Advertisement

அத்தியாயம் – 1

அதிகாலை கிழக்குத் திசையில் சூரியனைப் பிரசவிக்கத் தயாராகிக் கொண்டிருக்க வானெங்கும் காலைப் பட்சிகளின் வரவேற்புக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

பூஜையறையில் மணமணக்கும் ஊதுபத்தி, சாம்பிராணி மணங்களுக்கு நடுவே தீபத்தை ஏற்றி வைத்து கை கூப்பி அமர்ந்திருந்தாள் ரேவதி. பதினாறு வயதுப் பெண்ணுக்கு அன்னையாக இருந்தாலும் அழகாய் இளமையாய் இருந்தாள்.

இயல்பாய் சிவந்திருந்த மெலிந்த இதழ்கள் காயத்ரி மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தன.

ஓம் பூர்ப் புவஸ்வஹ தத்ஸ விதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்

தீபாராதனையுடன் பூஜை முடித்து தலையிலிருந்த ஈர டவலை உருவிக்கொண்டே அடுக்களைக்குள் நுழைந்தாள்.

காபி பில்டரில் டிகாஷனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது பின்னில் கணவன் பிரசன்னாவின் குரல் கேட்டது.

“குட் மார்னிங் ரேவா…” நாற்பதுகளில் காதோரம் சின்னதாய் நரை முடிகள் எட்டிப் பார்த்தாலும் கம்பீரமாய் இருந்தான்.

டவலால் முகத்தைத் துடைத்தபடி வந்த கணவனை சின்னப் புன்னகையுடன் ஏறிட்டவள், “குட்மார்னிங்… காபி தரட்டுமாங்க…” எனக் கேட்க, “குடும்மா…” என்றான் அவன்.

இரு கோப்பையில் காபியை கொண்டு வந்தவள் ஒன்றை கணவனுக்கு நீட்டியபடி, “வர்ஷூவை எழுப்பி காபி கொடுத்துட்டு வந்துடறேன்…” எனவும் தலையாட்டினான்.

மகளின் அறைக்கு சென்ற ரேவதி காபியை அங்கிருந்த டீபாயின் மீது வைத்துவிட்டு போர்வைக்குள் சுருண்டிருந்த அழகு மகள் வர்ஷாவை அழைத்தாள். அவளுக்கு எழுந்தவுடன் பெட் காபி நிர்பந்தம்.

“வர்ஷும்மா, டைம் ஆச்சு… எழுந்திருடா…”

அன்னையின் குரலில் போர்வை அசைய அழகாய் உடலைக் குறுக்கி சோம்பல் முறித்தபடி கண் விழித்தாள் அவர்களின் செல்ல மகள்.

“மம்மி…” எழுந்தவள் ரேவதியைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட அந்த டர்ட்டி கிஸ்ஸை சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டவள் மகளின் நெற்றியில் இதழ் பதித்து, “இந்தா, உனக்கு பெட்காபி…” சொல்லிக் கொண்டே கோப்பையை நீட்ட வாங்கிக் கொண்டாள்.

அதை முகர்ந்த வர்ஷா, “ம்ம்ம்… பேஷ், பேஷ்… ரொம்ப நன்னாருக்கு, காபின்னா ரேவா காபி தான்…” சொல்லிக் கொண்டே குடித்தவள்,

“டாடி எழுந்தாச்சா மம்மி…” என்றாள்.

“ம்ம்… எழுந்து ரெடியா இருக்கார், நீ கிளம்பி வா…”

“இதோ, டென் மினிட்ஸ்…” சொன்னவள் காலிக் கோப்பையை நீட்ட வாங்கிக் கொண்டு புன்னகையுடன் சென்றாள் அன்னை.

நாளை பதினாறாம் பிறந்தநாள் விழா கொண்டாடப் போகும் வர்ஷா, ரேவதி பிரசன்னா தம்பதியரின் ஒரே செல்ல மகள். கல்யாணமாகி இரண்டு வருடங்கள் தவிப்புக்குப் பின் ரேவதியின் வயிற்றில் வரமாய் உதித்த நல்முத்து. பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதலாய் வந்து பெற்றோரைப் பெருமையில் திளைக்க வைத்த அறிவான, அன்பான மகள்.  பணப்பிரச்சனை இல்லாத உயர்தர நடுத்தரக் குடும்பம்.

