Advertisement

நெஞ்சம் பேசுதே 22

        எப்படியோ ஒருவழியாக திருமகள் நாச்சியாரை சரிகட்டி, வாசுதேவன் தன்னுடன் அழைத்து வந்துவிட, வீட்டை நெருங்க நெருங்க ஒரு இனம்புரியாத அச்சம் வியாபித்துக் கொண்டது திருமகளை.

        விசாலத்திடம் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறியது இந்த நிமிடம்தான் உரைத்தது அவளுக்கு. கால்கள் தயக்கத்துடன் தந்தியடிக்க, உள்ளே செல்வதா.. இல்லை, இப்படியே ஓடிவிடுவோமா என்று ஏககுழப்பம் பெண்ணுக்கு.

      விசாலத்தின் வாய் அவள் அறிந்தது தானே. நிச்சயம் பேசிவிடுவார். திருமணம் முடிந்த நாளாக ஒருவார்த்தை கூட கடிந்து பேசியிராதவரிடம் இன்று மொத்தமாக வாங்கி கட்ட போகிறோம் என்று பயத்துடனே அவள் வீட்டிற்குள் நுழைய, அவளைப் போல் எந்த தயக்கமும் இல்லை வாசுதேவனிடம்.

     மனைவியின் கையைப் பிடித்து அழைத்து வந்தவனுக்கு அவள் தடுமாற்றம் புரிந்தே இருந்தது. திருமணம் முடிந்து முதல்முறை வீட்டிற்குள் நுழைந்தபோது கூட, இப்படி தயங்கியவள் இல்லையே.

      அவள் பதட்டத்தில் லேசாக புன்னகை தோன்றினாலும், ஏதுமறியாத பிள்ளையாக சிரிப்பை அடக்கிக்கொண்டான் அவன். திருமகள் வாசலில் இருந்தே வீட்டினுள் எட்டிப் பார்க்க, அவள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்பவராக வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்தார் விசாலம்.

      தோட்டத்தில் இருந்து பூஜைக்காக கொண்டு வந்திருந்த பூக்களை தொடுத்துக் கொண்டு அமர்ந்திருந்தவர் அரவம் உணர்ந்து நிமிர, அப்போதுதான் கண்ணில்பட்டாள் மருமகள்.

       திருமகளைக் கண்டு முகம் மலர்ந்தாலும், சட்டென இறுகியவராக அமர்ந்திருந்த இடத்தில இருந்து எழுந்துகொண்டார் விசாலம். திரு அசையாமல் வாசலில் நிற்க, அவளைக் கண்டுகொள்ளாமல் திரும்பி நடந்தார் அவர்.

      “நான் உள்ளே வரட்டுமா.? வேண்டாமா..?” என்றவள் முகத்தைப் பாவமாக வைத்துகொள்ள,

      நின்று அவளைத் திரும்பி நோக்கியபடியே “என்கிட்டே கேட்டா நீ வெளியே போன..” என்றார் விசாலம். அளவுகடந்த குத்தல் இருந்தது அவர் குரலில்.

      யோசிக்கவே இல்லை திரு. “இவர்தான் போக சொன்னாரு..” என்று அழகாக கணவனைக் கைகாட்டினாள்.

       “அவன் சொல்லித்தானே போன.. அப்போ இப்பமட்டும் ஏன் என்கிட்டே கேட்கிற.. உன் புருஷன்கிட்டேயே பேசிக்கோ..” என்றவர் மீண்டும் நடக்க, 

       “அத்தை..” என்று சிணுங்கினாள் திரு.

       அவளைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாதவராக விசாலம் அறைக்கு சென்றுவிட, வாசுதேவனைப் வருத்ததுடன் பார்த்தாள் திருமகள்.

       “கம்மிதான்.. நான் அடியே வாங்கிட்டேன்..” என்று சாதாரணமாக கூறியவன் அவளைக் கடந்து தங்கள் அறைக்குள் நுழைந்துவிட, அவனை அதிசயமாக பார்த்திருந்தாள் திருமகள்.

       அவனைத் தொடர்ந்து “நிஜமா அடிச்சாங்களா..” என்று அதிர்ச்சி நீங்காமல் அவள் வினவ, ஆமோதிப்பவனாக தலையசைத்தான் வாசுதேவன்.

