Advertisement

நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை

அத்தியாயம் 5 

??????

கடந்த பத்து வருடங்களாக மனதை மிகவும் அழுத்திய ஒரு கேள்வி இன்று மகளின் வாயிலாக கேட்கப்பட்டதும் அதுவே பயங்கரமாக தெரிந்ததால் துளசி மிகவும் மனமுடைந்து போய் விட்டாள்.

 அதனால் காலையில் எழுந்து அவளது வேலைகளை முடித்துவிட்டு. மகளையும் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் அனுப்பி வைத்துவிட்டு. மனம் சங்கடமான நேரங்களில் அவள் செல்லும் சிவன் கோயிலுக்கு வந்தாள்.

 அலங்காரங்களில் நடுவே அம்சமாக இருந்த லிங்கத்தை பார்த்து கையெடுத்து வணங்கி அவளது மனக்குமுறல்களை ஒருமுறை மனதோடு கூறிவிட்டு நீண்ட பெருமூச்செறிந்து சிவனைப் பார்த்து வணங்கி விட்டு துளசி அங்கிருந்த பிரகாரத்தில் கண்கள் மூடி சாய்ந்து அமர்ந்து விட்டாள்..

 சிறிது நேரத்திற்குப் பின் இடது தோளை ஒரு கை தொட்டு அசைத்தது.

 அந்த தொடுகையில் சிலைக்கு உயிர் வந்ததோ..! எனும் விதமாக மீண்டும் கண் மலர்ந்து யாரென்று திரும்பிப் பார்த்தாள்..

 சாட்சாத் சிவனின் அருகில் வீற்றிருக்கும் பார்வதி போன்று மங்களகரமாக ஒரு பெண் வந்து அவளது அருகில் அமர்ந்திருந்தார்..

அவளோ அப் பெண்மணி யார் என்று தெரியாமல் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தாள் ..

 பூ மலர்ந்தது போன்று அழகான அளவான புன்னகையை முகத்தில் தாங்கியபடி அவளிடம் தன்னை அறிமுகப்படுத்தினார் அந்த பெண்மணி..

 ” என் பெயர் மீனாட்சி தாயி. என்ன அப்புடி பார்க்கிற. இதுக்கு முதலும் நான் இந்த கோவில் வரும்போது உன்னை பார்த்திருக்கேன்.நீ இதே போலவே சோகமா இருப்ப நானும் பார்த்துட்டு. யாருக்கு தான் கஷ்டம் இல்லாத வாழ்க்கை கிடைக்குது அப்புடின்னு நினைத்து மனச ஆறுதல் படுத்திட்டு போயிடுவேன் தாயி. ஆனால் இன்னைக்கு என்னால அப்புடி கடந்து போகமுடியலை.”

” உன்னோட இந்த கவலை அப்பி சோர்ந்து போன முகத்தை பார்த்தா எனக்குள்ள பல சிந்தனைகள் உருவாகுது தாயி. அதோ எல்லாத்தையும் இந்த உலகத்திற்கு படைத்துவிட்டு அவரே மனிதர்கள் முதல் விலங்குகள் என எல்லாவற்றையும் ஆட்டிப்படைத்துக் கொண்டு அனைத்தையும் அறிந்தும் அறியாமலும் ஒவ்வொரு மனிதனோட வாழ்க்கையிலயும் வெவ்வேறு விதமான சிக்கல்கள் பல முடிச்சுகளை போட்டு நம்மளை நல் வாழ்க்கைக்கு பக்குவப்படுத்தி வழிநடத்திக் கொண்டிருக்கிறாரே அந்த ஈசன். அவர் மேல பாரத்தை போட்டுட்டு உன்னோட மிகுதியான வாழ்க்கையும் சந்தோஷமாக வாழ்வதற்கு வழி செய்து கொள் தாயி.”

