Advertisement

அத்தியாயம் – 10

சூரியன் கடமை முடித்து மேற்கு நோக்கி விரைந்து கொண்டிருந்தான். கிருஷ்ணாவுக்காய் காத்திருந்த அஜய் அவரைக் கண்டதும் நிமிர்ந்தான்.

“என்ன கிருஷ்ணா..! பிஎம் ரிப்போர்ட் வாங்கப் போறேன்னு சொல்லிட்டு இவ்ளோ லேட்டா வர்றீங்க…?”

“ஸாரி…! டாக்டர்ஸ்கிட்ட இருந்து ரிப்போர்ட் வாங்க கொஞ்சம் லேட்டாகிடுச்சு… ஏதோ அரசியல்வாதி ஒருத்தர் தற்கொலை பண்ணிகிட்டாராம்… ஹாஸ்பிடல் முன்னாடி அவரோட தொண்டர்கள் கூடி ஒரே அமளி… அவங்களை சமாளிச்சுட்டு வெளிய வர லேட்டாகிடுச்சு… இந்தாங்க சார் ரிப்போர்ட்…” அவர் நீட்டிய பழுப்புக் கவரை அஜய் வாங்கிக் கொண்டான். அதிலிருந்த அரசாங்க சாணிப் பேப்பரை வெளியே எடுத்துப் புரட்டிக் கொண்டே கேட்டான்.

“சரி, அந்தப் பையனோட மரணம் எப்படி…?”

“பாய்ஸன் சார்…”

“ஓ… குடிக்கக் கொடுத்தா, இல்ல விஷ ஊசியா…?”

“ரெண்டும் இல்லை சார்…!”

“பின்ன எப்படியாம்…?” என்றவன் கேள்வியாய் நிமிர்ந்தான்.

“அந்தப் பையனோட முதுகுத் தண்டுவடப் போர்ஷனில் ‘நேசத்தின் நிழல் கறுப்பு’ என்கிற வாசகத்தை பச்சை குத்தி இருக்காங்கல்ல, அப்படிக் குத்தும்போதே அதுல பாய்ஸனை மிக்ஸ் பண்ணி குத்திருக்காங்க சார், பாய்ஸன் ஆர்சனிக் வகையை சார்ந்தது…”

“ஓ…” என்றவன் ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு நிமிர்ந்தான். வேறு வேலையாய் சென்றிருந்த கோகுல் உள்ளே வந்தான்.

“மரணம் முந்தாநாள் ராத்திரி பனிரெண்டு மணிக்கு நடந்து  இருக்கலாம்னு போட்டிருக்காங்க… செத்ததும் அந்த ராத்திரியே பாடியை பில்டர் அருணகிரி காருல கொண்டு வந்து போட்டுருக்கணும்…”

“ஆமா சார்…”

“சார், பில்டர் அருணகிரியோட வீடு அடையார்ல விஐபி ஏரியால இருக்கு… நிறைய வீடுகள்ல செக்யூரிட்டி கூட இருக்காங்க… அப்படி இருக்கும்போது வீட்டுல நிக்குற காருல பாடியைக் கொண்டு வந்து போடுறது பாசிபிள் இல்லை…” கோகுல் சொல்ல இருவரும் தலையாட்டினர்.

“கரக்ட் கோகுல், அப்ப எங்கே… எப்போ பாடியை காருல போட்டிருப்பான்… நீங்க அந்தக் கார் டிரைவரை பிடிச்சு முந்தினநாள் கார் எங்கெல்லாம் போச்சுன்னு டீட்டைலா விசாரிச்சிட்டு வாங்க கோகுல்… அந்த ராத்திரில கார் எங்கே இருந்துச்சுன்னு தெரியனும்…”

“ஷ்யூர் சார், இப்பவே விசாரிச்சுடறேன்…” சொன்னவன் கிளம்ப இவர்கள் ரிப்போர்ட்டை மீண்டும் அலசினர்.

