Advertisement

“அந்தகன் கொஞ்ச நாள் முன்னாடி எனக்கு பேஸ்புக்ல அறிமுகம் ஆனான்… பேரு வித்தியாசமா இருக்கேன்னு பேசத் தொடங்கினேன்… நல்லா அன்பா, அக்கறையாப் பேசுவான், பொதுவான விஷயங்களை பேசிப்போம்… என் பர்த்டே முடிஞ்சு அடுத்தநாள் வீட்டுல கிடந்த பிளாக் பெயின்ட் டெட்பாடி பத்தி சொன்னேன்… யாரு கொன்னதுன்னு தெரியலை, நேசத்தின் நிழல் கறுப்பு by அந்தகன்னு எழுதி வச்சிருந்தான்னு சொன்னேன்… உடனே, அவன், அதுக்காக அது நான்னு நினைச்சுடாத தாயேன்னு சொன்னான்… நானும் அவன் விளையாட்டா அந்தப் பேரை வச்சிருக்கிறதா நினைச்சு பெரிசு படுத்தலை… அப்புறம் ஒரு நாள் நான் டென்னிஸ் கோர்ட்டுல இருந்து கிளம்பும் போது வெள்ளைக் கலர் கார் என் முன்னாடி வந்து நின்னுச்சு… நீ வர்ஷா தானே, உன் அப்பாவுக்கு ஆக்சிடன்ட் ஆகி ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க, உன்னை அழைச்சிட்டு வர சொல்லி என்னை அனுப்பினாங்கன்னு சொல்லவும் பதறிப் போயி அப்பாக்கு என்னாச்சோன்னு பயத்துல அவன் காருல ஏறிட்டேன்… நான் அப்பாவை நினைச்சு அழுதிட்டு இருக்கும்போது சமாதானம் பண்ணுற போல பேசிட்டே எதையோ என் முகத்துல ஸ்பிரே பண்ணிட்டான்… அதுக்குப் பிறகு ஒரு குடோன்ல தான் கண் விழிச்சேன்… வாயில பிளாஸ்டர் போட்டு சேரோட சேர்த்து கட்டி வச்சிருந்தான்… கை நரம்புல போதை ஊசியைக் குத்தினான்… என்னை முழு நேரமும் போதைலயே வச்சிருந்தான்…” அவள் சொல்லும் போது கேட்டுக் கொண்டிருந்த வர்ஷாவின் அன்னை கண்ணீர் விட கலங்கிய விழிகளுடன் பிரசன்னா மனைவியின் தோளில் ஆறுதலாய் தட்டிக் கொடுத்தான்.

“அவன் யாரு…? எப்படி இருந்தான், இதுக்கு முன்னாடி பார்த்திருக்கியா…? அங்க இருந்து எப்படி தப்பிச்சு வந்த…”

“நான் பேஸ்புக்ல அவனோட முகமூடி புரபைல் தான் பார்த்திருக்கேன், கார்ல வரும்போது சாதாரணமா வந்தான்… அவன் நடந்து கிட்டதைப் பார்க்கும்போது சைக்கோன்னு புரிஞ்சது… தினமும் ராத்திரி அந்த குடோனுக்கு வந்து ரோஜாப் பூவுக்கு பெயின்ட் அடிச்சு வைப்பான், கிரைம் நாவல் படிப்பான்… எனக்கு ரொட்டி வச்சிட்டுப் போவான், எனக்கு ஒவ்வொரு நிமிஷமும் ரொம்ப பயமா இருந்துச்சு… அ..அப்புறம், என் கண்ணு முன்னால தான் அரவிந்த், இதயாவைக் கொன்னான்…” அவள் கண்களில் இன்னும் அந்த திகில் மிச்சம் இருந்தது.

“ம்ம்… நீ அங்க இருந்து எப்படி தப்பிச்ச மா…”

“அது சரியாத் தெரியலை சார், எனக்கு போதை ஊசி போட்டுட்டு அவன் போன பின்னாடி யாரோ ஒரு லேடி வந்து என்னை அழைச்சிட்டு போன போல இருந்துச்சு… அவங்க தான் என்னை பஸ் ஸ்டாப்புல உக்கார வச்சிட்டுப் போயிருக்கனும்…” என்றாள் வர்ஷா ஆயாசத்துடன்.

