Advertisement

நெஞ்சம் பேசுதே 09

                அன்று இரவில் வாசுதேவகிருஷ்ணன்திரு..” என்று அழைத்துவிடவும், அப்படி ஒரு நிறைவு திருமகள் நாச்சியாருக்கு. என்னவோ பெரிதாக ஏதோ ஒன்றை சாதித்துவிட்ட உணர்வுடன் தான் உறங்கி எழுந்தாள் அவள். ஆனால், அடுத்தநாள் காலையில் வழக்கம் போல் தன் மௌன கவசத்தை அணிந்து கொண்டிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.

                திருமகள் நாச்சியார் ஏக்கத்துடன் பார்த்து நின்ற போதும், எதுவும் பேசாமல் அவன் வெளியே கிளம்பிவிட, முறுக்கி கொண்டு அமர்ந்துவிட்டாள் திரு. முகமே சோர்ந்து போனது. என்னவோ நேற்று இரவின் இனிமை தொலைந்து போனது போன்ற ஒரு நிலை.

                 இயந்திரத்தனமாக எதையோ சமைத்து வைத்தவள் விசாலம் கோவிலுக்கு அழைக்கவும் கிளம்பிவிட்டாள். அப்படி என்ன நான் காத்திருந்து இவனுக்கு உணவு பரிமாற வேண்டும்.. எடுத்து போட்டு சாப்பிடட்டும் என்ற எண்ணத்தில் கிளம்பிவிட்டாள்.

                  ஆண்டாளைப் பார்த்தும் வெகுநாட்களானது போல் இருக்க, அழகாக ஒரு சில்க் காட்டன் புடவை அணிந்து கொண்டவள் தலையில் மல்லிகையை சூடிக்கொண்டு மாமியாருடன் கிளம்பியிருந்தாள்

                    அடுத்த அரைமணி நேரத்தில் இருவரும் கோவிலில் இருக்க, சென்றமுறை ஆண்டாளை திருப்தியாக தரிசித்தபோதும் மனத் தாங்கலுடன் மருமகளைப் பார்த்து சென்றவர் தானே விசாலம். இந்தமுறை கோவிலுக்குள் நுழையவுமே மருமகளின் கையைப் பிடித்துக் கொள்ள, திரு விநோதமாகப் பார்த்தாள் அவரை.

                    “என்னடி..” என்று விசாலம் கேட்க

                    “உன் மகன் இப்படி பிடிச்சுக்கிட்டாலும் ஒரு நியாயம் இருக்கு.. நீ பிடிக்கறியே..” என்று மருமகள் சடைத்துக் கொள்ள

                   “ஏத்தம்டி உனக்கு..” என்றார் மாமியார்.

                   “இருக்காதா பின்னே.. விசாலம் மருமகளாச்சே..” 

                   “கொஞ்சமாவது மாமியாக்காரின்னு நெஞ்சுல அச்சமிருக்கா உனக்கு.. ஒருநாள் இல்ல ஒருநாள் உப்புக்கல்லு வச்சு திருகிடறேன் பாரு..” என்று விசாலம் மிரட்ட 

                    “எது.. உப்புக்கல்லா.. இந்தா விசாலம். என்ன தம்பி பொண்ணுன்னு நினைச்சியா.. இப்போ மருமக, உன் மகன்கிட்ட சொல்லி உன்னை தட்டி வைக்க சொல்வேன் பார்த்துக்க..” என்று சிரித்துக் கொண்டிருந்தாள் திருமகள்.

                     விசாலம் நிறைவுடன் அவளைப் பார்த்திருக்க, “என்ன ஒரே லுக்கு விட்டுகிட்டு இருக்க.. என்னவாம்..” என்று மீண்டும் மருமகள் தொடங்க

                      “நான் முதலிலேயே உன்னையே பெண் கேட்டு இருக்கணும் என் தம்பிகிட்ட.. என்னவோ எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போய் முடிஞ்சிருச்சு. என் தம்பி எனக்கில்லாம போய்ட்டான்..” என்றவர் கண்களில் நீர் நிறைந்து போனது.

                      திருவின் மனதும் தந்தையின் நினைவில் கனமாக உணர்ந்தாலும், “எது நடக்கணும்ன்னு இருக்கோ, அது நடந்து தானே ஆகணும். மூத்தவ இருக்க இளையவளை எங்கே பொண்ணு கேட்டு இருப்ப நீ.. கண்டதை யோசிச்சு நீயும் கலங்கி என்னையும் அழ வைக்காத அத்தை..”

