Advertisement

 அத்தியாயம் – 16

அஜயும் கிருஷ்ணாவும் கமிஷனர் ஆபீஸ்க்கு கீழே காரைப் பார்க் செய்துவிட்டு படிகளில் உயர்ந்து அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தபோது கமிஷனர் ஜெயராமுக்கு எதிரே ஒரு இளைஞன் கலங்கிய கண்களோடு உட்கார்ந்திருந்தான். கையிலும், நெற்றியிலும் பெரிய பிளாஸ்டர் தெரிந்தது.

சல்யூட் வைத்தவர்களை வரவேற்று எதிரிலிருந்த காலியான இருக்கையைக் காட்ட இருவரும் அதில் நிறைந்தனர்.

“மிஸ்டர் அஜய்…! இவர் மிஸ்டர் யுவராஜ்… பெங்களூருல ஒரு ஐடி ஆபீஸ்ல வொர்க் பண்ணிட்டு இருக்கார்…”

“ஓ…!” என்றவன், “இவனை எதற்கு கமிஷனர் நம்மிடம் அறிமுகப் படுத்துகிறார்…” என புரியாமல் பார்க்க அந்த இளைஞனிடம்  திரும்பியவர், “இது மிஸ்டர் அஜய், அவர் கிருஷ்ணா… நீங்க சொன்ன கேஸை இவங்க தான் விசாரணை பண்ணிட்டு இருக்காங்க… நீங்க சொல்ல வந்ததை இவங்ககிட்ட சொல்லுங்க, மிஸ்டர் யுவராஜ்…” எனவும் அவன் பேசினான்.

“சார், கொலை செய்யப்பட்ட ஒரு இளம் பெண்ணோட டெட்பாடி கறுப்புப் பெயின்ட் பூசப்பட்டு ஒரு கார் டிக்கியில இருந்து கிடைச்சதா பத்து நாள் முன்னாடி வெளிவந்த ஒரு பேப்பர் நியூஸ்ல பார்த்தேன், டீவி நியூஸ்ல கேட்டேன்… அந்தப் பெண் யார்ங்கறதை கண்டு பிடிச்சுட்டீங்களா…?”

“இன்னும் இல்லை…”

“அந்தப் பொண்ணு பாடியை நான் பார்க்க முடியுமா…?”

“அந்தப் பொண்ணோட போட்டோஸ் கைல இருக்கு, பார்க்கறீங்களா…” என்ற அஜய் கிருஷ்ணாவை நோக்க அவர் தனது மொபைல் காலரியில் சேகரித்து வைத்திருந்த போட்டோக்களை எடுத்து அவனிடம் நீட்டினார். அதை உன்னிப்பாய் கவனித்தவன் குழப்பமாய் நெற்றியை சுருக்கினான்.

“மிஸ்டர் யுவராஜ், நீங்க எதுக்காக அந்தப் பொண்ணு டெட்பாடியை பார்க்க விரும்புறிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா…?”

“எஸ் சார்…” என்றவன் தனது அலைபேசியை எடுத்து போட்டோ காலரியில் யுவராஜின் தோளில் சாய்ந்து அழகாய் சிரித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் போட்டோவைக் காட்டினான்.

“சார்… இது என் லவ்வர் நேசிகா, காலேஜ்ல எனக்கு ஜூனியர், ரெண்டு வருஷமா சின்சியரா லவ் பண்ணிட்டு இருந்தோம்… கொஞ்சநாள் முன்னாடி எங்க வீட்டுக்கு அது தெரிஞ்சு வீட்டுல பெரிய பிரச்சனை… நாங்க கொஞ்சம் வசதியான இடம், நேசிகா லோவர் மிடில் கிளாஸ், எங்க வீட்டுல லவ் மேட்டர் தெரிஞ்சதும் நான் பெங்களூருல உள்ள சமயத்துல என் அப்பா அவ வீட்டுக்குப் போயி பெரிய பிரச்சனை பண்ணிட்டார்… அவ குடும்பத்துக்கு ரொம்ப அவமானமாப் போயிருச்சு…” என்றவன் நிறுத்தினான்.

