Advertisement

 அத்தியாயம் – 17

“ஆத்ரேயா எக்ஸ்போர்ட்ஸ்னா சொன்னிங்க…?” அஜய் மீண்டும் அழுத்திக் கேட்க தலையாட்டினான் யுவராஜ்.

“ஆமா சார், அங்க தான் நேசிகாவோட அப்பா கேசவன் வொர்க் பண்ணறார்… அம்மா மேகலை ஒரு பிரைவேட் ஸ்கூல்ல டீச்சரா இருந்தாங்க, இப்ப நேசிகா படிச்சு முடிச்சு வேலைக்கு டிரை பண்ணவும் ஜாப் ரிஸைன் பண்ணிட்டு வீட்டுல இருக்காங்க…”

“ம்ம்…” ஜீ ஹெச் பார்க்கிங்கில் நின்ற காருக்கு நடந்து கொண்டே அஜய் யோசனையுடன் சொன்னான். நேரம் இருட்டத் தொடங்கியிருக்க மழை வரும் அறிகுறி தெரிந்தது.

“நேசிகா என்ன படிச்சிருக்கா…?”

“ரெண்டு மாசம் முன்னாடி தான் என்ஜினியரிங் முடிச்சா…”

“ஓகே… இப்ப மழை வர்ற போல இருக்கு, நேசிகாவோட பேரன்ட்ஸ் கிட்ட நாளைக்கு கொஞ்சம் விசாரிக்கணும், மார்னிங் 11 நீங்களும் அவங்க வீட்டுக்கு வர முடியுமா…”

“ஷ்யூர், வரேன் சார்…” என்றான் யுவா சோர்வுடன்.

“ஓகே, கிருஷ்ணா, கிளம்புவோம்… என்னை வீட்டுல டிராப் பண்ணிடுங்க…” அஜய் சொல்ல, “ஓகே சார்…” என்றவர், “மிஸ்டர் யுவா, உங்க வண்டி கமிஷனர் ஆபீஸ்ல தானே இருக்கு, உங்களை அங்கே டிராப் பண்ணட்டுமா…?” கேட்டார்.

“பரவால்ல சார், நான் டாக்ஸி பிடிச்சு கமிஷனர் ஆபீஸ் போயி என் வண்டியை எடுத்துக்கறேன், நீங்க கிளம்புங்க…”

“சரி வாங்க, டாக்ஸி ஸ்டாண்டுல விட்டுடறேன்…” எனவும் ஏறிக் கொண்டான் யுவராஜ்.

சில நொடிகளில் கார் மெயின் ரோட்டைப் பிடிக்க வரிசையாய் நின்றிருந்த டாக்ஸிகளை நோக்கி கிருஷ்ணா வண்டியை செலுத்தினார்.

டாக்ஸி ஸ்டாண்டுக்கு சற்று முன் இருந்த பெட்டிக் கடையைக் கண்டதும் யுவா, “சார், இங்கயே நிறுத்திக்கங்க… நான் அந்தக் கடைல கொஞ்சம் புக்ஸ் வாங்கிட்டு டாக்ஸிக்கு போயிக்கறேன்…” என்றான். வண்டி நின்று அவன் இறங்கவும் காரை எடுத்த கிருஷ்ணா, பின்னாடி கண்ணாடி வழியே யுவராஜை நோக்க அவன்  கை நிறைய கிரைம் நாவல்களுடன் நிற்பதைப் பார்த்து வண்டியை ஓரமாய் நிறுத்தினான்.

“சார், கொஞ்சம் பின்னாடி திரும்பி அந்த யுவாவை கவனிங்க…” எனவும் அஜய் திரும்பிப் பார்த்தான்.

“இவனும் RK நாவல் பைத்தியம் போலருக்கே…” கிருஷ்ணா சொல்ல அஜய்யின் நெற்றி யோசனையில் சுளிந்தது.

