Advertisement

அத்தியாயம் – 13

ஆத்ரேயா எக்ஸ்போர்ட்ஸ் பி. லிமிடட் காலை நேர சுறுசுறுப்புடன் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.

தனது அறையில் ஆளுயர நாற்காலியில் சாய்ந்து ஒரு பைலை மும்முரமாய் வாசித்துக் கொண்டிருந்த ஆத்ரேயன், “மே ஐ கமின் சார்…” என்ற குரலில் நிமிர்ந்தான்.

கண்ணாடிக் கதவுக்கு வெளியே பிரசன்னா நிற்பதைக் கண்டவன், “வாங்க பிரசன்னா…” என்றதோடு தானே நாற்காலியிலிருந்து எழுந்து கதவை நோக்கி நடந்தான்.

ஒரு வாரத்திற்குப் பிறகு இன்று தான் பிரசன்னா ஆபீஸ் வந்திருந்தான். மழிக்கப்படாத தாடியும், சோகமுமாய் ஆளே மாறிப் போயிருந்தவனின் கையை ஆறுதலாய் பற்றிக் கொண்டவன், “உக்காருங்க பிரசன்னா…” என்றான்.

தளர்வாய் நாற்காலியில் அமர்ந்தான் பிரசன்னா.

தனது நாற்காலியில் அமர்ந்த ஆத்ரேயன் கேட்டான்.

“சாரி, எப்படி இருக்கீங்கன்னு கேக்க முடியலை பிரசன்னா, உங்களைப் பார்த்தாலே நல்லா இல்லேன்னு தெரியுது… உங்க டாட்டர் பத்தி ஏதாச்சும் விவரம் கிடைச்சுதா, போலீஸ் பீப்பிள் என்ன சொல்லுறாங்க…?” என்றான்.

“விசாரணைல எந்த முன்னேற்றமும் இல்லை சார்… என் பொண்ணைப் பத்தி இன்னும் ஒரு விவரமும் கிடைக்கலை, அவங்களும் விசாரிச்சிட்டு தான் இருக்காங்க… ஆனா உபயோகமா எந்த ஆதாரமும் கிடைக்கலை…” சொல்லும் போதே அவன் கண்கள் கலங்கின.

“ம்ம்… எனக்கு என்ன சொல்லறதுன்னு தெரியலை, மனம் தளராம நம்பிக்கையோட இருங்க…”

“எப்படி சார்… எப்ப வர்ஷா மகளாப் பிறந்தாலோ அப்ப இருந்து எங்க எல்லா செயல்களுமே அவளைச் சுத்தி தான் இருந்துச்சு… காலைல கண் விழிக்கிறது முதல் ராத்திரி படுக்கப் போறது வரைக்கும் அவளைப் பத்தின நினைவுகள் தான் எங்களை இயங்க வச்சுது… அவ இல்லாம எங்களுக்கு வாழ்க்கையே இல்லை… சட்டுன்னு ஒரு நாள் அவ காணாமப் போயிட்டான்னு இன்னும் நம்பவே முடியலை… என் ஒயிப் ஒருவாரமா சரியா சாப்பிடறது இல்ல, தூங்கறது இல்ல… உயிரோட இருக்கா, அவ்ளோதான்…” என்றவனின் குரல் உடைந்து கன்னத்தில் நீர் வழிந்தது.

“ம்ம்… நீங்க இன்னும் கொஞ்ச நாள் லீவு போட்டு அவங்களோட இருக்கலாமே…”

“வீட்டுல இருந்தா பைத்தியமே பிடிச்சிரும் போலருக்கு சார்… அதான் ஒயிபைப் பார்த்துக்க அவ அம்மா வந்துட்டதால நான் கிளம்பி ஆபீஸ் வந்துட்டேன்…”

“ம்ம், உங்க நிலமை புரியுது பிரசன்னா… ஏன் இப்படில்லாம் நடக்குதுன்னே தெரியலை, பட் தைரியமா இருங்க…” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆத்ரேயனின் மேசை மீதிருந்த இன்டர்காம் செல்லமாய் கூவியது.