                    “கோவிலுக்கு வந்திருக்கோம். வா.. அவளைப் பார்த்துட்டு வந்திடுவோம்.. அப்புறம் ஆண்டாள் கோச்சுக்க போறா வா..” என்று அத்தையை அழைத்துக் கொண்டு உள்ளே நடந்தாள் திருமகள் நாச்சியார்.

                      அன்னை மாம்பழ நிற பட்டுடுத்தி அழகராசியாக வீற்றிருக்க, எப்போதும் போல சண்டையிட வார்த்தை வரவில்லை நாச்சியாருக்கு. என்னவோ வாசுதேவகிருஷ்ணனை மீண்டும் தன்னிடம் சேர்த்ததில், அதுவும் தான் கேட்காமலே அவனைத் தன்னிடம் சேர்த்து விட்டதில் அப்படி ஒரு நிறைவு.

                      திருவின் மனதிற்கு தெரியும். இப்படி ஒரு சிக்கல் வாராமல் போயிருந்தால் எந்த நிலையிலும் அவள் வாசுதேவகிருஷ்ணனை கரம் பிடித்திருக்க மாட்டாள்

                      திருமணமே ஆகாமல் இறுதிவரை விரதம் பூண்டிருப்பாளே தவிர்த்து, “என்னை மணந்து கொள்.” என்று அவன் முன் நின்றிருக்கமாட்டாள். அப்படி ஒரு மனஉறுதி அவளுடையது.

                 அப்படியொன்றும் வாசுதேவகிருஷ்ணனை காதலித்து அவனுக்காக கசிந்துருகி காத்திருந்தவள் எல்லாம் இல்லை திருமகள் நாச்சியார். அத்தை மகன் என்றாலும் வயதில் ஏழு வயது பெரியவன் என்பதால், ஒரு இடைவெளி எப்போதும் இருக்கும் இருவருக்கும் இடையில்.

                    வாசுதேவகிருஷ்ணனும் பேசவே மாட்டானே.. அது இன்னுமொரு காரணமாகிப் போக, எப்போதுமே ஈர்க்கமுடியாத ஒரு இடைவெளி இருந்து கொண்டே இருக்கும் இவர்களுக்குள். கோதையின் திருமணத்தின் போதும் பெரிதாக பேச்சுவார்த்தைகள் இருந்தது இல்லை.

                    ஆனால், கோதை இல்லை என்றான நிமிடம் அவள் சூட இருந்த மாலை திருமகள் நாச்சியாரின் கழுத்துக்கு வந்திருக்க, உண்மையில் ஒன்றுமே புரியாமல் அவள் கலங்கி நின்ற நிமிடங்கள் அவை. அக்கா தங்களை இப்படி ஒரு நிலையில் நிறுத்திச் சென்றதே அதிர்ச்சியாக இருக்க, கல்லூரி படிப்பில் இருந்த தன் கழுத்தில் மாலையை அணிவித்தது அதைவிட பெரிய அதிர்ச்சிதான்.

                  ஆனாலும், தந்தையின் முகமும், அன்னையின் வார்த்தைகளும் அவளை மறுக்க முடியாமல் செய்துவிட, சம்மதமாக தலையசைத்து மணமேடையில் வந்து நின்றிருந்தாள் திருமகள் நாச்சியார். ஆனால், சொற்ப நொடிகளில் வாசுதேவகிருஷ்ணன் தன்னை மறுத்து வெளியேறிவிட, உண்மைக்கும் விடுதலையாக உணர்ந்திருக்க வேண்டியவள் ஆனால், என்னவோ பெரிதாக துக்கப்பட்டுக் கொண்டாள் தனக்குள்.

