Advertisement

அதுவும் அன்னை இரண்டு பேரின் உயிரையும் முன்னே நிறுத்த மறுத்துப் பேச வழியில்லாமல் பட்டென தாலியைக் கட்டிவிட்டான். ஆனால், அத்துடன் முடிந்து விடுவது இல்லையே.. இனிதானே ஆரம்பம்… அது இனிதாக இருக்குமா.. என்ற சிந்தனை தான் ஓடிக் கொண்டிருந்தது வாசுதேவனின் மனதில்.

                  திருமகள் நாச்சியாரை எதிர்கொள்ளவே கொஞ்சம் தயக்கமாகத் தான் இருந்தது வாசுதேவகிருஷ்ணனுக்கு. திருமகள் கூட இத்தனை தயக்கம் கொண்டிருப்பாளா என்று தெரியாது.

            ஆனால், வாசுதேவகிருஷ்ணன் தயங்கினான்.

                அடுத்து என்ன என்பதை அறியாமல் இருப்பதுதானே வாழ்வின் சுவாரஸ்யம்.. அப்படி அறிந்துவிட்டால் சலித்துவிடுமே.. அது புரியாமல் அப்படி இருக்குமோ, இப்படி நடந்துவிடுமோ, என்று தானே கற்பனையில் கண்டதையும் போட்டு குழப்பிக் கொண்டே அமர்ந்திருந்தான் வாசுதேவன்.

                 அவர்களுக்கு சொந்தமான வயலில் இருக்க, அந்த மதிய நேரத்திற்கு மோட்டார் ரூமில் இருந்த கட்டிலை எடுத்து வெளியே அந்த அறையின் வாயிலை ஒட்டி போட்டுக் கொண்டவன் உணவைக்கூட நினைக்காமல் இங்கே வந்து படுத்து விட்டிருந்தான்.

               எப்போதும் அவனை நிழலாகத் தொடரும் சாரதிக்கு கூட, அவன் இங்கிருப்பதை சொல்லவில்லை. அலைபேசி விடமால் அடித்துக் கொண்டிருக்க, அதையும் எடுக்காமல் படுத்து கிடந்தான் அவன்.

                 இத்தனை அலைப்புறுதல்களுக்கு ஒருமுறை திருமகளிடம் பேசிவிடு என்று மூளை எடுத்துரைத்தாலும், மனம் அதற்கு ஒப்புதல் தர மறுத்தது. ஒருமுறை அவளின் முகத்தில் எதுவும் வேறுபாடான உணர்வை வெளிப்படுத்தி விட்டாலும் தன்னால் காலத்திற்கும் அவளுடன் மனம் ஒன்றி வாழ முடியாமல் போய்விடும் என்று தோன்ற, மற்றவர்களிடம் போடும் வேஷத்தை மனைவியிடமும் தொடர முடிவு செய்து கொண்டான் அவன்.

                 ஏற்கனவே ஒருத்தி குறையாக சொல்லிச் சென்றதை மீண்டுமொரு முறை பரீட்சித்துப் பார்க்கும் துணிவு என்ன முயன்றும் வரவில்லை வாசுதேவனுக்கு.  தன்னளவில் அவன் தெளிவான பின்பே எழுந்து வீட்டிற்கு கிளம்பினான் அவன்.

                அவன் தெளிவாகும் வரை ஆதவன் காத்திருப்பானா என்ன.? நேரம் ஆறு மணியைக் கடந்திருக்க, இருள் மெல்ல தன் ஆதிக்கத்தை தொடங்கி கொண்டிருந்தது அங்கே. அதையெல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அவன் வீடு வந்து சேர, விசாலத்தின் கைவண்ணத்தில் திருமகளாகவே மிளிர்ந்தாள் திருமகள் நாச்சியார்.