“கிருஷ்ணா, இந்த யுவா கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் நேசிகா மரணத்துக்காக ரொம்ப வருத்தப்பட்டு கண் கலங்கிட்டு இருந்தான்… இப்ப சட்டுன்னு அதெல்லாம் தூக்கிப் போட்டுட்டு நார்மலா புக்ஸ் வாங்கிட்டு இருக்கான், எங்கயோ இடிக்குதே…”

“ஆமா சார்… கல்யாணம் பண்ணிக்க இருந்த பொண்ணு இத்தனை கொடூரமா இறந்து போயிருக்காங்கறது எத்தனை பெரிய அதிர்ச்சி… போன நிமிஷம் வரைக்கும் நம்ம முன்னாடி அதுக்காக வருத்தப்பட்டவன் இப்ப இயல்பா புக்ஸ் வாங்குறதைப் பார்த்தா கொஞ்சம் சந்தேகமா இருக்கு சார்…”

“நாளைக்கு நாம நேசிகா வீட்டுக்கு விசாரணைக்குப் போறதுக்கு முன்னாடி இவன் வீட்டுல விசாரணையை முடிச்சிருவோம், நீங்க வண்டியை எடுங்க…” அஜய் சொல்ல கார் பாதைகளில் வழுக்கிக் கொண்டு நகர்ந்தது. சில நிமிடத்தில் மழையும் தூறல் போடத் தொடங்கியது.

சிறிது நேரத்தில் மழை பலமாய் பெய்யத் தொடங்க சில ஏரியாக்களில் கரண்ட் ஆப் ஆகி இருட்டுக்குள் விழ, அதைக் கார் ஹெட்லைட் வெளிச்சம் துரத்தி அடித்து நீங்கியது. சரியாய் முப்பது நிமிடத்தில் அஜய் வீட்டு முன் காரை நிறுத்த அவன் இறங்கவும் கிருஷ்ணா கிளம்பினார்.

வேகமாய் கேட்டைத் திறந்து போர்ட்டிகோவுக்கு ஓடிய அஜய் காலிங் பெல்லை அமர்த்த கதவைத் திறந்த அர்ச்சனா கணவனைக் கண்டதும் மலர்ந்தாள்.

வீட்டுக்குள் நுழைந்தவனுக்கு டவலை எடுத்து நீட்ட வாங்கி லேசாய் நனைத்திருந்த மழைத் துளிகளை துவட்டிவிட்டு மனைவியிடமே நீட்டினான் அஜய்.

“ஹூம், காலைல போன மனுஷன்… மதியம் நான் கால் பண்ணப்பவும் போன் எடுக்கலை…” அவள் வருத்தமாய் முகம் சுளித்து சொல்ல சிரித்தான்.

“கமிஷனர் கூட மீட்டிங்ல இருக்கும்போது எச்சூஸ் மி, என் பொண்டாட்டியோட கொஞ்ச நேரம் போன்ல கொஞ்சிட்டு வரேன்னா சொல்ல முடியும்…”

“ஹூக்கும், நீங்க அப்படியே சொல்லிட்டாலும்… சரி, சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க, சூடா பொட்டட்டோ பால்ஸ் பொரிச்சு தரேன், மழைக்கு சூப்பரா இருக்கும்…” சொன்னவள் அடுக்களைக்கு நகர அஜய் குளியலறைக்குள் நுழைந்தான்.

குளித்து தலை துவட்டி வந்தவன் முன்பு சூடான பொட்டாட்டோ பால்ஸ் ஒரு பிளேட்டில் காத்திருக்க இரு கப்பில் காபியோடு அவன் முன்னில் அமர்ந்தாள் அர்ச்சனா.

சாப்பிட்டுக் கொண்டே கப்பில் உள்ள காப்பியை சிப் செய்தவனிடம், “என்னங்க, இன்வெஸ்டிகேசன் எப்படிப் போகுது, ஏதாச்சும் இம்ப்ரூவ்மென்ட் இருக்கா…” என்ற அச்சுவிடம் உதட்டைப் பிதுக்கினான் அஜய்.

“ப்ச்… ஒரு கேஸ்ல விசாரணை போயிட்டு இருக்கும் போதே அடுத்த கேஸை கொடுத்துடறான் அந்த அந்தகன்… எல்லாம் முழுமையா இன்வெஸ்டிகேசன் முடியாம அப்படி அப்படியே நிக்குது…” என்றான் அஜய் யோசனையுடன்.

“ம்ம்… அடுத்து எந்த RK ஸ்டோரியை வச்சு மர்டர் பண்ணப் போறானோ, யோசிக்கும்போதே திகிலா இருக்கே… சரி, இன்னைக்கு என்ன இன்வெஸ்டிகேட் பண்ணினீங்கன்னு  சொல்லுங்களேன்…” என்றாள் ஆவலுடன்.

