Advertisement

 அத்தியாயம் – 19

நேசிகாவின் வீட்டுக்கு செல்வதற்காய் தயாராகிக் கொண்டிருந்த யுவராஜ் கேட்டுக்கு வெளியே வண்டியின் ஹாரன் கேட்கவும் எட்டிப் பார்த்தான். இன்னோவாவில் இருந்து அஜய், கிருஷ்ணா இருவரும் இறங்குவதைக் கண்டவன் திகைப்புடன் கேட்டுக்கு சென்றான்.

“வாங்க சார், நீங்க இங்க…” யுவராஜ் கேள்வியுடன் அவர்களை நோக்க புன்னகைத்தான் அஜய்.

“ஏன், உங்க வீட்டுக்கு நாங்க வரக் கூடாதா…?” அஜய் கேட்க வேகமாய் தலையாட்டி மறுத்தான்.

“சேச்சே, அப்படி இல்லை, நேசிகா வீட்டுக்கு போகணும்னு சொல்லி இருந்தீங்க, நான் அங்க தான் கிளம்பிட்டு இருக்கேன்… அதான், நீங்க இங்க வரவும் அப்படி கேட்டேன்…”

“அது வேறொண்ணும் இல்லை யுவராஜ்… இந்தப்பக்கம் ஒரு விசாரணைக்கு வந்தோம், அதான்… அப்படியே உங்களையும் பிக்கப் பண்ணிட்டு போலாம்னு வந்தோம்…” சொன்னவனின் பார்வை அந்தப் பெரிய வீட்டை எடை போட்டது.

எல்லா வசதிகளும் உள்ள பெரிய வீடு… முன்னில் இருந்த இடத்தை பூந்தொட்டிகள் வரிசையாய் இடம் பிடித்திருக்க பல வண்ணப் பூக்கள் காற்றில் தலையாட்டிக் கொண்டிருந்தது.

“வீட்டோட சரவுண்டிங்ஸ் ரொம்ப நல்லாருக்கு, யுவராஜ்…” சொல்லிக் கொண்டே போர்ட்டிகோவைத் தாண்டி வீட்டுக்கு நடக்க அவனிடம் சிறு தயக்கம் தெரிந்தது.

“தே..தேங்க்ஸ் சார், சாரி… வீட்டுல யாரும் இல்லை, அதான் உங்களைக் கூப்பிட யோசித்தேன்… வாங்க, உக்காருங்க…” சொல்லிக் கொண்டே ஹாலுக்கு செல்ல பின்தொடர்ந்தனர்.

“ஏன் உங்க பேரன்ட்ஸ் இல்லியா, எங்க போயிட்டாங்க…?”

“ஹாஸ்பிடல்க்கு போயிருக்காங்க சார்…”

“யாருக்காச்சும் உடம்பு சரியில்லையா…?” கேட்டுக் கொண்டே ‘ட’ வடிவ சோபாவில் அமர்ந்தனர்.

“ம்… தம்பிக்கு கொஞ்சம் உடம்பு முடியலை, அதான் டாக்டரைப் பார்க்கப் போயிருக்காங்க…”

“ஓ..!! அவங்களையும் பார்க்கலாம்னு நினைச்சோம்… இட்ஸ் ஓகே, உங்க தம்பி என்ன பண்ணறார்…?”

“அவன் வீட்டுல சும்மா தான் இருக்கான் சார்…” எனவும் திகைப்புடன் பார்த்தனர்.

“அப்படியா, படிப்பு முடிச்சிட்டாரா…?”

“டிகிரி முடிச்சிட்டு வீட்டுல தான் இருக்கான் சார், சொந்தமா பிசினஸ் பண்ணனும்னு சொல்லிட்டு இருக்கான்… அப்பா சம்மதிக்காம அவரோட பிசினஸைப் பார்க்க சொல்லி சொல்லிட்டு இருக்கார்…”

“ம்ம்…” என்றவனின் பார்வை சுற்றிலும் சுழல ஹால், அடுக்களை, டைனிங் ஹால் என நீட்டாய் இருந்தது.

“வீடு நீட்டா அழகாருக்கு, எத்தனை பெட்ரூம் யுவராஜ்…?”

“கீழ ரெண்டு, மேல ரெண்டு பெட்ரூம் சார்…”

“ம்ம்…” என்றவன், “உங்ககிட்ட ஒரு விஷயம் ஓபனா கேக்கலாமா…?” எனவும் யோசனையாய் பார்த்தான் யுவா.

