Advertisement

அத்தியாயம் – 4

கைக்கு அடக்கமான சின்ன ரேடியோவில் ஜானகியின் குரல் சுகமாய் கசிந்து கொண்டிருக்க கண்ணை மூடி அமர்ந்து தலையை ஆட்டி ரசித்துக் கொண்டிருந்தாள் ஆனந்தி.

இதமான மாலையும், சுகமான பூந்தோட்டமும், சுகந்தம் தரும் ரோஜாக் கூட்டங்களுக்கும் நடுவே ஒரு ஸ்டூல் மீது காலை நீட்டி ரிலாக்சாய் அமர்ந்திருந்தாள்.

“அம்மா…” சமையல்காரப் பெண்மணி சாந்தா அவளது கையில் மெல்லத் தொட்டு அழைக்க கண் திறந்தாள்.

“சூடா காபி கேட்டிங்களே…” என்றபடி பீங்கான் கோப்பையை நீட்ட, புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள்.

“நைட்டுக்கு என்ன டிபன் பண்ணட்டும் மா…?”

“எனக்கு இடியாப்பமும், தேங்காப்பாலும் சாப்பிடனும் போல இருக்கு, பண்ணிடறீங்களா …”

“சரிம்மா…” என்ற சாந்தா புன்னகையுடன் நகர, மீண்டும் ஜானகியின் சொக்க வைக்கும் குரலில் மயங்கியபடி காபியைப் பருகத் தொடங்கினாள். சாய்வாய் அமர்ந்திருந்தவளின் வயிற்றுக்குள் குழந்தையின் அசைவை உணர்ந்தவள் புன்னகையுடன் கையால் தடவிக் கொடுத்தாள்.

“என்னடா கண்ணா, வயித்துக்குள்ள போரடிக்குதா… எப்படா வெளிய வருவோம்னு தோணுதா… இன்னும் கொஞ்ச நாள்ல அம்மாவைப் பார்க்க ஓடி வந்துடப் போற, அப்புறம் என்ன… அப்பாக்கு கால் பண்ணிப் பேசலாமா…”

சொல்லிக் கொண்டே நோக்கியாவில் கணவனின் எண்ணை அழுத்த எதிர்ப்புறம் முன்பு சொன்ன அதே அவுட் ஆப் கவரேஜ் ஏரியாவை மீண்டும் கன்னடத்தில் சொன்னது.

“ஹூம், உன் அப்பா ஏதோ கவரேஜ் இல்லாத ஏரியால எசகு பிசகா சிக்கிட்டார் போல… லைனே கிடைக்க மாட்டேங்குது…”

வாய்விட்டு சொன்னவளுக்கு சட்டென்று வனிதாவின் நினைவு வர, “இந்த வனி பாலாவைப் பத்தி என்ன சொல்ல வந்திருப்பா…” யோசித்துக் கொண்டே நடந்தாள்.

வீட்டுக்குள் தொலைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்க, அடுத்த நிமிடம் எடுக்கப்பட்டு ஜன்னலருகே நின்ற சாந்தா ஆனந்தியை அழைத்தாள்.

“அம்மா, வனிதான்னு யாரோ போன்ல இருக்காங்க…”

“இதோ வந்துட்டேன்…” சொன்னவள் வீட்டுக்குள் சென்று மல்லாந்து கிடந்த ரிசீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.

“ஹலோ, வனி… நான் ஆனந்தி பேசறேன்…”

“குட் ஈவனிங் மேடம், டிஸ்டர்ப் பண்ணிட்டேனா…”

“இல்லமா, ப்ரீயா தான் இருக்கேன்… நீ எங்கிருந்து பேசற, வீட்டுக்கு கிளம்பிட்டியா…”

“ஆபீசுல தான் இருக்கேன் மேடம்… கிளம்பனும், எல்லாரும் கிளம்ப வெயிட் பண்ணேன்…”

“ம்ம்… என்ன மா, ஏதோ சொல்ல வந்தியே…”

“அ…அது வந்து மேடம், சாரைப் பத்தி இப்படி சொல்லறேன்னு நீங்க என்னைத் தப்பா நினைக்கக் கூடாது…”

“நினைக்க மாட்டேன், சொல்லு…”