தலையில் உயர்த்திக் கட்டிய போனி டைலுடன் ஷூ சப்திக்க, கையில் டென்னிஸ் பேட்டுடன் இறங்கி வந்த மகளைக் கனிவோடு நோக்கிய பிரசன்னா ஜாகிங் உடைக்கு மாறி இருக்க, “குட் மார்னிங் டாட்…” என்றாள் மகள்.

“குட் மார்னிங் செல்லம், கிளம்பலாமா…”

“எஸ் டாட், ஐ ஆம் ரெடி…”

இருவரும் காரில் அமர, சிவப்பு நிற போலோ செல்ல சிணுங்கலுடன் வழுக்கிக் கொண்டு சாலையில் கலந்தது.

“வர்ஷூமா, நாளைக்கு ஈவனிங் உன் பர்த்டே பார்ட்டிக்கு பிரண்ட்ஸ் எல்லாரையும் இன்வைட் பண்ணிட்ட தான…”

“எஸ் டாட், எல்லாரும் ஈவனிங் வீட்டுக்கு வந்திருவாங்க… நாளைக்கு வசந்தம் ஆதரவற்றோர் இல்லத்துக்கு லஞ்ச் ஏற்பாடு பண்ணறேன்னு சொன்னிங்களே, சொல்லியாச்சா…?”

“ம்ம்… 150 பேருக்கு ஹோட்டல்ல லஞ்ச் ஆர்டர் பண்ணிட்டேன்… காலைல கோவிலுக்குப் போயி பூஜையை முடிச்சிட்டு அப்படியே ஆதரவற்றோர் இல்லத்துக்குப் போயி எல்லாருக்கும் லஞ்ச் கொடுக்கறோம்…”

“ம்ம்… சூப்பர் டாட், பட் அதுக்கு நிறைய செலவாகுமே…”

“ஆனா என்ன..? என் செல்லப் பொண்ணு பிறந்தாளுக்கு அவங்க எல்லாம் வயிரோட மனசும் நிறைஞ்சு வாழ்த்து சொல்லனும்னு தான் எங்க ஆசை…”

“லவ் யூ டாட், யூ ஆர் கிரேட்…” என்ற மகளின் முன்னுச்சியில் நேசத்துடன் முத்தமிட்டு, டென்னிஸ் கோர்ட் முன்பு இறக்கிவிட்டவர் அருகே இருந்த பார்க்கில் தனது நடைபயணத்தை தொடங்கினார்.

****************

ஆத்ரேயா டெக்ஸ்டைல்ஸ் பி லிமிடட்.

முகப்பில் பெரிய பெயர்ப்பலகையுடன் கம்பீரமாய் நின்றது அந்த நாலடுக்கு கட்டிடம். ஆடவர், மகளிர்க்குத் தேவையான உள்ளாடைகள் முதல் ஆயத்த ஆடைகள் வரை தனித் தனிப்பிரிவில் தயாராகிக் கொண்டிருந்தன. பெரும்பாலும் ஏற்றுமதிக்காய் வடிவமைக்கப்படும் ஆடைகள் என்பதால் ஒவ்வொரு தளத்திலும் வேலை செய்பவர்கள் சூபர்வைசரின் கண்காணிப்புடன் இயங்கிக் கொண்டிருந்தனர். அங்கங்கே சிசிடிவி கறுப்பு வௌவால்களாய் சுவரில் அமர்ந்திருந்தது.

அனைத்து தளத்திலும் நடக்கும் விஷயங்கள் அனைத்தும் ஒரு அறையில் இருந்த தொலைக்காட்சி திரையில் லைவ் டெலிகாஸ்ட் ஆகிக் கொண்டிருக்க மேசை மீது இருந்த நேம் பிளேட் பிரசன்னா, ஜெனரல் மானேஜர் எனக் காட்டியது.

