அன்று வெள்ளிக்கிழமை என்பதால் மனோன்மணி நேரத்துடன் கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருக்க, “நாங்களும் வர்றோம் பாட்டி” என்று சேர்ந்து கொண்டனர் வேல்விழியும், மீனாட்சியும்.
மனோன்மணி தன் மருமகளையும் உடன் அழைக்க, மதிய உணவு வேலையிருப்பதால் மறுத்துவிட்டார் சுந்தர வடிவு.
மீனாட்சி காரை எடுக்க, அரைமணி நேரத்தில் அவர்கள் ஊரில் இருந்த அம்மன் கோவிலை அடைந்திருந்தனர் மூவரும். அம்மனை தரிசித்து, கோவிலை வலம் வந்து முடித்தவர்கள் குளக்கரையில் வந்து அமர்ந்து கொள்ள, மீனாட்சி தான் பேச்சை ஆரம்பித்தாள்.
“ஏன் பாட்டி. உனக்கு அம்மாவை போய் பார்க்கணும்னு தோணவே இல்லையா?” என்று அவள் கேட்க,
“அதெப்படி தோணாம இருக்கும். என் மகளாச்சே. விட்டு போற உறவா?” என்று அங்கலாய்த்தார் மீனாட்சி.
“அப்போ உன் பொண்ணை போய் பார்க்க வேண்டியது தான?”
“உனக்கு உன் அம்மாவை பார்க்கணுமா? அதுக்குதான் என்னை கூப்பிடறியா?”
“நான் உன் பொண்ணு மேல கடும் கோவத்துல இருக்கேன் பாட்டி. என்னை எல்லாம் இதுல இழுக்காத”
“அப்படி என்னடி பெத்தவ மேல கோபம் உனக்கு. அவ செஞ்சது எல்லாமே உன் மேல வச்ச பாசத்தால தான். அதை மறந்துடாத.”
“நான் எதையும் மறக்கல பாட்டி. என் கல்யாணத்துல உன் பொண்ணு பண்ணது மறக்கிற காரியமா?”
“அவளுக்கு என்னவோ அந்த நேர கோபம் பெருசா போச்சு.விடு.. சரியாகிடுவா” என்று மனோன்மணி மகளுக்காக பேசி வைக்க,
“உனக்கு வெற்றியைப் பார்த்தா பாவமா இல்லையா பாட்டி” என்றாள் மீனு.
மனோன்மணி பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி, “இதெல்லாம் அவனா இழுத்து தலையில போட்டுக்கிட்டது மீனு. நீயும் நானும் பேசி என்ன ஆகப் போகுது.”
“அப்போ நீ எதுவும் செய்ய மாட்ட”
“என்னை என்னடி செய்ய சொல்ற?”
“நீதான அந்த வீட்டுக்கு பெரிய மனுஷி. வெற்றியை வீட்டுக்கு கூப்பிடு” என்று இலகுவாக மீனாட்சி கூற,
“அத்தனை சுலபமான காரியம் இல்லடி பொண்ணே. கல்யாணத்துக்கு கூப்பிட கேட்டதுக்கே, உன் தாத்தன் முறைச்சுக்கிட்டாரு. அதுக்குமேல உன் அம்மா. இப்போ இருக்க நிலைமையில, நான் அவனை வீட்டுக்கு கூப்பிட்டா, அவ்ளோதான்…”
“சும்மா காரணம் சொல்லாத பாட்டி. வெற்றி அண்ணா பாவம் இல்ல. அதோட அண்ணிக்கும் கால்ல அடிபட்டு இருக்கு. நடக்கவே முடியல தெரியுமா அவங்களால?” என்றாள் வேல்விழி.
“அவளை கண்ணால கூட பார்க்க கொடுத்து வைக்கலையேடி நான். இதுவரைக்கும் என் பேரன் பொண்டாட்டியை நான் பார்க்கவே இல்லையே. அவ அடிபட்டு ஹாஸ்பிடல்ல கிடந்தப்ப கூட, நான் போய் பார்க்கலையே” என்று மனோண்மணி கண்ணீர் விட,
“இப்போ ஏன் பாட்டி அழற? உனக்கு என்ன தேனுவை பார்க்கணுமா?” என்றாள் மீனாட்சி.
“நான் அங்கே எல்லாம் வரமாட்டேன். என்னை வேண்டாம்னு போனவன் வீட்டுக்கு நான் வரமாட்டேன். நீ ஏதாச்சும் பேசி என்னை கூட்டிட்டுப் போகலாம்னு நினைக்காத.” என்று ஒரேடியாக மறுத்துவிட்டார் பாட்டி.
