Advertisement

அத்தியாயம் – 11

“வாவ்… இன்னைக்கு தான் புருஷனா அழகா, பொண்டாட்டி சொன்னதை மறக்காம வாங்கிட்டு வந்திருக்கிங்க…” அஜய் நீட்டிய கவரில் இருந்த புத்தகங்களைப் பார்த்த அர்ச்சனா சந்தோஷத்துடன் அவன் எதிர்பாரா நேரத்தில் கன்னத்தில் இதழைப் பதிக்க ஆச்சர்யமானான் அஜய்.

“ஆஹா, இப்படி கிடைக்கும்னா தினமும் மறக்காம கிரைம் நாவல் வாங்கிட்டு வந்திருப்பனே…” எனவும் சிரித்தாள்.

“சரி, சாப்பிட எடுத்து வைக்கிறேன்… சீக்கிரம் வாங்க…”

“இதோ, அஞ்சே நிமிஷம்…” என்றவன் அறைக்கு செல்ல அவள் அடுக்களைக்குள் நுழைந்தாள். பொடியாய் அரிந்து தயாராய் வைத்திருந்த வெங்காயத்தை முட்டை ஊற்றி கலக்கி ஆம்லெட் தயாரித்துக் கொண்டு மேஜைக்கு வந்தாள்.

டவலால் முகத்தைத் துடைத்துக் கொண்டே அமர்ந்தவன் முன்பு தட்டை வைத்து பரிமாற சாப்பிடத் தொடங்கினான்.

அஜய் மதிய உணவுக்கு அதிகமும் லேட்டாக தான் வீட்டுக்கு வருவதால் அவனுக்காய் காத்திருக்காமல் நேரத்துக்கு சாப்பிட வேண்டும் என்று அச்சுவுக்கு அன்புக் கட்டளை இட்டிருக்கவே அவளும் பாலோ செய்தாள். இன்றும் முன்னமே சாப்பிட்டிருந்ததால் புத்தகக் கவரைப் பிரித்தாள்.

“வாவ், பத்து புக்கா…”

“ம்ம்… உன்னோட பாவரிட் எழுத்தாளர் நாவலான்னு தெரியலை, கண்ணுல பட்டதை வாங்கிட்டு வந்தேன்…”

“இதுல ஏழு நாவல் ஆர்கே சாரோடது… ரெண்டு பிகேபி சார், ஒண்ணு ஐஎஸ் சார், எல்லாருமே என் பாவரிட் தான்…” என்றாள் சந்தோஷமாய்.

சட்டென்று அவள் பேச்சில் ஸ்டிரைக் ஆனவன், “அச்சு, இப்ப என்ன சொன்ன…?” என்றான்.

“எல்லாருமே என் பாவரிட்தான்னு சொன்னேன்…”

“அதில்லமா, அதுக்கு முன்னாடி…”

“அதுக்கு முன்னாடி என்ன சொன்னேன்…” என்றவள், “இதுல ஏழு நாவல் ஆர்கே சாரோடது… ரெண்டு பிகேபி சார், ஒண்ணு ஐஎஸ் சார்னு சொன்னேன்…” என்றாள்.

“எஸ், அதே தான்…” என்றவன் முக்கால் வாசி சாப்பிட்டிருக்க மீதம் வைத்து அப்படியே எழுந்தான்.

“என்னங்க, ஏன் எழுந்துட்டிங்க… சாப்பாடு நல்லா இல்லியா…?” அவள் பதட்டமாய் கேட்க பதில் சொல்லாமல் அறைக்குள் சென்றவன் அலைபேசியுடன் வந்தான்.

“அச்சு, நான் சொல்லுறதை எழுது…” சொன்னவன் ஒரு பேனாவை பேப்பருடன் நீட்ட வாங்கிக் கொண்டாள்.

“சொல்லுங்க…”

மொபைலில் ஒரு போட்டோவைப் பார்த்தவன் சொன்னான்.

