மதுரை மீனாட்சியம்மன் கோவில் பேருந்து நிலையத்திற்கு வெகு அருகில் அமைந்திருந்தது அந்த இருசக்கர வாகன விற்பனையகம். மூன்று அடுக்கு கட்டிடத்தில் முழுவதுமாக கண்ணாடியால் சுவர் எழுப்பியது போல் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டிருந்தது. விலையுயர்ந்த நவீன ரக இருசக்கர வாகனங்கள் அத்தனையும் எப்போதும் வெகு அழகாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் அங்கே.
எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்பட்டாலும், அந்த வழியே செல்பவர்களின் கண்கள் ஒரே முறையாவது அங்கிருக்கும் வாகனங்களை ஆசையாக தழுவிச் செல்லும். நியாயமான விலை மற்றும் தரம் இரண்டிலும் கவனம் செலுத்தியதால் நிறுவனம் தொடங்கி ஆறு மாதங்களில் சொல்லிக் கொள்ளும்படியாக வளர்ந்திருந்தது அந்த v2 பைக் ஷோரூம்.
ஆனால், இன்று கண்ணாடிகள் உடைபட்டு, அங்கு காட்சிக்கு வைத்திருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு பார்க்கவே பரிதாபமாக காட்சியளித்தது. காலை வழக்கம்போல் 10 மணிக்கு கடை திறக்கப்பட்ட பின்பு நடந்த நிகழ்வுகள் தான் அத்தனையும்.
சர சரவென ஆறேழு கார்களில் வந்திறங்கியவர்கள் என்ன எது என்று விசாரிக்கும் முன்பாகவே மொத்தமாக அடித்து நொறுக்கியிருந்தனர். அவர்களை தடுக்கச் சென்ற பாதுகாவலரும், கடையின் மேனேஜரும் வேறு பலமாக காயம்பட்டிருக்க, பத்தே நிமிடங்களில் வந்த வேலை முடிந்து கிளம்பியிருந்தது அந்த கும்பல்.
அங்கிருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததில், காவல்துறையினர் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். அந்த மேனேஜரையும், பாதுகாவலரையும் மருத்துவமனையில் அனுமதித்து இருக்க, அங்கிருந்த மற்ற ஊழியர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருந்த நேரம் தான் உள்ளே நுழைந்தான் சக்திவேல். அவன் அந்த கடையின் உரிமையாளன்.
கண்முன்னே நொறுங்கிப் போயிருந்த தனது கனவு சாம்ராஜ்யத்தைப் கண்கள் சிவக்க பார்த்தபடியே வந்தவன் எங்கே தடுமாறி விடுவோமோ என்ற பயத்தில் அங்கே கிடந்த ஒரு நாற்காலியில் தளர்ந்து அமர்ந்துவிட்டான்.
தனது கைக்கொண்டு தலையை தாங்கியபடி அவன் அமர்ந்துவிட, அந்த காவல் ஆய்வாளருக்கே அவனைப் பார்க்க முடியவில்லை. அப்படி ஒன்றும் தெரியாதவனும் இல்லையே. வேகமாக அவனை நெருங்கியவர், “சக்தி” என்று அவன் தோளில் கை வைக்க,
சட்டென நிமிர்ந்தவன், “யாரு சார்” என்றான் தலையை நிமிர்த்தி, அவன் கண்களில் தெரிந்த ரௌத்திரத்தில் அந்த காவல் ஆய்வாளர் அவன் தோளில் இருந்து கையை எடுத்துவிட, “யார் பண்ண வேலை இது” என்று தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றான் சக்திவேல்.
“நான் தாத்தாகிட்ட பேசறேன் தம்பி. நீங்க கிளம்புங்க” என்று அந்த காவல் ஆய்வாளர் அவனை சமாளிக்கப் பார்க்க,
“என்ன பேசுவீங்க? என்கிட்டே சொல்லுங்க. என் கடை இது. இங்கே கையை வைக்கிற அளவுக்கு எவனுக்கு துணிச்சல் வந்தது தெரியணும் எனக்கு. இப்போ தெரியனும்” என்று அவன் கத்த, அவனின் இந்த ரூபத்தை இதுவரை பார்த்திராத கடைப் பணியாளர்கள் கூட சற்று மிரண்டு தான் நின்றனர்.
