Advertisement

 அத்தியாயம் – 14

மாதவரம் பொட்டானிக்கல் கார்டனின் பின்பக்கம் இருந்த வாட்டர்டேங்க் ஏரியா ஒரு சின்ன போலீஸ் வளையத்தால் சூழப்பட்டிருந்தது.

இதயா கண்கள் திறந்து ஆகாயத்தைப் பார்த்தபடி மல்லாந்து இறந்து கிடந்தாள். கடைவாயோரம் லேசாய் சிறிது நுரை தெரிய, மூக்கு, காது நுனிகள் மெலிதான நீல நிறத்துக்கு மாறத் தொடங்கியிருக்க, கீழ்வரிசைப் பல் கிட்டித்துப் போயிருந்தது. டாக்டர் ஸ்டீபன் ராஜ் அருகே இருந்து பரிசோதித்துக் கொண்டிருந்தார்.

கமிஷனர் ஜெயராம் தொப்பியைக் கழற்றிக் கையில் பிடித்துக் கொண்டு டாக்டரைப் பார்த்துக் கொண்டிருக்க அஜய், அருகே இருந்த மாதவரம் ஏரியா இன்ஸ்பெக்டர் சேது மாதவனிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

“சேது மாதவன்…! நீங்க ஸ்பாட்டுக்கு வந்ததுமே ‘சீன் ஆப் கிரைம்’ அப்சர்வ் பண்ணீங்களா…?”

“எஸ் சார், பாடி மேல இந்தக் கவர் மட்டும் கிடைச்சது…” என்றவர் நீட்டிய கவரை திறந்து பார்க்க கறுப்புப் பெயின்ட் அடிக்கப்பட்ட ஒரு ரோஜாவும் லெட்டரும் கிடைத்தது. அதை வெளியே எடுத்துப் பார்த்தான் அஜய்.

“VVOVbyRK நேசத்தின் நிழல் by அந்தகன்..” என எப்போதும் போல எழுதி வைக்கப்பட்ட லெட்டர். அதை ஒரு பெருமூச்சுடன் பார்த்துவிட்டு அருகிலிருந்த கிருஷ்ணாவிடம் கொடுத்துவிட்டு மாதவனிடம் திரும்பினான் அஜய்.

“பாடியை முதல்ல யார் பார்த்தது…?”

“கார்டனை மெயின்டெயின் பண்ணற வாட்ச்மேன் பழனிசாமி தண்ணி டேங்க்ல வாட்டர் லெவல் செக் பண்ணறதுக்காக இந்தப் பக்கம் வந்தப்ப பார்த்திருக்கார் சார்…” சேது மாதவன் சொல்லும்போதே டாக்டர் ஸ்டீபன்ராஜ் இதயாவின் பரிசோதனையை முடித்துக் கொண்டு அஜயிடம் வந்தார்.

“நோ டவுட் மிஸ்டர் அஜய்…! இந்தப் பொண்ணு இதயாவோட மரணத்துக்குக் காரணம் பாம்புக் கடிதான்… பாய்சன் ரொம்ப வேகமா மூளையோட நரம்பு மண்டலத்தைக் தாக்கினதால உடனடியா மரணம்…”

“ஸோ… பாம்பு கடிச்சுதான் இதயா இறந்து போயிருக்கா…?”

“ஆமா சார்…”

“இதயா உடம்புல எந்த பாகத்தில் பாம்போட பல் பதிஞ்ச அடையாளம் இருக்கு டாக்டர்…?”

“வலது கணுக்கால் கிட்ட பாம்பு பல்லு பட்டத்துக்கான அடையாளம் இருக்கு…”

“உடம்போட மத்த இடங்கள்ல ஏதாச்சும் காயம், ரேப் அட்டம்ப்ட் இந்த மாதிரி தென்பட்டுச்சா…?”

“அதெல்லாம் எதுவுமே இல்லை சார்…!”