“FN144AAbyRK நேசத்தின் நிழல் by அந்தகன்… அடுத்து AEVbyRK நேசத்தின் நிழல் by அந்தகன்… இதை நல்லாப் படிச்சுப் பாரு, உனக்கு எதுவும் தோணுதா…?” எனவும் தான் எழுதியதை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தாள் அர்ச்சனா.

“இ..இதுல என்ன லாஸ்ட்ல by RK ன்னு போட்டிருக்கு… எனக்குத் தெரிந்த RK ராகேஷ்குமார் சார் தான், அதுக்கு முன்னாடி உள்ள எழுத்து என்னன்னு புரியலை…”

“கரக்ட் அச்சு… எனக்கும் இதுல மென்ஷன் பண்ணி இருக்கிற RK, ரைட்டர் ராகேஷ்குமாரா இருக்கலாம்னு தோணுது…”

“எ..என்னங்க சொல்லறிங்க, அவர் எவ்ளோ பெரிய ரைட்டர்… அவர் பேரை எதுக்கு மென்ஷன் பண்ணப் போறான்…” அவள் கேட்கவும் யோசித்தான் அஜய்.

“அச்சு… நேத்து நீ அந்த பிளாக் பெயின்ட் பொண்ணு கேஸ் பத்தி சொன்னப்ப ஆல்ரெடி கேட்ட விஷயமா இருக்குன்னு சொன்னியே, அதை விஷுவலா பார்த்தியா, இல்ல புக் எதுலயாச்சும் படிச்சியா… யோசிச்சுப் பாரு….” என்றவன் ஆவலாய் அவளைப் பார்த்தான்.

“அந்த மாதிரி ஒரு ஸீன் டீவில பார்த்த போல நினைவு இல்லை, ஆமாங்க ஏதோ கிரைம் ஸ்டோரில தான் படிச்சேன் போலருக்கு…” என்றாள்.

“எஸ்… அது ஏன் RK சார் ஸ்டோரியா இருக்கக் கூடாது…” அஜய் கேட்கவும் அவள் முகத்தில் பல்பு எரிந்தது.

“ஆமாங்க, இந்த லாக்டவுன் புல்லா அவரோட கதைகளைத் தான் தேடித் தேடி படிச்சேன், அவரோட கதைல படிச்சிருக்கவும் வாய்ப்பிருக்கு…” என்றாள் யோசனையுடன்.

“வெரிகுட்… எந்தக் கதைன்னு யோசி, கமான்…”

“இதை ரீசன்டா படிச்ச போல தான் இருக்கு… ஆனா, எந்தக் கதைன்னு நியாபகம் இல்லையே…” என்றவள், “ஒருவேளை அந்த by RK க்கு முன்னாடி வர்ற எழுத்துகள் அந்த கதையைக் குறிக்கிற எழுத்தா இருக்குமோ…?” என்றாள்.

“எஸ், அப்படிதான் இருக்கும்… ‘F, A’ னு தொடங்கற பேருள்ள புக்ஸ்ல என்னல்லாம் இருக்கு…” என்றவன் அவள் செல்பில் அடுக்கி வைத்திருந்த புக்கில் தேடத் தொடங்கினான். நிறைய கதைகள் அந்த எழுத்தில் தொடங்கினாலும் அதற்கு மேட்ச் ஆகவில்லை. அப்போதுதான் அச்சுவிற்கு சட்டென்று ஒரு விஷயம் நினைவு வந்தது.

*******************

கமிஷனர் அலுவலகம்.

அஜய் சொன்னதை ஆச்சர்யம் தாங்கிய விழிகளுடன் கேட்டுக் கொண்டிருந்தனர் கமிஷனர் ஜெயராமும், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணாவும்.

“என்ன சொல்லறிங்க அஜய்… அந்த ரெண்டு கொலை செய்யப்பட்ட சடலங்கள் கூட வைக்கப்பட்டிருந்த பேப்பர்ல எழுதி இருந்தது ராகேஷ்குமார் கிரைம் நாவல் பெயர்களோட முதல் எழுத்தா…?”

