நீ மட்டும் நிஜமாக 23

சக்தியின் திருமணம் முடிந்து ஒருவாரம் கழிந்திருக்க, அன்றாட வேலைகளுக்கு திரும்பியிருந்தனர் மணமக்கள். சக்தி தனது ஷோரூம், சர்க்கரை ஆலை என்று ஒற்றை ஆளாய் பறந்து கொண்டிருக்க, அவ்வபோது அவனைப் பிடித்து இழுத்து நிறுத்துவது மீனாட்சி தான்.

சொக்கநாதர் திருமணத்தன்று நடந்த வாக்குவாதத்திற்கு பிறகு, பேரனிடம் பேச்சைக் குறைத்துக் கொண்டிருந்தார். சக்தியாக எதுவும் கேட்டாலும், அதற்கு மட்டுமே பதில் வரும். சக்தியும் அதற்குமேல் அவரை பேச்சில் இழுக்காமல் ஒதுங்கிவிட, பாட்டனுக்கும், பேரனுக்கும் பனிப்போர் முடிவதாக இல்லை.

மனோன்மணி அவர்கள் விஷயத்தில் தலையிடாமல் தன் போக்கில், வடிவு, மீனாட்சி வேல்விழி என்று இவர்களுடன் கலந்து கொண்டார்.

பேரனின் திருமணம் அவரை நிம்மதியடையச் செய்திருந்தது. அதுவும் தன் பேத்தியே மருமகளாக வந்ததில் இன்னுமின்னும் மகிழ்வு தான். அந்த மகிழ்ச்சியில், நடந்துவிட்ட சிறுசிறு கசப்புகளை அழகாக கடந்து கொண்டிருந்தார் அவர்.

மீனாட்சி இப்போதைக்கு வீட்டில் இருக்க, அவளின் கல்லூரியிலும் சக்தி பேசி இருந்தான். அதன் பேரில், தேர்வுகளுக்கு மட்டும் கல்லுரிக்குச் சென்று வந்தால் போதும் என்று அனுமதி கொடுத்திருந்தது கல்லூரி நிர்வாகம்.

முழுநேரமும் வீட்டில் இருப்பது மீனாட்சியை அவ்வபோது சோர்வடையச் செய்ய, அந்த நேரங்களில் வடிவுடன் சேர்ந்து கொண்டு சமையல் அறையை இரண்டாக்கிக் கொண்டிருப்பாள் அவள்.

அவளது அடாவடியில், “சக்தி… இவளை உன்னோட கடைக்கு கூட்டிட்டு போய்டுடா” என்று அவனது அன்னையே அவனிடம் புலம்பி வைக்க, அதன் பொருட்டு தினமும் மதியத்திற்குமேல் சக்திக்கு உணவு எடுத்துக்கொண்டு அவனது ஷோவ்ரூமுக்கு வந்துவிடுவாள் மீனாட்சி.

இப்படியாக இவர்களின் நாட்கள் கழிய, இன்றும் தன் வழக்கமாக சக்திக்கு உணவை எடுத்து வந்திருந்தாள் மீனாட்சி. அவள் வந்த நேரம் முத்தையனும் கடையில் இருக்க அவருக்கும் சேர்த்தே பரிமாறினாள் மகள்.

அவர் உண்டு முடித்து கிளம்பும் வரை, அவளில் தொடங்கி ஊர் உலகம் வரை அத்தனையும் தந்தையிடம் பேசி முடித்தவள், அன்னையைப் பற்றி மறந்தும் வாய் திறக்கவில்லை.

முத்தையன் கிளம்பும் நேரம், அவளின் முகத்தைப் பார்த்து நிற்க, “ஒழுங்கா சாப்பிடுங்கப்பா. உடம்பை கவனிச்சுக்கோங்க.” என்று மகள் அக்கறை காட்ட, அது போதவில்லை முத்தையனுக்கு.

“நீ வீட்டுக்கு வாயேன்மா” என்றுவிட்டார்.

மகள் அமைதியாக புன்னகைத்து, “கொஞ்சநாள் போகட்டும்ப்பா. உங்க வீட்டம்மா மட்டுமில்ல. நானும் இதையெல்லாம் கொஞ்சம் மறக்கணும் இல்ல” என்றாள் மீனு.

