Advertisement

   திருமகளை கேட்கவா வேண்டும்அத்தை கூறிய நிமிடம் சட்டென எழுந்து கொண்டாள். அவன் மீது இருந்த கோபங்கள் விலகி கொள்ள, அவன் மனைவியாக அவனுடன் ஆண்டாளின் முன் நிற்க ஏக்கம் கொண்டது மனது

                 இருவரும் உள்ளே சென்று மீண்டுமொருமுறை வணங்கி முடிக்க, இம்முறை அர்ச்சகர் கொடுத்த குங்குமத்தை வாசுதேவனிடம் நீட்டினாள் திருமகள். வாசுதேவன் அவள் செயலில் ஒருநொடி விழித்தாலும், தயங்காமல் அவள் நெற்றியில் குங்குமமிட்டான்.

                 அதற்கே அப்படி ஒரு சிரிப்பு திருமகள் நாச்சியாரின் முகத்தில். முகம் பூரித்துப் போயிருந்தது. வாசுதேவன் அவள் தலையில் தட்டியவன்வா.” என்பதாக தலையசைக்க, மறுப்பே சொல்லாமல் அவன் கோவிலை சுற்றி முடிக்கும் வரை அவளும் அவனுடன் நடந்து கொண்டிருந்தாள்.

                     ஒரு இதமான மனநிலையிலேயே அவர்கள் வீடு வந்து சேர, விசாலம் உணவை முடித்துக் கொண்டு சற்று நேரம் உறங்கி எழுவதாக அறைக்கு சென்றுவிட்டார்.

             வாசுதேவகிருஷ்ணன் வாசுதேவகிருஷ்ணன் அவன் அறையில் இருக்க, அவனை சாப்பிட அழைப்பதா வேண்டாமா என்று தனக்குள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டே தங்களது அறைக்குள் நுழைந்தாள் திரு. வாசுதேவன் குளியலறையில் இருக்க, கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டாள். 

            மனம் கோவிலில் நிகழ்ந்ததை நினைத்து நினைத்து பூரிக்க, வாசுதேவன் குளித்து வெளியே வந்துவிட்டதை கவனிக்கவில்லை திரு. அவனும் வழக்கம்போல இடையில் துண்டை கட்டிக்கொண்டு வந்திருக்க, திரு வெளியில் செல்வதாக இல்லை எனவும், தன் நெற்றியில் இருந்த நீரை வலது கை கட்டைவிரலால் வழித்து அவள் முகத்தில் சுண்டிவிட, முகத்தில் நீர் பட்டதும் சட்டென தெளிந்தாள் திரு.

             வாசுதேவனின் முகம் பார்த்தவள் “என்ன இப்போ.. பேசத்தான் மாட்டீங்க.. ரூம்ல கூட விடமாட்டீங்களா..” என்றாள் கடுப்புடன்.

              வாசுதேவனுக்கு அவள் இயல்பாகத் தான் இருக்கிறாளா என்று சந்தேகமே வந்துவிட்டது அவளது கேள்வியில். அவன் யோசனையுடன் திருவைப் பார்த்து நிற்க, “இப்படி பார்த்து வைக்காதிங்க.. பச்சை புள்ளையாட்டம்.. என்ன வேணும் உங்களுக்கு..” என்று மீண்டும் அவள் கத்த, 

            அமைதியாக கட்டிலில் இருந்த தன் உடைகளை கைகாட்டினான் வாசுதேவன். திருவுக்கு அப்போதுதான் அவன் நின்ற கோலம் கண்ணில்பட்டது. இதுவரை அவன் கண்களைப் பார்த்து மட்டுமே பேசிக் கொண்டிருந்தாள் அவள்.

              தன்னை குறித்து வெட்கமாக உணர்ந்தாலும், “ஏன் நான் இருந்தா என்ன.. இது என் ரூமும் தான். உங்களுக்கு சங்கடமா இருந்தா நீங்க வெளியே போங்க.” என்று கட்டிலில் இருந்த உடையை எடுத்து வாசுதேவனிடம் நீட்டிவிட்டாள் அவள்.

               அவள் செயலில் உச்சபட்சமாக அதிர்ந்தவன் எட்டி அவள் காதைப் பிடித்துவிட்டான். வலிக்கும்படியாக திருகியவன் அவளை கையைப் பிடித்து இழுத்து வந்து வாசலில் விட, “வலிக்குது விடுங்க மாமா..” என்று கத்திகொண்டே தான் அவன்  இழுப்பிற்கு வந்தாள் திருமகள்.