“அந்தப் பையன் பாடில வேற எதுவும் காயம்…?”

“ஒரு நகக்கீறல் கூட இல்ல சார்…” சொன்ன கிருஷ்ணா,

“போஸ்ட்மார்ட்டம் பண்ணப்ப எடுத்த வீடியோவும், போட்டோவும் இந்தக் கவர்ல இருக்கு சார்…” என்று கொடுக்க போட்டோவைப் புரட்டினான் அஜய். முன்னமே நேரில் பார்த்திருந்தாலும் உன்னிப்பாய் போட்டோவை கவனித்தான்.

குப்புறப் படுக்க வைக்கப்பட்ட உடம்பின் முதுகுத் தண்டு வடத்தின் மேல் குத்தப்பட்ட ‘நேசத்தின் நிழல் கறுப்பு’ என்ற வார்த்தைகள் தெளிவாய் தெரிந்தன.

அதைப் பெருமூச்சுடன் மேஜை மீது வைத்த அஜய் கிருஷ்ணாவை ஏறிட்டான்.

“இப்படிக் கூடவா கொலை பண்ணுவாங்க…?”

“நானும் ரிப்போர்ட் படிச்சப்ப இதைத்தான் யோசிச்சேன் சார்…”

“ம்ம்… கொலையைப் பத்தி என்ன நினைக்கறீங்க..?”

“இது ஒரு வெல் பிளான்டு மர்டர் சார்…”

“ம்ம்… ஆனா, ஏன்…? எதுக்காக…?” அஜய் கேட்கும்போதே கிருஷ்ணாவின் அலைபேசி சங்கீதமாய் சிணுங்க எடுத்து ஓரமாய் சென்று காதுக்குக் கொடுத்தவரின் முகம் மலர்ந்தது.

“சார், அந்தப் பையன் யாருங்கிற விவரம் கிடைச்சிருச்சு…” எனவும் உற்சாகமாய் பார்த்தான் அஜய்.

“ஓ… வெரிகுட், யாரு…?”

“முன்னாள் அமைச்சர் சக்கரபாணியோட பையன் சார்…”

“என்னது, முன்னாள் அமைச்சர் சக்கரபாணி பையனா… அவருக்கு ரெண்டு பொண்ணுங்க மட்டும் தானே இருக்கிறதா கேள்விப் பட்டிருக்கேன்…” என்றான் அஜய் ஆச்சர்யமாக.

“ஆமா சார், அவரோட லீகல் மனைவிக்கு ரெண்டு பொண்ணுங்க தான்… ஆனா இல்லீகலா வந்தனான்னு ஒரு சின்னவீடு இருக்கு சார்… அந்த வந்தனாவுக்குப் பிறந்த ஒரே பையன் அரவிந்தன் தான் செத்துப் போனது…” கிருஷ்ணா சொல்ல யோசனையுடன் தாடையை சொறிந்தான் அஜய்.

“அப்ப, இந்தக் கேஸ்ல அரசியல் சாக்கடை கலந்திருக்கா…! இன்பர்மேஷன் சொன்னது யாரு…?”

“புரசைவாக்கம் போலீஸ் ஸ்டேஷன்ல மிஸ்ஸிங்னு கேஸ் கொடுத்திருக்காங்க சார்… அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தான் இப்ப கால் பண்ணார்…”

“புரசைவாக்கம் ஏரியால தான் அந்த சின்னவீடு இருக்கா…?”

“ஆமா சார்…”

“எப்படி மிஸ்ஸிங்…”

“மூணு நாள் முன்னாடி அரவிந்தோட பிரண்டு பர்த்டே பங்க்ஷன்ல கலந்துக்கப் போனவன் திரும்ப வரலை…”

“ஹூம்… அதென்ன வர்ஷா போல இதுலயும் பர்த்டே பார்ட்டி முடிஞ்சு காணாமப் போயிருக்கான்…” யோசித்தான் அஜய்.

