஆட்டு ரத்தமா… அது எதுக்கு…?”

“அதான் எனக்கும் புரியலை சார்… பாடியை அப்படியே போடாம எதுக்கு பிளட் ஊத்திருக்கான்னு தெரியலை…”

“கொலை நடந்து எத்தனை நாள் ஆயிருக்கலாம்னு கெஸ் பண்ண முடியுமா ஜேம்ஸ்…?”

“பாடி இன்னும் அவ்ளோவா ஸ்மெல் வரத் தொடங்கலை, பிளட்டோட ஸ்மெல்தான் வந்திருக்கு, மே பி ஒரு நாள் முடிஞ்சு இருக்கலாம் சார்…”

“இப்ப என்ன பண்ணலாம் பிரதாப்…?”

கமிஷனர் குழப்பமாய் பிரதாப்பை ஏறிட கிருஷ்ணாவும் அவரைப் பார்த்தார்.

“சார், பாடியை இப்ப போஸ்ட்மார்ட்டம் பண்ணறது ரிஸ்க்… பண்ணினா உருவத்தை வச்சு ஆள் யாருன்னு ஐடெண்டிபை பண்ண முடியாது பிகாஸ் ஆப் பெயின்ட்… ஆள் யாருன்னு தெரியற வரைக்கும் பாடியை போஸ்ட்மார்ட்டம் பண்ணாம சரியான உறைநிலையில் ப்ரீஸ் பண்ணி பிரசர்வ் பண்ணனும்…” என்றான் பிரதாப்.

“நீங்க என்ன நினைக்கறிங்க கிருஷ்ணா…?”

“பிரதாப் சொல்லற ஆப்ஷன் சரின்னு தோணுது சார், முதல்ல கொலையான அந்தப் பொண்ணு யாருன்னு கண்டு பிடிக்கணும், அப்புறம் எப்படி மரணம்னு பார்க்கலாம்…”

“ம்ம்… ஓகே, நீங்க எல்லா ஸ்டேஷனுக்கும் அந்தப் பொண்ணு போட்டோவை மெயில் பண்ணிடுங்க… மிஸ்ஸிங் கேஸ் எல்லாம் தரோவா செக் பண்ண சொல்லுங்க… அப்புறம் அந்த லெட்டர்ல எழுதி இருந்த வாசகத்தை வச்சு எதுவும் கண்டு பிடிக்க முடிஞ்சதா…?”

“இல்ல சார்… ஆனா இந்த கறுப்புப் பெயின்ட், கறுப்பு ரோஜாவுக்கும், நேசத்தின் நிழல் கறுப்புங்கற வார்த்தைக்கும் ஏதோ லிங்க் இருக்கும்னு நினைக்கறேன்… இங்க்லீஷ்ல எழுதிருக்கிற வார்த்தைகளுக்கு அர்த்தம் சரியா யோசிக்க முடியலை சார்…”

“ம்ம்… ஓகே, நீங்க கிளம்புங்க…” கமிஷனர் சொல்லவும் இருவரும் எழுந்து சல்யூட் வைத்து தளர்ந்தனர்.

வெளியே வந்ததும் “பிரதாப்… இந்த மரணத்தைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க…?” என்றார் கிருஷ்ணா.

“எனக்கு இந்த கேஸ் கொஞ்சம் வினோதமா தான் தோணுது சார்… கறுப்பு பெயின்ட், பாடி மேல கறுப்பு ரோஜா, நேசத்தின் நிழல் கறுப்புன்னு லெட்டர்… கொலைகாரன் என்ன தான் சொல்ல வர்றான்னு புரியலை… ஆனா மனசுக்குள்ள சின்னதா ஒரு குரல் கேட்டுட்டே இருக்கு…”

“என்ன கேக்குது பிரதாப்…?”

“நேசத்தின் நிழல் கறுப்பு இந்த ஒரு கொலையோட நிற்கப் போறதில்லைன்னு…” பிரதாப் சொல்லவும் கிருஷ்ணாவின் முகம் யோசனைக்குப் போனது.

“ம்ம்… எனக்கும் மனசுல அப்படிதான் தோணிட்டு இருக்கு பிரதாப்… இது ஒரு அவசரக் கொலை போலத் தெரியலை… பக்கா பிளானோட அழகா கொலை பண்ணி, ஒவ்வொரு விஷயத்தையும் ரசிச்சு பண்ணிருக்கான்…” சொல்லிக் கொண்டே பிரதாப்பிடம் விடைபெற்றார்.

