Advertisement

அத்தியாயம் – 3

முழுமையாய் இருள் விலகியிராத காலை நேரத்தில் வாசல் கூட்டுவதற்காய் வெளியே வந்த ரேவதி முன்னில் வேஸ்ட் போட வைத்திருந்த பெரிய பாலித்தீன் கவரிலிருந்து வந்த துர்நாற்றத்தில் அதை ஒரு குச்சியால் இளக்கிப் பார்க்க, குப்பென்று வீசிய ரத்தத்தின் துர்வாடையில் அதிர்ந்து, “ஐயோ…” என அலறிக் கொண்டே வீட்டுக்குள் ஓடினாள்.

அப்போதுதான் எழுந்திருந்த பிரசன்னா மனைவியின் அலறல் கேட்டு வேகமாய் வெளியே வர பதட்டமாய் உள்ளே வந்த ரேவதியைக் கண்டு திகைத்தான்.

“என்ன ரேவா..? என்னாச்சு, ஏன் இப்படி அலறிட்டு வர்றே..?”

“எ..என்னங்க, அ..அங்க… அங்க…” என வார்த்தை வராமல் திக்கியவளின் கையைப் பிடித்து தட்டிக் கொடுத்தவன்,

“ரிலாக்ஸ் மா, பொறுமையா என்னாச்சுன்னு சொல்லு…”

“வா..வாசல்ல, நாம வேஸ்ட் போட வச்சிருந்த பாலித்தீன் கவர்ல, எ..என்னமோ இருக்கு… பிளட் ஸ்மெல் வருது, பயங்கரமா நாத்தம் அடிக்குது…” திணறியபடி சொல்ல,

“என்னமா சொல்லற, பிளட் ஸ்மெல்லா…” என்றவன் வாசலுக்கு செல்ல பின்னிலேயே ரேவதியும் சென்றாள்.

அடுத்த வீட்டுப் பெண்மணி வாசல் பெருக்குவதற்காய் வெளியே வந்தவர், ரேவதியின் அலறல் கேட்டு என்னவென்று கேட்பதற்காய் அங்கே வந்தார்.

“என்னாச்சு ரேவதி, எதுக்குக் கத்தின…?” கேட்டவர் அவஸ்தையாய் மூக்கைப் பொத்திக் கொண்டார்.

“என்னதிது, இப்படி ஸ்மெல் அடிக்குது…?”

“ஆமாக்கா, இந்தக் கவர்ல இருந்து தான் ஸ்மெல் வருது, உ..உள்ள என்னமோ இருக்கு…” என்றவள் கணவன் அந்தக் கவரைக் குச்சி வைத்து இளக்குவதைக் கண்டு பயத்துடன், “எ…என்னங்க, எனக்கு பயமாருக்கு… உள்ள என்ன இருக்குன்னு தெரியல, பார்த்து…” பதட்டப்பட்டாள்.

“இருங்க, என் ஹஸ்பண்டையும் உதவிக்கு கூப்பிடறேன்…” என்ற அ. வீ. பெண்மணி,

“என்னங்க…” எனக் குரல் கொடுக்க அடுத்த நிமிடத்தில் அவளது கணவனின் தலை வெளியே தெரிய, கையசைத்து அழைக்கவும் லுங்கி, பனியனுடன் ஓடி வந்தான்.

பிரசன்னா குச்சியை அந்தப் பெரிய பாலிதீன் பாகுக்குள் விட்டுத் துளாவ, பிசுபிசுப்பாய் உணர முடிந்தது. வெளியே எடுத்துப் பார்க்க குச்சியில் ரத்தம் தோய்ந்திருப்பதைக் கண்டு நால்வரின் கண்களும் அதிர்ச்சியைக் காட்டின.

“எ…என்னங்க, ரத்தம்…!!!” அலறலுடன் சொன்ன ரேவதி இம்மீடியட்டாய் மயங்கி சரிய அருகே நின்ற பெண்மணி தாங்கிக் கொண்டாள்.

“ரேவா, எழுந்திரு…” தண்ணீர் தெளித்து அவளை எழுப்ப முயல மெல்ல கண்ணைத் திறந்தவளின் விழிகள் திகிலில் உறைந்து போயிருந்தன.

“எ…என்னங்க, அ…அந்த ரத்தம் யாரோடது…”

“பயப்படாத, என்னன்னு பார்ப்போம்…” என்றான்.