“ம்ம்… சொல்லுங்க…”

“நேசிகா என்கிட்ட சொல்லி அழுதா… நாம லவ் பிரேக் அப் பண்ணிக்கலாம், என்னால என் குடும்பத்துக்கு கெட்ட பேர் வரக்கூடாதுன்னு புலம்பினா… அவ வீட்டுக்கு ஒரே பொண்ணு, வசதில கம்மியா இருந்தாலும் அவ பேரன்ட்ஸ் அவ மேல உயிரையே வச்சிருந்தாங்க… நான் அவகிட்ட நாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டா நம்மளை யாரும் பிரிக்க முடியாதுன்னு சொல்லி ஒருவழியா கன்வின்ஸ் பண்ணி ரெஜிஸ்டர் மேரேஜ்க்கு சம்மதிக்க வச்சேன்…”

“ஓ… ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டீங்களா…?”

“இல்ல சார்… சரியா பனிரெண்டு நாளைக்கு முன்னாடி காலைல பத்து டு பதினொண்ணு முகூர்த்த நேரத்துல ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ண எல்லா ஏற்பாடும் தெரிஞ்ச ஒருத்தர் மூலமா பண்ணி இருந்தோம்… நான் பெங்களூருல இருந்து விடியற்காலை நாலு மணிக்கு சென்னை கிளம்பும்போது நேசிகாவுக்கு கால் பண்ணப்ப அவளும் ரெடியாகி ரெஜிஸ்டர் ஆபீஸ் வந்துடறேன்னு சொன்னா…”

“ஓ… அப்புறம்…?”

“அப்புறம் தான் விதி விளையாடிருச்சு சார்…” பெருமூச்சுடன் நிறுத்திய யுவராஜ் தொடர்ந்தான்.

“நான் டைம் ஆயிருச்சுன்னு கார்ல வேகமா சென்னை வந்திட்டு இருக்கும்போது வழியில எனக்கு ஆக்சிடண்ட் ஆகிருச்சு… பைபாஸ்ல எதிர்ல வந்திட்டிருந்த ஒரு சரக்கு லாரி டிவைடரை இடிச்சு எதிர்பக்கமா வந்திட்டு இருந்த என் கார் மேல மோதிடுச்சு… அதுல தலைலயும், கைலயும் பயங்கரமா அடிபட்டு அப்படியே மயக்கமாகிட்டேன்… அங்கயே ஏதோ பக்கத்துல ஒரு ஹாஸ்பிடல்ல என்னை அட்மிட் பண்ணிருக்காங்க… ஒருவாரத்துக்கு மேல ICU ல நினைவில்லாம இருந்துட்டு அப்புறம் கண் விழிச்சேன்…”

“ஓ… நேசிகாவுக்கு இந்த விஷயம் தெரியுமா…?”

“அது தெரியலை சார்… எனக்கு இப்படி ஆனது தெரிஞ்சு என் அம்மாவும், அப்பாவும் ஹாஸ்பிடலுக்கு வந்துட்டாங்க… அவங்க மாறி மாறி என் கூடவே இருந்தாங்க… ஆக்ஸிடன்ட் ஆனப்ப கார் டாஷ்போர்டு மேல இருந்த என் போன் கீழே விழுந்து டிஸ்பிளே போயிருச்சு… நேசிகாவுக்கு எப்படியாச்சும் விவரம் சொல்லணும்னு நினைச்சாலும் எனக்கு இப்படி ஆனது தெரிஞ்சா அவளால தாங்கிக்க முடியாதுன்னு தெரிவிக்காம இருந்தேன்… என் மொபைலும் கைல இல்லாததால அவளுக்கும் கான்டாக்ட் பண்ண முடியலை… நார்மல் வார்டுக்கு மாத்தினதும் டிஸ்சார்ஜ் பண்ணி சென்னை ஹாஸ்பிடலுக்கு மாத்திட்டாங்க… அப்புறம் நேசிகாவுக்கு நான் கால் பண்ணப்ப சுவிட்ச் ஆப்னு வந்துச்சு… ரெண்டு நாளைக்கு முன்னாடி என் பிரண்டு ஒருத்தன் என்னைப் பார்க்க வந்தப்ப அவன்கிட்ட நேசிகாகிட்ட எனக்கு நடந்ததை அவளை நேர்ல பார்த்து சொல்ல சொன்னேன்… அவன் சொல்லறேன்னு சொன்னான், அப்பதான் அதிர்ச்சியான அந்த விஷயம் தெரிந்தது…”

