Advertisement

 அத்தியாயம் – 23

மாடியில் வெளியே தாளிடப்பட்ட கதவை வெகு நேரமாய் பாலாஜியும், தேன்மொழியும் தட்டிக் கொண்டிருந்தனர். மொபைல், போன் எதுவும் அங்கே இல்லாததால் டென்ஷனோடு அவர்கள் கத்திக் கொண்டிருக்க, கோபத்துடன் ஆராதனாவைத் தூக்கிக் கொண்டு கீழே வந்த காசியின் உள்ளம் வேதனையில் பொருமியது.

“ஐயோ ஆனந்திமா…! சொத்துக்காக அநியாயமா உன்னைக் கொலை பண்ணிருக்காங்களே… இந்த வீட்டுல அண்ணன்னு உன் கூடவே இருந்தும் உன்னைக் காப்பாத்த முடியாத பாவியாகிட்டனே… அந்தப் பாவியைப் பத்தி தெரிஞ்சும் உஷாரா இல்லாம உன்னைப் பலி கொடுத்துட்டனே… இந்தக் குழந்தையைக் கூட யோசிக்காம பணத்துக்காக பிசாசுங்க, இப்படிப் பண்ணிட்டாங்களே… நான் என்ன பண்ணுவேன்…?” கண்ணீருடன் புலம்பிக் கொண்டே ஹாலில் அமர்ந்தவன் மடியில் அமர்ந்திருந்த குழந்தை அவனையே பார்த்தது.

“ம்மா..மா…” என மழலையில் அழைத்து அவன் கன்னத்தைத் தன்னை நோக்கித் திருப்ப குழந்தையைக் கண்ட காசியின் மனம் வேதனையில் விம்மியது.

“ஆருக்குட்டி… இந்த மாமா பாவிடா, கூடவே இருந்தும் உன் அம்மாவைக் காப்பாத்த முடியாத பாவி…” சொல்லிக் கொண்டே அவளை அணைத்துக் கொண்டு அழத் தொடங்கினான்.

“ம்..மாம்மா, மம்மு வேணு…” அவன் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சியபடி கேட்க பதறிப் போனது அவன் நெஞ்சம்.

“குழந்தை நைட்டுல இருந்து ஒண்ணுமே சாப்பிடலியே…” என பதைப்புடன் எழுந்து அடுக்களைக்கு சென்றவன் பால் கலந்து பிஸ்கட்டுடன் கொடுக்க, வயிறு நிறைந்து அவள் பொம்மையோடு விளையாடத் தொடங்கினாள்.

அவளையே பார்த்துக் கொண்டு ஆனந்தியை யோசித்துக் கொண்டிருந்த காசியின் மனதில் பாலாஜியை வெட்டிப் போடும் வெறி வந்தது.

“பாவி… கட்டின பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணி அவ வாழ்க்கையைக் கெடுத்ததோட அவளைக் கொலையே பண்ணிட்டானே… அவனையும், இந்தக் குடும்பத்தைக் கெடுக்க வந்த மூதேவி தேன்மொழியையும் சும்மா விடக் கூடாது…” கோபத்துடன் எழுந்தவன் யோசித்தான்.

ஹாலில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவன் மனது ஒரு தீர்மானத்துக்கு வந்தது. மாடியில் கதவு தட்டும் ஓசை இப்போதும் கேட்டுக் கொண்டே இருந்தது. அக்கம் பக்கத்தில் வீடு இல்லாத தனித்த இடம் என்பதால் வெளியே சத்தம் கேட்க வாய்ப்பில்லை. வீட்டில் பணியாளர்களும் யாரும் இல்லாதது சாதகமாய்ப் போக, “உடனே ஏதாவது செய்தாக வேண்டும்…” என காசியின் மனம் பரபரத்தது.

குழந்தையை படுக்கை அறைக்குள் விளையாடவிட்டு கதவை வெளிப்புறமாய் தாளிட்டவன் அடுக்களைக்கு சென்று மிளகாய் தூள் பாட்டிலை எடுத்துக் கொண்டான். வெளியே சென்றவன் தோட்டத்தில் கிடந்த உருட்டுக் கட்டை ஒன்றையும் எடுத்துக் கொண்டு மாடிக்கு நடந்தான்.