“சம்பவம் நடந்து எவ்வளவு நேரமாகியிருக்கும்…?’

“சுமார் ரெண்டுல இருந்து மூணு மணி நேரத்துக்குள்ள இருக்கலாம்…” அஜய் பக்கத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் சேது மாதவனிடம் திரும்பினான்.

“சேது மாதவன்…!”

“சார்…”

“அந்த வாட்ச்மேன் எங்கே…?”

“அதோ, அங்கே இருக்கான் சார்…”

சொன்னவர் காக்கி யூனிபார்மில் கலவர முகத்தோடு சற்றுத் தள்ளி ஓரமாய் நின்ற பழனிசாமியை நோக்கிக் கைகாட்ட வேகமாய் ஓடி வந்தான்.

“ஐயா…!” ஓடிவந்த வாட்ச்மேன் மிரண்ட பார்வையுடன் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு பார்க்க அஜய் கூர்மையாய் அவனைப் பார்த்தபடி பேச்சைத் தொடங்கினான்.

“உன் பேரென்ன…?”

“பழனிசாமிங்க ஐயா…”

“இந்த இடம் பூராவும் உன் கண்ட்ரோல்ல தான இருக்கு…?”

“ஆமாங்கய்யா…”

“ம்ம், மூணு மணி நேரத்துக்கு முன்னாடிதான் சம்பவம் நடந்திருக்கு… இந்த இடம் உன் கண்ட்ரோல்ல இருக்கும் போது, இங்க யார் யார் வந்துட்டுப் போனாங்கன்னு உனக்குத் தெரிஞ்சிருக்கணுமே, இங்க CCTV இருக்கா…?”

“CCTV இல்லீங்க அய்யா…! நான் இருபத்து நாலு மணி நேரமும் இங்க இருக்க மாட்டேன்… மதியம் மூணு மணிக்கு வந்துட்டு நைட்டு ஒன்பது மணி வரைக்கும் இருப்பேன்… இன்னைக்கும் மூணு மணிக்கு டியூட்டிக்கு வந்ததும் தண்ணித்தொட்டில தண்ணி செக் பண்ணிட்டு அப்படியே யூரின் போக பின்னாடி உள்ள புதர்ப்பக்கம் போனேன்… அப்பதான் இந்தப் பொண்ணு செத்துக் கிடக்கறதைப் பார்த்து அதிர்ந்து போயி உடனே போலீஸுக்கு போன் பண்ணி விபரத்தை சொன்னேன்யா…” வாட்ச்மேன் கண்கள் கலங்க சொன்னான்.

“சரி, இந்த ரெண்டு மூணு நாளா ஏதாச்சும் சந்தேகப்படற போல விஷயமோ, நபரோ கண்ணுல பட்டாங்களா…?”

“அப்படி ஒண்ணும் இல்லங்கய்யா…”

“சரி, இனியாச்சும் கவனமா இரு, சந்தேகப்படற போல எந்த விஷயம் கண்ணுல பட்டாலும் உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்பார்ம் பண்ணனும்…”

“சரிங்கய்யா…”

“பாரன்சிக் பீப்பிள் வேலையை முடிச்சுட்டா பாடியை போஸ்ட்மார்ட்டம்க்கு அனுப்பிடுங்க…” சேது மாதவனிடம் சொல்லிவிட்டு கமிஷனரிடம் வந்தான் அஜய்.

“அஜய், வாழ வேண்டிய வயசுல சின்னப் பசங்களை இப்படி கொன்னு வீசறானே… கொஞ்சம் கூட மனசுல இரக்கமே இல்லாத அந்தக் கொலைகாரன் யாருன்னு நம்மால எதையுமே கண்டு பிடிக்க முடியலைன்னு நினைக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு…” கமிஷனரின் வார்த்தையில் உண்மையான வருத்தம் தெரிந்தது.

