நீ மட்டும் நிஜமாக 16

மீனாட்சி தன் காதில் விழுந்த வார்த்தைகளை கேட்டு, பெரிதாக அதிர்ச்சி எல்லாம் அடையவில்லை. சுவேதாவின் எண்ணம் அவள் ஏற்கனவே அறிந்தது தானே. காவல் நிலையம் வரை சென்று இருந்தாளே?. மீனாட்சியின் கவனம் எல்லாம் சக்தியின் மீது தான் இருந்தது.

அவன் முகம் பார்த்த அந்த ஒற்றைக் கணத்தில், அவன் முகத்தை அங்குலம் அங்குலமாக அளந்து கொண்டிருந்தது அவள் விழிகள்.

எப்போதும் நேர்த்தியாக இருக்கும் அவன் முகமும், அதில் துலங்கும் களையும் காணாமல் போயிருக்க, உடையிலும் கவனம் இல்லை என்பது பார்த்த நிமிடத்தில் புரிந்து போனது. மழிக்கப்படாத தாடி, சிவந்து இருந்த விழிகள் என்று அத்தனையும் அவனை காட்டிக் கொடுக்க, மீனாட்சியின் உள்ளம் ஏதோ ஒருவிதத்தில் திருப்திப்பட்டு கொண்டது.

இவள் தனக்குள் அவனை அளவெடுத்தபடி நின்றிருந்த நேரத்தில், சக்தியும் அவளை கண்டு கொண்டிருந்தான். அந்த நேரத்தில் அங்கே அவளை எதிர்பாராமல் அவன் எழுந்து நிற்க, அவனது இதழ்கள், “மீனு” என்றது தானாக.

மீனுவின் மனம் அவன் தன்னை இப்போதும் அழைக்கவில்லை என்று குறைபட்டு கொள்ள, அதன் தலையில் தட்டிவிட்டு, நிதானமாக அறைக்குள் நுழைந்தாள் அவள்.

சுவேதாவும் இதற்குள் எழுந்து நின்றிருக்க, மீனாட்சியின் பார்வை வெகு கம்பீரமாக அளந்தது அவளை. அவள் பார்வையில் சுவேதா தவறு செய்தவளாய் ஒரு நொடி குறுக, அவளை கண்டு கொள்ளாமல் தனக்கே உரித்தான கம்பீரத்துடனும், நேர்கொண்ட பார்வையுடனும் அவளை கடந்து சென்றாள் மீனாட்சி.

அவள் சக்தியின் இருக்கையை நோக்கி நகரவும், சக்தி அனிச்சையாக விலகி நின்று, அந்த சுழல் நாற்காலியையும் பிடித்து கொள்ள, நிதானமாக அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

தன் இருகைகளையும் ஒன்றாக கோர்த்து மேசையின் மீது ஊன்றிக் கொண்டு, நிமிர்ந்து சுவேதாவை பார்த்தவள், “உட்காருங்க” என்றாள் வெகு இயல்பாக.

சுவேதா தயக்கத்துடன் இருக்கையில் அமர்ந்தாலும், அவள் உள்ளமும் கொதித்துக் கொண்டு தான் இருந்தது.

மீனாட்சியின் இந்த உரிமையான பார்வையும், அவள் செயலும், சக்தி அவளுக்கு கொடுத்த ஒத்துழைப்பும் அவளை மேலும் மேலும் கலவரப்படுத்தியது. அவள் கேள்விப்பட்டிருந்த செய்திகளும், இப்போது இங்கே நடப்பதும் ஒன்றுக்கொன்று அப்படியே எதிராக இருக்க, ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.

மீனாட்சி அவளை அதற்குமேல் யோசிக்கவிடாமல், “என்ன விஷயம்? இவ்வளவு தூரம் எங்க கடையைத் தேடி வந்திருக்கீங்க” என்றாள்.