ஒரு கையால் மெல்ல கதவைத் திறக்க, அவனைத் தாக்கி வெளியே கடக்கத் தயாராய் நின்ற இருவர் முகத்திலும் மிளகாய்த் தூளை ஸ்பிரே செய்ய கண்கள் எரிச்சலில் கலங்க கண்ணை மூடிக் கொண்டு குதிக்கத் தொடங்கினர்.

“டேய் காசி, வேலைக்கார நாயே… என்னடா பண்ணித் தொலைச்ச… ஆ…!! எரியுதே…” பாலாஜி கதற தேன்மொழியும் எரிச்சலில் குதித்தாள்.

“வேணாம் காசி, விளையாடாதே, ஒழுங்கா நாங்க சொன்னதுக்கு ஒத்துகிட்டு ஊரைவிட்டுப் போயிடு… இல்லேன்னா நடக்கிறதே வேற…” அந்த நிலையிலும் கண்ணைக் கசக்கிக் கொண்டு தேன்மொழி மிரட்டலாய் பேச கோபத்துடன் உருட்டுக்கட்டையை எடுத்த காசி அவள் மண்டையில் ஓங்கி ஒரு அடி வைக்க அலறினாள்.

“டேய்… அவளை என்னடா பண்ணற…” கேட்டுக் கொண்டே கண்ணைத் திறக்க முயன்ற பாலாஜியின் மண்டையிலும் அடுத்தடுத்து வெறியோடு நான்கைந்து அடி கட்டையால் விழ அலறிக் கொண்டு ரத்தத்துடன் கீழே சரிந்தான்.

தேன்மொழி ஒரு கையால் தலையைப் பிடித்துக் கொண்டு கதவைத் திறந்து வெளியேற முயல மீண்டும் ஒரு பலமான அடியை அவள் மண்டை சந்திக்க வேண்டியிருந்தது.

“ஆ…” அலறிக் கொண்டே மடிந்து அமர்ந்தவளை இழுத்துச் சென்று நாற்காலியில் கட்டிப் போட்டான் காசி.

“அவள விடுடா…” பாலாஜி தலையைப் பிடித்தபடி எழுந்து வர காசி ஓங்கி அவன் காலில் அடிக்க மடங்கி விழுந்தான்.

ஒரு கயிறை எடுத்து கீழே கிடந்தவனின் கை காலைக் கட்டியவன் தேன்மொழியிடம் வந்தான்.

“சொந்த தங்கை மாதிரி நேசிச்ச என் ஆனந்தியைக் கொன்னுட்டு அதை தைரியமா என்கிட்ட வேற சொல்லுவிங்களா…” கேட்டுக் கொண்டே அவள் கன்னத்தில் ஓங்கி அறைய முன்னமே நிலை குலைந்து கண்கள் சிவக்க அமர்ந்திருந்தவள் அரண்டு போனாள்.

“ஆஆ… டேய் வேண்டாம், என்னை அடிக்காத…” என்றவளை மீண்டும் முகத்திலேயே அறைய பல் பட்டு உதடு கிழிந்து இதழோரம் ரத்தத்துளி சிறு கோடாய் எட்டிப் பார்த்தது.

“டேய் அவளை ஏதாவது செய்தா உன்னை சும்மா விட மாட்டேன்…” தலை உடைந்து வழிந்த ரத்தத்திற்கு கொஞ்சமும் குறையாமல் சிவந்திருந்த விழிகளோடு பாலாஜி காசியை எச்சரிக்க ஓங்கி வயிற்றில் உதைத்தான்.

“ச்சீ நாயே…! உன்னை உயிரா நேசிச்ச ஆனந்தியை கொஞ்சம் கூட கருணையே இல்லாமக் கொன்னுட்டு அடுத்தவ புருஷனைக் கைக்குள்ள போட்டுகிட்ட இந்த ….நாயை அடிச்சா உனக்குப் பதறுதா…” தகாத சொல்லில் கேட்டுக் கொண்டே மீண்டும் உதைக்க பாலாஜி வலியில் கதறினான்.