“என்ன விஷயம் சார், கேளுங்க…?”

“நீங்க நிறைய கிரைம் நாவல்ஸ் படிப்பீங்களா…?”

சோகமாய் புன்னகைத்த யுவராஜ், “எனக்கு வொர்க் முடிச்சு ஒழுங்கா சாப்பிட, தூங்கவே நேரம் இருக்காது… இதுல புக்ஸ் எங்கே படிக்கிறது சார்…? எனக்கு அதுல விருப்பமும் இல்லை, டைம் கிடைச்சா டீவி பார்ப்பேன், மியூசிக் கேட்பேன்… அவ்ளோதான், என் ஹாபீஸ்…” என்றான்.

“ஹூம்… அப்புறம் எதுக்கு நேத்து அவ்ளோ கிரைம் நாவல்ஸ் வாங்கிட்டுப் போனிங்க…?”

“ஓ… அதுவா…? என் தம்பி நிறைய புக்ஸ் படிப்பான்… அதுவும் கிரைம் நாவல்னா சாப்பாடு, தூக்கம் இல்லாமப் படிப்பான்… அவ்ளோ பிடிக்கும், அவனுக்கு பிடிச்ச ஒரே பொழுது போக்கு அதுதான், அவனுக்கு தான் வாங்கினேன்…” எனவும் அஜய், கிருஷ்ணா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“ஓஹோ… ஓகே கிருஷ்ணா, அப்ப நாம கிளம்பலாமா…?”

“ம்ம், கிளம்பலாம் சார்…” கிருஷ்ணா சொல்ல,

“நீங்க எங்களோடவே வந்திடறீங்களா, வேற வண்டில வரீங்களா யுவராஜ்…?” என்றான் அஜய்.

“நேசிகா விஷயத்தை சொன்னதும் அவ பேரன்ட்ஸ் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரியலை, நான் கொஞ்ச நேரம் அவங்க கூட இருந்துட்டு வர்றேன்… என் வண்டியை எடுத்துக்கறேன் சார்…” என்றான் வாடிய முகத்துடன்.

“ம்ம்… அதும் சரிதான், இனியும் நேசிகா பாடியை வச்சிருக்க முடியாது… உடனே இறுதி காரியத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைப் பண்ணியாகணும்…” சொல்லிக் கொண்டே அஜய், கிருஷ்ணா இருவரும் எழுந்து வாசலுக்கு நடக்க யுவா வீட்டைப் பூட்டி சாவியை எப்போதும் வைக்கும் மறைவான இடத்தில் வைத்துவிட்டு வந்தான்.

மேற்கு மாம்பலம்.

சூரியன் உச்சிக்கு ஏறத் தொடங்குவதை அனுசரித்து வெயிலையும் உக்கிரமாய் பரப்பிக் கொண்டிருந்தான். வரிசையாய் வந்த குடியிருப்புப் பகுதிக்குள் யுவாவின் பைக் நுழைய, அதன் பின்னிலேயே இன்னோவா கார் தொடர்ந்தது. கோதண்டராமர் கோவிலைத் தாண்டி இருந்த இரண்டாவது கட்டுக்குள் நுழைந்து வரிசையாய் இருந்த வீடுகளில் ஒரு வீட்டின் முன் பைக்கை மௌனமாக்கினான் யுவராஜ். அவனைத் தொடர்ந்து வந்த இன்னோவாவும் ஓரமாய் நின்று ஊமையாக அஜய், கிருஷ்ணா இருவரும் இறங்கினர்.

முன்னில் இருந்த கனிக்கொன்றை மரத்திலிருந்து மஞ்சள் நிற மலர்கள் தங்க அரைஞாண் போல வெயிலில் பளபளத்து ஆடிக் கொண்டிருந்தது.

“இதான் நேசிகாவோட வீடா…?” அஜய் கேட்க யுவா ஆமாமென்று தலையாட்டினான்.

கிருஷ்ணா கேட்டின் வெளியே இருந்த காலிங் பெல்லை அழுத்த யுவராஜ் தயக்கமாய் சற்று ஒதுங்கி நின்றான். அழைப்பு மணி அடித்து ஓய்ந்ததும் கதவைத் திறந்து எட்டிப் பார்த்த பெண்மணியின் முகம் நடிகை சரண்யாவை நினைவு படுத்த இவர்களைப் புரியாத பார்வையுடன் ஏறிட்டார்.