“என்னடா”

“அப்படி என்னப்பா கோபம் அவங்களுக்கு? ஆமா… வெற்றி தப்பு பண்ணிட்டான் தான். ஆனா, அதுக்காக அவனை அப்படியே ஒதுக்கி எல்லாம் வைக்க முடியாது இல்ல. என் கல்யாணத்துக்கு அவன் வராம இருக்கறதுல, அம்மாவுக்கு என்னப்பா லாபம். ஒண்ணுமே கிடையாது. இதனால ஏதாவது நல்லது நடக்கப் போகுதா. இல்ல, ஏதாவது கெட்டது நடக்காம இருக்கப் போகுதா? அப்புறம் அவன் வந்தா என்னப்பா?”

“வெற்றி நிலைமையை கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. அன்னைக்கு மட்டும் அவன் வராம இருந்து இருந்தா, வாழ்நாள் முழுக்க இதை நினைச்சு அவன் கஷ்டப்பட்டு இருப்பான். நியாயமாப்பா?” என்று மீனு வாதிட,

“உன் அம்மா பக்கமும் கொஞ்சம் யோசிச்சுப் பார்க்கணும் மீனு. அவளோட பயம் அவளை ஆட்டி வைக்குது. நீ எங்களுக்கு ஒத்தைப் பிள்ளைடா.” என்றார் முத்தையன்.

“அந்த ஒரே காரணத்துக்காக, சுற்றி நிற்கிற அத்தனைப் பேரையும் காயப்படுத்தலாமாப்பா?” என்றவளுக்கு என்ன பதில் கொடுப்பது என்று புரியாமல் அமைதியானார் முத்தையன்.

“அவங்க மட்டும் கொஞ்சம் பொறுமையா இருந்து இருந்தா, அன்னைக்கு ரிசப்ஷன் நின்னுப் போயிருக்குமா? இந்த விஷயத்துல எத்தனைப் பேருக்கு வலி. தாத்தா இன்னைக்கு வரைக்கும் இவர்கிட்ட முகம் கொடுத்துப் பேசல. அத்தையும், மாமாவும் இவருக்கு ஒரு நல்லது பண்ணிப் பார்க்கணும்னு எவ்ளோ ஆசைப்பட்டாங்க. அது நடந்தும் அவங்களால முழுசா சந்தோஷப்பட முடியல. அவங்க வெளியே காட்டிக்காம இருக்காங்கப்பா. அடுக்காக வலிக்கவே இல்லைன்னு எல்லாம் இல்ல.”

“இது எல்லாமே அம்மாவால. அவங்க ஒருத்தர் கோபத்துக்காக இத்தனை பேரை தண்டிச்சு இருக்காங்க. சரி. அதுகூட போகட்டும். கோபம் குறைஞ்சு அடுத்த நாள் வந்து பார்த்திருக்கலாம்ல. இல்ல, எனக்கு ஒரு போன் பண்ணி பேசி இருக்கலாம் இல்ல.”

“நான் செஞ்சது தப்புதான். வெற்றியை கூப்பிட்டதுக்காக என்னை அடிக்க கூட செய்யட்டும்ப்பா. ஆனா, இப்படி என்னை விட்டுடலாமா. நான் உங்களுக்கு ஒத்தைப் பிள்ளை தானே” என்றவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது.

அவளும் எத்தனை நாட்கள் தான் வெளியில் காட்டிக் கொள்ளாமல் சுற்றி வர முடியும்?

இன்று முத்தையன் கேட்கவும் மனதில் இருந்தது அத்தனையும் கொட்டிவிட்டாள். வார்த்தைகளின் கனம் தாங்கமுடியாமல் கண்ணீர் வந்துவிட, முத்தையனும், சக்தியும் பதறி நின்றனர்.

“மீனும்மா அழாதடா” என்று தந்தையும் கலங்க,

“மீனு கண்ணைத் துடை” என்று அதட்டினான் கணவன்.

