படப்பிடிப்பிற்காக மூன்று மூன்று மாதங்கள் வெளிநாடு சென்றிருந்த தேவ் அன்று தான் ஊர் திரும்பியிருந்தான். ஆராவிடம் இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று சொல்லியிருந்தான். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வீடு வந்து சேர்ந்திருந்தான்.
அதிகாலை நான்கு மணி அளவில் வந்தவன், பக்கத்து அறையில் ரெப்ரஷ் செய்து கொண்டு சத்தமில்லாமல் தங்கள் அறைக்கு செல்ல, அங்கே ஆராவும் அவர்களின் இரண்டு வயது பையன் விக்ரம் தேவ்வும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். விக்ரம் ஆராவை கழுத்தோடு அணைத்துக் கொண்டு அழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவர்களையே ரசனையுடன் பார்த்திருந்தான் தேவ்.
விக்ரம் பிறந்த பிறகு சற்று எடை கூடி பூசினார் போல் இருந்தவளின் அழகு மேலும் மெருகேறியிருக்க, மூன்று மாதங்களுக்குப் பிறகு மனைவியை முழுதாய் கண்களுக்கு விழுங்கிக் கொண்டான். அவளுக்கு மறுபுறம் சென்று தானும் அவளை அணைத்துக் கொண்டு படுக்க, தூக்கத்திலும் ஆராவின் கைகள் அவனை வளைத்துக் கொண்டது. மகனும், கணவனும் இருபுறமும் அணைத்திருக்க, தூக்கத்தில் அசௌகரியத்தை உணர்ந்தவளுக்கு லேசாய் முழிப்புத் தட்டியது.
அரைகுறை தூக்கத்தில் கண்ணைத் திறந்தவள், தேவ் இருப்பதைக் கண்டு நன்றாக விழித்துப் பார்த்தாள். அவளின் பாவனைகளைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தவன்,
“ஜெய்” என்று சத்தம் போட்டு விட, சட்டென்று அவள் வாயில் கையை வைத்து அவளை அடக்கினான் தேவ்.
“மெதுவாடி! அவன் மட்டும் எழுந்தான் அப்பறம் எனக்கு இந்த கொஞ்ச நேரமும் எனக்கு இல்லாம போய்டும்” என்றான் பாவமாய்.
விக்ரமிடமிருந்து சற்று விலகியவள், அவனுக்கு ஆதரவாய் தலையணையை வைத்துவிட்டு திரும்பியவள், முழுமூச்சுடன் கணவனைக் கட்டிக் கொண்டாள்.
“மேடம் என்னை ரொம்ப மிஸ் பண்ணிங்க போல இருக்கே” என்றவனை கன்னத்தில் ஒரு அடி அடித்தவள்,
“எதுக்கு இன்னும் ரெண்டு நாள் ஆகும்னு பொய் சொன்னிங்க ஜெய்” என்றாள் கோபமாய்.
“ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு தான். அப்படி இல்லைன்னா மேடம் முகத்துல இப்போ வந்த பீலிங்க்ஸ் எல்லாம் மிஸ் பண்ணியிருப்பேனே” என்றான் அவள் தலை முட்டி.
“உங்களுக்கு எப்பவும் இதே வேலை தான் ஜெய். இன்னொரு தடவை ஷூட்டிங்னு சொல்லி இவ்வளவு நான் வெளிய போனிங்க, நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்றாள் கோபமாய்.
“அதான் உனக்கே தெரியாதுல்ல. அப்ப அதையேன் யோசிச்சுகிட்டு. முழுசா மூணு மாசம் ஆச்சுடி. ரொம்ப காஞ்சு தீஞ்சு போய் வந்திருக்கேன். இந்த நேரத்துல இப்ப இதெல்லாம் ரொம்ப முக்கியமா?” என்றவன், பக்கத்து அறைக்கு அவளை கடத்திக் கொண்டு போய், தன் காரியங்களை சாதித்துக் கொண்ட பிறகு தான் விட்டான்.