“எஸ் சார்… FN144AAbyRK இது ராகேஷ்குமாரோட ‘பிளாட்நம்பர் 144 அனித்ரா அபார்ட்மென்ட்’ அப்படிங்கற கதையோட முதல் எழுத்துகளைக் குறிப்பிட்டு சொல்லிருக்கு, இந்தக் கதை ஆன்லைன்ல இப்ப வந்திட்டு இருக்கிற கதை… அதே போல AEVbyRK, இதுக்கு அன்பு என்றால் விஷம் by ராகேஷ்குமார்… நேசத்தின் நிழல் கறுப்பு by அந்தகன்னு அர்த்தம் வருது சார்… அதுமட்டுமில்லை, இந்தக் கதைகளில் வர்ற கொலையை ஒரு மாடலா வச்சுதான் அந்த ரெண்டு கொலைகளும் நடத்தப்பட்டிருக்கு…” அஜய் சொல்லி நிறுத்த வியப்புடன் நோக்கினர்.

“ரிடிகுலஸ்… இப்படி எல்லாம் கூட ஒருத்தன் கதையைப் படிச்சிட்டு கொலை பண்ணுவானா, இதெல்லாம் நம்பற போலவா இருக்கு…”

“இது அபத்தம் இல்லை சார், என் ஒயிப் ராகேஷ்குமார் சாரோட மிகப் பெரிய பான்… அவகிட்ட கறுப்பு பெயின்ட் கொலை பத்தி சொன்னப்ப இது போல ஒரு சம்பவம் முன்னமே தெரியும்னு சொன்னா, அப்ப அவளுக்கு நினைவு வரலை, அந்தக் கதை ஆன்லைன்ல படிச்சிருக்கா… ‘அன்பு என்றால் விஷம்’ கதைல விஷத்தை பச்சை குத்துற ஊசில தொட்டு குத்திருக்க போல சீன் வருது… ரெண்டு கதைலயும் அந்த ஸீன் போட்டோ எடுத்திட்டு வந்திருக்கேன், படிச்சுப் பாருங்க…” சொன்னவன் மொபைலில் இருந்த இமேஜை அவர்களின் செல்லுக்கு அனுப்பி வைத்தான்.

படித்துப் பார்த்த இருவரும் புருவத்தை சுருக்கினர்.

“ஆமா, இது அப்படியே நம்ம கேஸ்ல வர்ற ஸீன் போலவே இருக்கு…” என்றார் கிருஷ்ணா.

“ம்ம்… உண்மைதான், பட்… இது எப்படி சாத்தியம்… ஒருத்தன் கிரைம் நாவல் படிச்சிட்டு அதைப் போல கொலை பண்ணுறான்னா இதை எப்படி எடுத்துக்கிறது… இதைப் பத்தி ரைட்டர் ராகேஷ்குமார் கிட்ட கேட்டா என்ன…?”

“இதை நானும் யோசிச்சேன் சார்… பட் ரைட்டர் ராகேஷ்குமார் இப்ப அவைலபிள் இல்லை… அவர் ஒருவாரம் முன்னாடி குடும்பத்தோட வெளிநாடு போயிருக்கிறதா கேள்விப்பட்டேன்… திரும்பி வர ஒரு மாசம் ஆகும் போலருக்கு…” என்றான் அஜய்.

“ஓ… ஐ ஸீ…” என்ற கமிஷனர் யோசனையானார்.

அப்போது அஜயின் அலைபேசி செல்லமாய் சிணுங்க எடுத்துப் பார்த்தவன், “பில்டர் அருணகிரி கால் பண்ணறார்…” சொல்லிக் கொண்டே சற்று நகர்ந்து அழைப்பை எடுத்தான்.

“ஹலோ, அஜய் ஸ்பீக்கிங்…”

“ஹ…ஹலோ, அஜய் சார்… ஒ..ஒரு முக்கியமான விஷயம், உடனே கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா….” என்ற அருணகிரியின் குரலில் நடுக்கம் தெரிந்தது.

“என்னாச்சு மிஸ்டர் அருணகிரி, எனி பிராப்ளம்…?”

“ச..சார், நீங்க கொஞ்சம் நேர்ல வந்துட்டாப் பரவால்ல…” என்றவரி குரலில் டன் கணக்கில் பதட்டம் வழிந்தது.

