Advertisement

 அத்தியாயம் – 22

ஆத்ரேயன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியுடன் நோக்கிய டாக்டர், “கடவுளே, அப்படி எதுவும் நீங்க அட்டம்ப்ட் செய்யலை தானே…?” என பதட்டமாய் கேட்க அவன் கவலையுடன் கூறினான்.

“டோன்ட் வொர்ரி டாக்டர், செய்யலை… பட், எதுவும் செய்துடுவனோன்னு பதட்டமா இருக்கு… கொஞ்ச நாளைக்கு இந்த பிஸினஸ், ஆபீஸ் எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு எங்காச்சும் ஆளில்லாத இடமாப் பார்த்து ஓடிப் போயிடலாமான்னு தோணுது…”

“தட்ஸ் குட் ஐடியா, கொஞ்சநாள் ப்ரீயா எங்காச்சும் போயி இருந்திட்டு வாங்களேன்…” என்றார் டாக்டர்.

“இட்ஸ் இம்பாசிபிள் டாக்டர், பிஸினஸ் பாதிக்கும்… பாங்குல கடன் வாங்கிருக்கேன், பெரிய பிராப்ளமாகும் டாக்டர்…”

மனதுக்குள் அவன் சொன்னதைக் கேட்டு கவலை எழுந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் நிமிர்ந்தார்.

“டோன்ட் வொர்ரி ஆத்ரேயன், எனக்கு உங்க பிரெயின்ல ஒரு கிளாரிபிகேஷன் தேவைப்படுது, நாளைக்கு ஒரு சி.டி ஸ்கேன் எடுத்து ரிசல்ட் பார்த்துட்டு பர்தரா என்ன ட்ரீட்மென்ட் கொடுக்கணும்னு டிசைட் பண்ணலாம்… அதுவரைக்கும் என் பழைய பிரிஸ்கிரிப்ஷன்ல சொன்ன மெடிசின்ஸ் நிறுத்தாம எடுத்துக்கங்க…” என்றார் டாக்டர்.

“நோ… அந்த மெடிசின்ஸ் எடுத்துக்காதே ஆத்ரேயா…! அப்புறம் நீ சுதந்திரமா உனக்குத் தோணினதைப் பண்ண முடியாம அவர் கன்ட்ரோல்ல தான் இருக்கணும்…” அவனுள் ஒரு எதிர்ப்புக் குரல் லேசாய் ஒலிக்கத் தொடங்கி எதிரொலியாய் மனதுக்குள் கேட்கத் தொடங்கியது.

******************

சூரியன் மதியம் முடிந்து மந்தமாய் பிரகாசித்துக் கொண்டிருந்த இளமாலையில் அவனை வழியனுப்பத் தயாராய் இதமான தென்றல் காத்திருந்தது.

“கந்தசாமி…” கம்பீரமாய் ஒலித்த நாதனின் குரலைக் கேட்டு வெளியே கார் துடைத்துக் கொண்டிருந்த கந்தசாமி கையில் துணியுடன் ஓடி வந்தான்.

“ஐயா…”

“காரைத் துடைச்சாச்சா…?”

“முடிஞ்சுதுங்க ஐயா…”

“சரி, நீ போ…” என்றவர், “வைதேகி, நான் வர்றதுக்கு எட்டு மணி ஆகிடும், தம்பி வந்தா சொல்லிடு…” என்றார்.

“சரிங்கய்யா…” தலையாட்டினாள்.

அலைபேசியை எடுத்துக் கொண்டவர் கார் சாவியுடன் முன்னே செல்ல, வாசல் கேட் திறக்கும் ஓசை கேட்க பார்த்தவரின் முகம் நிறம் மாறியது.

உள்ளே நுழைந்து கொண்டிருந்த இன்னோவா ஓரமாய் நின்று மௌனமாக அஜய், கோகுல் இருவரும் இறங்கினர்.