“சார், உங்களைப் பார்க்க போலீஸ் டிபார்ட்மென்ட்ல இருந்து ரெண்டு பேர் வந்திருக்காங்க…”

“என்னைப் பார்க்கவா…” என்றான் யோசனையுடன்.

“எஸ் சார்… மிஸ்டர். பிரசன்னாவையும் பார்க்கணும்னு சொன்னாங்க சார்…”

“என்ன விஷயம்னு கேட்டீங்களா…”

“வர்ஷா மிஸ்ஸிங் பத்தி சில டீடைல்ஸ் கேக்கனும்னு சொல்லறாங்க சார்…”

“ஓகே, என் ரூமுக்கு அனுப்புங்க…” சொன்னவன் ரிசீவரை வைத்துவிட்டு பிரசன்னாவை ஏறிட்டான்.

“போலீஸ் உங்க டாட்டரைப் பத்தி நம்மகிட்ட விசாரிக்க வந்திருக்காங்க…” என்றான்.

அடுத்த சில நிமிடங்களில் மெதுவாய் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க கண்ணாடிக் கதவுக்கு வெளியே அஜயும், கிருஷ்ணாவும் நின்றிருந்தனர்.

“ப்ளீஸ் கெட் இன்…”

கதவைத் திறந்து கொண்டு இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.

“ஹலோ மிஸ்டர் ஆத்ரேயன், ஐயாம் அஜய்… கிரைம் பிராஞ்ச் ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் ஆபிசர், ஹீ ஈஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா…” என்றான் அஜய்.

“ஹலோ சார்…” சன்னமாய் புன்னகைத்தான் ஆத்ரேயன்.

“ஹலோ பிரசன்னா, ஆக்சுவலா உங்களை மீட் பண்ண உங்க வீட்டுக்கு வரலாம்னு தான் இருந்தோம்… லான்ட்லைன்க்கு கால் பண்ணி கேட்டப்ப நீங்க ஆபீஸ் போயிட்டதா சொன்னாங்க… சரி, ஆன்திவே ல உங்களை இங்கயே மீட் பண்ணிக்கலாம்னு வந்துட்டோம்…”

“ஓகே சார்… வர்ஷாவைப் பத்தி ஏதாச்சும் டீடைல்ஸ் கிடைச்சிருக்கா…” என்றான் பிரசன்னா ஆர்வத்துடன்.

“விசாரணை போயிட்டு தான் இருக்கு, பட் இன்னும் எந்தத் தகவலும் உபயோகமா கிடைக்கலை…”

“பாவம் சார், டாட்டர் மிஸ்ஸிங்ல பிரசன்னா ரொம்ப மனசொடிஞ்சு போயிருக்கார்… என்கிட்ட நீங்க ஏதாச்சும் கேக்கணுமா…?” என்றான் ஆத்ரேயன் வாட்சைப் பார்த்தபடி.

“எஸ், ஜஸ்ட் ஸ்மால் என்கொயரி…”

“கொஞ்சம் சீக்கிரம் கேட்டுட்டா பரவால்லை, எனக்கு ஒரு மீட்டிங் அட்டன்ட் பண்ண கிளம்பனும்…”

“ஓகே, வர்ஷா காணாமப் போறதுக்கு முன்னாடி நடந்த பர்த்டே பங்க்ஷன்ல நீங்களும் கலந்துகிட்டீங்க இல்லியா…”

“எஸ், நானும் அந்தப் பார்ட்டிக்குப் போயிருந்தேன்…”

“அப்ப உங்க கண்ணுல ஏதாச்சும் வித்தியாசமான சம்பவங்கள், மனிதர்கள் இப்படி பட்டுதா…?”

“அப்படி எதுவும் இல்லை சார்…”

“பார்ட்டில நீங்க வர்ஷாக்கு ஒரு செல்போன் கிப்ட் பண்ணிருக்கீங்க, ஆம் ஐ ரைட்…?”

“எஸ், கிப்ட் பண்ணேன்…” என்றான் ஆத்ரேயன்.

“அந்த போனோட IMEI நம்பர் கிடைச்சா பரவால்லை, அந்த போனுக்கான பில் எதுவும் வச்சிருக்கீங்களா…?”