       திருவிற்கு ஏனென்றே புரியாமல் சிரிப்பு வர, “நான் அடிவாங்கினது உனக்கு சிரிப்பா இருக்கா..” என்று அவள் இடையை வளைத்தான் அவன்.

      அவன் அழுத்தத்தில் “இல்ல இல்ல.. சும்மா சிரிச்சேன்.. ஹா.. சாரி மாமா..” என்று திரு நெளிய, அவளின் அட்டகாசங்களில் வாசுதேவன் சிரித்துவிட்டான்.

       அவன் சிரிப்பில் “எதுக்காக அடிச்சாங்க.. நீங்க என்ன செஞ்சிங்க..” என்று திரு கணவனை விசாரிக்க, 

       “அவங்க மருமகளை துரத்தி விட்டேன்னு அடிச்சாங்க.. ரொம்ப வருத்தப்பட்டாங்க திரு.” என்று வாசுதேவன் வருத்தம் கொள்ள, விசாலத்தின் அன்பில் வழக்கம்போல் வார்த்தையற்ற நிலைதான் திருமகளுக்கு.

       “இனி இப்படி எதுவும் செய்யாத. என்னக்கு கொஞ்சம் வ்வாய் நீளம்தான். சட்டுன்னு எல்லாம் குறைக்க முடியாது.. நம்ம விஷயங்கள் அவங்களை பாதிக்காம பார்த்துக்கோ…” என்று அன்பான அதட்டலாக அவன் கூறிமுடிக்க, அவனை மறுக்க மனதில்லாமல் தலையசைத்து வைத்தாள் திரு.

        ஆனாலும், ”அப்போகூட பேசமாட்டேன்னு சொல்லமாட்டிங்க இல்ல..” என்று திரு முறைக்க

        “உன்கிட்ட அப்படி பார்த்து பார்த்தெல்லாம் பேச முடியாதுடி..” என்றான் கடுப்பாக.

        “நல்லா சமாளிக்கிறிங்க மாமா..” என்று திரு மீண்டும் நக்கலடிக்க, இப்போது அவளை முறைக்க தொடங்கிவிட்டான் வாசுதேவன்.

        “அச்சோ.. திரும்ப தீவிரவாதியாகி முறைக்காதிங்க.. நாம சமாதானமா போயிடுவோம்..” என்றவள் கட்டிலில் அமர, முழுதாக இரண்டு நாட்களுக்குப் பின் நிம்மதியாக சுவாசிக்கும் உணர்வு வாசுதேவனுக்கு.

        நேற்று முழுவதும் பஞ்சாயத்து, சண்டை என்று ஓடிவிட, அதன்பின்னான நேரம் மொத்தம் திருமகளை தேடுவதில் கழிந்திருந்ததே. அதன்பின்னும் அவள் வீடு வராமல் எங்கே சுவாசிக்க முடிந்தது அவனால்.

       அவன் அறையே முற்றிலும் அன்னியமாகிப் போனதில் தானே அந்த அர்த்த ராத்திரியில் மனைவியைத் தேடி ஓடியது. இதோ இந்த கணம் தனக்கு முன்பாக இருப்பவள் தன் வாழ்க்கையின் இன்றியமையாதவள் என்ற உண்மையை மெல்ல மெல்ல உள்வாங்கிக் கொண்டிருந்தான் வாசுதேவன்.

         அவன் நினைவுகள் திருவைச் சுற்றியே இருக்க, வார்த்தைகள் மௌனித்து இருந்தது. திருவின் வெகு அருகில் அமர்ந்திருந்தவன் கைகள் மெல்ல அவளைத் தோளுடன் அணைத்துக் கொள்கையில், “சாமி கண்ணைக் குத்தும்..” என்று பட்டென அவன் நெஞ்சில் அடித்து அவனை மலை இறக்கினாள் அவன் மனைவி.

       அவள் எச்சரிக்கையை மீறி அவள் நெற்றியில் முத்தம் பதித்தவன் “இன்னும் எட்டுநாள் இருக்குடி..” என்று சோகமாக கூற, இதழ்பிரிக்காமல் புன்னகை செய்தாள் மனைவி.

       “சாமி காரியம் மாமா.. விளையாடாதிங்க..” என்று எச்சரிக்க வேறு செய்ய, “என்ன விளையாடினாங்க இப்ப..” என்று அலுத்துக்கொண்டே நகர்ந்து அமர்ந்தான் வாசுதேவன்.