ஒரு பைலில் மூழ்கி இருந்தவரை இன்டர்காம் சிணுங்கி எடுக்க சொல்ல ரிசீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தார்.

“பிரசன்னா, என் ரூமுக்கு வாங்க…” ரிசீவரில் வழிந்த மானேஜிங் டைரக்டரின் கம்பீரக் குரலுக்கு, “இதோ, வர்றேன் சார்…” என்றவர் வேகமாய் எழுந்தார்.

நிறுவனத்தின் வருமானத்தை இன்னும் கூட்டுவதற்காய் மும்முரமாய் பணியில் இருந்த தொழிலாளர்களை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே இரண்டு பெரிய ஹால்களைக் கடந்து அந்த அறையின் முன் நின்றார்.

கண்ணாடிக் கதவின் முன் நின்று மெல்ல டொக், டொக், செய்து, “மே ஐ கமின் சார்…” எனக் குரல் கொடுக்க, உள்ளிருந்து “எஸ் கமின்…” என்ற பதில் குரல் அனுமதி கொடுத்தது. ஏசியின் இதமான உருமல் லாவண்டர் மணத்துடன் அறையை கூலாக்கி இருந்தது.

கிரானைட் மேஜையின் பின்னிலிருந்த நாற்காலியில் கம்பீரமாய் அமர்ந்திருந்த 25 வயது ஆத்ரேயன் கையிலிருந்த பைலை மேஜை மீது வைத்துவிட்டு நிமிர்ந்தான். ஹீரோவாகும் அனைத்துத் தகுதிகளுடனும், பெயருக்கேற்ற கம்பீரத்துடனும் இருந்தவனைக் கண்டு கொள்ளாமலிருந்தது சினிமாவுலகத்திற்கு பெரிய பேரிழப்பு.

அளவாய் கத்திரித்திருந்த மீசைகளுக்கு கீழே வரிசையாய் பளீரிட்ட வெண்பற்கள் தெரிய மெல்ல புன்னகைத்தவன், “மிஸ்டர் பிரசன்னா, கனடாவுல இருந்து நம்ம புதிய ஆர்டருக்கு வந்த கொட்டேஷனைப் பார்த்துட்டேன், ரேட் ஓகே… நம்ம பேமன்ட் டெர்ம்ஸ், டிஸ்பாட்ச் ஷெட்யூல் எல்லாத்தையும் கரெக்டா பிளான் பண்ணி ஒரு டீடைல்டு மெயில் கொடுத்திருங்க…”

“ஓகே சார்…”

“எக்ஸ்போர்ட் ஆர்டர்… சோ, குவாலிட்டில எந்த காம்ப்ரமைசும் வேண்டாம், நீங்க பாலோ பண்ணிக்கங்க…”

“ஷ்யூர் சார்…”

“நம்ம டெல்லி ஆர்டரோட எல்சி அமன்ட்மன்ட் என்னாச்சு, பாங்க்ல பாலோ பண்ணிங்களா…?”

“எஸ் சார், இன்னைக்கு கிரெடிட் ஆகிடும்னு சொன்னாங்க…”

“குட்… நான் நம்ம புரடக்சன் யூனிட்டுக்குக் கிளம்பறேன், வேற எதுவும் பார்க்கணுமா…?” அவர்களின் புரடக்ஷன் யூனிட் சற்று அவுட்டரில் இருந்தது.

“இந்த ஒரு கான்ட்ராக்ட் பைல்ல மட்டும் சைன் பண்ணனும் சார்…” சொன்னவர் கையிலிருந்த பைலை மேஜை மீது வைக்க, அதில் பார்வையை ஓட்டினான் ஆத்ரேயன்.

எல்லாம் சரியாய் இருக்கவே, “ஆத்ரேயன்” என சாய்வாய் தனது கையெழுத்தை இட்டு கீழே அடிக்கோடிட்டு நீட்டினான்.