” ஒரு குழந்தை பிறந்து அது நடக்க ஆரம்பிக்கிறதுக்கு இடைப்பட்ட காலத்தில் அது எவ்வளவு கஷ்டப்பட்டு கடினப்பட்டு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அதோட நடையை பழகுமோ அதுபோலதான் ஒரு மனிதனுடைய வாழ்க்கையும் இருக்கும். ஒரு மனிதன் பிறந்த உடனே பணக்காரனாகவும் வசதி படைத்தவனாக நினைத்ததை சாதிக்க கூடியவனாக இருப்பதே இல்லை ஒவ்வொரு மனிதனும் பல சிக்கல்கள் பிரச்சினைகளைக் கடந்து தான் வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்து இருப்பாங்க. உனக்கும் காலங்கள் தந்த சோதனைகளை கையில் எடுத்துக்கொண்டு இந்த சோதனையை வேதனை இல்லாம எப்படி சாதனையாக்கி காட்டலாம் என்று நீ சிந்தித்து முடிவெடு.. “

” நான் உன்னைப் போல பல கஷ்டங்களை அனுபவித்து தான் இறுதியாக இந்த மகிழ்ச்சியான வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கிறேன்.. உன்னோட கஷ்டங்கள் என்னவென்று கூட எனக்கு தெரியாது. ஆனால் உனது முகமே எடுத்து காட்டும் கண்ணாடி போல உன்னோடு மன வேதனைகளை பிரதிபலிக்கிறது. உன்னை பார்த்த என்னோட பொண்ணு வயதை ஒத்த பொண்ணு மாதிரி தெரியுது. மன சங்கடங்களை சிவனோட காலடியில் போட்டுட்டு அடுத்த ஆகவேண்டிய உனக்கான கடமைகளை நீ திறம்பட செய்து வாழ்க்கையோட வெற்றியை அடையனும்.” 

 ” என்னோட மாமியார் என்னை சார்ந்த என்னோட சொந்தங்கள் நண்பர்கள் யாரையும் வீட்டுக்கு அழைத்து செல்வதை விரும்ப மாட்டார்கள். அதனால் இதுபோன்று இனிமேலும் சிவனின் பிராப்தம் இருந்தால் இதே சிவன் கோயிலில் நாம மீண்டும் சந்தித்துக் கொள்வோம் தாயி. நீ கலங்காம இரு. கூடிய சீக்கிரமே உனக்கான நல்லது அனைத்தும் நடக்கப்போகுது என என்னோட உள் மனசு சொல்லுது.. ஓரளவிற்கு இந்த வாழ்க்கை எனக்கு பல பாடங்களை கற்று தந்திருக்கு. அதான் மூலமா மனிதர்களோடு முகத்த வச்சு அவங்களோட குணங்களை கணிக்கக் கூடிய திறமையை அந்த கடவுள் எனக்கு தந்திருக்கிறார். அதை வைத்து தான் நான் இப்போ சொல்லுறேன் நீயே எதிர்பாராத பல திருப்பங்கள் மூலமா மகிழ்ச்சியா உன்னோட வாழ்க்கை அமையப் போகுது என என்னோட மனசுக்கு படுது அது எப்பவுமே தவறாக இருந்ததே இல்லை.. ” என்று கூறி துளசியின் மனதில் உள்ள சங்கடங்களை ஓரளவுக்கு அவரது பேச்சு திறமையால் குறைத்துவிட்டு துளசியின் கண்ணீரை துடைத்து அவளை அணைத்து ஆறுதல் படுத்தி அங்கிருந்த திருநீறு குங்குமத்தை எடுத்து துளசியின் நெற்றியில் வைத்து அவளை ஆசீர்வதித்து விட்டு அவளிடம் கூறிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் மீனாட்சி..

சிறு வயதிலிருந்தே தாயின் கஷ்டத்தை அறிந்து வளர்ந்த துளசி தனக்கு என்று தனியாக ஆசைகள் எதையும் வைத்துக்கொள்ள மாட்டாள்.. யதார்த்தமான ஒரு வாழ்க்கையை இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.. தன் போக்கில் அவளது வேலைகள் கடமைகள் என அதனோடு பயணித்துக் கொண்டிருக்கிறாள்..

 இதுவரை காலமும் அவளால் அறிய முடியாத ஒரு விடயம் நான் இன்று மனம் கலங்கி கொண்டு சோகத்தோடு இருந்தால் மட்டும் தெரிந்துவிடுமோ?. என்கிற உண்மை நிலையை புரிந்த பின்னர் மீனாட்சியின் உபதேசம் அவளை சற்று இயல்பு நிலைக்கு கொண்டுவந்ததால் கண்களை துடைத்துக் கொண்டு மீண்டும் ஒரு பத்து நிமிடம் கண் இமைக்காமல் அந்த சிவ லிங்கத்தையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அவளது வீட்டிற்கு சென்றாள்..