“ரொம்ப மிஸ் பண்ணேன் ஆரா” என்றவனின் குரல் கரகரப்புடன் வெளி வர,
“ஜெய், இனி இப்படி லாங் டேய்ஸ் ஷூட் எல்லாம் போக வேண்டாம் பிளீஸ்” என்றாள் ஆரா.
“இனி நீயே சொன்னாலும் என்னால போக முடியும்னு தோணலைடி. அப்படியே போனாலும் உன்னையும் விக்ரமையும் பேக் பண்ணிட்டு தான் போவேன்” என்றவனின் இதழ்கள் அவளில் கவி பாட,
இந்த மூன்று வருடங்களில் ஆரா அவள் தொழிலும் வளர்ந்திருந்தாள். தேவ் எந்த வகையிலும் அவளை முடக்கவில்லை. அவளின் பக்க பலமாகவே இருந்தான். கூடுதலாக அவனின் பாதி வேலைகளையும் அவள் தான் பார்த்துக் கொண்டாள். எந்த இடத்திலும் ஒரு முகச் சுழிப்பு கூட அவளிடமிருந்து வந்ததில்லை. ஒரு நாளும் அவனிடம் சந்தேகமாய் பேசியதில்லை. அவனுக்கே அது குறித்து ஆச்சர்யமாய் இருக்கும். அவன்மேல் அவனை விட அவளுக்குத் தான் நம்பிக்கை அதிகம்.
சிவகாமியைப் பொறுத்தவரை ஆரா சிறந்த மருமகள். விக்ரம் தேவ்விற்கு சிறந்த தாய், ஜெய்க்கு சிறந்த காதலி, சத்யாவிற்கு சிறந்த மனைவி. அறியாமை அதிகம் இருந்தவளிடம் இப்போது ஆளுமை அதிகமாய் இருந்தது. அதிகம் பேசாவிட்டாலும் அவள் பார்வையே பதில் சொல்லிவிடும்.
யாதவும் சாரு நிவேதாவும் இப்போது ஒன்றாக இல்லை. விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டார்கள். யாதவால் ஒரு பயனும் இல்லை என்று சாரு அவனை விட்டு பிரிந்து சென்றுவிட்டாள். யாதவ் இப்போது அவர்களுடனும் இல்லை. சாருவை பிரிந்த கையோடு அவர்களின் இன்னொரு வீட்டில் தங்கிக் கொண்டான். தேவ்வும் அவனை வற்புறுத்தவில்லை. அப்படி இருந்தும் அவனுடைய காலம் தேவ்வின் சம்பாத்தியத்தில் தான் கழிந்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணமும் ஆரா தான். ஏற்கனவே நொடிந்து போய் இருப்பவனிடம் வன்மம் வளர்க்க அவளுக்கு விருப்பமில்லை.
குளித்து முடித்து பிரஷ்ஷாக வந்த ஆராவைப் பார்த்த சிவகாமி,
“தேவ் வந்துட்டானா ஆரா?” என்று கேட்க,
“எப்படி ஆன்ட்டி கண்டுபிடிச்சிங்க?” என்றாள் ஆரா.
“இத்தனை நாள் அழுது வடிஞ்ச முகம் இன்னைக்கு இப்படி சந்தோஷமா இருக்கும் போதே தெரியுதும்மா அவன் வந்துட்டான்னு” என்று சிவகாமி சொல்ல, சன்ன சிரிப்புடன் தலையைக் குனிந்து கொண்டாள் ஆரா.
“நான் போய் விளக்கேத்திட்டு வரேன் ஆன்ட்டி” என்று நகர்ந்தவளை கண்டு உள்ளுக்குள் மெச்சிக் கொண்டார் சிவகாமி. தான் முதல் நாள் சொன்னதை இன்று வரை விடாமல் கடைபிடிக்கும் மருமகள் மேல் தனிப் பிரியம் அவருக்கு.