                  அவன் மறுத்த நிமிடம் அப்படி ஒரு வேதனை அவளுள். கோபத்துடன் தன்னை நெருங்காமல் விலகிச் செல்லும் அவன் முதுகை வெறித்திருந்தவள் அந்த நொடியில் மனதை அவனிடம் கொடுத்து விட்டிருந்தாள். என்னவோ அவன் துன்பத்திற்கு தாங்கள் காரணம் என்று நினைத்தாளோ இல்லை தன் தமக்கையின் செயலுக்கு நியாயம் செய்ய நினைத்தாளோ

                    அந்த நிமிடம் தன் வாழ்வென்பது வாசுதேவனோடு தான் என்று முடிவு செய்து கொண்டாள் அவள். மேலும் அவனுக்காக தான் சூடிய மாலையை அவனைத்தவிர வேறு யார் கழுத்திலும் தன்னால் இட முடியாது என்று மனதும் அழுத்தமாக கூக்குரலிட, அதன்பின்னான நாட்களில் அவளின் மற்ற துயரங்களோடு, வாசுதேவனும் தீராத்துயராக அவள் நெஞ்சின் ஓர் மூலையில் தங்கிவிட்டிருந்தான்.

                    ஆனால், எத்தனை தடைகள், எதனை இடர்கள் வந்தபோதும், தன் நிலையிலிருந்து மாறவே இல்லை அவள். அவள் தந்தை இறந்த நேரம்அத்தை..” என்று அழுகையுடன் விசாலத்தின் மடியில் சாய்ந்திருந்தால் நிச்சயம் விட்டிருக்கமாட்டார்.

                    அடுத்து தாயை இழந்தபோதும் இறுதிச்சடங்குகளுக்கு கூட கையில் பணமில்லாத நிலைதான். ஆனாலும் என்னவோ, யாரிடமும் கையேந்த மனம் வரவில்லை. மொத்தமாக நிலையிழந்து போயிருக்க வேண்டிய நிமிடத்தில், கடைசியாக தந்தை தனக்காக வாங்கி வைத்திருந்த நகைகளை அடகில் வைத்து அந்த பணத்தில் தாயின் சடங்குகளை நேர்த்தியாக முடித்துக் கொண்டிருந்தாள்.

                   அப்போதும் உதவி என்று வாசுதேவனிடமோ, பாசம், பரிவு என்று சொல்லிக்கொண்டு விசாலத்திடமோ அடைக்கலமாக அவள் மனம் இடம்கொடுக்கவில்லை.

              “ஏன் என்னால் முடியாதா..” என்ற வைராக்கியம் தான் அவளின் இந்த மூன்றாண்டுகால வாழ்வு. அதுவும் அத்தனையிலும் துணையாக நின்று அவள் முகம் பார்த்தே நடந்த ரகுவரனையும் படிப்புக்காக சென்னைக்கு அனுப்பி விட, முற்றிலும் தனித்து நின்றாள் அந்த நேரங்களில்.

                ரகுவரனே  எளிதில் ஒப்புக்கொள்ளவில்லையே. முடியவே முடியாது என்று நின்றவனை என்னென்னவோ பேசி கரைத்து, அவனை சென்னைக்கு துரத்தியதெல்லாம் சாதனைதான். இத்தனைக்கு இடையிலும் ரகுவரன் தன் தமக்கைக்காக வரன் தேடியதும் இடையில் நிகழ்ந்திருக்க, “உன் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்கிறேன்.” என்று அப்போதைக்கு அவனை அடக்கி வைத்திருந்தாள்.

                  அப்படியான நேரங்களில் கூட, வாசுதேவனிடம் சென்று நிற்போமா என்று ஒருகணமும் சிந்தித்ததில்லை அவள். “வேண்டாம் என்று சென்றவன்தானே, எனக்கும் வேண்டாம் அவன். தேடிச் செல்ல மாட்டேன்..” என்று அப்படி ஒரு வீம்பு..

                  தானாக சென்று அவன் முன் நின்றால் ஒழிய, தங்கள் திருமணத்திற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்ற நிலை தான். அதுவும் விசாலம் ஒருபுறம் பெண்தேடிக் கொண்டிருந்தார் வாசுதேவனுக்கு. அப்போதுகூடகட்டிக்கட்டுமேஎன்னைவிட எந்த மகராசி வர்றா பார்க்கிறேன்..” என்று சடவாக நினைத்ததுண்டே தவிர, அவனிடம் சென்று நிற்கும் எண்ணமில்லை.

                  அன்று பஞ்சாயத்தில் அத்தனைப் பேர் முன்னிலையில் அவன் தாலி அணிவிக்க, என்னவோ அப்படி ஒரு ஆசுவாசம் அவளிடம். அப்படி ஒன்றும் அவளை அடித்து மிரட்டியெல்லாம் அந்த முரளிக்கு கட்டி வைத்திருக்க முடியாது. அவளும் மிரட்டல்களுக்கு பணிபவள் இல்லையே.

