Advertisement

 அத்தியாயம் – 21

சுவரில் இருந்த கடிகாரத்தின் முட்கள் பத்தை நெருங்கியிருக்க, இரவு உணவை மேசை மீது வைத்துக் கொண்டே கணவனிடம் கேட்டாள் அர்ச்சனா.

“நீங்க சொல்லற போல வர்ஷாவோட கடத்தலுக்கும் அந்தகன் தான் காரணம்னா இவ எப்படி அங்கிருந்து தப்பிச்சு வந்தா…? அவனுடைய நோக்கம் இவளைக் கொல்லறதா இருந்தா, இத்தனை நாள் ஏன் கொல்லாம வச்சிருந்தான்…?” கேட்டவளின் தோளில் தலை துவட்டிய டவலை போட்டுவிட்டு சாப்பிட அமர்ந்தான் அஜய்.

“உன் கேள்விக்கான பதில் வர்ஷா கண் விழிச்சா தான் தெரியும் அச்சு…” என்றவன் முன்னில் தட்டு வைத்து பரிமாறியவள், “ம்ம்… நேசிகா வீட்டில் ஏதாச்சும் விவரம் கிடைத்ததா..?” எனக் கேட்க, மறுப்பாய் தலையசைத்தவன் சாப்பிடத் தொடங்கினான். கொட்டாவியுடன் டவலை பின்பக்கம் இருந்த கம்பியில் காயப் போட்டுவிட்டு வந்தவள் அவன் முன்னில் அமர்ந்தாள்.

“என்னங்க, இந்தக் கேஸ் நூல் பிடிச்ச போல போயிட்டே இருக்கு… ஆனா எந்த முன்னேற்றமும் இல்லையே…”

“ம்ம்… அநேகமா நாளைக்கு சில விவரங்கள் கிடைக்கலாம்னு நினைக்கிறேன்…”

“வர்ஷா பேசினா தெரியும்னு சொல்லறீங்களா…?”

“இல்லை, இன்னொரு முக்கியமான விஷயத்துல சில தகவலை எதிர்பார்த்துட்டு இருக்கேன்…”

“யாருகிட்ட இருந்துங்க…?”

“அச்சு… செம டயர்டா இருக்கு, எல்லாத்தையும் நாளைக்கு சொல்லறேன்…” என்றவன் சாப்பிட்டு எழுந்து கொண்டான்.

அர்ச்சனாவிற்கு ஆர்வமாய் இருந்தாலும் அவன் சலிப்பாய் இருக்கிறது என்றதால் துளைத்தெடுக்க விரும்பாமல் ஓய்வெடுக்க விட்டு வேலையை முடிக்க சென்றாள்.

அடுத்தநாள் காலையில் சீக்கிரமே எழுந்து கன்னத்தில் முளைத்திருந்த கரும்பயிர்களை ரேசர் வைத்து அறுவடை செய்து கொண்டிருந்த அஜய் உள்ளே சார்ஜரில் இருந்த அலைபேசி சிணுங்கும் குரல் கேட்கவும் குரல் கொடுத்தான்.

“அச்சு, யாருன்னு பாரு…”

“ம்ம்… இதோ பார்க்கறேன்…”

சொன்னவள் பெட்ரூமில் ஒயரில் தொங்கிக் கொண்டிருந்த அலைபேசியை சென்று எடுப்பதற்குள் அது துண்டிக்கப்பட, மிஸ்ஸுடு காலில் இருந்த பெயரைப் பார்க்கவும் அதில் சங்கர் என்றிருந்தது.

“என்னங்க, யாரோ சங்கர்னு கால் பண்ணிருக்காங்க…” சொன்னபடி கணவனிடம் வந்தவள் அலைபேசியை அவனிடம் நீட்ட ரேசரை கீழே வைத்துவிட்டு வேகமாய் அதை வாங்கிக் கொண்டான் அஜய்.

சங்கரின் எண்ணுக்கு அழைக்க சில நொடிகளில் ரிங் போய் எதிர்ப்புறம் எடுக்கப்பட்டு ஹலோவியது.