“நாம அங்கே போக வேண்டாம். தேனுவை வர சொல்லுவோம்.” என்று மீனு அப்போதும் விடாமல் நிற்க,
“ஒரு பத்து நிமிஷம் பாட்டி. நான் தேனுவுக்கு போன் பண்றேன்.” என்ற மீனாட்சி அவர் மறுப்பதற்கு முன்பே, அலைபேசியை காதில் வைத்துவிட,
“மீனாட்சி” என்று பல்லைக் கடித்து கொண்டிருந்தார் மனோ.
மீனாட்சி தேனுவிடம் பேசிய அடுத்த பதினைந்து நிமிடங்களில், வெற்றி மனைவியை அழைத்துக்கொண்டு அந்த கோவிலுக்கு வந்துவிட, பேரனை பார்த்த நிமிடம் உருகத்தான் செய்தது மனோன்மணிக்கு.
அவன் செயல் நினைவு வரவும், கோபத்தை இழுத்து பிடித்து முகத்தை திருப்பிக் கொண்டார்.
வெற்றி அதைப் பற்றி எல்லாம் கவலை அற்றவனாக, எப்போதும் போல் வேகமாக பாட்டியை நெருங்கி அணைத்துக்கொண்டு அவர் கன்னத்தில் முத்தமிட்டு, “மனோ” என, அதற்குமேல் தாளாமல் அழுதுவிட்டார் மனோன்மணி.
“போடா. என்னை விட்டு போன இல்ல. போ” என்று பேரனுடன் அழுகையுடன் அவர் சண்டையிட,
“சாரி மனோ. போகமாட்டேன். சாரி. சாரி” என்று பாட்டியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் பேரன்.
சில நிமிடங்கள் வரை அவர்கள் சுற்றி இருந்தவர்களை மறந்துவிட, மீனாட்சி இடையில் புகுந்து இருவரையும் பிரித்து விட்டவள், “கொஞ்சம் ஓவரா இருக்கு. போதும்” என்றாள் முகத்தை சுருக்கிக்கொண்டு.
மனோன்மணி அவள் செயலில் சிரிக்க, “எப்படி எப்படி. நான் அவன் வீட்டுக்கு வரமாட்டேன். அவன்கிட்ட பேசமாட்டேன். என்னல்லாம் சொன்ன நீ. வாயெல்லாம் பொய்” என்று பாட்டியை திட்டினாள் பேத்தி.
அவள் பேச்சில் வெற்றியும் சிரிக்க, “இந்த வளர்ந்தவனை மட்டும் கொஞ்சிட்டு இருக்க. இவளை யார் பார்ப்பா?” என்று தேனுவை மீனாட்சி இழுத்துவிட, பயந்தவளாக அவரின் முன்னே வந்து நின்றாள் தேனருவி.
அவளின் பயந்த முகம் மனோன்மணியை ஏதோ செய்ய, “எப்படி இருக்கடா” என்று அவள் தலையில் கையை வைத்தார் மனோன்மணி.
தேனருவிக்கு அதற்கே அழுகை வர, கண்ணீருடன் அவர் காலில் விழுந்துவிட்டாள். மனோன்மணி அவளை எழுப்பி நிறுத்தி, அவள் கண்ணீரை துடைத்துவிட்டு, “நீங்க செஞ்சது தப்புதான். அதுல எல்லாருக்குமே கொஞ்சம் வருத்தம். இப்போ நீ அழுது எதுவும் மாறிடாது. நடந்து போன எதையும் மாத்தவும் முடியாது. எல்லாம் அதுவே கடந்து போகட்டும். அமைதியா விட்டுடுவோம். இந்த அழுகை, கோபம் எதுவும் வேண்டாம்.”
“வேண்டிய அளவுக்கு என் குடும்பம் அழுது தீர்த்துடுச்சு. இனியாவது நீங்க எல்லாம் சிரிச்சு சந்தோஷமா இருங்க” என்றவர் கண்கள் கலங்கி நிற்க, மீனாட்சி தன் கையில் இருந்த பூ கூடையை அவரிடம் நீட்டினாள்.
அதில் இருந்த குங்குமத்தை எடுத்து தேனருவிக்கு இட்டவர், மற்ற மூவருக்கும் கூட அவர் கைகளாலேயே குங்குமம் வைத்துவிட்டார்.
“சீக்கிரமே எல்லாம் சரியாகும். எல்லாத்துக்கும் வழி பிறக்கும். கவலைப்படாம இரு. சந்தோஷமா இருங்க ரெண்டு பேரும்” என்று பேரன் பேத்தியை வாழ்த்தினார் மனோன்மணி.