 அவளுக்கென்று வார நாட்களில் கொடுக்கப்படும் விடுமுறை நாட்களில் கூட அவள் வீட்டில் இருப்பதில்லை. அவளது மகள் மீரா வீட்டில் இல்லாமல் தனிமையாக அந்த வீட்டில் அவளால் இருக்க முடியவில்லை என்பதே உண்மை. அந்த தனிமையை விரட்டுவதற்காக அவள் விடுமுறை எடுக்காமல் வேலை நாட்கள் முழுவதும் வேலைக்கு சென்று விடுவாள்.

 இன்று காலையில் இருந்த மனச்சோர்வினால் வேலைக்கு செல்ல விருப்பம் இல்லாமல் கோவிலுக்கு வந்தவள் அங்கு நடந்த மனமாற்றத்தின் காரணமாக துளசி மீண்டும் வேலைக்கு செல்வதற்கு தயாராகி விட்டாள்..

 ஏசிபி விக்ரம் சாகர் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.

 அதை கலைக்கும் விதமாக இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா அவனை சந்திக்க வந்தான்.

 கிருஷ்ணாவின் வரவை எதிர்பார்த்து இருந்தது போன்று அவனோடு பெண்கள் கடத்தல் கேஸ் பற்றி பேச ஆரம்பித்து விட்டான்.

” நம்மளோட திட்டம் ரொம்ப கரெக்டா போயிட்டு இருக்கு. நீங்க திங்க் பண்ற மாதிரி இந்த கடத்தல் கூட்டத்திற்கு பெரிய முதலைகளோட சப்போர்ட் ரொம்ப அதிகமாவே இருக்கு சார்.. அதனாலதான் அவங்களால இவ்வளவு திமிரா தொழில் பண்ண முடியுது. கூடிய சீக்கிரமே ஃபுள் எபெக்ட் போட்டு கூண்டோடு அழித்து விடனும் சார். நம்ம தாமதிக்கும் ஒவ்வொரு நிமிஷமும் ஒரு பொண்ணோட வாழ்க்கை கேள்விக்குறி ஆகி கொண்டே இருக்கு சார்..” என்று அவனது மனக்குமுறல்களை ஆக்ரோஷமாக வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.

 கிருஷ்ணா கூறிய அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு அவன் எடுத்துவந்த பையில்களில் கவனத்தை செலுத்த ஆரம்பித்து விட்டான் விக்ரம்.

 அவனது இந்த செயல்பாடு கிருஷ்ணா அங்கிருந்து செல்ல வேண்டும் என்பதை கூறாமல் புரிந்து கொண்டு அவனும் சல்யூட் வைத்து விட்டு வெளியே சென்று விட்டான்..

 ஃபைலை மூடி வைத்துவிட்டு தலையை கைகளால் தாங்கி கொண்டு ஏதோ ஒரு பெரிய தவறு நடக்கப் போகின்றது என்பதற்கு ஆதாரமாக அவனிற்கு மனம் மிகுந்த சஞ்சலமாக காணப்பட்டது.

அதை அவனால் தவிர்க்கவும் முடியவில்லை அதே நேரம் அவனால் இலகுவாக விடவும் முடியவில்லை.

இந்த மன சஞ்சலத்தை சற்று நேரம் ஒதுக்கி விட்டு இந்த கடத்தல் பைலை கையில் எடுத்து முக்கியமான குறிப்புகளை நோட்டில் குறிக்க ஆரம்பித்துவிட்டான் விக்ரம்.

 பையாவின் கோட்டைக்குள்.

 நேற்று இரவு பையா ஜெகனிடம் இருந்து கடத்தி வந்த பெண்களை ஒரு அறையில் அடைத்து வைத்திருந்தார்கள்.

 அவர்களோ தங்களுக்குள் இங்கிருந்து எவ்வாறு தப்பிப்பது என்ற பேச்சு வார்த்தைகளோடு அழுது கொண்டு இருந்தார்கள்.

 அப்போது அங்கு சந்தோஷ் வந்தான்.