        “இது வேலையாகாது.. நீங்க மில்லுக்கு கிளம்புங்க..” என்று திரு எழுந்துவிட, “த்திரு..” என்று கைநீட்டினான் வாசுதேவன்.

         அவன் முகத்தில் தெரிந்த உணர்வுகள் மறுக்கும் எண்ணத்தை தர மறுக்க, அவன் கையில் தன் கையை வைத்தாள் திரு.

         எதுவும் பேசாமல் அவளைத் தன்னருகில் இழுத்துக்கொண்டவன் இரு நிமிடங்கள் முழுதாக அவளைத் தன் அணைப்பில் நிறுத்திக் கொண்டான்.

           பின், அதுவே போதுமென்பவன் போல் அவளை விட்டு விலகி அவன் நடக்க, தனது பிரிவு இவனை இத்தனை பாதிக்கிறதா.. என்று குளிர்ந்தாள் திருமகள் நாச்சியார்.

        என்னவோ, இன்றைய வாசுதேவனின் செயல்கள் அவனை மீறியதாகவே தெரிந்து தொலைத்தது அவளுக்கு. 

        எப்படிப்பட்டவராக இருப்பினும் வந்து பார் என்று நிற்பவன் தான். தன்னிலையை விட்டு இறங்கி அவன் உணவு எடுத்து வந்ததோ, இல்லை, இப்படி தன்னை மீண்டும் அழைத்து வந்ததோ எதுவுமே அவன் இயல்பில்லை என்று புரிந்தது அவளுக்கு.

        அதுவும் விசாலம் அடித்து இருக்கிறார் என்பது பேரதிர்ச்சி. அவராவது தன் மகனை அடிப்பதாவது… அப்படியே அவர் அடித்தாலும் அமைதியாக வாங்கி கொள்பவனா இவன்..? என்று எண்ணங்கள் எல்லைமீறிக் கொண்டிருக்க, நேரம் மதியத்தை நெருங்கி கொண்டிருந்தது.

         அமைதியாக அறைக்குள் முடங்கியிருப்பது என்னவோ போலிருக்க, மதிய உணவையாவது கவனிப்போம் என்று அறையை விட்டு வெளியேறியவள் சமையல் அறைக்குள் நுழைய, அங்கே அடுப்பின் முன் நின்றிருந்தார் விசாலம்.

        ஒரு முடிவுடன் அவரை நெருங்கியவள் “என்ன விசாலம்.. என்ன சமையல் இன்னைக்கு..” என்றாளே.. விசலத்தின் கையில் இருந்த பாத்திரங்கள் பறந்தது அடுப்படியில்.

       “கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா.. எல்லாம் என் புருஷன் சொத்து.. இப்படி போட்டு உடைக்கிறியே..” என்று திரு வம்பிழுக்க,

        “இதெல்லாம் என் மாமனார் வீட்டுசொத்து.. உன் புருஷன் வாங்கிப் போட்டது எதையும் நான் உடைச்சு விளையாடல.” என்று மீண்டும் ஒரு சொம்பை அவர் தரையில் வீச,

         “என் புருஷன் ஏன் வாங்கி போடணும்… இப்போவே இது எல்லாம் அவரோடது தான். தாத்தன் சொத்து பேரனுக்குதான.. உனக்கு தெரியாதா..”  

         “அதுசரி.. உன்னைய மருமகளா கொண்டு வந்தேன்ல நான்.. நீ பேச வேண்டியதுதான்.. நானும் கேட்டுக்க வேண்டியதுதான்.. உன்கிட்ட வெட்டி நியாயம் பேச பொழுதில்ல எனக்கு. என் புருஷன் சாப்பிட வந்திடுவார்.. வெளியே போடி..” 

         “நான் ஏன் வெளியே போகணும்.. என் வீடு இது.”

       “நேத்து சொல்லிக்காம ஓடிப் போனப்ப தெரியலையா உன் வீடு..”

       “ஒரு கோபத்துல கிளம்பிட்டேன்.. நீ மட்டும் என்ன, மருமக போய்ட்டாளேன்னு பின்னாடியே ஓடி வந்தியா..” என்று திரு நொடித்துக் கொள்ள,

       “எது பின்னாடியே வாறதா.. இப்படி வேற நினைபிருக்கா உனக்கு. கழுத்தை திருகி கையில கொடுத்திடுவேன்..” 