பாலாஜியின் மண்டையில் ஆத்திரத்துடன் காசி ஓங்கி அடிக்க பலமாய் விழுந்த அடியில் மண்டை பிளந்து ரத்தம் சீறிக் கொண்டே வெளியே வர பார்த்துக் கொண்டிருந்த தேன்மொழி பதறினாள்.

“ஐயோ, அவரை ஒண்ணும் பண்ணிடாத… எங்களுக்கு சொத்தும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்… உயிரோட விட்டிரு, போயிடறோம்…” கத்தினாள்.

அவளைப் பார்த்து ஒரு குரூர சிரிப்பு சிரித்த காசி, “ஓ… சொத்தா, உயிரான்னு வரும்போது உங்களுக்கு உயிர் தான் முக்கியமா… உங்க உயிர்னா வெல்லம், மத்தவங்க உயிரு உங்களுக்கு சக்கையா, அவ்ளோ ஈஸியா தூக்கிப் போட…” காசி சொல்லிக் கொண்டிருக்க பாலாஜியின் மண்டையில் எசகு பிசகாய் விழுந்த அடி அவன் நினைவைக் காவு வாங்கிக் கொண்டிருக்க கண்கள் மெல்ல மூடி மயக்கத்துக்கு சென்று கொண்டிருந்தான்.

“காசி, நாங்க பேசின எதையும் மனசுல வச்சுக்காத… அவருக்கு ரொம்ப ரத்தம் போகுது, இப்படியே விட்டா உயிரே போயிடும்… ப்ளீஸ், எங்களை விட்டுரு, நாங்க உங்க கண்ணுல படாம எங்காச்சும் போயிடறோம்…” என்றாள் கை கூப்பி வேண்டிக் கொண்டே.

“ஓ… அப்படிங்கற…” என்ற காசி ஏதோ யோசித்தான்.

“ஓகே, நீ சொன்னதுக்கு சம்மதிக்கறேன், ஆனா ஒரு கண்டிஷன்…” என்றான் பாலாஜியின் ரத்தம் வழியும் மண்டையைப் பார்த்து சந்தோஷத்துடன்.

“எ..என்ன பண்ணனும் காசி, சொல்லு பண்ணறேன்… அவரை முதல்ல ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போ…” கெஞ்சினாள்.

“என்னடி…? கட்டின பொண்டாட்டியாட்டம் ரொம்ப தான் பதறுற, முதல்ல நான் சொல்லறதை செய்…”

“எ…என்ன பண்ணனும்…” என்றாள் பாலாஜியின் தலையை சுற்றி சிறு குட்டையாய் தேங்கத் தொடங்கும் குருதியை பீதியான விழிகளுடன் நோக்கிக் கொண்டே.

“நீயும் இதோ இந்த கேடு கெட்டவனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புனீங்க, அதனால யாருக்கும் தெரியாம ஊரை விட்டு ஓடிப் போயிட்டதா லெட்டர் எழுதிக் கொடுக்கணும்…”

“ச..சரி, எழுதித் தரேன்…” என்றாள் தேன்மொழி.

“ம்ம்… இதோ வரேன்….”

சொன்ன காசி அடுத்த ஐந்தாவது நிமிடம் பேப்பர் பேனாவுடன் வர அவன் சொன்னது போலவே அச்சுப் பிசகாமல் எழுதிக் கொடுத்தாள் தேன்மொழி.

“ம்ம்… ரொம்ப தேங்க்ஸ், இனி உங்க உயிர் இந்த பூமிக்கு பாரமா இருக்கக் கூடாது… “ என்றவன் அவள் மண்டையில் தன் பலத்தைக் காட்டி அடி ஒன்றைக் கொடுக்க, அடுத்த நிமிடம் மயங்கிப் போனாள்.

தேன்மொழியைக் கட்டியிருந்த கயிறை அவிழ்த்த காசி ஆத்திரத்துடன் அவள் கழுத்தை சுற்றி நெறிக்க மயக்கத்திலேயே செத்துப் போனாள் தேன்மொழி. அடுத்து பாலாஜியின் கதையையும் அதே போல முடித்ததும் தான் அவன் மனதின் கோபம் சற்றுத் தணிந்தது.