அவனின் கோபத்தைக் கண்ட காவல் ஆய்வாளர், “என்கூட வாங்க” என்று அவனை தனியே அழைத்துச் செல்ல, உள்ளே இருந்த அவனது அறைக்குள் இருவரும் நுழையவும், “யார்” என்று மீண்டும் அதே கேள்வியை கேட்டு நின்றான் அவன்.
“தம்பி எங்கே சக்தி?” என்றார் ஆய்வாளர்.
சக்தியின் கண்கள் கூர்மையாக, “வெற்றிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?” என்றான்.
“உங்க தம்பி எங்கே?” என்று அவர் மீண்டும் கேட்க, அதே நேரம் அந்த அறைக்குள் நுழைந்தார் தங்கபாண்டியன். அவர் சக்திவேலனின் தந்தை.
அவரைக் கண்டதும் காவல் ஆய்வாளர் தயங்கி நிற்க, “நீ போ முத்து. நான் பேசிக்கிறேன்” என்று அவரை வெளியே அனுப்பி வைத்தார் தங்கபாண்டியன்.
சக்திவேல் தந்தையையே பார்த்து நிற்க, மொத்தமும் தளர்ந்தவராக அமர்ந்தார் தங்கபாண்டியன். “என்னப்பா” என்று பதட்டமாக சக்தி அவரை நெருங்க,
“வெற்றி நம்மை மோசம் பண்ணிட்டான்ய்யா” என்று முகத்தில் அறைந்து கொண்டு அழுதார் தங்கபாண்டியன்.
“என்னப்பா சொல்றிங்க. அழாதீங்க முதல்ல. தெளிவா பேசுங்க” என்று மகன் அதட்ட,
“சக்தி… சக்தி…” என்று அழுது அரற்றினாரே தவிர, வார்த்தை வரவில்லை.
“அப்பா என்னப்பா” என்று மகன் பதட்டமாக, தங்கபாண்டியனுக்கு ஏகத்திற்கும் மூச்சு வாங்கியது.
“அப்பா. அப்பா” என்று சக்தி அவரை ஆற்றுப்படுத்த முயற்சித்தது பலனளிக்காமல், அமர்ந்திருந்த இருக்கையில் அப்படியே மயங்கிச் சரிந்தார் தங்கபாண்டியன்.
“அப்பா” என்று சக்தி போட்ட கூச்சலில் வெளியே நின்ற பணியாளர்கள் ஓடிவர, தண்ணீர் தெளித்து தங்கபாண்டியனை எழுப்ப முயச்சித்ததெல்லாம் வீணான முயற்சிதான்.
எந்த அசைவும் இல்லாமல் கிடந்தவரை அடுத்த பத்து நிமிடத்தில் அருகில் இருந்த ஒரு மருத்துவமனையில் அனுமதிக்க, ஹார்ட் அட்டாக் என்ற அடுத்த குண்டை வீசினார் மருத்துவர்.
உடனடியாக ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவமனை தரப்பில் கூறிவிட, யாரையும், எதுவும் கேட்காமல் உடனடியாக படிவத்தில் கையெழுத்து இட்டுவிட்டு அமைதியாக அமர்ந்து விட்டான் சக்தி.
இப்போதைக்கு அவனுக்கு இந்த அமைதி தேவை தான். நடந்த, நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை நிதானமாக அலசி ஆராய அவனுக்கு இந்த அமைதி தேவைப்படுகிறது இப்போது.
ஏற்கனவே தந்தையை மருத்துவமனைக்கு அழைத்து வரும்போதே, தனது நண்பனுக்கு அழைத்து சிலவற்றை விசாரிக்கச் சொல்லி இருந்தான். ஏனோ, இதுவரை இருந்த பதட்டம் இப்போது இல்லை.
என்னவாக இருந்தாலும் சமாளித்து தானே ஆக வேண்டும் என்று தெளிவு வர, அமைதியை தன் வசமாக்கி அமர்ந்துகொண்டான் அவன்.
அரைமணி நேரத்தில் அவனது தாய், தாத்தா, பாட்டி, தங்கை, மாமா என்று மொத்த குடும்பமும் பதட்டத்துடன் மருத்துவமனைக்கு வந்து சேர, அவனது தாத்தா, “என்னடா ஆச்சு என் பிள்ளைக்கு” என்றார் பேரனிடம். அந்த நிலையிலும் கம்பீரம் குறையாமல் நின்றவரை பேரன் ஏக்கமாக பார்க்க, பேரனை தழுவிக் கொண்டார் சொக்கநாதபாண்டியன்.