“இதோ, கிளம்பிட்டேன்…” என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு கமிஷனரிடம் வந்தான்.

சுருக்கமாய் விஷயம் சொல்ல அதிர்ச்சியோடு நோக்கினார்.

“என்னாச்சு அஜய், அந்தப் பொண்ணு இதயாக்கு ஏதாச்சும்…” கமிஷனர் முடிக்காமல் நிறுத்த, “தெரியலை சார், அருணகிரி ரொம்ப படபடப்பா பேசறதைப் பார்த்தா ஏதோ பிராப்ளம் போல இருக்கு… நாங்க நேர்ல பார்த்திட்டு வந்திடறோம்…”

“ஓகே… தெரிஞ்சுட்டு எனக்கு கால் பண்ணுங்க…”

“ஷ்யூர் சார்…” என்றவனுடன் கிருஷ்ணாவும் விறைப்பாய் சல்யூட் ஒன்றை கமிஷனருக்கு கொடுத்துவிட்டு நகர்ந்தனர். இருவரும் காரில் அமர்ந்ததும் கிருஷ்ணா வண்டியை எடுக்க அஜய் கோகுலை அலைபேசியில் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தான்.

சரியாய் பதினைந்து நிமிடம் கழிந்ததும் பில்டர் அருணகிரி வீட்டுத் தெருவில் நுழைந்த கார் வாசலில் மௌனமானது. இருவரும் இறங்கி வீட்டுக்கு செல்ல சத்தம் கேட்டு அவரே முன்னில் வந்து வரவேற்றார்.

“வாங்க சார், உள்ள வாங்க…” என்றவரின் முகமே கலவரத்தைக் காட்ட மெத்தென்ற குஷன் போட்டிருந்த சோபாவில் இருவரும் உடம்பைக் கொடுத்தனர். அருணகிரியின் மனைவி கலங்கிய முகத்துடன், ‘வணக்கம்’ என்றவள் ஒரு ஓரமாய் நின்று கொண்டாள்.

“என்னாச்சு சார், எனிதிங் ராங்…? இதயா எங்கே…?”

“அ…அதுவந்து, இதயா ஒரு பிரண்ட் பர்த்டே பங்க்ஷன் அட்டன்ட் பண்ணறதுக்காக செங்கல்பட் போயிருக்கா…”

“ஓகே… வேற என்ன பிராப்ளம்…?” அஜய் கேட்க மனைவியின் முகத்தைக் கலவரமாய் பார்த்தவர், “அந்த கவரை எடுத்திட்டு வாம்மா…” என்றதும் அறைக்குள் மறைந்த அவர் மனைவி சில வினாடிகளில் கையில் ஒரு காக்கி போஸ்டல் கவருடன் திரும்பி வந்தார்.

“சார்… இந்த கவர் இன்னைக்குப் போஸ்ட்ல வந்துச்சு, பிரம் அட்ரஸ் எதுவுமில்லை… அதைப் பிரிச்சுப் படிச்சதும் ஹார்ட்டே நின்னுரும் போல ஆயிருச்சு, நீங்களே இதைப் பாருங்க சார்…” என்றவரின் கண்களில் கண்ணாடியை மீறிக் கலவரம் தெரிந்தது. அஜய் யோசனையுடன் அவர் நீட்டிய கவரை வாங்கி அதற்குள் இருந்த சாணி நிறத்தாளை எடுத்தான்.

அது ஒரு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்.

“ச..சார், இ..இது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் போலருக்கே…” என்றார் கிருஷ்ணா அதிர்ச்சியுடன்.

“சார், ரிப்போர்ட்ல யார் பேரு போட்டிருக்குன்னு பாருங்க…” என்றார் அருணகிரி. பார்த்த அஜய் திகைத்தான்.

இறந்தவரின் பெயர்: அ. இதயா

தந்தையின் பெயர்: ச. அருணகிரி

வயது: 18

இறப்புக்குக் காரணம்: பாம்பு கடித்து மரணம்.

கடித்த பாம்பு வகை: கோப்ரா எனப்படும் நாகப் பாம்பு.