“சார், ஒரு சின்ன பர்சனல் ரிக்வஸ்ட்…”

“சொல்லுங்க பிரசன்னா…”

“நாளைக்கு எங்க பொண்ணு வர்ஷாவோட 16த் பர்த்டே… ஈவனிங் வீட்டுல ஒரு சின்ன பார்ட்டி இருக்கு, நீங்களும் வந்து கலந்துகிட்டா ரொம்ப சந்தோஷப் படுவேன்…”

“ஹோ நைஸ்… பார்ட்டி என்ன டைம்…?”

“ஈவனிங் 6 டு 9 சார்…”

யோசித்தவன், “ஓகே, டிரை பண்ணறேன்…” எனவும் சந்தோஷமாய் சிரித்தார் பிரசன்னா.

அவர் தனது அறைக்கு கிளம்ப ஆத்ரேயன் புரடக்சன் யூனிட்டுக்குக் கிளம்பினான். பாக்கெட்டில் இருந்த கறுப்பு கூலர் கண்ணைக் கவ்வியிருக்க லிப்டுக்குள் நுழைந்து கிரவுண்ட் புளோரில் இறங்கி பார்க்கிங்கில் இருந்த தனது கறுப்பு நிற ஸ்கோடாவை நோக்கி நகர்ந்தான்.

*************

மாலை நேரக் குளிர் காற்று உடலை சுகமாய் வருடி செல்ல, ஏழு மாதக் குழந்தையை வயிற்றுக்குள் சுமந்து கொண்டு தோட்டத்தில் மெல்ல நடந்து கொண்டிருந்தாள் ஆனந்தி. கைகளில் அடுக்கியிருந்த கண்ணாடி வளையல்கள் அவளது வளைகாப்பு முடிந்து சில நாட்களே ஆயிருந்தன என்பதை சிணுங்கலுடன் கூறிக் கொண்டிருந்தது.

வரிசையாய் பல வண்ணங்களில் மனதைக் கவர்ந்தன ரோஜாப் பூக்கள். தோட்டம் முழுதும் ரோஜாச்செடிகள்  மட்டுமே நடப்பட்டு கவனமாய் பராமரிக்கப்பட்டு வந்ததால் எல்லாச் செடிகளும் சந்தோஷமாய் பூத்துக் குலுங்கின. செடிகளை தனது சொந்தக் குழந்தை போல் பார்த்துக் கொள்ளும் தோட்டக்காரன் காசியே அதற்குக் காரணம்.

“காசிண்ணே… நம்மகிட்ட எல்லாக் கலர் ரோஸும் இருக்கு, ஆனா, கறுப்புக் கலர் ரோஸ் மட்டும் இல்லியே…”

“என்ன தாயி சொல்லற, கறுப்புக் கலர்ல ரோஸா…?”

“ஆமா காசிண்ணே, கறுப்பு, பச்சை கலர்ல கூட ரோஸ் இருக்குன்னு சொல்லறாங்க… ஆனா, நான் பார்த்ததில்லை…”

“ஓ… அந்தக் கலர்ல எல்லாம் ரோஸ் பார்க்க அழகாவா இருக்கும்…” என்றார் அவர் திகைப்புடன்.

“அழகா இருக்கோ இல்லியோ, ஒரு புது முயற்சியின் வெளிப்பாடு தான்…” சொல்லிக் கொண்டே ஒரு பூவை கைக்குள் எடுத்துக் கொண்டவள், “என்ன இருந்தாலும் நம்ம பன்னீர் ரோஸ் மணம் எந்த ரோஸ்க்கும் வராது…” சொல்லிக் கொண்டே முகர்ந்து கண்களை மூடி அனுபவித்தாள். வயிற்றுக்குள் இருந்த குழந்தையும் அதை ரசித்ததோ என்னவோ, மெல்ல நெளிய, புன்னகையுடன் ஒரு கையை வயிற்றில் வைத்து தடவிக் கொடுத்தாள் ஆனந்தி.

