“என்கிட்ட பாக்கெட் மணி சேவிங்க்ஸ் கொஞ்சம் இருக்கு. அப்பறம் நீங்க வாங்கித் தந்த செயின், ரிங் எல்லாம் வித்துட்டு சின்னதா ஏதாவது ஸ்டார்ட் பண்ணுங்க. கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ணிக்கலாம்.” என்றாள். அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மித்ரா தலையில் அடித்துக் கொண்டாள்.
“அடியே டாடிஸ் லிட்டில் பிரின்சஸ்..நீ சொல்றபடி பண்ணா ஊறுகா பிஸ்னஸ் தான் பண்ண முடியும்.” என்றாள் நக்கலாய். மித்ராவின் நக்கலை போனில் கேட்டவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
“முன் சீட்டுக்கும் கடைசி சீட்டுக்கும் இப்படி ஒரு கான்வர்சேஷனை நான் எதிர்பார்க்கலை டி” என்றாள் மித்ரா.
“சரி நீ சொல்ற மாதிரியே பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்றேன். ஆனா அதுக்கு முன்னாடி உன்னை மீட் பண்ணனும் ஆரா. உன்கிட்ட சில விஷயங்கள் பேசணும்” என்றான் நிதனமாய்.
“இத்தனை நாள் இல்லாம இன்னைக்கு என்ன திடீர்ன்னு?” என்றான் சற்று கோபம் கலந்த குரலில்.
“உங்க முகத்தை காட்டுறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்றாள் ஆராவும் கோபமாய்.
“நான் பிரச்சனைன்னு சொல்லவே இல்லையே? இங்க என்னால முடியாது. நான் சொல்ற இடத்துல மீட் பண்ணலாம். கண்டிப்பா மாஸ்க் இல்லாம வரேன்டி” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.
“எனக்கு நம்பிக்கையில்லை” என்று ஆரா சொல்ல,
“என் மேல நம்பிக்கையில்லாம அப்படி ஒன்னும் நீ லவ் பண்ணி கிழிக்க வேண்டாம், வைடி போனை” என்றவன் வைத்து விட்டான்.
“இல்ல, நான் அப்படி சொல்ல வரலை” என்று ஆரா பேசிக் கொண்டிருக்க, கால் கட்டானதை அப்போது தான் கவனித்தாள்.
“என்னாச்சு ஆரா?” என்றாள் மித்ரா.
“ஈவ்னிங் அவர் சொல்ற ஹோட்டலுக்கு வர சொல்றார். அங்க மாஸ்க் இல்லாம வரேன்னு சொல்றார் மித்ரா.” என்றாள் ஆரா.
“வேண்டாம் போகாத. எனக்கு இது சரியா படலை. உங்கப்பாவுக்கு தெரிஞ்சவங்க எல்லா இடத்துலயும் இருப்பாங்க. ஏதாவது ஒண்ணுன்னா அவ்வளவு தான். அதென்ன? நேரா ஹோட்டலுக்கு வர சொல்றது?” என்றாள் மித்ரா.
“இல்ல, அவர் அப்படி சொல்லலை. கூட ஏதாவது பிளேஸ் கூட சூஸ் பண்ணி சொல்ல சொன்னாரு” என்றாள் ஆரா.
“உனக்கு பேசியே ஆகணும்னா ஏதாவது கோவிலுக்கு வர சொல்லி பேசு. அதுவும் ஆட்கள் அதிகமா இருக்குற இடம்மாத்தான் இருக்கணும். தனியா போய் மீட் பண்ற வேலையெல்லாம் இருக்கக் கூடாது” என்றாள் மித்ரா.
“ஹேய் அப்போ நீயும் என் கூட வாடி” என்றாள்.
சற்று யோசித்த மித்ரா,
“சரி எப்பன்னு சொல்லு. போவோம்” என்பதோடு முடித்துக் கொண்டாள்.
ஆரா திரும்பி ஜெய்யைப் பார்க்க அவனோ அவளைத் திரும்பியும் பார்த்தானில்லை.
“ஜெய்” என்று மெசேஜ் அனுப்பினாள்.