“கிருஷ்ணா, அந்த வர்ஷாவோட மொபைல் கால் ஹிஸ்டரி செக் பண்ணிங்களா..? எதுவும் டவுட் இருக்கா…?”

“செக் பண்ணேன் சார், இப்ப ரீசன்டா தான் அந்தப் பொண்ணு சொந்தமா மொபைல் யூஸ் பண்ணத் தொடங்கிருக்கு… அதுவும் பர்த்டேக்கு அவங்க அப்பா பிரசன்னாவோட பாஸ் ஆத்ரேயன் மொபைலை கிப்ட் பண்ணவும் தான் அதுல தனக்குன்னு சிம் போட்டு யூஸ் பண்ணத் தொடங்கிருக்கு… அதுவரை அம்மா மொபைல் தான் யூஸ் பண்ணிருக்கு…”

“ஓ… அந்த மொபைலும் மிஸ்ஸிங், இல்லியா…?”

“ஆமா சார், டென்னிஸ் கிளப் போகும்போது கைல எடுத்திட்டுப் போயிருக்கா…”

“பிரசன்னாவோட பாஸ் பேரென்ன சொன்னிங்க…?”

“ஆத்ரேயன்… ஆத்ரேயா டெக்ஸ்டைல்ஸ் பி லிமிடட் எம்டி…”

“ஹோ, அந்த ஆபீஸ் எங்க இருக்கு…?”

“அண்ணா நகர் சார்…”

“ஓகே… அந்தப் பக்கம் போகும்போது அப்படியே பிரசன்னாவைப் பத்தி கம்பெனிலயும் விசாரிச்சிடுவோம்…”

“ஒகே சார்…”

“கிருஷ்ணா, புரசைவாக்கம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை உடனே அந்த அரவிந்தன் பைலை எடுத்துகிட்டு கமிஷனர் ஆபீஸ் வர சொல்லுங்க… கமிஷனர் கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு நாளைக்கு காலைல முன்னாள் அமைச்சரை மீட் பண்ண பர்மிஷன் வாங்கிடுவோம்…”

“இதோ சொல்லறேன் சார்…” கிருஷ்ணா போனில் ஸ்ரீதரை அழைக்க மீண்டும் ரிப்போர்ட்டில் கண்ணைப் பதித்த அஜய் யோசிக்கத் தொடங்கினான்.

“அந்த கறுப்புப் பெயின்ட் பொண்ணோட வயசு 21-22, அரவிந்தனுக்கு வயது 22. காணாமப் போன வர்ஷாவுக்கு வயசு 19, எல்லாம் சின்னப் பசங்க, வாழ வேண்டிய வயசுல இவங்க உயிரைக் குடிக்கிற அந்த அந்தகன் யாரா இருக்கும்… இவங்களை சுத்தியுள்ள அந்த யாரோ ஒருத்தன் யார்…?”

**************************

அடுத்தநாள் காலையில் கலங்கிய கண்களுடன் தளர்வாய் அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் சக்கரபாணியின் அருகில் சோகமாய் அமர்ந்திருந்த அவரது சின்னவீடு வந்தனா இளமை குறையாமல் அழகாகவே இருந்தாள். அவர்களுக்கு முன் காக்கி உடையில் கிருஷ்ணாவும், ஸ்ரீதரும் அமர்ந்திருக்க, அஜய் வழக்கம் போல் மப்டியில் இருந்தான்.

“சாரி சார், உங்களை இந்த நிலைமைல டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுதான், ஆனாலும் வேற வழியில்லை… நீங்க கொடுக்கிற விவரங்கள் இந்த கேஸ்க்கு உபயோகமா இருக்கலாம்னு நினைக்கறோம்… உங்க பாமிலில எல்லாரைப் பத்தியும் கொஞ்சம் சொல்ல முடியுமா…?”