“பில்…” என யோசித்தவன், “பில் இருக்க வாய்ப்பில்லை… நான் பெங்களூர் போனப்ப ரெண்டு மொபைல் வாங்கிருந்தேன்… அதுல ஒண்ணு என் அங்கிள் ஒருத்தர் யூஸ் பண்ணறார், இன்னொன்னு சும்மா தான் அப்படியே இருந்துச்சு… சரி, வர்ஷாக்கு பர்த்டேன்னு சொல்லவும் கிப்ட் பண்ணலாமேன்னு அதைக் கொடுத்தேன்…” என்றான்.

“ஓகே…” என்ற அஜய் பிரசன்னாவிடம் திரும்பினான்.

“மிஸ்டர் பிரசன்னா, உங்க டாட்டர் டென்னிஸ் கிளப்ல இருந்து ஒரு வெள்ளை கார்ல ஏறிப் போனதா சொன்ன இதயாவும் இப்ப மிஸ்ஸிங், தெரியுமா…?” என்றான்.

“ஓ காட், அந்தப் பொண்ணுமா…? எப்படி சார்…” பதட்டமாய் கேட்டான் பிரசன்னா.

“இதயாவோட வீட்டுக்கு ஒரு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அனுப்பிட்டு தைரியமா அந்தப் பொண்ணையும் கடத்திருக்கான்… இந்தக் கடத்தல்லயும் ஒரு கார் சம்மந்தப்பட்டிருக்கு, வெள்ளை நிற டிசைர் கார்… CCTV ல கிடைச்ச அந்த கார் புட்டேஜ் வச்சு நம்பர் டிரேஸ் பண்ணிப் பார்த்தோம், பட் நோ யூஸ்… அதுவும் Fake…” என்ற அஜய்,

“கிருஷ்ணா, அந்த போஸ்ட் மேன் கெட்டப்புல வந்த ஆளோட இமேஜ் இவங்களுக்கு காட்டுங்க…” என்றான். அவர் அந்த கிளிப்பிங்க்சை எடுத்து பிரசன்னாவிடம் காட்டினான்.

முகம் முழுமையாய் தெரியாததால் உன்னிப்பாய் கவனித்த பிரசன்னா, “எங்கயோ பார்த்த போல இருக்கு, பட் யாருன்னு சரியாத் தெரியலையே சார்…” என்றான்.

“மிஸ்டர் ஆத்ரேயன், நீங்களும் பாருங்க… வர்ஷாவோட பர்த்டே பார்ட்டில அவங்க பிஸியா இருந்தாலும் நீங்க ப்ரீயா வர்றவங்க போறவங்களைப் பார்த்திட்டு இருந்திருக்கலாம்… இவனை அந்த சரவுண்டிங்லயோ, இல்ல வேற எங்காவதுமோ பார்த்திருக்கீங்களா…” அஜய் கேட்க கிருஷ்ணா அவனிடம் போட்டோவைக் காட்டினான்.

அதில் பார்வையைப் பதித்தவன், “இல்ல சார், நான் பார்த்ததில்லை…” என்று சொல்ல அஜய் எழுந்து கொண்டான்.

“ஓகே, தேங்க்ஸ் பார் யுவர் கோவாப்பரேஷன் மிஸ்டர் ஆத்ரேயன்… அந்த மொபைல் பில் கிடைக்குமான்னு கொஞ்சம் தேடிப் பாருங்க, இப்ப நாங்க கிளம்பறோம்…”

“ஷ்யூர் சார்…” என்ற ஆத்ரேயனும் எழுந்து அவர்களுக்கு கை குலுக்கினான்.

“மிஸ்டர் பிரசன்னா, பர்த்டே பார்ட்டில யாரெல்லாம் கலந்துகிட்டாங்கன்னு விவரம் கிடைச்சா விசாரிக்க வசதியா இருக்கும்… எனக்கு அந்த லிஸ்ட் வித் புல் டீடைல்ஸ் அனுப்புங்க, ஏதாச்சும் பார்ட்டி வீடியோஸ் கிடைச்சாலும் ரொம்ப ஹெல்ப்புல்…” என்றான் அஜய்.

