Advertisement

அத்தியாயம் – 2

“ஆனந்தி… நீ எதுக்கு இதெல்லாம் பண்ணற, ரெஸ்ட் எடு…” தனக்கு காபியுடன் வந்த மனைவியைக் கடிந்து கொண்டே அவள் கையிலிருந்த காபிக் கோப்பையை வாங்கி உறிஞ்சினான் பாலாஜி.

“புல் டைம் ரெஸ்ட் தானப்பா எடுக்கறேன்… ஆபீசுக்கும் வரக் கூடாதுன்னு சொல்லிட்டீங்க, செம போர் தெரியுமா…”

“ஆபீஸ் எல்லாம் நான் பார்த்துக்கறேன்… நீ நம்ம குழந்தையை அழகா பெத்தெடுக்கிற வேலையை மட்டும் கவனிச்சுக்க… ஹூம், உன்னைப் பார்க்காம எப்படி ஒரு வாரம் பெங்களூருல ஓட்டப் போறேன்னு தான் தெரியல, ஓகே நான் கிளம்பறேன்… பத்திரமா இரு…” சொல்லிக் கொண்டே அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டவன்  எழுந்து கொள்ள, காசி அவனது சூட்கேஸை வாசலில் நின்ற டாக்ஸியில் வைத்துக் கொண்டிருந்தான்.

“நீங்களும் வேலை வேலைன்னு ஓடிட்டு இருக்காம, நேரா நேரத்துக்கு சரியா சாப்பிடுங்க… தினமும் நைட் எனக்கு போன் பண்ணனும், பத்திரமா போயிட்டு வாங்க…” என்றாள் கணவனிடம்.

“சரிம்மா, பார்த்துக்கறேன்…” அவளிடம் விடைபெற்று வாசலுக்கு வந்தான் பாலாஜி.

“காசி, உன் தங்கச்சியைப் பார்த்துக்கன்னு உன்கிட்ட சொல்ல வேண்டியதில்ல, நல்லாப் பார்த்துப்பன்னு தெரியும்… என்ன விஷயம்னாலும் உடனே எனக்கு தெரிவிக்கணும், சரியா…”

“நான் பார்த்துக்கறேன் தம்பி, நீங்க பத்திரமா போயிட்டு வாங்க…” என்றான் காசி.

“தம்பிக்கு சம்சாரம் மேல எவ்ளோ பிரியம்…” என மனம் சந்தோஷத்தில் நெகிழ்ந்தது.

“சரி வர்றேன்…” என்றவன் டாக்ஸியில் அமர, புன்னகையுடன் டாட்டா கொடுத்தாள் ஆனந்தி. டிரைவர் வண்டியை உசுப்ப அது மெல்ல நகர்ந்து சாலையில் இறங்கியது.

கைகடிகாரத்தில் பார்வையைப் பதித்தவன், “அடடா, நினைச்சதை விட பத்து நிமிஷம் லேட் ஆகிடுச்சே…” என யோசித்தான்.

“டிரைவர், கொஞ்சம் சீக்கிரம் போ…” என்றதும் வண்டியின் வேகம் கூட சிறிது நேரத்தில் ரெயில்வே ஸ்டேஷன் முன் டாக்ஸி நின்றது. சூட்கேசுசன் கீழே இறங்கிய பாலாஜி பணத்தைக் கொடுத்துவிட்டு உள்ளே நடந்தான். ரயில் நிலையம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. அங்கங்கே ரயிலின் வருகைக்காய் காத்திருந்த பயணிகளையும், போர்ட்டர்களையும், டீ, காபி குரல்களையும் கடந்து நடந்தவனின் பாக்கெட்டில் இருந்த அலைபேசி அலறியது.

அதை எடுத்துப் பார்த்தவன், “ஹனி காலிங்…” என்ற டிஸ்ப்ளே கண்டதும் இதழில் மென்னகை ஒட்டிக் கொண்டது.

“அதுக்குள்ள கால் பண்ணிட்டாளே, இந்த ஹனி சரியான அவசரக்குடுக்கை…” செல்லமாய் கடிந்து கொண்டே அழைப்பை எடுத்து காதுக்குக் கொடுத்தான்.