“என்ன பிரசன்னா, எதோட ரத்தம் இது… எவனாச்சும் வேண்டாதவன் நாயைக் கொன்னு உங்க வீட்டு வாசல்ல போட்டுட்டுப் போயிட்டானா…” அடுத்த வீட்டுக்காரன் கேட்க யோசனையுடன் பார்த்தவன், “தெரியலியே… இதுல என்ன இருக்குன்னு தெரியாம நாம ஓபன் பண்ணவும் முடியாது…”

“ரேவா, வர்ஷா எங்கே…? பார்த்து பயந்துடப் போறா…”

“அ..அவளை இன்னும் எழுப்பலை…” என்றவள் ஏதோ தோன்ற வேகமாய் எழுந்தாள்.

“அ…ஐயோ, என் பொண்ணு…” சொல்லிக் கொண்டே எழுந்து மகளைத் தேடி மாடிக்கு ஓடினாள் ரேவதி.

“இப்ப என்ன பண்ணறது பிரசன்னா, நாம ஓபன் பண்ணிப் பார்க்கலாமா, இல்ல போலீசுக்கு இன்பார்ம் பண்ணிடலாமா…”

“போலீஸுக்கு சொல்லிடலாம், அதான் நல்லது…” என்ற பிரசன்னா அலைபேசியில் தனக்குத் தெரிந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை அழைத்தான்.

சுருக்கமாய் நடந்ததைக் கூற, “ஓ… குச்சியில ரத்தம் இருக்கா… ஒருவேளை, நீங்க நினைக்கிற போல அனிமல் இல்லாம எதுவும் மனுஷனைக் கொலை பண்ணி அதுக்குள்ள வச்சிருந்தா…?”

“ச..சார், என்ன சொல்லறீங்க…” திகிலுடன் கேட்டான்.

“பிரசன்னா, எதுக்கும் நீங்க அங்கே எதையும் தொட வேண்டாம், உங்க ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்பார்ம் பண்ணிடறேன், அவங்க வந்து பார்ப்பாங்க…”

“ச…சார், நீங்க சொல்லறதைப் பார்த்தா ரொம்ப பயமாருக்கு…”

“பயப்படாதீங்க பிரசன்னா, உடனே எனக்கு கால் பண்ணதும் நல்லதாப் போயிருச்சு… உங்க ஏரியா இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா எனக்கு நல்ல பழக்கம் தான்… அவர் மத்ததைப் பார்த்துப்பார், தைரியமா இருங்க…” சொல்லிவிட்டு போனை வைக்க பிரசன்னாவின் முகத்தில் கலக்கம் தெரிந்தது.

மகளைத் தேடி வேகமாய் மாடிப்படி ஏறிய ரேவதி பதட்டத்தில் தடுமாறினாள். “கடவுளே, அந்த மூட்டைல இருக்கிறது என் பொண்ணா இருக்கக் கூடாது… அவளை நீதான் காப்பாத்தணும்…” அவசர வேண்டுதலை வைத்தாள்.

“வர்ஷூ, வர்ஷூ…” பெரிதாய் மூச்சு வாங்கிக் கொண்டு மகளின் அறைக்கு சென்ற ரேவதி கட்டிலில் போர்வை தனியே கிடக்க அதற்குள் மகளைக் காணாமல் அதிர்ந்தாள்.

“வ…வர்ஷூ, என்னங்க…” அலறிக் கொண்டே கீழே ஓட, மனைவியின் குரலைக் கேட்டு பதட்டமாய் உள்ளே வந்தான் பிரசன்னா.

“என்ன ரேவா, வர்ஷூ எங்கே… என்னாச்சு…?” கேட்கும்போதே பயப்பந்து தொண்டைக்குள் சிக்கிக் கொள்ள, இதயத்தில் கலவரம் வந்து அமர்ந்து கொண்டது.

**************

“ஏன் தாயி, தம்பி தான் உன்னை ஆபீஸ் போக வேண்டாம்னு சொல்லிருக்கே… அப்புறம் எதுக்கு கிளம்பற…”

“காசிண்ணே… என்னதான் அவர் என் மேல உள்ள அக்கறைல ரெஸ்ட் எடுக்க சொல்லி இருந்தாலும் எவ்ளோ தான் வீட்டுலயே இருக்கிறது… ஆபீஸ் போயிட்டு செம பிசியா இருந்த எனக்கு இப்படி வீட்டுக்குள்ளயே கிடக்கறது ரொம்ப போர் அடிக்குது… அதான், கொஞ்ச நேரம் ஆபீஸ் போகலாம்னு கிளம்பறேன்…”

“சொன்னா கேக்க மாட்டிங்கறியே, சரி தனியாப் போக வேண்டாம், துணைக்கு நானும் கூட வரேன்…”

“ஹாஹா… பாடிகார்டா நீங்க இருக்கும்போது எனக்கு என்ன கவலை, சீக்கிரம் கிளம்புங்க…” சொல்லிக் கொண்டே தலையை சீவி தளர்வாய் பின்னலிட்டாள். உடைக்கு மாட்சாய் காசி கொண்டு வந்து கொடுத்த மஞ்சள் ரோஜாவை தலையின் ஒரு பக்கமாய் வைத்து பின் குத்தினாள்.