திகைப்புடன் பார்த்தவர், “வா..வாங்க சார்…” விருப்பமில்லா விட்டாலும் வரவேற்றார்.

“என்ன சார், வெளிய கிளம்பிட்டிங்க போலருக்கு…”

“ஆமா, ஒரு வேலையா கிளம்பினேன்… ஆத்ரேயன் ஆபீஸ்ல இருந்து இன்னும் வரலியே சார்…” என்றார் கேட்காமலே.

“தெரியும், நாங்க உங்களைப் பார்க்க தான் வந்தோம்…” சிறு புன்னகையுடன் அஜய் சொல்ல அவர் முகம் சுருங்கியது.

“எ…என்னை எதுக்குப் பார்க்கணும்…?”

“சொல்லறேன், உள்ள போயி பேசலாமா…?” அஜய் கேட்க, “வாங்க…” என்றவர் உள்ளே நடந்தார். மூவரும் சோபாவில் அமர நாதன் முகத்தில் தெரியும் பதட்டத்தை மறைத்துக் கொள்ள கஷ்டப்படுவது புரிந்தது.

“மிஸ்டர் நாதன், நீங்க சென்னை வர்றதுக்கு முன்னாடி எங்கிருந்தீங்கன்னு சொல்ல முடியுமா…?”

“எ..எதுக்கு கேக்கறிங்க…?”

“சும்மா சொல்லுங்க…”

“மும்பைல இருந்தோம்…”

“சென்னை வந்து எத்தன வருஷமாச்சு…?”

“அஞ்சு வருஷமாச்சு…”

“ஓகே… நீங்க ஆத்ரேயனோட அங்கிள்னு தெரியும், அவரோட பேரன்ட்ஸ் எங்கேன்னு சொல்ல முடியுமா…?”

“அ..அவங்க எல்லாம் இறந்துட்டாங்க… நான் தான் கார்டியனா இருந்து அவனை வளர்த்தினேன்…”

“ஓ… ஆத்ரேயனோட பேரன்ட்ஸ் நேம் சொல்ல முடியுமா…?”

“ஆனந்தி, பாலாஜி…”

“ம்ம்… அவங்களுக்கு இருந்தது ‘ஆராதனா’ ன்னு ஒரே ஒரு பொண்ணு மட்டும் தான்னு கேள்விப்பட்டோம்… அப்ப ஆத்ரேயன் யாரு…?” என்றதும் நாதனின் முகம் ரத்தத்தைத் தொலைக்க வெளிறிப் போனது.

“மிஸ்டர் நாதன்… சாரி, காசிநாதன்… எல்லா விஷயமும் விசாரிச்சு நல்லாத் தெரிஞ்சுட்டு தான் வந்திருக்கோம்… என்ன நடந்ததுன்னு நீங்களே சொல்லிட்டா நாங்க உங்ககிட்ட ஹார்ஷா நடந்துக்க வேண்டியது இருக்காது…” என்றதும் அதிர்ச்சியுடன் அவர்களைப் பார்த்தார் காசி.

“நீங்கதான் எல்லாம் விசாரிச்சுட்டேன்னு சொன்னிங்களே, நான் என்ன சொல்லறதுக்கு இருக்கு…” என்றவரின் முகம் இறுகிக் கிடக்க அஜய் சின்னதாய் புன்னகைத்தான்.

“நீங்க சொன்னாதானே விசாரணைல தெரிஞ்ச விஷயம் எல்லாம் உண்மையா இல்லையான்னு தெரியும்…”

“இ..இல்ல, எனக்கு எதுவும் தெரியாது…”

“ஓ… ஆனந்தி, பாலாஜியோட பொண்ணு ஆராதனாவை என்ன பண்ணினிங்க… இங்கே உள்ள ஆத்ரேயன் யாரு…?” என்ற கேள்வியில் அதிர்ந்து நோக்கினார் காசி.

அவர் அமைதியாய் இருக்க அஜய் தொடர்ந்தான்.