“ஹாய் ஹனி…”

“ஹூக்கும், ஹனியாம் ஹனி… வீட்டுல இருந்தா என் நினைவு சுத்தமா மறந்து போயிடுமே, எவ்ளோ நேரமா உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கறது…” போனில் வழிந்த தேன் குரல் செல்லமாய் சலித்துக் கொண்டது.

“கோச்சுக்காதடா செல்லம்… ஒருவாரம் உன்னோட ஜாலியா பெங்களூர்ல சுத்தப் போறேன்… கொஞ்சம் நேரம் பொண்டாட்டியைக் கொஞ்சினா தான டவுட் வராம இருக்கும்…” என்றவனின் குரல் குழைந்தது.

“ஹூம், சரி… சரி… சீக்கிரம் வாங்க, போறவன் வர்றவன்லாம் என்னைக் கண்ணாலயே ரேப் பண்ணிடுவான் போலருக்கு…”

“ஹாஹா… எதுக்கும் சேப்டிக்கு கைல மிளகாப்பொடி, பட்டன் கத்தி எல்லாம் எடுத்து வச்சிருக்க தானே, இதோ, உன்னை நெருங்கி வந்துட்டே இருக்கேன்…” என்றவன் தூரத்தில் இருந்த கல் மேடையில் அவள் அமர்ந்திருப்பது கண்டு வேகமாய் நடந்தான்.

“ம்ம்… ஐ ஆம் வெயிட்டிங் டார்லிங்…” என்றவள் அழைப்பைத் துண்டிக்க மனம் சில்லிட்டது பாலாஜிக்கு. அவள் இவனைக் கண்டு கையசைக்க, பதிலுக்கு கையசைத்தபடியே நடந்தான்.

“ஒருவாரம், முழுசா ஒரு வாரம்… என் செல்ல ஹனி கூட யார் தொந்தரவும் இல்லாம ஜாலியா இருக்கப் போறேன்…” யோசித்தவனின் மனது ஜில்லென்று சந்தோஷமாய் பறக்கத் தொடங்கியது.

அவன் செல்லமாய் அழைத்த ஹனி வேறு யாருமில்லை. ஆனந்தியின் உடன் படித்த தோழி தேன்மொழி தான்… படித்து முடித்து குடும்ப நிலைமை சரியில்லாமல் வேலை தேடிக் கொண்டிருந்தவளை பாவம் பார்த்து தனது நிறுவனத்திலேயே டைப்பிஸ்ட் வேலைக்கு சேர்த்துக் கொண்டாள் ஆனந்தி. ஆனால் அவளோ இவளுக்குப் பாவம் பார்க்காமல் இவளது கணவனை சொந்தமாக்கிக் கொள்ளும் முயற்சியில் இருந்தாள்.

கல்லூரியில் படிக்கும்போது ஆனந்தியின் மீது ஒரு கண்ணை வைத்திருந்த பாலாஜி மறு கண்ணை தேன்மொழியின் மீது வைத்திருந்தது பாவம் ஆனந்திக்குத் தெரியாமல் போனது.

**********************

வசந்தம் ஆதரவற்றோர் இல்லம்.

பெரிய பெயர்ப்பலகையுடன் சிறிய கட்டிடத்தில் இருந்த இல்லத்தில் ரேவதியும், பிரசன்னாவும் மகள் வர்ஷாவுடன் புன்னகையோடு நின்றிருந்தனர். வர்ஷா பிறந்தநாள் உடையில் பளிச்சென்று அழகாய் இருந்தாள்.

அவர்களைச் சுற்றி அந்த இல்லத்தில் இருந்த சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஒன்று கூடி இருந்தனர். இல்லத்தின் நிர்வாகியான அறுபது வயது சாரதாம்மா கனிவான புன்னகையுடன் வர்ஷாவுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லிக் கொண்டிருந்தார்.