ஸ்டேஷனுக்கு வந்தவர் அந்த கறுப்பு பெயின்ட் பெண்ணை விதவிதமான கோணங்களில் எடுத்திருந்த போட்டோக்களைப் பார்த்தார். அட்டைக்கரி நிறத்தில் கிரேக்க சிலை போல் எடுப்பான கண், மூக்குடன் இருந்தது முகம். நிச்சயம் அப்பெண் அழகியாய்தான் இருக்க வேண்டும்.

ரைட்டரை அழைத்து எல்லா ஸ்டேஷனுக்கும் அதை அனுப்ப சொல்லிவிட்டு கோகுல் பிரசன்னாவிடம் எழுதி வாங்கியிருந்த ரிப்போர்ட்டை கவனமாய் படித்துப் பார்த்தார்.

“சார்…” கான்ஸ்டபிள் ராகவனின் அழைப்பில் திரும்பினார்.

“சொல்லுங்க ராகவன்…”

“கடந்த ஒரு வாரமா காணாமப் போன பொண்ணுங்களோட லிஸ்ட் எல்லா ஸ்டேஷன்ல இருந்தும் அனுப்பிட்டாங்க சார்…” சொன்னவர் ஒரு பைலை மேஜை மீது வைத்தார்.

அதை எடுத்துப் புரட்டிப் பார்த்தார் கிருஷ்ணா.

பலவித ஏஜ் குரூப்பிலும் காணாமல் போன பெண்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும் அதில் இருந்தது. மேலோட்டமாய் பார்த்துக் கொண்டே வந்தவர் அறுபது வயதுப் பாட்டி ஒருவர் காணாமல் போனதைக் கண்டதும் நிறுத்தினார்.

“இந்தப் பாட்டிம்மா எல்லாம் எதுக்கு காணாமப் போகணும், ஒருவேளை வீட்டுல பிள்ளைங்க தொல்லை தாங்காம அவங்களே வீட்டை விட்டுப் போயிருப்பாங்களோ…” யோசித்துக் கொண்டே மேலோட்டமாய் அதில் இருந்த எல்லாருடைய விவரங்களையும் பார்த்தவர் மேஜை மீது வைத்தார்.

“ராகவன், இதுல இருபதுல இருந்து முப்பது வயசுக்குள்ள எத்தனை பெண்கள் இருக்காங்கன்னு பாருங்க, அந்த கொலையான பொண்ணோட பாடி ஹைட்டுக்கு மேட்ச் ஆகற போல எத்தனை பேரு இருக்காங்கன்னு பில்டர் பண்ணுங்க…”

“எஸ் சார்…” சொன்னவர் அந்த பைலை எடுத்துக் கொண்டு தனது மேஜைக்கு நகர்ந்தார்.

பாரன்சிக் அலுவலகம் சென்றிருந்த சப் இன்ஸ்பெக்டர் கோகுல் அவர் முன்னில் வந்து சல்யூட் அடித்து தளர்ந்தார்.

“என்ன கோகுல்… அந்த கறுப்பு ரோஜாவிலும், லெட்டர்லயும் ஏதாவது கைரேகை கிடைச்சுதாமா…”

“அதுல கை ரேகை எதுவும் கிடைக்கலை சார், ஆனா இன்னொரு விஷயம் கண்டு பிடிக்க முடிஞ்சுது சார்…” என்றதும் நிமிர்ந்து அமர்ந்தார்.

“அந்த கறுப்பு ரோஜாவோட ஆயுள் முடிஞ்சு ரெண்டு நாள் ஆகப் போகுதுன்னு சொன்னாங்க சார்…”

“ஓ… அப்படின்னா அந்தப் பொண்ணோட பாடிக்கு ஒன் ஆர் டூ டேஸ் பழக்கம் இருக்கலாம்னு சொல்லுங்க…”

“மே பி… இருக்கலாம் சார்…”

“ம்ம்… அது எந்த மாதிரி பெயின்ட்னு தெரிஞ்சதா…?”

“ரோஜாக்கு அடிச்ச பெயின்ட் வச்சு செக் பண்ணதுல அது சாதாரண ஆசியன் பெயின்ட் தான்னு சொல்லிருக்காங்க, அந்தப் பொண்ணுக்கும் அதைத்தான் அடிச்சிருக்கான் சார்…”

“ம்ம்… பொண்ணோட பாடில ஒரு சின்ன கேப் விடாம பெயின்ட் அடிச்சிருக்கான்… அந்தப் பொண்ணு மீது ரொம்ப வன்மத்தோட பண்ண போலருக்கு…” என்றார் கிருஷ்ணா.

