Advertisement

அத்தியாயம் – 12

“என்ன சார், போன் போகலையா…” அஜய் இதயாவுக்கு போன் பண்ணுவதைப் பார்த்துக் கொண்டிருந்த அருணகிரி வேகமாய் அருகில் வந்து கேட்டார்.

“போன் சுவிட்ச் ஆப் ஆயிருக்கு… ஐ திங்க் இதயா ஈஸ் மிஸ்ஸிங்…” என்றவன், “கிருஷ்ணா, இதயாவோட நம்பர் லாஸ்ட்டா எந்த ஏரியால சுவிட்ச் ஆப் ஆயிருக்குன்னு பாருங்க, குயிக்…” என்றதும் அவர் பரபரப்பாய் கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்க, இதயாவின் அன்னை சத்தமாய் அழத் தொடங்கினாள்.

“ஐயோ, என் பொண்ணுக்கு என்னாச்சு சார்… படுபாவிங்க லெட்டர்ல அனுப்பின போல பண்ணிடுவாங்களா, என் பொண்ணக் கொன்னுடுவாங்களா…” எனக் கதற அருணகிரி கண்களில் நிறைந்த கண்ணீரோடு இடிந்து போய் சோபாவில் அமர்ந்தார்.

அஜய் கூட திணறித்தான் போயிருந்தான்… அடுத்தடுத்து ஒரு ஆதாரமும் கிடைக்காமல் இடியாப்ப சிக்கலாய் மேலும் மேலும் குழம்பிக் கிடந்தது அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள். ஒரு இன்ச் விசாரணையில் முன்னேறினால் கொலையாளி நாலுகால் பாய்ச்சலில் ஒரே தாவாக அடுத்த சம்பவத்தில் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறான். முன்னமே காணாமல் போன வர்ஷாவைப் பற்றிய தகவலே இன்னும் கிடைத்த பாடில்லை… அதற்குள் அடுத்த கடத்தல் என்றால் என்னதான் செய்வது.

அஜய் கமிஷனரிடம் விஷயத்தை சொல்ல புலம்பினார்.

“ஐஜி கேக்கற கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்லுவேன், அவரை சமாளிக்கிறதோட பிரஸ் பீப்பிள்சை வேற பதில் சொல்லி சமாளிச்சாகணும்… இப்ப என்ன பண்ணலாம் அஜய்…” என்றார் குழப்பத்துடன்.

“எனக்கும் புரியலை சார்… எந்தப் பக்கமும் போக முடியாதபடி அடுத்தடுத்து நமக்கு வேலை கொடுத்திட்டு இருக்கான்… இப்ப வர்ஷா, இதயா மிஸ்ஸிங் கேஸும் இதுக்கு முன்னே உள்ள மர்டர் கேஸுங்களோட சேர்ந்துகிச்சு, ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம் சார்…”

“என்ன…?”

“நடக்கிற சம்பவங்கள் எல்லாத்தையும் பார்க்கும்போது  பண்ணற ஆளுக்கு புத்தி சுவாதீனம் இல்லையோன்னு ஒரு டவுட் வருது…” என்றான் அஜய் யோசனையாய்.

“ம்ம்ம்… இருக்கலாம் அஜய், நல்ல புத்தியோட ஒருத்தன் இப்படி பண்ண வழியில்லை… உங்க அடுத்த மூவ் என்ன…”

“இதயா மிஸ் ஆகி கொஞ்ச நேரம் தான் ஆயிருக்கு… ஸோ, இதை விசாரிச்சா லிங்க் கிடைக்கும்னு நினைக்கறேன் சார்…”

“எதையாச்சும் பண்ணுங்க, நல்ல ரிசல்ட் சொன்னா சரி…” என்றவர் அழைப்பைத் துண்டிக்க கிருஷ்ணா வந்தார்.

“ஸார்…”

“சொல்லுங்க கிருஷ்ணா, இதயா லாஸ்ட்ல போன் பேசினது எந்த ஏரியான்னு தெரிஞ்சிடுச்சா…?”

“அந்த நம்பர் திருப்போரூர் ஏரியால கடைசியா சுவிட்ச் ஆப் ஆகிருக்கு சார்…”

“திருப்போரூரா…” என்றவன் யோசனையாய் பார்த்தான்.