                  அத்தனையும் தனக்கு எதிராக திரும்பி நின்ற நேரம் வேறெதையும் சிந்திக்க முடியவில்லை அவளால். அந்த நேரத்தில் விசாலம் வந்து நிற்கவும், மறுக்க மனதில்லை.

                 அவர் மொத்தமாக பொறுப்பெடுத்துக் கொள்ள, தன்னை விட்டுவிட மாட்டார் என்ற எண்ணம்தான் அப்போதும். வாசுதேவன் திருமணம் செய்து கொள்வான் என்றெல்லாம் கனவில்கூட கற்பனை செய்ததில்லை அவள்.

                   அப்படி கற்பனைக்கும் அப்பாற்பட்டவன், தாயின் வார்த்தைக்காக அவள் கழுத்தில் தாலி கட்டியிருக்க, மறுக்க மனம் வரவில்லை அவளுக்கு. என்னவோ இதைவிட்டால் எப்போதும் அவனை பிடிக்க முடியாது என்று தோன்றிவிட அமைதியாக அவனுக்கு உடன்பட்டு நின்றாள் அவள்.

                   இதோ இப்போதும் அவன் வாயிலிருந்து உதிரும் வார்த்தைகளுக்காக அவனது மனத்தின் வாயிலில் நின்று தவமிருக்கிறாள். என்னவோ அவனால் பேச முடியாது என்று ஏளனம் செய்தவர்கள் முன்னே அவன் பேசி நான் கேட்க வேண்டும் என்ற பேராவல்.

                    வாசுதேவகிருஷ்ணன் இருக்கும் நிலையில் இது நிச்சயம் பேராசைதான் என்று புரிந்தாலும், எப்படியும் நடத்திக் கொள்ள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தது அவள் மனம்.

                     உள்ளே அந்த சூடிக் கொடுத்த சுடர்க்கொடிக்கு தீபஆராதனைகள் தொடங்கியிருக்க, மனம் மூன்றாண்டு வாழ்வை மொத்தமாக சுற்றி வந்து நின்றிருந்தது.

                      ஐயர் குங்குமம் கொடுக்கவும் அமைதியாக வாங்கி கொண்டவள் நெற்றியில் வைக்க வேண்டும் என்பது கூட உரைக்காதவளாக ஏதோ ஒரு மோனநிலையில் அடிமேல் அடி வைத்துக் கொண்டிருந்தாள். விசாலம் நிதானமாக பின்னே நடந்து வர, அவர் நினைவு கூட இல்லை திருவிற்கு.

                    மனம் மொத்தமும் நன்றியால் நிறைந்திருக்க, “உன்னால் மட்டுமே..” என்று உள்ளிருப்பவளின் சிந்தனை தான் சிந்தையெங்கும். நிச்சலனமான மனதுடன் அவள் கோவிலை வலம் வந்து அமர, விசாலம் மருமகளுக்கு பிடிக்குமே என்று பிரசாத கடையில் பால்கோவா வாங்கி வந்து கொடுத்தார்.

                    சிரிப்புடன் வாங்கிக்கொண்டு அவள் அமர்ந்திருக்க, அவளுக்கு பின்னே கோவிலின் வாயிலில் இருந்து உள்ளே வந்து கொண்டிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.

                      விசாலம் தான் அழைத்திருந்தார் மகனை. மருமகளின் தோற்றம் எப்படியோ இருக்க, அவள் கோவிலைச் சுற்றி வரத் தொடங்கியபோதே அழைத்துவிட்டிருந்தார். மூட்டுவலியை காரணம்  காட்டி முதல் சுற்றுடன் அவர் அமர்ந்துகொள்ள, திரு கோவிலை சுற்றி முடிக்கும் நேரம் வாசுதேவகிருஷ்ணன் வந்து சேர்ந்திருந்தான்.

               விசாலம் தூரத்தில் வரும்போதே மகனை கண்டுவிட, வாசுதேவனும் அன்னையைப் பார்த்திருந்தான். அவன் அருகில் வரவும், “உள்ளே சாமியை கும்பிட்டு வா கண்ணா..” என்றவர்நீயும் கூடப் போ..” என்றார் மருமகளிடம்.

             

Advertisement