                 மதியம் வீடு வந்தது முதல் அவளை விரட்டிக்கொண்டே தான் இருந்தார் விசாலாட்சி. காலையில் நடந்ததை யோசிக்கும் அவகாசத்தை அவளுக்கு அளிப்பதாக இல்லை அவர். குளித்து முடித்து அவள் வரவும், தன்னருகில் அமர்த்திக் கொண்டே அவளை சாப்பிட வைத்தார் முதலில்.

                 அதன்பின்னான நேரம் மொத்தமும் ஏதோ ஒன்றை செய்யுமாறு அவர் விரட்டிக்கொண்டே இருக்க, சாதாரண நேரமாக இருந்தால் சரிக்கு சரி நிற்பவள் தான் அவளும். அன்று காலை முதல் நடந்த நிகழ்வுகள் அவளை செயலிழக்கச் செய்திருக்க, இடைவிடாமல் ஏதோ ஒன்றை செய்துகொண்டே இருப்பது சற்று ஆறுதலாகத் தான் இருந்தது அவளுக்கும்.

                  மாலை கவிழும் நேரம் அவளது தலைமுடியை அழகாக வாரி பின்னலிட்டவர் தலை நிறைய பூவையும் வைத்துவிட, மறுக்க நினைத்தபோதும் வார்த்தை வரவில்லை திருமகளுக்கு. நெற்றியிலும், மேல்வகிட்டிலும் குங்குமம் வைத்து திருமணம் முடிந்ததற்கான அத்தனை அடையாளங்களையும் சூடிக் கொண்டிருந்தாள் நாச்சியார்.

                   அப்போதும் அவளை தனியே விடாமல் மாலையில் தோட்டத்தில் இருந்து பறித்து வந்திருந்த இருவாட்சி பூக்களை தொடுக்க சொல்லி இருந்தார் விசாலாட்சி. பூஜையறையில் ஏற்கனவே அவளை வைத்தே விளக்கேற்றி முடித்திருந்தார்.

                    அவள் பூக்களைத் தொடுத்துக் கொண்டிருந்த நேரம் தான் வாசுதேவகிருஷ்ணன் வீட்டிற்குள் நுழைந்தது. பார்த்த கணமே அவள் நெற்றியில் இருந்த குங்குமம் தான் முதலில் கவனத்திற்கு வந்து கவர்ந்திழுத்தது அவனை.

                   ஏதோ ஓர் உந்துதலில் வாசலில் இருந்து நேராக அவளுக்கு முன்னே வந்து நின்றான் வாசுதேவகிருஷ்ணன். அவன் கால்களைத் தான் முதலில் பார்த்தாள் திரு. அவள்தான் அவன் வந்ததை கவனிக்கவே இல்லையே.

                   தனக்கு முன்பாக நீண்ட கால்களை காணவும்தான் சட்டென நிமிர்ந்து பார்த்தாள் திருமகள். வாசுதேவகிரிஷ்ணன் அவளையே பார்த்து நின்றிருக்க, திரு என்ன செய்வதென புரியாமல் சட்டென எழுந்து நிற்க, இருவருக்கும் இடையில் இருந்தது ஓரடி இடைவெளி தான்.

                   அவன் எதுவும் சொல்வானோ என்று திரு அவன் முகம் பார்க்க, என்னவோ வேகமாக விலகிச் சென்று விட்டான் காலையில் கணவனானவன். அவன் அறைக்குள் நுழையும் நேரம் விசாலாட்சி பின்கட்டிலிருந்து வீட்டிற்குள் நுழைந்தவர் “கண்ணா.. நாச்சியை கூட்டிட்டு போய் ஆண்டாளை பார்த்திட்டு வந்திடுப்பா..” என, மறுப்பாகத் தலையசைத்து அறைக்குள் நுழைந்து கொண்டான் அவன்.

                  திரு அவர்கள் பேச்சை கவனிக்காதவளாக காட்டிக்கொண்டு தன் வேலையைத் தொடர்ந்தாள். விசயத்திற்கு மகனின் செயலில் கோபம் வந்தாலும் தன்னை அடக்கிக்கொண்டு அவர் சமையல் அறைக்குள் நுழைந்து கொள்ள, அடுத்த சில நிமிடங்களில் ராகவனும் வீடு வந்து சேர்ந்தார்.