“ஆனந்தி தன்னோட சொத்தை எல்லாம் உயிரோட இருக்கும்போதே உங்க பேருல எழுதி வச்சிருக்காங்க, அவங்க இறந்த பிறகு ஆராதனா உங்க பொறுப்புல தான் இருந்திருக்கா… பாலாஜிக்கு வேற ஒரு பொண்ணோட தொடர்பு இருந்ததாகவும், அது தெரிஞ்சு ஆனந்தி பிரச்சனை பண்ணதால கொஞ்சநாள் அமைதியா இருந்துட்டு அப்புறம் அந்தப் பொண்ணோடவே ஊரைவிட்டுப் போயிட்டதாவும் விசாரிச்சப்ப சொன்னாங்க… ஆனா, அதுல எங்களுக்கு சில சந்தேகம் இருக்கு…” அஜய் நிறுத்த காசி உலர்ந்து போன நாவை உதட்டால் நனைத்துக் கொண்டார்.

“பாலாஜி நிஜமாலுமே அந்தப் பொண்ணோட ஊரை விட்டுப் போனாரா…? இல்லை, அவர் மேல உள்ள கோபத்துல யாராச்சும் அவங்களை உலகத்தை விட்டுப் போக வச்சுட்டாங்களான்னு தெரியனும்…”

சொன்ன அஜய் நிதானமாய் காசியைப் பார்க்க அவர் நெற்றியில் பொடிப் பொடியாய் வியர்த்திருந்தது.

“என்ன மிஸ்டர் காசி, எதுவுமே பேச மாட்டீங்கறீங்க…? உங்களுக்கு எதுவும் சொல்ல முடியலைன்னா சொல்லுங்க, ஆத்ரேயன் கிட்ட விசாரிச்சுக்கறோம்…”

“இ..இல்ல வேணாம்… அவரைத் தொந்தரவு பண்ணாதீங்க…”

“அப்ப, நீங்களே என்ன நடந்ததுன்னு சொல்லுங்க…?”

அஜய் சொல்லவும் ஒரு தீர்மானத்துக்கு வந்தவர் டவலை எடுத்து முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு நிமிர்ந்தார்.

“ம்ம்… உங்களுக்கு என்ன தெரியணும்…?” என்றவரின் முகத்தில் ஒரு கடினம் வந்திருக்க பேசத் தயாரானார்.

“ஆத்ரேயன் யாரு, ஆனந்திக்குப் பிறந்த பெண் குழந்தை ஆராதனா என்ன ஆனா…?” அழுத்தமாய் கேட்கவும் காசியின் கண்கள் மெல்லக் கலங்க கண்ணீரோடு கூறினார்.

“சொல்லறேன், இத்தனை நாளா என் மனசுக்குள்ள புதைச்சு வச்சிருக்கிற எல்லா விஷயத்தையும் சொல்லிடறேன்…” என்றவர் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பேசலானார்.