“சங்கர், என்னாச்சு…? ஏதாச்சும் விவரம் கிடைச்சுதா…?”

“ஆமா சார், நீங்க சொன்ன கார் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பரோட அட்ரஸ்க்கு போயி விசாரிச்சேன், நிறைய தகவல் கிடைச்சது… உங்களை பார்த்து சொல்லிடலாம்னு தான் கால் பண்ணேன்…” என்றார் சங்கர்.

“சங்கர்… நான் ஒரு மணி நேரத்துல ஸ்டேஷனுக்கு வந்திருவேன்… அங்க வாங்க, நேர்ல பேசிக்கலாம்…”

“ஓகே சார், வந்திடறேன்…” சொன்ன சங்கர் அழைப்பைத் துண்டிக்க அர்ச்சனா அவன் பேசுவதையே ஆவலுடன் பார்த்து நின்றாள்.

“என்னங்க, என்ன தகவல் கிடைச்சிருக்கு…?”

“டிபன் எடுத்து வை அச்சு, குளிச்சு அரை மணி நேரத்துல ஸ்டேஷன் கிளம்பனும், என்ன தகவல்னு பேசிட்டு வந்து விவரமா சொல்லறேன்…”

“ஹா, சஸ்பென்ஸ் தாங்கலியே…” புலம்பிக் கொண்டே அர்ச்சனா அடுக்களைக்கு செல்ல அஜய் புன்னகையுடன் குளியலறைக்குள் நுழைந்தான். சரியாய் அரை மணி நேரத்தில் குளித்து, சாப்பிட்டு கிளம்பியவன் புல்லட்டை எடுத்தான். இருபத்தைந்து நிமிடப் பயணத்தில் ஸ்டேஷன் பார்க்கிங்கில் புல்லட்டை சொருகிவிட்டு ஸ்டேஷனுக்குள் நுழைய சங்கர் எதிரில் வந்து சல்யூட் வைத்தார்.

“வாங்க சங்கர், கிருஷ்ணா வந்தாச்சா…?”

“வந்துட்டார் சார், உங்களுக்கு தான் வெயிட்டிங்…” இருவரும் உள்ளே நுழைய பேசிக் கொண்டிருந்த கிருஷ்ணாவும், கோகுலும் சல்யூட் ஒன்றைக் கொடுக்க அமர்ந்தனர்.

“கோகுல், அரவிந்த் பத்தி விசாரிக்க சொல்லி இருந்தனே…”

“எஸ் சார்… சில டீடைல்ஸ் கிடைச்சிருக்கு, அவனோட சோசியல் மீடியா அக்கவுன்ட் பத்தி சைபர் கிரைம் ஆபீஸ்ல சொல்லிருக்கேன்… கொஞ்ச நேரத்துல அந்தத் தகவலும் கிடைச்சிரும் சார்…”

“குட்…” என்றவன் சங்கரிடம் திரும்பினான்.

“சங்கர், அந்த வண்டி ரெஜிஸ்டிரேஷன் நம்பரை விசாரிச்சதுல உருப்படியா ஏதாச்சும் தகவல் கிடைச்சுதா…?”

“எஸ் சார்… அந்த நம்பர் காஞ்சிபுரம் ரெஜிஸ்டர் ஆபீஸை சேர்ந்தது. ஆனந்திங்கற பேருல ரெஜிஸ்டர் ஆயிருக்கு… அதுல உள்ள அட்ரஸ்க்கு போயி விசாரிச்சேன், இப்ப அங்க யாரும் இல்லை… இருபது வருஷம் முன்னாடி அந்த ஆனந்தி இறந்தபிறகு வீடு, கம்பெனி, சொத்தெல்லாம் வித்துட்டு அவங்க பாமிலி வேற ஊருக்குக் காலி பண்ணிப் போயிட்டாங்களாம்… இப்ப அங்க இருக்கறவங்களுக்கு வேற டீடைல்ஸ் எதுவும் தெரியலை…”

“ஓ… அந்த கம்பெனி இப்பவும் இருக்கா…?”

