மதியம் தொடங்கி மாலை வேளை வரை தன் கோபத்தை இழுத்துப் பிடித்திருந்த வடிவுக்கு அதற்குமேல் முடியவில்லை. பல்லைக் கடித்துக்கொண்டு இரவு உணவை தயார் செய்து மேசையில் அடுக்கியவர் முதலில் மனோன்மணியை சாப்பிட அழைக்க, சிறுபிள்ளை போல் திரும்பி படுத்துக் கொண்டார் அவர்.
வடிவு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு, மீண்டும் உணவு மேசையில் வந்து அமர்ந்து கொண்டார். சில நொடிகள், சில நிமிடங்கள் என்று அரைமணி நேரம் கடந்துவிட, அதற்குமேல் பொறுக்கவில்லை அவர்.
சமையல் அறையில் இருந்து சில கிண்ணங்களை எடுத்து வந்தவர் அதில் உணவை எடுத்து வைத்துக்கொண்டு, வெற்றியின் அறைக்கதவைத் தட்டினார்.
வெற்றி கண்களைத் திறக்காமல் படுத்திருக்கவும், தேனருவி தான் கதவைத் திறந்தது. அவளும் வாசலில் நின்ற வடிவை எதிர்பார்க்கவில்லை. ‘என்ன பேசுவது’ என்று புரியாதவளாக, அவள் அமைதியாக நின்றுவிட,
“படுத்திருக்காங்க” என்று பயத்துடனும், தயக்கத்துடனும் அவள் குரல் வெளியே வர, வடிவுக்கே ஒருமாதிரி ஆகிவிட்டது.
‘ஏன் இப்படி பயப்படறா’ என்று உள்ளுக்குள் அலுத்துக் கொண்டவர், “எழுப்பு அவனை. சாப்பிட வாங்க ரெண்டு பேரும்” என்றுவிட்டு நகர்ந்து கொண்டார்.
தேனருவி அவர் பேச்சில் திகைத்து நிற்க, வெற்றி எழுந்து அமர்ந்திருந்தான்.
“வெற்றி” என்று தேனருவி சத்தமே வராமல் அழைக்க, “வா தேனு” என்று அவளை அழைத்தபடியே கீழே இறங்கிவிட்டான் வெற்றி.
வெற்றி வேகமாக வந்து உணவு மேசையில் அமர்ந்துவிட, தேனருவி தயங்கி நின்றாள். வடிவு அமரும்படி கண்காட்ட, சட்டென அவளும் வெற்றியின் அருகில் அமர்ந்துவிட, வடிவு மீண்டும் தனது அத்தை மனோன்மணியை சென்று அழைக்க, “எனக்கு பசிக்கல வடிவு. மனசும் வயிறும் நிறைஞ்சு இருக்கு” என்று அவர் கத்த,
“உங்க செல்லப்பேரனுக்கு பசிக்குதாம்” என்று விட்டு நிற்காமல் நடந்துவிட்டார் வடிவு.
படிகளின் அருகில் வந்தவர், “வேலு…” என்று சத்தம் கொடுக்க, மகளும் கீழிறங்கி விட்டாள்.
இதற்குள் மனோன்மணியும் அறையை விட்டு வெளியே வந்திருக்க, அங்கே அமர்ந்திருந்த பேரனை காணவும், வேகமாக வந்து அவன் அருகில் அமர்ந்து கொண்டார்.
வேல்விழியும் அமைதியாக வந்து தேனருவியின் அருகில் அமர்ந்து கொள்ள, பாட்டியையும், பேத்தியையும் முறைத்தபடியே, நால்வருக்கும் உணவை எடுத்து வைத்தார் வடிவு.
மனோன்மணி அமைதியாகிவிட, வெற்றிக்கு உணவு இறங்க மறுத்தது. அதுவும், அன்னை அவனுக்கு பிடித்தமானதையே சமைத்து வைத்திருக்க, ஏனோ முழுதாக மகிழ்ந்து கொள்ள முடியவில்லை அவனால்.
