Advertisement

 அத்தியாயம் – 15

காலை பதினொரு மணி.

மண் பாதையில் பத்து நிமிஷ குலுங்கலான பயணத்திற்குப் பிறகு தென்னந்தோப்புகள் அடர்த்தியாய் வர தோப்பின் உள்ளே கார் நுழைந்தது. மரங்களுக்கு நடுவே பிரம்மாண்டமாய் இருந்தது முன்னாள் அமைச்சர் சக்கரபாணியின் பங்களா. அவுட்டரில் பெரிதாய் இடத்தை வளைத்துப் போட்டு, இரு பக்கமும் தென்னையும், வாழையும் செழித்து வளர்ந்திருக்க முன்னில் அழகான பூச்செடிகளுடன் நடுவே பங்களாவைக் கட்டி இருந்தார்.

அதை அஜய் கண்களுக்குள் வாங்கிக் கொண்டிருக்கும்போதே தென்னை மரங்களின் அணிவகுப்பு முடிந்து திறந்திருந்த கேட் வழியாக கார் பங்களாவுக்குள் நுழைந்து போர்டிகோவில் மௌனமானது. அஜயும், கிருஷ்ணாவும் கீழே இறங்கி சுற்றிலும் பார்வையை ஓட்டினர்.

முன்னில் இருந்த சக்கரபாணியின் உதவியாளர் அஜயை கண்டதும், “வாங்க, சார் உங்களுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கார்…” என்றான்.

சொன்னவன் போர்டிகோ படிகளில் ஏற இவர்களும் பின்தொடர்ந்தனர். பழைய காலத்து ஜமீன் ஸ்டைலில் கட்டப்பட்ட பெரிய பங்களாவின் சுவர்கள் வண்ண வண்ணப் பெயிண்டிலும் டிஸ்டம்பரிலும் குளித்து பளபளத்தது.

மூவரும் மைதானம் போல் பரந்து கிடந்த ஹாலுக்குள் நுழைந்தனர். ஹாலின் மையத்தில் ‘ப’ வடிவத்தில் போடப் பட்டிருந்த வெல்வெட் சோபாக்களில் நடுநாயகமாய் அமர்ந்திருந்தார் முன்னாள் அமைச்சர் சக்கரபாணி.

அவரது தலைக்கு மேலே பெரிய ராட்சஸ லஸ்தர் விளக்கு திராட்சைக் கொத்தைப் போல் தொங்கிக் கொண்டிருந்தது.

“வாங்க, உக்காருங்க…” சக்கரபாணி சொல்ல இருவரும் மெத்தென்ற சோபாவில் அமர்ந்தனர்.

“காபி, டீ ஏதாச்சும் சாப்பிடறீங்களா…?”

“நோ சார், தேங்க்ஸ்…” மறுத்தான் அஜய்.

“நான் வெளிய கிளம்பிட்டேன்… நீங்க வரேன்னு கால் பண்ணவும் தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்… விசாரணையை சீக்கிரம் முடிச்சுகிட்டா கிளம்பிடுவேன்…”

“ஓகே சார்…” என்ற அஜய், “வீட்டுல உங்க பாமிலி மெம்பர்ஸ் யாரும் இல்லையா…?” என்றான் கண்களால் துளாவியபடி.

“அவங்களை தேவை இல்லாம டிஸ்டர்ப் பண்ண வேண்டாம், எதுவா இருந்தாலும் என்கிட்டயே கேளுங்க…” என்ற சக்கரபாணியின் முகம் விருப்பமின்மையை காட்டியது.

“அதெப்படி சார், அவங்களுக்குத் தெரிஞ்ச விஷயம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும்னு அவசியம் இல்லையே…” அஜய் பதில் சொல்லும்போதே சக்கரபாணியின் மனைவி அவர்களை எட்டிப் பார்க்க அவரைக் கண்டு விட்ட அஜய், “வணக்கம் மா, உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…” எனவும் தயக்கத்துடன் அவர்களிடம் வந்தார்.