சுவேதாவின் அகங்காரம் அதில் தூண்டிவிடப்பட, “லுக்… நான் உன்னைப் பார்க்க இங்கே வரல.” என்றாள் திமிராக.

மீனாட்சி ஒற்றைப் புருவம் உயர்த்தி, “வெல்… என்னைப் பார்க்க வரல. ஆனா, என்னோட இடத்துக்கு வந்து இருக்கீங்க. உங்களை விசாரிக்க வேண்டியது என் கடமை இல்லையா?” என்றாள் நக்கலாக.

“எது எது உன் இடம்” என்று சுவேதா பரபரக்க,

“ஏன் எல்லாமே என்னோடது தான். எனக்கு மட்டுமே உரிமையானதும் கூட”

“சக்தி உனக்கானவர் இல்ல மீனாட்சி. அவரை முதல்ல எனக்கு தான் நிச்சயம் பண்ணி இருந்தாங்க. நீ சின்னப்பொண்ணு. வீட்ல சொன்னதை கேட்டு இதுக்கு தலையாட்டி இருக்க. இது சரியா வராது” என்று சுவேதா மீனாட்சியை தள்ளி நிறுத்த பார்க்க,

“சுவேதா” என்று அதட்டலுடன் முன்னே வந்தான் சக்தி.

“வாயைத் திறக்கக்கூடாது நீங்க” என்று மீனாட்சி கட்டளை போல் குரல் உயர்த்தி கூற, “மீனு” என்றவன் அவளது பார்வையில் வாய் திறக்காமல் நின்றுவிட்டான்.

மீனாட்சி இப்போது சுவேதாவிடம் திரும்பி, “புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நீ இவரைப் பார்க்கிறது, பேசுறது இதெல்லாம் எனக்கு ஒரு விஷயமே இல்ல. ஆனா, நீ பேசுறது வேஸ்ட். அதை மட்டும் புரிஞ்சிக்கோ.”

“இங்கே எதுவும் உனக்கானது இல்ல. இவர் என்னோட மாமா. இன்னும் பதினைஞ்சு நாள்ல எங்களுக்கு கல்யாணம் முடிவாகி இருக்கு. இந்த நேரத்துல நீ இப்படி இங்கே வந்து நிற்கிறதே தப்பு.”

“நீ எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டாம் மீனாட்சி”

“நான் பண்றதாகவும் இல்ல. இது உனக்கு வார்னிங். இனி உன் பேரோட சேர்ந்து இவர் பேர் எங்கேயும், எதுக்காகவும் வெளியே வரக்கூடாது. உனக்கு எப்படியோ, எனக்கு இவரோட மரியாதை ரொம்ப முக்கியம். உன்னால அதுக்கு எந்த களங்கமும் வரக்கூடாது. நீ வந்த வேலை எப்படியும் நடக்காது. சோ… ப்ளீஸ்” என்றவள் வாசலை காண்பிக்க,

“உன்னோட இந்த திமிர் எவ்ளோ நாளைக்கு மீனாட்சி. பதினஞ்சு நாள்ல கல்யாணமா? கண்டிப்பா நடக்குமா? உன்னை சுத்தி என்ன நடக்குதுன்னே உனக்கு தெரியல. இதுல எனக்கு நீ வார்னிங் கொடுப்பியா? எனி வே நடக்காத உன்னோட கல்யாணத்துக்கு வாழ்த்துகள்” என்ற சுவேதா வெளியேற, சக்தி கடுமையான முகத்துடன் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

அவள் வெளியேறும் வரை காத்திருந்தவளோ, சக்தியை விரல் சொடுக்கி அழைக்க, அதே முறைப்புடன் திரும்பியவன் எதுவும் பேசுவதற்குள், “ஒரு ஜூஸ் கொண்டு வர சொல்லுங்க” என்றாள் மீனு.

சக்தி ஆயாசத்துடன் அவளைப் பார்க்க, “சொல்லுங்க மாமா” என்றவள் இருக்கையில் வசதியாக சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

சக்தி அவளையே பார்த்து நிற்க, சில நொடிகளில் மூடிய அவள் இமைகளின் வழியே கண்ணீர் கசிந்தது.