“ம்ம்… அந்தகன் எதுக்கு உன்னைக் கடத்தணும், எதுவும் காரணம் சொன்னானா…?”

“பெண்கள் எல்லாம் பேய்கள்… ஆண்களை நேசம்கிற பேருல மயக்கி வேதனைப் படுத்துற பிசாசுங்கன்னு சொல்லுவான், மத்தபடி எதுவும் என்கிட்ட சொன்னதில்லை…” என்றவள் சோர்வுடன் கண்ணை மூடிக் கொள்ள அதோடு ஆடியோவும் நின்று போயிருந்தது.

“இது வர்ஷா பேசின ரெக்கார்டு… இனி எதுக்காக இந்தக் கொலைகள் செய்யப்பட்டதுன்னு சொல்ல வேண்டியது குருராஜ் தான்…” கிருஷ்ணா சொல்ல மூவரும் அவனை நோக்கினர்.

“என்ன பாக்கறிங்க, ஆமா…! நான்தான் இந்தக் கொலைகளைப் பண்ணேன்… இந்தப் பொண்ணுங்களே ஆண்களை ஏமாத்தப் பிறந்தவங்க, அது புரிஞ்சுக்காம இந்த துரோகி அந்த நேசிகாவை லவ் பண்ணி வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணப் பார்த்தான்… அவ கல்யாணத்துக்கப்புறம் நிச்சயம் ஏமாத்திட்டு போகத்தான் போறா, வேண்டாம்னு சொல்லியும் இவன் கேக்கல… அதான் இவனைப் போலவே போயி அவளைத் தூக்கிட்டேன்… ஆளு அடையாளம் தெரியக் கூடாதுன்னு RK ஸ்டோரில வர்ற போல பெயின்ட் அடிச்சு வர்ஷா வீட்டு வாசல்ல போட்டேன்… எல்லாரும் பயந்து கொலையாளியைத் தேடுறது ஒரு மாதிரி திரில்லிங்கா இருந்துச்சு… ஒருத்தி என்னை லவ் பண்ணி என் பிரண்டை கல்யாணம் பண்ணி வெளிநாடு போயிட்டா… இப்ப, என் பிரண்டு அரவிந்த் இதயாவை பிடிச்சிருக்கு, அவகிட்ட லவ் புரபோஸ் பண்ணப் போறேன்னு சொன்னான்… லவ் வேண்டாம்னு நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கல, கொன்னுட்டேன்… இதயா அழகா இருக்கிறதால தானே ஆண்களுக்கு லவ் வருது, அதான் அவளைக் கொன்னேன்…” அவன் வரிசையாய் சொல்லிக் கொண்டே செல்ல அவர்கள் அதிர்ச்சியுடன் கேட்டு நின்றனர்.

“டேய், உன் லவ் தோத்துப் போனா உலகத்துல யாருமே லவ் பண்ணக் கூடாதுன்னு நினைப்பியாடா பாவி… வர்ஷாவை எதுக்கு டா கடத்தின, அப்புறம் கொல்லாம விட்டுட்ட…” கோபத்துடன் கேட்டார் கிருஷ்ணா.

“வர்ஷாவுக்கு என் மேல டவுட் வந்திருச்சு, அதனால கடத்தினேன்… எந்த முறைல கொல்லலாம்னு யோசிச்சு சரியா ஒரு சீன் அமையல, சரி PKP ஸ்டோரி ஸ்டைல்ல கொல்ல யோசிச்சிட்டு இருக்கும்போது என் அம்மாக்காரி எனக்குத் தெரியாம அவளைக் காப்பாத்தி தப்பிக்க விட்டுட்டா… இன்னைக்கு நைட்டு ஹாஸ்பிடல்லயே போட்டுத் தள்ள தான் பிளான் பண்ணிருந்தேன்… அதுக்குள்ள யுவா முந்திகிட்டு என்னைக் காட்டிக் கொடுத்துட்டான்…” கடுப்புடன் சொன்னவன் அண்ணனை முறைக்க அவன் வேதனையுடன் தம்பியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“டேய், குரு… ஏண்டா உனக்குள்ள இப்படி ஒரு வெறியை வளர்த்து வச்சிருக்க… ஒரு காதல் இல்லேன்னா வாழ்க்கையே இல்லாமப் போயிருமா என்ன… எல்லாப் பொண்ணுங்களும் அதே போல துரோகம் பண்ணுவாங்கன்னு ஏன் யோசிக்கிற, அது ரொம்பத் தப்புடா…” யுவா கண்ணீருடன் சொல்ல கிண்டலாய் சிரித்தான் குரு.