“என்னாச்சு…?”

“வீட்டுல இருந்து ரெஜிஸ்டர் ஆபீஸுக்கு கிளம்பும்போது நேசிகா எனக்கு சொல்லறதுக்காக கால் பண்ணிப் பார்த்திருக்கா… மொபைல் டிஸ்பிளே உடைஞ்சு நானும் மயக்கமானதுல அவ கால் எடுக்காததால அவளே ஒரு டாக்ஸில ஏறி கிளம்பிருக்கா, அதை பார்த்திட்டு யாரோ வீட்டுல சொல்லி இருக்காங்க, அப்புறம் அவளை யாரும் பார்க்கலை…” என்றான் சோகத்துடன்.

“என்ன சொல்லறிங்க… நேசிகா வீட்டுல பொண்ணைக் காணோம்னு தேடலியா…?”

“இல்ல சார், அதுல தான் இன்னொரு தப்பு நடந்திருக்கு… நேசிகா வீட்டுல இருந்து கிளம்பும்போது ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு நாங்க பெங்களூர் போயிருவோம், கொஞ்ச நாளைக்குப் பிறகு உங்களைப் பார்க்க வரும்போது மன்னிச்சு எங்களை ஏத்துக்கனும்னு லெட்டர் எழுதி வச்சிருக்கா…”

“ஓ… அதனால அவங்க பொண்ணைத் தேடாம, கால் கூடப் பண்ணாம விட்டுட்டாங்களா…?”

“இல்ல சார், நேசிகாவோட அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சதும், எப்படியாச்சும் அந்தப் பையன் வீட்டுல பேசி கல்யாணத்துக்கு நான் சம்மதம் வாங்கி இருப்பனே, இப்படிப் பண்ணிட்டாளேன்னு அழுது புலம்பி ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டாங்க… பார்த்துப் பார்த்து பாசமா வளர்த்த பொண்ணு இப்படிப் பண்ணி, பெத்த அப்பாவைக் கொல்லப் பார்த்தாளேன்னு அவ அம்மாவும் கோபத்துல அவளுக்கு கால் பண்ணாம விட்டுட்டாங்க… நானும் ரெண்டு நாள் முன்னாடி தான் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தேன்…”

“இப்ப நேசிகா அப்பா எப்படி இருக்கார்…”

