“உண்மைதான், நீங்க சொல்லுற போல ஆத்ரேயன் கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்ட ஆள்தான்… அதுக்காக அந்தகன் பேருல நடந்த கொலையை எல்லாம் பண்ணினது ஆத்ரேயன்னு சொல்லுறது சரி இல்லையே…”
“மிஸ்டர் காசிநாதன்… இந்த கேஸ்ல முதன் முறை உங்களை விசாரிக்க வீட்டுக்கு வந்தபோதே உங்களை கவனிச்சோம்… ஒரு பதட்டம் இருந்துச்சு, அதோட நாங்க உங்க வீட்டை சுத்திப் பார்த்தது, கிரைம் நாவல்ஸ் பத்தி கேட்டது எதுவுமே பிடிக்கலைன்னு உங்க முகமே காட்டுச்சு, அதுக்கு வேற என்ன அர்த்தம் இருக்க முடியும்…” என்றதும் காசி மெல்லப் புன்னகைத்தார்.
“சார், உங்க சந்தேகம் தப்பில்லை, அதுக்குக் காரணம் இருக்கு… நான் எப்பவோ பண்ணின பாலாஜி, தேன்மொழி கொலைகளை நீங்க ஸ்மெல் பண்ணிருவிங்களோங்கற பயம் தான் எங்க விருப்பமின்மைக்கும், பதட்டத்துக்கும் காரணமே ஒழிய இப்ப நடந்திட்டு இருக்கிற கொலைகளுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை… நாங்க நினைச்ச போல நீங்க பழசைத் தோண்டி எடுக்கவும் செய்துட்டீங்க, அதுல எனக்கு வருத்தம் இல்லை, எப்பவா இருந்தாலும் செய்த கொலைக்கு தண்டனையை அனுபவிக்க தானே வேணும்… ஆனா, ஆத்ரேயனுக்கும் பழைய சம்பவத்துக்கும், இப்ப நடக்கிற சம்பவங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை… நீங்க உங்க விசாரணையை வேறு கோணத்துல கொண்டு போகலேன்னா உண்மையான குற்றவாளி தப்பிக்க வாய்ப்பிருக்கு…” காசிநாதனின் வார்த்தைகளும், முகமும் அவர் சொல்லுவது உண்மை என்றே தோண வைத்தது.
அஜய் யோசனையுடன் காசியிடம் கூறினான்.
“நீங்க சொல்லுறது பாதி சரியா இருந்தாலும் ஆத்ரேயனை எங்க சந்தேக லிஸ்ட்ல இருந்து விலக்க எந்த காரணமும் சரியாப் பொருந்தி வரலியே, எல்லாமே அவருக்கு எதிரா தானே இருக்கு…” என்றான் அஜய்.
சற்று மௌனித்த காசிநாதன் இறுகிய முகத்துடன் அவர்களை நிமிர்ந்து பார்த்தார்.
“சார், ஆத்ரேயன் இந்தக் கொலைகளைப் பண்ணலைன்னு என்னால நிச்சயமா சொல்ல முடியும்… ஏன்னா, அவன் நீங்க நினைக்கிற போல சாதாரண ஆள் கிடையாது…” என்றவர் சற்றுத் தயங்கிவிட்டு, “ஆத்ரேயன் ஒரு டிரான்ஸ்ஜெண்டர்…” எனவும் அதிர்ச்சியுடன் நோக்கினர்.
“எ… என்னது…” கோகுல் அதிர்ச்சியில் கண்கள் விரிக்க, சரியாய் அப்போது வாசலில் கார் ஹாரன் சத்தம் கேட்க மூவரும் திரும்பினர்.
ஆத்ரேயனின் கார் உள்ளே நுழைந்து கொண்டிருந்தது.
சற்று பதட்டமாய் உள்ளே வந்தவன் இவர்களைக் கண்டதும், “எ..என்ன சார், அங்கிள்கிட்ட ஏதோ விசாரிக்க வந்ததா சொன்னிங்கலாம்…” கேட்டுக் கொண்டே காசியைப் பார்க்க அவர் கண்கள் கலங்கியிருக்க அவரிடம் சென்று கைகளைப் பற்றிக் கொண்டான்.
“அங்கிள்… என்னாச்சு, எதுவும் பிரச்சனை இல்லையே…” என்றவன் அவர் முகத்தில் பதிலைத் தேட அமைதியாய் தலையைக் குனிந்து கொண்டார் காசி.