அவன் அதட்டலில் கண்களை அவள் புறங்கையால் துடைத்துக்கொள்ள, “என்ன மாமா நீங்க? அவகூட சேர்ந்து அழுதுட்டு இருக்கீங்க. கண்ணைத் துடைங்க முதல்ல” என்று அவரையும் அதட்டினான் சக்தி.

“எல்லாம் சரியாகும் மாமா. அத்தையைப் பத்தி உங்களுக்கு தெரியாதா? ஏதோ கோபம்… என்ன செய்யுறோம்னு தெரியாம எதையோ செய்துட்டு இருக்காங்க. கோபம் குறைஞ்சா அவங்களே வந்து நிற்பாங்க. இவளும் அம்மான்னு ஒட்டிப்பா. இது ஒரு விஷயம்னு நீங்க வேற அழுதுட்டு இருக்கீங்க. நீங்க நம்ம வேலையை கவனிங்க முதல்ல. இவங்களை பிறகு பார்த்துக்கலாம்” என்று ஒருவழியாக பேசி அவரை சரிசெய்து அனுப்பி வைத்தான் மருமகன்.

அவர் தலை மறையவும், “உனக்கு அறிவிருக்கா மீனு?” என்று பற்களை கடித்துக்கொண்டு அவன் மனைவியிடம் திரும்ப, வந்த கோபத்தில் முறுக்கிக்கொண்டு அவளும் வெளியேறப் பார்க்க, ஒரே இழுப்பில் அவளை சோஃபாவில் தள்ளி விட்டிருந்தான் சக்தி.

“இப்போ எதுக்காக என்னை தள்ளி விட்டிங்க” என்று மீனு கோபம் கொள்ள,

“அதென்ன பழக்கம். பேசிட்டு இருக்கும்போது மூஞ்சை திருப்பிக்கிட்டு கிளம்புறது” என்று மீண்டும் அவன் அதட்ட,

“பேசல. அறிவிருக்கா கேட்டீங்க” என்றாள் மீனு.

அதில் சிரிப்பு வர, “குழந்தையா மீனு நீ. அவரே புலம்பிட்டு இருக்கார். இதுல உன் பங்குக்கு நீயும் அவரை பேசி வைப்பியா. அவரை யோசிக்கவே மாட்டீங்களா அம்மாவும், பொண்ணும்” என்று சக்தி கேட்க, தந்தையின் நிலையை நினைத்து கவலை கொண்டாள் மீனு.

“இனி அவர்கிட்ட இப்படி பேசக்கூடாது. உனக்கு என்ன பஞ்சாயத்து இருந்தாலும், அதை உன் அம்மாவோட முடிச்சுக்கணும் நீ” என்று சக்தி உத்தரவாக கூற,

“என் அப்பா அவரு” என்றாள் மீனு.

“அதுக்கு முன்னாடியே என் மாமன்டி” என்றான் சக்தி.

அவன் பேச்சில் சிரித்தவள், “சரி பேசமாட்டேன்” என்றிட, “வா” என்று அவளை அழைத்துக்கொண்டு கிளம்பினான் சக்தி.

கடையில் இருந்து கிளம்பியவர்கள் சர்க்கரை ஆலைக்கு வந்து சேர, இரவு எட்டு மணி வரையும் இருவருமே அங்கே தான் நின்றனர்.

ஆலையின் பராமரிப்பு பணிகள் முடிந்து, மீண்டும் ஆலை இயங்க தொடங்கியிருக்க, தினமும் ஒரு மூன்று மணி நேரமாவது அங்கே வந்து நின்றுவிடுவான் சக்தி.

இப்போதும் ஆலை முழுவதும் நடந்தே பார்வையிட்டு ஓய்ந்து போனவனாக அவன் அறையில் வந்து அமர,

அங்கிருந்த கணினியில் எதையோ பார்த்திருந்தாள் மீனாட்சி.

சக்தி வரவும், கணக்கு வழக்குகளில் அவளுக்கிருந்த சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டவள், அரைமணி நேரத்தில் தன் வேலைகளை முடித்துவிட்டாள்.

அதற்குள் சக்தி அவளுக்கு எதிரே இருந்த இருக்கையில் சாய்ந்தபடி உறங்கியிருக்க, “மாமா” என்று அவனை எழுப்பியவள், அவனை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினாள்.