“ம்ம்… எவ்வளவு விசாரிச்சாலும் அவன் யாருன்னு நெருங்க முடியாம எட்டி நின்னு விளையாட்டு காட்டறான்… இந்தக் கொலை கூட கிரைம் நாவல்ல வர்ற கதையை வச்சு தான் பண்ணிருக்கான் சார்… இந்த சம்பவம் ‘விஷ்ணு விஷால் ஒரு விடுகதை’ ங்கற RK நாவல்ல வருதாம்…”

“ம்ம்… இவ்ளோ நாளா நம்மால கண்டு பிடிக்க முடிஞ்ச ஒரே விஷயம் அது மட்டும் தான்… கிரைம் நாவலைப் படிச்சிட்டு கொலை பண்ணறான்னு சொல்லறோம்… இந்த ஒரு விஷயத்தை வச்சுட்டு எப்படி அவனை நெருங்க முடியும்… எல்லா இடத்துலயும் கிரைம் நாவல் படிக்கிறவன் இருப்பான், யாருன்னு கேக்க முடியும், என்னவோ, ஒண்ணும் புரியல… நீங்க இங்க முடிச்சிட்டு வாங்க, நான் ஆபீஸுக்குப் போறேன்…” என்றவர் தளர்வாய் தனது காருக்கு நடந்தார்.

அங்கே வேலை முடிந்ததும் இதயாவின் உடல் ஆம்புலன்ஸில் ஜீ ஹெச்சுக்கு கொண்டு செல்லப்பட்டது.

*****************************

“ஏய் ஓடாத, நில்லு குட்டிம்மா…” சொல்லிக் கொண்டே இரண்டு வயது மகளின் பின்னில் புன்னகையுடன் துரத்திக் கொண்டு ஓடினாள் ஆனந்தி. கையில் ஒரு பவுலில் குழந்தைக்கான சாதம் இருந்தது. அவளை உண்ண வைக்க முடியாமல் திணறினாள்.

சாப்பிடாமல் ஏமாற்றி ஓடும் மகளை எட்டிப் பிடித்தவள் அள்ளி இடுப்பில் வைத்துக் கொண்டாள்.

“ஆராதனா குட்டி, இப்படி எல்லாம் பண்ணலாமா பாப்பா…? நல்லா சாப்பிட்டா தான பெரிய பொண்ணாக முடியும்…” கேட்டுக் கொண்டே அவள் வாயில் உணவை வைக்க முகம் சுளித்து துப்பினாள் ஆராதனா.

“மம்மு நாணா…” உதட்டைப் பிதுக்கிய குழந்தையைப் பாவமாய் பார்த்தவள், “என் செல்லக் குட்டில்ல, கொஞ்சூண்டு சாப்பிடும்மா…” ஆனந்தி கெஞ்சிக் கொண்டிருக்க காசி புன்னகையுடன் உள்ளே வந்தான்.

“என்ன தாயி… பாப்பாக்கு சோறூட்ட நீ ரெண்டாளு சாப்பாடு சாப்பிடனும் போலருக்கு…”

“பாருங்க காசிண்ணா, வாயத் திறக்காம அடம் பிடிக்கிறா…” என மகளை செல்லமாய் கன்னத்தில் கிள்ள புன்னகைத்த காசி அவர்களிடம் வந்தான்.

“ஆருக்குட்டி, மாமா மேல ஆனை சவாரி வரீங்களா…”

“ஐய்… ஆன…” என்றவள் வேகமாய் தலையாட்டி அவனிடம் தாவினாள்.

“ஆருக்குட்டி ஆனை மேல சவாரி போயிட்டே மம்மு சாப்பிடுவாங்கலாம், அப்படிதானே…” எனக் கேட்க பலமாய் தலையாட்டினாள் குழந்தை. அவர்களை ஆனந்தி புன்னகையோடு நோக்கி நிற்க காசி நிலத்தில் கையை ஊன்றி ஆனையாய் மாற ஆராதனா பாகனாய் அமர்ந்தாள்.