“ப்ச்… ஆம்பளைப் பையன்னா எனக்கு ரொம்ப உசுரு… முதல் சம்சாரத்துக்குப் பொறந்த ரெண்டும் பெண்ணாப் போயிருச்சு, அப்புறம் என் கட்சி மகளிர் அணித்தலைவி வந்தனாவை ரெண்டாம் தாரமா கட்டிகிட்டேன்… அவளுக்காச்சும் பையன் பிறப்பான்னு ஆசையா காத்திருந்தேன், என் ஆசையைப் பொய்யாக்காம என்னை சந்தோஷப்படுத்த பிறந்தவன் தான் அரவிந்தன்… என் செல்ல மகன், என் சாம்ராஜ்யத்தை ஆளப் பிறந்தவன்… அவனை எப்படில்லாம் வாழ வைக்கனும்னு ஆசைப்பட்டேன், இப்படி எந்தப் படுபாவியோ அநியாயமா கொன்னு போட்டுட்டானே…”

“சார், கேக்கறேன்னு தப்பா நினைச்சுக்காதிங்க… உங்களுக்கு ரெண்டாவது ஒரு மனைவியும், பையனும் இருக்கிறது மூத்த சம்சாரத்துக்கும், பொண்ணுங்களுக்கும் தெரியுமா…” என்ற கிருஷ்ணாவை எரிச்சலாய் பார்த்தார் சக்கரபாணி.

“அரசியல்ல இருக்கவன் பாத்ரூம் போனாக் கூட இங்க விஷயம் தான்… அப்புறம் என் சின்னவீடு விஷயம் மட்டும் வெளிய தெரியாமலா இருக்கும்… மூத்த சம்சாரத்துக்கும், பொண்ணு, மாப்பிள்ளைகளுக்கும் அரவிந்த், வந்தனாவைப் பிடிக்காது, அதுக்காக நான் கவலைப்படலை… எனக்குப் பின்னாடி மகனும், வந்தனாவும் கஷ்டப்படக் கூடாதுன்னு நான் இருக்கும்போதே சொத்தை மூணு பேருக்கும் சரிசமமாப் பிரிச்சு எழுதி வச்சிட்டேன்… அதுல அவங்களுக்கு வருத்தம் தான், ஆனாலும் எதுவும் சொல்லலை…”

“ஓ… உங்க பொண்ணுங்க ரெண்டு பேரும் என்ன பண்ணறாங்க சார், அவங்களுக்கு மேரேஜ் முடிஞ்சிருச்சா…?”

“ஆமா, பெரிய பொண்ணு அகிலாவை கட்சி வட்டச் செயலாளர் கணேசமூர்த்திக்கு தான் கட்டிக் கொடுத்து வீட்டோட மாப்பிள்ளையா இருக்கார்… சின்னவ அமிர்தா ஐடி மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிட்டு அவங்க அமெரிக்கால செட்டில் ஆகிட்டாங்க… வருஷம் ஒரு தடவை இங்கே வந்திட்டுப் போவா…”

“சார், கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க, உங்க மூத்த பொண்ணு அகிலாவுக்கும், மாப்பிள்ளை கணேசமூர்த்திக்கும் அரவிந்தைப் பிடிக்காதில்லையா…?”

“ஆமா, பிடிக்காது…”

“அவங்க மேல உங்களுக்கு எதுவும் சந்தேகம் இருக்கா…?” என்றதும் கோபமாய் நிமிர்ந்தார் சக்கரபாணி.