“மீனு” என்று சக்தி அவளை நெருங்க,

“பக்கத்துல வராதீங்க” என்றாள்.

சக்தி அவள் எதிரே நின்றவன், “எதுக்காக அழற இப்போ” என,

“நம்ம கல்யாணம் நடக்காதுன்னு இவளுக்கு யார் சொன்னது?”

“அவ ஏதோ பேசிட்டு போனா, அதுக்காக எல்லாம் நீ அழுவியா?” என்று சக்தி சமாதானம் கூற,

“நான் அவளுக்காக அழல மாமா. உங்களுக்கு தெரியும்.”

“என்னடா”

“என்ன என்னடா? என்ன நடக்குது இங்கே? இந்த கல்யாணம் நடக்குமா? இல்ல… அவ சொல்றது போல…” என்று அவள் முடிப்பதற்குள்,

“மீனு” என்றான் சக்தி.

“நீங்க ஏன் என்னை பார்க்க வரல. என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? உங்க விருப்பத்துக்கு நிச்சயம் பண்ணுவீங்க. என்கிட்டே பேசி, எல்லாம் நீ தான்.. அப்படி இப்படி எல்லாம் சொல்லுவீங்க. ஆனா, நான் காயம்பட்டு கிடந்தா என்னை பார்க்கக்கூட வர மாட்டிங்க… எவளோ ஒருத்தி உங்களை தேடி வந்தா, அவளுக்கு விருந்து உபசாரம் எல்லாம் பண்ணுவீங்க. இதையெல்லாம் நான் எப்படி புரிஞ்சிக்க? சொல்லுங்க” என்றவள் பதில் தெரியாமல் நகர மாட்டேன் என்று அமர்ந்திருக்க, உண்மையில் சக்தி வாயடைத்து நின்றிருந்தான்.

அவள் கேள்விகளுக்கு என்னவென்று பதில் சொல்லுவான் அவன். சொக்கநாதரிடம் பேசியது போல் இவளிடம் உன்னால் பேச முடியுமா? என்று அவன் நெஞ்சம் சவால் விட, பதிலில்லாமல் தான் நின்றான் அவன்.

அவன் இயலாமையுடன் நின்றிருந்த அதே நேரம், “என் பேத்தி கேட்கிறா இல்ல பதில் சொல்லு சக்தி” என்று வந்து நின்றார் சொக்கநாதர்.

அவரைத் தெடர்ந்து முத்தையனும் அந்த அறைக்குள் வந்து நிற்க, “தாத்தா அமைதியா இருங்க” என்றான் சக்தி.

“என் வாயை ஏண்டா அடைக்கிற. அவ உரிமைப்பட்டவ. அவளுக்கு பதில் சொல்லு” என்று நின்றார் அவர்.

“என்கிட்டே பேச தெரியுது இல்ல. சொல்லு அவகிட்ட” என்று அவர் பொரிய,

“அவளுக்கு உடம்பு முடியல தாத்தா. அதை மறந்துடாதீங்க.” என்று மீனுவின் உடல்நிலையை சக்தி நினைவூட்ட,

“என்ன சொன்னாங்க தாத்தா” என்றாள் பேத்தி.

“அம்மாடி நான் வயசானவன். என்னால இவன்கூட போராடி முடியல. நீ கேளு. உனக்கு ஒரு முடிவை சொல்ல சொல்லு” என்று சொக்கநாதர் லாவகமாக பேத்தியை இழுத்துவிட, சக்தி தலையை பிடித்துக் கொண்டான்.

“என்ன நடந்தது தாத்தா. என்ன சொல்றாங்க இவங்க?” என்று மீனாட்சி மீண்டும் சொக்கநாதரிடம் கேட்க,

“எதுவும் சொல்லல. போதுமா. நீ அமைதியா இரு” என்றான் சக்தி.