“நம்பிக்கை இல்லாம என்கூட பேசணும்னு அவசியம் இல்லை. மெசேஜ் பண்ணாத” என்று அனுப்பியிருந்தான்.
“ப்ளீஸ்! நாளைக்கு காமாட்சி அம்மன் கோவில்ல மீட் பண்ணுவோம்.” என்று அனுப்பியிருந்தாள்.
“அந்த டெம்பில் ஓவர் ரஷ்ஷா இருக்கும். என்னால வர முடியாது” என்றான்.
“என்னை நிஜமாவே லவ் பண்றிங்கன்னா அங்க வாங்க. வேற எங்கயும் என்னால மீட் பண்ண வர முடியாது.” என்று அனுப்பினாள்.
“அப்படி அங்க வரலைன்னா?” என்றான்.
“இதுக்கு என்கிட்டே பதில் இல்லை. நான் கேட்குறதும் எனக்கு தப்பா தெரியலை” என்றாள்.
“ரைட். அப்படி நம்பிக்கை இல்லாத லவ் எனக்குத் தேவையில்லை” என்று அனுப்பியவன், அதன் பின் அவளிடம் பேசவில்லை. இறங்கும் போது கூட அவளின் கலங்கிய கண்களைப் பார்த்தவன் எதுவும் பேசவில்லை.
“முட்டாள்..! நல்லாத்தான இருந்தா. இவளை யாரோ நல்லா குழப்பி விட்ருக்காங்க” என்றவனுக்கு என்ன செய்வதென்ற நிலை.
ஜெய் வருவானா?
உணர்வு:
அவன் சிரித்துக் கொண்டிருப்பதையே பார்த்திருந்தவளை,
“என்ன?” என்பதைப் போல் புருவத்தை உயர்த்தி கேட்டிருந்தான் சத்ய தேவ்.
“நத்திங்” என்றாள்.
“இல்லையே.. என்னையே வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருந்த. கேட்டா ஒண்ணுமில்லைன்னு சொல்ற? ஒரு அழகான ஹீரோவை ரசிக்கலாம் தப்பில்லை” என்றான்.
“நீ எப்படி இருந்தாலும் உன்னை எனக்குப் பிடிக்காது. சொல்லப் போனா எனக்கு உன்னோட இந்த ஹீரோயிசம் நிறைஞ்ச சினி பீல்டே பிடிக்காது” என்றாள் வெறுப்புடன்.
“ஏன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்றான் தேவ்.
“அதை உன்கிட்ட சொல்லனும்னு அவசியமில்லை.” என்று அவள் முகத்தைத் திருப்ப, அவளின் முகத்தை தன்னை நோக்கித் திருப்பியவன்,
“இந்த முகத்தைத் திருப்புற வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்கக் கூடாது ஆரண்யா. எனக்கு சுத்தமா பிடிக்காது. நான் ஸ்க்ரீன்ல நடிக்கிறேன். நீ நிஜத்துல நடிக்கிற. அவ்வளவு தான் வித்யாசம்” என்றான் முகத்தில் இறுக்கத்துடன்.
“எனக்கு நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு பிடிச்ச மாதிரியே எல்லாம் இருக்கணும்னா எப்படி சார்? அதுக்கு நீங்க என்னை லைப் பார்ட்னரா சூஸ் பண்ணியிருக்கக் கூடாது” என்றாள்.
“எனக்கு பிடிச்ச மாதிரியே இருந்ததால தான் உன்னை சூஸ் பண்ணியிருக்கேன். போகப் போக உனக்கும் என்னைப் பிடிச்சுடும்” என்றான் சிரிப்புடன்.
“அது, நீ சொன்னதைத் தான் நான் திருப்பி சொன்னேன். உன்னை கல்யாணம் பண்ணி ஏமாந்து போன கதையைத் தான் சொல்றேன்” என்றவன்,
“இதுல காமெடி என்னன்னா? மேடம்க்கு சினிமா ஆகாது. ஆனா சினி இண்டஸ்ட்ரில இருக்குறவங்களுக்கு காஸ்ட்யூம் டிசைன் மட்டும் பண்ண பிடிக்குமோ?” என்றான்.
