Advertisement

 அத்தியாயம் – 20

நெட் ஒன் கபே, அடையார்.

மாடியில் இருந்த பெயர்ப்பலகையை வாசிக்கும்போதே கோகுல் எதிர்ப்பட்டு அஜய், கிருஷ்ணாவை வரவேற்றான்.

“சார்… உள்ள வாங்க, உங்களுக்கு தான் வெயிட்டிங்…” எனவும் இருவரும் அந்த கபேக்குள் நுழைந்தனர்.

மாடியில் உள்ள புளோர் முழுதும் சின்ன சின்ன காபின்களாய் பிரிக்கப்பட்டு பாதி அலுமினிய சுவராலும் மேலே பாதி கண்ணாடி சுவராலும் தடுக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு காபினுக்குள்ளும் கம்ப்யூட்டர், மேசை மீது கம்பீரமாய் நிற்க சில காபின்களில் இருந்தவர்கள் அதில் தங்கள் தேவையைத் தேடிக் கொண்டிருந்தனர். மதிய நேரம் என்பதால் நிறைய காபின் காலியாய் இருந்தது. முன்னிலேயே ரிசப்ஷன் போன்று இருந்த கண்ணாடி அறைக்கு அவர்களை அழைத்து சென்றான் கோகுல்.

உள்ளே யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் இவர்களைக் கண்டதும் அவசரமாய் பேச்சை முடிந்துக் கொண்டு எழுந்தான்.

“வாங்க சார், உக்காருங்க…” அவன் காட்டிய நாற்காலியில் அமர்ந்து கொண்டே சுற்றிலும் பார்வையைப் பதித்தனர்.

“நீங்க தான் இந்த கபேக்கு ஓனரா…”

“ஆமா சார்…”

“உங்க பேரு…”

“அருண் பிரசாத் சார்…”

அரவிந்துக்கும் உங்களுக்கும் எத்தன வருஷப் பழக்கம்…?”

“அஞ்சு வருஷம் சார்… காலேஜ் டேஸ்ல இருந்தே ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் சார்…”

“இந்த கபே தொடங்கி எத்தனை வருஷம் ஆச்சு…?”

“ரெண்டு வருஷம் சார்… அண்ணன்தான் கபே தொடங்கினார், அவருக்கு யூஎஸ்ல நல்ல ஜாப் கிடைக்கவும் இதை என் பொறுப்புல விட்டுட்டு அமேரிக்கா போயிட்டார்…”

“ஓகே, நீங்க இதை எத்தனை நாளாப் பார்த்துக்கறீங்க…?”

“நாலஞ்சு மாசமா பார்த்துக்கறேன்…”

“அரவிந்த் மரணம் பத்தி கேள்விப்பட்டீங்களா…?” என்றதும் சட்டென்று அவன் முகம் வாடியது.

“ம்ம்… கேள்விப்பட்டதும் ரொம்ப வருத்தமா இருந்துச்சு, இப்படி நடக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை சார்…”

“அரவிந்த் இந்த கபேக்கு உங்களைப் பார்க்க வருவாரா…?”

“வாரத்துல நாலஞ்சு நாள் இங்க வந்திருவான் சார், அவனுக்குன்னு தனி காபின், சிஸ்டம் எப்பவும் இருக்கும்… காலைல இருந்து ஈவனிங் வரை யூஸ் பண்ணுவான்…”

“அவ்ளோ வசதி இருக்கிற அரவிந்த் எதுக்காக இங்க வந்து சிஸ்டம் யூஸ் பண்ணனும்…?”

“அ..அதுவந்து…” என்றவன் தயங்கிக் கொண்டே கூறினான்.

“அரவிந்த் ஒரு டைப் சார், நல்லாத்தான் இருந்தான்… ஆனா ரெண்டு வருஷமா கொஞ்சம் சரியில்லை, அப்பாவோட பதவியும், பணமும் அவன் காரக்டரை ரொம்ப மாத்திடுச்சு…” என்றான் வருத்தத்துடன்.

“மாத்திடுச்சுன்னா எந்த மாதிரி…? அரவிந்த் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சதை ஓப்பனா சொல்லுங்க…”

“ம்ம்… சரி சார்…” என்றவனின் பார்வை தயக்கத்துடன் சுற்றிலும் சுழன்று விட்டு அவர்களிடம் வந்தது.