                 அவளை வெளியே தள்ளி கதவைத் தாழிட்டவன் முகத்தில் ஒரு நிம்மதியான புன்னகை. “ஹப்பா..” என்று நெஞ்சில் கைவைத்தவன் “என்ன பேச்சு பேசுறா..” என்று வாய்விட்டே புலம்பினான்.

                 இதை அவளிடம் நேரே சொல்லியிருந்தால் கணவன் பேசிவிட்டான் என்று அதற்கும் பூரித்திருப்பாள் 

ஒருவழியாக அவன் உடையை மாற்றி வெளியே வர, உணவு மேசையில் அமர்ந்திருந்தவள் அவனுக்கு தட்டை எடுத்து வைத்தாள். வாசுதேவன் மெல்லிய புன்னகையுடன் உண்டு எழ, அவனுக்கு நேர்மாறாக அவனை முறைத்து கொண்டே உணவை பரிமாறியவள் அவன் உண்டு முடித்த நிமிடம் சமையலறையை ஒதுங்கச் செய்து அறைக்குள் நுழைந்துகொண்டாள்.

               வாசுதேவனுக்கு அவள் கோபம் புரிகிறது. அவளிடம் புரியும்படியாக எடுத்துச் சொல்லி அவளை சரிப்படுத்த வேண்டும், தங்கள் வாழ்க்கையை சீராக வாழ வேண்டும் என்று எண்ணமிருக்கிறது. ஆனால், எதற்குமே இப்போது அவனிடம் அவகாசம் இல்லை.

                அந்த நேரம் அவன் அவசரமாக மில்லுக்குச் சென்றே ஆக வேண்டும். அன்று மாலைக்குள் அனுப்ப வேண்டிய லோட் ஒன்று இருக்க, அவன் அருகில் இருக்க வேண்டும். வானம் வேறு சற்று இருண்டிருக்க, மழைக்கு முன் ஏற்றிவிட வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.

                   திருமகளை வந்து பார்த்துக் கொள்வோம் என்று அவன் வண்டியை எடுத்துக் கொண்டு மில்லுக்கு விரைய, வேலை நடந்து கொண்டிருந்தது.

                   வேலை சற்று வேகமாகவே நடக்க, இவன் மேற்பார்வை பார்த்து நின்ற நேரம் சாரதி மனோகருடன் வந்து சேர்ந்தான்.

                    வாசுதேவகிருஷ்ணன் அமைதியாக பார்த்து நிற்க, “நீங்க ஏன் வாசுண்ணா எங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்..? நாங்க எப்படியோ எங்களை பார்த்துக்கறோம்.? நீங்க இப்போதான் வாழத் தொடங்கி இருக்கீங்க, திருவுக்கு எங்களை கண்டாலே பிடிக்காது… இதனால உங்களுக்குள்ள பிரச்சனை வர வேண்டாம்ண்ணா..” என்று தயங்கியபடியே பேசினான் மனோகர்.

                   வாசுதேவகிருஷ்ணன் சாரதியைப் பார்க்க “அவன் ஹெல்ப் பண்ணது வெளியே யாருக்கும் தெரியாது. எங்க பக்கமிருந்து நாங்க சொல்லவும் மாட்டோம். நீங்க நிம்மதியா உங்க வேலையைப் பாருங்க. வேலையை விடுறேன்னு திரும்பவும் ரிஸ்க் எடுக்க வேண்டாம்.. வீட்டை விட்டு வெளியே வந்துட்டு வேலையும் இல்லாம இந்த காலத்துல ஒண்ணுமே பண்ண முடியாது. புரிஞ்சு பொழைச்சுக்கோங்க.” என்றான் சாரதி.

                   மனோகருக்கும் வேலையை விட்டுவிட்டால் அடுத்து வேலை கிடைக்கும்வரை என்ன செய்வது என்ற தயக்கமிருக்க, அதற்குமேல் மறுக்காமல் சம்மதமாக தலையசைத்தான். 

                 ஆனாலும், அவனது குற்றவுணர்வு இன்னும் மீதமிருக்க, “மன்னிச்சிடுங்கண்ணா..” என்று நேரடியாக வாசுதேவனிடமே மன்னிப்பு கேட்டு நின்றான் மனோகர்.

                 வாசுதேவன் “தேவையில்லை.” என்பதாக தலையசைத்து, அவனை கிளம்பச் சொல்ல மனோகரும் நிம்மதியுடன் கிளம்பிச் சென்றான்.