“என்ன பேசணும்…” என்றவர் வெறுப்புடன் கணவரைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “இவர் புள்ளையைக் கொன்னது நாங்களா இருக்கும்னு சந்தேகப் படறீங்களா…?” என்றார்.

“அட, இது ஜஸ்ட் விசாரணை தான்… நீங்கல்லாம் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தா தானே உண்மையான கொலைகாரனைக் கண்டு பிடிக்க முடியும்…”

“ம்ம்… சரி, கேளுங்க…” சொன்னவர் வேண்டா வெறுப்புடன் கணவன் அருகில் அமர்ந்தார்.

“மேடம், உங்க கணவருக்கு இரண்டாம் தாரம் இருக்கிறது உங்களுக்கு நிச்சயம் விருப்பமிருக்காது…?”

“எந்தப் பொண்டாட்டிக்கு அதுல விருப்பம் இருக்கும்…?”

“உங்க வாழ்க்கைக்கு வந்தனா போட்டியா வந்தது மட்டும் இல்லாம, அரவிந்தும் ஒரு வாரிசா சொத்துல உங்க பொண்ணுகளுக்கு போட்டியா வந்ததுல உங்களுக்கு அவர் மேலயும் வெறுப்பு இருக்கும் தானே…”

“ஆமா, நிச்சயம் இருக்கு….”

“உங்க பொண்ணுகளுக்கும் அரவிந்தைப் பிடிக்காதுன்னு சொன்னாங்க…”

“அவங்களுக்கு வந்தனாவை தான் பிடிக்காது… அரவிந்த் என்ன இருந்தாலும் அவங்க தம்பி, அதனால அவன் மேல அவங்களுக்கு வெறுப்பு கிடையாது…”

“ம்ம்… உங்க மாப்பிள்ளை கணேச மூர்த்தியும், பொண்ணும் வீட்டுல இல்லையா…?”

“பொண்ணு மாடில தான் இருக்கா… மாப்பிள்ளை ஒரு வேலையா வெளிய போயிருக்கார், இப்ப வந்திருவார்…”

“ஹூம்… சார், நான் இப்ப சொல்லப் போறது உங்களுக்கு ஒரு விதத்துல அதிர்ச்சியா கூட இருக்கலாம்… உங்க பையன் அரவிந்துக்கு மூணு மாசம் முன்னாடி ஒரு ஆக்சிடன்ட் ஆனது உண்மைதானே…”

“ஆமா, முன்னாடி வந்த லாரில மோதப் போற நேரத்துல காரை வளைச்சு வெளிய குதிச்சிட்டதால உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாம வலதுகை மட்டும் பிராக்சர் ஆச்சு…”

“ம்ம்… அந்த விபத்து நடந்ததைப் பத்தி போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணீங்களா…?”

“இ..இல்ல… தலைக்கு வந்தது தலைப் பாகையோட போச்சேன்னு கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு அதோட விட்டுட்டோம்…” என்றார் சக்கரபாணி.

“நீங்க கேஸ் கொடுக்காம இருந்ததுக்கு காரணம் அதுதானா, இல்ல கேஸ் கொடுத்து போலீஸ் விசாரிச்சா உங்க மாப்பிள்ளை கணேசமூர்த்தி மாட்டிக்குவார்னு நினைச்சு கொடுக்காம விட்டீங்களா…?” அஜய் கேட்க சக்கரபாணியின் முகத்தில் வெகுவாய் பதட்டம் தெரிந்தது.

“என்ன சொல்லறீங்க, எங்க மாப்பிள்ளைதான் அந்த விபத்தைப் பண்ணினார்னு சொல்ல வரீங்களா, அவர் அப்படிப்பட்டவர் கிடையாது…” சக்கரபாணியின் மனைவி சீறலாய் பதில் சொல்ல அவர் அமைதியாய் இருந்தார்.

அப்போது வாசலில் கார் ஹாரன் கேட்க, சக்கரபாணி அவர்களிடம் நிமிர்ந்தார்.