“அரவிந்த் முதல்ல நல்லா தான் இருந்தான்… அவன் செய்யற சில விஷயங்கள் எனக்குப் பிடிக்கலை, வேண்டாம்னு சொன்னாலும் கேக்கலை, என்மேல கோபப்படவும் சொல்லறதை நிறுத்திட்டேன்… பைனல் இயர் படிக்கும்போது கொஞ்சம் தப்பான பசங்களோட பிரண்ட்ஷிப் வச்சுக்கத் தொடங்கியதும் ஆளே மாறிப் போயிட்டான்…”

“மாறிட்டான்னா டிரக்ஸ், டிரிங்க்ஸ் இந்த மாதிரியா…?”

“ஆமா சார், நிறையப் பொண்ணுங்களோட பழக்கம் வச்சுக்கத் தொடங்கினான்… எல்லாருக்கும் நல்லா பணத்தை செலவு பண்ணுவான், அப்பாவோட அதிகாரத்தையும் தேவைக்கு யூஸ் பண்ணிப்பான்… அவனோட ஜால்ரா கோஷ்டிங்க ஓசில அதை அனுபவிச்சு கூடவே சுத்திட்டு இருக்கும்…” என்றவன் தயங்கிக் கொண்டே தொடர்ந்து சொன்ன விஷயம் அவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

“அரவிந்த் பொண்ணுங்க விஷயத்துலயும் அவனோட பணத்திமிரை யூஸ் பண்ணத் தொடங்கினான்… நிறைய பொண்ணுங்க பணத்துக்காகவே பழகுனாங்க… அவங்களை இவனும் போகப் போக கட்டாயப்படுத்தி யூஸ் பண்ணிக்கத் தொடங்கினான், அப்புறம் படிப்பு முடிஞ்சதும் எல்லாரும் பிரிஞ்சு போகத் தொடங்கிட்டாங்க… எனக்கு அரவிந்த் பண்ணுற விஷயங்கள் பிடிக்காம இருந்தாலும் ஒரேயடியா அவனை வெறுத்து ஒதுக்க முடியலை… என் அண்ணன் இந்த கபே தொடங்கும்போதும், என் அம்மாவோட ஆப்பரேஷன் சமயத்துலயும் நிறைய பணம் கொடுத்து ஹெல்ப் பண்ணிருக்கான்… அவன் எவ்ளோ தப்பு பண்ணாலும் என்னை அதுல இன்வால்வ் பண்ண மாட்டான், என்கிட்ட எதுவும் ஓப்பனா சொல்லிக்கவும் மாட்டான்…” பெருமூச்சுடன் சற்று நிறுத்தியவன் தொடர்ந்தான்.

“அவனுக்கு சோஷியல் மீடியாலயும் நிறையப் பொண்ணுங்களோட பழக்கம் இருந்துச்சு… அவன் இங்க வந்து தனி காபின்ல அவனுக்கான சிஸ்டத்துல ஏதோ தப்பான வேலைதான் பண்ணறான்னு எனக்கும் தெரியும்… நான் அதைப் பத்திக் கேட்டாலும் சிரிச்சுட்டே, இந்தக் காபினை நான் யூஸ் பண்ணறதுக்கு வாடகை வேணும்னா இன்னும் ரெண்டு மடங்கா வாங்கிக்க, அதுக்கு மேல எதுவும் தெரிஞ்சுக்க நினைக்காதன்னு சொல்லிடுவான்…”

“என்னால அவனைக் கண்ட்ரோல் பண்ணவும் முடியல, அவன் செய்யற தப்புகளை ஏத்துக்கவும் முடியல, நட்பை முறிச்சுக்க முடியாம அமைதியா இருந்தேன்… அப்பதான் அரவிந்தோட கார் ஆக்சிடன்ட் ஆகி அவன் ஹாஸ்பிடல்ல இருந்தான்…” என்றதும் அஜய், கிருஷ்ணா இருவரும் யோசனையுடன் பார்த்துக் கொண்டனர்.

“மூணு மாசம் முன்னாடி நடந்துச்சே, அந்த ஆக்சிடன்டா…?”

“ஆமா சார்…!”

“ஓகே, சொல்லுங்க…”

“அவனைப் பார்க்க ஹாஸ்பிடல் போனபோது அரவிந்த் ரொம்ப கோபமா ஒரு விஷயம் சொன்னான்…”

“என்ன சொன்னார்…?”