“இன்னிக்கு நம்மளோட பிறந்தநாள் கொண்டாட வந்திருக்கும்  வர்ஷா எப்பவும் சந்தோஷத்தோடவும், நீண்ட ஆயுளோடவும் நல்லா இருக்கணும்னு எல்லாரும் ஒண்ணா பிரார்த்தனை பண்ணுவோம்…” சாரதாம்மா சொல்லவும் அனைவரும் கை கூப்பி, கண் மூடி கடவுளை வேண்டினர்.

பிறகு கோரஸாய் பிறந்தநாள் வாழ்த்துக் கூறினர்.

பிரசன்னா ஏற்பாடு பண்ணியிருந்த உணவு வகைகள் ஒவ்வொரு பாத்திரத்தில் வைக்கப்பட்டிருக்க, அனைவரும் உணவுக் கூடத்தில் வரிசையில் அமர்ந்ததும் இலை போட்டு பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது.

வடை, சுவீட் என்று வரிசையாய் இலையை நிறைத்து பாயாசம் வரை பரிமாற எத்தனையோ நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு அற்புதமான, அருமையான விருந்தைக் கொடுத்த அந்தக் குடும்பத்தை மனமார வாழ்த்திக் கொண்டே சாப்பிடத் தொடங்கினர்.

அவர்களுடன் வர்ஷா, பிரசன்னா, ரேவதியும் அமர்ந்திருக்க அவர்கள் ஆவலுடன் சாப்பிடுவதைக் கண்ட இவர்களின் மனதும் நிறைந்து போனது. சாப்பிட்டு முடித்து அனைவரும் நன்றி சொல்ல மன நிறைவோடு வீட்டுக்கு கிளம்பினர்.

“கோவிலுக்குப் போனப்ப கூட மனசு இவ்ளோ நிறைவா இல்லங்க… இங்க வந்தது ரொம்ப நிறைவா இருக்கு…”

“ஆமாம் மா… என்ன தான் கேக் வெட்டி எல்லாருக்கும் பார்ட்டி கொடுத்தாலும், பசில இருக்கவங்க வயித்தை நிறைக்கிற போல ஒரு திருப்தி கிடைக்காது… அவங்க வாழ்த்துகள் தான் உண்மையான வாழ்த்து…” சொல்லிக் கொண்டே காரை வளைத்துக் கொண்டிருந்தான் பிரசன்னா.

“டாட்… வீட்டுக்குப் போற வழில கேக் வாங்கிட்டுப் போயிடலாம் தான…” வர்ஷா கேட்க புன்னகைத்தான்.

“ஆல்ரெடி கால் பண்ணி கேட்டுட்டன்டா வர்ஷூ செல்லம்… கேக் பாக் பண்ணி ரெடியா இருக்காம்… உனக்கு வேற என்ன வேணும்னு சொல்லு, அதையும் வாங்கிடுவோம்….”

“நிறைய சாக்கலேட்ஸ் வேணும்… பிரண்ட்ஸ்க்கு கொடுக்க…”

“ஓகே… அப்புறம் உனக்கு அப்பா என்ன கிப்ட் கொடுக்கப் போறேன்னு யோசிச்சியா…?”

“சாரி டாடி, நோ ஐடியா… நீங்களே அந்த சர்ப்ரைஸ் கிப்ட் என்னன்னு சொல்லிடுங்க ப்ளீஸ், ப்ளீஸ்…” கொஞ்சிய மகளை நோக்கி சிரித்த ரேவதி,

“அப்பாவே சொல்லிட்டா அப்புறம் எப்படி அது சர்ப்ரைஸ் கிப்ட் ஆகும் வர்ஷூ மா…” என பிரசன்னாவும் சிரித்தான்.

“இன்னும் பார்ட்டி தொடங்க ரெண்டு மணி நேரம் இருக்கு… அதுக்குள்ள நீ யோசிச்சு சொல்லு…”

“ம்ம்… ஓகே, ஐ வில் டிரை டாட்…” என்றவள், “என்ன கிப்டா இருக்கும்…” என விரலை கன்னத்தில் வைத்துக் கொண்டு வானத்தை நோக்கி யோசிக்கத் தொடங்க பெற்றோர் புன்னகையுடன் பார்த்துக் கொண்டனர்.