                  அவர் மருமகளை கனிவுடன் பார்த்தவர் கையில் இருந்த ஆண்டாள் கோவில் பிரசாதத்தை திருமகளிடம் கொடுத்தார். அவள் வாங்குவதா, வேண்டாமா என்று யோசித்து நிற்க, “கொடுக்கறாங்க இல்ல.. வாங்கிக்க..” என்று குரல் கொடுத்தார் விசாலம்.

                  திரு பிரசாதத்தை கையில் வாங்கிக் கொள்ள, “நாச்சியா..” என்று சத்தமாக அழைத்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் ரகுவரன். திருமகள் அவன் குரலில் பதறி விழிக்க, புயலென வந்து நின்றான் அவள் தம்பி.

                  திருமகளின் கோலம் அத்தனை கோபத்தையும், வருத்தத்தையும் கொடுக்க, தனது மூத்தவளை கண்ணீர் ததும்பிய கண்களுடன் பார்த்திருந்தான் அவன். காலை அந்த வீட்டிற்குள் வந்த நிமிடம் தொட்டு வாயைத் திறக்காமல் இருந்தவள் “ரகு” என்றழைத்து அவனை நெருங்க, “ஏன்டி இப்படி..” என்று அவளை அணைத்து கொண்டான் தம்பி.

                   அவன் தோள் சாய்ந்தவளுக்கும் கண்ணீர் பெருக்கெடுக்க, விசாலம் நெடுநெடுவென வளர்ந்து நின்றிருந்த தன் தம்பி மகனைப் பார்த்து பூரித்துக் கொண்டிருந்தார். ஆனால், அதெல்லாம் வீணான வேலை என்பதுபோல் “நீ ஏன்டி  இதுக்கு ஒத்துக்கிட்ட. நான் என்ன செத்தா போய்ட்டேன்.. நீ சென்னைக்கு கிளம்ப வேண்டியதுதானே. இதெல்லாம் என்ன நாச்சியா.” என்றவன் தமக்கையை கவலையுடன் நோக்க, அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் நின்றாள் திருமகள்.

                     தான் இங்கே நின்று என்ன கூறினாலும் அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்று தோன்றவும், “நான் நல்லா இருக்கேன் ரகு.. எனக்கு ஒண்ணுமில்ல விடு.” என்று அவனை சமாளிக்கப் பார்த்தாள் திரு.

                   மருமகளின் திணறல் புரிந்தவராக “நீங்க பேசிட்டு இருங்க.. இதோ வந்துடறோம்..” என்று மனைவியை அழைத்துக் கொண்டு உள்ளே நடந்தார் ராகவன்.

                    ரகுவரன் இப்போது பாரம் அகன்றவனாக “நீ எதுக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்ச. மூணு வருஷத்துக்கு முன்ன அத்தனை பேர் முன்னாடி உன்னை தனியா நிறுத்திட்டு போனவர் அவர். அவரை கல்யாணம் பண்ணி நீ எப்படி நிம்மதியா இருப்ப. ஏன் இப்படி நடக்கவிட்ட திரு.” என்று அதட்ட

                    “இந்த கல்யாணம் நடக்காமல் போயிருந்தால், ஒருவேளை நான் இல்லாம போயிருக்கலாம். அதுக்காகத்தான் ஏத்துக்கிட்டேன்..” என்று நிதானமாக திருமகள் கூற,

                      “என்னடி சொல்ற. அந்த முரளி ஒரு ஆளுன்னு அவனுக்கு பயந்து சேது போக நினைச்சியா நீ. அறிவிருக்கா உனக்கு.” என்று முறைத்தான் தம்பி.