“இங்க பாருங்க, என் மகன் அரவிந்தைக் கொலை பண்ணினது யாருன்னு உங்க விசாரணைல தெரிய வரும்கிற நம்பிக்கைல தான் நீங்க கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்கேன்… நீங்க என்னடான்னா எங்க வீட்டு ஆளையே சந்தேகப்பட்டுட்டு எங்க குடும்பத்துலயே குழப்பம் பண்ணப் பார்க்கறீங்க… இப்ப மாப்பிள்ளை தான் வரார், அவர்கிட்ட இந்த மாதிரி எதுவும் கேட்டு வைக்காதீங்க…” என்றார் சிறு பதட்டத்துடன்.

“ஏன் சார், அவர் எந்தத் தப்பும் செய்யலேனா எதுக்கு பயப்படணும்…? தைரியமா நடந்ததை சொல்ல வேண்டியது தானே…” என்றான் அஜய் புன்னகையுடன்.

வெள்ளை வேட்டி சட்டையுடன் முகத்தில் ஒட்ட வைத்த செயற்கை சிரிப்புமாய் அரசியல் பிரமுகருக்கான சகல அடையாளங்களுடன் உள்ளே வந்தான் கணேசமூர்த்தி.

“வணக்கம், எதை மாமாகிட்ட தைரியமா சொல்ல சொல்லிட்டு இருக்கீங்க…?” என்றவனின் குரலில் திரும்பினர்.

“நீங்க தான் அரவிந்த் மர்டர் கேஸை இன்வெஸ்டிகேட் பண்ண போலீஸ் ஆபீசர்சா…”

“ஆமாம், நீங்க இவங்க மாப்பிள்ளை கணேச மூர்த்தி தானே…”

“நானேதான், கொலைகாரன் யாருன்னு பிடிச்சுட்டீங்களா…” கேட்டுக் கொண்டே சோபாவில் அமர மருமகனைக் கண்டதும் மாமியார் எழுந்து கொண்டாள்.

“எங்க சார், கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையா ஒண்ணைக் கிளறினா இன்னொன்னு வெளிய வருதே…” என்றார் கிருஷ்ணா.

“ம்ம்… நானும் கேள்விப்பட்டேன்… என்ன இருந்தாலும் கொலைகாரன் ஒரு ரசனையான ஆளுதான் போலருக்கு, முதுகுத் தண்டுவடத்துல, அதென்ன… ‘நேசத்தின் நிழல் கறுப்பு’ ன்னு விஷ ஊசி வச்சு பச்சை குத்தறது, அதும் கிரைம் நாவல் படிச்சிட்டு பண்ணறது எல்லாம் ரொம்பப் புதுசா இருக்கு…” என்றான் சிரிப்புடன்.

“ம்ம்… என்ன சார், விட்டா நீங்க கொலைகாரனைப் பாராட்டி விழா எடுத்திருவீங்க போலருக்கு…” கிருஷ்ணா கேட்கவும்,

“மனசுல தோணினதை சொன்னேன்…” என்றான் அவன்.

“அப்படியே இதுக்கும் மனசுல தோணறதை சொல்லிடுங்க மிஸ்டர் கணேசமூர்த்தி…” என்ற அஜயின் சீரியஸான குரலில் அவனை நோக்க, “எதுக்கு மூணு மாசம் முன்னாடி அரவிந்த் போன காருல லாரியை மோதி ஆக்சிடன்ட் பண்ணப் பார்த்தீங்க…” எனவும் கணேச மூர்த்தியின் முகம் நிறம் மாறியது.

“ஹலோ, யாரைப் பார்த்து என்ன கேக்கறீங்க…?”

“சார், கோபப்படாதீங்க… எங்ககிட்ட சரியான ஆதாரம் இல்லாம நாங்க இதைக் கேக்கலை…” எனவும் சட்டென்று அவனிடம் ஒரு படபடப்பு தெரிந்தது.

“அஜய்… திஸ் ஈஸ் டூ மச், என் முன்னாடியே என் மாப்பிள்ளையை ஒரு குற்றவாளி போல விசாரிக்கறது சரியில்லை…” சக்கரபாணி கோபத்தில் குதித்தார்.

