Advertisement

 அத்தியாயம் – 18

நேரம் நன்றாய் இருட்டத் தொடங்கியிருக்க மழை சோவென்று பெரும் இரைச்சலுடன் அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது. விஜயா ஹாஸ்பிடலில் மாலை நேர டியூட்டியில் இருந்த டாக்டர் பிரணவ் அறையில் சோகமாய் அமர்ந்திருந்தனர் அஜயும், கிருஷ்ணாவும்.

கையிலிருந்த ரிப்போர்ட்டிலிருந்து பார்வையை விலக்கிய பிரணவ் மூக்கின் மீது அமர்ந்திருந்த மெல்லிய கண்ணாடியைக் கழற்றிக் கொண்டே அவர்களை ஏறிட்டார்.

“டாக்டர், வர்ஷாவோட நிலை எப்படியிருக்கு…?”

“உயிருக்கு ஆபத்து இல்லேன்னாலும் கொஞ்சம் கிரிடிகல் ஸ்டேஜ் தான், மிஸ்டர் அஜய்… ஒரு வாரத்துக்கும் மேல அந்தப் பொண்ணு உடம்புல விடாம டிரக்ஸ் இஞ்சக்ட் பண்ணிருக்காங்கன்னு இந்த பிளட் ரிப்போர்ட் சொல்லுது, கை நரம்புல காயம் இருக்கு… இப்பக் கூட அந்த டிரக்கோட கண்ட்ரோல்ல தான் இந்தப் பொண்ணோட மூளையும், உடம்பும் இருக்கு…”

“ஓ… காட், அந்தப் பொண்ணு நார்மல் ஆக எவ்ளோ டைம் எடுக்கும் டாக்டர்…”

“நாட் டைம், எவ்ளோ டேஸ்னு கேளுங்க… அநேகமா அந்தப் பொண்ணோட உடம்பும், மூளையும் நார்மல் நிலைக்குத் திரும்ப ட்டூ, த்ரீ டேஸ் எடுக்கலாம்… இப்போதைக்கு அந்தப் பொண்ணுக்குத் தேவை முழுமையான ரெஸ்ட்… உடம்பு ரொம்ப வீக்கா இருக்கிறதால குளுக்கோஸ் ஏறிட்டு இருக்கு… ஸ்லீப்பிங் இஞ்சக்ஷன் கொடுத்து தூங்க வச்சிருக்கோம்…”

“அந்தப் பொண்ணு உடம்புல வேற எதுவும் காயங்கள், ஐ மீன் பலவந்தப்படுத்தின அடையாளங்கள் எதுவும் இருக்கா டாக்டர்…”

“ஒரு வாரமா சரியா சாப்பிடாம டிரக்ஸ் மட்டுமே உடம்புல ஏறுனதுல உடம்புதான் ரொம்ப வீக்கா இருக்கு, கைலயும் கால்லயும் கட்டிப் போட்ட அடையாளம் இருக்கு… மத்தபடி ரேப் அட்டம்ப்ட் எதுவும் இல்லை…” பிரணவ் சொல்ல இருவரும் யோசனையுடன் பார்த்தனர்.

“அந்தப் பொண்ணோட பேரன்ட்ஸ்க்கு நாங்க இன்பார்ம் பண்ணிடலாமா டாக்டர்…”

“தட்ஸ் குட்… அவங்களை சார்ந்த யாராச்சும் கூட இருந்தா கொஞ்சம் சீக்கிரமே ரெக்கவர் ஆக சான்ஸ் இருக்கு…”

“ஓகே… அந்தப் பொண்ணுகிட்ட எப்பப் பேச முடியும்…”

“இப்போதைக்கு கண்டிப்பா முடியாது… அவங்க மைன்ட் தெளியுற வரைக்கும் நீங்க வெயிட் பண்ணிதான் ஆகணும், மிஸ்டர் அஜய்…” என்றார் பிரணவ்.

“ஓகே டாக்டர், வர்ஷாவோட உடம்புல சின்னதா எந்த முன்னேற்றம் இருந்தாலும் எங்களுக்கு இன்பார்ம் பண்ணுங்க, அவளுக்கு பெஸ்ட் ட்ரீட்மென்ட் கொடுங்க, அவ சீக்கிரம் கண் விழிக்கணும்… அப்பதான் இதுக்குப் பின்னாடி நின்னு எங்ககிட்ட கண்ணாமூச்சி ஆடிட்டு இருக்கிற அந்த குற்றவாளியை நெருங்க முடியும்…”

“ஷ்யூர், சொல்லறேன்…”

“வர்ஷாவைப் பத்தி வெளிய யாருக்கும் தெரிய வேண்டாம், நான் கிளம்பறேன்…” கிருஷ்ணாவுடன் வெளியே வந்தான்.