“ஆமா சார், அந்த விஷயம் தான் ஆச்சர்யமா இருந்துச்சு… அந்த ஆனந்தியோட மார்கெட்டிங் கம்பெனியை நடராஜ்னு ஒருத்தருக்கு சேல் பண்ணிருக்காங்க, அது ரெண்டு வருஷம் முன்னாடி நடராஜ் கைல இருந்து வேற ஒருத்தர் கைக்கு மாறி இருக்கு… அவர் பேரு ஆத்ரேயன்…” சங்கர் சொல்லவும் கேட்ட மூவரும் வியப்புடன் நோக்கினர்.

“ஓ… ஆத்ரேயன் அந்தக் கம்பெனியை சொந்தமாவே வாங்கிட்டாரா…?”

“ஆமா சார்…”

“காஞ்சிபுரத்துல உள்ள ஒரு அட்வர்டைஸிங் கம்பெனியை இங்கே சென்னைல உள்ள ஆத்ரேயன் எதுக்கு வாங்கணும்…?”

“அது இப்போ அட்வர்டைஸிங் கம்பெனி இல்லை சார்… ஆனந்தி எக்ஸ்போர்ட்ஸ்ங்கற பேருல ஆயத்த ஆடைகளை தயார் செய்யுற கம்பெனி…”

“ஓ…! அந்த ஆனந்திக்கும் இந்த ஆத்ரேயனுக்கும் என்ன சம்மந்தம்…? இவர் எதுக்கு ஆனந்தின்னே பேரு வைக்கணும்…?” கிருஷ்ணா வாய்விட்டு சொல்ல அஜய், “சங்கர், நீங்க அந்த ஆனந்தி குடும்பத்துல உள்ளவங்களைப் பத்தி விசாரிச்சிங்களா…?” என்றான் சங்கரிடம்.

“ஆமா சார்… ஆனந்தியோட ஹஸ்பன்ட் பேரு பாலாஜி, ஆராதனான்னு ஒரு பெண் குழந்தை இருக்கு…”

“இப்ப அந்த பாலாஜியும், ஆராதனாவும் எங்கிருக்காங்கன்னு எந்த விவரமும் இல்லியா…? அவங்க கம்பெனில வொர்க் பண்ண யாரையாச்சும் விசாரிச்சிருக்கலாமே…?”

“கேட்டேன் சார், கம்பெனில வொர்க் பண்ண நிறைய பேரு கம்பெனி கை மாறியதும் வேற வேலைக்குப் போயிட்டாங்க, அவங்க போன் நம்பர் எதுவும் இல்லாததால கான்டாக்ட் பண்ண முடியலை… ரகுநாத்னு ஆனந்தி கம்பெனில வொர்க் பண்ணின மேனேஜர் மட்டும் நடராஜ் கம்பெனில கொஞ்சநாள் வேலைல இருந்திருக்கார், அவரோட மகன் நம்பர் கிடைக்கவும் கால் பண்ணேன்… ரகுநாத் ஏதோ பாமிலி பங்க்ஷன்க்கு சென்னை வந்திருக்கிறதா சொன்னாங்க… கால் பண்ணேன், எடுக்கலை… அவரை விசாரிச்சா இன்னும் நிறைய விஷயம் கிடைக்கலாம்னு நினைக்கிறேன் சார்…”

“ஓ… வெரி குட், அந்த ரகுநாத் சென்னை வந்திருந்தா நாம நேர்ல போயே பேசிடலாமே… இன்னொருமுறை கால் பண்ணிப் பாருங்க…” என்றான் அஜய்.

சங்கர் அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே நகர கிருஷ்ணா வியப்புடன் அஜயிடம் கேட்டார்.