அன்று காலை 11 மணிக்கு முன்னாள் அமைச்சர் சக்கரபாணியின் வீட்டுக்கு சென்றது, அவர்கள் சொன்ன தகவலில் இருந்த சந்தேகம், பாரன்சிக் லாபில் செயற்கை பாம்புக்கடி போல் விஷம் தோய்ந்த முள்ளால் கழுத்தில் குத்தப்பட்டிருந்த புள்ளிகளைப் பற்றி தெரிந்து கொண்டது, கமிஷனர் அலுவலகத்தில் யுவராஜை சந்தித்தது, பேசியது அவன் கிரைம் நாவல் வாங்கியது வரை எல்லாம் கூறினான்.

அவளிடம் சொல்லும்போதே எல்லா நிகழ்வுகளையும் மனதுக்குள் ரீவைண்ட் செய்து எங்காச்சும் அவனுக்கான ஏதாவது ஒரு ஆதாரப் புள்ளி தெரிகிறதா என யோசித்துக் கொண்டான்.

“இன்னைக்கு ஒரு நாள்ல இவ்ளோ விஷயமா…?” அர்ச்சனா ஆச்சர்யமாய் கேட்க அஜய் அவளிடம் கேட்டான்.

“சரி, அந்த யுவராஜ் எதுக்கு போகும்போது அவ்வளவு கிரைம் நாவல் வாங்கிருப்பான்…?” என்றதும் யோசித்தாள்.

“ஒருவேளை… இந்த புண்பட்ட நெஞ்சை புகையை விட்டு ஆத்துறதுன்னு ஒரு வார்த்தை சொல்லுவாங்களே, அதுபோல அவரும் மன துக்கத்தை கிரைம் நாவல் படிச்சு ஆத்தப் போறாரோ என்னவோ…” என மொக்கையாய் காமெடி சொல்ல அஜய் அவளை முறைத்தான்.

“சீரியஸா கேட்டுட்டு இருக்கேன், உனக்கு கிண்டலா…?”

“ஓகே, ஓகே… உங்க சந்தேக வட்டம் கூடிகிட்டே போகுதே… முதல்ல அந்த ஆத்ரேயன், அப்புறம் அந்த அமைச்சரும், மருமகனும், இப்ப இந்த யுவராஜ்… இவங்க எல்லாரும் எந்த புள்ளியில் ஜாயின்ட் ஆகறாங்க…” என வாய்விட்டு கேட்டுக் கொண்டே காபி குடிக்க அவனும் யோசித்தான்.

“இந்தக் கேஸ்ல நீங்க சொன்னதை வச்சு நான் ஒரு சம்மரி சொல்லறேன், அதுல ஏதும் குளூ கிடைக்குதான்னு பாருங்க…” என்றவள் சொல்லத் தொடங்கினாள்.

“முதல் கொலை பெயின்ட் பொண்ணு நேசிகா, பாடி கிடந்தது வர்ஷா வீட்டுல, அடுத்து வர்ஷா காணாமப் போனா… அப்புறம் அந்த அரவிந்த் கொலை, பாடி கிடந்தது இதயா வீட்டுல, அந்தப் பொண்ணும் காணாமப் போயி கொலையாகி பாடி கிடைச்சிருச்சு… இந்த வர்ஷாவைப் பத்தி எதுவும் தெரியலை… அவ இன்னும் உயிரோட இருக்காளா, இல்ல அவளையும் கொன்னுட்டானா…” என்றவள் நிறுத்த அஜய் அதிர்ச்சியுடன் மனைவியைப் பார்த்தான்.

“இல்ல, எல்லாம் யோசிக்கணும்ல, ஒருவேளை நமக்கு பாடி கிடைக்காம கூட இருக்கலாம்…” என்றவள் தொடர்ந்தாள்.