“நீங்க சொல்லுங்க தாத்தா. எனக்கு இப்போவே தெரியணும். நீங்க சொல்லுங்க” என்று நின்றாள் பேத்தி.

“மீனு உன்னை வாயை மூடுன்னு சொன்னேன்” என்று சக்தி அதட்ட,

“அப்போ நீங்க சொல்லுங்க. என்ன சொன்னிங்க” என்று அவனை மடக்கினாள் மீனு.

சக்தி சொக்கநாதரை முறைத்து, “போதுமா… வந்த வேலை முடிஞ்சுதா?” என, அவர் அசராமல் நின்றார்.

“சொல்லுங்க… என்ன சொல்லணுமோ சொல்லி தொலைங்க” என்றவன் ஆத்திரத்துடன் அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான்.

அவனின் அந்த கோபமும் மீனுவை பாதிக்க, கண்கள் கலங்கியது அவளுக்கு.

“என்ன நடந்துச்சு தாத்தா?” என்று இந்த முறை கண்ணீரை துடைத்துக் கொண்டே அவள் கேட்க,

“சக்தி மேல எந்த தப்பும் இல்ல மீனு. அவன் ஏதோ குழப்பத்துல இருக்கான்” என்றார் முத்தையன்.

“ஐயோ… அப்பா ப்ளீஸ். என்ன விஷயம் அதை சொல்லுங்க முதல்ல”

“சக்தி கல்யாணம் வேண்டாம்னு சொல்றான் மீனு.” என்றார் சொக்கநாதர்.

“ஏன்”

“கண்ட காரணமெல்லாம் சொல்றான். வாசு, வெற்றி பிரச்சனை, உனக்கு அடிபட்டது எல்லாத்தையும் போட்டு குழப்பிட்டு இருக்கான் முட்டாள்.” என்று தாத்தா கோபம் கொள்ள, பேத்தி அசையவில்லை.

“இதுல உன் அம்மாவும் அவ பங்குக்கு எதையோ சொல்லி இருக்கா மீனு. உன் அம்மா என்கிட்டே கூட சொல்லல. ஆனா, அவளையும் குறை சொல்ல முடியாது. உனக்கு இப்படி ஆகவும் பயந்துட்டா. அந்த பயத்துல சக்திகிட்ட என்னத்தையோ பேசி இருக்கா. இவன் யாரையும் காட்டிக் கொடுக்காம எல்லாத்தையும் அவன் தலை மேல இழுத்து போட்டுட்டு இருக்கான்.” என்று முத்தையன் விளக்கமாக கூறினாலும், ‘அதற்காக திருமணமே வேண்டாம் என்பானா?’ என்று சிணுங்கி கொண்டது அவள் மனம்.

அவள் முகம் கசங்கியதில், “மீனுக்குட்டி. அவன் ரொம்ப நல்லவன்டா. அதனால தான் யாரும் கஷ்டப்படக்கூடாதுன்னு யோசிச்சு, அவனே கஷ்டப்பட்டுட்டு இருக்கான். உன்கிட்ட உண்மையை சொல்லுவானான்னு பார்க்கத்தான் உன்னை இதுல இழுத்து விட்டேன். ஆனா, உன் முகம் பார்த்து சொல்ல முடியல பார்த்தியா. ஒரே ஓட்டமா ஓடிட்டானே. நீ கவலைப்படாத. நிச்சயமா இந்த கல்யாணம் நடக்கும். அவன் உன்னை அப்படியெல்லாம் விட்டுட மாட்டான். ஆனா, நீ உறுதியா இருக்கணும்” என்று பேத்திக்கு பெரியவர் ஆறுதல் கூற,

“உங்க பேரனுக்கு போன் போடுங்க” என்றாள் பேத்தி.

“வீட்டுக்கு போகலாம் மீனு. அவன் கோபம் கொஞ்சம் குறையட்டும். அப்பா அவன்கிட்ட பேசறேன்” என்று முத்தையன் கூறியதற்கு ஒப்புக்கொள்ள வில்லை அவள்.