“அரவிந்த் அக்கா வீட்டுக்காரர் கணேசமூர்த்தி ஏதோ இல்லீகல் பிசினசை பெரிய லெவல்ல பண்ணிட்டு இருக்காராம், அதுக்கு அவன் அப்பாவும் உடந்தை… ஆல்ரெடி சொத்து விஷயத்துல அந்தாளு எனக்கு எதிராப் பேசிட்டு இருக்கான்னு காண்டுல இருந்தேன், இப்ப அவங்க செய்யற இல்லீகல் பிசினஸ் சம்மந்தமான டாக்குமென்ட்ஸ் என் கைல கிடைக்கவும், அதை வச்சு கொஞ்சம் விளையாட நினைச்சேன், அதுக்குள்ள ஆக்சிடன்ட் பண்ணி என்னை பெட்ல தள்ளிட்டு அந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாம் அவங்க எடுத்திட்டுப் போயிட்டாங்கன்னு சொல்லி புலம்பினான்… எனக்கு சரியாப் புரியலை, உன் அப்பாவா உன்னை ஆக்சிடன்ட் பண்ணப் பார்த்தார்னு கேட்டேன்… அந்தாளு பணத்துக்கும், பதவிக்கும் வேண்டி என்ன வேணும்னாலும் பண்ணுவார், நான்லாம் ஒரு பொருட்டே இல்லன்னு சொன்னான்…” என்றான் உண்மையான வருத்தத்துடன்.

“எக்ஸ் மினிஸ்டர் சக்கரபாணி பையன் மேல ரொம்ப பாசமானவர்னு கேள்விப்பட்டமே…”

“பாசமா தான் இருந்தார் சார், அரவிந்த் கேட்ட எல்லாமே பண்ணுவார்… சொத்து விஷயத்துல தான் மாப்பிள்ளை பேச்சைக் கேட்டு கொஞ்சம் அமைதியா இருந்தார்… ஆனா அந்த இல்லீகல் பிசினஸ்ல அவரும் இருக்கிறது தெரிஞ்சும் அரவிந்த் மிரட்டலா பேசவும் கோபமாகிட்டார்…”

“ஓ… அப்ப ஆக்சிடன்ட் பண்ணதுல மிஸ் ஆனதால அரவிந்தை இப்ப அவன் அப்பாவோ, கணேசமூர்த்தியோ கொன்னிருக்கலாம்னு நீங்க சந்தேகப் படறீங்களா…?”

“எனக்கு அப்படித் தோணலை சார், அவங்க அரவிந்தைக் கொல்லனும்னா ஈஸியா நிறைய வழி இருக்கு… அதும் இல்லாம, என்ன இருந்தாலும் ஒரு தகப்பனுக்கு மகனை இப்படிக் குரூரமா கொல்ல மனசு வரும்னு தோணலை, எனக்கு இப்ப வேற ஒரு டவுட்டு இருக்கு சார்…” என்றவன் யோசனையுடன் அவர்களைப் பார்க்க, இவர்கள் ஆர்வத்துடன் அவனைப் பார்த்தனர்.

“என்ன டவுட் பிரசாத்…?”

“அரவிந்த் இறந்தது தெரிஞ்ச பிறகு ரெண்டு நாள் முன்னாடி அவன் யூஸ் பண்ணற சிஸ்டத்தை அன்லாக் பண்ணி ஓபன் பண்ணிப் பார்த்தேன், அதுல இருந்த விஷயங்கள் மனசுக்கு ரொம்ப நெருடலா இருந்துச்சு…”

“என்ன விஷயங்கள் பார்த்தீங்க…?”

“அதுல கணேசமூர்த்தியோட பிசினஸ் சம்பந்தமான சில டாக்குமென்ட் காப்பீஸ், அப்புறம் நிறைய பொண்ணுங்க போட்டோஸ் இருந்துச்சு… அதெல்லாம் இல்லாம மை லவ்னு ஒரு போல்டர் போட்டு வச்சிருந்தான், அதை ஓபன் பண்ணதும் ஒரு பொண்ணு போட்டோ மட்டும் விதவிதமா சேவ் பண்ணி வச்சிருந்தான்… அரவிந்த் கடைசியா இங்க வந்தப்ப சொன்ன ஒரு விஷயம் நினைவு வந்துச்சு…”

“என்ன விஷயம் சொன்னான்…?”