“இத்தனை வருஷமா நான் மறைச்சு வச்ச உண்மை எல்லாம் அவங்களுக்கு தெரிஞ்சுருச்சு ஆதிரா…” எனவும் அவன் டென்ஷனாய் அவர் கைகளைப் பற்றிக் கொள்ள, “எனக்கு அது பிரச்சனையில்லை, நான் செய்தது தப்பில்லைன்னு என் மனசுக்குத் தெரியும்… சட்டத்தோட பார்வைல அது தப்புன்னு எனக்கு தண்டனை கொடுத்தாலும் கவலையில்லை, அனுபவிக்க நான் தயாராத்தான் இருக்கேன்… ஆனா, இவங்க உன் மேல சந்தேகப் படுறாங்க…”
காசி சொன்னதைக் கேட்டு திகைப்புடன் அவர்களிடம் திரும்பினான் ஆத்ரேயன்.
“என் மேல என்ன சந்தேகம் சார்…”
“சொல்லறோம், அதுக்கு முன்னாடி உங்களைப் பத்தி இவர் சொன்ன விஷயம் உண்மையான்னு சொல்லுங்க…”
“என்ன விஷயம் சார்…”
“நீங்க ஒரு டிரான்ஸ்ஜெண்டரா…?” என்றதும் அவன் முகம் சட்டென்று சிறுக்க, வலியோடு காசியைப் பார்த்தான்.
“சாரி ஆதிரா, நீ டாக்டர் ரங்கராஜன் கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்துக்கிறது தெரிஞ்சு தான் வந்திருக்காங்க, அதோட நீ தான் தொடர் கொலைகளைப் பண்ணுற குற்றவாளின்னு சொல்லவும் இதை சொல்ல வேண்டியதாப் போயிருச்சு…”
காசி வருத்தத்தோடு சொல்ல வேதனையுடன் தலையைக் குனிந்து கொண்ட ஆத்ரேயன், “அங்கிள் சொன்னது உண்மை தான், நான் ஒரு டிரான்ஸ்ஜெண்டர்… ஆதிராங்கிற பொண்ணாப் பிறந்து ஆத்ரேயனா மாறிய ஆண் தான் நான்… பெத்தவங்களே என் மாற்றத்தை ஏத்துக்க முடியாம வீட்டை விட்டுத் துரத்தி விட்டப்ப மும்பை வீதில அழுதுட்டு எங்க போகறதுன்னு போக்கிடம் தெரியாம நின்னப்பதான் அங்கிளை நான் பார்த்தேன்…” சொன்னவன் கனிவோடு அவரை நோக்க காசி மீதியைத் தொடர்ந்தார்.
“ம்ம்… அன்னிக்கு தான் ஆராதனாவோட இறுதிக் காரியத்தை முடிச்சிட்டு நான் வேதனையோட ஜுஹூ பீச்சுல உக்கார்ந்து கண்ணீர் விட்டுட்டு இருந்தேன்… ஆனந்தியை சதியால இழந்து, அவ ஆசையாப் பெத்தெடுத்த ஆராதனாவை விதியால இழந்த தவிப்புல மனசு உடைஞ்சு போய் உக்கார்ந்திருந்தேன்… அப்ப ஒரு பதினாறு வயசுப் பொண்ணு சுரிதார் போட்டுக்கிட்டு வேகமா கடல் தண்ணிக்குள்ள இறங்கிட்டு இருந்தா… சட்டுன்னு பார்த்ததும் எனக்கு ஆராதனா போல இருக்கவே நான் அவளைப் பிடிக்க ஓடினேன்… தற்கொலை பண்ணிக்கப் போனவளைத் தடுத்து நிறுத்தவும் செய்தேன்… அப்ப தன் பிரச்சனையை சொல்லி, வீட்டை விட்டே பெத்தவங்க துரத்திட்டாங்கன்னு சொல்லிக் கதறினா… என்னை ஏன் காப்பாத்துனிங்க, நான் இந்த உலகத்துல வாழத் தகுதி இல்லாதவன்னு புலம்பினா… அப்பதான் எனக்கு மனசுல ஒரு தெளிவு தோணுச்சு… ஆராதனா இல்லேன்னாலும் அவ இடத்துல ஆதிராவை வச்சு அவளோட பிரச்சனைகளைத் தீர்த்து நல்லபடியா வாழ வைக்கணும்னு முடிவு பண்ணி, ஆதிராகிட்ட வாக்கு கொடுத்தேன்… ஒரு வருஷ ட்ரீட்மெண்டுல ஆதிரா, ஆத்ரேயனா மாறினா… பத்தாவது பரீட்சை எழுதி இருந்தவளை மேல படிக்க வச்சு, ஒரு கம்பெனியை நிர்வகிக்க வேண்டிய விஷயங்களை எல்லாம் கத்துக்க வச்சேன்… ஆத்ரேயன் எல்லாத்துக்கும் தயாரானதும் நாங்க சென்னை வந்து கம்பெனி தொடங்கினோம், ஆனந்தியோட கம்பெனியையும் வாங்கினோம், இதுதான் நடந்தது….” ஒரு நீண்ட பெருமூச்சுடன் காசிநாதன் சொல்லி முடிக்க, அஜய், கோகுல் இருவரும் பிரமிப்புடன் நோக்கி நின்றனர்.