“கிருஷ்ணா, பிரசன்னாக்கு இன்பார்ம் பண்ணி, இங்க வர சொல்லிடுங்க… கான்ஸ்டபிள் யாரையாச்சும் வர்ஷா ரூமுக்கு செக்யூரிட்டியா போடுங்க… நமக்கு கிடைச்சிருக்கிற ஒரே துருப்பு சீட்டு வர்ஷா தான், இவளோட இந்த நிலைமைக்குக் காரணம் அந்த அந்தகனா, இல்லை வேற யாராச்சுமான்னு தெரியணும்… கவனமா இருங்க…”

“ஓகே சார், நான் பார்த்துக்கறேன்… நீங்க கிளம்புங்க…” கிருஷ்ணா சொல்ல தலையாட்டி வாசலுக்கு நகர்ந்தவன் ரெயின் கோட்டுக்குள் நுழைந்து பார்க்கிங்கில் இருந்த புல்லட்டை நோக்கிப் போனான்.

**********************

அடுத்தநாள் காலை ஒன்பது மணி.

ஆபீஸ் செல்லத் தயாராகி உணவு மேஜையில் அமர்ந்த ஆத்ரேயன் தனக்கு எதிரில் அமர்ந்திருந்த அவனது அங்கிளுடன் எதையோ பேசிக் கொண்டே பிளேட்டில் இருந்த சப்பாத்தியை குருமாவுடன் விழுங்கிக் கொண்டிருக்க காலிங் பெல் சங்கீதம் பாடி ஓய்ந்தது. அருகே பரிமாறிக் கொண்டிருந்த வேலைக்காரப் பெண்மணி வைதேகியை அவன் நோக்க, “நான் பார்க்கிறேன் தம்பி…” என்றவர் வாசல் கதவை நோக்கி நகர்ந்தார்.

கதவுக்கு வெளியே நின்றிருந்த இரு புதுமுகங்களைக் கண்ட வைதேகி நெற்றியை சுருக்கி, “யாரு நீங்க…” என்றார்.

“மிஸ்டர் ஆத்ரேயனைப் பார்க்கணும், வீட்டுல இருக்காரா…?”

“தம்பி சாப்பிட்டு இருக்கார், நீங்க யாரு…?”

“போலீஸ்…”

“போ..போலீஸா…?” அவரது முகம் சட்டென்று அதிர்ச்சிக்கு சென்று உதடுகள் வார்த்தையை டைப்படிக்க சிரித்தனர்.

“பயப்படாதீங்கம்மா, இந்தப்பக்கம் ஒரு இன்வெஸ்டிகேசன் விஷயமா வந்தோம், அப்படியே மிஸ்டர் ஆத்ரேயனைப் பார்த்திட்டு போகலாம்னு நினைச்சோம்… அவர்கிட்ட நாங்க வந்திருக்கோம்னு சொல்லறீங்களா…?” என்றான் அஜய்.

“சொ..சொல்லறேன் சார்…” என்றவர் கதவை மூடவும் முடியாமல், அவர்களை உள்ளே அழைக்கவும் தோன்றாமல் வேகமாய் டைனிங் ஹாலுக்கு சென்றார்.

“த..தம்பி… உங்களைப் பார்க்க ரெண்டு போலீஸ்காரங்க வந்திருக்காங்க…” பதட்டமாய் சொல்ல கூலாய் நிமிர்ந்தான் ஆத்ரேயன்.

“போலீஸ்காரங்க தான வந்திருக்காங்க, அதுக்கு ஏன் சிங்கம், புலியைப் பார்த்த போல இப்படி பயப்படறீங்க…? இல்லையா அங்கிள்…” கேட்டவன் எழுந்து கை கழுவ செல்ல, அங்கிளின் முகம் யோசனையில் சுருங்க, “வைதேகி, வந்தவங்களை உள்ளே வந்து உக்கார சொல்லு, இதோ வந்துடறோம்…” என்றார்.

மீண்டும் வைதேகி ஹாலுக்கு செல்ல அங்கே அவர்களே உள்ளே வந்து சோபாவில் ஒருவர் அமர்ந்திருக்க, மற்றவர் புக் செல்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, திகைத்தார்.