“சரி, காத்து விசுவிசுன்னு வீசுது, வீட்டுக்குள்ள போ தாயி…” காசி சொல்ல, மறுக்காமல் வீட்டை நோக்கி நடந்தாள்.

ஆனந்தியின் வீட்டில் வேலை செய்து வந்த காசியின் பெற்றோர், அவன் பத்தாவது படிக்கும்போது ஒரு விபத்தில் இறந்து போக அதற்குப் பின் ஆனந்தியின் பெற்றோர் தான் வளர்த்திருந்தனர். ஆனந்தியும் ஐந்து வயது முதலே பார்க்கத் தொடங்கிய காசியை ஒரு சகோதரனைப் போலவே நினைத்தாள். அவளுக்கு ஒரு பாடி கார்டாய், கார் டிரைவராய்,. நல்ல நண்பனாய், உடன் பிறவா அண்ணனாய் எனப் பல முகங்கள் உண்டு அவர்களின் உறவுக்கு.

ஆனந்தியின் கல்லூரிப் படிப்பு முடிந்த சமயத்தில் தந்தைக்கு மாரடைப்பு வந்து உயிர் விடவே அவர்களின் கம்பெனிப் பொறுப்பை ஒரே மகளான ஆனந்தி பார்த்துக் கொள்ளும் நிலை வந்தது. காசியும் உடனிருந்து அவளுக்கு உதவி செய்தார். கணவன் இழந்த துக்கம் தாங்காமல் ஆனந்தியின் அன்னையும் சீக்கிரமே மூச்சை நிறுத்திக் கொள்ள காசி மட்டுமே அவளுக்கு சகல விதத்திலும் பாதுகாவலனாய் இருந்தார்.

ஆனந்தியின் கல்லூரியில் படித்த சீனியர் பாலாஜி அவளை விரும்புவதாய் கூறவே அவளுக்கும் அவனைப் பிடித்திருக்க, இருவருக்கும் இனிதே கல்யாணம் முடிந்து வாழ்க்கை சுமுகமாய் சென்று கொண்டிருந்தது.

இருவரும் கம்பெனியைப் பார்த்துக் கொள்ள வளைகாப்பு வரை அலுவலகம் சென்று வந்தவளை, பிரசவம் முடியும் வரை ஓய்வெடுக்கும்படி கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டில் உட்கார வைத்திருந்தான் பாலாஜி.

“காசிண்ணே… நீயும் எவ்ளோ நாள்தான் இந்தக் குடும்பத்துக்காகவே உழைப்ப… உனக்கும் ஒரு கல்யாணம், குடும்பம்லாம் வேண்டாமா…?” கேட்டவளை நோக்கி சிரித்தான் காசி.

“எனக்கு அதுல எல்லாம் விருப்பம் இல்ல தாயி… இந்த செடிங்க தான் என் புள்ளைங்க, நீ தான் எனக்கு அம்மா… உன் குடும்பம் தான் என் குடும்பம், புள்ளையப் பெத்து என்கிட்ட கொடுத்துட்டு நீ கம்பெனி வேலையைப் பாரு… கண்ணுக்குள்ள வச்சு நான் வளர்த்திக்குவேன்… இதுக்கு மேல எனக்கு எதுவும் வேண்டாம் தாயி…”

காசி சொல்லவும் நெகிழ்ச்சியுடன் அவரைப் பார்த்தாள் ஆனந்தி. சட்டென்று வயிற்றுக்குள் பிள்ளை உதைக்கவே, “ஆ…” எனத் துள்ளியவள்,

“உன் பேச்சைக் கேட்டு என் பிள்ளை  சந்தோஷத்துல துள்ளறான் பாருண்ணே… இப்படி ஒரு மாமனை எப்பப் பார்க்கப் போறோம்னு கேக்குறான்…” சொல்லிக் கொண்டே வயிற்றைத் தடவிக் கொண்டாள்.

“ஹாஹா… நானும் என் மருமகனைப் பார்க்க ஆவலா காத்திருக்கேன்னு சொல்லு தாயி…” என்ற காசி புன்னகையுடன் நகர்ந்தார்.

Advertisement