“முன்ன நீங்க ஆபீஸ் வரும்போதெல்லாம் பாலாஜி சார் மாசத்துக்கு ஒண்ணு ரெண்டு முறை மட்டும் தான் ஆபீஸ்  பணத்துல அவர் கணக்குல பணம் எடுப்பார்… இப்போல்லாம் அடிக்கடி எடுக்கிறார், அதுவும் சின்னத் தொகை இல்லை… நிறைய பர்சனல் பில்ஸ் அக்கவுன்ட் பண்ணத் தர்றார்… நீங்க நம்ம ஆபீசுல அனாவசியமா எந்த பர்சனல் செலவையும் அக்கவுன்ட்ல காட்டக் கூடாதுன்னு சொல்லிருக்கீங்க… இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமான்னு தெரியல… அதான் சொல்லிடலாம்னு நினைச்சேன்… நான்தான் சொன்னேன்னு சாருக்குத் தெரிய வேண்டாம் மேடம்… நீங்க ஆபீஸ் வந்தப்ப பார்த்த போல சொல்லுங்க…” அவள் சொல்லுவதை யோசனையுடன் கேட்டிருந்த ஆனந்தி, “ம்ம்… நாளைக்கும் ஆபீஸ் வருவேன், இதை நான் பார்த்துக்கறேன்…” என்றாள். வனிதா மீதிருந்த நம்பிக்கை அவள் சொல்லுவதை புறக்கணிக்கவும் விடவில்லை.

“அப்புறம் இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டேன், மேடம்…” என்றவள் தயங்கினாள்.

“என்ன கேள்விப்பட்ட வனி, தயங்காம சொல்லு…”

“அதுவந்து, சார் கிளப்புல அடிக்கடி சீட்டாடப் போறார்னு நம்ம ஆபீசுல பேசிக்கிறாங்க, ரேஸுக்கு கூடப் போறாராம்…”

“ஓ…” என்ற ஆனந்திக்கு இதெல்லாம் புதிய விஷயமாய் இருக்க, மனதுக்குள் அதிர்ந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை.

“நீங்க மாசமா இருக்கும்போது இதெல்லாம் சொல்லி வருத்தப்பட வைக்க வேண்டாம்னு தான் நினைச்சேன்… ஆனா இப்ப சின்னதா இருக்கிற விஷயம் உங்களுக்குத் தெரியாம நாளைக்குப் பெருசா ஆகிடக் கூடாதேன்னு தான் சொன்னேன்… நீங்க தப்பா நினைக்கலியே மேடம்…”

“ச்சேச்சே… என் நல்லதுக்கு தானே சொல்லிருக்க… தேங்க்ஸ் மா, இதை எப்படி டீல் பண்ணனும்னு நான் பார்த்துக்கறேன்…”

“சரி மேடம், வச்சிடறேன்… டைம் ஆச்சு…” சொன்னவள் அழைப்பைத் துண்டிக்க ஆனந்தி யோசனையுடன் நின்றாள்.

*****************

“என்ன ரேவா..? வர்ஷூ எங்கே…?” கலவரமாய் கேட்ட கணவனிடம் கண்ணீருடன் சொன்னாள் ரேவதி.

“எ..என்னங்க… ந..நம்ம பொண்ணு அவ ரூம்ல காணங்க, ஒ..ஒருவேள, இ..இது, வ..வர்ஷூவா…” பயத்தில் உதடுகள் நடுங்க சொல்லும்போதே மயங்கி கணவன் மேல் சரிந்தாள்.

“ரே…ரேவா… என்ன சொல்லற, வர்ஷுவைக் காணமா…? கேட்டவன் பதட்டத்துடன் மனைவியை அப்படியே சிட்டவுட்டில் படுக்க வைத்து விட்டு மாடிப்படியேற, வர்ஷா அவளது அறையில் முகத்திலிருந்த தண்ணீரை டவலால் ஒப்பிக் கொண்டிருந்தாள்.

“வர்ஷா, வர்ஷான்னு எதுக்கு இந்த மம்மி என்னை ஏலம் போடறாங்க… கொஞ்ச நேரம் பாத்ரூம்ல இருக்க விடாம கூப்பிட்டே இருக்காங்க…” தனக்குள் சொல்லியபடி வெளியே வந்தவள் எதிரில் தந்தையைக் கண்டதும் சிரித்தாள்.

“என்ன டாடி, அதுக்குள்ள மம்மி உங்களை கூப்பிட அனுப்பிட்டாங்களா, காலைலயே இந்த மம்மிக்கு என்னாச்சு…” என்றவளின் கையைப் பிடித்துக் கொண்டு மகளை முழுமையாய் பார்வையில் நனைத்த பிரசன்னா,

“வ…வர்ஷூ மா… உனக்கு ஒண்ணும் இல்லியே…” எனப் படபடக்க தந்தையின் அதிர்ந்த முகத்தைக் கண்டதும், “என்ன டாட்… என்னாச்சு, ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க…?” என்றாள்.

“ஒ…ஒண்ணுமில்ல டா, நீ உன் ரூம்லயே இரு… கீழ வரவேண்டாம்…”

“ஒய் டாட், டென்னிஸ் கிளாஸ்க்கு டைம் ஆச்சே…”

“இ..இன்னிக்கு எங்கயும் போக வேண்டாம்… நீ உன் ரூம்லயே இரு…” என்றவனை விநோதமாய் பார்த்தவள், “மம்மி எங்கே டாடி, எனக்கு காபியும் தரலை…” என்றாள்.