“வீட்டுல ரெஸ்ட்ல இருக்கார்… மூணு நாளைக்கு முன்னாடி மனசு கேக்காம அவரும் நேசிகா நம்பருக்கு போன் பண்ணிப் பார்த்தப்போ சுவிட்ச் ஆப்னு வந்திருக்கு… அப்புறம் என்ன ஆனாலும் பரவாயில்லைன்னு கிளம்பி எங்க வீட்டுக்கே பொண்ணைப் பத்தி விசாரிக்க வந்துட்டார்… அப்பதான் நான் ஆக்சிடண்ட் ஆகி ஹாஸ்பிடல்ல இருக்கேன்னு தெரிஞ்சிருக்கு… என்னை ஹாஸ்பிடல்ல வந்து பார்த்து நடந்ததை எல்லாம் சொல்லி அழவும், எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு… அடுத்தநாள் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த கையோட போலீஸ்ல நேசிகா மிஸ்ஸிங் பத்தி கம்ப்ளெயின்ட் கொடுக்கலாம்னு கிளம்பினப்ப தான் என் பிரண்டு பேப்பர்ல வந்த நியூஸ் பார்த்திட்டு என்கிட்ட சொன்னான், அதோட டீவி நியூஸும் பார்த்தேன்… அந்த பெயின்ட் அடிச்ச பொண்ணு யாருன்னு இன்னும் அடையாளம் தெரியலைன்னு சொல்லவும் ஒரு பயத்துல தான் ஸ்டேஷனுக்கு போயி இன்ஸ்பெக்டரைப் பார்த்தேன்… அவர்தான் உடனே கமிஷனர் ஆபீஸ்ல போயி இந்தத் தகவலைக் கொடுக்க சொன்னார்…” என்றான்.

“ம்ம்… அந்த பிளாக் பெயின்ட் பூசப்பட்ட பெண் நேசிகாவா இருக்கலாம்னு நீங்க நினைக்கறீங்களா…?”

“இ… இல்ல சார், அந்தப் பொண்ணு என் நேசிகாவா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்… அதைக் கன்பர்ம் பண்ணிட்டா அவ இந்த உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் கண்டு பிடிச்சிருவேன்…” என்றான் கண்ணீருடன்.

“உங்க எதிர்பார்ப்பு பலிக்கட்டும்…” என்ற அஜய், “இந்த போட்டோஸ் பார்த்து உங்களுக்கு என்ன தோணுது…” வேறு பல கோணங்களில் எடுக்கப்பட்ட போட்டோக்களைக் காட்டி அவனிடம் கேட்டான்.

கறுப்புப் பெயின்ட் அடிக்கப்பட்ட முகத்தில் அடையாளத்தைத் தேடி கண்ணை சுருக்கிப் பார்த்தும் யுவராஜால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.

“சார்… இதுல எனக்கு சரியா அடையாளம் தெரியலை, ஒருவேளை நேர்ல பாடியைப் பார்த்தா சொல்ல முடியும்னு நினைக்கறேன்…” என்றான்.

கமிஷனரைப் பார்த்த அஜய், “சார், மார்ச்சுவரில இருக்கிற அந்தப் பொண்ணோட பாடி என்னதான் பிரசர்வ் பண்ணி வச்சிருந்தாலும் போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சதால இப்ப டீகம்போஸ் ஆகத் தொடங்கிருக்கும்… ஐடெண்டிபை பண்ணறது ரொம்ப கஷ்டம்…” என்றான்.

அவன் சொல்லும்போதும் அந்த போட்டோக்களில் பார்வையைப் பதித்திருந்த யுவராஜ் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து அவர்களைப் பார்த்தான்.

“ச..சார், இது நேசிகா தான்….” என்றான் கண்ணீருடன்.

“எப்படி சொல்லறீங்க…?”

“நேசிகாவுக்கு வலது கைல ஆறு விரல் இருக்கும் சார்… குட்டியா ஒரு சதைத் துண்டு போல சுண்டு விரலுக்குப் பக்கத்துல ஒட்டிட்டு இருக்கும்… இந்த போட்டோவைப் பாருங்க…” என்றவன் ஒரு போட்டோவை எடுத்து நீட்ட அதில் பார்வையைப் பதித்த அஜய் திகைத்தான்.