“சார், எங்களுக்குக் கிடைச்ச தகவல்படி மிஸ்டர் கணேசமூர்த்தி தான் ஆளை செட் பண்ணி அரவிந்தைக் கொல்ல ஆக்சிடண்ட் செட் பண்ணிருக்கார், இந்த விஷயம் உங்களுக்கும் தெரியும்னு எங்களுக்குத் தெரியும்…” எனவும் வியர்த்தார் சக்கரபாணி.

“நீ…நீங்க எதுக்கு பழசை எல்லாம் கிளறிட்டு இருக்கீங்க, அது முடிஞ்சு போன கதை, இப்ப அரவிந்தைக் கொலை பண்ணது யாருன்னு மட்டும் கண்டுபிடிங்க போதும்…”

“நாங்க அந்த முயற்சில இருக்கும்போது தான் முன்னமே அரவிந்தைக் கொல்ல இப்படி ஒரு முயற்சி நடந்தது தெரிய வந்துச்சு சார்… நீங்க என்ன சொல்லறீங்க, மிஸ்டர் கணேச மூர்த்தி…” என்றான் அமைதியாய் இருந்தவனிடம்.

ஒரு நொடி தயங்கி நிமிர்ந்தவன், “நீங்க சொல்லறது உண்மைதான்… மாமா சொத்து பிரிக்கிற விஷயமா வக்கீல் கிட்ட பேசும்போது என் ஒரே மகனுக்கு சொத்துல முக்கால் பங்கை எழுதி வைக்கப் போறேன்னு சொல்லிட்டு இருந்தார்… நியாயமா இவரோட ரெண்டு பொண்ணுங்களும் தான் இந்த சொத்துக்கு வாரிசு, மாமாவை மயக்கி ரெண்டாம் தாரமா வந்த வந்தனாவோட புள்ளைக்கு இவர் முக்கால்வாசி சொத்தை எழுதறேன்னு சொல்லவும் எனக்கு கோபம் வந்துச்சு, அவன் உயிரோட இருந்தாத் தானே எழுதுவார்னு ஆக்சிடண்ட் பண்ண நினைச்சது உண்மை… ஆனா, அவன் கையில மட்டும் காயத்தோட தப்பிச்சுட்டான்… போலீஸ் விசாரணைல இது மாமாக்குத் தெரிஞ்சதால அவர் என்கிட்ட சொத்தை மூணு பேருக்கும் சரி சமமாப் பிரிக்கறேன்… இனி இப்படிப் பண்ணாதீங்கன்னு சொல்லி என் மேல் கேஸ் ஆகாம யாருக்கும் தெரியாம இந்தப் பிரச்னையை முடிச்சிட்டார்…” என்றான் கணேசமூர்த்தி.

“ஆமா அஜய், மாப்பிள்ளை அரவிந்தை கொல்ல முயற்சி பண்ணது குடும்பத்துல தெரிஞ்சா பிரச்சனை ஆகும்… என் பொண்ணு வாழ்க்கைல தேவையில்லாம பிரச்சனை வரும், அதான் யாருக்கும் தெரியாம மறைச்சுட்டேன்…” என்று தானும் குற்றத்தை ஒத்துக் கொண்டார் சக்கரபாணி.

“ம்ம்… ஓகே, உங்களுக்கு அரவிந்தோட மரணத்துல யார் மேலயாவது சந்தேகம் இருக்கா….?”

“அரவிந்துக்கு கொஞ்சம் கெட்ட பழக்க வழக்கம் இருந்துச்சு…”

“கெட்ட பழக்க வழக்கம்னா, எந்த மாதிரி…?” அஜய் கேட்க தயக்கமாய் மாமனாரைப் பார்த்தான் கணேசமூர்த்தி.

“சொல்லுங்க மிஸ்டர் கணேசமூர்த்தி… என்ன பழக்கம்…?”