விளக்கேற்றி மனமுருக வேண்டிக் கொண்டவள் கண்களைத் திறக்க, எதிரே அவளின் இரண்டு மாயக் கண்ணன்களும் நின்றிருந்தனர். அதிலும் விக்ரம் உருவத்தில் அப்படியே தாயையும், குணத்தில் அப்படியே தந்தையையும் கொண்டிருந்தான்.
அவளின் நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட்ட தேவ்,
“நான் வச்சு விடணும்னு தானடி நீ இப்படி பண்ணிட்டு இருக்க” என்றான் சன்ன சிரிப்புடன்.
“அதெல்லாம் இல்லை, மறந்துட்டேன்” என்றாள்.
“எப்படி? மூணு வருஷமாவா?” என்று கேட்டு சிரித்தவனைப் பார்த்தவள்,
“பேசாம இருங்க ஜெய்” என்றாள் முகம் சிவக்க.
மூவரையும் அப்படி பார்த்த சிவகாமியின் மனம் நிறைந்து போக,
“மாம் உங்களுக்கு அடுத்து பேத்தி வரப் போறா” என்ற தேவ்வின் குரலில் அவர் ஆராவைப் பார்க்க,
“ஆமா ஆன்ட்டி” என்றாள் மலர்ந்த முகத்துடன்.
“ரொம்ப சந்தோஷமா இருக்குடா ஆரா” என்றவருக்கு சந்தோஷத்தில் என்ன பேசுவதென்றே புரியவில்லை.
“அடுத்து ஷூட்டிங் எப்போ தேவ்?” என்றார்.
“இப்போதைக்கு வேற கால்ஷீட் எதுவும் குடுக்கலை மாம். கொஞ்ச நாள் ரெஸ்ட். எங்கையாவது ட்ரிப் போகலாம்னு யோசிக்கிறேன்” என்றான்.
“இந்த நேரத்துல வேண்டாம் தேவ். இன்னும் ஒரு மாசம் போகட்டும். அப்பறம் போயிட்டு வாங்க” என்றார்.
அவர் சொல்வதும் அவனுக்கு சரியென்று பட்டது.
“ஆதிராவுக்கு வளைகாப்பு இருக்கு ஜெய்” என்றாள் ஆரா.
“அதை மறப்பேனா?” என்றவன் அன்றே அவர்களை அழைத்துக் கொண்டு திருச்சி சென்றிருந்தான்.
கணேஷ்- ஆதிரா திருமணம் முடிந்து இப்போது அவள் எழு மாத கர்ப்பம்.
“ஹெல்த் எப்படி இருக்குன்னு என்னைத்தான் கேட்கனும்? நீ என்னடான்னா உன் தங்கச்சியை கேட்டுட்டு இருக்க? இவகிட்ட அடிவாங்குற நான் தானே சொல்லணும்?” என்ற கணேஷை ஆதிரா முறைக்க, ஆரண்யாவோ பக்கென்று சிரித்து வைத்தாள்.
“இப்படி பப்ளிக்கா உண்மையை சொல்லக் கூடாது கணேஷ். நானெல்லாம் எவ்வளவு சைலண்ட்டா மெயின்டெயின் பன்றேன்” என்றான் தேவ்.
“அண்ணா இதெல்லாம் ஓவர். நீங்க எப்பவோ செஞ்ச புண்ணியம் ஆரா மாதிரி ஒரு வொயிப் உங்களுக்கு. நான் எப்பவோ செஞ்ச பாவம்” என்று இழுத்தவன், ஆதிராவின் அனல் கக்கும் முகம் கண்டு அமைதியாகிவிட்டான்.
“அந்த பயம் இருக்கட்டும்” என்றாள்.