“எங்க ஆனந்திம்மா ரொம்ப நல்லவங்க, எல்லாரையும் நம்பி, நேசத்தைக் கொட்டுவாங்க… ஆனா, கடவுளுக்கு என்ன கோபமோ, அவங்களுக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாத ஏமாத்துக்காரன் பாலாஜியை புருஷனா கொடுத்துட்டார்… பொண்டாட்டிகிட்ட அன்பா இருக்கிற போல நடிச்சுகிட்டே ஆபீஸ்ல தேன்மொழின்னு வேற ஒருத்தியோட பழகின துரோகி, அந்தாளு… அது மட்டும் இல்ல, ஆனந்திம்மாவுக்கு புருஷனோட கள்ளத்தொடர்பு விஷயம் தெரிஞ்சதும் சொத்தை எல்லாம் என் பேருக்கு மாத்திட்டாங்க… இது எனக்கு கூடத் தெரியாம ரகசியமா பண்ணி இருந்தாலும் எப்படியோ அந்தப் பிசாசு பாலாஜிக்குத் தெரிஞ்சிடுச்சு, அதுக்கப்புறம் தினமும் வீட்டுல சண்டை தான், குழந்தைக்கு மூணு வயசு இருக்கும்போது ஆனந்திமா ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டாங்க… என்னால அதைத் தாங்கிக்க முடியலை… ஆனா அந்த பாலாஜி, இதை சாக்கா வச்சு தேன்மொழியைக் கல்யாணம் பண்ணிக்கப் பார்த்தான்…  குழந்தையைக் கொன்னுடுவேன்னு சொல்லி சொத்தை எல்லாம் என்னை அவன் பேருக்கு எழுதி வைக்க சொல்லி மிரட்டினான்… அப்ப அவன் சொன்ன வார்த்தை தான் என்னை ஒரு முடிவெடுக்க வச்சது…” என்றவர் சற்று நிறுத்தி கண்கள் சிவக்க அந்த நாளை நினைவு கூர்ந்தார்.

ஒரு அறையில் நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த காசியின் கைகள் அதோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது. அவனுக்கு சற்றுத் தள்ளி ஒரு கட்டிலில் மூன்று வயது ஆராதனா அழுதழுது மயக்கமாய் உறங்கியிருந்தாள். அவர்கள் முன்னில் வில்லச் சிரிப்போடு நின்ற பாலாஜியின் தோளில் கையிட்டு தொங்கிக் கொண்டிருந்தாள் தேன்மொழி.

“ஏய், காசி… ஒழுங்கு மரியாதையா உன் பேருல உள்ள சொத்தை எல்லாம் என் பேருக்கு மாத்த ஒத்துகிட்டு இந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போடு… இல்லேன்னா உன் ஆசைத் தங்கச்சி ஆனந்தி பெத்தெடுத்த ஆராதனா உயிரோட இருக்க மாட்டா…”

“டேய் பாவி, உன்னை ஆனந்திமா எவ்ளோ நம்புச்சு… இவளுக்கும் சொந்த கம்பெனியில் வேலை கொடுத்துச்சு… அப்படியும், இப்படி ஒரு கேடு கெட்டவளுக்காக கட்டின பொண்டாட்டிக்கு துரோகம் செய்ய உனக்கு எப்படி மனசு வந்துச்சு… சொத்துக்காக சொந்தக் குழந்தையையே பணயம் வச்சு மிரட்டறியே, நீயெல்லாம் மனுஷன் தானா…?”

“ஏன், உனக்கு அதுல டவுட் இருக்கா…? மனுஷனா இருக்கவும் தான் பணம், சொத்தெல்லாம் தேவைப்படுது, ஆடு மாடுக்கு சொத்து இருந்து என்னாகப் போகுது… ஒழுங்கு மரியாதையா, அமைதியா இந்த டீலுக்கு ஒத்துகிட்டு சைன் போட்டா உன் கைல சில லட்சத்தைக் கொடுத்து இதோ இந்தப் புள்ளையும் உயிரோட கொடுத்தனுப்புவேன்… இவளை நீயே வளர்த்தினாலும் சரி, ஏதாச்சும் அநாதை ஆஸ்ரமத்தில் விட்டாலும் சரி, ரெண்டு பேரும் ஏதாச்சும் கண் காணாத இடத்துக்குப் போயி பிழைச்சுக்கங்க… அதை விட்டுட்டு நேர்மை, நியாயம், உரிமைன்னு போர்க்குரல் கொடுத்துட்டு இருந்தா அடுத்து நடக்கப் போறதுக்கு நான் பொறுப்பில்லை… என்ன ஹனி, சரிதானே…?” என்றான் சிரிப்புடன்.