                 விஷயம் இதுதான். மனோகர் கோதையுடன் வீட்டை விட்டு வெளியேறியிருக்க நண்பன் ஒருவன் வீட்டில் காலியாக இருந்த போர்ஷனில் தங்கி கொண்டிருந்தனர் இருவரும். ஆனால், வேலை கிடைப்பது அத்தனை சுலபமாக இல்லை. 

                  அதுவும் கலியமூர்த்தியின் மகனை அனைவருக்கும் தெரிந்திருக்க, அவர்கள் தொழிலில் முதலாளியாக இருந்தவனுக்கு வேலை கொடுக்க தயங்கினர். கலியமூர்த்திக்கு தெரிந்தால் தங்களுக்கு எதுவும் தொந்தரவு கொடுப்பார் என்ற கவலை வேறு.

                  மனோகர் வேலை தேடுவது வாசுதேவகிருஷ்ணனுக்கு தெரியவர, மனோகர் பொறியியல் படிப்பை முடித்திருக்க,அவனுக்கு தெரிந்த நண்பன் ஒருவனிடம் அவன் துறையிலேயே வேலை பெற்றுக் கொடுத்திருந்தான். 

                அதை எப்படியோ தெரிந்து கொண்டவன் வாசுதேவகிருஷ்ணனுக்கு நன்றி கூற நேரில் வந்திருந்தான். விஷயம் அத்தோடு முடிந்தது என்று அந்த நிமிடமே அதை விட்டுவிட்டான் வாசுதேவ கிருஷ்ணன். ஆனால், ஒருத்தி இந்த விஷயத்தை வைத்து ஒருநாள் தன்னை வாட்டி வதைக்கப் போகிறாள் என்பது அப்போது தெரியவில்லை அவனுக்கு.

       அவன் வேலையை முடித்துக்கொண்டு இரவு வீடு திரும்ப வழக்கத்தைவிடவும் அதிகநேரம் எடுத்திருக்க, அதுவரை உறங்காமல் விழித்திருந்தாள் அவன் மனைவி. அவனுக்காக காத்திருந்தாளா என்பதெல்லாம் தெரியவில்லை வாசுதேவனுக்கு.

               ஆனால், அலைபேசியை பார்த்துக்கொண்டு உறங்காமல் விழித்திருந்தாள் அவள். வாசுதேவன் வருகையை உணர்ந்தாலும் கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்தாள் திரு. மதியம் தன் கோபம் தெரிந்தும் அவன் விட்டுச் சென்றதில் லேசான கோபம் இப்போதும் மீதமிருந்தது. அதுவும் காலை விடிந்தது முதல் இப்போது வரை தன்னிடம் அவன் ஒருவார்த்தைக் கூட பேசியிருக்கவில்லை என்பது ஒருபக்கம்.

                 மொத்தத்திற்கும் சேர்த்து முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அவள் அமர்ந்திருக்க, நிதானமாக சட்டையை கழட்டி அதற்கான இடத்தில் மாட்டியவன் கட்டிலில் வந்து அமர, அவனுக்கு ஏகத்திற்கும் பசி வேறு.

                  மதியம் உண்டதெல்லாம் எங்கோ சென்றிருக்க, இப்போது பசித்து தொலைத்தது. எப்போதும் உணவை தயாராக வைத்திருக்கும் மனைவி அமைதியாக அமர்ந்திருக்க, அவள் செயலில் கோபம்தான்.

                  ஆனால், தவறு தன்மீது இருக்க அமைதியாகவே அவளை எதிர்கொண்டான் வாசுதேவன். அவள் கையில் இருந்த அலைபேசியை பிடுங்கியவன் சாப்பாடு எடுத்து வைக்கும்படி சைகையில் கூற, அதில் இன்னுமின்னும் ஆத்திரமானாள் மனைவி.

                  “என் பேரைக் கூட சொல்லமாட்டீங்களா மாமா நீங்க. நேத்து அப்போ நிஜமாவே நீங்க எதுவும் பேசலையா.. நாந்தான் கிறுக்கச்சி மாதிரி தப்பா நினைச்சுட்டேனா..” என்றாள் பாவமாக.

                  விட்டால் அழுது விடுவாள் என்பதைப் போல அவள் முகம் இருக்க, மறுப்பாக தலையசைத்தான் வாசுதேவகிருஷ்ணன்.