        “கொடுப்பிங்க கொடுப்பிங்க.. என்னை என்ன என் புருஷனாட்டாம் அப்பாவின்னு நினைச்சிங்களா.. ஆமா.. எதுக்கு அவரை அடிச்சிங்க..” என்றவள் விசாலத்திடம் சண்டைக்கு நிற்க,

        “அவன் அப்பாவியா.. நீ இப்படி இருக்கவும்தான் அவன் இஷ்டத்திற்கு சுத்திட்டு இருக்கான். என் மகனை நான் அடிக்கக்கூட உன்கிட்ட அனுமதி வாங்கனுமா..” என்றவர் வலிக்கும்படி அவள் வாயில் ஒரு இடி இடிக்க, 

        “ஆஆ.. வலிக்குது அத்தை..” என்றாள் திரு.

        “வலிக்கட்டும் நல்லா.. இவ்வளவு வக்கனையா வாய் பேசுறவ, எதுக்குடி வீட்டை விட்டு போன.. நான் ஒருத்தி எதுக்கு இருக்கேன் இந்த வீட்ல..” என்றவருக்கு குரல் கலங்க,

        “இதெல்லாம் அநியாயம்.. என்னை அடிச்சுட்டு நீங்க அழற மாதிரி டிராமா பண்ணிட்டு இருக்கீங்க..” என்று முறைத்தாள் மருமகள்.

      “போடி.. என்கிட்டே சொல்லாம போன இல்ல.. போ.. என்கிட்டே யாரும் பேச வேண்டாம்..” என்றவர் கண்களைத் துடைக்க 

       “அச்சோ. விசாலம்மா இப்படி அழக்கூடாதே..” என்ற திரு, மெல்ல தன் அத்தையை அணைத்துகொள்ள, “விடுடி என்னை..” என்று அப்போதும் முரண்டினார் விசாலம்.

       திரு விடாமல் அத்தையை அணைத்துக்கொண்டு செல்லம் கொஞ்ச, அப்போதும் முகம் முழுதாக தெளியவில்லை விசாலத்திற்கு.

       திருவின் கையைப்பிடித்து கொண்டவர் “அடிச்சுட்டானா..” என,

        “உங்க மகனா…”

        “வேற யாரை கேட்பேன்.?”

        “அடிக்கல.. ஆனா, வெளியே போன்னு சொல்லிட்டாங்க.. அதுதான் கோபத்துல கிளம்பிட்டேன்.” 

       “அவன் சொன்னா கிளம்பிடலாமா..”

        “தப்புதான் அத்தை.. நேத்தே புரிஞ்சிடுச்சு.. அதுவும் என்னை துரத்திட்டு பின்னாடியே உங்க மகன் வந்து நிற்கவுமே, அந்த பச்சபுள்ளயை பார்த்து பாவமா போச்சு.. ஆனாலும் கொஞ்சம் வீம்பும் இருந்ததா.. வரலன்னு சொல்லிட்டேன்..” 

         “ஆனா, முழுசா வீம்பு பிடிக்கவும் முடியாம, வீட்டுக்கும் வந்து நின்னாரா.. அதுதான் கிளம்பி வந்துட்டேன்.” என்றாள் சலிப்புடன்.

       “அப்படி என்னதான் சண்டை உங்களுக்குள்ள..”

      “இப்போதைக்கு எதுவும் இல்ல..” என்றவளை “இது பதிலா..” என்பதுபோல் விசாலம் நோக்க, 

        “நிஜமாகவே எதுவும் இல்ல அத்தை.. அவங்க பேச்சை மீறி பஞ்சாயத்துக்கு வந்தேன்னு தான் கோபம். நானும் அவசரத்துல ஏதோ பண்ணிட்டேன்..” என்றாள்.

      விசாலம் “அவன் குணமே கொஞ்சம் அப்படித்தான் திரு.. அவன் வேண்டாம்ன்னு சொல்றதை செஞ்சா, நிறைய கோபம் வரும்.. தனியாவே வேற வளர்ந்துட்டானா, தான் நினைச்சதே நடக்கணும்ன்னு கொஞ்சம் அடம்பிடிப்பான் பிடிவாதக்காரன்.”