அவளை சுமந்து ஹாலில் அங்குமிங்கும் நகர்ந்து காசி விளையாட்டுக் காட்ட ஆனந்தி அப்படியே மகளுக்கு உணவூட்டி முடித்தாள்.

“அப்பா, இந்தக் குட்டியை சாப்பிட வைக்கிறது எவ்ளோ பெரிய வேலையா இருக்கு… நீங்க மட்டும் இப்ப வரலேன்னா இன்னும் சாப்பிட்டிருக்க மாட்டா…” சொல்லிக் கொண்டே மகளின் வாயைத் துடைத்து விட்டு அவனிடம் கொண்டு வந்து நீட்டினாள்.

“காசிண்ணா, இந்தா… நீயே உன் மருமகளைப் பிடி… எனக்கு கொஞ்சம் ஆபீஸ் வேலை இருக்கு, பாலா வர்றதுக்குள்ள அதெல்லாம் முடிக்கணும்…” சொன்னவள் அறைக்கு செல்ல காசி ஆராதனாவை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.

பிரசவத்திற்குப் பிறகு ஆனந்தி ஆபீஸ் செல்லுவதில்லை. குழந்தை பள்ளிக்கு செல்லும் வரை அம்மாவின் அருகாமை கிடைக்க வேண்டும், அதனால் அவளுடன் வீட்டில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டுமென்ற பாலாஜியின் அன்புக்(?) கட்டளையை மீற முடியாமல் வீட்டில் தான் இருந்தாள்.

மாதம் ஒரு முறை கம்பெனி அக்கவுண்ட்ஸ் மட்டும் இவள் பரிசோதிப்பதற்காய் வீட்டுக்கு கொண்டு வந்து தருவான். பாலாஜிக்கு மதிய உணவு கொடுப்பதற்காய் ஆபீஸுக்கு செல்லும் காசியின் காதில் சில வதந்திகள் அவனைப் பற்றி கேட்கத் தொடங்க முதலில் அதிர்ந்தாலும் பாலாஜி அப்படி எல்லாம் ஆனந்திக்கு துரோகம் செய்ய மாட்டான் என்ற நம்பிக்கையில் காசி அதைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஒருநாள் ஆபீஸ் முடிந்து எல்லாரும் கிளம்பியதும் பாலாஜி அங்கிருக்க, ஒரு பைலை மதியம் கொடுக்க மறந்த ஆனந்தி மாலையில் காசியிடம் ஆபீஸுக்கு கொடுத்துவிட யாருமற்ற தைரியத்தில் பாலாஜி தனது அறையில் மடியில் தேன்மொழியை கொஞ்சியபடி அமர்ந்திருக்க, சிறிது திறந்திருந்த கதவின் வழியே அதைக் கண்டுவிட்ட காசி அதிர்ச்சியில் மனம் நொறுங்கிப் போனான்.

வந்த சுவடு தெரியாமல் அப்படியே திரும்பியவன் ஆனந்தியிடம் இதைப் பற்றிக் கூற அதிர்ந்து போனாள். சொன்னது வேறு யாராக இருந்தாலும் அதை நம்பி இருப்பாளோ, என்னவோ காசி என்பதால் அவன் சொன்ன வார்த்தைகளை மாற்றி யோசிக்க அவளால் முடியவில்லை.

“தாயி… வேற யாரு சொல்லி இருந்தாலும் நான் இதை நம்பி இருக்க மாட்டேன், ஆனா, என் கண்ணால பார்த்த ஒரு விஷயத்தை நம்பாம இருக்க முடியலை… உனக்கு துரோகம் பண்ண அவருக்கு எப்படி மனசு வந்துச்சோ தெரியல, இவங்க ரெண்டு பேரையும் இணைச்சு ரொம்ப நாளா ஆபீசுல ஒரு பேச்சு ஓடிட்டு இருக்கு, நான்தான் நம்பாம உன்கிட்ட அதைப் பத்தி சொல்லாம விட்டுட்டேன்… எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு அவர் உன் புருஷனா மட்டும் இல்லேன்னா பார்த்த இடத்திலேயே வெட்டிப் போட்டுட்டு வந்திருப்பேன்…” கண்கள் கலங்க கோபத்தோடு சொன்ன காசியை அதிர்ச்சி விலகாத விழிகளோடு ஏறிட்டாள் ஆனந்தி.