வெற்றி அவர் பேசி முடிக்கவும், அவரை கட்டிக்கொள்ள, “சீக்கிரம் வீட்டுக்கு வந்திடுடா” என்றார் மனோன்மணி.
வெற்றி சரியென்பதாய் தலையசைக்க, அங்கிருந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பியது அந்த குடும்பம்.
வெற்றியை கோவிலில் வைத்து சந்தித்ததைப் பற்றி வீட்டில் யாரிடமும் மூச்சுக் கூட விடவில்லை மூவர் அணி. அவரவர் வழக்கம்போல் அவரவர் வேலைகளைப் பார்த்தாலும், மனோன்மணிக்கு பேரன் நினைவு விடுவதாக இல்லை.
‘எப்படியாவது பேரனை அழைத்துக் கொள்ள வேண்டும்’ என்று அவர் உள்மனது கூறிக்கொண்டே இருக்க, யாரிடம் பேசுவது என்று யோசித்தபடி தான் சுற்றிக் கொண்டிருந்தார்.
மீனாட்சியும், வேல்விழியும் அவரை கவனித்துக் கொண்டே இருந்ததில், இருவரும் பாட்டியை நெருங்கி விசாரிக்க, தன் எண்ணத்தை பேத்திகளிடம் தெரியப்படுத்தினார் அவர்.
வேல்விழியும், மீனாட்சியும் ரகசியமாக சிரித்துக் கொள்ள, “நான் ஒரு வழி சொல்லவா?” என்றாள் வேல்விழி.
“சீக்கிரம் சொல்லுடி” என்று மீனாட்சி துரிதப்படுத்த,
“நீ மட்டும் நினைச்சா, வெற்றி அண்ணாவை உடனே வீட்டுக்கு வர வைக்க முடியும் பாட்டி.” என்றாள் வேல்விழி.
“நான் என்னடி பண்ண?”
“உனக்கு உடம்பு முடியலன்னு ஒரு ட்ராமாவை போடு. செத்துப் போய்டுவேனோன்னு பயமா இருக்கு. சாகறதுக்குள்ள என் பேரனை பார்க்கணும். அவனை இந்த வீட்டுக்கு கூப்பிடுங்கன்னு சொல்லி அழுது ஊரை கூட்டிடு. சிம்பிள்” என்று அவள் ஐடியா கொடுக்க,
“போடி கூறுகெட்டவளே. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனா, என் மானம் காத்தோட போயிடும். இந்த வயசுல என்னை நாடகம் நடத்த சொல்றா.” என்று மறுத்தார் பாட்டி.
“இல்ல பாட்டி. இது நல்ல யோசனை தான். நீ மட்டும் ஒத்துழைச்சா நம்ம பிளான் கண்டிப்பா சக்ஸஸ் ஆகிடும்.”
“நீயுமாடி” என்று அவர் மீனாட்சியை பாவமாக பார்க்க,
“உனக்கு வெற்றியை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வரணுமா வேண்டாமா?”
“வரணும் தான்” என்று மனோ இழுக்க,
“அப்போ என் பேச்சை கேளு.” என்றவள் நடத்த இருந்த நாடகத்தை குறித்து மொத்தமும் அவருக்கு விளக்கிக்கூற, அதன்படி அடுத்த இரண்டாவது நாள் வீட்டின் நடுக்கூடத்தில் மயங்கி விழுந்தார் மனோன்மணி.
அந்த நேரம் வடிவும், மீனாட்சியும் மட்டுமே உடனிருக்க, திட்டமிட்டபடி மீனாட்சியே அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, மற்றவர்களுக்கும் தகவல் கொடுத்துவிட்டாள்.
வழக்கமாக அவர்கள் வந்து செல்லும் மருத்துவமனை தான் அது. மீனாட்சி ஏற்கனவே அவர்களின் குடும்ப மருத்துவரிடம் பேசி இருக்க, மனோன்மணி கண்ணீருடன் கோரிக்கை வைத்ததில், அவரும் இவர்கள் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டு இருந்தார்.
இப்போது அதன்படியே காரியங்கள் வேகமாக நடக்க, அடுத்த ஒருமணி நேரத்தில் மொத்த குடும்பமும் மருத்துவமனையில் ஒன்றுகூடி இருந்தது.
வெற்றி, தேனருவி என்று அவர்களும் வந்துவிட, இந்தப்பக்கம் வள்ளியம்மையும் அழுதபடியே வந்து நின்றிருந்தார்.