“அது..வந்து… அவனுக்கு போதைப் பழக்கம் இருந்துச்சு, அதுக்காக நிறைய பணம் செலவு பண்ணுவான்… மாமாக்கு இது தெரிஞ்சு எவ்வளவோ கண்டிச்சும் அவன் நிறுத்தலை, போதை மருந்து சப்ளை பண்ணறவங்க கூட அவனுக்கு கான்டாக்ட் இருக்கு…” என்றான்.

அஜய் யோசனையுடன் பார்க்க, “ஆனா, அரவிந்த் அந்த ஆக்சிடண்ட்க்குப் பிறகு மூணு மாசமா டிரக்ஸ் யூஸ் பண்ணலை…” என்றார் சக்கரபாணி குறுக்கிட்டு.

“ஓ… அரவிந்தோட பிரண்ட்ஸ் டீடைல்ஸ் எல்லாம் எங்களுக்கு வேணுமே…” என்றான் அஜய்.

“அவனோட சில பிரண்ட்ஸ் தான் எனக்குத் தெரியும், வந்தனாகிட்ட வாங்கித் தரேன்…” என்றார் சக்கரபாணி.

“ஓகே… உங்க ஒத்துழைப்புக்கு ரொம்ப நன்றி, வேற எதுவும் உங்களுக்கு சந்தேகமாத் தோணுச்சுன்னா எங்களுக்கு இன்பார்ம் பண்ணுங்க, நாங்க கிளம்பறோம்…” சொன்னவன் எழுந்து கொள்ள கிருஷ்ணாவும் எழுந்தார்.

அவர்கள் வெளியே செல்ல சக்கரபாணியின் மனைவி இருவரையும் முறைத்துவிட்டு, “மாமாவுக்கு மருமகன் தப்பாம அமைஞ்சிருக்கார்… சொத்தும், பதவி மோகமும் எப்பதான் உங்க கண்ணைத் திறக்கப் போகுதோ, இன்னும் என்னெல்லாம் தப்பு பண்ணி வச்சிருக்கிங்களோ, யாருக்குத் தெரியும்…” புலம்பிக் கொண்டே உள்ளே சென்றார்.

“என்ன மாப்பிள, சட்டுன்னு அரவிந்தை ஆக்சிடன்ட் பண்ண முயற்சி பண்ணதா அவங்ககிட்ட ஒத்துகிட்டிங்க…”

“வேறவழி இல்லை மாமா, இல்லேன்னா நாம பெரிய பிரச்சனைல மாட்டியிருப்போம்…” என்றான் கணேசமூர்த்தி.

“ம்ம்… நீங்க சொல்லறதும் சரிதான்…” என்றவர், “நான் கட்சி ஆபீசுக்குப் போயிட்டு வந்துடறேன்…” என்று கிளம்பினார்.

காரை எடுத்த கிருஷ்ணா அஜய் யோசனையுடன் உள்ளே அமர்ந்ததைக் கண்டு அவனிடம் கேட்டான்.

“என்ன சார், ஏதோ யோசனையா இருக்கீங்க…?”

“இந்த மாமனும், மருமகனும் சொல்லுறது லாஜிக்கா சரியா இருந்தாலும் அப்படி இல்லேன்னு மனசுக்குள்ள ஒரு சந்தேகப் பட்சி சொல்லுது…” என்றான்.

“அவங்க பொய் சொல்லுறாங்கன்னு நினைக்கறிங்களா சார்…” எனவும் மறுப்பாய் தலையாட்டிய அஜய்,

“ஏதோ பெரிய உண்மையை மறைக்க இந்த சின்ன உண்மையை சொல்லுறாங்கன்னு நினைக்கறேன்…” என்றான்.

“அப்படின்னா, இவங்களும் நம்ம சந்தேக வளையத்துக்குள்ள வர்றாங்களா சார்…?”

“ம்ம்… இவங்க ரெண்டு பேரோட ஒவ்வொரு நடவடிக்கையும் அவங்களுக்குத் தெரியாம வாட்ச் பண்ணி நமக்கு ரிப்போர்ட் கொடுக்க சொல்லிடுங்க…” என்றான் அஜய்.