மனதுக்குள் பாலாஜியின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் வந்து போக, அவனது பேச்சும் அக்கறையும், செலவுகளும் அவன் தன்னை பிளான் பண்ணி ஏமாற்றிக் கொண்டிருப்பது நன்றாகவே புரிந்தது. கட்டிலில் கண் மூடி உறங்கும் மகளின் மீது கண் பதிய, உள்ளுக்குள் உடைந்து போனவள் அப்படியே அமர்ந்தாள். ஏமாற்றத்தின் வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்கள் கண்ணீரை விடாமல் சொரிந்தது.

“தாயி…” வேதனையுடன் அழைத்த காசியை ஏறிட்டவள்,

“அண்ணா, எனக்காக ஒரு உதவி பண்ணறீங்களா…?” என,

“என்ன தாயி, இந்த அண்ணன் என்ன பண்ணனும்னு சொல்லு…” என்றான் காசி கண்ணீருடன்.

“நீங்க பார்த்ததை யாரு கிட்டயும் சொல்லக் கூடாது, நமக்கு இந்த விஷயம் தெரியும்னு பாலாகிட்ட காட்டிக்கக் கூடாது…”

“நாம அவருகிட்ட இதைக் கேக்காம இருந்தா அவர் இன்னும் இப்படியே தான பண்ணிட்டு இருப்பார்…”

“பண்ணட்டும்… பெத்தவங்க இல்லாத எனக்கு, இனி புருஷன் தான் எல்லாம்னு நினைச்சிருந்த எனக்கு… துரோகம் பண்ண எப்ப அவருக்கு மனசு வந்துச்சோ, அப்பவே அவர் என்னை விட்டு ரொம்ப தூரம் போயிட்டார்… ஒரு பெண் குழந்தையைப் பெத்து வச்சிருக்கேன், அதைப் பத்தியும் அவர் யோசிக்கலை… இனி என் மனசுல அவருக்கு இடமில்லை…” பெருமூச்சுடன் நிறுத்தியவள் தொடர்ந்தாள்.

“ஆபீஸுல பாவம் பார்த்து வேலை போட்டுக் கொடுத்த பாவத்துக்கு என் வாழ்க்கைலயும் பங்கு போட்டுக்க அந்த தேன்மொழி நினைச்சிருக்கா… நான் அன்புக்கு மயங்குவேன் தான், ஆனா ஏமாளி இல்லை, இதுக்கு சரியான பதிலடியை அவங்களுக்கு கொடுக்கணும்…” சொன்னவளின் முகத்தில் ஒரு தீர்மானம் தெரிந்தது.

ஆனந்தியும், குழந்தை ஆராதனாவும் இருக்கும் பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவைக் கண்ணில் கண்ணீருடன் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த காசி, போன் அலறும் சத்தத்தில் பழைய நினைவுகளில் இருந்து மீண்டார்.

வருடங்கள் பல கடந்து போனதில் மனமும், உடலும் தளர்ந்திருக்க அறுபதுகளில் இருந்தவர் எழுந்து போனை எடுத்து காதுக்குக் கொடுத்தார்.

“ஹலோ…”

“ஹலோ, சந்த்ரா ஆட்டோ சர்வீஸ்ல இருந்து பேசறோம்… சர்வீசுக்கு விட்டிருந்த உங்களோட டிசைர் கார் ரெடியா இருக்கு, வந்து எடுத்துக்கலாம்…”

“ம்ம் எடுத்துக்கறேன்…” என்று அழைப்பைத் துண்டித்தார்.

Advertisement