ஆறு மணிக்கு சரியாய் பார்ட்டி தொடங்க ஒவ்வொருத்தராய் வந்து கொண்டிருந்தனர். புத்தம் புதிய ஆடையில் தோழியருக்கு நடுவே தேவதையாய் ஜொலித்துக் கொண்டிருந்தாள் பிறந்தநாள் நாயகி வர்ஷா.

அவளுக்குப் பிடித்த சாக்கலேட் ட்ரஃபிள் கேக் சாக்கலேட்டில் குளித்து கட் பண்ணத் தயாராய் மேசை மீது மெழுகுவர்த்தியுடன் காத்திருந்தது. வருபவர்களை வரவேற்று அமர வைத்துக் கொண்டிருந்த பிரசன்னாவின் விழிகள் அடிக்கடி வாசலைப் பார்த்து மீண்டன.

“கேக் கட் பண்ண டைம் ஆச்சு, பாஸ் இன்னும் வரலியே…” யோசித்தவனின் அருகே வந்த ரேவதி,

“என்னங்க, நாம இன்வைட் பண்ண எல்லாரும் வந்துட்டாங்க, கேக் கட் பண்ணிடலாமா…?” எனக் கணவனின் காதில் கிசுகிசுத்தாள்.

“பாஸ் பார்ட்டிக்கு வரேன்னு சொன்னார், அவருக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்…” எனும்போதே அவனது செல்போன் சிணுங்க எடுத்துப் பார்த்தவன் முகம் மலர்ந்தது.

“பாஸ் தான் கால் பண்ணறார், வந்துட்டார்னு நினைக்கறேன்…” அழைப்பை எடுத்தான்.

“சார், வந்துட்டிங்களா… பார்க்கிங் ஆப்போசிட்ல உள்ள எம்ப்டி பிளேஸ்ல அர்ரேஞ் பண்ணிருக்கோம்…”

சொல்லிக் கொண்டே வாசலுக்கு சென்றவன் ஆத்ரேயனின் ஸ்கோடாவைக் கண்டதும் அவனுக்கு பார்க்கிங் இடத்தைக் காட்டிவிட்டு அவனை அழைத்துக் கொண்டே உள்ளே வந்தான். மனைவி மகளுக்கு அறிமுகப்படுத்தியவன் முன்னிலிருந்த நாற்காலியில் அமர வைத்தான்.

“சார், ப்ளீஸ் உக்காருங்க, கேக் கட் பண்ணிடலாம்…” சொன்ன பிரசன்னா மகளிடம் சென்று கேக் மீதிருந்த மெழுகுவர்த்தியைப் பத்த வைத்தான். அனைவரும் ஹாப்பி பர்த்டே வர்ஷா என வாழ்த்துப் பாடி கை தட்ட, புன்னகையுடன் வெட்டிய கேக்கை எடுத்து பெற்றோருக்கு ஊட்டி விட்டாள் வர்ஷா.

பிரசன்னா மகளுக்கு ஊட்டிவிட்டு நெற்றியில் முத்தமிட, “டாடி…” என அவளும் கேக் வாயுடன் தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டாள். சந்தோஷமாய் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“டாட், இப்பவாச்சும் சொல்லுங்க… எனக்கு என்ன கிப்ட் பண்ணப் போறீங்க…” ஆவலுடன் கேட்ட மகளிடம் ஒரு சின்ன நகைப் பெட்டியை நீட்டினான் பிரசன்னா.

“என் வைர மகளுக்கு இந்த வைர நெக்லஸ் தான் அப்பாவோட பரிசு…” எனவும் அவள் கண்கள் வியப்பில் விரிய, “வாவ்… வைர நெக்லஸா…” எனக் குதித்தாள்.