சொக்கநாதர் சோகமே வடிவாக ஒருபுறம் அமர்ந்துவிட்டிருக்க, முத்தையனுக்கு அவரை தேற்றுவதே பெரும் வேலையாக இருந்தது.
சுந்தரவடிவு ஓயாமல் கண்ணீர் வடித்துக்கொண்டே இருக்க, தங்கவேல் அவரை சமாளித்துக் கொண்டிருந்தார்.
வேல்விழியும், மீனாட்சியும் ஒரு ஓரமாக நின்றிருக்க, சக்தியும் சோர்வுடன் தான் இருந்தான்.
மனோன்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருமணி நேரம் கழித்து, குடும்பத்தினரை அவர் அறைக்குள் அனுமதிக்க, வெற்றி தயக்கத்துடன் வெளியே நின்றுவிட்டான். அவனே நிற்கும்போது தேனருவி என்ன செய்ய முடியும்.
இங்கு அறைக்குள் அப்போதுதான் மயக்கத்தில் இருந்து விழிப்பது போல் எழுந்த மனோன்மணி, திடீரென கண்ணீர் வடிக்க ஆரம்பித்துவிட, மொத்த குடும்பமும் பதறி நின்றது.
“என்னம்மா” “மனோ” “என்ன பாட்டி” என்று அத்தனைப் பேரும் கேட்டு நிற்க, “எனக்கு என் பேரனைப் பார்க்கணும்ங்க” என்று கணவரிடம் கூறினார் அவர்.
சக்தி வேல்விழிக்கு கண்ணை காண்பிக்க, அவள் வெளியே இருந்த வெற்றியை அழைக்கவும், மனைவியுடன் அந்த அறைக்குள் நுழைந்தான் வெற்றி.
“பாட்டி” என்று அவன் நெருங்கவும், பேரனை கட்டிக் கொண்டவர், “என்கூடவே இருடா. இன்னும் எவ்ளோ நாள் உயிரோட இருப்பேன்னு தெரியல. நான் இருக்கிற வரைக்கும் என்கூடவே இருடா” என்றார் கண்ணீருடன்.
“என்னம்மா நீ” என்று தங்கவேல் ஆரம்பிக்க, “தங்கம்” என்று மகனை அமைதியாக்கி விட்டார் சொக்கநாதர்.
சக்தி அமைதியாக வேடிக்கைப் பார்த்து நிற்க, வள்ளியம்மை நடக்கும் எதையும் தடுக்க வழியில்லாமல் தடுமாறி நின்றார்.
என்னவோ, அவரால் வெற்றியை இப்போதுவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் மீது அவர் வைத்திருந்த அதீத அன்பு இப்போது அப்படியே வெறுப்பாக மாறிப் போயிருக்க, அவனோடு சேர்ந்து நின்ற தேனருவி மீதும் இப்போது கோபம் வந்தது.
முத்தையனுக்கு அதெல்லாம் எதுவும் இல்லாமல் போக, “என்ன மாப்பிளை. பாட்டி கேக்குறாங்க இல்ல. வீட்டுக்கு வர்றேன்னு ஒரு வார்த்தை சொல்லு” என்றார் வெற்றியிடம்.
வெற்றி சட்டென வள்ளியம்மையைப் பார்க்க, அவர் முகத்தை திருப்பி கொண்டார்.
வெற்றி தயக்கத்துடன் நிற்க, “எதையும் யோசிக்காத வரேன்னு சொல்லு வெற்றி” என்று மீண்டும் ஒருமுறை முத்தையன் வற்புறுத்த, சக்தி வெற்றியின் தோளில் கையை வைத்தான்.
‘நான் இருக்கிறேன்’ என்ற அவனது மௌனத்தை புரிந்தவனாக, சம்மதமாக தலையசைத்தான் வெற்றி.
வேல்விழியும், மீனாட்சியும் தங்கள் மகிழ்வை வெளிப்படையாக காண்பிக்க, சக்தி சின்னதாக புன்னகைத்துக் கொண்டான்.
தங்கவேலுவும், வடிவும் வள்ளியம்மையைப் பார்க்க, அவர் எதிலும் கலந்து கொள்ளாமல் அன்னையிடம் நலம் விசாரித்துவிட்டு விடைபெற்றுக் கொண்டார்.
அதன்பின், சக்தி தனியே மருத்துவரை சென்று சந்திக்க, “மனோன்மணி இன்னும் இரண்டு நாட்களாவது மருத்துவமனையில் இருக்க வேண்டும்” என்றார் மருத்துவர்.
“ஏன் அங்கிள். அப்ப்டித்தான் சொல்லி கொடுத்தார்களா” என்று சக்தி கேட்டுவிட,
“சக்தி” என்று விழித்தார் அவர்.