“ஓகே, அடுத்து எங்கே…” என்றார் ஓரமாய் காரை நிறுத்தி.

“இங்க வரும்போது பாரன்சிக் லாபுக்கு போன் பண்ணப்ப ரெண்டு மணி நேரத்துல அந்த பாம்புக்கடி ரிப்போர்ட் ரெடி ஆகிரும்னு சொல்லி இருந்தாங்க, இப்போ ஆயிருக்கும், அதை வாங்கிடுவோம்…!”

“ஓகே சார்…” என்ற கிருஷ்ணா காரை வளைத்து நாப்பது நிமிடப் பயணத்தில் அந்த செங்காவி நிறக் கட்டிடத்துக்குள் நுழைந்து லாப் டெக்னீஷியன் டானியல் முன் அமர்ந்தனர்.

டானியல் அந்த ரிப்போர்ட்டை எடுத்துக் கொடுத்தபடியே அவர்களிடம் சொன்னார்.

“சார், இதயா இறந்தது பாம்புக்கடியாலன்னு நினைச்சோம், அது தப்பு… பாம்போட விஷத்தை முதல்ல உடம்புல செலுத்தி, அப்புறமா வலது கணுக்கால்ல பாம்போட பல்லை வச்சு அழுத்தி பாம்பு கொத்தின போல செயற்கையா காயத்தை உண்டு  பண்ணிருக்காங்க…”

“ஓ… விஷத்தை எப்படி செலுத்தி இருக்காங்க ஊசியா…?”

“இல்ல சார்…”

“தென் ஹவ்…”

“இந்த போட்டோவைப் பாருங்க சார்…” என்ற டானியல் தனது மேஜையின் இழுப்பறையைத் திறந்து ஒரு கவருக்குள் இருந்த போட்டோவை எடுத்து நீட்ட, வாங்கிய அஜயும் கிருஷ்ணாவும் பார்த்தனர்.

இதயாவின் உடல் குப்புற கிடக்க பின் கழுத்துப் பாகத்தை குளோசப்பில் போட்டோ எடுத்திருந்தனர். அந்த கழுத்துப் பாகத்தில் நான்கைந்து சிவப்புப் புள்ளிகள் தெரிந்தன.

“இதென்ன புள்ளிகள்…?”

“இந்தப் புள்ளி என்னன்னு முதல்ல புரியலை, அப்புறம் மைக்ராஸ்கோப் பண்ணிப் பார்த்தப்ப தான் ஒரு புள்ளிக்குள்ள சின்ன முள்முனை இருந்தது சார்…”

“வ்வாட்… முள் முனையா…?”

“எஸ் சார், ஏதோ முள்ளை வச்சு குத்தினதால இந்த சிவப்புப் புள்ளிகள் உண்டாகியிருக்கு…” டானியல் சொல்லவும் அதிர்ச்சியாய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“நீங்க சொல்லறதைப் பார்த்தா அந்த முள்முனை வழியா விஷத்தை உடம்புக்குள்ள செலுத்தி, அது ரத்தத்துல கலந்து மரணத்தை உண்டாக்கிருக்கு, ஆம் ஐ ரைட்…?”

“எஸ் சார்…!”

“ஓகே, இந்த ரிப்போர்ட்டையும், போட்டோவையும் நான் எடுத்துக்கறேன்…” அஜய் சொல்லும்போதே பான்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் அழைத்தது. எடுத்து அழைப்பது யாரென்று பார்க்க கமிஷனர் ஜெயராம். வேகமாய் எடுத்தவன் குரல் கொடுத்தான்.

“சார்…”

“மிஸ்டர் அஜய்! நீங்க எங்கிருந்தாலும் உடனே கிளம்பி என் ஆபீஸுக்கு வாங்க… ப்ளீஸ்..!” என்றவர் அழைப்பை துண்டிக்க அஜய் யோசனையுடன் எழுந்தான்.

Advertisement