“பிரசன்னா, போலீஸ் வந்திருச்சு…” வெளியிலிருந்து அடுத்த வீட்டுக்காரர் குரல் கொடுக்க அதற்குள் ரேவதியும் மயக்கம் தெளிந்து கண் விழித்திருந்தாள்.

“மம்மி வருவா, நீ இங்கயே இரு…” தந்தை அவசரமாய் சொல்லி செல்ல யோசனையுடன் நின்ற மகளுக்கு விஷயம் என்னவென்று அறியாமல் இருப்புக் கொள்ளவில்லை.

மெல்ல கீழே இறங்கி வர வாசலில் கூட்டம் தெரிந்தது. அதற்கு நடுவே காக்கி உடுப்புகள் சிலரும் தெரிய ஹாலுக்கு வந்தவள் கண்ணாடி வழியே வெளியே பார்த்தாள். சட்டென்று மூக்கைத் தாக்கிய மோசமான வாடையில் மூக்கைப் பொத்திக் கொண்டு வெளியே கவனித்தாள்.

கான்ஸ்டபிள் ஒருவர் தன்னுடைய கர்சீப்பால் மூக்கு, வாய்ப்பகுதியைக் கவர் பண்ணி மாஸ்க் ஆக்கிக் கொண்டு அந்த நீலநிற பாலித்தீன் பாகை தரையில் சரிக்கத் தயாராக அவருக்கு அருகே மூக்கை கர்சீப்பால் மூடியபடி நின்ற கிருஷ்ணாவும், கோகுலும் பார்வைக்குக் கிடைத்தனர்.

பாலித்தீன் பேகை மெல்ல நிலத்தில் சரிக்க மேலே இருந்த வேஸ்ட் பேப்பர் பிளேட்டுகளும், கப்புகளும் கீழே சரிய அதற்குக் கீழே கறுப்பாய் ஒரு பிளாஸ்டிக் கவர் மூட்டை தெரிந்தது. அதன் மீது ரத்தம் திட்டு திட்டாய் உறைந்து தெரிய சுற்றிலும் வேடிக்கை பார்த்து நின்றவர்கள் அதிர்ச்சியுடன் நோக்கிக் கொண்டிருந்தனர். மூட்டையின் தலையை இறுக்கியிருந்த நைலான் கயிற்றை சில நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு கிளவுசிட்ட கையால் விடுவித்தார் அந்தக் கான்ஸ்டபிள்.

ரத்தக் கறைகளோடு இருந்த பாலித்தீன் மூட்டையிலிருந்து  கன்னங்கரேலென்ற பெண்ணின் சலனமற்ற உருவம் கீழே சாய்ந்து மல்லாந்தது. அனைவரின் விழிகளும் திகிலுடன் நோக்கிக் கொண்டிருக்க கிருஷ்ணா அருகே சென்று அந்த உருவத்தை உற்றுப் பார்த்தார்.

கறுப்பு நிற சுரிதாருக்குள் அதைவிடக் கறுப்பான நிறத்துடன் தெரிந்த அப்பெண்ணைக் கண்டவர் கண்கள் திகைத்தது.

“இத்தனை கறுப்பாய் ஒரு பெண் இருக்க முடியுமா…?” உற்று நோக்கிய கிருஷ்ணா வாய்விட்டு சொல்ல, கோகுல் அவரை ஏறிட்டு சொன்னான்.

“சார், இந்தக் கறுப்பு பொண்ணோட நிறம் கிடையாது, உடம்புல கறுப்பு பெயிண்டைப் பூசி இருக்காங்க…”

“என்னது, கறுப்பு பெயிண்டா…? என்றவர் உன்னிப்பாய் நோக்க, “ஆமா சார், கொலையாளி அந்தப் பொண்ணு உடம்புல ஒரு இடம் விடாம கறுப்பு பெயிண்டைப் பூசி இருக்கான்…” சொன்ன கோகுல் ஒரு குச்சியால் அந்த உடலின் ஒரு பாகத்தில் சுரண்ட பெயிண்ட் குச்சியில் ஒட்டிக் கொண்டது. “பாருங்க சார்…” என்றவன் குச்சியைக் காட்ட, கிருஷ்ணாவின் முகம் வியப்புக்கு மாறியது.

“கான்ஸ்டபிள்… அந்த சுரிதாரோட மார்புப் பகுதியில் ஒரு கவர் மாதிரித் தெரியுதே… அதை எடுங்க…”

பாடியின் உடைக்குள் ஒரு பாலித்தீன் கவர் சிறிது வெளியே நீட்டிக் கொண்டிருக்க, அதை உருவினார் கான்ஸ்டபிள்.