அன்றிரவு உணவு முடித்து இருவரும் அவர்கள் அறையில் இருந்த நேரம், “சர்க்கரை ஆலையை கவனிக்க ஒரு ஆளை வேலைக்கு எடுக்கலாம் இல்ல. நாம இருக்க நிலையில கண்டிப்பா, சம்பளம் கொடுக்க முடியும்” என்று மனைவி கூற,

“அதெல்லாம் சொந்தக்காரன் தலைவலி. நமக்கு என்ன?” என்றான் கணவன்.

“என்ன” என்று மீனு விழிக்க,

“அது அவனுக்காக வாங்கினதுடா. என்ன செய்யணுமோ, அவன் வந்து செய்யட்டும். நான் இப்போதைக்கு சும்மா மேற்பார்வை பார்த்துட்டு இருக்கேன். அவ்ளோதான்” என்றான் சக்தி.

“ஓஹ். இது அவனுக்கு தெரியுமா?”

“அவன் இங்கே வரட்டும். அப்புறம் சொல்லிக்கலாம்” என்றவன் படுக்கையில் புரள,

“என்னாச்சு” என்றவள், “கழுத்து வலிக்குதா” என்றாள் சந்தேகமாக.

“ஆமா. திருப்பவே முடியல” என்று சக்தி முகம் சுருக்க,

“அங்கே தூங்கும்போதே தெரியும். இப்படி இழுத்து வைப்பீங்கன்னு.” என்று திட்டினாலும், அருகில் இருந்த தைலத்தை எடுத்து அவன் கழுத்தில் தேய்த்தவள், அவன் தலைக்கு வைத்திருந்த இரண்டு தலையணைகளை பிடுங்கிக்கொண்டு, “அசையாம படுங்க” என்று மிரட்டி படுக்க வைத்தாள்.

“இதெல்லாம் அநியாயமடி. கல்யாணம் ஆன நாள்ல இருந்து வெறும் ஸ்னாக்ஸ் மட்டும்தான் கொடுத்த. இப்போ அதுவும் இல்லாம அசையாம படுக்க சொல்ற” என்று கணவன் சத்தமிட, வேகமாக அவன் வாயை மூடிவிட்டாள் மீனு.

சக்தி அப்போதும் பேச முற்பட, “அநியாயம் மாமா நீங்க. ஸ்னாக்ஸ் கொடுக்கறாங்களாம். பேச்சைப் பாரு” என்றவள் அவன் கன்னத்தில் ஒரு அடி வைக்க,

“அடிச்சுட்டா… என் பொண்டாட்டி என்னை அடிச்சுட்டா” என்று அதற்கும் கத்தினான் அவன்.

“ஐயோ… கத்தி என் மானத்தை வாங்காதீங்க” என்றவள் அவன் வாயைப் பொத்த, அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன், “மீனுக்குட்டி… இன்னைக்கு ஃபுல் மீல்ஸ் சாப்பிடுவோமா.” என்றான் அணைப்பில் இறுக்கம் கொடுத்து.

மீனு மீண்டும் அவன் வாயில் அடிக்க, “இப்படி அடிக்கக்கூடாது தங்கம்…” என்றவன், அடிப்பது எப்படி என்று அவளுக்கு வகுப்பெடுக்க தொடங்கினான்.

கிட்டத்தட்ட நான்கைந்து நாட்களாகவே, ஏதோ ஒரு குழப்பத்துடன் தான் அலைந்து கொண்டிருந்தான் வெற்றி. சக்தியின் திருமணம் நல்லபடியாக முடிந்தது ஒருபக்கம் என்றால், தேனருவியின் உடல்நிலை பூரணமாக தேறியிருந்தது. இதெல்லாம் மகிழ்ச்சி தான் என்றாலும், ஏதோ ஒன்று குறைந்தது அவனுள்.

மனதில் ஏறியிருந்த பாரமெல்லாம் ஓரளவு நீங்கிப் போயிருக்க, மனம் தானாக மனைவியைத் தேடியது. ஆனால், அவளை நெருங்கவும் அவன் மனமே தடையாக இருந்ததில் நொந்துதான் போனான் அவன்.