     “கொஞ்சம் பிடிவாதமா.. நல்லா சொல்றிங்க அத்தை.” என்று சிரித்தாள் திரு. பேச்சு அப்படியே நகர, பேச்சுக்கு இடையில் அன்றைய சமையலையும் முடித்திருந்தனர் இருவரும்.

      அடுத்த அரைமணி நேரத்தில் ராகவனும் வீடு வந்து சேர, “வாம்மா மருமகளே..” என்று முகம் மலர்ந்தவராக மருமகளை வரவேற்றார் அவர்.

       திரு சிரிக்க, “எப்படியோ இழுத்துட்டு வந்துட்டான் போல..” என்று மகனைப்பற்றி தெரிந்தவராக சிரித்துக் கொண்டார் ராகவன்.

         “நல்லவன் தான்.. ஆனா, பிடிவாதம் அதிகம். நிச்சயமா உனக்கு நல்லதுதான் சொல்வான்…” என்று அவரும் மகனைத் தாங்கி பேச, 

        “ரெண்டுபேரும் இப்படி பேசி பேசித்தான் அவரை இவ்ளோ பிடிவாதமா வளர்த்து விட்டு இருக்கீங்க.. எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமா நான் அனுபவிக்கிறேன்..” என்று செல்லமாக கோபித்துக் கொண்டாலும் அவர்கள் கூறுவது உண்மை என்பதால் சிரிப்புடனே நின்றாள் திரு.

        அந்தநாள் ஒரு இதமான மனநிலையுடனே கடந்து செல்ல, மாலை வேளையில் ராகவனை அழைத்துக்கொண்டு ஆண்டாளைக் காணச் சென்றுவிட்டார் விசாலம்.

         மாலை வேளையில் கிளம்பியவர்கள் இரவு எட்டானபின்பும் வீடு வராமல் இருக்க, இதற்குள் வாசுதேவன் வந்து சேர்ந்தான். அவன் குளித்து முடித்து வரவும், திரு அவனுக்கு காபி கலந்து கொடுக்க, அதைக் கையில் வைத்தபடியே அவன் அறையின் அலமாரியில் எதையோ தேடிக் கொண்டிருந்தான் அவன்.

       “என்ன தேடிட்டு இருக்கீங்க..” என்று திரு அவன் பின்னே வந்து நிற்க, அவள் மூச்சுகாற்று அவன் முதுகில் மோதியது. வாசுதேவன் மூச்சை இழுத்து வெளியேற்றியவனாக நகர்ந்து நின்று மனைவியை முறைக்க, “என்ன மாமா..” என்றாள் புரியாமல்.

       அவளை தலையில் தட்டியவன் “த்தள்ளி நில்லுடி..” என்று அதட்ட

      “ஏன் இங்கே நின்னா என்ன.?”  

        “எனக்கு ஓண்ணுமில்ல.. உனக்குதான் சாமிகுத்தமாகிடும்..” 

     திருமகளுக்கும் அப்போதுதான் வாசுதேவனின் நிலை புரிய, அசட்டுசிரிப்புடனே நகர்ந்து நின்றாள் திருமகள். 

       வாசுதேவன் அலமாரியின் உள்ளே இருந்து சில கோப்புகளை எடுத்துக்கொண்டு நகர, அவன் கையில் தட்டுபட்டது அந்த மஞ்சள்நிற பை.

        அன்றைய நினைவுகளில் கனத்துப் போனாலும், கையில் சிக்கிய பையை ஏதோ புதையலைப் போல் பொத்திக்கொண்டான் அவன்.

        பின்னே, அவன் மனைவியின் வைராக்கியதிற்கான சான்று அல்லவா அந்த நகைகள். பெரும் மதிப்பு கொண்டவை அல்ல. ஆனால், அவன் மனைவி நிமிர்ந்து நிற்க காரணமானவை அவை.

        மாமன்மகள் என்ற எண்ணத்தில் எப்போதோ உதவக்கூடும் என்று அவன் மீட்டு வைத்திருந்தவை. அதை அலமாரியில் வைத்து பூட்டியதோடு மறந்தும் விட்டிருந்தான். இப்போது எதையோ தேடுகையில் கைகளில் சிக்கியது.

        “த்திரு..” என்றவன் அலமாரியின் அருகிலேயே ஆணியடித்தவன் போல் நின்றுவிட, 

       “பக்கத்துல வந்தா திட்டுவீங்க மாமா..” என்று பேசிக்கொண்டே அமர்ந்திருந்தாள் திரு.