                   அதிலேயே அழுகை பொங்கிவர, “என்கிட்டே பேச என்ன உங்களுக்கு.. நான் என்ன செஞ்சேன் உங்களை..” என்று சிறுபிள்ளையாக வடிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே திரு வினவ, வாசுதேவன் அவளைத் தொடுவதற்காக கையை நீட்டினான்.

                  “என்னைத் தொடாதிங்க.” என்று ஒருவிரல் நீட்டி அவள் கடுமையுடன் மிரட்ட, நீட்டிய அவள் விரலை இதமாக பற்றிக் கொண்டவன் அவள் கண்ணீரை துடைத்து அவள் நெற்றியில் முத்தமிட, பிடித்து அவனை தூர தள்ளியிருந்தாள் திருமகள்.

                   “நானென்ன குழந்தையா மாமா.. இப்படி பச்சைப்பிள்ளைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாத்துற மாதிரி, ஏன் என்னை ஏமாத்திட்டு இருக்கீங்க.”

                    “உங்க பொண்டாட்டி நான்.  அந்த நினைப்பிருக்கா உங்களுக்கு.” என்று ஆவேசத்துடன் அவள் கேட்க, அமைதியாக அப்போதும் புன்னகைத்தான் வாசுதேவன். 

                     அவன் புன்னகையில் கடுப்பானவள் அதற்குமேல் அவனிடம் பேசக்கூடாது என்று அவசர முடிவெடுத்து நகர, அவளை நகரவிடாமல் இருகைகளையும் பிடித்துக் கொண்டான் வாசுதேவன்.

                      “என்னை விடுங்க மாமா..” என்று கோபத்துடன் அவள் சத்தமிட, “ஷ்ஷ்..” என்று வாய் மீது விரல் வைத்து மிரட்டினான் வாசுதேவன்.

                       கோப மூச்சுகளோடு அவள் கண்கள் சிவந்து கண்ணீருடன் அமர்ந்திருக்க, அவளை நிதானமாக பார்வையிட்டு “இந்த கண்ணீரும் க்கோபமும் பிடிக்கவே இஇல்ல..” என்றான் அழுத்தமாக.

                       நிறுத்தி மிக நிதானமாக அவன் பேச, “உங்களால தான்..” என்று பட்டென வந்தது பதில்.

                      மீண்டும் அவன் வாய்மீது விரல் வைத்து காண்பிக்க, “என்னால வாயை மூடி பேச முடியாது மாமா.. எனக்கு உங்ககிட்ட பேசணும்.. உங்களோட நிறைய சண்டை போடணும்..” என்றவள் வார்த்தைகளில் ரசனை கூடியது வாசுதேவனுக்குள்.

                       இப்போதே வாயை மூடி பேசும் வித்தையை கற்றுக்கொடுக்க நினைத்தாலும், அவளிடம் பேச வேண்டியது இருந்ததால் அமைதிகாத்தான் வாசுதேவன்.

                        திரு அவன் பதில் கூறாததில் “அவ்ளோதானா.. இன்னைக்கு கோட்டா முடிஞ்சு போச்சா..” என்றாள் கோபத்துடன்.

                       வாசுதேவன் நிதானம் மாறாமல் புன்னகைத்து “உன் அளவுக்கு வ்வேகமா ப்பேச முடியாது என்ன்னால.. கொஞ்சம் கஷ்டம்..” என்றான் பொறுமையாக 

                       திரு விழி விரித்து அவன் பேச்சை கேட்டிருக்க, “கொஞ்சம் டைம் கொடு…” என்றான் மீண்டும்.

                       “எதுக்கு.. இப்படி எண்ணியெண்ணி பேசவா..” என்றாள் திரு.

                       வாசுதேவன் முறைக்க, “என்கிட்டே பேசுங்க மாமா. நீங்க எப்படி பேசினாலும் எனக்கு கவலையில்ல. என்கிட்டே பேசுங்க.. எனக்கு பதில் சொல்லுங்க.என்கிட்டே கேள்வி கேளுங்க.. நானும் மத்தவங்களும் ஒன்னு இல்ல.. மத்தவங்ககிட்ட போடுற வேஷத்தை என்கிட்டே போட வேண்டாம்.”

                     “என்கிட்டே நீங்க நீங்களா இருக்கணும் இல்லையா..” என்றாள் திரு. 

                     வாசுதேவன் அவளை அசையாமல் பார்த்திருக்க, “எனக்கு பதில் கொடுத்தே ஆக வேண்டும் நீ..” என்று அழுத்தமாக அமர்ந்திருந்தாள் திருமகள் நாச்சியார்.

                        

Advertisement