“ஒன்னும் இல்லடா” என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்தவர், “ஒன்னும் ஆகாது என் பிள்ளைக்கு” என்று தனக்கும், மற்றவர்களுக்கும் சேர்த்தே சொல்லிக் கொண்டார்.
அடுத்த இரண்டு மணி நேரங்களும் பெரும் போராட்டமாக கழிய, இதற்குள் வெற்றிவேலனைப் பற்றிய மொத்த தகவல்களையும் திரட்டியிருந்தான் சக்தி.
கேட்ட செய்திகள் அத்தனையும் அவனை உலையென கொதிக்க வைத்தாலும், தந்தையின் உடல் நிலையை கவனத்தில் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான் சக்திவேல். தங்கபாண்டியன் கண்விழித்து எழுந்தவர் முதலில் மகனைப் பார்த்து, அடுத்ததாக தன் மனைவியைத் தேட, ஒரே நாளில் ஓய்ந்து போயிருந்தார் சுந்தரவடிவு.
மனைவியைப் பார்த்து அவர் மெல்ல புன்னகைத்து கண்ணசைக்க, அதுவே யானை பலம் வடிவுக்கு. கணவருக்கு ஒன்றுமில்லை என்பதே நிம்மதியைக் கொடுக்க, சட சட வென கண்ணீர் வழிந்தது அவர் கண்களில்.
இதற்குள் பயந்து நின்றிருந்த அவர்கள் வீட்டு சின்னவள், “அப்பா” என்று கேவியபடி தந்தையின் தோளில் சாய, “அப்பாக்கு ஒன்னும் இல்லடா” என்று மகளைத் தேற்றியவர், தனது மகனை பார்த்து மீண்டும் கண்ணீர் விட, “பாண்டி” என்று அதட்டினார் சொக்கநாதன்.
“அய்யா என் புள்ள” என்று அவர் தந்தையிடம் குழந்தையாக கண்ணீர் வடிக்க,
“என் பேரனுக்கு என்னடா? எல்லாத்தையும் அவன் பார்த்துக்குவான். நீ உடம்பை கெடுத்துக்காம இரு போதும். காலையில நீ படுத்து, ராத்திரிக்குள்ள என் மருமகளும், பேரபிள்ளைகளும் ஒன்னுமில்லாம போச்சுங்க. நீ எழுந்து வா எல்லாம் சரியா போகும்” என்று சொக்கநாதன் தான் பிள்ளையை தேற்றினார்.
“அண்ணே உன்னைய விட்டா எங்களுக்கு யாரும் இல்லண்ணே. போனவனை விட்டு இருக்க எங்களை நினைச்சுப் பாரு” என்று அவரது உடன் பிறந்த தங்கை வள்ளியம்மை வேறு அழுது வைக்க,
“வாயை மூடு வள்ளி. எதுக்கு தேவையில்லாத பேச்செல்லாம். நீங்க எழுந்து வாங்க மச்சான். எல்லாம் சரியாகும்” என்று இருவருக்கும் சேர்த்தே உரைத்தார் முத்தையா. அவர் வள்ளியம்மையின் கணவர்.
தங்கபாண்டியன் அமைதியாக கண்களை மூடிக்கொள்ள, அடுத்த இரண்டு நாட்கள் மருத்துவமனை வாசம் முடிந்து அவர்கள் வீடு வரவும், அடுத்தடுத்த சிக்கல்கள் வரிசைகட்டி நின்றது அவர்கள் வீட்டு வாசலில்.
தங்கபாண்டியன் வீடு வந்த இரண்டு மணி நேரத்தில் அவர்கள் வீட்டு வாயிலில் வந்து நின்றனர் அவரது சம்பந்தி வீட்டினர். சம்பந்தி என்றால் திருமணம் செய்ய முடிவாகி இருந்தது.
தங்கபாண்டியனின் மூத்த மகன் சக்திக்கு நிச்சயம் செய்திருந்த பெண் வீட்டார் அவர்கள். சுந்தரவடிவு மரியாதையாக உள்ளே அழைத்து உபசரிக்க, வந்தவர்களின் முகம் ஏதோ அசௌகரியத்தை உணர்த்தியது சொக்கநாத பாண்டியனுக்கு.
மகன் மேலே அவனது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க, அவரை அழைக்காமல் தானே பேச்சை தொடங்கினார் சொக்கநாதன்.