       வாசுதேவகிருஷ்ணன் சட்டென அவள் முகம் பார்த்து திரும்ப, அவன் முகமாற்றத்தில் என்னவென தலையசைத்து எழுந்தவள் அவன் கையிலிருந்த பையைப் பார்க்கவும், “என்ன மாமா அது.” என்று நெருங்கினாள் அவனை.

       அவளுக்கு அந்த நகைகள் எல்லாம் நினைவிலேயே இல்லை. பின் எங்கே அந்த பையை அடையாளம் தெரிய..???

       அவள் வாசுதேவனை சமீபிக்கவும், கையிலிருந்த நகைகளை அவளிடம் நீட்டினான் வாசுதேவன். திரு “என்ன இது..?” என்று வாங்கியவள் அதைப் பிரித்து பார்த்த நிமிடம் முகம் மாறினாள்.

        அதில் இருந்தது மொத்தமும் அவள் நகைகளும், அவள் தாயினுடையதும் தானே. அடையாளம் தெரியாத அளவுக்கா மறந்து போகும்..? முதல் பார்வையிலேயே இனம் கண்டுகொண்டாள்.

        இவை எப்படி வாசுதேவனின் கைகளில் என்று சிந்திக்கையிலேயே, அது அவளின் தோல்வியாக தெரிய பட்டென கைகளில் இருந்த பையை அவனிடம் நீட்டியவள் சென்று கட்டிலில் அமர்ந்துவிட்டாள்.

     வாசுதேவன் அவள் அருகில் அமர, “எப்படி இதெல்லாம் உங்ககிட்ட வந்தது..” என்றாள் கேள்வியாக.

       “அப்போவே என்னை தோற்கடிச்சதா நினைச்சு சிரிச்சு இருப்பிங்க இல்ல.. நான் யாரையும் எதிர்பார்க்காம தனிச்சு நின்னதா பெருமைபட்டுட்டு இருந்தேன்..” என்றாள் ஏதோ போன்ற குரலில்.

       வாசுதேவனுக்கும் இப்போது கோபம் எட்டிபார்க்க “உனக்கு ரொம்ப தெரியுமா.. என் மாமா பொண்ணு நீ.. உன்னை மாதிரி காதல் இல்லாம இருக்கலாம். அக்கறை எப்படி இல்லாம போகும்..?”

        “பேசாம இருந்தா நீ எப்படியோ போன்னு விட்டுட்டு வேடிக்கை பார்ப்பேனா… அந்த நிலைமைல கூட யாரையும் எதிர்பார்க்காம, உன்னை நம்பி நீ வெளியே வந்தது நிச்சயம் பெருமைதான் எனக்கு.”

        “என் மாமா எப்படி வளர்த்திருக்கார்ன்னு பிரமிச்சுப் பார்த்திருக்கேன் உன்னை. இந்த நகைகள் கூட, உனக்கு உதவி பண்றதுக்காக வாங்கி வைக்கல.. நீ கொடுத்ததைவிட அதிக விலை கொடுத்து வாங்கி வச்சிருக்கேன்.”

       “என்னைக்கோ ஒருநாள் இந்த ராங்கி கல்யாணம்னு வந்து நின்னா, அவளுக்கு சீரா கொடுக்கலாமேன்னு தான் வாங்கி வச்சிருந்தேன்.” என்று வாசுதேவன் முடிக்க, 

         “கொடுப்பிங்க.. கொடுப்பிங்க..” என்று அவன் கையில் அழுத்தமாக திருமகள் தன் விரல்தடம் பதித்தாள் திரு.

          “வலிக்குதுடி..” என்றவன் கையை நீவிகொள்ள, “இதெல்லாம் ஏன் செஞ்சிங்க.. நான் கேட்டேனா உங்ககிட்ட…” என்று நின்றாள் ராங்கி.

          “உன்னையே உன்னைக் கேட்டு எடுத்துக்கல. இதை வாங்க உன்னைக் கேட்பேனா..” என அலட்டாமல் கேட்டவன் அந்த அறையில் இருந்து வெளியேற, அவனை வாய்பிளந்து பார்த்திருந்தாள் திரு.

                 

    

        

      

        

Advertisement