“எஸ் சார்…”

“ஓகே… அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரைப் பிடிங்க…” என்றவன், “மிஸ்டர் அருணகிரி, தைரியமா இருங்க, நிச்சயம் ஏதாச்சும் தடயம் கிடைக்காம இருக்காது… இதயா எத்தன மணிக்கு வீட்டுல இருந்து கிளம்பினா…?”

“பதினோரு மணிக்கு அவ பிரண்ட்ஸ் நாலு பேரு காருல வந்து பிக்கப் பண்ணிகிட்டாங்க சார்…” என்றாள் அழுகையுடன் இதயாவின் அன்னை.

“எந்த பிரண்டோட பர்த்டே பார்ட்டின்னு சொன்னிங்க…?”

“இதயாவோட கிளாஸ்மெட் திவ்யாங்கற பொண்ணோட பர்த்டே சார்… அவங்க அப்பா தினகர் ரியல் எஸ்டேட்ல பெரிய ஆளு, ஒரே பொண்ணு பர்த்டேவை எல்லா வருஷமும் ரொம்ப சிறப்பா செலபரெட் பண்ணுவாங்க… பிரண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு மதியம் லஞ்ச், ஈவனிங் பார்ட்டி, டின்னர்னு நல்லாப் பண்ணுவாங்க, நாங்க கூட ஒரு வருஷம் பார்ட்டிக்குப் போயிருக்கோம்… ரொம்ப நல்ல பாமிலி, அதான் குளோஸ் பிரண்டு பர்த்டே பார்ட்டியைத்  தவிர்க்க முடியாம இதயா கிளம்பினா…”

“ம்ம்… சரி, இதயா பிரண்ட்ஸ் டீடைல்ஸ் கொடுங்க…” என்றதும் இதயாவின் அன்னை கொடுத்தாள்.

“இந்த லெட்டர் உங்களுக்கு எப்ப வீட்டுக்கு வந்துச்சு…? யாரு கொண்டு வந்து கொடுத்தாங்க…?”

“நான் மாடில ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தேன்… கேட்ல செக்யூரிட்டி தான் வாங்கி வச்சிருந்தார்…”

கிருஷ்ணா செக்யூரிட்டியை அழைத்து வர விசாரித்தான்.

“உங்க பேரென்ன…?”

“சதாசிவம் சார்…”

“இந்த போஸ்ட் நீங்க தான வாங்கி வச்சிங்க…?”

“ஆமா சார்…” என்றார் அவன் கையிலிருந்த கவரைப் பார்த்து.

“யாரு, எத்தன மணிக்கு கொண்டு வந்து கொடுத்தாங்க…” எனவும் யோசித்தார்.

“அது ஒரு ரெண்டு மணி இருக்கும் சார்… எப்பவும் வர்ற போஸ்ட்மேன் இல்லாம புதுசா கொஞ்சம் வயசான ஒருத்தர் தான் கொண்டு வந்து கொடுத்தார்… நான் கூட கேட்டேன், வழக்கமா வேற ஒரு பையன் தான வருவான், இன்னைக்கு என்ன புதுசா இருக்கிங்கன்னு…”

“ஓ… அவர் என்ன சொன்னார்…?”

“வழக்கமா வர்ற பையனுக்கு கொரானா, ரெஸ்ட்ல இருக்கார், கொஞ்ச நாளைக்கு நான்தான் வருவேன்னு சொன்னார்…”

“ம்ம்… பார்க்க எப்படி இருந்தார், எந்த வண்டில வந்தார்…?

“முடி நரைச்சு பார்க்க வயசான போல இருந்தாலும் உடம்பு கட்டுமஸ்தா கம்பீரமா இருந்தார், சைக்கிள்ல தான் வந்திருந்தார்…” என்றார் சதாசிவம்.

“கிருஷ்ணா, இந்த ஏரியால எந்த வீட்டுல CCTV இருக்குன்னு பார்த்து அந்த டைம்ல உள்ள புட்டேஜ் கலக்ட் பண்ணுங்க…”

“எஸ் சார்…” என்ற கிருஷ்ணா, “திருப்போரூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஜாபர் லைன்ல இருக்கார் சார்…”  என்றவர் அலைபேசியை நீட்ட வாங்கிக் கொண்டான்.