“என்ன..? சுத்தி சுத்தி என் வீட்டு ஆளுங்களையே சந்தேகப் பட ஆரம்பிச்சுட்டிங்களா…? அரசியல்ல இருக்கறவங்க, பிடிக்காதவங்களை எல்லாம் கொல்லணும்னு நினைச்சா முழு நேர கொலைகாரனா தான் இருக்க முடியும்… என் மாப்பிள்ளையும் பொண்ணும் என் மேல ரொம்ப மரியாதை உள்ளவங்க… அரவிந்தைப் பிடிக்கலேன்னாலும் எனக்குப் பிடிக்கும்னு அமைதியா நான் செய்யறதை ஒத்துகிட்டாங்க… நீங்க சுலபமா இருக்கும்னு என் குடும்பத்துல கொலைகாரன் இருப்பானான்னு யோசிக்காம வெளிய தேடுங்க… வேற எதுவும் கேக்க இல்லேன்னா நீங்க கிளம்பலாம்…” சொன்னவர் எழுந்து கொள்ள இவர்களும் எழுந்தனர்.

“பையனைப் பத்தின விவரம் எல்லாம் ஆல்ரெடி இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்லிருக்கேன்… அவர்கிட்ட கேட்டுக்கங்க, நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்…” சொன்னவர் பதிலை எதிர்பார்க்காமல் அறைக்கு சென்றுவிட கிருஷ்ணா அஜய் முகத்தை நோக்க அவன் முகத்தில் புன்னகை நெளிய குழம்பினார்.

“மனுஷன் இப்படி காச்சிட்டுப் போறார், இவர் எதுக்கு சிரிச்சுட்டு இருக்கார்…” என யோசித்தாலும் அதை அஜயிடம் கேட்காமல், “கிளம்பலாமா சார்…” என மூவரும் வெளியே வந்தனர். காரில் அமர்ந்ததும் கேட்டார் கிருஷ்ணா.

“சார், அந்த சக்கரபாணி கடுப்பா பேசிட்டு எழுந்து போனப்ப நீங்க ஏதோ யோசிச்சு சிரிச்சுட்டு இருந்தீங்க… என்ன ரீசன் சார்…” என்றதும் மீண்டும் புன்னகைதான் அஜய்.

“அந்த சக்கரபாணி நிறைய பொய் சொல்லறார் கிருஷ்ணா…”

“பொய் சொல்லறாரா…? எப்படி சொல்லறீங்க சார்..”

“அவர் நம்மகிட்டப் பேசும்போது அவர் கண்ணை கவனிச்சிங்களா…”

“இல்ல சார், அதுல என்ன இருக்கு…”

“நம்ம கண்ணை நேரடியாப் பார்த்து பேசாம அடிக்கடி அவர் கண்ணு வலது பக்கம் யோசனையா போச்சு…”

“ஓ… அதனால என்ன சார், எனக்குப் புரியலை…”

“கிருஷ்ணா, என் சீனியர் விவேக் சார் ரொம்ப சூட்சுமமான ஒரு விஷயத்தைப் பத்தி சொல்லித் தந்திருக்கார்… அது என்னன்னா, வலதுகைப் பழக்கம் உள்ள ஒருத்தன் மூளைல பதிஞ்சிருக்கிற ஒரு விஷயத்தை அதாவது உண்மையைப் பேசும்போது கவனிச்சா அவன் கண்ணு இடது பக்கம் தான் போகும்… அதில்லாம புதுசா யோசிச்சுப் பேசும்போது, அதாவது பொய் சொல்லும்போது அவன் கண்ணு வலது பக்கம் போகுமாம்… இதை நான் அனுபவப் பூர்வமா உணர்ந்திருக்கேன், அதான் சொன்னேன்…” என்றான் அஜய்.

“ஹோ… இடது கைப் பழக்கம் உள்ளவங்களுக்கு இது பொருந்தாதா…?” ஆச்சர்யமாய் கேட்டார் கிருஷ்ணா.

“பொருந்தாது, ஜஸ்ட் அப்படியே அதுக்கு ஆப்போஸிட்ல யோசிக்கணும்…” என்றான் அஜய் புன்னகையுடன்.

கிருஷ்ணா யோசனையுடன் மனதுக்குள் சக்கரபாணியை யோசித்துக் கொண்டிருக்க அஜய் கூறினான்.