“ச..சார், தம்பி இப்ப வந்திடறேன்னு சொல்ல சொல்லுச்சு…”

“ஓகே, முதல்ல நீங்க போலீஸைப் பார்த்தா பயப்படுறதை நிறுத்துங்க, உங்க பேரென்ன…? என்றான் அஜய்.

“வ..வைதேகி…”

“வ. வைதேகியா..? இல்ல வைதேகி மட்டும் தானா…?”

“வைதேகி தான் சார்…”

“ம்ம்… இங்க எத்தனை வருஷமா வேலை செய்யறீங்க…”

“மூணு வருஷமா சார்…”

“இந்த வீட்டுல யாரெல்லாம் தங்கிருக்காங்க…?”

அஜய் அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கும்போதே ஆத்ரேயன் புன்னகையுடன் அங்கே வந்தான்.

“ஹலோ மிஸ்டர் அஜய், ஹலோ மிஸ்டர் கிருஷ்ணா… என்ன…? காலைல ரெண்டு பேரும் இந்தப் பக்கம் விசிட்… காபி, டீ ஏதாச்சும் சாப்பிடறீங்களா…?”

“நோ தேங்க்ஸ், மிஸ்டர் ஆத்ரேயன்… இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்திருந்தோம்… அப்படியே உங்ககிட்ட சில விஷயங்கள் கிளியர் பண்ணிட்டுப் போகலாம்னு வந்தோம், உங்களுக்கு ஒண்ணும் டிஸ்டர்ப் ஆகலையே…”

“நோ பிராப்ளம், மிஸ்டர் அஜய்… பர்சனல் விஷயமா தான் வெளிய கிளம்பறேன், பத்து நிமிஷம் லேட் ஆகறதுல எந்தப் பிரச்சனையும் இல்லை…” சொல்லிக் கொண்டே புன்னகைத்தான் ஆத்ரேயன். அப்போது அவன் அங்கிள் வர அவரைக் கண்டதும் கேள்வியாய் நோக்கினான் அஜய்.

“இவர் என் அங்கிள் மிஸ்டர் நாதன்…”

“ஓ…! ஹலோ சார்…”

“வணக்கம் சார்…” என்றவர் ஆத்ரேயன் அருகே சோபாவில் அமர்ந்தார். வெள்ளை ஜிப்பாவுக்குள் நுழைந்திருந்தவரின்  கம்பீர தோற்றத்தைக் கண்ணிலிருந்த கண்ணாடி மேலும் அதிகமாக்கிக் காட்டியது.

“மிஸ்டர் அஜய், உங்களுக்கு என்கிட்டே ஏதோ கேக்கணும்னு சொன்னிங்களே…?”

“எஸ், மிஸ்டர் ஆத்ரேயன்… உங்க கம்பெனில வொர்க் பண்ணுற ஹெட் சூப்பர்வைசர் கேசவன் பத்தி தெரியனும்…”

“சூப்பர்வைசர் கேசவன்னா பொண்ணு காணாமப் போயி ரீசன்டா ஹார்ட் அட்டாக் வந்து ரெஸ்ட்ல இருக்காரே, அவரைத் தானே சொல்லறிங்க…”

“எஸ் அதே கேசவன் தான்… அவர் பொண்ணு நேசிகா காணாமப் போயி ரெண்டு வாரம் ஆனதுக்குப் பிறகு அவங்களைப் பத்தின தகவல் கிடைச்சிருக்கு…”

“என்ன தகவல்…”

“ரெண்டு வாரத்துக்கு முன்னாடி நேசிகா காணாமப் போகலை, யாராலோ கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கா, அதோட அவ உடம்பு முழுதும் கறுப்புப் பெயின்ட் அடிச்சு பாடியை உங்க ஸ்டாப் பிரசன்னா வீட்டு வாசல்ல டிஸ்போஸ் பண்ணிருக்காங்க…”

“ஓ… பிரசன்னா வீட்டு வாசல்ல கிடைச்ச கறுப்புப் பெயின்ட் பாடி காணாமப்போன கேசவன் பொண்ணு நேசிகாவோடதா…” திகைப்புடன் ஆத்ரேயன் கேட்க நாதன் அமைதியாய் நடப்பவற்றைப் பார்க்க அஜய் தொடர்ந்தான். உதடுகள் பேசினாலும் கண்கள் உன்னிப்பாய் இருவரையும் கவனித்தது.