கண்ணாடியில் தன்னைப் பார்த்தவள் திருப்தியாய் புன்னகைத்தாள். தாய்மையின் செழுமையில் பூரித்த தேகத்தை மஞ்சள் வண்ண காட்டன் சேலை மூடியிருக்க, மனதின் மலர்ச்சி முகத்திலும் தெரிய அழகாய் உணர்ந்தாள்.

வயிற்றின் மீது கை வைத்தவள், “டேய் குட்டி செல்லம், உன் அம்மா அழகா இருக்கேனா, நாம ஆபீஸ் போவோமா… உன் அப்பாவும் இல்லை, நானும் ஆபீஸ் வர மாட்டேன்னு எல்லாரும் ஜாலியா இருப்பாங்க… நான் சர்ப்ரைஸா ஆபீசுக்குப் போனா எல்லாரும் திகிலாயிருவாங்க… நீ சமத்துப் பையனா அம்மாவைத் தொந்தரவு பண்ணாம இருக்கணும் சரியா…” குழந்தையுடன் பேசிக் கொண்டே கையில் வளையலை அணிந்து கொண்டு மீண்டும் தன்னை சரிபார்த்துக் கொண்டு வெளியே வந்தாள்.

தயாராய் இருந்த காசி காரை எடுக்க சமையல்கார சாந்தாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

உண்மையில் அவள் சொன்னது போல் அலுவலகத்தில் பணியாளர்கள் ஏனோ தானோவென்று தான் பணி எடுத்துக் கொண்டிருந்தனர். ஆனந்தியின் கார் கம்பெனி கேட்டுக்குள் நுழைந்ததுமே அனைவரும் அட்டென்ஷனுக்கு வந்து பிசியாய் இருப்பது போல் காட்டிக் கொண்டனர்.

அது ஒரு மார்கெட்டிங் ஆபீஸ். ஆனந்தியைக் கண்டதும் எழுந்து நின்று விஷ் செய்தவர்களுக்கு புன்னகையோடு தலையசைத்தபடி தனது காபினுக்கு நடந்தாள்.

“நல்லாருக்கீங்களா மேடம்…” டெவலப்பிங்கில் இருந்த  செல்வராஜ் கேட்கவும் நின்று பதில் சொல்லிவிட்டு நடந்தாள்.

அவளது சின்ன காபினில் சுற்றிலும் கண்ணாடி சுவர் பதித்து இருந்தனர். அவள் அமர உள்ளே வந்தார் மேனேஜர் ரகுநாத்.

“வாங்க மேடம், நல்லாருக்கீங்கள, திடீர்னு ஆபீஸ் வந்துட்டிங்க…” புன்னகையுடன் கேட்டார்.

“ம்ம்… வீட்டுல போர் அடிச்சது, சரி ஆபீஸ் வரலாம்னு வந்தேன்… வொர்க் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு…”

“சார், ஒரு வாரத்துக்கு என்ன வேலை செய்யணும்னு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துட்டு தான் போயிருக்கார் மேடம்…”

“ஓ ஓகே… நம்ம லாஸ்ட் மன்த் ஆர்டர் எப்படி இருக்கு…”

“பரவால்ல மேடம், எப்பவும் போல வந்துட்டு தான் இருக்கு…”

“எங்கே, தேன் மொழியைக் காணோம்… இன்னைக்கு லீவா…?”

“அது வந்து…” என இழுத்தவர், “அவங்க ஒன் வீக் லீவு போட்டிருக்காங்க மேடம்…” என்றார் தயக்கத்துடன்.

“வ்வாட்… ஒன் வீக்கா, எதுக்கு…?”

“அது தெரியலை மேடம்… ஏதோ பர்சனல் வொர்க், ஊருக்குப் போறேன்னு சொன்னாங்க…”

“ஓகே, வேற ஒண்ணும் பிரச்சனை இல்லையே…”

“இ..இல்ல, மேடம்…” என்றவர் ஏதோ சொல்ல முடியாமல் தவிப்பது போல் தோன்றியது ஆனந்திக்கு.

“என்ன மிஸ்டர் ரகுநாத், எதையோ சொல்லத் தயங்குற போல இருக்கு… கமான், என்னன்னு சொல்லுங்க…”

“அது…வந்து, ஒ..ஒண்ணுமில்ல மேடம், இந்த மாசம் நாம பண்ணற வொர்க் ரிப்போர்ட் எல்லாம் பார்க்கறிங்களா, எடுத்துட்டு வரவா…” என்றார்.