“சார், அந்த நம்பர் பிளேட்டுக்குப் பின்னாடி இத்தனை விஷயம் இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை… உங்களுக்கு எப்படி அதைப் பத்தி விசாரிக்கத் தோணுச்சு…”

“ம்ம்… அது சாதாரண நம்பர் பிளேட் போல காருலயோ, ஏதாச்சும் மூலைலயோ கிடந்திருந்தா நானும் பெருசா எடுத்திருக்க மாட்டேன்… காஞ்சிபுரம் ரெஜிஸ்டிரேஷன் கொண்ட நம்பர் பிளேட் ஆத்ரேயன் வீட்டு புக் செல்ப்ல கிரைம் நாவல்ஸ் இருந்த செல்புக்குக் கீழே எதுக்கு பத்திரமா இருக்கணும்… அதுவும் இதுக்கு பூ எல்லாம் வச்சு பார்க்கவே வித்தியாசமாத் தோணுச்சு… அதோட நாம அங்கே போனதுல இருந்து ஆத்ரேயனோட மாமா நாதன் முகமும் சரியில்லை, நாம புக் செல்ப்ல கிரைம் நாவல்ஸ் பார்த்திட்டு இருக்கும்போது அவர் கொஞ்சம் பதட்டமா இருந்தார், அடிக்கடி இந்த நம்பர் பிளேட் மேல அவர் கண்ணு போச்சு… அவர்கிட்ட ஏதோ தப்பு இருக்குன்னு மனசுக்குத் தோணுச்சு, அதான்… விசாரிச்சுப் பார்த்துடலாம்னு நினைச்சேன்…”

“ம்ம்… எனக்கும் அவரோட முகபாவம், மனசுல உள்ள பதட்டத்தை வெளியே காட்டிக்காம இருக்க கஷ்டப்பட்டு இயல்பா பேசுற போலத் தோணுச்சு சார்…”

“எஸ்… அதான் உடனே நம்ம சங்கர்கிட்ட இதைப்பத்தி ரகசியமா விசாரிக்க சொல்லிட்டேன்…” என்றான் அஜய்.

அதற்குள் திரும்பி வந்த சங்கர், “ரகுநாத் நம்பருக்கு கால் பண்ணேன், எடுக்கலை சார்… அவர் மகன்கிட்ட சொல்லி கூப்பிட சொல்லிருக்கேன்…” என்றார்.

அடுத்த நிமிடமே அவர் கையிலிருந்த அலைபேசி சிணுங்கி புதிய நம்பரைக் காட்ட எடுத்து காதுக்குக் கொடுத்தார்.

“ஹலோ, சப் இன்ஸ்பெக்டர் சங்கர் ஸ்பீக்கிங்…”

“சார், நான் ரகுநாத் பேசறேன்…” தளர்ந்த குரலில் கூறியவர், “என் மகன் கால் பண்ணி சொல்லவும் தான் என் மொபைல்ல உங்க மிஸ்டு கால் இருக்கறதைப் பார்த்தேன்… ஒரு மேரேஜ் பங்க்ஷன்ல இருக்கவும் அட்டன்ட் பண்ண முடியலை, என் மொபைல்ல சார்ஜ் இல்லன்னு ஒயிப் நம்பர்ல இருந்து கால் பண்ணறேன்… என்கிட்ட ஏதோ முக்கியமான விஷயம் கேக்கணும்னு சொன்னிங்கலாம், என்ன விஷயம் தெரியணும் சார்…” என்றார் ரகுநாத்.

“ஆஹா, சிக்கிட்டார்…” என சந்தோஷமாய் நினைத்துக் கொண்டு அஜயை பார்த்தவர், “சார், அந்த ரகுநாத் தான் லைன்ல இருக்கார், என்ன சொல்லணும்…?” என்றார்.

“அவர் எங்க இருக்கார், நேர்ல மீட் பண்ணனும்… எங்கே வரணும்னு கேளுங்க…”

“மிஸ்டர் ரகுநாத், எங்களுக்கு ஒரு முக்கியமான விஷயமா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும், நேர்ல பார்த்தா இன்னும் வசதியாருக்கும்… நீங்க எந்த ஏரியால இருக்கீங்கன்னு சொல்லுங்க, நாங்களே வந்து பார்க்கறோம்…”

“நான் இப்ப மயிலாப்பூர் காமதேனு கல்யாண மண்டபத்துல இருக்கேன்… என் மாமா பேத்திக்கு கல்யாணம், நாளைக்கு தான் காஞ்சிபுரம் கிளம்பறோம்… ஒரு மணிக்கு மேல நான் ப்ரீ தான்… எங்க வரணும்னு சொல்லுங்க, நானே வந்துடறேன்…” என்றார் ரகுநாத்.