அப்பெண்ணின் வலது கையில் ஆறாவதாய் கறுப்புப் பெயிண்டுக்குள் ஒட்டிக் கொண்டிருந்தது ஒரு சிறிய சதைத் துணுக்கு… அவ்வளவு சீக்கிரம் அது ஆறாவது விரல் என்று தெரியாத அளவுக்கு குட்டியாய் இருந்தது. அஜய் கிருஷ்ணாவைப் பார்க்க அவரும் திகைப்புடன் பார்த்தார். இத்தனை நாள் யாரென்று தெரியாமல் இருந்த கேஸில் ஒரு வெளிச்சம் கிடைத்தது போல் உணர்ந்தனர்.

“மிஸ்டர் யுவராஜ், இத்தனை நாள் வெளிச்சம் தெரியாம இருந்த கேஸுக்கு உங்களால தான் ஒரு வெளிச்சம் கிடைச்சிருக்கு…” என்றார் கிருஷ்ணா.

“சாரி சார், அது என் நேசிகாவா இருக்கக் கூடாதுன்னு ஆயிரம் முறை கடவுளை வேண்டிகிட்டே இருந்தேன்… அழகான, அன்பான என் நேசிகாவை இழந்துட்டனே…” என்றவனின் கண்களில் கண்ணீர் உருண்டு விழுந்தது.

“சாரி மிஸ்டர் யுவராஜ், உங்க பீல் புரியாம பேசிட்டார்… எந்தப் பொண்ணுக்குமே நேசிகா மாதிரி ஒரு மரணம் வரக் கூடாது… கொலையாளிக்கு அவங்க மேல என்ன வன்மமோ உடம்புல இப்படி பெயின்ட் பூசி வச்சு அடையாளமே தெரியாமப் பண்ணிருக்கான்… அவன் யாரா இருந்தாலும் கண்டுபிடிக்காம விட மாட்டோம்…” சொன்ன அஜய் கமிஷனரிடம் திரும்பினான்.

“சார், நாங்க மார்ச்சுவரிக்கு இவரை அழைச்சிட்டுப் போயி நேர்ல பாடியைக் காட்டிட்டு பர்தரா அடுத்த மூவ்க்குப் போகலாம்னு நினைக்கிறேன்…”

“நீங்க புரசீட் பண்ணுங்க அஜய்…” என்றார் கமிஷனர்.

மூவரும் வெளியே வந்து வண்டியில் அமர ஜீஹெச் நோக்கி வண்டி நகர்ந்தது. யுவராஜ் பாடியை நேரிலும் கண்டு அது நேசிகா தான் என உறுதிப்படுத்த போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டரிடம் கம்ப்ளீட் ரிப்போர்ட் தயார் ஆக்கும்படி சொல்லிவிட்டு வெளியே வந்தனர். யுவராஜ் கலங்கிய கண்களை கர்சீப்பால் துடைத்துக் கொள்ள அவனிடம் திரும்பினான் அஜய்.

“மிஸ்டர் யுவராஜ், இந்தக் கேசுல உங்க முழு ஒத்துழைப்பு எங்களுக்கு வேணும்…” என்று சொல்ல யுவராஜ் குரல் கமறக் கேட்டான்.

“நான் எந்த மாதிரி உங்களுக்கு ஒத்துழைக்கணும் சார்…”

“நேசிகாவோட வீடு எங்க இருக்கு…?”

“வெஸ்ட் மாம்பலம் சார்…”

“அவங்களோட பிரண்ட்ஸ், ஆக்டிவிடீஸ்  பத்தி உங்களுக்குத் தெரியுமா…?”

“ஓரளவுக்குத் தெரியும் சார்…”

“நேசிகாவோட அப்பாக்கு என்ன வேலை…?”

“ஆத்ரேயா எக்ஸ்போர்ட்ஸ் னு ஒரு பிரைவேட் கம்பெனில ஹெட் சூப்பர்வைசரா இருக்கார் சார்…” யுவராஜ் சொல்லவும் இருவரும் சட்டென்று நிமிர அஜய் கேட்டான்.

“ஆத்ரேயா எக்ஸ்போர்ட்ஸ்னா சொன்னிங்க…?”

Advertisement