சில நொடி மௌனங்களோடு கழிய அவர் சொன்ன விஷயங்களை உள்வாங்கிக் கொண்ட அஜய் கேட்டான்.
“முன்னாடி ஆத்ரேயன் பாமிலி இறந்துட்டதால அவரைத் தத்தெடுத்து வளர்த்துனதா சொன்னிங்களே….”
“அது சும்மா சொன்னேன் சார்…”
“ம்ம்… டாக்டர் ரங்கராஜன் கிட்ட எதுக்காக ட்ரீட்மென்ட்…?”
“ஆத்ரேயன் ஒரு பொண்ணை மனசார விரும்பினான், அவளைக் கல்யாணம் பண்ணிக்கற வரைக்கும், போனப்ப தன்னைப் பத்தின உண்மையை மறைக்கக் கூடாதுன்னு எல்லாத்தையும் சொல்லவும், அந்தப் பொண்ணு கேவலமா திட்டி காதலும் வேண்டாம், கல்யாணமும் வேண்டாம்னு போயிருச்சு, அந்த ஏமாற்றத்தை இவனால தாங்கிக்க முடியாம ராத்திரி எல்லாம் தூங்காம புலம்பிட்டு இருப்பான்… அதோட கொஞ்சம் எக்ஸ்ட்ரீமா நடந்துக்கத் தொடங்கினான்… என்னால எல்லா ஆண்களையும் போல லவ் பண்ணவோ, கல்யாணம் பண்ணவோ முடியாதான்னு… ஒரு மாதிரி டிப்ரஷன், கைல கிடைக்கறதை எல்லாம் எடுத்துப் போட்டு உடைப்பான்… சின்ன விஷயத்துக்கு கூட ஓவரா கோபப்பட்டு பிரஷர் அதிகமாகி யாரையும் திட்டி, அடிச்சிருவான்… மாடில இருந்து கீழே குதிக்கலாம்னு தோணுது, அழகான எதையாச்சும் பார்த்தா கொடுமை பண்ணி நாசம் பண்ணத் தோணுதுன்னு எல்லாம் சொல்லுவான், அஞ்சாறு மாசம் ஆபீஸை கவனிக்காம அப்படியே இருந்தவனை டாக்டர் ரங்கராஜன் கிட்ட அழைச்சிட்டுப் போயி ட்ரீட்மென்ட் கொடுக்கத் தொடங்கவும் தான் சரியாகத் தொடங்குச்சு, இப்பவும் மெடிசின் எடுத்துக்கறான்…” என்றார் காசிநாதன்.
காசியின் பிம்பம் மனதுக்குள் உயர்ந்து கொண்டே போக, அவரை ஒரு மெச்சுதலுடன் பார்த்தான் அஜய்.
“இவ்ளோ விஷயம் பண்ணிருக்கீங்க, ரியல்லி யூ ஆர் கிரேட்…” மனதாரப் பாராட்டினான் அஜய்.
“ஆமா சார், யாருமில்லாத எனக்கு என் மன, உடல் உணர்வுகளைப் புரிஞ்சு புது ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொடுத்த தெய்வம் என் அங்கிள்…” என்ற ஆத்ரேயனின் குரல் கம்மி தொண்டைக்குள் இடறியது.
“ம்ம்… ஆனாலும் அந்தகன் தொடர்பா இப்ப நடந்திட்டு இருக்கிற நேசத்தின் நிழல் கறுப்பு சம்பவங்கள் எல்லாத்துலயும் உங்க மேல உள்ள சந்தேகம் போகலியே…”
“எ..என்ன சார் சொன்னிங்க, அந்தகனா…?”
“ஆமாம், வர்ஷா வீட்டுல பெயின்ட் பூசின பெண்ணோட டெட்பாடி கிடைச்சப்ப உங்ககிட்ட கேட்டமே, நீங்க இந்தப் பேரை முன்னமே எங்காச்சும் கேட்டு இருக்கீங்களா…?” என்றதும் ஆத்ரேயனின் முகம் யோசனையைக் காட்டியது.
“ஒ…ஒரு நிமிஷம் சார்…” என்றவன் தனது அலைபேசியை எடுத்து எதையோ தப்பி சில நிமிடத்தில் மலர்ந்த முகமாய் அவனிடம் அதைக் காட்டினான்.