“இந்த அட்வைஸ் எல்லாம் எனக்கு வேண்டாம்… எப்ப நீ என்னைக் காட்டிக் கொடுத்தியோ நீயும் துரோகி தான்… என்னைப் பொறுத்த வரைக்கும் நேசத்துக்கு எப்பவும் ஒரே நிறம் தான்… கறுப்பு…!” என்றவன் வெறுப்புடன் திரும்பிக் கொள்ள அஜய் யுவராஜின் தோளில் கை வைத்தான்.

“விடுங்க யுவா, இந்த மாதிரி ஆளுங்களை நாம சொல்லிப் புரிய வைக்க முடியாது… முறையான சிகிச்சையால மட்டும் தான் இவர் மனசை சரி பண்ண முடியும்…” என்றவன் கிருஷ்ணாவிடம் திரும்பினான்.

“கிருஷ்ணா, குருவை அரஸ்ட் பண்ணறதுக்கு வேண்டிய பார்மாலிட்டீஸ் எல்லாம் பண்ணிடுங்க…” என்றவன், கமிஷனரிடம் இதுவரை நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லுவதற்காய் நகர கிருஷ்ணாவும் யார் யாருக்கோ போன் செய்து விஷயத்தை சொல்லி வருமாறு கூறினார்.

இரவு உணவு முடிந்து நடந்தது எல்லாவற்றையும் அஜய் அர்ச்சனாவிடம் சொல்லிக் கொண்டிருக்க அவள் கிரைம் கதை படிக்கும் அதே ஆவலுடன் அவன் வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.

“மனநிலை பாதிக்கப்பட்ட குருராஜ் இந்தக் கொலைகளை செய்ததால அவருக்கு தண்டனை கிடைக்காதா…”

“நியாயப்படி அவரை தண்டிக்க முடியாது அச்சு… சுயநினைவோட செய்தா தான் தண்டனை கொடுக்க முடியும்… மனநிலை சரியில்லாத குற்றவாளிகளை அரசாங்கத்தோட மனநல காப்பகத்தில் வச்சு சிகிச்சை கொடுப்பாங்க…” என்றான் அஜய்.

“எனக்கு சில டவுட் இருக்கு, கிளியர் பண்ணறிங்களா…?”

“என்ன டவுட் அச்சு…?”

“வர்ஷாவை அந்தகன் கடத்தினான்… ஓகே, அரவிந்தை எப்படி முதுகுத் தண்டு வடத்துல விஷ ஊசியால பச்சை குத்தினான்… இதயா வீட்டுக்கு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் எப்படி அனுப்பினான்… அவளை எப்படி கடத்தி பாம்பு விஷத்தால கொன்னான்…” என்றாள் யோசனையுடன்.

சிரித்த அஜய் “இதெல்லாம் கேக்காம இருப்போமா…? அந்த குரு கொலை பண்ணறதை ரொம்ப ரசிச்சு சந்தோஷமா என்ஜாய் பண்ணிப் பண்ணிருக்கான்…” என்றவன் சொல்லத் தொடங்கினான்.

“அரவிந்த் கிட்ட இதயா அவன்கிட்ட பேசணும்னு சொன்னான்னு கூட்டிட்டுப் போயி விஷம் கலந்த ஜூஸ் குடிக்க கொடுத்து குடோன்ல வச்சு செத்த உடம்புல ஊசியால பச்சை குத்திருக்கான்… அதை இதயா வீட்டுக் கார்ல போட்டுட்டு போயிட்டான்… இவனுக்கு ஹெல்ப் பண்ண தன் வீட்டு வாட்ச்மேன் ஒருத்தனை பணம் கொடுத்து செட் பண்ணி வச்சிருக்கான்… அந்த வாட்ச்மேன் தான் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை இதயா வீட்டுல கொடுக்கப் போனது… அந்தாளை வச்சே இதயா டாக்ஸிக்கு வெயிட் பண்ணப்ப இவங்க காருல ஏற வச்சு கடத்தி இருக்காங்க… பாம்பு பிடிக்கிறவன் கிட்ட அந்தாளு தான் விஷத்தை வாங்கி குருவுக்கு கொடுத்திருக்கான்… அதை இதயா குடிச்சிட்டு மயக்கமா இருக்கும்போது கழுத்துல நெருஞ்சி முள் வச்சு குத்தி டிஸைன் பண்ணிருக்கான்…”

“அடப் பாவமே, அந்த சைக்கோ இவ்ளோ யோசிபானா…? அவனுக்கு உதவி பண்ண வாட்ச்மேனை அரஸ்ட் பண்ணியாச்சா…?”