எப்போதோ ஒரு கல்யாண விசேஷத்தில் ஒரு பெண் அணிந்திருந்த சிம்பிள் நெக்லசைக் கண்டு தான் பிடித்திருப்பதாக சொன்னதை நினைவு வைத்து வாங்கிக் கொடுத்த தந்தையைக் கட்டிக் கொண்டு தனது சந்தோஷத்தைத் தெரிவித்தாள்.

“ஓகே… என்ஜாய் பேபி…” சொன்ன பிரசன்னா எல்லாரையும் கவனிக்க செல்ல ஒவ்வொருத்தராய் தாங்கள் கொண்டு வந்த பரிசுப் பொருளைக் கொடுத்து வாழ்த்துக் கூறினர்.

புன்னகையுடன் அமர்ந்திருந்த ஆத்ரேயன் எழுந்து கையில் இருந்த கிப்ட் பாக்ஸை வர்ஷாவிடம் நீட்டி வாழ்த்துக் கூற,

“சாப்பிட்டு தான் போகணும், உக்காருங்க சார்…” என அமர வைத்தான் பிரசன்னா. வர்ஷா தோழியருடன் பிஸியாய் சிரித்துக் கொண்டிருக்க கேக்கை சின்னத் துண்டுகளாய் வெட்டி எல்லாருக்கும் பிளேட்டில் வைத்துக் கொடுத்தனர்.

சிறிது நேரத்தில் பஃபே முறையில் உணவு பரிமாறத் தொடங்க அனைவரும் சாப்பிடத் தொடங்கினர்.

ஆத்ரேயனுக்கு வேண்டியதை பிரசன்னாவே பிளேட்டில் வாங்கிக் கொடுக்க, “ஹேய்… நான் வாங்கிப்பனே பிரசன்னா… இது ஆபீஸ் இல்ல, இங்க நீங்க என் ஸ்டாபும் இல்ல… ப்ரீயா இருங்க…” என புன்னகைத்தவன் இயல்பாய் ஒரு மேஜை மீது வைத்து சாப்பிடத் தொடங்கினான்.

பார்ட்டி இனிதாய் நடக்க சாப்பிட்டு முடித்து ஆத்ரேயன் வீட்டுக்குக் கிளம்பினான். எல்லாரும் கிளம்ப வீட்டினர் மட்டுமே இருந்தனர். வர்ஷா ஆவலுடன் பரிசுப் பொருட்களை பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“டாடி, இங்க பாருங்க… உங்க பாஸ் எனக்கு மொபைல் கிப்ட் பண்ணிருக்கார்…” சந்தோஷத்தில் குதித்தவள் பெற்றோருக்கு காண்பித்தாள். “ஹோ, சூப்பர், அதும் காஸ்ட்லி மொபைல் போலருக்கே…” என சந்தோஷித்தான் பிரசன்னா.

காலையிலிருந்து ஓடியது சலிப்பை தர அவர்களும் சீக்கிரமே உறங்க சென்றனர். காலையில் வாசல் கூட்ட எழுந்து வந்த ரேவதி, முன்னிலேயே இருந்த பெரிய சைஸ் நீலநிற குப்பைக் கவரைக் கண்டதும் திகைத்தாள்.

“இது பார்ட்டில சாப்பிட்ட பிளேட்டைப் போடுறதுக்கு வச்ச வேஸ்ட் சாக்காச்சே, யாரு முன்னாடியே கொண்டு வந்து வச்சது…” யோசித்துக் கொண்டே அதன் அருகே செல்ல வயிற்றைக் குமட்டும் அளவுக்கு நாற்றமடித்தது.

“நேத்து போட்ட வேஸ்ட் இவ்ளோ நாறுமா…?” யோசித்தவள் மூக்கைப் பொத்திக் கொண்டு அதை மெல்லத் திறந்து பார்க்க அதற்குள் கறுப்புக் கவரில் எதுவோ கொழகொழத்தது. கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து அதை மெல்ல விலக்கிப் பார்க்க, குப்பென்று வீசிய ரத்தத்தின் துர்வாடையில் அதிர்ந்து, “ஐயோ…” என அலறிக் கொண்டே வீட்டுக்குள் ஓடினாள்.

Advertisement