“எஸ்… அதோட பிரசன்னாவோட பொண்ணு வர்ஷா காணாமப் போயிருக்கா… உங்க கம்பெனில வொர்க் பண்ணுற ரெண்டு ஸ்டாப் வீட்டுலயும் இப்படி சம்பவம் நடந்திருக்கே, இதைப் பத்தி என்ன நினைக்கறீங்க… இதுல யாருக்கு தொடர்பு இருக்கலாம்னு உங்களுக்கு எதுவும் தோணுதா…?”

“சாரி மிஸ்டர் அஜய்… அவங்க ரெண்டு பேரும் என் கம்பெனில வொர்க் பண்ணுறாங்கன்ற அளவுல தான் எங்க பழக்கம் இருக்கு… அதுக்கு மேல அவங்களோட பொண்ணுகளுக்கு இப்படி நடக்க என்ன காரணம்னு எல்லாம் என்னால யோசிக்க முடியலை…”

“ம்ம்… ஓகே, எக்ஸ் மினிஸ்டர் சக்கரபாணியோட மகன் அரவிந்தை உங்களுக்குத் தெரியுமா…?”

“அரவிந்த், எஸ் தெரியும்…!! அவரை புட்பால் கோச்சிங் சென்டர்ல பார்த்திருக்கேன்…”

“சும்மா பார்த்தது மட்டும் தானா, இல்ல பழக்கம் இருக்கா…?”

“பேசிக்கிற அளவுக்குப் பழக்கம் இருக்கு…”

“ஓ… உங்களுக்கு இதயா பில்டர்ஸ் மிஸ்டர் அருணகிரியை எந்த விதத்துல பழக்கம்னு தெரிஞ்சுக்கலாமா…?”

“திருவான்மியூர்ல அவரோட கன்ஸ்ட்ரக்ஷன்ல புதுசா ஒரு வீடு கட்டினேன், அந்த விதத்துல பழக்கம் இருக்கு…”

“சார், இதெல்லாம் எதுக்கு இப்ப இவர்கிட்ட கேக்கறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா…” அவர்கள் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த நாதன் இடையிட்டுக் கேட்க அஜய் அவரிடம் சிறு புன்னகையுடன் திரும்பினான்.

“ஹீ ஈஸ் கனக்டட் வித் தெம்… இந்தக் கேஸ்ல சம்மந்தப்பட்ட எல்லார் கூடவும் மிஸ்டர் ஆத்ரேயன் ஏதோ ஒரு விதத்துல சம்மந்தப் பட்டிருக்கார்… அதைத் தெளிவு படுத்திக்க தான் இத்தனை கேள்வி கேக்க வேண்டிருக்கு…?”

“நீங்க என்னை சந்தேகப் படறீங்களா மிஸ்டர் அஜய்…?” ஆத்ரேயன் கேட்க புன்னகைத்தான்.

“நாங்க போலீஸ், எல்லார் மேலயும் சந்தேகப்பட்டு விசாரிக்கிறது இயல்பு தானே…?”

“ம்ம்… ஆனா இவங்களை எல்லாம் எனக்கு பிசினஸ் ரிலேட்டடா தெரியுமே தவிர பர்சனலா எந்தப் பழக்கமும் இல்லை…”

“அப்படியா… பிரசன்னா பொண்ணு பர்த்டே பங்க்ஷன்க்குப் போனதும் அப்படி தானா…?”

“இல்லை, அவர் ரொம்ப ஆசையா கூப்பிட்டார்… சரி நம்ம ஸ்டாப் வீட்டு பங்க்ஷன்க்கு போனா சந்தோஷப் படுவாங்களேன்னு தான் போனேன்…” என்றவனின் நெற்றியில் ஏசியைத் தாண்டி மெலிதாய் வியர்வை பூக்கத் தொடங்க குரல் சற்று படபடப்பாய் உயர்ந்திருந்தது.

“ம்ம்… அதே போல கேசவன் வீடு கிரகப்பிரவேசம்க்கு ஒரு ஸ்டாப் வீட்டு விசேஷம்கிற முறைல அட்டன்ட் பண்ணிருக்கீங்க, பில்டர் அருணகிரி வீட்டு பங்க்ஷன், அரவிந்தோட பர்த்டே பங்கஷனும் அட்டன்ட் பண்ணி இருக்கீங்க, அப்படித்தானே…”

“ஆ…ஆமாம்…” என்றவனின் குரலில் ஒரு நடுக்கம் வந்திருக்க கை விரல்களை மடக்கி தன்னை இயல்பாக்க முயல, “ஆதி… தம்பி, என்ன பண்ணுது… மாத்திரை கொண்டு வரவா…?” என்ற நாதன் உள்ளே நோக்கி குரல் கொடுத்தார்.

