Advertisement

                                                                                                                  நெஞ்சம் பேசுதே 05

                    பஞ்சாயத்திலிருந்து திருமகள் நாச்சியாரை நேரே தன் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார் விசாலம். அவர் வீட்டில் வேலை செய்யும் பெண் கையில் ஒரு பாலிதீன் பையுடன் வந்து நிற்க, அந்த பையை வாங்கி மருமகளிடம் கொடுத்து “குளிச்சுட்டு வா…” என்றார் அதிகாரமாக.

                    அத்தனை நேரம் மௌனமாக அவருக்கு உடன்பட்டு நின்றிருந்த திரு முதல்முறையாக முரண்பட்டாள். “இல்ல.. நான் வீட்டுக்கு போய்..” என்று முடிக்கக்கூட இல்லை.

                   “இது வீடில்லாம வேறென்ன.. இனி இதுதான் உன் வீடு.. போய் குளிச்சுட்டு வாடி..” என்று அதட்டினார் விசாலம்.

                    அதற்குமேல் எங்கே அவரை மறுப்பது. திருமகள் அமைதியாக இருக்கையிலிருந்து எழுந்துகொள்ள, அப்போதுதான் உள்ளே நுழைந்தனர் தந்தையும், மகனும்.

                    ராகவன் மகிழ்வுடன் வந்து அமர்ந்தவர் “ஏன்மா இப்படி இருக்க.. எல்லாம்தான் நல்லவிதமா முடிஞ்சிடுச்சே.. சந்தோஷமா இருடா..” என்று பாசமாக கூற, அது பரிதாபமாகப் பட்டது திருவுக்கு.

                    அவரிடம் எதுவும் பேசாமல் அவள் தலையசைக்க, “அதெல்லாம் அவ சரியாகிடுவா..” என்று பதில் கொடுத்த விசாலம் “போய் குளிச்சுட்டு வா.. போ..” விரட்டினார் மருமகளை.

                    குளியல் அறை எங்கே என்று புரியாமல் அவள் விழித்து நிற்க, “உன் ரூமுக்கு கூட்டிட்டுப் போ கண்ணா..” என்று மகனிடம் கூறியவர் ஏதோ வேலையிருப்பதாக சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டார்.

                 வாசுதேவனுக்கு அன்னை மீது ஏகக் கடுப்பு. ஆனால், அதை காண்பிக்க கூட வழியில்லாமல் அவர்தான் சொல்லிய நிமிடம் ஓடி விட்டாரே… தன்னையே நொந்து கொண்டு அவன் திருமகளை ஏறிட்டு நோக்கினான்.

                  “வா..” என்பதுபோல் தலையசைத்து அவன் முன்னே நடக்க, அடிமேல் அடி வைத்து அவனைத் தொடர்ந்தாள் திரு.

                   அவன் அறைக்கு அழைத்து வந்தவன் குளியலறைக் கதவையும் திறந்துவிட, எதுவும் பேசாமல் அமைதியாக உள்ளே நுழைய முற்பட்டாள் திரு. வாசு சட்டென அவள் கைப்பிடித்தவன் அவளை அங்கேயே நிற்க செய்து புதியதாக ஒரு துண்டும், சோப்பும் எடுத்துக் கையில் கொடுத்தான் அவன்.

                    திரு அவன் முகம் பார்த்து நிற்க, அவன் நீட்டிய பொருட்களை இன்னும் வாங்கியிருக்கவில்லை அவள். ஆனால், அவள் வாங்குவதற்காக காத்திராமல் சோப்பை அவள் கையில் திணித்தவன் துண்டையும் அவள் தோளில் போட்டு “போ..” என்பதாக தலையசைத்தான் மீண்டும்.

                    திரு குளியலறைக்குள் நுழைய, அதுவரை அடைபட்டிருந்த மூச்சை நிதானமாக வெளியிட்டவன் அறையை விட்டு வேகமாக ஓடிவிட்டான். ஏதோ வேலையிருப்பவன் போல் அவன் அவசரமாக வெளியேற முற்படுகையில் “கண்ணா..” என்று அழைத்து அவனை நிறுத்தினார் விசாலம்.