வடிவுக்கும் மகனின் தவிப்பு புரிய, அவன் அருகில் வந்து நின்றவர் தனது இடது கையை அவன் தலையில் வைத்துவிட்டார். வெற்றிக்கு கண்கள் கலங்கிவிட, “ம்மா” என்றவன் அன்னையை வயிற்றோடு கட்டிக்கொண்டான்.
சுந்தரவடிவுக்கு அவன் பிறந்தபோது மகனை கையில் வாங்கிய நினைவு தான் வந்தது அப்போது. அவன் செயலும் சிறுபிள்ளை போலவே இருக்க, மகனின் தலையை கோதி விட்டவர், “சாப்பிடு” என,
“சாரிம்மா. ப்ளீஸ்” என்றான் மகன்.
தேனருவி இவர்களை கண்ணீருடன் பார்க்க, மனோன்மணிக்கும் கண்ணீர் வரும்போல் தான் இருந்தது.
சுந்தரவடிவுக்கு மருமகளின் பயந்த முகம் கவலையைக் கொடுக்க, தனது மற்றொரு கையை நீட்டி அவளை அணைத்துக் கொண்டார் வடிவு.
தேனுவிற்கு அழுகையே வந்துவிட, சத்தமாக தேம்பியவள் அவர் மீது சாய்ந்து கொள்ள, “இதுதான் என் மருமக” என்று வடிவை பெருமை பொங்க பார்த்திருந்தார் மனோன்மணி.
வடிவுக்கு அவர் பார்வை புரிய, மாமியாரை அவர் செல்லமாக முறைக்க, “இப்போதான் பார்க்க நல்லா இருக்கு. உடனே ஏன் முறைக்கிற வடிவு?” என்று மருமகளை அதட்டினார் மனோன்மணி.
வடிவு சிரித்துவிட, அந்த நேரம் தான் மீனு சக்தியிடம் இருந்து விடுபட்டு ஓடி வந்தது.
“என்ன நடக்குது இங்கே?” என்று கத்திகொண்டே வந்தவள், “ஹே… என் அத்தை கோபமா இருக்காங்க. அவங்களை விடுடா” என்று வெற்றியின் தோளில் அடிக்க, வடிவு அவளைப்பார்த்து சிரித்துவிட்டார்.
“இதெல்லாம் டூ மச் அத்தை. நான் மதியத்துல இருந்து சாப்பிடல. நீங்க இந்த தடியனுக்கு மட்டும் சாப்பாடு போடறிங்க” என்று மருமகள் சண்டைக்கு வர,
“உன் புருஷன் எங்கே?” என்றார் மாமியார்.
“ஹாங்… அவர் தூங்குறாரு”
“அதுதானா விஷயம். அதனால தான் என் மருமக கண்ணுக்கு பசியெல்லாம் தெரியுதா?” என்றார் வடிவு.
அவர் பேச்சில் மீனுவுக்கும் சிரிப்பு வந்துவிட, “பாட்டி… ம்ம்ம்ம்… உன் ட்ரைனிங் சரியில்ல.” என,
“அடி…” என்று அவளை அடிக்க கையோங்கினார் வடிவு.
வெற்றி இன்னும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே இருக்க, “போதும் சாப்பிடுடா. விட்டா நைட் முழுக்க அழுவான் போல” என்று அவனையும் கிண்டலடித்தவள் பாட்டியின் அருகில் அமர்ந்து கொள்ள, அவளுக்கும் சேர்த்து உணவு பரிமாறினார் வடிவு.
உணவு நேரம் கலகலப்பாக நகர, உண்டு முடித்தும் அத்தனைப் பேரும் சோஃபாவில் அமர்ந்து வாயளந்து கொண்டிருக்க, இனிமையான இரவு நேரம் அது.
தங்கவேல் இரவு வீட்டிற்கு வந்தவர் இவர்களைப் பார்த்து வாய் பிளக்க, சொக்கநாதரும் மருமகளின் மாற்றத்தில் நிம்மதி கொண்டார்.
தங்கவேல் வீட்டின் நிலை மாறியிருந்ததை நினைத்து மகிழ்ந்தாலும், எதையும் வெளிக்காட்டாமல் தனது அறைக்குள் நுழைந்து கொண்டார்.
சொக்கநாதர் பேரனின் அருகில் வந்து அமர, அவரது கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டான் வெற்றி.