“நீங்க கிளம்புங்க அப்பா. நான் அப்புறம் வரேன்” என்று மகள் முடிவாக உரைத்துவிட,

“அம்மா பயந்துடுவா மீனு” என்று முத்தையன் கூறியதற்கும்,

“நீங்க பார்த்துக்கோங்கப்பா. நான் கொஞ்ச நேரம் இங்கே இருக்கேன். மாமா வரட்டும். அப்புறம் வீட்டுக்கு வரேன்” என்று பிடிவாதமாக பதில் கொடுத்தாள் மகள்.

அதற்குமேல் மகளை வற்புறுத்தாமல் முத்தையன் அங்கிருந்து கிளம்ப, அவருடன் சொக்கநாதரும் வெளியேறினார்.

காலையில் இருந்து நடந்த நிகழ்வுகள் மீனாட்சியை மொத்தமாக தளர்ச்சியடையச் செய்திருக்க, சோர்வுடன் அந்த மேசையில் தலையை சாய்த்துக் கொண்டாள் அவள்.

அவளின் உடல் சோர்வு அவளை உறக்கத்திற்கு தள்ள, அந்த நிலையிலேயே ஆழ்ந்து உறங்கிப் போயிருந்தாள் மீனு. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து சக்தி மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்த போதும், அவள் உறக்கம் கலையவே இல்லை.

சக்திக்கு தான் அவளை பார்த்த நொடி பதறிப் போனது. கழுத்தில் வெட்டு காயம் பட்டிருந்த நிலையில், இப்படி கழுத்தை வளைத்தபடி, அவள் உறங்குவதைக் கண்டு ஒரு நிமிடம் ஆடிப் போனான் அவன். வேகமாக அவளை நெருங்கி “மீனு” என்று சக்தி அவளை அசைக்க, அவன் எதிர்பார்த்தது போலவே வலியில் முகம் சுருக்கினாள் மீனாட்சி.

“என்ன செய்யுது?” என்று சக்தி பதற,

“கழுத்து வலிக்குது மாமா” என்றவள் கை கழுத்தில் இருந்த பெல்ட்டை நீவிக் கொண்டது.

“என்னடி பண்ற நீ” என்று கத்தியவன், “எழுந்திரு முதல்ல” என்று அவளை எழுப்பி நிறுத்தினான்.

“வா ஹாஸ்பிடலுக்கு போவோம்” என்று அவன் ஒரு அடி எடுத்து வைக்க,

“ம்ச்… அந்த அளவுக்கு எல்லாம் வலிக்கல. மார்னிங் டாக்டரை பார்த்துட்டு தான் வந்தேன். ஸ்ட்ரைன் பண்ண வேண்டாம்னு சொல்லி இருக்காங்க.” என்று மீனு வரிசையாக சொல்ல,

“அறிவிருக்கா உனக்கு” என்றான் சக்தி.

“அறிவிருந்தா நீங்க கல்யாணம் வேண்டாம்னு சொன்ன பிறகும் ஏன் இங்கே உங்களுக்காக காத்துகிட்டு இருக்கேன்.”

“சும்மா அதையே பேசாத மீனு”

“வேற என்ன பேசணும் நான்? என்ன பேச சொல்றிங்க? என்ன… என்னை கழட்டி விட்டுட்டு மறுபடியும் அவளையே கட்டிக்க போறிங்களா. அதுதான் குடும்பத்தையே விட்டுட்டு வர்றாளாமே.” என

“மீனு” என்று ஒரு விரல் நீட்டி அவளை மிரட்டியவன் கண்கள் செக்கச் சிவந்து போயிருந்தது.

அவன் கோபத்தில் மீனு பயந்து நிற்க, “இன்னும் ஒரு வார்த்தை நீ பேசக்கூடாது.” என்று அவளை அதட்டினான் சக்தி.