“அவன் ஒரு பொண்ணை ரொம்ப சின்சியரா லவ் பண்ணறேன்னு சொன்னான்… நான் கிண்டலா இது எத்தனாவது லவ்னு கேட்டேன்…”

“இதான் என் பர்ஸ்ட் லவ், மத்ததெல்லாம் டைம் பாஸ்க்கு பழகினது… இந்தப் பொண்ணை பார்த்ததும் பிடிச்சிருச்சு, இனி எல்லாத் தப்பையும் திருத்திட்டு புத்தம் புது மனுஷனா என் இதயத்தோட லவ், மேரேஜ்னு லைப்ல செட்டில் ஆகப் போறேன்னு ரொம்ப சந்தோஷமா சொன்னான்…”

“அந்தப் பொண்ணு உன்னை லவ் பண்ணுதான்னு கேட்டேன்… அவளுக்கு என்னை நேரடியாத் தெரியாது, ரெண்டு மாசமா அவளுக்குத் தெரியாம பின்னாடி சுத்தறேன்… அடுத்த மாசம் அவ பர்த்டே அப்ப சர்ப்ரைஸா என் லவ்வை சொல்லி ஷாக் கொடுக்கலாம்னு இருக்கேன்னு சொன்னான்…”

“ஓகே, அரவிந்த் லவ் பண்ண பொண்ணுக்கும் இந்தக் கொலைக்கும் என்ன சம்மந்தம்…?”

“அரவிந்த் லவ் பண்ண பொண்ணு பேரு இதயா சார்…” அவன் சொல்லவும் திகைப்புடன் மூவரும் பார்த்தனர்.

“இதயா…!!! இதயான்னா சொன்னிங்க…?”

“ஆமா சார், நேத்து அந்தப் பொண்ணோட மரணத்தைப் பத்தி போட்டோவோட பேப்பர்ல பார்த்ததும் தான் என் மனசுக்கு ஒரு நெருடல் வந்துச்சு… அரவிந்த், இதயா ரெண்டு பேருக்கும் பொதுவான எதிரி யாராச்சும் இந்தக் கொலைகளை ஏன் பண்ணிருக்கக் கூடாது…?” அருண் பிரசாத் கேட்க மூவரின் முகமும் யோசனையைக் காட்டியது.

“அப்படி இவர்கள் இருவருக்கும் பொதுவான ஒருவன் எதற்காக நேசிகாவைக் கொல்ல வேண்டும், அந்தகன் அவளில் தானே முதலில் வெளியே வந்தான்…” யோசித்த அஜய் அருண் பிரசாத்திடம் கேட்டான்.

“அரவிந்த்தோட மாமா ஏதோ இல்லீகல் பிசினஸ் பண்ணறதா சொன்னிங்களே, எந்த மாதிரி பிசினஸ்…?

“போதை மருந்து சார், அவங்களுக்கு சொந்தமா ஒரு பெரிய பார்மஸி இருக்கு… அங்கே தேவைக்கு வர்ற மருந்துங்க கூட டிரக்ஸ்சும் சேர்த்து இம்போர்ட் பண்ணி லோகல்ல கை மாத்தி விடறாங்க சார்…”

“இங்கே உள்ள அரவிந்த் சிஸ்டத்தை நாங்க பார்க்கலாமா…?”

“வாங்க சார்…” சொன்னவன் மேசை வலிப்பைத் திறந்து காபின் சாவியை எடுத்துக் கொண்டு கடைசியில் ஓரமாய் இருந்த பூட்டியிருந்த காபினை நோக்கி நடக்க இவர்களும் தொடர்ந்தனர். சின்னப் பூட்டின் வாய்க்குள் சாவியைத் திருக ‘க்ளக்’ என்ற ஓசையுடன் திறந்து கொண்டது.

காபினுக்குள் நுழைந்து சில நிமிடங்களை செலவாக்கி கம்ப்யூட்டரை உயிர்ப்பித்து ஒரு போல்டரைத் தட்ட கணேஷ் பார்மசுடிக்கல்ஸ் என்ற பெயருக்கு வந்திருந்த சில லெட்டர்ஸ், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு டெலிவரி செய்யப்பட்டிருந்த மருந்துப் பட்டியல்கள் ஓபனாக சில பெயர்கள் மஞ்சள் மார்க்கரில் அடையாளமிடப்பட்டு தெரிந்தது. அதை ஒரு பென்டிரைவில் காப்பி செய்து எடுத்துக் கொண்டனர்.