அங்கு காயத்ரியும், சுலோச்சனாவும் பேரனை கீழே விடாமல் இடுப்பில் வைத்துக் கொண்டே உணவை ஊட்டிக் கொண்டிருக்க,
“இந்த வீட்ல ஊட்டுற சீன் மட்டும் மாறவே மாறாதுடி ஆரா” என்ற ஆதிரா சிரித்து வைக்க, அவர்களை அப்படி மகிழ்ச்சியுடன் பார்த்த பெற்றவர்களின் மனமும் குளிர்ந்து போனது.
“மாமா விக்ரம் பெரிய பையனா வளர்ந்ததுக்கு அப்பறம் உங்களுக்கே டப் குடுப்பான் பாருங்க. சச் அ பிரிலியண்ட் அன்ட் பியூட்டிபுல் பாய்” என்றாள் ஆதிரா.
“இப்பவே டிசைட் பண்ணாத ஆதிரா. என் பொண்ணும் வெளிய வந்துடட்டும்” என்று தேவ் கூற,
“ஹேய் நிஜமாவாடி” என்றாள் ஆராவிடம்.
“ஆமா” என்பதைப் போல் அவள் தலையை ஆட்ட,
“இவ்வளவு பாஸ்ட் எல்லாம் ஆகாது ஆரா” என்ற ஆதிராவும், கணேஷும் அவளை ஓட்டித் தள்ளி விட்டனர்.
மறுநாள் ஆதிராவின் வளைகாப்பு வெகு விமர்சையாக நடைபெற, தான் ஒரு பெரிய நடிகன் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் வீட்டிற்கு மூத்த மாப்பிள்ளையாய் வளைய வந்தவனைப் பார்த்த அனைவரும் அவனைப் பாராட்டித் தள்ள, ரவிக்குமாருக்கு தலைகால் புரியவில்லை.
அனைவரின் பாராட்டிலும், பேச்சிலும் தன் கணவனை ஆசை பொங்க காதலுடன் பார்த்திருந்தாள் ஆரா.
“என்னடி பார்வை எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு” என்று அவள் அருகில் வந்தவன் அவளை அணைத்தபடி நின்று கேட்க,
“ஐ லவ் யு ஜெய்” என்றாள்.
“என்ன ஆச்சு மேடம்க்கு?” என்றான் ரசனையாய்.
“காதல் கரைபுரண்டு ஓடுது” என்றாள்.
“அணை கட்டிடுவோமா?” என்றான்.
“வேண்டாம், அப்படியே இருக்கட்டும்” என்றாள்.
“தேங்க்ஸ்டி” என்றான்.
“எதுக்கு”
“என் வாழ்க்கையில வந்ததுக்கு” என்றான் காதலாய்.
“நானும் தேங்க்ஸ்” என்றாள்.
“எதுக்கு?”
“என் வாழ்க்கையாவே வந்ததுக்கு” என்றவளை இடம் மறந்து அணைத்துக் கொள்ள, பலர் செல்போனில் இந்த காட்சியை படம் பிடித்துக் கொண்டனர்.
அடுத்த ஒரு வாரமும் டாக் ஆப் த டாப்பிக் அவர்கள் தான்.
“டாடி நானு” என்று விக்ரம் முறைக்க,
“என்னோட லிட்டில் சேம்ப் இல்லாமையா?” என்றவன் அவனையும் தூக்கிக் கொள்ள,
“லவ் யு டாடி” என்றான் விக்ரம் முத்தமிட்டு.
“லவ் யு ஜெய்” என்றாள் ஆராவும் முத்தமிட்டு.
எப்போதும் போல் அவர்களின் அன்பில் கரைந்து நின்றது என்னவோ சத்ய ஜெயதேவ் தான்.
அவர்களின் புதல்வன் விக்ரம் தேவ், வருங்காலத்தில் பல கன்னிப் பெண்களின் கனவு நாயகனாக வருவான் என்று அறியாத ஆராவும் அவனுடன் சேர்ந்து மகிழ்ந்திருந்தாள்.