மீனு முகத்தை திருப்பிக் கொள்ள, அவள் கண்ணீர் வடிப்பது புரிந்தது சக்திக்கு.

தலையில் தட்டிக்கொண்டு அவளை நெருங்கியவன், அவளது இரு கரங்களையும் பற்றி அவளை மீண்டும் தன் இருக்கையில் அமர்த்தினான்.

மீனு அவன் முகம் பார்க்காமல் தலையைக் குனிந்தபடி கண்ணீர் வடிக்க, அவள் தாடையைப் பிடித்து அவள் முகத்தை நிமிர்த்தினான் சக்தி.

“நமக்குள்ள அவ யாருடா? நீ எப்போ அவளுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்ச?” என, பதிலில்லை.

“கல்யாணம் வேண்டாம்னு நான் தான் சொன்னேன். மீனுக்குட்டி புரிஞ்சிப்பா என்னைனு நினைச்சேன்.”

“என்ன புரிஞ்சிக்கணும்?”

“நான் ஏன் அப்படி சொன்னேன்னு யோசிக்கலையா?”

“அம்மாவா?”

“என் அத்தை” என்றதும் மீனு அவனை முறைக்க,

“என்னவாம்”

“உன்கிட்ட சொல்ல முடியாது. அவங்களை நீ எதுவும் கேட்கவும் கூடாது” என்றான் உத்தரவாக.

“வேற யார்கிட்ட கேட்கணும்?”

“என்னை கேளு”

“நீங்க என்னோட கேள்விக்கெல்லாம் உடனே பதில் சொல்லிடுவீங்க இல்ல”

“சொல்லணும்னு நினைச்சா சொல்லுவேன்”

“ரொம்ப மோசம் நீங்க. தெரியாம உங்களை லவ்..” என்றவள் வார்த்தையை நிறுத்திக்கொள்ள,

“என்ன சொன்ன… சரியா கேட்கல…” என்றான் சக்தி.

“நான் ஒண்ணுமே சொல்லல”

“சரி அப்படியே இருக்கட்டும்” என்றதும், மீனு அவனை முறைக்க,

“வர வர ரொம்ப முறைக்கிற மீனு. மிரட்ட வேற செய்ற”

“இதுக்கெல்லாம் பயப்படற ஆள நீங்க?” என்றவள் பேச்சில், சக்தி சிரித்துவிட, “ஏன் இப்படி இருக்கீங்க? காதல் தோல்வியா?” என்றாள் மீனாள்.

“கொஞ்சம் குழம்பிட்டேன் மீனு. ஒன்னும் ஓடல” என்றான் உண்மையாக.

“அதிகமா யோசிக்காதீங்க. எவ்ளோ யோசிச்சு என்ன செய்தாலும், நடக்க வேண்டியது நடந்தே தீரும். நம்ம கல்யாணம் கூட அப்படித்தான். நீங்களோ, நானோ, யார் வேண்டாம்னு சொன்னாலும் கண்டிப்பா நடக்கும். நீங்க தப்பிக்கவே முடியாது. அந்த வேலையெல்லாம் பெரியவங்க பார்க்கட்டும். நீங்க மாப்பிள்ளை பையனா அழகா நீட்டா இருங்க. இப்படி அழுக்கு பையனா இருக்க வேண்டாம்.” என்றாள் முகம் சுளித்து.

அத்தனை சிக்கல்களும் அவள் அருகில் அழகாக அவிழ்க்கப்படுவதாக தோன்றியது சக்திக்கு.

“அழுக்கு பையன் வேண்டாவா?’ என்று வேண்டுமென்றே அவன் வம்பிழுக்க,

அவளும் முதலில் வேண்டாமென தலையாட்டி, பின் வேண்டுமென வேகமாக தலையாட்டினாள். அவளது சேட்டையில் சக்தி சத்தமாக சிரிக்க, “இப்படி சிரிச்சிட்டே இருங்க மாமா” என்றாள் உணர்ந்து.