********************************

அலுவலகத்துக்கு வந்த ஆனந்தி அக்கவுன்ட்ஸ் பில்களை ஒவ்வொன்றாய் செக் பண்ணிக் கொண்டிருக்க முன்னில் நின்று கொண்டிருந்தாள் வனிதா.

“மேடம், இதுல புதுசா ஒரு மொபைல் வாங்கின பில்லும் இருக்கு…” சொன்னவள் அதைத் தனியே எடுத்து நீட்டினாள்.

“பாலாகிட்ட ஆல்ரெடி மொபைல் இருக்கே… அப்புறம் எதுக்கு இன்னொரு மொபைல், அப்படியே இருந்தாலும் ரெண்டு மொபைல் அவர் கையில பார்த்ததில்லையே…” யோசனையுடன் அதைப் பார்த்தாள்.

பேசிக் மாடல் நோகியா ஹான்ட்செட் பில்லாகி இருந்தது.

“சரி, நான் பார்த்துக்கறேன்… அடுத்த முறை என்னைக் கேட்காம பாலா அக்கவுன்ட்ல பணம் கொடுக்க வேண்டாம்…”

“சரி மேடம்… ஆனா, சார் கேட்டு நான் கொடுக்கலைன்னா கோச்சுப்பார்…”

“அவர்கிட்ட நான் சொல்லிடறேன், யூ டோன்ட் வொர்ரி…”

“ஓகே மேடம்…”

“சரி, நீ உன் சீட்டுக்குப் போ… மானேஜர் ரகுநாத் பாங்க்ல இருந்து வந்திருந்தா என் காபின்க்கு வர சொல்லு…”

“ஓகே மேடம்…” என்ற வனிதா பைலுடன் நகர்ந்தாள்.

சில நிமிடத்தில் ரகுநாத் சின்னப் புன்னகையுடன் அவள் முன்னே வந்து, “குட் மார்னிங் மேடம்…” என்றார்.

“பாங்க் வொர்க் முடிஞ்சுதா மிஸ்டர் ரகுநாத்…”

“எஸ் மேடம், இப்பதான் வந்தேன்…”

“நம்ம கரன்ட் அக்கவுன்ட்ல செக் சைனிங் அத்தாரிட்டில பாலா பேரையும் சேர்க்கணும்னு சொல்லி இருந்தேன்ல…”

“எஸ் மேடம், அதுக்கான பார்மாலிட்டீஸ்க்கு வேண்டி பாரம் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன்…”

“ம்ம்… இப்போதைக்கு அதுல எந்த சேஞ்சசும் வேண்டாம்… சைனிங் அத்தாரிட்டி என் பேருல மட்டுமே இருக்கட்டும்…”

“ஓகே, மேடம்… எதுவும் பிராப்ளமா…?”

“பிராப்ளம்னு சொல்ல முடியாது, இப்ப வேண்டாம்னு தோணுச்சு… செக்ல சைன் வேணும்னா வீட்டுல வந்து வாங்கிக்கங்க, பாலா கிட்ட கொடுத்து விட்டாலும் ஓகே…”

“நல்லது மேடம்… அன்னைக்கு நான் உங்ககிட்ட சொல்ல வந்ததும் இந்த விஷயத்தை தான்…”

“ஓ…” என்றவள் யோசனையுடன் பார்த்தாள்.

“என்ன ரகுநாத் ஸார், பாலாகிட்ட எதுவும் தப்பா தெரியுதா…?”

“அச்சோ… அப்படி சொல்ல வரலை மேடம், அக்கவுன்ட்ஸ் பொறுத்த வரைக்கும் உங்க கைல கன்ட்ரோல் இருக்கிறது நல்லதுன்னு தோணுச்சு… பாலா சார் கொஞ்சம் ப்ரீயா செலவு பண்ணுவார், அதுக்காக சொன்னேன்…” என்றார் பட்டும் படாமல் அவனைக் குற்றமும் சொல்லாமல்.

“ம்ம்… புரியுது, நான் பார்த்துக்கறேன்… பாலா உங்களுக்கு கால் பண்ணாரா…?”