மைலாப்பூரில் உள்ள கபே ஒன்றின் பெயரை சொல்லி இரண்டு மணிக்கு அவரை அங்கே வரும்படி சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் சங்கர்.

ரங்கராஜன், மனநல மருத்துவர்.

என்ற போர்டு வெளியே தொங்க உள்ளே அறையில் தனது நாற்காலியில் வெள்ளைக் கோட்டுடன் அமர்ந்திருந்த ரங்கராஜன் அசப்பில் நடிகர் தியாகராஜனை நினைவு படுத்தினார். மேஜைக்கு நேர் மேலிருந்து தொங்கிய ட்ராப் லைட் வெளிச்சத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருக்க அறையின் ஓரமாய் இருந்த பரப்பளவு முழுதும் செல்ப் அடித்து புத்தகங்களாய் அடுக்கி வைத்திருந்தார்.

அந்த அறை ஒரு டாக்டரின் அறை போலில்லாமல் ரசனையான பல விஷயங்களோடு இருந்தது. சுவரில் அங்கங்கே இடம் பிடித்திருந்த ஓவியங்கள் அவரது ரசனையைக் காட்டியது.

மெல்லிய சிவந்த விரல்களால் லாப்டாப்பில் எதையோ டைப் செய்துவிட்டு நிமிர்ந்து எதிரே இருந்தவனைப் பார்த்தார்.

மேஜைக்கு அந்தப் பக்கம் பள்ளி மாணவனைப் போல் கைகட்டி பவ்யமாய் அமர்ந்திருந்தான் ஆத்ரேயன்.

“எதனால டாப்லட் எடுக்கிறதை நிறுத்துனீங்க, ஆத்ரேயன்…? ஒருவேளை முன்னை விட இப்போ பெட்டரா இருக்கோம்னு பீல் பண்ணறீங்களா…?”

“ப்ராங்க்கா சொல்லணும்னா ரெண்டு மாசமா எடுத்துக்கலை சார், எதுவும் பிரச்சனை இல்லையேன்னுதான்…”

“ரொம்ப தப்பு ஆத்ரேயன், எங்க மெடிசின்ஸ் மத்த மெடிசின்ஸ் போல இல்லை… சட்டுன்னு நிறுத்திடக் கூடாது, கொஞ்சம் கொஞ்சமா தான் டோஸ் குறைச்சுகிட்டே வரணும்… வில் டேக் சம் மன்த்ஸ்…”

“ம்ம்… ஐ பீல் டாக்டர், இந்த டைம் எமோஷனல் அவுட்பர்ஸ்ட் கொஞ்சம் அதிகமா இருக்குது டாக்டர்…”

“ஓ… ஹவ்…? எக்ஸ்ப்ளைன்…”

“முன்னாடி எல்லாம் என்னை யாராச்சும் கிண்டல் பண்ணினா, நான் நினைச்ச போல நடந்துக்கலேன்னா நிறைய கோபம் வரும், செல்போன் எடுத்துப் போட்டு உடைப்பேன், கைல எதாச்சும் பொருள் இருந்தா வீசுவேன்…”

“அதைத்தான் இவ்ளோ நாள் ட்ரீட்மென்ட்ல கண்ட்ரோல் செஞ்சமே ஆத்ரேயன், இப்ப எப்ப பண்ணுது…?”

“அ…அதுவந்து, என்னால மைன்ட் கண்ட்ரோல் பண்ண முடியாம சம்மந்தப்பட்டவங்களை அட்டாக் பண்ணனும் போலத் தோணுது டாக்டர்…”

“ஓ மை காட், என்ன சொல்லறீங்க ஆத்ரேயன்…” முகத்தில் அதிர்ச்சியைத் தேக்கிக் கேட்டார் டாக்டர் ரங்கராஜன்.