இரவு நெடு நேரம் வரை இவர்களின் பேச்சுவார்த்தை நீடிக்க, தேனருவியைப் பற்றி அத்தனை விஷயங்களையும் அன்னைக்கும், பாட்டிக்கும் சொல்லி முடித்திருந்தான் வெற்றி.
அன்னையில்லாத அவள் நிலை, படிப்பு, வளர்ப்பு, இடையே மலர்ந்த அவர்களின் காதல், வீட்டில் அவளுக்கிருந்த அசாதாரண சூழ்நிலை, அவளின் திருமண ஏற்பாடுகள் என்று அத்தனையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தான் மகன்.
அவன் சொல்லி முடிக்கும்போது வடிவுக்கு கண்கள் கலங்கிவிட, அருகில் அமர்ந்திருந்த மருமகளை ஆறுதலாக அணைத்து கொண்டார் சுந்தரவடிவு.
“நாங்க இருக்கோம்” என்று வார்த்தையால் இல்லாமல், செயலில் உணர்த்துவது போல் இருந்தது அவரது அணைப்பு.
“நீ செஞ்சது ஒருவிதத்துல சரிதான் வெற்றி. இல்ல, மண்ணோடு மக்கி போயிருப்பா இவ. தாயில்லா பிள்ளையை இந்த பாடு படுத்தி வைக்கிறானுங்களே, இவனுங்களை அந்த சாமி தான் கேட்கணும். இது அத்தனைக்கும் அவன் பதில் சொல்ற காலம் வரும் பாரு. நீ கவலையில்லாம இரு தாயி. உன் வீடு இது. நாங்க எல்லாம் இருக்கோம் உனக்கு” என்றார் மனோன்மணி.
மீனுவும், வேல்விழியும் பாட்டியை இருபக்கமும் அணைத்துக்கொள்ள, “விடுங்கடி” என்ற பாட்டிக்கு வாய்கொள்ளாத சிரிப்பு.
சக்தி மாடியில் இருந்து இவர்களை கவனித்துக் கொண்டிருந்தவன், பாட்டியின் பேச்சில் சிரித்துக் கொண்டான். அருகில் அமர்ந்திருந்த தன் மனையாளை காதலுடன் தழுவியது அவன் விழிகள்.
பின்னே, அவன் பெற்றவர்கள், பெரியவர்கள் என்று தயங்கி நின்ற வேளையில் ஏதோ ஓர் நாடகம் நடத்தி தன் உடன்பிறந்தவனை வீட்டிற்குள் அழைத்து வந்து விட்டதுடன் இல்லாமல், இதோ இந்த வீட்டின் சிரிப்பையும் மீட்டெடுத்து விட்டாளே. அது போதாதா கணவனுக்கு.
மனைவியை சீராட்டிக் கொண்டவன் அவர்களை அரட்டை முடிவது போல் இல்லை என்று புரியவும், தங்கள் அறைக்குச் சென்றுவிட்டான்.
இரவு அறைக்கு வந்த சுந்தரவடிவை அவர் கணவர் கிண்டலாக பார்க்க, “என்னங்க” என்றார் மனைவி.
“உன் பிள்ளையோட ராசியாகிட்ட போல” என்றார் தங்கவேல்.
வடிவு சிரித்துக் கொண்டே, “அவன்கிட்ட பேசாம எல்லாம் என்னால இருக்க முடியாதுங்க. உங்களுக்கு என்னை தெரியாதா? இத்தனை நாள் கோபம்னு தள்ளி நிற்பேன். இப்போ உங்க மூத்த மகனும், மருமகளும் தான் ஓயாம என்னை விரட்டிட்டு இருக்காங்களே. நான் என்ன சொல்லி ஒளிஞ்சுக்க முடியும்?”
“என்ன சொல்ற வடிவு?”