“குருவோட அம்மா வர்ஷாவைக் காப்பாத்தும் போது இந்த வாட்ச்மேனுக்கு பணம் கொடுத்து இந்தப் பக்கமே எட்டிப் பார்க்காதேன்னு சொல்லி எங்கயோ போன்னு அனுப்பி விட்டுட்டாங்க, அவனைக் கண்டு பிடிக்க ஏற்பாடு பண்ணிருக்கோம்…” என்றான் அஜய்.

நீண்டதாய் ஒரு பெருமூச்சு விட்ட அர்ச்சனா, “ம்ம்… ஒருவிதத்துல இந்த குரு செய்தது கோபமா இருந்தாலும் இன்னொரு பக்கம் பரிதாபமாவும் இருக்கு… சரி, நம்ம ஆத்ரேயனும், காசியும் என்ன ஆனாங்க… காசி செய்த கொலைகளுக்கு அவரை அரஸ்ட் பண்ணலியா…?”

“அவர் என்னைக்கோ செய்த கொலைக்கு இனி தண்டனை வாங்கிக் கொடுத்து என்னாகப் போகுது, அதும் இல்லாம அவர் ஒரு நல்ல மனுஷன்… மறைச்சு வச்சது அப்படியே இருக்கட்டும்னு, நானும் கோகுலும் இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம்…”

“கமிஷனர் சாருக்கு கூட சொல்லலியா…?”

“ம்ஹூம்… அவர் மூடிப் புதைச்ச விஷயத்தை நாங்க மறுபடி தோண்ட விரும்பலை… சட்டமும், நீதியும் தப்பு செய்யுறவங்களை தண்டிக்க வேண்டி தான்… அந்த பாலாஜியும், தேன்மொழியும் தண்டிக்கப்பட வேண்டியவங்க, அதை தான் காசி செய்திருக்கார்… அந்த பாவத்தைப் போக்க ஆத்ரேயன் போல ஒரு டிரான்ஸ்ஜென்டருக்கு வாழ்க்கை கொடுத்து புண்ணியத்தையும் தேடி இருக்கார்… அவரோட கடைசி காலம் நிம்மதியா சந்தோஷமா இருக்கட்டும்…” என்ற கணவனைப் பெருமையுடன் நோக்கினாள் அர்ச்சனா.

“சரி, பார்த்தது போதும்… இத்தனை நாள் கேஸுக்காக அலைஞ்சதுல உன்னை சரியா கவனிக்கலை, கொஞ்சம் கவனிக்கட்டுமா…” என்றவன் அவளை இழுத்து நெற்றியில் தன் நெற்றியை முட்ட புன்னகைத்தாள் அச்சு.

“ஹூக்கும் இப்பவாச்சும், பொண்டாட்டியைக் கொஞ்சணும்னு உங்களுக்கு நினைப்பு வந்துச்சே…”

“அதெல்லாம் எப்பவும் தான் இருக்கு…” என்றவன் அவளை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொள்ள அவன் மீசையை நோண்டிக் கொண்டே சொன்னாள் அர்ச்சனா.

“நேசத்தின் நிறம் வெண்மையா இருந்தா மட்டும் தான் வாழ்க்கை வண்ணமா இருக்கும் இல்லங்க, அடுத்து RK சார் கிட்ட சொல்லி நேசத்தின் நிறம் வெண்மைன்னு கதை எழுத சொல்லணும்…” என்றவளின் இதழை கையால் மூடியவன்,

“அதெல்லாம் இருக்கட்டும், இப்ப நாம நேசத்தின் வாசத்தைப் படிப்போமா…” என அவள் நாணத்தில் அவன் நெஞ்சிலேயே முகம் மறைத்தாள். இதற்குமேல் அவர்களின் சொர்க்கத்தில் கட்டெறும்பாய் இருக்காமல் நாமும் விடை பெறுவோம்…

…….சுபம்…….

Advertisement