“நான் யாரையும் தேடிப் போறதில்லை. என்னோட வொர்க் பிடிச்சு என்னைத் தேடி வர்றவங்களுக்கு, என்னோட இடத்துல இருந்து தான் பண்ணிக் குடுக்குறேன். உங்க பீல்ட்ன்னு இல்லை, மத்த எல்லா பீல்டுலையும் செலிபிரிட்டி பீப்பிள்ஸ் இருக்காங்க” என்றாள் ரோஷத்துடன்.
“ஓகே ஓகே..! எனக்கு என்ன அவுட் பிட் வேணும்னு நீ கேட்கவே இல்லையே?” என்றான்.
“லுக்! அந்த பார்ட்டிக்கெல்லாம் என்னால வரமுடியாது. அதனால தான் எனக்கு வேண்டாம்னு சொன்னேன். இந்த பார்ட்டிஸ்க்கு போயெல்லாம் எனக்கு பழக்கமில்லை” என்றாள் பட்டென்று.
“இப்போ நீ என்னோட மனைவி. பழக்கம் இல்லைன்னா, இனி பழகிக்கோ” என்றான் தேவ்.
“உங்களுக்கு சொன்னா புரியுமா புரியாத மிஸ்டர் சத்யா. எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை. உங்க பார்ட்டி கல்ச்சர் எல்லாம் எனக்கு செட்டே ஆகாது. பிளீஸ் என்னை கம்பெல் பண்ணாதிங்க. நான் ஏற்கனவே மன உளைச்சல்ல இருக்கேன். தயவு செஞ்சு என்னை நிம்மதியா இருக்க விடுங்க” என்றவளுக்கு கண்கள் கலங்கிப் போனது.
அவளை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தவன், அவளின் இடையில் கைகொடுத்து தன்னை நோக்கி இழுக்க, அதிர்ந்து விழித்தாள் ஆரா.
“நான் இருக்கேன் ஆரண்யா. என்னை நம்பு. என்னை நம்பி என் கூட வா. நீ இல்லாம கண்டிப்பா என்னால போக முடியாது. இதை மட்டும் எனக்காக பண்ணு பிளீஸ்” என்றான்.
அவனின் நெருக்கமும் குரலும் அவளுக்குள் ஏதோ செய்ய, ‘சரி’ என்று அவள் தலை தானாக ஆடியிருந்தது.
“தட்ஸ் மை கேர்ள்” என்றவன் அவள் தலையோடு முட்ட, மூச்சடைத்தது அவளுக்கு.
ஏனோ அவனின் அருகாமையும், பார்வையும் ஜெய்யையே அவளுக்கு நினைவு படுத்த, பழைய நினைவுகளின் தாக்கத்தையும், ஏக்கத்தையும் தாங்க முடியாதவளுக்கு கண்ணீர் வர,
“ஜெய்” என்று கூறியிருந்தாள் அவளறியாமல். அந்த வார்த்தையை கேட்டவுடன் பட்டென்று அவளை உதறித் தள்ளியிருந்தான் சத்ய தேவ்.
அவன் உதறிய வேகத்தில் தடுமாறி, சோபாவைப் பிடித்து நிதானித்தவள், அப்போது தான் என்ன சொன்னோம் என்பதை உணர்ந்தாள்.
கோபத்தைத் தனக்குள் கட்டுப்படுத்தியவன், “சாரி ஆரண்யா” என்றான் வரவழைத்துக் கொண்ட நிதானத்துடன்.
“இல்ல..அது நான் ஏதோ ஞாபகத்துல” என்று உளறிக் கொட்டியவளுக்குத் தெரியவில்லை. பிடிக்காத திருமணம், அவனுக்கு எதற்கு விளக்கம் சொல்ல வேண்டும் என்று?
“உன்னோட விளக்கம் எதுவும் எனக்குத் தேவையில்லை ஆரண்யா” என்றான். குரலில் ஒரு விலகல் தன்மை இருந்தது.
“இல்ல,அது வந்து உங்க அப்பியரன்ஸ், பார்வை எல்லாம் எனக்கு நெருக்கமான ஒருத்தரை ஞாபகப் படுத்திடுச்சு, அதான்.” என்றவள் தளர்ந்த நடையுடன் பால்கனியில் சென்று நின்று கொண்டாள்.