அடுத்து ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் செயல்பட்டான் காசி. ஆராதனா இருந்த அறையின் கதவைத் திறந்து பார்க்க அவள் கட்டிலில் அமர்ந்து விளையாடிக் கொண்டு அப்படியே உறங்கிப் போயிருந்தாள். வேகமாய் தோட்டத்துக்கு சென்று தென்னை மரத்துக்காய் எடுத்திருந்த குழியை மேலும் ஆழமாய் தோண்டி இருவரின் உடலையும் குழியில் கொண்டு வந்து போட்டான். சுற்றிலும் பார்வையை ஓட்டியவன் யாரும் இல்லாததை உறுதிபடுத்தி, புதிதாய் வாங்கி வைத்திருந்த தென்னங்கன்று ஒன்றை அக்குழியில் வைத்து வேகமாய் மண்ணைத் தள்ளத் தொடங்கினான்.

“சனியனுங்க… செத்தாச்சும் இந்த தென்னைக்கு உரமாப் போகட்டும்…” ஆத்திரத்துடன் சொல்லிக் கொண்டே குழியை மூடினான். காண்பதற்கு தென்னங்கன்று வைக்க குழி தோண்டிய போலிருக்க ஆசுவாசத்துடன் வீட்டுக்கு வந்தான்.

அதற்குப் பிறகு அந்த லெட்டரில் இருந்த வார்த்தைகளை வைத்து ஊரை நம்ப வைப்பது ஒன்றும் காசிக்குப் பெரிய விஷயமாய் இருக்கவில்லை. அரசல்புரசலாய் அவர்களின் கள்ள உறவு முன்னமே நிறையப் பேருக்குத் தெரிந்திருந்ததால் உண்மையென்றே நம்பி விட்டனர்.

நடந்து முடிந்ததை அஜயிடம் சொல்லிக் கொண்டிருந்த காசிநாதன் ஒரு பெருமூச்சுடன் நிறுத்தினார்.

“அதுக்கப்புறம் ஆறே மாசத்துல வீட்டையும், கம்பெனி, மத்த சொத்தையும் வித்துட்டு பாம்பே போயிட்டோம்…” என்றார்.

“ம்ம்… ஆனந்தியைக் கொன்ன ரெண்டு பேரையும் நீங்களே யாருக்கும் சந்தேகம் வராத போல கொன்னுட்டு மும்பை போயி செட்டில் ஆகியிருக்கீங்க…”

“ம்ம்…” என்ற காசிநாதனின் தலை குனிந்திருந்தது.

“ஓகே… ஆராதனாவை என்ன பண்ணினீங்க…? அவளையும் ஒரு ஸ்டேஜ்ல சுமையா இருக்கான்னு கொன்னுட்டீங்களா என்ன…?” அஜய் கேட்டு நிறுத்த வேதனையுடன் அவனைப் பார்த்த காசிநாதன் பதில் எதுவும் கூறவில்லை.

“சார், ஆனந்தி மேட்டர் எல்லாம் சரி… நடுவுல இந்த ஆத்ரேயன் காரக்டர் எப்படி இவருக்கு உறவா ஆச்சுன்னு சொல்லலியே…” என்றான் கோகுல்.

“என்ன மிஸ்டர் காசிநாதன், இதுக்கான பதில் உங்ககிட்ட இருக்கா, இல்ல நாங்களே தெரிஞ்சுக்கனுமா…?”

அஜய் கேட்க அவர் அமைதியாகவே இருந்தார்.

“ஆராதனா எங்கேன்னு சொல்லலியே…?”

“அ…அவ…” எனத் திணறியவர் ஒரு நிமிடம் தாமதித்து பிறகு கூறினார்.

“ஆராதனா இப்ப உயிரோட இல்லை சார்… நாங்க மும்பை போயி சில வருஷத்துல ஒரு காய்ச்சல் வந்து இறந்துட்டா…” என்றார் வருத்தத்துடன்.

“என்ன சொல்லறீங்க, ஆராதனா இறந்துட்டாளா…?”