“சொல்லு மாணிக்கம். சம்பந்தியை பார்த்துட்டு போக வந்தியா” என்றதே ‘நீ வந்திருக்க வேண்டும்‘ என்று இடித்துரைப்பதாக இருக்க,
“சம்பந்தம் பண்ண விருப்பப்பட்டா தானே நாங்க வந்து பார்க்கணும்”
“ஏன் சம்பந்தம் பண்ண விரும்பாத அளவுக்கு இங்கே என்ன நடந்துடுச்சு இப்போ” என்று பெரியவர் அவர்களை பேச வைக்க,
“இன்னும் என்ன நடக்கனும். அதான் உங்க பேரன் சங்கதி ஊர் சிரிக்குதே.”
“அவன் கதை உனக்கு எதுக்கு சண்முகம். உன் மருமகன் கதையை பேசு. அதைக்கூட உன் அண்ணனை பேச சொல்லு. நீ சொல்லு மாணிக்கம்”
“அய்யா… எனக்கு எப்படி சொல்ல தெரியல. தயவு செஞ்சு மன்னிச்சுடுங்க. எல்லாத்தையும் இதோட நிறுத்திக்குவோம். எனக்கும் இன்னும் ரெண்டு பிள்ளைங்க இருக்குங்கய்யா. இவ வாழ்க்கையைப் பார்த்து ஏற்கனவே வாழ போன பொண்ணை திருப்பி கூட்டிக்க முடியாதே. எங்களை விட்டுடுங்க”
“ஏற்கனவே வாழப் போன பொண்ணை பத்தி கவலைப்படுறவன் என் பேரனுக்கு என்னய்யா பதில் சொல்ற.” என்று சொக்கநாதன் எழுந்து நிற்க,
அவர் சத்தத்தில் உள்ளே இருந்த சக்திவேல் எழுந்து வெளியே வந்தான்.
“என்ன தாத்தா” என்று அவன் வந்து நிற்கவும், “இங்கே பாருங்க தம்பி, இந்த சம்பந்தம் நடக்காது. அத சொல்லிட்டுப் போகத்தான் நாங்க வந்தோம். உங்க தாத்தா நிலைமை புரியாம கத்திட்டு இருக்காரு. நீங்க புரிய வைங்க” என்று சண்முகம் பட்டென சொல்லிவிட,
“அதை சொல்ல நீ யாரு” என்றான் சக்திவேல்.
“என்னையா யாருன்னு கேட்கிற?” என்று அவர் எகிற,
“யாருய்யா நீ? பொண்ணுக்கு அப்பனா? அப்போ இந்தாள் யாரு? ஏன் இவருக்கு வாய் இல்ல. நீ ஏன் பேசற?” என்று மரியாதை துளியும் கொடுக்காமல் ஒருமையில் பேசிட,
“அய்யா சக்தி” என்று சொக்கநாதன் அதட்டியதால் சற்றே அமைதியானான் அவன்.
“நீங்க பேசறது கொஞ்சமும் சரியில்ல தம்பி” என்று மாணிக்கம் வாய் திறக்க,
“இங்கே என்ன சரியா நடக்குது?” என்றான் சக்தி.
“மாணிக்கம் நீ கிளம்பு. நிதானமா பேசுவோம். பிள்ளைங்க வாழ்க்கை அவசரப்படாத” என்று சொக்கநாதன் இறங்கி வந்து பேச,
“எப்போ பேசினாலும் இதே முடிவுதான். ஜாதி விட்டு ஜாதி பெண்ணுடுத்தவன் குடும்பத்துல எங்க பொண்ண கொடுக்க முடியாது. இனி சம்பந்தம் பேசறோம்ன்னு எங்க வீட்டு படியை மிதிக்காதீங்க” என்று சண்முகம் பேச, மாணிக்கமும் மௌனத்தால் அதையே உணர்த்துவது புரிந்தது சக்திக்கு.
நிச்சயத்தன்று அவனுக்கு அணிவிக்கப்பட்ட நிச்சய மோதிரம் அவன் கையில் இருக்க, அதை கழற்றி மாணிக்கத்தின் கையில் கொடுத்தவன், அவர்கள் அணிவித்து இருந்த நான்கு பவுன் தங்க சங்கிலியையும் அப்போதே கழற்றி கையில் கொடுத்துவிட்டான்.
“தம்பி” என்று மாணிக்கம் எதுவோ சொல்ல முற்பட,
“போய்யா வெளியே” என்றுவிட்டான் சட்டென.