கிருஷ்ணா முன்னமே சுருக்கமாய் எல்லாத்தையும் சொல்லி விட்டதால் அவர் நேரடியாய் விஷயத்துக்கு வந்தார்.

“மிஸ்டர் ஜாபர்…”

“எஸ் சார், நான் என்ன பண்ணனும் சார்…”

“திருப்போரூர் சிக்னல்ல தான் இதயா நம்பர் ஆப் ஆகிருக்கு, எப்படியும் அந்தப் பொண்ணைக் கடத்த போர் வீலர் தான் யூஸ் பண்ணிருப்பாங்க… அந்த வண்டி செக் போஸ்ட்ல என்டர் ஆகாம இருக்காது, சோ ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி திருப்போரூர் வழியா வந்த, வெளிய போன வண்டிகளோட டீடைல்ஸ் எனக்கு வேணும்…”

“ஓகே சார், நான் கலக்ட் பண்ணி அனுப்பறேன் சார்…”

“சரி, நான் அப்புறம் பேசறேன்…” என்றவன் அழைப்பைத் துண்டித்தான்.

திவ்யாவின் எண்ணுக்கு அழைக்க அவள் பர்த்டே பார்ட்டியில் பிஸியாய் இருந்ததால் வேறு யாரோ எடுத்தனர். வேறு பிரண்ட்ஸ் சிலரின் எண்ணை வாங்கி அவர்களிடம் இதயாவைப் பற்றி விசாரித்தான் அஜய். அதில் ராகவி என்ற பெண் மட்டுமே உபயோகமாய் பதில் சொன்னாள்.

“இதயா பார்ட்டி தொடங்கறதுக்கு முன்னாடியே கிளம்பிட்டாளே சார்… என்னாச்சு, எதுவும் பிரச்சனையா…?”

“முன்னாடியே கிளம்பினாளா, ஏன் எல்லாரும் ஒண்ணா தானே போனிங்க…” என்றான் அஜய்.

“ஆமா சார், அவளுக்கு மதியம் ஹோட்டல்ல சாப்பிட்டது கொஞ்சம் சேரலை போலருக்கு, வயிறு வலிக்குதுன்னு அடிக்கடி ரெஸ்ட் ரூம் போயிட்டு இருந்தா… அப்புறம் வீட்டுக்குக் கிளம்பறேன்னு டாக்ஸி புக் பண்ணி கிளம்பிட்டா…” என்றாள்.

“எந்த டாக்ஸி, அவ வண்டில ஏறியதை நீ பார்த்தியா…?”

“என்ன சார், இவ்ளோ கேள்வி கேக்கறிங்க… இதயாக்கு என்னாச்சு, அவ வீட்டுக்கு வந்துட்டா தானே…” என்றாள் ராகவி சற்று பதட்டத்துடன்.

“சொல்லறேன் மா… அதுக்கு முன்னாடி நான் கேக்கற தகவலை கொடுத்துட்டாப் பரவால்ல…” என்றான் அஜய்.

“ம்ம்… நீங்க கேக்கறதைப் பார்த்தா பயமா இருக்கு சார், அவளுக்கு ஒண்ணும் இல்ல தானே…” தோழியைப் பற்றிய கவலையில் மீண்டும் கேட்டவள்,

“வீட்டுக்கு முன்னாடி நிறைய வண்டிங்க இருந்ததால தெரு முனைல கொஞ்சம் தள்ளி தான் அந்த வெள்ள கலர் டாக்ஸி நின்னுச்சு…” அவள் சொல்லவும் சட்டென்று ஷார்ப்பானவன்,

“அது என்ன கார்மா, நம்பர் பார்த்தியா…” என்றான் அவசரமாய்.

“ஸ்விப்ட் டிசைர்னு நினைக்கிறேன்… தள்ளி நின்னதால நம்பர் சரியாத் தெரியலை சார், ஆனா அதுல பாஸ் னு ஏதோ எழுதின போல இருந்துச்சு…” என்றாள் ராகவி.

“பாஸ்…!” யோசித்தவன், “ஓகே பார்ட்டி எல்லாம் வீடியோ எடுத்திருக்கீங்களா… அங்க பக்கத்துல யார் வீட்டுலயாச்சும் CCTV இருக்கா…” என்றான் அஜய்.