“மீனுதாங்க. அவ அம்மா சண்டைக்கு நிற்கப்போறா, அவளுக்கு பிறந்தவீடு இல்லாம போயிட போகுதுன்னு, நான் கவலைப்பட்டா, என் மகனுக்காக அவள் நிற்கிறா. வெற்றி மேல ரொம்ப பாசம்ங்க அவளுக்கு. ஏன் என் பிள்ளை மட்டும் என்ன? அவன் வாழ்க்கையே கையை விட்டு போன நிலைமையில கூட, அவன் தம்பியை அவன் விடவே இல்லையே.” என்று வடிவு பிள்ளைகளை நினைத்து பெருமை கொள்ள,
“உண்மைதான் வடிவு. பிள்ளைங்க விஷயத்துல மட்டும் இல்ல மருமக விஷயத்திலேயும் நாம புண்ணியம் பண்ணவங்க தான். என்னதான் வெளியே துரத்தி விட்டாலும், அவன் இல்லாமல் இந்த வீடு களையாவே இல்ல. இன்னைக்கு தான் ரொம்ப நாள் கழிச்சு நம்ம வீடு பழையபடி இருக்கு வடிவு.” என்று நெகிழ்ந்து நின்றார் தங்கவேல்.
பிள்ளைகளை குறித்த பெருமிதத்தோடு உறங்கச் சென்றனர் இருவரும்.
தன் வீட்டின் ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் வாசுதேவன். அன்று காலையில் தான் ஒருமாத சிறை வாசத்திற்குப் பிறகு வெளியில் வந்திருந்தான். சபாபதி மெலிந்து நின்ற மகனைக் கண்டு கண்ணீர் விட, அவனுக்கு அவரெல்லாம் கவனத்தில் பதியவே இல்லை.
அவன் மூளை மொத்தமும் சக்தி தான் நிறைந்து இருந்தான். நிச்சயம் அவனை ஏதாவது செய்தாக வேண்டும் என்பதே ஓயாமல் மூலையில் ஓடிக் கொண்டிருக்க, வெற்றி – தேனருவியையும் விட்டு விடும் எண்ணமில்லை.
அதே சிந்தனையில் மொத்தமாக மாறி நின்றிருந்த மகனை நெருங்கிய சபாபதி, “வாசு” என,
“எப்படி இருக்கா உங்க அருமை மக?” என்றான் மகன்.
“வேண்டாம் வாசு. அவளைப் பத்தி யோசிக்காத. நம்ம இதையெல்லாம் விட்டுடுவோம் வாசு. எனக்கு நீ வேணும்டா. அவளை ஏதோ ஒன்னு செய்யுறேன்னு, நீ வாழ்க்கையை கெடுத்துக்காத தம்பி” என்று சபாபதி அறிவுறுத்த,
“இது என் மேல இருக்க அக்கறையா? இல்ல, பொண்ணு பாசமா?” என்றான் மகன்.
“வேண்டாம் வாசு. நான் முதல்ல உனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிக்கிறேன். நீ உன் பொண்டாட்டி, குடும்பம்னு வாழப் பாரு”
“எவன் பொண்ணு கொடுக்க ரெடியா இருக்கான். அப்படியே எவனாவது கொடுத்தாலும், உங்க பொண்ணு எங்கன்னு கேட்டா என்ன பதில் சொல்வீங்க”
“அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன் வாசு. நீ அவ விஷயத்துல தலையிடாத. சக்தி உன்னை சும்மா விட மாட்டாண்டா”
“தோத்து ஓட சொல்றிங்களா. என்ன செய்வான் அவன்? என்னை கொன்னுடுவானா?” என்றான் வாசு.
“வாசு”
“அப்படியாவது என்னை கொன்னுட்டு அவன் ஜெயிலுக்கு போகட்டும்ப்பா. அவன் குடும்பம் அவனை நினைச்சு கதறும் இல்ல. எனக்கு அது போதும்”
“வாசு ஏண்டா இப்படி சொல்பேச்சை கேட்காம…”
“கேட்க மாட்டேன். நான் யார் பேச்சையும் கேட்கிறதா இல்லப்பா. எனக்கு என்னோட மரியாதையும், சுயகவுரவமும் தான் பெரிசு. அதுக்காக எதுக்கும் நான் தயாரா தான் இருக்கேன். என்னால இதை விட முடியாது” என்று கத்தியவனை என்ன செய்வது என்றே புரியவில்லை சபாபதிக்கு.