மரணத்துக்கு வேறு எதுவும் காரணம்: எதுவுமில்லை. பாம்புக்கடி மட்டுமே. வலது கணுக்காலில் பாம்பின் பற்கள் அழுத்தமாய் பதிந்துள்ளன.

படித்துவிட்டு அதிர்ச்சியாய் நிமிர்ந்தனர்.

“என்ன சார் இது, இதயா பேரு போட்டிருக்கு… உங்க பொண்ணுக்கு எதும் பிராப்ளம் இல்லையே, கால் பண்ணிப் பார்த்திங்களா…” என்றான் அஜய் அவசரத்துடன்.

“அஞ்சு நிமிஷம் முன்னாடி கூட கால் பண்ணோம் சார், ஷி ஈஸ் சேப்… பிரண்ட்ஸ் கூட ஜாலியா பார்ட்டியை என்ஜாய் பண்ணிட்டு இருக்கா, அவகிட்ட இதைப் பத்தி சொல்லி கலவரப்படுத்த வேண்டாம்னு ஜாக்கிரதையா இருக்க மட்டும் சொன்னோம்…” என்றார் அருணகிரி.

அஜயை ஏறிட்ட இதயாவின் அன்னை இப்போது அழுகையோடு குறுக்கிட்டாள்.

“சார், எங்களுக்கு இருக்கிறது ஒரே பொண்ணு… அவளுக்கு எதுவும் ஆகிடாம நீங்க தான் காப்பத்தணும்… ரெண்டு நாள் முன்னாடி தான் கார் டிக்கில அப்படி ஒரு சம்பவத்தைப் பார்த்தோம்… இப்ப இந்த லெட்டரைப் பார்த்ததில் இருந்து இன்னும் பயமாருக்கு…” என்றாள் கண்ணீருடன்.

“பயப்படாதீங்க மேடம், உடனே அவங்களை செங்கல்பட்ல இருந்து போலீஸ் பாதுகாப்போட வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துடலாம்…” என்றவன் கிருஷ்ணாவிடம் திரும்பி தணிந்த குரலில் சொன்னான்.

“கிருஷ்ணா, வீட்டுக்கு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை அனுப்புறதை நாம சாதாரணமா எடுத்துக்க முடியாது, ரொம்ப சீரியசான விஷயம்… முதல்ல அந்தப் பொண்ணை சேப் ஆ இருக்க சொல்லி அலர்ட் பண்ணனும்…” என்றவன் இதயாவின் எண்ணுக்கு அழைத்தான்.

சில நொடிகளில் எடுக்கப்பட்டு “ஹலோ…” என்றது ஒரு பெண் குரல்.

“மிஸ் இதயா…?”

“ஆ…ஆமா, நீங்க யார் சார் கால் பண்ணறது…?” எனக் கேள்வி கேட்டது.

“நான் கிரைம் பிராஞ்ச் அஜய், நீங்க இதயா தானே…?”

“ஓ நீங்களா சார், என்ன விஷயம்… சொல்லுங்க…”

“இப்ப நீ சரியா எங்க இருக்கேன்னு சொல்ல முடியுமா…?”

“நா…நான் என் பிரண்டு திவ்யாவோட பர்த்டே பார்ட்டில கலந்துக்க செங்கல்பட் வந்திருக்கேன் சார்…”

“ஓ… அந்த லொகேஷனை கொஞ்சம் என் நம்பருக்கு ஷேர் பண்ணறியா மா…”

“ப..பண்ணறேன் சார்… ஓகே சார், பிரண்ட்ஸ் கூப்பிடறாங்க, நான் அப்புறம் பேசறேன்…” என்றதும் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

“ஹலோ… இதயா…” என அஜய் அழைக்க அது எதிர்ப்புறம் சென்று அடையாமல் அழைப்பு துண்டிக்கப்பட்டதற்கான சத்தம் கேட்டது. அவசரமாய் மீண்டும் அழைக்க, தற்போது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதால் தொடர்பு கொள்ள முடியாது என கம்ப்யூட்டர் வாய்ஸ் சொன்னது.

Advertisement