“திவ்யா வீட்டு முன்னாடியே CCTV இருக்கு சார்… ஆனா இதெல்லாம் எதுக்கு கேக்கறிங்கன்னு தான் புரியல, இதயாக்கு ஒண்ணுமில்லை தானே…” என்றாள் மீண்டும்.

“ஸாரிமா, ரைட் நவ் இதயா ஈஸ் மிஸ்ஸிங்…” என்றான்.

“எ…என்ன சொல்லறிங்க ஸார், இதயா மிஸ்ஸிங்கா….” என்றவள் அதிர்ச்சியுடன் கத்தி சொல்ல அருகில் நின்ற பிரண்ட்ஸ் சிலரின் காதிலும் அந்த வார்த்தை விழ சடுதியில் அந்த பார்ட்டி நடக்கும் இடத்தில் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.

“ராகவி, திவ்யாவோட அப்பாகிட்ட கொஞ்சம் போனை கொடுக்க முடியுமா ப்ளீஸ்…” அஜய் சொல்ல அவளிடம் என்னவென்று கேட்டபடி வந்த திவ்யாவின் தந்தையிடம் தனது அலைபேசியை நீட்டியவள் விழிகளில் கண்ணீரைப் பார்த்தவர் பதட்டமாய் வாங்கி பேசத் தொடங்கினார். அவரிடம் சில விவரங்கள் கேட்டுக்கொண்டு, CCTV புட்டேஜை அவனுக்கு மெயில் செய்யும்படி கூறி போனை வைத்தான்.

அதற்குள் கிருஷ்ணா நான்கு வீடு தள்ளி இருந்த ஒரு வீட்டின் CCTV புட்டேஜ்களுடன் வந்திருந்தார்.

“என்ன கிருஷ்ணா, புட்டேஜ் வாங்கிட்டீங்களா…?”

“இதோ சார்…” என்றவர் பென் டிரைவை லாப்டாப்பில் சொருக அதில் காட்சிகள் தெரியத் தொடங்கியது. காலையில் பால்காரன் வந்தது முதல் ஓடத் தொடங்கியதை பார்வர்ட் செய்து செக்யூரிட்டி லெட்டர் கொண்டு வந்து கொடுத்ததாய் சொன்ன நேரத்துக்கு சற்று முன்பு உள்ள போட்டோவில் இருந்து பார்க்கத் தொடங்கினர்.

யார் யாரோ ரோட்டில் வந்தும் போய்க்கொண்டிருக்க ரெண்டு மணி சுமாருக்கு காக்கி உடுப்பும், தலையில் தொப்பியுமாய் ஒருவன் சைக்கிளில் தெரிய, உன்னிப்பாய் கவனித்தனர்.

அவனது முகம் தெரியாமல் முதுகு மட்டுமே தெரிந்தது. நடையிலும், உடல் அமைப்பிலும் வயது தெரியாமல் கட்டுமஸ்தாகவே இருந்தான். இதயாவின் வீட்டு முன்பு சைக்கிளை ஸ்டேண்டு போட்டு நிறுத்தியவன் இறங்க பக்கவாட்டில் முகம் தெரிகிறதா என கவனித்தனர். மாஸ்க் அவன் முகத்தில் பெரும்பகுதியை மறைக்க கண்ணில் அணிந்திருந்த கண்ணாடியும் சேர்ந்து அவன் முகத்தை அடையாளம் தெரியாமல் மறைந்திருந்தது.

கேட்டைத் திறந்து செக்யூரிட்டி வெளியே வருவதும், காக்கி சட்டைக் காரனிடம் ஏதோ பேசிவிட்டு கவரை வாங்கிக் கொண்டு மீண்டும் கேட்டை அடைக்க இவன் சைக்கிளை எடுத்துக் கொண்டு திரும்பும்போது முகம் நிச்சயம் தெரிந்து தான் ஆகவேண்டுமென்று எதிர்பார்ப்புடன் நோக்கினர்.

ஆனால் அவன் வந்த வழியே திரும்பாமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு அப்படியே சென்றுவிட ஏமாற்றமாய் உணர்ந்தனர்.