சக்தி அமைதியாக பார்த்து நிற்க, “உன் மனைவியும், பாட்டியும் தான் வெற்றி. நல்ல விஷயத்துக்காக தானேன்னு நானும் அமைதியா இருந்துட்டேன்” என்றார் அவர்.
“நிஜமாகவே இது எங்களுக்கு நல்ல விஷயம் தான் டாக்டர். ஆனா, எல்லாரையும் யோசிக்கணும் இல்ல. தாத்தாவுக்கு ஏதாவது வந்து இருந்தா, அப்பா ஏற்கனவே ஹார்ட் பேஷண்ட். எல்லாமே பார்த்திருக்கணும். இதுல உங்க தப்பு எதுவும் இல்ல. எனிவே தேங்க்ஸ்” என்று முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டான் அவன்.
மருத்துவரை சந்தித்துவிட்டு வெளியே வந்தவன் கண்களில், பாட்டியின் அறைக்கு வெளியே அமர்ந்திருந்த வேல்விழியும், மீனுவும் பட, “என்னோட வா” என்று மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பினான் சக்தி.
வேல்விழி ஒன்றும் புரியாமல் நிற்க, மீனு அதே நிலையில் அவன் பின்னோடு ஓடினாள்.
மருத்துவமனையை விட்டு வெளியே வந்தவன் காரின் அருகே செல்ல, “எங்கே போறீங்க. பாட்டி இங்கே இருக்கும்போது” என்றவளை முறைத்தவன், “ஏறு” என்று அவளையும் காரில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டான்.
இருவரும் அவர்கள் அறையை அடையவும், “யாரைக் கேட்டு இதெல்லாம் செய்யுற நீ?” என்று கோபத்துடன் சக்தி அவளது இடக்கையைப் பிடித்து அழுத்த,
“வலிக்குது மாமா” என்று முகத்தை சுருக்கினாள் மீனு.
“உனக்கு எவ்ளோ தைரியம்? இந்த வயசுல அவங்களை இந்த அளவுக்கு இறக்கி நாடகம் போட வச்சிருக்க. அவங்களை நினைச்சு தாத்தாவுக்கு ஏதாவது ஆகி இருந்தா, நீ பதில் சொல்லுவியா” என்று சக்தி விடாமல் அவளை உலுக்க,
“என்ன சொல்றிங்க நீங்க. நான் என்ன” எனும்போதே, “அறைஞ்சுடுவேன் ராஸ்கல்” என்று கோபமாக கையை உயர்த்திவிட்டான் சக்தி.
மீனு பயந்து நிற்க, “எல்லாத்திலேயும் அவசரம். அதிகப்பிரசங்கித்தனம். உன்னை கூப்பிட்டாங்களா நாடகம் போட?” என்று விடாமல் கத்திக் கொண்டிருந்தான் சக்தி.
அவன் திட்டியதில் மீனுவுக்கு அழுகை வர, “அழுத… கொன்னுடுவேன் உன்னை” என்று அவள் கழுத்தைப் பிடித்துவிட்டான் சக்தி.
மீனு தேம்பிக் கொண்டே நிற்க, “போடி” என்று சட்டென சக்தி அவளை உதறியதில், கட்டிலில் விழுந்தாள் பெண்.
சக்தி கோபம் குறையாமல் அறையைவிட்டு வெளியேறிவிட, அவன் பேச்சில் வடிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு, முகத்தை கழுவி கீழே இறங்கினாள் மீனு.
சக்தி ஹாலில் இருந்த சோபாவில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டிருக்க, அவனை கண்டு கொள்ளாமல் சமையல் அறைக்கு சென்றவள், அவளுக்கு மட்டும் காஃபி வைத்துக்கொண்டு சமையல் அறையின் பின்பக்க படிக்கட்டில் வந்து அமர்ந்து கொண்டாள்.
சக்தி காஃபியின் வாசனையில் கண்களைத் திறந்தவன், ‘தனக்குத்தானோ’ என்று எட்டிப் பார்க்க, மனைவியை காணாமல் எழுந்து வந்தான்.
அவள் பின்பக்க படியில் அமர்ந்திருப்பதை கண்டு சக்தி நெருங்க, அவனை கண்டுகொள்ளாமல் அவள் காஃபியை ருசிக்க, அவள் கையில் இருந்த காஃபியை பிடுங்கி கொண்டவன், “மாமா” என்று அவள் கத்தியதை கண்டு கொள்ளாமல் படிகளில் ஏறிவிட்டான்.