“ரொம்ப சரி பாலா, இவன் என்னவோ அந்த ஆனந்தி கூடயே ஒட்டிட்டுப் பிறந்தவன் போல அவளுக்காக இப்படிக் குதிக்கிறான்… இவனும் அவளோட ஒட்டிகிட்டவன் தானே… கிடைக்கிறது லாபம்னு கொடுக்கிறதை வாங்கிட்டுக் கிளம்பறதை விட்டுட்டு குதிச்சிட்டு இருக்கான்… இதுக்கே இப்படின்னா, அந்த ஆனந்திக்கு நாம தான் தண்ணில ஒரு கெமிக்கலை கலந்து கொடுத்து ஹார்ட் அட்டாக் வர வச்சு போட்டுத் தள்ளினோம்னு தெரிஞ்சா என்ன பண்ணுவான்…” என்றாள் கிண்டல் சிரிப்புடன்.

அதைக் கேட்டதும் காசியின் கண்கள் அதிர்ச்சியில் நோக்க கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

“எ..என்ன சொல்லறிங்க, ஆனந்திக்கு ஹார்ட் அட்டாக் வர வச்சிங்களா…” என்றான் காசி உதடுகள் நடுங்க.

“ஆமா, ஒரு கெமிக்கலை ஆனந்தி குடிக்கிற தண்ணில கலந்து வச்சிட்டோம்… அதைக் குடிச்சா எட்டு மணி நேரத்துல ஹார்ட் அட்டாக் வரும், இதுல என்ன ஸ்பெஷல்னா இப்படி செத்தவங்க பாடியை போஸ்ட்மார்ட்டம் பண்ணினாக் கூட கார்டியாக் அரஸ்ட்ல நார்மலா இறந்த போலத் தான் தெரியும்… இன்னும் அந்த கெமிக்கல் கொஞ்சம் ஸ்டாக் இருக்கு… ஒருவேளை, எங்க டீலுக்கு நீ ஒத்துக்கலேன்னா உன்னோட ஆராதனா பாப்பா குடிக்கிற பால் புட்டில அதைக் கலந்திட வேண்டியது தான்…” குரூரச் சிரிப்புடன் சொன்ன தேன்மொழியைக் கண்ணில் மின்னும் கண்ணீருடன் அதிர்ச்சியாய் பார்த்தான் காசி.

“அடச்சீ… நீயும் ஒரு பொண்ணு தானே, ஒரு பொண்ணு வாழ்க்கையைப் பறிச்சதோட அவளைக் கொலை பண்ணுற அளவுக்குத் துணிஞ்சிருக்க… இப்ப இந்த பிஞ்சுக் குழந்தையை கொல்லப் போறோம்னு அசால்ட்டா சொல்லற, பணம் தின்னிப் பேய்களா…” என்றவனை அலட்சியமாய் நோக்கினாள் தேன்மொழி.

“ஓ… நாங்க பணத்தை தின்னறோம், இல்ல பிணத்தைத் தின்னறோம்… உனக்கு தான் சொத்து மேல ஆசை இல்லையே, அப்புறம் எதுக்கு யோசிக்கிற… ம்ம்… சீக்கிரம் ஒரு முடிவுக்கு வா…” என்றவள் பத்திரத்தின் மீது பேனாவை வைத்து நீட்ட மௌனமாய் யோசித்தான் காசி. அதற்குள் உறங்கிக் கொண்டிருந்த ஆராதனா எழுந்து கண்ணைத் தேய்த்தபடி காசியை நோக்கி கைநீட்டி அழுதாள்.

“ஏய் சனியனே, அழாத…” குழந்தையை அதட்டிய பாலாஜி, “ச்சே… கண்ணைத் திறந்தாலே ஒப்பாரி வைக்க வேண்டியது… இதை முதல்ல தொலைச்சுக் கட்டணும்…” என்றவன் குழந்தை அருகே சென்று, “ஏய்… அழுகையை நிறுத்து…” என அதட்ட மேலும் அழத் தொடங்கினாள்.