“அனுப்பறேன் சார்…” என்ற பிரசன்னா ஆத்ரேயனிடம் தலையாட்டிவிட்டு அவர்களுடன் நடந்தான். சுற்றிலும் பார்வையை ஓட்டிக் கொண்டே லிப்டுக்குள் நுழைந்தனர்.

“இந்தக் கம்பெனியோட நேச்சர் ஆப் வொர்க் என்ன…?”

“எல்லா விதமான இன்னர், ரெடிமேட் டிரஸ்ஸஸ் மானுபாக்சரிங் அண்ட் சேல்ஸ்… மேக்ஸிமம் எக்ஸ்போர்ட் ஆர்டர்ஸ் பண்ணிட்டிருக்கோம் சார்…”

“உங்க பாஸ் ஆத்ரேயன் ஆள் எப்படி…?” என்றதும் பிரசன்னா யோசனையுடன் அஜயை நோக்கினான்.

“ச..சார், ஏன் அப்படி கேக்கறிங்க…?”

“ஜஸ்ட் ஒரு கியூரியாசிட்டி… இந்த சின்ன வயசுல தனக்குன்னு ஒரு பெரிய அடையாளத்தை உருவாக்கி இத்தனை பெரிய கம்பெனியைப் பொறுப்பா பார்த்துக்கறாரே, அதான் கேட்டேன்…”

“பாஸ் ரொம்ப நல்ல டைப் சார்… வேலை சரியா நடக்கலேன்னா மட்டும் தான் டென்ஷன் ஆவார், மத்தபடி கூலான மனுஷன்…”

“ஓ… மேரேஜ் ஆயிடுச்சா, அவரோட பாமிலி பாக்கிரவுண்ட்…”

“அன்மேரீட் சார்… பாஸ்க்கு அப்பா, அம்மா சின்ன வயசுலயே இறந்துட்டாங்க, ஒரு அங்கிள் தான் இவர் சொத்துக்கு கார்டியனா இருந்து இவரைப் பாதுகாத்து வளர்த்து ஆளாக்கி இருக்கார்…” என்றான் பிரசன்னா.

“ஹோ, இன்ட்ரஸ்டிங், இவர் வீடு எங்கிருக்கு…”

“பெசன்ட் நகர்ல கேகே நகர் சார்…”

“ம்ம்… அப்புறம் உங்ககிட்ட இன்னொரு விஷயம் கேக்கணும்… உங்களுக்குத் தெரிஞ்சு யாராச்சும் கிரைம் நாவல்ஸ் நிறைய படிக்கிறவங்க இருக்காங்களா…?”

“எங்க ஆபீஸ்ல நிறைய பேர் கிரைம் நாவல் பான்ஸ் தான், நான்கூட நிறைய படிப்பேன்… எதுக்கு கேக்கறிங்க சார்…”

“ஓ… அதுல RK நாவல்ஸ் யாரெல்லாம் விரும்பிப் படிப்பாங்கன்னு தெரியுமா…?”

“என்ன சார் இப்படி கேக்கறிங்க, RK தான் கிரைம் நாவல்ஸ் கிங், கிரைம் ஸ்டோரீஸ் விரும்புறவங்க அவர் கதை படிக்காம எப்படி…” என்றான் பிரசன்னா.

அவர்கள் ஆபீஸ் வெளிவாசலில் நின்று பேசிக் கொண்டிருக்க ஆத்ரேயன் கண்ணில் கூலருடன் வெளியே கிளம்பத் தயாராய் அங்கே வந்தான்.

“ஓகே சார், நான் கிளம்பறேன்… பிரசன்னா நீங்க கொஞ்சநாள் லீவு எடுத்திட்டு மெதுவா ஆபீஸ் வாங்க…” சொல்லிக் கொண்டே தனது பிளாக் ஸ்கோடாவை நோக்கி சென்றான். கார் கேட்டை நோக்கி செல்ல வண்டியின் பின்னிலிருந்த நம்பர் பிளேட்டை எதேச்சையாய் பார்த்த அஜய் திகைத்தான்.