“அங்கே ரீச் ஆனதும் கால் பண்ணார் மேடம், அப்புறம் இந்த மூணு நாளா பண்ணலை…”

“ஹூம், நான் கால் பண்ணாலும் ரீச் ஆக மாட்டேங்குது…”

“பெங்களூர்ல நல்ல மழைன்னு நியூஸ்ல பார்த்தேன்… ஒரு சமயம் டவர் பிராப்ளமா கூட இருக்கலாம் மேடம்… நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க…”

“ஹூம்… நானும் அப்படி தான் நினைக்கறேன்… ஓகே, எனக்கு வேற எதுவும் வொர்க் இருக்கா… கிளம்பவா…”

“நீங்க வீட்டுக்குப் போயி ரெஸ்ட் எடுங்க மேடம், ஏதாச்சும் தேவை இருந்தா கால் பண்ணறேன்…”

“ஓகே, எனக்கு இன்னைக்கு டாக்டர் செக்கப் இருக்கு… அதை முடிச்சிட்டு தான் வீட்டுக்குப் போகணும், கிளம்பறேன்…”

“ஓகே மேடம்…” என்றதும் தனது பாகை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் ஆனந்தி. வாசலில் காசி காருடன் தயாராய் இருக்க அவள் அமர்ந்ததும் ஹாஸ்பிடலுக்கு வண்டி நிதானமான வேகத்தில் நகரத் தொடங்கியது.

ஆனந்தியின் வயிற்றில் ஸ்கேனிங் முடிந்து அறுபது வயது கே ஆர் விஜயா சாயலை ஒத்திருந்த டாக்டர் வைஜயந்தி புன்னகையுடன் நாற்காலியில் அமர சேலையை சரி செய்தபடி வந்த ஆனந்தி எதிரில் அமர்ந்தாள்.

“என்ன டாக்டர், சிரிச்சுட்டு இருக்கீங்க…?”

“ஹாஹா, உன் வயித்துல ஸ்கேன் பண்ணிட்டு இருக்கும்போது பேபி ஒரு துள்ளு துள்ளுச்சு பாரு, பார்த்ததும் அசந்துட்டேன்… பேபி நல்ல ஆக்டிவா, ஹெல்த்தியா இருக்கு… வயித்துல இருக்கும்போதே இந்தத் துள்ளு துள்ளினா, வெளிய வந்தா உன் பேபியைப் பார்க்கவே உனக்கு நேரம் சரியாருக்கும்னு நினைக்கிறேன்…” ஆனந்தியை சின்ன வயது முதல் தெரியுமென்பதால் டாக்டர் சாதாரணமாய் பேச புன்னகைத்தாள் ஆனந்தி.

“அதுக்குதானே டாக்டர் நான் காத்திருக்கேன்…”

“ஹூம்… போன முறை எழுதின அயர்ன் டாப்லட்ஸ் இனி வேண்டாம், கொஞ்சம் விட்டமின் டாப்லட்ஸ் எழுதித் தரேன், டெலிவரி வரைக்கும் அதை எடுத்துகிட்டாப் போதும்…”

“ஓகே டாக்டர்…” என்றாள் புன்னகையுடன்.

“இப்பல்லாம் உன் ஹஸ்பண்டு துணைக்கு வரதில்லயே…”

“அவர்தான் இப்ப ஆபீஸ் பார்த்துக்கறார் டாக்டர், அதும் இல்லாம இப்ப பெங்களூரு போயிருக்கார், அதான் வரலை…”

”ம்ம்… அவர் வந்திருந்தா உனக்கு அது கொடுக்கலாமா, இது கொடுக்கலாமா, குழந்தை எப்படி இருக்குன்னு ஆயிரம் கொஸ்டின் கேட்டுட்டு இருப்பார்… உன் மேல ரொம்ப கேரிங்கா இருக்கார், இந்த மாதிரி கர்ப்பமா இருக்கிற சமயத்துல கணவனோட ஆதரவும், கவனிப்பும் தான் பொண்ணுக்கு ரொம்பத் தேவை…”

“அந்த விஷயத்துல நான் ரொம்ப கொடுத்து வச்சவ டாக்டர்… என்னைப் பார்த்துக்க பெத்தவங்க இல்லேன்னாலும் கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துக்க கணவன் இருக்கார்…”

“ம்ம்… எல்லாருக்கும் எல்லாத்தையும் இறைவன் கொடுக்கிறதில்லை… சிலருக்கு சிலதை நல்லதாக் கொடுத்தா வேற எதையாச்சும் பறிச்சுக்கறான்… விடும்மா, நீ நல்லாருக்கறதைப் பார்த்து அவங்க ஹாப்பியா இருப்பாங்க…”

“நீங்க என் அம்மா, அப்பாவுக்கு ரொம்பக் குளோஸ்… உங்ககிட்ட பேசும்போது அம்மாட்ட பேசற போல ஒரு நிறைவு தோணுது டாக்டர்…”

“ஹாஹா, அதுக்கென்ன நானும் உன் அம்மா போலத்தான்… ஹஸ்பண்டு வந்ததும் ஒருநாள் நம்ம வீட்டுக்கு வாங்க…”

“ஓகே டாக்டர், தேங்க்ஸ் பை…” என்றவள் கிளம்பினாள்.

Advertisement