“ம்ம்…” காசி தலையாட்ட கோகுலின் சட்டைப் பாக்கெட்டில் இருந்த செல்போன் இசையை வெளியிட்டது. எடுத்துப் பார்த்த கோகுல், “கிருஷ்ணா சார் கூப்பிடறார்…” என்றான்.

“ஸ்பீக்…” அஜய் சொல்ல காதுக்குக் கொடுத்தான் கோகுல்.

“கோகுல், வர்ஷா கண் முழிச்சிட்டா… நீங்க சீக்கிரம் கிளம்பி வர முடியுமா…?” கிருஷ்ணா சொன்னதை அஜயிடம் சொல்ல அவன் மொபைலை வாங்கி வெளியே சென்று பேசினான்.

“கிருஷ்ணா, எங்களுக்காக வெயிட் பண்ண வேண்டாம்… வர்ஷாவுக்கு சுயநினைவு இருக்கும்போதே கேட்க வேண்டிய விஷயங்களைக் கேட்டு ரெக்கார்டு பண்ணிருங்க… நாங்க இங்கே மிஸ்டர் காசிநாதன் கிட்ட பேச வேண்டியதைப் பேசிட்டு கிளம்பி வந்திடறோம்…” எனவும் சம்மதித்த கிருஷ்ணா அழைப்பைத் துண்டிக்க உள்ளே வந்தான் அஜய்.

காசியின் முன் அமர்ந்தவன், “மிஸ்டர் காசி… நீங்க சொன்ன பழைய கதை இருக்கட்டும், இப்போ நடந்திட்டு இருக்கிற கதைக்கு வருவோம்…” எனவும் யோசனையுடன் நிமிர்ந்தார்.

“நான் சொன்னது எல்லாமே உண்மை, கதை இல்லை…”

“ஓகே… இருக்கட்டும், ஆராதனா எப்படி இறந்தான்னு சொன்னிங்க…”

“அவளுக்கு ஆறு வயசு இருக்கும்போது மூளைக் காய்ச்சல் வந்துச்சு… ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி ட்ரீட்மென்ட் கொடுத்தும் பிரயோசனம் இல்லாம இறந்துட்டா…” சொல்லும் போதே கண்கள் கலங்க தொடர்ந்தார் காசி.

“அவளோட இழப்பை என்னால தாங்கிக்கவே முடியலை… அந்தக் குழந்தை முகத்தைப் பார்த்துதான் ஆனந்தியோட இழப்பை கொஞ்ச கொஞ்சமா மறந்திட்டு இருந்தேன்… என் வாழ்க்கை, லட்சியம் எல்லாமே அவளை நல்லபடியா வளர்த்து ஆளாக்கனும்னு மட்டும் தான் இருந்துச்சு… ஆனா, அவளும் என்னை ஏமாத்திட்டு அவ அம்மாகிட்ட போயி சேர்ந்துட்டா… அடுத்து என்ன பண்ணறதுன்னு தெரியாம பித்துப் பிடிச்சு இருந்தப்ப தான் அஞ்சு வயசு ஆத்ரேயனைப் பார்த்தேன்… மும்பைல நடந்த ஒரு பூகம்பத்துல அப்பா, அம்மா, வீடு எல்லாத்தையும் இழந்திட்டு அநாதையா நின்னுட்டு இருந்தான்… அவனோட அப்பாதான் நாங்க மும்பை போனப்ப எங்களுக்கு எல்லா உதவியையும் பண்ணிக் கொடுத்தார்… யாருமில்லாத அவனை கூட்டிட்டுப் போயி வளர்க்க ஆரம்பிச்சேன்… என்னோட இழப்புகளை அவனோட அருகாமை தான் விரட்டுச்சு… அவனும் என்னோட நல்லா ஒட்டிகிட்டான்… அவன் படிப்பு முடிஞ்சதும் மும்பைல இருக்கப் பிடிக்காம சென்னை வந்து இங்க ஒரு கம்பெனியைத் தொடங்கினோம்… ஆனந்தி கம்பெனியை வாங்கின நடராஜ் கிட்ட பேசி மறுபடி அந்த கம்பெனியையும் திரும்ப வாங்கினோம்…” காசிநாதன் நீண்ட பெருமூச்சுடன் சொல்லி முடிக்க வியப்புடன் கேட்டிருந்தனர்.