“நேசிகா, வர்ஷா, அரவிந்த், இதயா எல்லாருமே வீட்டுக்கு ரொம்ப செல்லப் பிள்ளைங்க, மட்டுமில்லாம ஒரே பிள்ளைங்க… வர்ஷாவோட அப்பா வொர்க் பண்ணறது ஆத்ரேயா எக்ஸ்போர்ட்ஸ், அந்த நேசிகாவோட அப்பா வொர்க் பண்ணதும் ஆத்ரேயா எக்ஸ்போர்ட்ஸ்… அதே போல அரவிந்த், இதயா கொலையிலும் இந்த ஆத்ரேயா எக்ஸ்போர்ட்ஸ் சம்மந்தப்பட்டிருக்குமா… இல்ல, வர்ஷா, இதயாவைக் கடத்தின அந்த வெள்ளைக் கார்க்காரன் சம்மந்தப் பட்டிருப்பானா… கிரைம் நாவல் படிச்சு பக்காவா இத்தனை கொலைகளைப் பிளான் பண்ணிப் பண்ணுற அந்த அந்தகன் யாரா இருக்கும், அவனோட நோக்கம் என்னவா இருக்கும்…” என வரிசையாய் பட்டியலிட்டாள்.

இத்தனை கேள்விகளும் அஜய் மனதிலும் நீங்காமல் ஒலித்துக் கொண்டிருக்கும் கேள்விகளே.

“ம்ம்… ஒண்ணை விட்டுட்டேங்க, இதயா வீட்டுக்கு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் டெலிவரி பண்ண வந்த வயசான போஸ்ட்மேன், அவனையும் சந்தேகம் இருக்கு…”

“ம்ம்… எல்லாம் சரிதான், இதுல யாரெல்லாம் கிரைம் நாவல்ஸ் விரும்பிப் படிப்பாங்கன்னு பார்க்கணும்…”

“கிரைம் நாவல்ஸ் நான் கூட தான் நிறையப் படிக்கிறேன், அதுக்காக நான் கொலையாளியா…? எனக்கென்னவோ, அதிகமா கிரைம் படிச்சு அவன் மூளை அதுலயே ஊறிப் போயி மென்டலி அபக்ட் ஆகி இப்படில்லாம் பண்ணுறானோ…” என கற்பனைக் குதிரையை அதன் போக்கில் தட்டி விட்டபடி கூறினாள் அர்ச்சனா. ஆனாலும் அந்த வார்த்தைகள் அஜய் மனதில் ஆழமாய் பதிந்தது.

“எனக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கு அச்சு…”

“என்ன சந்தேகம்…” பொட்டட்டோ பால்ஸ் அர்ச்சனாவின் வாய்க்குள் அரைபட கணவனிடம் கேட்டாள்.

“இந்த யுவராஜ் பாமிலி அவங்க லவ்வை அக்சப்ட் பண்ணாம நேசிகா வீட்டுக்குப் போயி பிரச்சனை எல்லாம் பண்ணிட்டு வந்திருக்காங்க… அப்படி இருந்தும் யுவராஜும், நேசிகாவும் ரெஜிஸ்டர் மேரேஜ் வரைக்கும் போயிருக்காங்க… இது தெரிஞ்சு யுவராஜ் குடும்பம் ஏன் நேசிகாவைக் கடத்தி ஏதாவது பண்ணியிருக்கக் கூடாது…?”

அஜய் சொல்ல யோசித்தவள், “ம்ம்… வாலிட் பாயின்ட் தான், எனக்கு இன்னொரு டவுட் கூடத் தோணுதுங்க…”

“என்னது…?”

“இந்த யுவராஜ் ஏன் அந்த கறுப்புப் பெயின்ட் அடிச்ச பொண்ணோட பாடியை நேசிகாவோடதுன்னு பொய் சொல்லிருக்கக் கூடாது…” அர்ச்சனா கேட்க திகைத்தான்.

“என்னதான், இத்தனை நாளா ஆக்சிடண்ட் ஆகி ஹாஸ்பிடல் அட்மிட்னு சொன்னாலும் பத்து நாளா நேசிகா என்ன ஆனான்னு தெரிஞ்சுக்காம, இவனுக்கு ஆக்சிடண்ட் ஆன விஷயத்தை சொல்லாமலா இருப்பான்…?” அர்ச்சனா எதார்த்தமாய் இதைக் கேட்டாலும் அஜய்க்கும் மனதில் ஆல்ரெடி அந்த உறுத்தல் இருந்ததால் மனைவியை வியப்புடன் நோக்கினான்.