“மா…மா…” எனத் தன்னை நோக்கி கை நீட்டி அழும் குழந்தையை நெஞ்சில் வழியும் குருதியுடன் நோக்கினான் காசி. தன்னை சொந்த சகோதரனைப் போல் நேசித்த ஆனந்தியின் குழந்தை அநாதையாய் கதறுவதைக் கண்டு மனம் பொறுக்காமல் கதறியது.

“சரி, நான் சம்மதிக்கிறேன்… குழந்தையைக் கொடுங்க, கை கட்டை அவிழ்த்து விடுங்க…” என்றான்.

பாலாஜியை நோக்கி ஒரு வெற்றிப் புன்னகையை சிந்திய தேன்மொழி, “உன்னை அவ்ளோ ஈஸியா எப்படி நம்பறது… இப்ப பத்திரத்துல சைன் பண்ணிட்டு சொத்தை எங்க பேருக்கு மாத்தி ரெஜிஸ்டர் பண்ணறதுக்குள்ள நீ ஏதாச்சும் தகிடுதத்தம் பண்ணினா… அதனால, இந்த குட்டிப் பிசாசு இப்போதைக்கு எங்க கைல இருக்கட்டும்… முதல்ல இதுல கையெழுத்துப் போடு, நாளைக்கே ரெஜிஸ்டர் பண்ணிட்டு உன்கிட்ட கொடுக்கிறோம்…” என்றாள்.

“சரி, சைன் பண்ண கையை அவிழ்த்து விடு…”

“ம்ம்…” என்றவள், “பாலா, அவனை அவிழ்த்துவிடு, குழந்தையை நான் பார்த்துக்கறேன்…” என்றவள், “ஏய் அழாத, இந்தா பிஸ்கட் சாப்பிடு…” என்று ஒரு பிஸ்கட் பாக்கெட்டைக் கொடுக்க அழுகையை நிறுத்திய குழந்தை வாங்கிக் கொள்ளாமல் அவளை பரிதாபமாய் பார்த்தது.

“மா…மா வேணும்…” என்று அவனை கை நீட்டிக் காட்ட, “பாலா, இங்க பார்த்தியா… நீ பக்கத்துல இருந்தாலும் மாமாவைக் கை காட்டுது இந்த வாண்டு… அம்மாக்குப் பிள்ளை தப்பாமப் பொறந்திருக்கு…” சொல்லிக் கொண்டே குழந்தை கையில் பிஸ்கட்டைத் துணிக்க பாலா கடுப்புடன் காசியிடம் சென்றான்.

அவன் கைக்கட்டை அவிழ்த்துவிட எதிர்பாராத நேரத்தில் பாலாஜியின் முகத்திலேயே ஓங்கிக் குத்தினான் காசி. உரமேறிய அவன் கையின் தாக்குதலைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பாலாஜி நிலை குலைந்து தடுமாறி விழப் போக “ஏய்… என்னடா பண்ணற…” எனக் கத்திய தேன்மொழியைத் தன்னைக் கட்டிப்போட்ட நாற்காலியை எடுத்து தலையில் அடிக்க அவள் ரத்தம் வழியும் தலையில் கை வைத்து அமர வேகமாய் குழந்தையை எடுத்துக் கொண்டான்.

அதற்குள் பாலாஜி பாய்ந்து வந்து குழந்தையைப் பிடுங்க முயல எட்டி உதைத்தவன் வேகமாய் குழந்தையுடன் அறைக்கு வெளியே ஓடி கதவைத் தாளிட்டு விட்டான். அது வீட்டு மாடியில் புழக்கத்தில் இல்லாத ஸ்டோர் ரூம் என்பதாலும், அன்று பணியாளர்களுக்கு பாலாஜி லீவ் கொடுத்து அனுப்பி இருந்ததாலும் அங்கே நடந்தது யாருக்கும் தெரியவில்லை. குழந்தையுடன் கீழே வந்த காசி பொறுமையாய் யோசிக்க ஒரு எண்ணம் தோன்றியது.

Advertisement