“அப்படின்னா ஆத்ரேயன் உங்க வளர்ப்புப் பிள்ளையா…?”

“ஆமா சார்…”

“ஓகே… இப்ப நடப்புக்கு வருவோம்… நீங்க ஆனந்தியைக் கொலை பண்ணின பாலாஜியையும், தேன்மொழியையும் கொலை பண்ணிப் புதைச்சது ஓகே… ஆத்ரேயன் எதுக்கு  அந்தகன்னு பேரு வச்சுக்கிட்டு வரிசையா வாழ வேண்டிய பிள்ளைங்களைக் கொலை பண்ணிட்டு இருக்கார்…”

“ச..சார், என்ன சொல்லறிங்க… அந்தக் கொலைகளுக்கும் ஆத்ரேயனுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது…”

“இல்லையே, நடந்த எல்லாக் கொலைகள்லயும் ஆத்ரேயன் சம்மந்தப்பட்டிருக்காரே… நேசிகாவோட அப்பாவும், காணாமப் போன வர்ஷாவோட அப்பா பிரசன்னாவும் ஆத்ரேயன் கம்பெனில தானே வொர்க் பண்ணறாங்க… அதோட கொல்லப்பட்ட இதயாவோட அப்பாதான் ஆத்ரேயனுக்கு கன்ஸ்ட்ரக்ஷன் பண்ணிக் கொடுத்திருக்கார்… அரவிந்த் கூடவும் முகநூல்ல நட்புல இருந்திருக்கார்…” அஜய் சொல்லிவிட்டு காசியின் முகத்தையே உன்னிப்பாய் நோக்க அதில் அதிர்ச்சி தெரிந்தது.

“இதோட இன்னும் பல விஷயங்களும் சம்மந்தம் இருக்கு… தொடர் கொலைகளைப் பண்ணிட்டு வர்ற அந்தகன் ஒரு கிரைம்நாவல் பைத்தியம், அதோட மனநோயாளியாவும் இருக்கலாம்னு எங்களோட கணிப்பு… இன்னொரு முக்கியத் தகவலும் எங்களுக்குக் கிடைச்சிருக்கு…” நிறுத்தினான் அஜய்.

“எ..என்ன சார்…?”

“ஆத்ரேயன் ஒரு மனநோயாளி… சரியா மருந்து எடுத்துக்கலேன்னா அவரோட மைன்ட் அவரோட சுய கட்டுப்பாட்டுல இருக்காது, இது உண்மைதானே…” எனக் கேட்கவும் அதிர்ச்சியுடன் பார்த்தார் காசிநாதன்.

“ஆத்ரேயன் தான் அந்தகன் பேருல இப்ப நடந்திட்டு இருக்கிற கொலைகளுக்குக் காரணம்னு நாங்க நினைக்கறோம்… ஆல்ரெடி ரெண்டு கொலைகளைப் பண்ணி மறைச்சு, ஊரு விட்ட நீங்க அவருக்கு எல்லா விதத்திலும் உதவியா இருக்கீங்க… அப்படி தானே…?”

“ச..சார், என்ன சொல்லறீங்க…? ஆத்ரேயனுக்கும், அந்த கொலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை… அந்தகன் யாருன்னு எல்லாம் எங்களுக்குத் தெரியாது…”

“ஓஹோ, அப்புறம் எப்படி…? நடந்த எல்லாக் கொலைலயும் ஆத்ரேயன் சம்மந்தப்பட்டிருக்கார்…? அதோட டாக்டர் ரங்கராஜன்கிட்ட ஆத்ரேயன் ட்ரீட்மென்ட் எடுத்திட்டு இருக்கிற விஷயமும் எங்களுக்குத் தெரியும்… அவரையும் பார்த்துப் பேசிட்டு தான் வர்றோம்…” எனவும் காசிநாதன் டென்ஷனில் நெற்றியில் பொடியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு அவர்களை ஏறிட்டார்.

Advertisement