                    அவன் முறைப்புடன் அன்னையைத் திரும்பி பார்க்க, “இன்னைக்குத்தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு.. கால்ல சுடுதண்ணியை ஊத்திக்கிட்டவன் போல எங்கே அவசரமா ஓடுற இப்போ..” என்றார் அவர்.

                    வாசு வாய்திறக்காமல் வேலையிருப்பதாக சைகையில் தெரிவிக்க, “உனக்கு என்னைக்கு  வேலையில்லாம இருந்துச்சு.. என்ன வேலையா இருந்தாலும், உன் அப்பாரு பார்க்கட்டும்.. நீ வீட்ல இரு..” என்றார் அன்னை.

                    வாசுதேவன் மறுப்பாக தலையசைக்க, “சொன்னா கேளு கண்ணா.. சும்மா உன் பிடிவாதத்துக்கு ஆடக்கூடாது..” என்று விசாலம் பேசிக்கொண்டிருக்க, மீண்டும் போயிட்டு வந்துடறேன் என்று சைகையில் தெரிவித்து கிளம்பிச் சென்றே விட்டான் மகன்.

                   விசாலத்தின் வாய்க்கு ஊரே அடங்கினாலும், மகனின் ஒரே பார்வைக்கு அடங்கி விடுவார் அவர். அவர் பெற்றவராக தன் பிள்ளைக்கு கொடுக்கும் மதிப்பு அது. வாசுவும் எப்போதும் எடுத்ததற்கெல்லாம் மறுக்கமாட்டான். அன்னையை கோவிலுக்கு அழைத்து செல்வதில் இருந்து, வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க உடன் செல்வது வரை அனைத்தும் செய்பவன் தான்.

                      எப்போதாவது சில சமயங்களில் இன்று போல நிற்காமல் ஓடி விடுவதும் உண்டு. அந்த சமயங்களில் விசாலம் மகனை இழுத்துப் பிடிக்கமாட்டார் என்பதால் பெரும்பாலும் எந்த உரசல்களும் இருக்காது அன்னை மகன் உறவில்.

                ராகவன் அப்படியே விசாலத்திற்கு எதிர்மறை.. அவருக்கும் சேர்த்து விசாலமே பேசிவிடுவார் என்பதாலோ என்னவோ அதிகம் பேசமாட்டார் மனிதர். அதுவும் மகன் விஷயங்களில் மகன் எடுக்கும் முடிவிற்கு கண்களை மூடிக்கொண்டு அப்படியே உடன்பட்டு விடுவார்.

               ராகவன் – விசாலம் இருவருக்குமே ஒரே மகன் என்பதால் வாசுதேவ கிருஷ்ணனின் மீது அலாதி அன்புதான். அந்த சிறுவயது விபத்தின் போது கூட, என் மகன் பிழைத்ததே போதும் என்றுதான் நினைத்தார் விசாலம். அவருக்கு மகன் திக்கி பேசுவதெல்லாம் ஒரு குறையாகவே தோன்றியதில்லை.

                மகன் பேசத் தொடங்குவதற்கு முன்பே அவன் என்ன சொல்ல விழைகிறான் என்பதை ஊகித்து கேட்டு விடுவார் அவர். அதனால்தானோ என்னவோ மகன் திக்கி பேசுவது குறையாக தோன்றியதே இல்லை விசாலத்திற்கு.

                பின்னாட்களில் மகன் அதைப் பெரிய குறையாக நினைத்து அழுது கொண்டு நிற்கவும்தான் அவனை சரியாக பேசச் சொல்லி திருத்தியதெல்லாம்.. அதன்பின்பும் கூட அவன் பேச்சு சரியாகாமல் போக, அவன் குறையை சரிசெய்ய நினைப்பதை விட்டு, அவனை ஏளனமாகப் பார்த்தவர்கள் மீது பாய்ந்துவிடுவார் விசாலம்.