*********************

அண்ணாநகரில் ஒரு ரோட்டோர பெட்டிக்கடையின் முன்பு விதவித வண்ணங்களில் புத்தகங்கள் தொங்க விடப் பட்டிருக்க கையிலிருந்த கவரிலிருந்து கிரைம் நாவல்களை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார் அறுபதுகளை எட்டிப் பிடித்தாலும் கம்பீரம் குலையாத அந்த மனிதர்.

கடைக்காரர் வாய் நிறைய புன்னகையுடன், “நீங்க கேட்ட RK எழுதின கிரைம் நாவல்ஸ் பதினஞ்சு தான் இப்போதைக்கு கிடைச்சது சார்… இன்னும் சொல்லி வச்சிருக்கேன், அடுத்த வாரத்துக்குள்ள வாங்கி வைக்கிறேன்…” என்றார்.

“இதுக்கு எவ்ளோ ஆச்சு…?”

“இதெல்லாம் புது புக்கு இல்லையே சார்… உங்களுக்காக பழைய புக் வாங்கற கடைல தேடிப் பிடிச்சு வாங்கிட்டு வந்தேன், நீங்களா எவ்ளோ கொடுத்தாலும் சந்தோஷம் தான்…” கடைக்காரர் வாடிக்கையாளர் நீட்டிய ஐநூறு ரூபாய் தாளைக் கண்டதும் வாயெல்லாம் பல்லாகினார்.

“வச்சுக்கங்க… அடுத்த வாரம் வரும்போது இன்னும் நிறைய புக்ஸ் இருக்கணும்…” சொல்லிக் கொண்டே பணத்தைக் கொடுத்துவிட்டு வெள்ளை நிற டிசைரில் அமர்ந்து காரைக் கிளப்பினார் அந்த அறுபதுகளின் நாயகன்.

*******************

“கிருஷ்ணா, இதயா கடத்தப்பட்ட ஒயிட் டிசைர் கார்ல இருந்த Fake ரெஜிஸ்டிரேஷன் நம்பரும் அந்த ஆத்ரேயன் காரோட நம்பரும் ஒரே போல இருக்கே, கவனிச்சிங்களா…”

கிருஷ்ணா காரை செலுத்திக் கொண்டே அஜய் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னார்.

“ஆமா சார்… எனக்கும் அந்த நம்பரைப் பார்த்ததும் அதான் தோணுச்சு, ஆனா சீரியல் நம்பர்ல மட்டும் கொஞ்சம் வித்தியாசம்…” என்றார்.

“எஸ்… ஒயிட் டிசைர்ல இருந்தது TN-01-BL-3055, இங்கே அந்த ஆத்ரேயனோட பிளாக் ஸ்கோடா ரெஜிஸ்டிரேஷன் நம்பர் TN-07-LB-3055, எங்கயோ லிங்க் ஆகற பீல் வருதே…”

“ஒருவேளை, இது எதேச்சையா அமைஞ்சிருக்குமோ சார்…”

“இருக்கலாம்… அப்படி இல்லாம Fake நம்பர் யோசிக்கும்போது சட்டுன்னு மனசுல பதிஞ்ச ஒரு நம்பரை வச்சிருந்தா… நாம தேடிட்டு இருக்க அந்தகன் ஒருவேளை இவங்களை சுத்தி இருக்கிற யாரோ ஒருத்தனா இருந்தா…”

“ம்ம்ம், வாய்ப்பிருக்கு சார்…” என்றார் கிருஷ்ணா.

“ஸோ…”

“புரியுது சார்… எதுக்கும் இந்த ஆத்ரேயன் மேல ஒரு கண்ணு வைக்கிறது நல்லதுன்னு சொல்ல வரீங்க…”

“எஸ்… அந்த ஆத்ரேயனோட பாக்கிரவுண்டு, பிரசன்னாவோட ஆபீஸ், ரிலேஷன்ஸ், பிரண்ட்ஸ்ல அவருக்கு யாரு ரொம்ப குளோஸ்னு பார்த்து அவங்கள்ளயும் சந்தேக வட்டத்துக்குள்ள யாரெல்லாம் வராங்கன்னு பார்த்து வாட்ச் பண்ண ஏற்பாடு பண்ணணும்…”

“ஓகே சார், அப்ப நம்ம சந்தேக வட்டத்துக்குள்ள வர்ற முதல் ஆள் இந்த ஆத்ரேயனா…?”