“வீட்டுல ஒரு வேலைக்காரன், டிரைவரை அடிச்சு அவங்க வேலையை விட்டே நின்னுட்டாங்க, டிரைவரை அடிச்சதுல ரத்தமே வந்து அவன் போலீசுக்குப் போவேன்னு சொல்லவும் பணம் கொடுத்து எப்படியோ மேட்டர் வெளிய தெரியாம அங்கிள் தான் சரி செய்தார்… அங்கிள் மட்டும் கூட இல்லேன்னா ரொம்ப கஷ்டமாயிருக்கும்…”

“ஐ ஸீ…”

“யார் மேலாச்சும் வெறுப்பு வந்தா அவங்களுக்கு எதாச்சும் டேமேஜ் செய்யணும்னு மனசு துடிக்குது டாக்டர்… அப்படி பண்ணக் கூடாது தப்புன்னு மூளை சொல்லுது, ஆனாலும் சில நேரம் அதையும் மீறி நடந்துக்கறேன்…”

“ரீசனிங் மைன்ட் அப்ப வேலை செய்யாது ஆத்ரேயன்…”

“ஒரு பொண்ணு அவ பேரண்ட்சோட ரொம்ப அன்பா, சந்தோஷமா இருக்கறதைப் பார்த்தா ஆத்திரமா வருது… எனக்குக் கிடைக்காத சந்தோஷம் அவங்களுக்குக் கிடைக்கக் கூடாதுன்னு வெறுப்பா வருது… அவங்க சந்தோஷத்தை எப்படியாச்சும் கெடுத்து அழ விடணும்னு மனசு சொல்லுது…”

“ஓ காட், இவ்வளவு நடந்திருக்கு, டாப்லட் வேற நிறுத்தி இருக்கீங்க… ஏன் முதல்ல மைன்ட் டிஸ்டர்ப் ஆனப்பவே என் கிட்ட வரலை…?”

“சாரி டாக்டர், எனக்குள்ளயே டாக்டர்கிட்ட போகாதே, டாப்லட் எடுக்காதேன்னு ஒரு நெகடிவ் சஜசன் வந்திருச்சு… இந்த எக்ஸ்ட்ரீமிட்டி இப்ப ஒரு லெவலைத் தாண்டுதுன்னு புரியவும் தான் உங்ககிட்ட ஓடிவந்துட்டேன்…”

“அப்படி என்ன தாண்டுச்சு…?”

“ஒரு பொண்ணைப் பார்த்ததும் எனக்குள்ள சில ஹார்மோன் ரியாக்ஷன்… என் லைப்ல அவ வேணும்னு தோணுச்சு, என் லவ்வை சொன்னதும் முதல்ல ஓகே சொன்னவ, அப்புறம் என் பிளாஷ்பாக் கேட்டதும் அசிங்கமாப் பார்த்தா… உன்னைலாம் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு அருவருப்பா முகத்தை வச்சிட்டு சொன்னா, அதைக் கேட்டதும் எனக்கு கோபம் ஏறிடுச்சு… சமூகத்துல நல்ல நிலைமைல நல்ல அந்தஸ்தோட தான இருக்கேன்… என்னை நீ எப்படி வேண்டாம்னு சொல்லலாம்னு ஒரு மாதிரி அவ மேல ரொம்ப வெறுப்பு வந்திருச்சு, அது ஒரு எக்ஸ்ட்ரீம் கோபமா மாறுச்சு…”

“ஓ… கோபத்துல என்ன தோணுச்சு…?”

“அவளைக் கொல்லுடான்னு எனக்குள்ள ஒரு ஆர்டர் காதுக்குள்ள கேட்டுட்டே இருக்கு, ஒரு கில்லிங் இன்ட்ரஸ்ட் ஸ்ட்ராங்கா வந்துடுச்சு டாக்டர்…” என்ற ஆத்ரேயன் இதை சொல்லும்போது அவனது முகம் மிகவும் விகாரமாய் மாற கண்கள் எங்கோ வெறியோடு பார்ப்பதை டாக்டர் யோசனையோடு கவனித்தார்.

Advertisement