இத்தனை நாட்கள் அவளிடம் இருந்து விலகி இருந்தவனுக்கு, இப்போது மனைவியை நெருங்க அச்சமாக இருந்தது உண்மையில். எதுவும் தவறாக எடுத்துக் கொள்வாளோ என்று அவனுக்குள்ளே ஒரு எண்ணம்.

அவனும் அண்ணனின் திருமணம் முடியட்டும் என்று தள்ளி நின்றவன் தானே. நேரடியாக சொல்லாவிட்டாலும், அவளும் அதைப் புரிந்து தான் விலகி நின்றாள்.

ஆனால், இப்போது சக்தியின் திருமணம் முடியவும், சட்டென அவளை நெருங்கவும் தயக்கமாக இருந்தது வெற்றிக்கு.

இப்படியாக, அவன் நாட்களை கடத்திக் கொண்டிருக்க, தேனருவியிடம் இயல்பாக நெருங்குவதற்கு கூட தயக்கமாக இருந்தது இப்போது. ஒவ்வோர் அணுவும் அவளை எதிர்பார்க்க, எங்கே அருகில் செல்வது என்று விலகியே நின்றான் அவன்.

அவனின் இந்த விலகல் தேனருவியை சோர்வடையச் செய்ய, அவளுமே சற்று வாட்டமாக தான் காணப்பட்டாள்.

அன்றும் அப்படித்தான். வெற்றி வேலைக்கு சென்றிருக்க, அவனுக்கு பிடிக்குமே என்று மீன்குழம்பு வைத்துவிட்டு காத்திருந்தாள் தேனருவி.

அன்றொரு நாள் அவள் மீன் குழம்பு வைத்தபோது, அவன் செய்த சேட்டைகள் எல்லாம் நினைவுக்கு வர, அதை எண்ணி சிரித்தவளாக வீட்டின் முன்வாசல் திண்ணையில் அமர்ந்திருந்தாள்.

வெற்றி வேலை முடிந்து வந்தவன், அவளை பார்த்து புன்னகைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைய, அவனுக்கு துண்டை எடுத்துக் கொடுத்தவள், அவன் குளித்து வருவதற்குள் உணவை எடுத்து வைக்க, அவள் தட்டில் வைத்தது என்னவென்று கவனித்தானா என்றுகூட தெரியவில்லை தேனுவுக்கு.

அவன் போக்கில் உண்டு முடித்தவன், “நீ சாப்பிடு” என்றுவிட்டு எழுந்து கொள்ள,

“வெற்றி நில்லுங்க” என்றாள் தேனருவி.

வெற்றி சட்டென நின்று திரும்ப, “என்ன பிரச்சனை உங்களுக்கு? என்கிட்டே பேச பிடிக்கலையா?” என்றாள் தேனு.

“ஏய் என்னடி” என்றவன் பதறி அவளை நெருங்க,

“ஏன் என்கிட்டே பேசல நீங்க” என்று கேவி அழுதாள் மனையாள்.

“ஏய் அழாதடி” என்று வெற்றி பதட்டமாக.

“நான் என்ன தப்பு பண்ணேன்?” என்று மேலும் அழுதவளை தேற்றும் வழி தெரியாமல், அவளை அணைத்துப் பிடித்து கொண்டான் வெற்றி.

தேனருவி அவன் நெஞ்சில் சாய்ந்தபடி அழுகையைத் தொடர, “ஏய் அம்மும்மா அழாதடி” என்று அவள் கண்களைத் துடைத்துவிட்டான் வெற்றி.

அழுகை தேம்பலில் வந்து நிற்க, “நீ ஏன் என்கிட்டே பேசல.” என்றாள் மீண்டும்.

“பைத்தியக்காரி… பைத்தியக்காரி. எதுக்குடி இப்படி அழற.”

“நீங்கதான். உங்களால தான்” என்றாள் அவள்.

“ஐயோ… உனக்கு எப்படி புரிய வைப்பேன் நான்” என்றவன், “என்னால நல்லவனா நடிக்கக்கூட முடியலடி” என்றான் பாவமாக.