“அப்படி சொல்ல முடியாது, நமக்கான துருப்புச் சீட்டு எந்தப் பக்கத்துல இருந்தும் கிடைக்கலாம், அதுக்கு நாம தொடர்ந்து வாட்ச் பண்ணறது நல்லது…”

“ம்ம்… ஓகே சார்…”

“கோகுல் கிட்ட சொல்லி ஆத்ரேயன் பத்தின புல் டீடைல்ஸ் கலக்ட் பண்ண சொல்லுங்க… பட், அவனுக்கு எந்த சந்தேகமும் வந்துடாம வாட்ச் பண்ணனும்…”

“அதெல்லாம் கோகுல் பார்த்துப்பார் சார்… உடனே கால் பண்ணி சொல்லிடறேன்…” என்றவர் கோகுலை அழைத்து விவரத்தை சொல்லிவிட்டு வண்டியை எடுத்தார்.

“அடுத்து எங்க போகணும் சார்…”

“நம்ம முன்னாள் அமைச்சர் சக்கரபாணியோட லீகல் ஒயிப் வீட்டுக்கு… அரவிந்த் மர்டர் கேஸ்ல அந்த வீட்டுல யாருக்காச்சும் சம்மந்தம் இருக்கான்னு நூல் விட்டுப் பார்த்திடுவோம்…” என்றான் அஜய்.

அப்போது அவனது அலைபேசி சிணுங்கி அச்சுவின் எண்ணைக் காட்ட சிறு புன்னகையுடன் எடுத்தான்.

“சொல்லு மா…”

“என்னங்க, நீங்க லஞ்சுக்கு வருவீங்கன்னு வெயிட் பண்ணேன், காணலை… அதான் கால் பண்ணேன்…”

“என்னால லஞ்சுக்கு வீட்டுக்கு வர முடியாது, நீ சாப்பிடு அச்சு…” என்றவனிடம், “ப்ச்… வந்தா உங்களுக்கு அந்த போஸ்ட்மார்ட்டம் அனுப்பிட்டு கொலை பண்ணற கதையை சொல்லலாம்னு நினைச்சேன், வேண்டாம்னா போங்க…” என்றாள் பிகுவுடன்.

“வாவ்… அது எந்த கதைன்னு கண்டு பிடிச்சுட்டியா…?”

“எஸ்… தி கிரேட் கிரைம் இன்வெஸ்டிகேசன் ஆபீசர் அஜய் ஒயிப் அர்ச்சனாவால அதைக் கண்டுபிடிக்க முடியலேன்னா, அப்புறம் என்னை நீங்க கிரைம் நாவல் பைத்தியம்னு சொல்லுறதுல அர்த்தமே இல்லாமப் போயிடுமே…”

“சரி, அது என்ன பேருன்னு சொல்லு மா… அந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல இருந்தபோல நடந்துச்சா, இல்ல சும்மா பயப்படுத்த அனுப்பிருப்பானா…?”

“ஸாரிங்க, கதைல போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல சொன்ன போலவே கொலை நடக்கும்… கதையோட பேரு ‘விஷ்ணு விஷால் ஒரு விடுகதை…” என்றாள் அச்சு.

அதற்குள் அஜய்க்கு அலைபேசியில் செகன்ட் லைன் வந்து கொண்டிருக்க, “இருமா, கூப்பிடறேன்…” என்றவன் அச்சுவின் அழைப்பைத் துண்டித்து புதிய அழைப்பை ஏற்றான்.

“சார், திஸ் ஈஸ் கண்ட்ரோல் ரூம்…”

“ஸ்பீக்…”

“ஒரு மோசமான செய்தி சார்…”

“எ…என்ன…”

“மாதவரம் பொட்டானிக்கல் கார்டன் ஏரியாவுக்குப் பின்னாடி உள்ள வாட்டர் டேங்குக்குப் பின்னாடி உள்ள புதரில் காணாமப் போன இதயா இறந்து கிடக்கிறதாய் தகவல் சார்…” என்ற செய்தியைக் கேட்டதும் ஏசி காருக்குள் குப்பென்று வியர்த்தான் அஜய்.

Advertisement