                      “உனக்கு நடந்தது மொத்தமும் சொன்னாதான் புரியும் ரகு. பிறகு பேசலாம்..” என்று அவள் அமைதிப்படுத்த

                       “என்ன சொல்லி நியாயப்படுத்த போற உன் புருஷனை. எனக்கு இந்த கல்யாணம் சரிவரும்னு தோணல. வாயைத் திறந்து பேசவே செய்யத ஒரு மனுஷனோட எப்படி உன்னால குடும்பம் நடத்த முடியும். நீ என்னோட வந்திடு. இந்த அவசரகல்யாணமெல்லாம் ஒண்ணுமே இல்ல. இங்கே யாரும் எதுவும் வேண்டாம் நமக்கு. நாம போயிடுவோம்.” என்று அக்காவின் கையைப்பிடித்து அவன் கெஞ்ச, திரு அப்படி எளிதாக முடிவெடுக்க முடியாதே.

                இன்று காலைமுதலாக திருப்பி செலுத்தவே முடியாத அளவிற்கு இந்த குடும்பத்திற்கும், விசாலத்திற்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறாளே அவள்.

                தம்பியை சமாளிக்கும் வழி அறியாமல் “நீ கிளம்பு. நான் போன் பண்றேன்.” என்று அவனை கிளப்ப முயற்சித்தாள் அவள்.

                ஆனால், தனியாகச் சென்று என்ன செய்வானோ என்பது வேறு உறுத்த, “இரு.. நானும் வரேன்.” என்றவள் விசாலத்தை தேடிச் சென்றாள்.

                 ராகவன்- விசாலம் இருவரும் வீட்டின் பின்புறம் அமர்ந்திருக்க “நான் அவனோட அங்கே வீட்டுக்கு போயிட்டு வர்றேன் மாமா. அவன் ஊருக்கு கிளம்பியதும் வந்துடறேன்..” என்று அனுமதியாக கேட்டு நிற்க,

                 “அதெப்படி முடியும். இன்னைக்குத்தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு.” என்று விசாலம் ஆட்சேபிக்க,

             “நீ போயிட்டு வாம்மா..” என்று அனுமதி கொடுத்தார் ராகவன்.

                அவள் சரியென்பதாய் தலையசைத்து விலகிச் செல்ல, முறைத்து கொண்டிருந்த மனைவியிடம் “சின்னப்பிள்ளைங்க சாலா.. ஒன்னுக்கொன்னு பார்த்து பார்த்தே வாழ்ந்துடுச்சுங்க.. உன் தம்பி மவனுக்கு அவன் அத்தையைப் போல கோவம் வருது.. நாச்சி புரிய வைக்கட்டும் அவனுக்கும்… அவளுக்கும் இங்கே ஒத்துப்போக கொஞ்சம் நேரம் கொடுக்கணும் இல்ல..” என்று சூழ்நிலையை அழகாக விளக்கினார் ராகவன்.

                 “என்னவோ பண்ணுங்க..”  என்று நொடித்துக் கொண்டே மனைவி வீட்டிற்குள் செல்ல, புன்னகையுடன் அவரைப் பின்தொடர்ந்தார் கணவர்.

                இவர்கள் வீட்டிற்குள் வருவதற்கு முன்பே ரகுவும், நாச்சியும் கிளம்பியிருந்தனர்.

                விசாலம் மனம் வருந்தினாலும், தனக்குள் மறைத்துக் கொண்டு அடுத்த வேலையை கவனிக்க சென்றுவிட, இங்கே அறையில் இருந்தவனோ மொத்தமாக உடைந்திருந்தான்.

                 அக்காள் தம்பியின் உரையாடல் முழுதாக அவன் காதில் விழுந்திருக்க, ரகுவின் வார்த்தைகள் வலிக்க வைத்ததை விட, பலமடங்கு அதிக வலி கொடுத்தது திருமகளின் மௌனம்.

                   பறக்க நினைத்த பறவையொன்று மீண்டும் கூட்டிலேயே சென்று அடைந்து கொண்டதைப் போல, மீண்டும் தனக்குள் தன்னை ஒளித்துக் கொண்டான் வாசுதேவ கிருஷ்ணன்.

Advertisement