“நீ சொல்லுறது கரக்ட் தான் அச்சு… இதெல்லாம் என் மனசுலயும் உறுத்தலா நிக்கற கேள்விகள்தான்… நாளைக்கு காலைல அந்த யுவராஜ் வீட்டுக்கு சடனா ஒரு விசிட் அடிச்சு இதெல்லாம் உண்மையான்னு கன்பர்ம் பண்ணிட்டு தான் நேசிகா பேரண்ட்சை பார்க்கப் போகணும், அதுக்கு முன்னாடி பிரசன்னாவுக்கு ஒரு கால் பண்ணனும்…”

சொன்னவன் எழுந்து கொள்ள, “ம்ம்… நானும் டின்னர் ரெடி பண்ணப் போறேன்…” என்ற அர்ச்சனாவும் எழுந்தாள்.

பிரசன்னாவிடம் நேசிகாவின் தந்தையைப் பற்றி கேட்க நினைத்து அலைபேசியில் அழைக்க அது நாட் ரீச்சபிள் எனவும், கோகுலை அழைத்து நாளைக்கு உடனடியாய் செய்ய வேண்டிய சில முக்கிய வேலைகளை சொல்ல அதற்குள் கிருஷ்ணா லைனில் வர எடுத்துப் பேசினான்.

“சொல்லுங்க கிருஷ்ணா, ஸ்டேஷன் ரீச் ஆகிட்டீங்களா…?”

“இல்ல சார்… நம்ம ஸ்டேஷனுக்குப் போயிட்டு இருக்கும் போது எதார்த்தமா பக்கத்துல இருக்கிற பஸ் ஸ்டாப்பைப் பார்த்தேன்… அங்க வர்ஷா போலவே ஒரு பொண்ணு உக்கார்ந்திருக்கவும் திகைச்சுப் போயிட்டேன்…”

“எ…என்ன சொல்லறீங்க கிருஷ்ணா, வர்ஷாவா…?”

“ஆமா சார், நானும் டவுட்டுல தான் காரை நிறுத்தி அந்தப் பொண்ணுகிட்டப் போனேன், ஒரு மாதிரி மயக்கமா உக்கார்ந்து இருந்துச்சு… நான் பக்கத்துல போயி வர்ஷான்னு அழைச்சும் திரும்பி கூடப் பார்க்கலை, ட்ரக்ஸ் யூஸ் பண்ணி மயக்கத்துல உக்கார்ந்திருக்கிற போல ரெஸ்பான்ஸ் பண்ணாம இருந்துச்சு…”

“ஓ காட்… அப்புறம்…”

“மழைக்கு ரெண்டு லேடீஸ் அந்த ஸ்டாப்புல ஒதுங்கி நின்னுட்டு இருக்கவும் அவங்ககிட்ட விசாரிச்சேன்… அவங்க வர்றதுக்கு முன்னாடி இருந்தே இந்தப் பொண்ணு உக்கார்ந்திருக்கு, கொட்டுற மழைல வயசுப் பொண்ணு ராத்திரி நேரத்துல தனியா உக்கார்ந்து இருக்கேன்னு விசாரிச்சா பதிலே சொல்லலைன்னு சொன்னாங்க…”

“ஓ… நீங்க இப்ப எங்கிருக்கீங்க கிருஷ்ணா…?”

“நான் வர்ஷாவை கூட்டிட்டு பக்கத்துல இருக்கிற விஜயா ஹாஸ்பிடல் போயிட்டு இருக்கேன் சார், உங்களுக்கு உடனே இன்பார்ம் பண்ணிடலாம்னு தான் கால் பண்ணேன்…”

“ஓகே… நான் உடனே கிளம்பி ஹாஸ்பிடல் வந்திடறேன்…” சொன்னவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு கமிஷனருக்கு அழைத்தான்.

“வர்ஷாவின் உடல் நிலையை டாக்டர் பரிசோதிச்ச பிறகு அவங்க அப்பா பிரசன்னாவுக்குத் தகவல் சொன்னாப் போதும், அஜய்…” கமிஷனர் சொல்ல சம்மதித்தவன் அர்ச்சனாவிடம் சொல்லிவிட்டு ரெயின் கோட் அணிந்து புல்லட்டில் விஜயா ஹாஸ்பிடல் கிளம்பினான்.

சாலையின் இருமருங்கும் தேங்கி நின்ற மழைநீரை சிதறடித்து வேகமாய் பாய்ந்த புல்லட் விஜயா ஹாஸ்பிடல் நோக்கி தடதடத்துப் பாய்ந்தது.

Advertisement