அடுத்து ‘மை லவ்’ என்ற போல்டரைத் தட்ட விதவிதமான வண்ணங்களில் இதயா அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள். போட்டோவுக்கென்று போஸ் கொடுக்காமல் இயல்பாய் காரை விட்டு இறங்கும்போது, நடக்கும்போது, தோழியருடன் பேசி சிரிக்கும்போது, போன் பேசும்போது, டென்னிஸ் கோர்ட்டில் பிராக்டிஸ் செய்யும்போது என பலவித போட்டோக்கள் அவளுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டு இருந்தன. அதையும் காப்பி செய்து எடுத்துக் கொண்டனர்.

“அருண், அரவிந்தோட பேஸ்புக் ஐடி பாஸ்வர்ட் உங்களுக்குத் தெரியுமா…?”

“இல்ல சார், அவனோட ஐடி தெரியும்… பட் பாஸ்வர்ட் அடிக்கடி மாத்திட்டே இருப்பான், தெரியலை…” என்றான்.

“ஓகே… கோகுல், அரவிந்தோட ஐடியை நோட் பண்ணிக்கங்க,  சொல்லுங்க அருண்…” என்றதும் அருண் சொன்ன ஐடியை கோகுல் குறித்துக் கொண்டான்.

“இன்ஸ்டா, வாட்ஸ்அப் ல அரவிந்த் யூஸ் பண்ண ஐடியும் வாங்கிக்கங்க… அதை ஹாக் பண்ணினா ஏதாவது விஷயம் கிடைக்கலாம்னு தோணுது… இது எதுலயாச்சும் அரவிந்த் பிரண்ட் லிஸ்ட்ல நேசிகாவோ, இதயாவோ, இல்ல சந்தேகப்படுற போல இவங்களை சுத்தி உள்ள யாராச்சுமோ இருக்காங்களான்னு செக் பண்ணுங்க…”

“ஓகே சார்…”

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே கிருஷ்ணாவின் அலைபேசி பான்ட் பாக்கெட்டுக்குள் கிர்ரென்று வைப்ரேஷன் மோடில் சிணுங்க, “ஒரு நிமிஷம் சார்…” என எக்ஸ்யூஸ் சொல்லி காபினுக்கு வெளியே வந்து அழைப்பை எடுத்தார்.

“ஹலோ, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா ஸ்பீக்கிங்…”

“இன்ஸ்பெக்டர், நான் விஜயா ஹாஸ்பிடல் டாக்டர் பிரணவ் பேசறேன்…” எனவும் சற்று பதட்டமானார் கிருஷ்ணா.

“சொல்லுங்க டாக்டர், நாங்க கொஞ்ச நேரத்துல அங்கே தான் வர்றதா இருந்தோம்… வர்ஷாவோட ஹெல்த் கண்டிஷன் எப்படி இருக்கு, எதுவும் பிராப்ளம் இல்லையே…”

“நோ, ஷீ ஈஸ் பைன்… ட்ரீட்மென்ட் போயிட்டு தான் இருக்கு, அநேகமா இப்போதைய பொசிஷன் வச்சுப் பார்க்கும்போது நாளைக்கு வர்ஷா நார்மலா கண் விழிக்க வாய்ப்பிருக்கு…”

“ஓ… வெரிகுட் டாக்டர்…”

“பட், இப்ப நான் அதை சொல்ல கூப்பிடலை…” பிரணவ் சொல்லவும் கிருஷ்ணா மீண்டும் யோசனையானார்.

“ஓ… வேற என்ன டாக்டர்…”

“கொஞ்ச நேரம் முன்னாடி வர்ஷாக்கு லேசா நினைவு திரும்புதுன்னு நர்ஸ் வந்து சொல்லவும் செக் பண்ண போனேன்… வர்ஷா மயக்கத்துல ஏதேதோ வார்த்தைகளை சொல்லி முனங்கிட்டு இருந்தாங்க…”

“ஓ… என்ன வார்த்தைகள் டாக்டர்…?”

“குளறலாப் பேசினதால சரியாப் புரியலை, ‘என்னை ஒண்ணும் பண்ணிடாத, ஹெல்ப் பண்ணுங்க…’ இப்படி சில புரிஞ்சுது, அதோட ஒரு பேரை சொல்லி கெஞ்சினாங்க…”

“என்ன பேரு டாக்டர்…?”

“ப்ளீஸ் அந்தகன், என்னை விட்டுடுன்னு சொன்னாங்க, இது உங்களுக்கு யூஸ் ஆகுமோன்னு தான் கால் பண்ணேன்…” எனவும் கிருஷ்ணாவின் புருவம் வியப்புடன் மேலேறியது.

Advertisement