“யாரு… உங்களுக்கு என்ன வேணும்…?” கேட்டவரின் பார்வை தயக்கத்துடன் நின்று கொண்டிருந்த யுவராஜின் மீது படிந்ததும் சட்டென்று மாறியது.

“யார் நீங்க…? நீ எதுக்கு இங்க வந்திருக்க…” சட்டென்று அவரது குரல் யுவாவைக் கண்டு கோபமாய் மாறி ஒலித்தது.

“எங்களை உயிரோட கொன்னது போதாதுன்னு இன்னும் உடம்புல உயிர் எதுவும் ஒட்டிட்டு இருந்தா கொன்னுட்டுப் போகலாம்னு வந்தியா…?” என யுவராஜிடம் காட்டமான குரலில் கேட்டார்.

யுவராஜ் அமைதியாய் பதில் எதுவும் சொல்லாமல் தலை குனிந்து நிற்க அஜய் பேசினான்.

“அம்மா… நாங்க போலீஸ், உங்க பொண்ணு நேசிகாவைப் பத்தி பேச வந்திருக்கோம்…” என்றதும் அவரது கண்களில் ஒரு அச்சம் நிறைய சட்டென்று கதவை சாத்திவிட்டு கேட்டருகே வந்தவர் கேள்வியாய் ஏறிட்டார்.

“அவளைப் பத்தி என்ன பேசப் போறீங்க… பொண்ணு ஓடிப் போயிட்டான்னு தெரிஞ்சதுமே அவ அப்பா நடைபிணமா ஆயிட்டார்… அவ ஓடிப்போகல, காணாமப் போயிட்டான்னு தெரிஞ்சதும் ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடல்ல கிடந்து செத்துப் பிழைச்சு வந்திருக்கிற மனுஷன் கிட்ட எதையாச்சும் சொல்லி எனக்கு பொண்ணோட, புருஷனையும் இல்லாமப் பண்ணிடாதீங்க…” கை கூப்பி கண்களில் கண்ணீரோடு அவர் சொல்ல கேட்டவர்களுக்கே நெஞ்சம் கலங்கியது.

“அம்மா, உங்க வருத்தம் எங்களுக்குப் புரியாம இல்லை… உங்க பொண்ணு காணாமப் போயி பத்து நாளுக்கும் மேலாச்சு… அவளுக்கு என்னாச்சுன்னு உங்களுக்கு தெரிய வேண்டாமா…” கிருஷ்ணா தன்மையாய் சொல்ல அவர் கண்ணீருடன் நிமிர்ந்தார்.

“எப்படியும் நீங்க நல்ல செய்தி சொல்லப் போறதில்லை… இத்தனை நாள் காணாமப் போனவ இனியும் நல்லபடியா  இருப்பான்னு எனக்கு நம்பிக்கையும் இல்லை… அழுதழுது கலங்கி ஓய்ஞ்சிருக்கிற அந்த மனுஷனுக்கு பொண்ணுன்னா உசுரு… அவளுக்கு எதுவும் ஆயிருச்சுன்னு நீங்க சொன்னா தாங்கிக்கற சக்தி அவர் இதயத்துக்குக் கிடையாது… இப்பதான் சாப்பிட்டு மாத்திரை போட்டுத் தூங்கறார்… எனக்குன்னு இருக்கிறது இப்ப அவர் மட்டும்தான், தயவு செய்து அவரை இன்னும் கொஞ்ச நாள் பூமில வாழ விடுங்க…” என்றவர் கை கூப்பி சொல்ல திகைத்தனர்.

இவரிடம் எப்படி உண்மையை சொல்லி பாடியை ஒப்படைப்பது என அஜய் யோசிக்க கிருஷ்ணா கூறினார்.

“அம்மா, உங்க பொண்ணைப் பத்தி கவலை இல்லியா…?”

“எதுக்கு சார் அவளைப் பத்தி யோசிச்சு கவலைப்படணும்… கண்ணுக்குள்ள கண்ணா வச்சு வளர்த்தின அப்பாவை ஏமாத்திட்டு இதோ, இவன்தான் முக்கியம்னு யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்க ஓடினவளை நான் அப்பவே தலை முழுகிட்டேன்… அந்த மனுஷன் தான் இன்னும் அந்த ஓடுகாலியை நினைச்சு கவலைப்பட்டுட்டு இருக்கார்…”

“ஆன்ட்டி, நாங்க செய்தது தப்புதான்…” யுவராஜ் எதையோ சொல்ல வர அனலைப் பார்வையில் கொட்டினார்.