அக்கவருக்குள் ஒரு வெள்ளை பேப்பர் நான்காய் மடக்கி வைக்கப் பட்டிருக்க அதோடு கறுப்பு நிறத்தில் ஒரு ரோஜாப் பூ வாடிக் கிடந்தது.

“இதென்ன, கறுப்புக் கலர் ரோஸா…” அவர் அதிசயமாய் கேட்க, அப்பூவை எடுத்துப் பார்த்த கோகுல்,

“கொலையாளிக்கு பெயிண்ட் அடிக்க ரொம்பப் பிடிக்கும் போல சார், இதுலயும் கறுப்பு பெயிண்ட் அடிச்சிருக்கான்…” என்றவன் அந்த பேப்பரைப் பிரித்தான். அதில் இருந்த வாசகங்கள் நெற்றியை சுருக்க கிருஷ்ணா ஏறிட்டார்.

“என்ன கோகுல், அதுல என்ன எழுதி இருக்கு…?”

“F N 144 A A by RK நேசத்தின் நிழல் கறுப்பு by அந்தகன்… அப்படின்னு எழுதிருக்கு சார்…”

“இதுக்கு என்ன அர்த்தம், எங்கே அதைக் கொடுங்க…” என்ற கிருஷ்ணா அந்தப் பேப்பரை உன்னிப்பாய் பார்த்தும் ஒன்றும் விளங்காமல் அவனிடம் திரும்பினார்.

“அந்தகன்… அப்படின்னா எமன்னு அர்த்தம், இப்படி கூட பேர் வைப்பாங்களா…” யோசனையுடன் கேட்ட கிருஷ்ணா,

“மிஸ்டர் பிரசன்னா, இந்தப் பொண்ணு யாருன்னு உங்க யாருக்காச்சும் அடையாளம் தெரியுதா…?” என்றார். சுற்றிலும் நின்ற சிலர் அப்பெண்ணின் அடையாளம் தேடி எட்டிப் பார்க்க, பிரசன்னாவும் அச்சத்துடன் பெயின்டுக்குள் மறைந்திருந்த முகத்தை உன்னிப்பாய் பார்த்தான்.

மறுப்பாய் தலையாட்டினான்.

“இ..இல்ல சார், யாருன்னு சரியாத் தெரியல…”

“ம்ம்… எதுக்கு கொலையாளி உங்க வீட்டு வாசல்ல பாடியை போட்டுட்டுப் போகணும்…?” யோசனையை கேட்டவர்,

“ஓகே கோகுல்… பாரன்சிக் பீப்பிள் வந்து இங்க உள்ள பார்மாலிட்டீஸ் முடிச்சதும் பாடியை மார்ச்சுவரிக்கு அனுப்பிடுங்க… இவங்ககிட்ட ரிப்போர்ட் எழுதி வாங்கிக்கங்க… எனக்கு கமிஷனர் ஆபீஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு, நான் கிளம்பறேன்…” சொன்ன கிருஷ்ணா ஜீப்புக்கு செல்ல கோகுல் அலைபேசியில் ஜீஹெச்சுக்கு அழைத்தான்.

ஜீப் கமிஷனர் ஆபீஸை நோக்கி சென்று கொண்டிருக்க கிருஷ்ணாவின் மனது சற்று முன் கண்ட கறுப்பு பிணத்திலும், அதன் மீது வைத்திருந்த கறுப்பு ரோஜாவிலும் இறுதியாய் அந்த வாசகத்திலுமாய் நிலைத்துக் கிடந்தது.

“கிடைச்ச எல்லாமே கறுப்பு… நேசத்தின் நிழல் கறுப்புங்கற வாசகம் எதைக் குறிக்குது… அந்தகன்கிற பேரு ஒரிஜினலா இருக்குமா, இல்ல, நிக்நேமான்னு தெரியலை, இதை ஒரு குறிப்பா எடுத்துகிட்டா இது மூலமா கொலையாளி என்ன சொல்ல வர்றான்…” யோசித்தவருக்கு எதுவும் புரியவில்லை.

“சரி, அந்தப் பொண்ணு யாருன்னு முதல்ல கண்டு பிடிச்சிட்டு, அப்புறம் பார்த்துக்கலாம்…”

யோசனையைத் தற்காலிகமாய்த் தள்ளிப் போட்டவர், முன்னாள் முதலமைச்சர் சம்மந்தமாய் கமிஷனர் கேட்டிருந்த சில ரகசிய ரிப்போர்ட்டுகள் அடங்கிய பைலை மேலோட்டமாய் பார்க்கத் தொடங்க, போலீஸ் ஜீப் கமிஷனர் அலுவலகத்தை வேகமாய் நெருங்கிக் கொண்டிருந்தது.

Advertisement