“ஸ்ரீதர், அந்த சக்கரபாணியோட குடும்பத்துல உள்ள எல்லாரைப் பத்தியும் புல் டீடைல்ஸ் கலக்ட் பண்ணுங்க… முக்கியமா அவர மருமகன் கணேசமூர்த்தி பத்தின விவரம்…”

“ஓகே சார், பண்ணிடலாம்…” என்றார் ஸ்ரீதர்.

“அந்த பர்த்டே பார்ட்டில கலந்துகிட்ட அரவிந்தோட பிரண்ட்ஸ்கிட்ட விசாரிச்சிங்களா… எந்த ஏரியால பார்ட்டி நடந்துச்சு…?”

“விசாரிச்ச வரைக்கும் யாருக்கும் சரியான எந்தத் தகவலும் சொல்ல முடியலை சார்… பார்ட்டி நடந்தது ஆவடி கிரீன்பீல்ட்ஸ் ரிசார்ட்ல, அங்க பார்ட்டி முடிஞ்சு அரவிந்த் பைக்ல கிளம்பினதை எல்லாரும் பார்த்திருக்காங்க… அதுக்கப்புறம், எதுவும் தெரியலை…”

“ஓ… அரவிந்த் போன பைக் என்னாச்சு…?”

“அது அம்பத்தூர் ஏரியால ஒரு மரத்துக்குக் கீழ பஞ்சராகி நிக்கறதப் பார்த்து யாரோ போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்பார்ம் பண்ணணி எடுத்துட்டு வந்தாச்சு சார்…”

“ம்ம்ம்…” என்றவன், “ஆவடில இருந்து பைக்ல கிளம்பின அரவிந்த் அம்பத்தூர் வழியா புரசைவாக்கம் வந்திட்டு இருக்கான்… வழியில பைக் பஞ்சராகி ஒரு மரத்தடியில் நிறுத்திட்டு நடுவுல காணாமப் போயி அடுத்தநாள் பொணமா கிடைச்சிருக்கான்னா, இந்த இடைப்பட்ட நேரத்துல என்ன நடந்திருக்கும்…” யோசனையுடன் கிருஷ்ணாவைப் பார்த்தான்.

“ஒருவேளை பைக் பஞ்சர் ஆனதால யாருகிட்டயாச்சும் லிப்ட் கேட்டு வேற வண்டில ஏறி இருக்கலாம் சார்…”

“பர்பக்ட்…” என்றான் அஜய். மதிய வெயில் பளபளப்பாய் உலகை நனைத்துக் கொண்டிருக்க ஸ்ரீதரை அவரது ஸ்டேஷனில் இறக்கிவிட்டு ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தனர்.

“கிருஷ்ணா, நான் லஞ்ச் முடிச்சிட்டு வந்துடறேன்…”

“கோகுல் கால் பண்ணார் சார்… நேத்து அந்த டிரைவர்கிட்ட பேசின டீடைல்ஸ் உங்ககிட்ட சொல்லணும்னு சொன்னார்…”

“ஓகே, நான் கால் பண்ணி கேட்டுக்கறேன்…” சொன்னவன் சற்றுத் தள்ளி நிழலில் பார்க் செய்திருந்த தனது புல்லட்டை நோக்கிப் போனான்.

தடதடத்து வெளியே வருகையில் ஸ்டேஷனுக்கு அருகே இருந்த பொட்டிக்கடையில் தொங்க விட்டிருந்த கிரைம் நாவல்களைப் பார்த்தவன், “அச்சு ரொம்ப நாளா கிரைம் நாவல் வாங்கிட்டு வர சொல்லிட்டே இருக்காளே…” என யோசித்து புல்லட்டை நிறுத்தி தொங்கிக் கொண்டிருந்ததில் பத்து புக்கை அள்ளிக்கொண்டு அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான்.

Advertisement