“சார், அந்தகன்ங்கற பேருல பேஸ்புக் அக்கவுண்ட்ல இருந்து எனக்கு பத்து நாள் முன்னாடி ஒரு பிரண்ட் ரிக்வஸ்ட் வந்திருக்கு… நான் இன்னும் அதை அக்சப்ட் பண்ணல, ரெண்டு நாள் முன்னாடி தான் சும்மா செக் பண்ணும்போது இந்தப் பேரைப் பார்த்துட்டு இப்படி எல்லாம் கூடவா பேரு வைப்பாங்கன்னு யோசிச்சேன்…” என்றவன் அந்த புரபைலை ஓபன் செய்து காண்பிக்க இருவரும் பார்த்தனர்.
ஒரு கோரமான முகமூடிக்குள் ஒளிந்து கொண்ட முகத்துடன் இருந்த அந்த புரபைல் பார்க்கும்போதே சற்று அச்சத்தைக் கொடுக்க அதைக் கிளிக் செய்து மியூச்சுவல் பிரண்ட்சில் உள்ளவர்களைப் பார்க்க, அஜயின் கண்கள் திகைப்பில் விரிந்தது.
“தேங்க்ஸ் பார் யுவர் சப்போர்ட் மிஸ்டர் ஆத்ரேயன், உங்ககிட்ட அப்புறம் பேசறோம்…” சொன்னவன் வேகமாய் வெளியே செல்ல கோகுல் பின்தொடர்ந்தான்.
கோகுல் காரை எடுக்க உள்ளே அமர்ந்தவனிடம், “சார்… காசியை அந்த பழைய மர்டர் கேஸ்ல அரஸ்ட் பண்ண வேண்டாமா…” என்றான்.
“அதை அப்புறம் பார்த்துக்கலாம் கோகுல்… நமக்கு இப்போ முக்கியம் அந்தகன் யாருன்னு தெரியறது தான், நீங்க சீக்கிரம் யுவராஜ் வீட்டுக்குப் போங்க…” என்றவன் கிருஷ்ணாவுக்கு மீண்டும் அழைத்தான்.
அவர் அழைப்பை எடுக்கவில்லை.
“சார், கிருஷ்ணா சார் என்ன சொன்னார்…? வர்ஷா பேசினாளா, என்ன சொன்னா…?” கோகுல் கேட்டான்.
“தெரியலை கோகுல், நம்மை உடனே கிளம்பி யுவராஜ் வீட்டுக்கு வர சொல்லிட்டு அழைப்பை கட் பண்ணிட்டார்…”
“சார், அந்த அந்தகன் ஒருவேளை யுவராஜ் தானோ…?”
கோகுல் கேட்க யுவராஜ்க்கு அதற்கான பாசிபிலிடீஸ் இருக்கிறதா என்று மனதுக்குள் அனலைஸ் பண்ணத் தொடங்கிய அஜய், நேசிகாவின் கொலையைத் தவிர மற்ற கொலைகளில் அவனை லிங்க் பண்ணுவதற்கான காரணம் சரியாய் பிடிபடாததால் யோசனையுடன் உதட்டை பிதுக்கிவிட்டு, “எனக்கு என்னவோ அது யுவாவா இருக்க வாய்ப்பில்லைன்னு தான் தோணுது, ஆனா, நம்மளை கிருஷ்ணா யுவராஜ் வீட்டுக்கு வர சொன்னதை வச்சுப் பார்க்கும்போதும், நாம கேள்விப்பட்ட சில விஷயங்களை வச்சுப் பார்க்கும்போதும் அந்த அந்தகன் ஒருவேளை யுவாவோட தம்பியா இருக்கலாமோன்னு சந்தேகம் வருது…”
“வாவ்… கிரேட் சார், அப்படி தான் இருக்கும்னு எனக்கும் தோணுது… யுவா தம்பி கூட ஒரு கிரைம் நாவல் பைத்தியம் தான்…” என்றவன், “சார், ஆத்ரேயன் சொன்ன அந்த அந்தகன் ஐடி ல மியூச்சுவல் காட்டினதுல இப்போ பாக்கி இருக்கிறது வர்ஷாவும், யுவாவும் மட்டும் தான்… நாம யுவாவை பாலோ பண்ணினோம், பட், அவர் தம்பியை அவ்வளவா கவனிக்காம விட்டுட்டோமே…” அங்கலாய்த்தான் கோகுல். அவன் சொன்னதை ஆமோதிப்புடன் கேட்டிருந்தான் அஜய்.
சிறிது நேரத்தில் கார் யுவா வீட்டை அடையும்போது சற்றுத் தள்ளி காரை நிறுத்தி காத்திருந்தார் கிருஷ்ணா.