“ம்ம் கொண்டு வாங்க…” என்றாள் அவளும்.

அவர் சென்றதும், “இந்த மனுஷன் எதையோ சொல்ல வந்துட்டு வாய்க்குள்ளயே போட்டு முழுங்கிட்டுப் போறாரே, என்னவா இருக்கும்…” என யோசித்தவள், “ஹாங், எனக்குத் தெரிய வேண்டிய விஷயம்னா சொல்லதான போறார், அப்ப பார்த்துக்கலாம்…” என நினைத்து அதை டீலில் விட்டாள்.

வந்திருந்த புது ஆர்டர் சிலதைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அதில் இருந்த கணவனின் கை எழுத்தைக் கண்டதும் அவனை அழைக்கத் தோண போனில் அவன் எண்ணை அமர்த்தினாள்.

நீங்கள் அழைக்கும் எண் அவுட் ஆப் கவரேஜ் ஏரியாவில் உள்ளது என ரெகார்டு வாய்ஸ் கன்னடத்தில் மாட்லாடியது.

“நேத்து ரீச் ஆனதும் போன் பண்ணதோட சரி, காலைல இருந்து ஒரு கால் பண்ணக் கூட ஐயாக்கு நேரமில்லை போலருக்கு…” சிரித்தபடி ரிசீவரை வைத்தாள்.

மதியம் வரை அங்கிருந்தவள் வீட்டுக்குக் கிளம்பினாள்.

லஞ்ச் பாக்ஸுடன் எதிரில் வந்த அக்கவுண்ட்ஸ் வனிதா இவளைக் கண்டதும் புன்னகைத்தாள்.

“வனி, தேன்மொழி இல்லன்னா உனக்கு வேலை அதிகமா இருக்குமே… சமாளிக்க முடியுமா…?”

“ம்ம்… மேனேஜ் பண்ணிப்பேன் மேடம்…”

“சரி நான் வீட்டுக்கு கிளம்பறேன், நீ சாப்பிடப் போ…” சொல்லிவிட்டு நகர முயன்றவளை அவளது குரல் நிறுத்தியது.

“மே…மேடம், ஒரு நிமிஷம்…” என்றவள் சுற்றிலும் பார்வையை ஓட்டிவிட்டு குரலைத் தாழ்த்திக் கொண்டாள்.

“உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்…”

“என்ன மா, என்ன விஷயம்…”

“அ…அதுவந்து… சாரைப் பத்தி ஒரு விஷயம் சொல்லணும்…”

“பாலாஜியைப் பத்தியா, என்ன சொல்லணும்…?” என்றாள் கேள்வியாய் அவளை நோக்கியபடி.

“நீங்க இருக்கிற சூழ்நிலைல இதை சொல்லி வருத்தப்பட வைக்க வேண்டாம்னு தான் நினைச்சேன், ஆனாலும் மனசு கேக்க மாட்டேங்குது… இங்க எல்லாரும் இருக்காங்க, நான் பிரீயாகிட்டு உங்களுக்கு போன் பண்ணறேன்…”

“நான் என்ன சூழ்நிலைல இருக்கேன், நல்லாதானே இருக்கேன்… சொல்லப் போனா ரொம்ப ஹாப்பியா, நிம்மதியா இருக்கேன்… என் ஹஸ்பன்ட் எனக்காக எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து செய்யறார்… ஒரு பொண்ணுக்கு இதைவிட பெரிய சந்தோஷம் என்ன இருக்க முடியும் சொல்லு…” அவள் கேள்விக்கு வனிதா பதில் சொல்லாமல் சங்கடமாய் மௌனித்தாள்.

“ஓகே, நீ போயி சாப்பிடு… எனக்கும் பசிக்குது, பிரீயாகிட்டு கால் பண்ணி என்ன சொல்ல நினைச்சியோ சொல்லு…”

“ஓகே மேடம், உடம்பைப் பார்த்துக்கங்க… பை…” என்றவள் உணவு உண்ணும் அறைக்கு செல்ல ஆனந்தி கிளம்பினாள்.

அவளுக்காய் காரில் காத்திருந்த காசி, “என்ன தாயி, பசிக்குது… வீட்டுக்கு கிளம்பலாம்னு என்னை காருக்கு வர சொல்லிட்டு நீ அந்தப் பொண்ணோட நின்னு பேசிட்டிருக்க…” கேட்டுக் கொண்டே அவள் அமரவும் காரை எடுத்தார்.

“ஆமாண்ணே, ரொம்பப் பசிக்குது… சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம்…” எனவும், “இதோ பத்து நிமிஷம் தாயி…” என்ற காசி காரை சாலையில் விமானமாக்கினார்.

Advertisement