“நீ எதுவும் பேசாத… உன்னால தான் நாங்க இப்ப பொண்ணை இழந்துட்டு நிக்கறோம்…” சொல்லும்போதே அதுவரை இருந்த வீராப்பு உடைய கண்ணீர் கொட்டியது.

அதற்குள் அக்கம் பக்கத்து வீட்டிலிருந்து சில தலைகள் எட்டிப் பார்க்கத் தொடங்க, “ஆன்ட்டி… நான் கம்பெல் பண்ணதால தான் நேசிகா இப்படி ஒரு முடிவு எடுத்தா… என்னை மன்னிச்சிருங்க, தயவு செய்து அவங்க சொல்ல வந்ததை சொல்ல விடுங்க…” என்ற யுவராஜின் கண்களும் வேதனையில் கலங்கின.

“ஆமாம் மா… நீங்க நினைக்கிறது சரிதான், உங்க பொண்ணு நேசிகா இப்ப உயிரோட இல்லை…” என்றதும் சட்டென்று அவர் கண்களில் அதிர்ச்சி தெரிய கண்ணீர் நின்று போனது.

“எ..என்ன சார் சொல்லறீங்க…?”

“கொஞ்சம் வீட்டுக்குள்ள போயிப் பேசலாமா…” அஜய் கேட்க,  “வாங்க…” என்றவர் கேட்டைத் திறந்து விட்டு, “எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க… ப்ளீஸ், அ..அவருக்குத் தெரிய வேண்டாம்…” என்றார் கண்ணீருடன்.

இவர்கள் உள்ளே செல்ல, “ஒரு நிமிஷம் சார், உக்காருங்க…” எனவும் அவர்கள் சோபாவில் அமர, கணவர் உறங்கும் அறையின் கதவை சாத்திவிட்டு கண்ணீருடன் வந்தார்.

“எ..எங்க பொண்ணுக்கு என்னாச்சு சார்…?” கண்கள் உடைப்பெடுத்துக் கொள்ள கண்ணீர் கொட்டியது.

அஜய் இரண்டு நிமிடம் செலவழித்து சுருக்கமாய் நேசிகாவின் மரணம் பற்றியும் அதைத் தொடர்ந்து நடக்கும் அந்தகனின் கொலைகள் பற்றியும் சொல்லி முடித்தான்.

அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தவர் அப்படியே தரையில் மடிந்து அமர்ந்து சத்தமின்றி அழத் தொடங்கினார்.

“நே…நேசிமா, இப்படி அநியாயமா சாகறதுக்கா உன்னைப் பார்த்துப் பார்த்து வளர்த்தினோம்… இது தெரிஞ்சா உன் அப்பா உசுரு உடனே போயிருமே, நான் எப்படி அவருக்கு சொல்லுவேன்…” முந்தானையை வாயில் மூடிக் கொண்டு அவர் சத்தமின்றி அழத் தொடங்க யுவாவின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

அஜய் கிருஷ்ணாவைப் பார்க்க அவர் பேசினார்.

“அம்மா… ரெண்டு டைம் போஸ்ட்மார்ட்டம் முடிஞ்ச பாடியை இன்னும் வச்சிருக்க முடியாது… பிராப்பரா பாரன்ட்ஸ் வந்து பார்த்து அது உங்க பொண்ணுதான்னு ஐடன்டிபை பண்ணினாதான் பாடியை உங்களுக்குக் கொடுக்க முடியும்…”

“இ..இல்ல, இதை அவர்கிட்ட நான் சொல்ல முடியாது, சொன்னாத் தாங்க மாட்டார், அவருக்குத் தெரிய கூடாது…”

“அப்படின்னா நீங்க வந்து ஐடன்டிபை பண்ணுங்க… யுவராஜ் பார்த்து சொன்னாலும் அவர் உங்க பாமிலி இல்லையே…”

“நா..நான் எப்படி…” என்றவரின் கண்கள் நிற்காமல் கண்ணீரை வெளியிட சட்டென்று துடைத்துக் கொண்டு நிமிர்ந்தார்.