“முகம் தெரியலையே கிருஷ்ணா…”

“ஆமா சார், பக்காவா மறைச்சிட்டு வந்திருக்கான்…”

“ம்ம்… சார், நாங்க நாம உங்க செக்யூரிட்டியை அழைச்சிட்டு பக்கத்துல உள்ள போஸ்ட் ஆபீஸ் போறோம்… அங்க இன்னைக்கு யாரு டெலிவரிக்கு வந்தாங்கன்னு விசாரிச்சுடலாம்… அனேகமா வந்தவனும் Fakeனு தான் எனக்குத் தோணுது…” என்றான்.

“சார், அப்ப என் பொண்ணு…” அருணகிரி கண்ணீருடன் கேட்க, கையில் தட்டிக் கொடுத்துவிட்டு வண்டிக்கு வந்தனர்.

அவர்கள் எதிர்பார்த்தது போலவே போஸ்ட் ஆபீஸில் பதில் கிடைத்தது. அன்று எந்த லெட்டரும் அவர்கள் முகவரிக்கு வந்திருக்கவில்லை என்றதோடு அந்த ஏரியாவுக்கு எப்போதும் வருகின்ற போஸ்ட்மேனும் அங்கேயே இருந்தார்.

“உங்களுக்கு இன்னைக்கு எதுவும் லெட்டர் வரலையே சார், அப்படியே போஸ்ட் வந்தாலும் உங்க ஏரியாவுக்கு நான்தான் கொண்டு வந்து கொடுப்பேன்… எனக்கு கொரோனாவும் இல்லை, நான் லீவும் போடலை…” என்றான் அந்த ஏரியாவுக்கு எப்போதும் லெட்டர் டெலிவரி செய்யும் போஸ்ட் மேன்.

அவர்களிடம் புதிதாய் வீட்டுக்கு லெட்டர் டெலிவரி கொடுக்க வந்தவனின் புகைப்படத்தை காட்ட, அங்கே யாருக்கும் அடையாளம் தெரிந்திருக்கவில்லை.

“இல்ல சார், இப்படி யாரும் எங்க ஆபீஸ்ல வொர்க் பண்ணவே இல்லையே…” என்றனர்.

அஜயும், கிருஷ்ணாவும் உதட்டைப் பிதுக்கினர். செக்யூரிட்டியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு கிளம்பினர்.

“என்ன சார், எந்த ஒரு வாலும் கிடைக்க மாட்டேங்குது… எப்படி இந்தக் கேஸை மூவ் பண்ணறது…” கிருஷ்ணா கேட்க யோசனையுடன் இருந்தான் அஜய்.

“கிருஷ்ணா, முன்னாடி நடந்த ரெண்டு மர்டரும் கிரைம் நாவல்ல உள்ள போல தான் கொலை நடந்திருக்கு… இப்போ முன்னமே போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டு அந்தப் பொண்ணைக் கடத்துறது கூட ஏன் ஒரு கிரைம் நாவல்ல வந்த கதையா இருக்கக் கூடாது…”

“வாய்ப்பிருக்கு சார்…” என்றார் கிருஷ்ணா.

“இப்பவே கிளியர் பண்ணிக்கலாம்…” என்ற அஜய் உடனே அர்ச்சனாவுக்கு அழைத்தான்.

அவன் சொன்னதை கவனமாய் கேட்டவள், “ஆமாங்க, இப்படி ஒரு கதை ராகேஷ் குமார் நாவல்ல படிச்சிருக்கேன்… ஆனா பேரு என்னன்னு சட்டுன்னு நினைவு வரலை…” என்றாள்.

“சரி, அதுல ரிப்போர்ட் அனுப்பிட்டு என்ன பண்ணுவான்… அதே போல பாம்பு கடிச்சு மரணம் நடக்குமா…?” என்றான் அஜய் பதட்டத்துடன்.

“ஆமாங்க, அந்த ரிப்போர்ட்ல உள்ளது போலவே கொலை செய்யப்படுவான்… ஸ்டோரி பேரு நினைவு வரலை…”

“சரி, யோசிச்சு வை…” என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு கிருஷ்ணாவிடம் திரும்பினான்.

“சந்தேகமே இல்லை, இதெல்லாம் பண்ணுறது நிச்சயம் மனநிலை நல்லா இருக்கிற ஒருத்தனா இருக்க முடியாது…” என கடுப்புடன் கையில் குத்திக் கொண்டான்.

Advertisement