” பொண்ணுங்களா இப்ப உங்களை வேறு ஒரு இடத்துக்கு கைமாத்த போறோம். யாருமே வாயைத் திறக்கக் கூடாது அப்படியே அமைதியா என்னோட வந்தீங்க அப்படினா உயிரோடயாவது இருப்பீங்க. என்னா சரியா? இல்லனு யாராவது வாயை திறந்து கத்தினாலும் அவங்களை இந்த துப்பாக்கியால அந்த இடத்திலேயே சுட்டு போட்டுட்டு நான் மத்தவங்கள அழைச்சுட்டு போய்கிட்டே இருப்பேன்.” என்று ஒரு சிறு பெண் தலையில் துப்பாக்கியை வைத்து மற்ற பெண்களையும் கோட்டையில் இருக்கும் ரகசிய வழியில் அழைத்து சென்றான்.

வழமை போன்று இன்றும் மீராவை ஸ்கூல் முடிந்ததும் அவளது வகுப்பு சக மாணவர்கள் துளசிமணி என்று அழைத்து அவளது மனதை மேலும் துன்ப படுத்தினார்கள்.

அவளும் அதை கடந்து பாடசாலை வளாகத்தை விட்டு கண் கலங்கியவாறு நடைபாதை வழியாக நடந்து அவள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள்..  

 இப்பொழுது சில நாட்களாக அவள் தனியாக வருவதை அறிந்து கொண்ட கடத்தல் கூட்டம் அவள் அழுது கொண்டு வருவதை பார்த்து ஏதோ பிரச்சனை என்று தெரிந்து கொண்டு அவளை தூக்கினால் கேட்பதற்கு ஆளில்லை என்று நினைத்துக் கொண்டு அவள் நடந்து செல்லும் பாதையில் அவளை பின் தொடர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தார்கள்..

 பாடசாலையிலிருந்து மீராவின் வீட்டிற்கு செல்லும் இடைப்பட்ட பகுதியில் சற்று ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது..

 அதைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களது வாகனத்தை வருமாறு கைபேசியில் அழைப்பு விடுத்து விட்டு மீராவின் வாயைப் பொத்திக் கொண்டு அருகிலிருந்த மரத்திற்கு பின்னால் மறைந்து கொண்டார்கள்..

 சற்று நேரத்தில் அவர்களது வாகனமும் குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் மீராவை அதில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புழுதியைக் கிளப்பிக் கொண்டு மின்னல் வேகத்தில் அந்த வாகனம் சென்றது..

 அந்த கொடிய கயவர்களிடம் இருந்து அந்த சிறு பிஞ்சு குழந்தையும் போராடி தவித்து சக மாணவர்களின் கேலி கிண்டலினால் மனம் சோர்ந்து உடலும் சோர்ந்து போராட சக்தி இல்லாமல் அவர்களிடமே மயங்கி சரிந்து விட்டாள்..

” டேய் சீக்கிரம் போங்க டா இந்த பாப்பா மயக்கம் தெளிஞ்சு கத்துவதற்கு முன்பு ஒப்படைத்தால் நமக்கு இன்னைக்கு ராஜ வேட்டைதான்.. ” என்று அந்த மூன்று அரக்கன்களும் தங்களுக்குள் பேசி சிரித்துக்கொண்டு ஒரு பிஞ்சுக் குழந்தையின் வாழ்க்கையை அழிக்க போகின்றோம் என்ற கவலை சிறிதும் இன்றி அவர்களுக்கு இன்று கிடைக்க இருக்கும் பிரியாணியும் சரக்கும் அதோடு கூடிய பெண் சகவாசமும் கிடைக்கும். அந்த போதையை அனுபவிப்பதற்காக அவர்களின் இழி செயல் அவர்களை மிருகமாக மாற்றிவிட்டதை உணராமல் போய்விட்டார்கள்..

 மீராவின் நிலை என்ன?..

 மீராவை யார் காப்பாற்றுவார்கள்.?

இதை துளசி எவ்வாறு எதிர்கொள்வாள்.

 செல்லம்ஸ் இந்த மூன்று கேள்விக்கும் யார் கரெக்டா பதில் சொல்கிறார்கள் என்று பார்ப்போமா.??????

Advertisement