நிச்சயம் சக்தியின் குடும்பத்தோடு மோதி ஜெயிக்க முடியாது என்று புரிந்திருக்க, மகனை அடக்குவது பெரும்பாடாக இருந்தது மனிதருக்கு.
“நீ இனி தேனருவி விஷயத்துல தலையிட கூடாது வாசு. இதை எப்படி முடிக்கிறதுன்னு நான் பார்த்துக்கறேன். நீ உன் வேலையை மட்டும் பாரு” என்று அவர் அறிவுறுத்த,
“நீங்களா ஜெயிலுக்கு போனீங்க. ஒருமுறை போய் உள்ளே இருந்துட்டு வாங்க. அப்போ தெரியும். என் வலி என்னன்னு” என்று கண்கள் சிவக்க கத்தினான் மகன்.
சபாபதி மௌனமாக நிற்க, “நீங்க இதுல தலையிடாதீங்க. அவனை என்ன செய்யணும்னு எனக்கு தெரியும். அவன் குடும்பத்தையே இல்லாம பண்றேன்” என்றான் வாசு.
“வேண்டாம் வாசு. உன்னை அப்படியெல்லாம் விட முடியாது. நீ இங்கே இருக்க வேண்டாம். திருச்சிக்கு கிளம்பு. அங்கே நம்ம பைனான்ஸ் கம்பெனியை கொஞ்ச நாள் பார்த்துக்கோ. நான் இதெல்லாம் முடியவும், உன்னை இங்கே கூப்பிட்டுக்கறேன்.” என்றார் சபாபதி.
“என்னால முடியாதுப்பா. நிச்சயம் நான் போகமாட்டேன்.”
“நீ போய்த்தான் ஆகணும் வாசு. இந்த கேஸை நான் ஒண்ணுமில்லாம பண்ற வரைக்கும் நீ வேற எதையும் இழுத்துவிட கூடாது. கேஸ் முடியட்டும். மீதியை அப்புறம் பார்த்துக்கலாம்.”
“என்ன பார்ப்பீங்க… இல்ல, என்ன பார்ப்பீங்கனு கேட்டேன்” என்று அவன் கத்த,
“முட்டாள்… கேஸ் வாங்கி ஜெயில்லயே வாழ்க்கையை முடுச்சுக்கலாம்னு நினைக்கறியா. என்னோட வாரிசு நீ. கட்சில mla சீட் கொடுக்கிறதா பேச்சு போயிட்டு இருக்கு. இந்த நேரத்துல நீ எதுவும் செய்யக்கூடாது. உன் தங்கச்சி விஷயத்தை ஆறப்போடு. பின்னாடி பார்த்துக்கலாம். இப்போ நான் சொல்றதை மட்டும் செய்” என்று மகனை அடக்கினார் சபாபதி.
அவர் சொல்வதில் உடன்பாடு இல்லையென்றாலும், அப்போதைக்கு தந்தையை எதிர்த்துப் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தான் வாசு.
சொன்னது போலவே, அடுத்த இரண்டு நாட்களில் திருச்சிக்கும் கிளம்பியிருந்தான்.
சபாபதி மகன் மீது இருந்த வழக்குகளை எப்படி முடிப்பது என்று தீவிர யோசனையில் இருந்தவர், இருதரப்புக்கும் பொதுவான ஆள் ஒருவரைப் பிடித்து அவரை வைத்து சொக்கநாதரிடம் பேச முயற்சித்தார்.
ஆனால், சொக்கநாதர் சபாபதியிடம் பேசுவதற்கு தயாராக இல்லை என்று முடித்துவிட்டார். இனி, இந்த விஷயத்தில் பேரனை கேட்காமல் எதையும் செய்வதில்லை என்று முடிவெடுத்திருந்தார் அவர்.
அதையே, பஞ்சாயத்து பேச நினைத்தவரிடமும் தெரிவித்துவிட, அவரும் சபாபதியிடம் விஷயத்தை சொல்லிவிட்டு அவர் வேலையை பார்க்கச் சென்றுவிட்டார்.
இந்த விஷயங்கள் அனைத்தும் சக்தியின் காதுகளுக்கு வந்தாலும், எதையும் அறியாதவன் போலவே தன் வேலையை பார்த்து கொண்டிருந்தான் அவன்.