“வைதேகி, தம்பியோட மாத்திரை எடுத்திட்டு வாங்க…” என்றவர், “சார், இதுக்கு மேல எந்த கேள்வியும் கேட்டு அவரைக் கஷ்டப்படுத்தாதீங்க, ஆல்ரெடி பிரஷர் இருக்கு…”

“பிரஷரா…?” என்ற அஜய் ஆத்ரேயனை ஒரு நம்பாத பார்வை பார்க்க வைதேகி நீட்டிய மாத்திரையை வேகமாய் வாங்கிப் பிரித்துக் கொடுக்க வாய்க்குள் போட்டு தண்ணியைக் குடித்த ஆத்ரேயன் ஆசுவாசமாய் அவர்களைப் பார்த்தான்.

“சாரி சார், எ..எனக்கு கொஞ்சம் லோ பிரஷர் இருக்கு… மாக்ஸிமம் என்னைக் கூலாதான் வச்சுப்பேன்… எதாச்சும் அதிர்ச்சியான விஷயங்கள் கேக்கும்போது என் கண்ட்ரோலையும் மீறி வியர்த்து பிரஷர் லெவல் குறையத் தொடங்கிடும்…” என்றவன் ஒரு பெருமூச்சுடன் டவலால் நெற்றியிலிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டான்.

“ஹோ, இந்த சின்ன வயசுல உங்களுக்கு இப்படி ஒரு பிராப்ளமா, எவ்ளோ நாளா இப்படி இருக்கு…?”

“என் அம்மா இறந்ததுல இருந்து…” என்றவனின் முகம் இறுகி கண்கள் எங்கோ வெறித்தது.

“சார், ப்ளீஸ்… உங்களுக்கு என்ன தகவல் வேணுமோ, என்கிட்ட கேளுங்க, தம்பி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும், இந்த மாதிரி கேள்விகளைக் கேட்டு அவரை சங்கடப் படுத்தாதீங்க…?” நாதன் சொல்ல திரும்பினர்.

“ஓகே, நீங்க ரெஸ்ட் எடுங்க, நாங்க அப்புறம் வந்து பார்க்கிறோம்…” சொன்ன அஜய் கிருஷ்ணாவை நோக்க அவரும் எழுந்து கொண்டார்.

“வீடு ரொம்ப அழகாருக்கு…” என்ற கிருஷ்ணா,

“வந்ததுமே கேக்கனும்னு நினைச்சேன், செல்ப்ல நிறைய கிரைம் நாவல்ஸ் இருக்கு, நீங்க RK சாரோட பெரிய ரசிகர் போலருக்கு… எனக்கு கூட அவர் கதைகள் ரொம்ப பிடிக்கும், இதுல நான் கொஞ்சம் புக்ஸ் எடுத்துக்கலாமா…?” கிருஷ்ணா ஆத்ரேயனை நோக்கிக் கேட்க அவன் புன்னகைத்தான்.

“சாரி, அங்கிளோட கலக்ஷன் தான் அந்த புக்ஸ் எல்லாம், நான் எப்பவாச்சும் சும்மா புரட்டிப் பார்க்கிறதோட சரி… புக் வேணும்னா நீங்க அவர்கிட்ட தான் பர்மிஷன் கேக்கணும்…” என்றான் ஆத்ரேயன்.

“ஓ…” என்ற கிருஷ்ணா, நாதனிடம் திரும்ப அவரது முகம் ஒரு மாதிரி வெளிறிக் கிடக்க, “ச..சாரி, நான் என்னோட புக்ஸ் வெளிய யாருக்கும் கொடுக்கிறதில்லை…” என்றார்.

“ம்ம்… ஓகே, என்னென்ன கலக்சன் இருக்குன்னு சும்மா பார்க்கவாச்சும் செய்யலாமா…” என்ற கிருஷ்ணா ஓரமாய் இருந்த கண்ணாடி செல்புக்குள் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கிரைம் நாவல்களை நோக்கி நகர்ந்தார்.

முகமும், கண்களும் சிவக்க வெறுப்போடு அவரைத் தடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டிருந்த நாதனின் முகத்தையே பார்த்திருந்தான் அஜய்.

Advertisement