                 ஒருகட்டத்தில் மகன் வாயைத் திறக்க மறுத்து ஊமையாகிப் போக, அவனைவிட அதிகமாக காயம்பட்டு போனது விசாலமும், ராகவனும் தான்.

                   இறுதியில் “நீ வெளியே யார்கிட்டேயும் பேச வேண்டாம் கண்ணா.. அம்மாகிட்ட மட்டும் பேசுடா.. நீ எப்படி பேசினாலும் என் மகன் தானே.. என் மகன் குரலே எனக்கு மறந்திடும் போலவே..” என்று தலையிலடித்துக் கொண்டு விசாலம் அழுது புலம்ப, அவரிடம் மட்டும் எப்போதாவது தனிமையில் தன்னை மறந்து ஓரிரு வார்த்தைகள் வெளிப்படும்.

                   அந்த வரையில் மகன் தன்னிடம் பேசுவதே போதுமாக இருக்க, விசாலம் பெரிதாக எதுவும் சொல்லமாட்டார் மகனை. ஆனால், மகன் இப்படி பொதுவெளியில் எங்கும் தலைகாட்டாமல் இருப்பது வேதனைதான் அந்த தாய்க்கு.

                  எப்படியாகினும் அவனை சரிசெய்தே தீர வேண்டும் என்ற தீராத அவாவில் தான் தம்பி மகளான கோதையை மருமகளாக்க நினைத்தது. குடும்பம், குழந்தைகள் என்று ஆகிவிட்டால், மனைவி, குழந்தைகளை கொஞ்சுவதற்காகவேனும் வாயைத் திறக்க மாட்டானா என்று ஒரு பேராவல்.

                  ஆனால், அதற்கும் எளிதில் ஒப்புக்கொள்ளவே இல்லை வாசுதேவன். பெரும்பாடு பட்டு விசாலம் அவனை மேடையேற்றிய நேரம் தான் கோதை அவர்கள் தலையில் தணலை இறைத்தது. அதுவும் சென்றவள் சும்மா இராமல் வாசுதேவகிருஷ்ணன் வாய்பேச முடியாததை காரணம் காட்டி கடிதம் ஒன்றை எழுதி வைத்து சென்றிருக்க, அது கையில் கிடைத்த கணமே மொத்தமாக இறுகிப் போனான் மகன்.

                 அந்த கடிதத்தினால் ஏற்பட்ட வலியால் தான் வாசுதேவகிருஷ்ணன் திருமகள் நாச்சியாரை அன்று ஏறெடுத்துக் கூட பார்க்காமல் வெளியேறியது. அவசரத்திருமணம் என்று வேறு வழியே இல்லாமல் அவளை அன்று மேடையேற்றியிருக்க, கோதையின் எண்ணம் இவளுக்கும் இருக்காது என்று என்ன நிச்சயம் என்பதே வாசுதேவகிருஷ்ணனின் எண்ணமாக இருந்தது.

                அப்படி அவசரத்தில் திருமணம் முடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்துச் சென்றவன் தான். அதன்பின் திருமணம் வார்த்தையை நினைக்கும்போதே கோதையால் ஏற்பட்ட வலி ஆளுக்குமுன்னதாக நினைவிற்கு வரவும், திருமணம் என்பதை மறந்து தான் சுற்றிக் கொண்டிருந்தான் அவன்.

                  இன்றும் திருமகள் நாச்சியாரை காக்க வேண்டும் என்ற உணர்வில் தான் அவன் வராத பஞ்சாயத்திற்கு வந்து நின்றது. ஆனால், அப்போதும் என் மாமன் மகள் என்ற உரிமை இருந்ததே தவிர, திருமகளை குறித்த பிரத்யேகமான உள்ளுணர்வுகள் ஏதுமில்லை. ஆனால், கண்ணீருடன் அவள் கதறிய நிமிடம் அவன் அன்னை தாலியை நீட்ட, அந்த கண்ணீரை விட வேறெதுவும் பெரியதாக தோன்றவில்லை வாசுதேவகிருஷ்ணனுக்கு.

Advertisement