“என்ன சொல்றீங்க” என்று அவள் குழம்ப,

“தேனு” என்றவன், அவள் சுதாரிக்கும் முன்பே அவள் இதழ்களை தன்னிதழ்களால் மூடியிருந்தான்.

சில நொடிகள் தேனுவுக்கும் ஒன்றும் புரியாத நிலை தான். வெற்றியே அவளை விட்டு விலகி அவள் முகம் பார்க்க, அவன் முகம் பார்க்க முடியாமல் சிவந்து தலையைக் குனிந்து கொண்டாள் அவள்.

அதில் மீண்டும் குழம்பியவன், அவள் முகத்தை நிமிர்த்தி ஆராய்ச்சியில் இறங்க, “அச்சோ வெற்றி” என்று அவன் கையைத் தட்டிவிட்டு, அவனோடு ஒட்டிக்கொண்டாள்.

வெற்றிக்கு அப்போதுதான் உயிர்வர, அவள் காதோடு, “என் அம்மும்மா” என்று மீண்டும் அவன் முத்தமிட, அதில் கூசி சிலிர்த்தவளாக, இன்னுமின்னும் அவனோடு ஒண்டினாள் தேனருவி.

வெற்றியின் காத்திருப்பும், பொறுமையும் அந்த நொடியோடு காற்றில் போக, தேனருவியை கைகளில் தூக்கிக் கொண்டான் அவன்.

“வெற்றி” என்று அவள் அலற, அதை கண்டுகொள்ளாமல், “இதுக்குமேல முடியாதுடி” என்று தங்கள் அறைக்குள் நுழைந்து, அவளை கட்டிலில் கிடத்தினான் வெற்றி.

“பட்டப்பகல்ல என்ன பண்றிங்க?” என்று அவள் எழுந்து கொள்ள முற்பட, அவள் எழ முடியாதபடி அவள்மீது சரிந்தவன், “ப்ளீஸ்டி” என்றான் பாவமாக.

“மோசம் வெற்றி நீங்க” என்று அவள் சினுங்க,

“அய்யோ கொல்றாளே” என்றவன் அவளது சேலைக்கு விடுதலை கொடுக்க முற்பட, தோளில் கையை வைத்து சேலையைப் பிடித்துக் கொண்டவள், “வெளிக்கதவு திறந்திருக்கு வெற்றி. எழுந்து போங்க” என்று அவனை தள்ளிவிட, கால்களை தரையில் உதைத்துக்கொண்டு எழுந்தவன் வெளிக்கதவையும், பின்பக்க கதவையும் சேர்த்தே மூடிவிட்டு அறைக்குள் நுழைய, அந்த அறையின் ஜன்னலை கைக்காட்டினாள் மனைவி.

“ம்ம்ம்ம்…” என்று போலியாக அழுதவன் அதையும் இழுத்து மூடிவிட்டு, தேனுவை நெருங்கினான். தேனு அவன் பார்வையில் நடுக்கம் கொள்ள, மெல்ல அவளை அணைத்தவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டு சற்றே அவளை ஆசுவாசப்படுத்தினான்.

அங்கிருந்து மெல்ல மெல்ல அவள் கண்கள், கழுத்து என அவன் கீழே இறங்க, எந்த நொடியில் தேனுவின் சேலை அவள் உடலில் இருந்து நழுவியது என்பதே தெரியவில்லை பெண்ணுக்கு.

வெற்றி அவளை மீள முடியாத மயக்கத்தில் ஆழ்த்தியவன், அவள் மயங்கிய நொடிகளில் மெல்ல மெல்ல அவள் உடலில் இருந்த ஆடைகளுக்கு விடுதலை அளித்து இருந்தான்.

ஒரு நிலையில் அவன் கரங்களின் சூட்டை தனது  வெற்று உடலில் உணர்ந்தவள், “வெற்றி” என்று பதறி கண்களை திறக்க, அந்த நொடியில் அவள் இதழ்களை சிறை பிடித்தவன் அதன்பின்னர் அவளை விடுவிக்கவே இல்லை.