“ஓ..ஒகே சார்… நாளைக்கு நான் வந்து பார்த்து சொல்லறேன்… ஆனா, எனக்காக நீங்க ஒரு ஹெல்ப் பண்ணனும்…”

“என்ன பண்ணனும் மா…?” அஜய் கேட்க, “நான் கன்பர்ம் பண்ணாலும் பாடியை என்னால வாங்கிக்க முடியாது… நீங்க தான் மத்த ஏற்பாடுகளை செய்யணும்…”

“ஆன்ட்டி… அதை நான் பார்த்துக்கறேன், அவளோட வாழத்தான் முடியலை, அவளோட இறுதிக் காரியத்தை ஆச்சும் நல்லபடியா செய்யணும்னு நினைக்கிறேன்…” என்றவனை நோக்கி வெறுப்பாய் ஒரு பார்வையை வீசியவர் அறைக்குள் கணவரின் இருமல் குரல் கேட்கவும்,

“சார், அவர் எழுந்துட்டார்… நீங்க கிளம்புங்க, நாளைக்கு நான் எங்க, எப்ப வரனும்…” என்றார் அவசரமாய் கண்ணைத் துடைத்துக் கொண்டு.

“காலைல பத்து மணிக்கு ஜீஹெச் மார்ச்சுவரிக்கு வந்திருங்க, இவர் அங்கே இருப்பார்…” கிருஷ்ணாவைக் காட்டிக் கொண்டே அஜய் எழுந்திருக்க மற்றவர்களும் எழுந்தனர்.

“யுவா, நீங்களும் காலைல வந்து மத்த பார்மாலிட்டீஸ் முடிச்சு பாடியை வாங்கிக்கலாம், நாங்க வரோம் மா…” சொல்லிவிட்டு மூவரும் வெளியே நடக்க மீண்டும் கலங்கிய கண்ணைத் துடைத்துக் கொண்டு கணவனின் அறைக்கு சென்றார் நேசிகாவின் அன்னை.

வெளியே வந்த யுவா அவர்களிடம் விடைபெற்று பைக்கை எடுக்க இருவரும் காரில் அமர்ந்தனர்.

கிருஷ்ணா காரை எடுத்து வளைத்துக் கொண்டே “என்ன சார், இந்தம்மா பொண்ணு செத்திருச்சுன்னு சொல்லியும் இவ்ளோ கோபமா இருக்கு…” என்றார்.

“அது அவங்க பொண்ணு மேல வச்சிருந்த நம்பிக்கை உடைஞ்சு போனதால வந்த கோபம்… கணவருக்கு இப்படி முடியாமப் போக அவ தானே காரணம்னு வந்த கோபம்…”

“ம்ம்… இருந்தாலும் இறுதியா நேசிகா அப்பாவுக்கு மகளைப் பார்க்கக் கூட முடியாது போலருக்கே…”

“அவருக்கு எதுவும் ஆயிடுமோங்கிற பயம் தான்… காணாமப் போன பொண்ணு அப்படியே இருக்கட்டும், இப்படி கொடூரமா செத்தது தெரிஞ்சா அவருக்கு நிச்சயம் உயிருக்கு ஆபத்தா முடியலாம்…” என்றான் அஜய் யோசனையுடன்.

அவனது பான்ட் பாக்கெட்டில் இருந்த அலைபேசி சிணுங்க எடுத்து யாரென்று பார்த்தான்.

‘கோகுல் காலிங்’ என்றது டிஸ்பிளே.

“ஹலோ, சொல்லுங்க கோகுல்…”

“சார், ஒரு முக்கியமான விஷயமா உங்ககிட்ட பேசணும்… அடையார்ல இருக்கிற நெட் ஒன் கபே க்கு வர முடியுமா…?”

“எஸ், கிருஷ்ணா… அடையார் போங்க…” என்றவன்,

“கோகுல், என்ன ரிலேட்டடான்னு சொல்ல முடியுமா…?”

“அரவிந்த் மர்டர் விஷயமா ஒரு முக்கியமான குளூ கிடைச்சிருக்கு சார், நீங்க நேர்ல வாங்க பேசிக்கலாம்…”

“இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க இருப்போம்…” சொன்னவன் அழைப்பைத் துண்டித்து அலைபேசியை பாக்கெட்டில் வைத்துவிட்டு கிருஷ்ணாவிடம் கோகுல் சொன்னதை சொல்ல, “அந்த எக்ஸ் மினிஸ்டர், மாப்பிள்ளை கணேசமூர்த்தி கிட்ட ஏதோ ஒரு தப்பு இருக்கு சார், அது விஷயமா இருக்கும்னு நினைக்கறேன்…” எனவும், அஜய் யோசனையாய் பார்த்திருந்தான்.

Advertisement