அவர்கள் அதற்குமேல் அங்கு நிற்காமல் வெளியேறிவிட, இங்கே சுந்தரவடிவு சமையலறையில் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு மகனைப் பற்றித் தெரியுமே. அவனது மரியாதை அவனுக்கு எத்தனை முக்கியம் என்று அவருக்கு தெரியாதா?
எப்படியெல்லாம் போராடி மகனை இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்தோம் என்பதும் நினைவிலாட, எல்லாமே கனவாகிப் போனதே என்று தாங்க முடியாமல் வாய்விட்டே கதறிவிட்டார் அவர்.
சக்தி அவர் சத்தத்தில் சமையல் அறைக்கு ஓடிவர, “சக்தி” என்று மகனை கட்டிக்கொண்டு அப்படி ஒரு அழுகை அழுதார் சுந்தரவடிவு.
“என் பிள்ளை வாழ்க்கை போச்சே மாமா. போன படுபாவி என் பிள்ளை வாழ்க்கையை கெடுத்துட்டு போயிட்டானே. இதுக்காகவா அவனை உசுரா வளர்த்தேன். என் குழந்தை தனிச்சு நிற்காதே மாமா” என்று தன் மாமனாரைப் பார்த்து அவர் கதற,
“அம்மா… அமைதியா இரும்மா” என்று கத்திவிட்டான் சக்தி.
அதில் பயந்து அவர் அமைதியாக, “ஏற்கனவே ஒருத்தர் படுத்த வரைக்கும் போதும்மா. நீயும் எதையும் இழுத்து வைக்காத. என்ன இப்போ? கல்யாணம் தானே நின்னு போச்சு. நான் இன்னும் உன்கூட தானே இருக்கேன். அமைதியா இரு. நீ இப்படி அழுதுட்டே இருந்த நிச்சயம் நான் மறுபடி ஊருக்குப் போயிருவேன்” என்று மகன் மிரட்டியதில், “நான் அழமாட்டேன் சக்தி. நீயும் எங்களை விட்டு போயிடாத சாமி” என்று மீண்டும் அழுதவரை சக்தியால் கூட தேற்ற முடியவில்லை.
ஒருவழியாக அவரை சமாதானம் செய்து முடிக்கையில், கோவிலுக்குச் சென்றிருந்த அவனது பாட்டியும், தங்கையும் வர விஷயம் கேட்டதில் மனோன்மணியும் கண்ணீர்விட ஆரம்பித்துவிட்டார்.
இதில் கோபம் கொண்ட ஒரே ஜீவன் சக்தியின் தங்கை வேல்விழி தான். “எதுக்கு பாட்டி இப்போ அழற. எங்க அண்ணனுக்கு என்ன குறை? இவளைவிட நல்ல பொண்ணு கிடைப்பா என் அண்ணனுக்கு. சும்மா நீங்க எல்லாம் அழுது என் அண்ணனை கஷ்டப்படுத்தாதீங்க. அதெல்லாம் என் அண்ணன் எல்லாத்தையும் பார்த்துக்கும்.” என்று அண்ணனைக் கட்டிக்கொண்டாள் தங்கை.
அவளது தலையை சக்திவேல் கோதிக் கொடுக்க, “நீ எதையும் யோசிக்காதண்ணா. உன்னை கட்டிக்க அவங்களுக்கு கொடுத்து வைக்கல. விட்டு தள்ளு” என்று பெரிய மனுஷியாக அண்ணனுக்கு ஆறுதல் கூறினாள் அவள்.
சொக்கநாதன் தனது பேரப்பிள்ளைகளை ஆதுரத்துடன் பார்த்து நிற்க, அப்போதைக்கு இந்த விஷயத்தை தங்கபாண்டியனிடம் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்துக் கொண்டனர்.
ஆனால், இந்த தகவல் ஏற்கனவே அவருக்கு வந்ததன் விளைவு தான் அவரது மருத்துவமனை வாசம் என்பது இவர்களுக்கு தெரியவில்லை.
அடுத்த இரண்டு நாட்கள் வீட்டில் முடங்கி கிடந்த சக்தி மூன்றாம் நாள் தனது வழக்கமான நேரத்திற்கு கடைக்கு கிளம்பிவிட்டான். அவனது தாத்தா கூட, “ஒரு ஒரு வாரம் போகட்டும் சக்தி” என,
“எனக்கு போயாகணும் தாத்தா. எவன் வருவான்? நான் பார்க்கணும்” என்றபடி கிளம்பியவனை கவலையுடன் பார்த்து நின்றார் அவர்.